பானுமதியின் மாஸ்டர்பீஸ். அவருக்காகவே எழுதப்பட்ட திரைக்கதையில் அவர் பிய்த்து உதறி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இதற்கு பிறகும் அவர் இரண்டு சிறந்த நடிகை விருதுகளை பெற்றிருக்கிறார்
1962இல் வந்த படம். வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன். அடையாளம் தெரிந்தது ஸௌகார், ரங்காராவ், முத்தையா (வேறொரு படத்தில் இவர் யாரென்று சொன்ன சாரதாவுக்கு நன்றி), சச்சு, சந்திரபாபு. ஏவிஎம் படம். இசை சுதர்சனம். இயக்கம் ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவா? பஞ்சு. அனேகமாக தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகன் பேர் ஹரிநாத் ராஜா. தெலுங்கு நடிகர் என்று நினைக்கிறேன், யாரோ தெரியவில்லை. (பானுமதியின் மகனாக நடிக்க முதலில் ஜெய்ஷங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்களாம். அவருக்கு சிறிய கண்கள் என்று அவரை நிராகரித்துவிட்டார்களாம்.)
ஒரு வங்காள மொழி நாடகம்தான் மூலக்கதை. ஹிந்தியில் மாய ம்ருகா என்று படமாக எடுக்கப்பட்டது. ஏவிஎம் செட்டியார் பார்த்தது நாடகமா இல்லை ஹிந்தி படமா என்று தெரியாது. ஆனால் இதை திரைக்கதையாகும் முயற்சியில் பானுமதிக்கும் பங்கு உண்டு என்று கேள்வி. பானுமதிக்கு மூலக்கதையில் வந்த பாத்திரம் கொஞ்சம் அசடாக இருக்கிறார் என்று தோன்றியதாம். அதனால் அவர் பாத்திரத்தை கொஞ்சம் மாற்றினாராம்.
தமிழ் படங்களில் சாதாரணமாக நல்லவர்களில் ஒரு குறையும் இருக்காது. கெட்டவர்களோ வடிகட்டின கெட்டவர்கள் – மருந்துக்கு கூட ஒரு நல்ல குணம் இருக்காது. இந்த படம் ஒரு அதிசயமான விதிவிலக்கு. ஒரு குறை உள்ள பாத்திரம், அதுவும் பெண் பாத்திரம்தான் கதாநாயகி. பானுமதி நாம் பார்க்கக்கூடிய ஒரு பாத்திரம். அவரது இன்செக்யுரிடியினால் அவர் செய்யும் தவறுகள் ரியலிஸ்டிக்காக சித்தரிக்கப்படுகின்றன. அவருக்கு அந்தஸ்து முக்கியம். ஆனால் எல்லா படங்களிலும் வருவது போல அவர் அந்தஸ்துக்காக வாழும் ஒரு கார்ட்டூன் காரக்டர் அல்லர். அதனால்தான் கதையும், அதனால் படமும் நன்றாக இருக்கிறது.
நல்ல முடிச்சு உள்ள கதை. பணக்கார குடும்பத்தில் பிறந்த பானுமதி, அவரது தங்கை ஸௌகார். ஸௌகார் ஏழை முத்தையாவை கல்யாணம் செய்துகொள்வதால் சிரமப்படுகிறார். குழந்தை இல்லாத தன் அக்காவுக்கு தன் குழ்ந்தையை கொடுக்கிறார். பதில் உதவி என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அக்காவிடம் பண உதவி பெற்றுக் கொண்டு வெளி நாடு போய்விடுகிறார். பானுமதி பையனை உயிருக்கு உயிராக வளர்க்கிறார். அடி மனதில் எப்போதாவது பையன் தன்னை பெரியம்மா என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் இருக்கிறது. இருபது வருஷம் கழித்து ஸௌகாரும் முத்தையாவும் ஏழையாகவே திரும்பிவரும்போது, தங்கை மேல் உள்ள பாசத்தை பையன் தன் நிஜ அம்மாவுடன் போய்விடுவானோ என்ற பயம் வென்றுவிடுகிறது. மகனும் தங்கையும் சந்திக்கக்கூடாது என்று முயற்சி செய்கிறார். தற்செயலாக அவர்கள் சந்தித்துவிட, பானுமதியின் பயம் அதிகரிக்கிறது. முத்தையா இறந்துவிட, ஸௌகார் அழுதுகொண்டே இருக்க, பையனுக்கு உண்மை தெரிந்து பெரியம்மா என்றே கூப்பிட்டுவிடுகிறான். வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். கடைசியில் பானுமதி ஸௌகாரிடம் இவன் நம் பிள்ளை என்று சொல்ல, சுபம்!
இது பானுமதியின் படம். மற்ற எல்லாரும் பானுமதிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கத்தான். ரங்காராவ் நன்றாக நடித்திருக்கிறார். பானுமதி பல காட்சிகளில் கலக்குகிறார். குறிப்பாக தன் மகன் அடிபட்டு படுத்திருக்கும்போது சரக் சரக் என்று சத்தத்தோடு நடந்து வரும் நர்சை ஒரு அடி போடும் காட்சி பிரமாதம். ஸ்லீவ்லெஸ் ரவிக்கையோடு வரும் தன் prospective மருமகளிடம் “அவசரமா வந்ததால ரவிக்கை போடாம வந்துட்டா போலிருக்கு” என்று சொல்லும் இடம் அபாரம். தங்கையை நடத்தும் விதம் தவறு என்று தெரிந்தும் ரங்காராவிடம் இந்த ஒரு விஷயத்தை விட்டுடுங்க என்று சொல்லும் இடம், தங்கையை கண்டு கண் கலங்கும் இடம், எல்லாரும் என்னைத்தான் சொல்வீங்க என்று புலம்புவது – சும்மா புகுந்து விளையாடிவிட்டார்.
மிச்ச எல்லாரும் டம்மிதான். ஆனால் ஹீரோ பார்க்க நன்றாக இருக்கிறார்.
படம் முக்கால்வாசி முடிந்த பிறகுதான் ஒரே வீட்டில் வசிக்கும், தன்னை ஒரு தலையாக காதலிக்கும் சந்திரபாபுவை பார்த்து சச்சு அண்ணா என்று சொல்கிறார். அது வரைக்கும் எப்படி கூப்பிட்டார் என்று தெரியவில்லை. பஞ்சதந்திரம் படத்தில் தேவயானி சிம்ரன் சந்தேகப்பட்டு திட்டிவிட்டு போனதும் கமலை பார்த்து “ராமண்ணா ராமண்ணா” என்பார். கமல் “கரெக்டா அவ போனப்புறம் சொல்லு!” என்பார். அதுதான் ஞாபகம் வந்தது!
பாட்டுகள் எழுதி இருப்பது கண்ணதாசன். சந்திரபாபு பாடும் “புத்தி உள்ள மனிதரெல்லாம்”, பி.பி.எஸ்., சுசீலா பாடும் “அழகிய மிதிலை நகரினிலே”, சுசீலா பாடும் “பக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா”, பானுமதியே பாடும் “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” எல்லாமே நல்ல பாட்டுகள். எனக்கு எப்போதுமே சந்திரபாபு பாட்டுக்கள் என்றால் ஒரு மயக்கம் உண்டு. இதில் அவர் கலக்கிவிடுவார். “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டில் “பருவத்து பெண்கள் தனித்திருந்தால்” என்று ஆரம்பித்து, “ஆஹா, ஓஹோ” என்று பி.பி.எஸ். பாடுவதும், “ம்ஹ்ம்ம்” என்று சுசீலா முறைப்பதும் அருமை! “பக்கும் பக்கும் மாடப்புறா” பாட்டுக்கு சந்திரபாபு என்ன ஜோராக டான்ஸ் ஆடுகிறார்! பானுமதியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை உண்டு. அது அவரது குரலுக்கு ஒரு special charmஐ கொடுக்கிறது.
“அழகிய மிதிலை நகரினிலே”, “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாட்டுகளை இங்கே கேட்கலாம்.
பானுமதிக்காக பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.
செப்டம்பர் 26, 2008 at 7:05 மு.பகல்
அருமையான கேரக்டர், வித்தியாசமான கேரக்டர்’ன்னு சொல்லிட்டு இந்த சினிமாக்காரங்க பேட்டி குடுக்கும் போதெல்லாம் இந்த படத்துல பானுமதி கேரக்டர் தான் ஞாபகம் வரும்.. the was she portrays that is really class.. பானுமதிக்காகவே வூட்டம்மிணி கிட்ட திட்டு வாங்கிட்டே முழு படமும் பார்த்தேன் நேர்த்து. செளகார் திரும்ப வந்த ப்ரேம்ல இருந்து கடைசி ப்ரேம் வரைக்கும் அவுங்க காட்டுற தவிப்பு இருக்கே.. யப்பா.. ரங்காராவ் வழக்கம் போல கலக்கல் தான், ஆனா அவருக்கு பெருசா ஸ்கோப் இல்ல.. இருந்தாலும் அவரோட ப்ரசன்ஸ் பானுமதிக்கே கூட பெரிய ப்ளஸ்.. அதே இடத்துல வேற யாரும் யோசிச்சு பாருங்க, பகவதி, அல்லது சக்ஸ்ரநாமம்.. ம்ஹும் இந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆயிருகாது..
ஜனவரி 28, 2009 at 10:41 மு.பகல்
annai (1962) – was made from a Bengali Movie ‘maya mriga’ – it was later produced in hindi by AVM. Read the full information in this film
http://www.dhool.com/sotd2/916.html
ஜனவரி 29, 2009 at 12:35 மு.பகல்
Nagarajan,
Thanks for the info on Annai. I too had mentioned that it was based on a Bengali play.
ஜூலை 18, 2009 at 10:42 மு.பகல்
arumaiyana padam, you forgot to include the super scene wherein Chandrababu plays with rat, one of the most memorable scene.
ஜூலை 18, 2009 at 4:56 பிற்பகல்
கோபால், அன்னை பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி! neengaL சொல்வது மாதிரி அது நல்ல சீன்தான்.