Hello Partnerஇலிருந்து எல்லாம் இன்ப மயத்திற்கு போய் அங்கிருந்து தசாவதாரத்துக்கு வந்துவிட்டேன். Hello Partner ஜுரம் முடிவதற்குள் நவராத்திரி படத்துக்கும் விமரிசனம் எழுதினாலும் எழுதுவேன், you have been warned.
நாங்கள் வசிக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் இந்தியப் படங்களை திரையிடுவதற்கென்றே சில தியேட்டர்கள் உண்டு. தியேட்டர்கள் – naz, காமெரா3 – கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும். நடுவில் இன்டர்நெட் boom ஆனபோது ஒரு நல்ல தியேட்டர் complex இருந்தது, boom முடிந்ததும் அவர்களால் சமாளிக்க முடியாமல் இந்த மட்டரக தியேட்டருக்கு போய்விட்டார்கள். ஆனால் சமீப காலமாக நல்ல தியேட்டர்களில் ஏஎம்சி, செஞ்சுரி போன்ற தியேட்டர்களில் பல பெரிய படங்கள் – சிவாஜி, தாரே ஜமீன் பர் போன்றவை – திரையிடப்படுகின்றன. எனக்கு தெரிந்து முதல் முறையாக ஃப்ரீமாண்ட் சினிடோமில் திரைஇடப்பட்டது தசாவதாரம்தான் என்று நினைக்கிறேன். நாங்கள் முதல் நாள் நைட் ஷோ போனோம். டிக்கெட் விலை சாதாரணமாக 10 டாலர். இதற்கோ 16 டாலர். தியேட்டர் houseful. இங்கே எல்லாம் சீட் நம்பர் கிடையாது. எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது – 8 டிக்கெட். ஒரே வரிசையில் சீட் கிடைக்க கொஞ்சம் ததிங்கிணத்தோம் போட்டோம். முதல் வரிசையில் கூட மக்கள் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். இவ்வளவு பேர் சாதாரணமாக வரமாட்டர்கள். ஏசி சரியாக ஓடாமல் ஒரே புழுக்கம் வேறு. ஆனால் எல்லாரும் இடைவேளை வரை பொறுத்திருந்து பிறகுதான் போய் தியேட்டர்காரர்களிடம் சண்டை போட்டோம். யாருக்கும் ஒரு நிமிஷம் கூட படததை மிஸ் பண்ண மனசில்லை.
ஒரு படத்தின் நோக்கம் என்ன? எம்ஜிஆர், விஜய், ரஜினி படங்களின் நோக்கம் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவேண்டும், நன்றாக ஓடவேண்டும் என்பதுதான். சிவாஜிக்கு தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கவேண்டும். கமலுக்கோ படட்தின் ரிசல்டை விட தான் பெருமுயற்சி எடுத்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. அந்த முயற்சியால் ஏதாவது உபயோகம் உண்டா இல்லையா என்ற கேள்வி அவருக்கு இரண்டாம் பட்சமாக இருக்கிறது.
தசாவதாரத்தில் நல்ல பொழுதுபோக்கு படத்திற்கான கூறுகள் எல்லாம் இருக்கின்றன. விறுவிறுப்பான கதை, பிரமிக்க வைக்கும் காட்சிகள், படத்தோடு ஒட்டி இழைந்து வரும் பல்ராம் நாயுடு நகைச்சுவை, கவர்ச்சிகரமான மல்லிகா ஷெராவத், மெயின் கதையோடு அவ்வளவு சம்பந்தம் இல்லாவிட்டாலும் அசத்தும் ரங்கராஜ நம்பி காட்சிகள், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் பூவராகன் காட்சிகள், வியக்க வைக்கும் கிருஷ்ணவேணி பாட்டி, பூவராகன் மேக்கப், சிரிக்க வைக்கும் ஜார்ஜ் புஷ், “கல்லை மட்டும் கண்டால்” பாட்டும் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும், தாளம் போட வைக்கும் “ஓகோ சனம்” பாட்டு இவற்றை எல்லாம் 2.7 படங்களுக்கு பயன்படுத்தலாம்.
படத்தின் பலவீனம் கமலின் ஈகோதான். எம்.ஆர். ராதா ஒரு முறை சிவாஜியிடம் சொன்னாராம் – “படத்தோட முதலிலே நீ வரணும். நடுவே அப்பப்ப வரணும். கடைசியில் ஸ்ட்ராங்கா வரணும். படம் பூராவும் நீயே வரயே?” என்று. கமலின் ப்ராப்ளமும் அதுதான். விட்டால் நானே அசின் ரோலும் பண்ணுகிறேன் என்று கிளம்பிவிடுவார். (மல்லிகா ஷெராவத் ரோல் என்றால் அவருக்கு லட்டு சாப்பிடுவது போல இருக்கும் – 70களின் ஆடைக் குறைப்பு மன்னர்)
எதற்காக 10 ரோல்கள்? கதாநாயகனாக வந்தார், சரி. (அதை கூட வேறு யாராவது ஒரு இளம் கதாநாயகருக்காவது கொடுத்திருக்கலாம்). பல்ராம் நாயுடு ரோல் எடுத்துக்கொண்டார், பர்ஃபெக்ட். 10 நிமிஷம் வந்தாலும் நம்பி ரோல் படத்தின் உச்சக்கட்டம், அதையும் செய்தார், சரி. மிச்ச எல்லாம் எதற்கு? இவர் மேக்கப்புக்கு செய்த செலவுக்கு யாராவது நல்ல நடிகர்களைப் போட்டிருக்கலாம்.
சரி, தான் கறுப்பாகவும் வரமுடியும் என்று நிரூபிக்க பூவராகன் ரோலும், பாட்டி வேஷம் போட ஆசைப்பட்டதால் கிருஷ்ணவேணிப் பாட்டி ரோலும், சும்மா ஒரு ஜாலிக்காக ஜார்ஜ் புஷ் ரோலும், “ஓகோ சனம்” பாட்டு பாட அவ்தார் சிங் ரோலும் செய்தார் என்று ஒத்துக்கொள்ளலாம். அந்த வெள்ளைக்கார வில்லன் ரோலையாவது விட்டுக்கொடுத்திருக்ககூடாதா? கதைக்கு அந்த ஜப்பானிய ஷிங்கென் பாத்திரம் தேவையே இல்லையே! அந்த கலிஃபுல்லா ரோல் எதற்கு? ஏன் இப்படி சோதிக்கிறார்?
உண்மையில் தசாவதாரத்துக்கு உண்மையான முன்னோடி அஜித்தின் சிடிசன் தான். அதிலும் அஜித்துக்கு வெவ்வேறு கெட்டப்புகளில் வருவதுதான் முக்கியமாக இருந்தது. அது பொருந்துகிறதா இல்லையா என்பது இரண்டாம் பட்சம். பெரிய முகமூடிகளை அணிந்து வருவது போல் இருக்கும். இதிலும் அப்படித்தான். பல்ராம் நாயுடு, ஃப்ளெட்சர், ஷிங்கென், பாட்டி, பூவராகன், கலிஃபுல்லா, ஜார்ஜ் புஷ் எல்லாரும் ஒரு மாஸ்க் அனிந்து வருவது போல்தான் இருக்கிறது. அந்த மாஸ்க்கையும் மீறி, தனது டயலாக் டெலிவரி, பாடி லாங்வேஜ் போன்றவற்றால் அவர் நாயுடு, பாட்டி ரோல்களை நன்றாக செய்திருக்கிறார். பூவராகன் ரோலில் டயலாகாலும், உடலாலுமே அற்புதமாக நடித்து பூவராகனின் பாத்திரத்தை நாம் சந்தேகம் இல்லாமல் உணர்ந்துகொள்ள செய்திருக்கிறார். ஆனால் படத்தை விட கமல்தான் தெரிகிறார். கலைஞன் என்ற முறையில் இது அவருக்கு தோல்விதான்.
கவனியுங்கள், இது கமலின் தோல்வி. கே.எஸ். ரவிகுமாரின் தோல்வி அல்ல. ஏனென்றால் இது கமல் படம், வேறு யாரின் படமும் அல்ல.
சுருக்கமான கதை – விஞ்ஞானி கமல் ஒரு ஆபத்தான வைரஸை வில்லன்களிடமிருந்து காப்பாற்றி இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார். வில்லன்கள் அவருக்கு தீவிரவாதி பட்டம் கட்டி அவரை துரத்துகிறார்கள். சிஐஏ ஏஜன்ட் ஃப்ளெட்சரும் கவர்ச்சிக் கன்னி மல்லிகா ஷெராவத்தும் வில்லன்களுக்காக அவரை துரத்திக்கொண்டு இந்தியா வருகிறார்கள். தீவிரவாதி என்று நினைத்து லோகல் அதிகாரி பல்ராம் நாயுடுவும் அவரை துரத்துகிறார். வைரஸ் ஒரு பெருமாள் விக்ரகத்தில் மாட்டிக்கொள்கிறது. அதை தூக்கிக்கொண்டு கமலும், அவர் பின்னால் அசினும், அவர்கள் பின்னால் நாயுடுவும், ஃப்ளெட்சரும் ஓடுகிறார்கள். வழியில் தலித் தலைவர் பூவராகன், கிருஷ்ணவேணிப் பாட்டி, 7 அடி உயர கலிஃபுல்லா, பழி வாங்க வரும் ஜப்பானிய ஷிங்கென், பாடகர் அவ்தார் சிங், குறுக்கிடுகிறார்கள். கடைசியில் சுனாமி வந்து தமிழகத்தில் பலர் இறந்தாலும், அந்த வைரஸையும் அழித்துவிடுகிறது. கடைசியில் ஜார்ஜ் புஷ் ஷும் க்ராஃபிக்ஸில் முதல்வர் கலைஞர் கருணாநிதியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாராட்ட, ஒரு விதமான சுபம்! படத்தின் முதலிலும் கடைசியிலும் நம்பியும், நம்பி காப்பாற்ற நினைத்த கோவிந்தராஜப் பெருமாள் சிலையும் காட்டப்படுகிறது. கடலில் போடப்பட்ட சிலை பூமித்தட்டுகளை கொஞ்சம் நகர்த்தி 2004இல் சுனாமி வந்தது இந்த வைரஸை அழித்து மனித குலத்தை காப்பாற்றத்தானோ என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.
கோவிந்தராஜப் பெருமாள் சிலையை கடலில் மூழ்கடித்த சோழ அரசன் கதை வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளில் சொல்லப்படுகிறது. இது இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று நம்பப்படுகிறது. இந்த அரசன் ராமானுஜரையும் அவரது சிஷ்யர்களையும் கொடுமைப்படுத்தினான் என்று இந்த குரு பரம்பரை கதைகளில் சொல்லப்படுகிறது. (கூரத்தாழ்வாரை குருடாக்கி, ராமானுஜரை நாட்டை விட்டே துரத்தினான்). சிதம்பரத்தில் இன்றும் இருக்கும் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் இருந்த ஒரிஜினல் சிலை இவ்வாறு கடலில் வீசப்பட்டது என்று இந்த கதைகளில் சொல்லப்படுகிறது. வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்று சொல்வார்கள்.
நம்பி பகுதிக்கு 100க்கு 100 மார்க் கொடுக்கலாம். அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. நம்பியின் உடம்பை துளைக்கும் காட்சிகள் நடுங்க வைத்தன. உலகத் தரம் வாய்ந்த க்ராஃபிக்ஸ் காட்சிகள்.
படத்தின் முக்கிய கதை சுவாரசியமாக இருந்தது. ராமசாமி (நாயக்கர்) ரோலுக்கு 100க்கு 75 மார்க் கொடுக்கலாம். “கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்” வசனம் நன்றாக இருந்தது. அசின்தான் கொஞ்சம் கொடுமை.
ஃப்ளெட்சர் மேக்கப் பொருந்தவே இல்லை. படத்தின் இறுதியில்தான் மேக்கப்பை மீறி அவரது ரோலை பார்க்க முடிந்தது. யாராவது ஒரு அமெரிக்க நடிகரையே போட்டிருக்கலாம். 100க்கு 35 மார்க்.
ஜார்ஜ் புஷ் சும்மா தமாஷுக்கு சேர்க்கப்பட்ட ரோல். அவரை கொஞ்சம் முட்டாளாக சித்தரித்தது நல்ல ஐடியா. அதனால் பொருந்தாத மேக்கப் உறுத்தவில்லை. ஆனால் இந்த படத்தை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி பார்க்க சொன்னார்களாம். கொஞ்சம் ஓவராக இல்லை? 100க்கு 45 மார்க்.
ஜப்பானிய மேக்கப் பொருந்தவே இல்லை. utter waste. 100க்கு 0 மார்க்.
பாடகர் ரோல் எதற்காக? தேவையே இல்லை. அதுவும் குண்டு பாய்ந்ததால் அவருக்கு கான்சர் குணமாவது ரொம்ப ஓவர். “ஓகோ சனம்” பாட்டுக்காக 50 மார்க். அப்புறம் எனக்கு 25 வருஷங்களுக்கு முன் ஜெயப்ரதாவை ரொம்ப பிடிக்கும். கமலுக்கும் அப்படியே இருக்க்லாம். அதற்காக இன்னும் அவரையே போடவேண்டுமா? சிம்ரன், நயனதாரா யாரும் கிடைக்கவில்லையா?
பல்ராம் நாயுடு கலக்கிவிட்டார். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசியதும், அவரது பாடி லாங்வேஜும் நன்றாக இருந்தன. 100க்கு 120 மார்க்.
பாட்டியை க்ளோஸப்பில் பார்த்தால் சின்ன குழந்தைகள் பயந்துவிடலாம். ஆனால் நன்றாக நடித்திருந்தார். 100க்கு 65 மார்க்.
பூவராகன் நடிப்பு அபாரம். 100க்கு 90 மார்க்.
கலிஃபுல்லா ரோல் ஒரு வேஸ்ட். 100க்கு மைனஸ் 20 மார்க்.
Himesh ரேஷமைய்யா இசை. இரண்டு பாட்டுக்கள் நினைவிருக்கின்றன. “கல்லை மட்டும் கண்டால்” சூப்பர் மெட்டு என்று சொல்லமாட்டேன். ஆனால் வரிகள் நன்றாக இருந்தன. காட்சிகள் அபாரம். “ஓகோ சனம்” நல்ல பாட்டு.
2008இல் வந்த படம். கமல், அசின், நெப்போலியன், மல்லிகா ஷெராவத், எம்.எஸ். பாஸ்கர், கே.ஆர். விஜயா, நாகேஷ், சந்தான பாரதி, பி. வாசு, சிட்டிபாபு, கவிஞர் கபிலன் நடித்திருக்கிறார்கள். கே.எஸ். ரவிகுமார் இயக்கம். Himesh ரேஷமைய்யா இசை.
இந்த படம் கலை ரீதியாக ஒரு தோல்விதான். சில சமயங்களில் தோல்விகளும் பார்க்கக்கூடியவையே. குறைகள் இருந்தாலும், கமலின் 10 வேஷ obsession உறுத்தினாலும், பாருங்கள்! This is a grand failure! I give it a B.
அக்டோபர் 16, 2008 at 2:14 பிற்பகல்
இந்த படத்துலே நல்லா ‘பிலிம்’ காட்டுறாங்க
அக்டோபர் 28, 2008 at 5:40 மு.பகல்
Yenna sir, Kalai reedhiya failure’nnu ithana dhadava sollirukeengale? Vasool reedhiya miga periya vetri adainthirukkiradhe, adha oru idaththil kooda sollave koodadha?
அக்டோபர் 28, 2008 at 5:49 மு.பகல்
Rajaram,
When I wrote the review, I wasn’t sure whether the movie was a financial success or not. Glad that the movie succeeded, may encourage better movies