1963இல் வந்த படம். கலைஞர் கருணாநிதியின் கதை வசனம். அவரும் முரசொலி மாறனும் படத்தின் இயக்குனர் காசிலிங்கமும் தயாரிப்பாளர்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள். முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.
படத்தின் பிரிண்ட் பழையதாகிவிட்டாலும் கோட்டை, அரச சபை செட்கள் நன்றாக இருக்கிறது. எம்ஜியார் நரசிம்ம வர்ம பல்லவனாகவும், எஸ்.எஸ்.ஆர். தளபதி பரஞ்சோதியாகவும், அசோகன் புலிகேசியாகவும் வருகிறரகள். காஞ்சித் தலைவன் என்பது அறிஞர் அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். “காஞ்சித் தலைவன் கை காட்டிய வழியில் கரை ஏறியவரகள் அனேகம்” போன்ற பல வசனங்களை அங்கங்கே கேட்கலாம். எம்ஜியார் அரச உடையில் வரும்போது நல்ல அழகாக இருக்கிறார். அசோகன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.
இந்த படம் வந்த போது கலைஞரும் எஸ்.எஸ்.ஆரும் எம்.எல்.ஏக்களாகவும், எம்ஜியார் எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாம். அப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
எம்.ஆர். ராதா பாட்டு பாடும் காட்சிகள் அபூர்வம். இதில் அவருக்கு ஒரு பாட்டு காட்சி – “உலகம் சுத்துது எதனாலே” என்ற ஒரு பாட்டு. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு இல்லை, ஆனாலும் எனக்கு 30 வருஷங்களுக்கு பின்னும் எனக்கு ஏனோ இன்னும் ஞாபகம் இருக்கிறது.
முதலில் ஒரு பாட்டில் – ஆலங்குடி சோமு எழுதிய “அவனி எல்லாம் புகழ் மணக்கும்” – மகாபலிபுரத்தின் பகீரதன் தவம் க்ளோஸ் அப்பில் காட்டினார்கள். எப்போதோ சின்ன வய்தில் டூர் போனபோது பார்த்தது. அப்போது இதையெல்லாம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஓடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்.
“கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில் இரு மலர்கள்”, “வானத்தில் வருவது ஒரு நிலவு” போன்றவை மெதுவான இனிமையான மெலடிகள். கே.வி. மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குத்தான் மெட்டமைப்பாராம். அப்படி செய்தால் கவிதைகளின் தரம் அதிகப்படுகிறது. இந்தக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. எம்ஜிஆரும் விஜயகுமாரியும் இணைந்து நடிக்கும் ஒரே பாட்டு “ஒரு கொடியில்”தானாம்.
) இவற்றை இங்கே கேட்கலாம்.
“மயங்காத மனம் யாவும் மயங்கும்” என்ற பானுமதி சொந்தக் குரலில் பாடும் பாட்டும் இனிமையாக இருக்கிறது. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பானுமதி நடனம் ஆடுவதைப் போல் யாரோ இமிடேட் செய்தார்கள். சும்மா நின்ற இடத்திலேயே முகபாவம் மட்டும் மாற்றுவார், அங்கே இங்கே ஸ்டைலாக நடப்பார், அவ்வளவுதான். இந்தப் பாட்டில் பானுமதி முக்கால்வாசி அப்படித்தான் நடனம் ஆடுகிறார். இங்கே கேட்கலாம்.
“வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. கலைஞர் எழுதியது. முதலில் “வெல்க காஞ்சி வெல்க காஞ்சி” என்று எழுதப்பட்டு பிறகு சென்ஸார் ஆட்சேபணையால் மாற்றி எழுதப்பட்டதாம்.
இந்தப் படத்தில் ஆலங்குடி சோமு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறர் – 9 பாட்டுகளில் 7 அவர் எழுதியதுதான். “கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில்”, “வானத்தில் வருவது”, “மயங்காத மனம் யாவும்” அவர் எழுதியவைதான்.
மற்ற இரண்டு பாட்டுக்களும் கடி – “உயிரைத் தருகிறேன்”, “மக்கள் ஒரு தவறு செய்தால்” என்ற பாட்டுக்கள். இவையும் சோமு எழுதியவையே.
ஒன்பதில் 4 பாட்டு தேறும்.
கலைஞரின் வசனம் எழுதும் திறனை ஆகா ஓகோ என்பார்கள். இதில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.
நரசிம்ம வர்மன் (எம்ஜியார்), பரஞ்சோதி (எஸ்.எஸ்.ஆர்.) இலங்கை மன்னன் (யாரோ) மூவரும் காஞ்சியில் ஒரு வலிவான குழு. பரஞ்சோதிக்கும் பல்லவரின் தங்கை விஜயகுமாரிக்கும் லவ். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க பானுமதியும் எம்.ஆர். ராதாவும் புலிகேசியால் (அசோகன்) அனுப்பப்படுகிறார்கள். ராதா இலஙகை மன்னனின் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்க செய்யும் முயற்சி ஆரம்ப வெற்றிக்குப் பிறகு தோல்வி அடைகிறது. பானுமதி உண்மையிலேயே பல்லவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் பானுமதி எம்ஜியார் காதலை பரஞ்சோதி விரும்பவில்லை. அதனால் விஜயகுமாரியையும் தளபதி பதவியையும் விட்டுவிடுகிறார். சமயம் பார்த்து புலிகேசி படை எடுக்கிறார். பல கோட்டைகளை வெல்கிறார். எம்ஜியாரை கொல்ல செய்த சதியில் விஜயகுமாரி மாட்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அவர் அப்படி இறந்துவிடுவார் என்பதை அவரே 5 நிமிஷம் முன்னால் “உயிரைத் தருகிறேன்” என்று ஒரு பாட்டு பாடி நமக்கு சொல்லிவிடுகிறார். அவர் இறந்ததும் எம்ஜியார் வழக்கம் போல சுவரில் முகத்தை புதைத்துக்கொண்டு அழுகிறார். மனம் திருந்திய பரஞ்சோதி திரும்பி வந்து எல்லாரும் சேர்ந்து புலிகேசியை தோற்கடித்து சுபம்!
எம்ஜியார் படத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்ததில்லை. இதில் எஸ்.எஸ்.ஆர். இல்லாததால் தோல்வி என்று காட்டபடுகிறது. எம்ஜியாருக்கு ஒரு மல்யுத்தம்தான் பெரிய சண்டை.
படம் எம்ஜியார் ரசிகர்களுக்காக. புதிய படமாக இருக்கும்போது கொஞ்சம் ரிச்சாக இருந்திருக்கும். இப்போது பாட்டுக்கள்தான் மிஞ்சி இருக்கும் பலம்.
ஆகஸ்ட் 26, 2008 at 9:37 மு.பகல்
என் சுற்றத்திலயே நான் ஒருத்தன் தான் தினமும் விடாம சன் டி.வி’ல இந்த படம்எல்லாம் பார்த்துட்டு வூட்டுக்காரி கிட்ட ரம்பம் போடுற ஆளுன்னு நினைச்சேன்.. தினமும் அதை பார்க்கிற இன்னொரு ஆளும் இருக்குதுங்கிறதே எனக்கு சந்தோசம்..
இந்த வாரம் ஒரே பேஜாரான படங்க தான்
நல்லா எழுதறீங்க..
ஆகஸ்ட் 26, 2008 at 2:39 பிற்பகல்
இந்த ப்ரோகிராமைப் பார்க்கும் இன்னொரு ஜீவனும் இருக்குன்றது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. அதுவும் 29 வயது இளைஞர் (உங்க ப்ளாகை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்) அப்படின்றது ரொம்பவே சந்தோஷம். என்னை மாதிரி அரைக் கிழங்களோ இல்லை முழுக் கிழங்களோதான் இதையெல்லாம் பாப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.
)
ஆகஸ்ட் 17, 2009 at 12:44 பிற்பகல்
அவனி எலலாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது
அழகுக்கெல்லாம் சிககரம்
அருமையான வரிகள்.
ஆகஸ்ட் 22, 2009 at 1:06 பிற்பகல்
VERY GOOD MOVIE THE HISTORY WAS ALREADY WRITTEN BY KALKI SIVGAMIYIN SABHADHAM.MGR LOOKS LIKE A REAL KING.SSR DIALOGUE DELIVERY IS AMAZING .NOWADAYS NO CHANCE.