இதுவும் சாரதாவின் guest post. Enough said. என்னுடைய ஒரிஜினல் போஸ்ட் இங்கே. Over to Saradha!
முக்தா பிலிம்ஸ் சார்பில் ‘முக்தா’சீனிவாசன் இயக்கிய படம். முக்தா ஒரு பழம்பெரும் இயக்குநர். அந்த காலத்திலேயே முதலாளி என்ற படம் எடுத்து மகத்தான வெற்றியைக்கணடவர் (’ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்ற பாடலை மறக்க முடியுமா). அவர் எடுக்கின்ற படங்கள் எல்லாமே கதையம்சத்தைப் பொறுத்த்வரை ச்ற்று வித்தியாசமாகவே இருக்கும். அதாவது மற்றவர்கள் எடுக்கத் தயங்கும் கதைகளை துணிந்து படமாக்குவார். தொடர்ந்து ‘பனித்திரை’, ‘தேன்மழை’, ‘பொம்மலாட்டம்’ போன்ற படங்களை இயக்கியபின்னர் நடிகர்திலகத்திடம் வந்தார். ‘நிறைகுடம்’ என்ற அற்புதமான படத்தைத் தந்தார். சிறப்பான கதை அற்புதமான நடிப்பு, சிறந்த நட்சத்திரத் தேர்வு என்று எல்லா அம்சங்களையும் உள்ளட்க்கிய படமாக அது வந்தது. (அதைப்பற்றி தனியாக ஒரு எபிசோட் எழுத இருப்பதால் இப்போது விட்டுவிடுவோம்).
முக்தா – நடிகர்திலகம் காம்பினேஷன் ஒரு விசித்திரமான கூட்டணி. தொடர்ந்து இரண்டு வெற்றியைத்தர மாட்டார்கள். ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று தொடர்ந்தது. உதாரணமாக, இவர்கள் கூட்டில் உருவானவற்றுள்
நிறைகுடம் – வெற்றி
அருணோதயம் – தோல்வியைக்கடந்த சுமார் வெற்றி
தவப்புதல்வன் – வெற்றி
அன்பைத்தேடி – தோல்வி
அந்தமான் காதலி – வெற்றி
இமயம் - தோல்வி
கீழ்வானம் சிவக்கும் – வெற்றி
பரீட்சைக்கு நேரமாச்சு – வெற்றி
இரு மேதைகள் – தோல்வி
இப்படி வெற்றியும் தோல்வியும் வெற்றியும் மாறிக்கண்ட ஒரு காம்பினேஷன். இவற்றிற்கிடையே முக்தா தனியாக ‘சூரியகாந்தி’, ‘அந்தரங்கம்’, ‘அவன் அவள் அது’ போன்ற படங்களையும் இயக்கினார். (அது பற்றி இங்கு விளக்கம் அவசியமில்லையென்பதால் விட்டு விடுவோம்).
“அன்பைத்தேடி” படம் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படம் அல்ல. முதல் நாள் முதல் காட்சி பார்த்ததுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு விட்டுப்போய் விட்டது. (பொதுவாக முக்தாவின் ப்டங்களை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு எல்லாம் அணுகுவதில்லை. இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு கணிப்பு இருக்கும்). கண்தெரியாத கதாநாயகியை வைத்து, நிறைகுடம், மாலைக்கண் நோய் உள்ள கதாநயகனை சித்தரித்து தவப்புதல்வன் என்று எடுத்த முக்தா, அன்பைத்தேடி படத்தில் ‘எப்போதும் பகல் கனவு காணும்’ ஒரு கதாநாயகனை மையமாக வைத்து கதயை உருவாக்கி இருந்தார். நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக் காட்ட கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லாத ஒரு களம்.
கதைச்சுருக்கம்:
அக்கா விஜயகுமாரியின் கணவர் மேஜரின் ப்ராமரிப்பில் வளரும் சிவாஜி, எப்போதும் பகல் கனவு காண்பவராக இருப்பார். அவரை முன்னுக்கு கொண்டுவர மேஜரும் என்னென்னவோ வியாபாரங்களை அமைத்துக்கொடுக்க ஒவ்வொன்றும் அவருடைய பகல்கனவு நோயால் பாழ்பட்டுப்போகும். கண்ணாடிக்கடை வைத்திருக்கும்போது, கிரிக்கெட் விளையாடுவதாக கனவு கண்டு விளாச மொத்த கண்ணாடிகளும் பாழ். மீண்டும்பட்டாசுக்கடை வைத்திருக்கும் சிவாஜி, ஜெயலலிதாவை ‘மிஸ்.மெட்றாஸ்’ ஆக கனவு கண்டு கொண்டே மத்தாப்புகளைக் கொளுத்திப் பட்டாசுகளின் மேல் போட, மொத்தக்கடையும் எரிந்து சாம்பல். இன்னொரு இடத்தில் ஓவியக்காட்சியைகாணச் சென்ற இடத்தில் ஒரு படத்தைப்பார்த்து அதில் வரும் பெண்ணுடன் கற்பனையில் ஜெயலலிதாவை நினைத்துப் பாட்டுப்பாடி, அதே நினைவில், அங்கே விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.டி.சகுந்தலாவைக் கட்டிப்பிடிக்க மிகவும் ரசாபாசமாகிவிடுகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அக்கா விஜயகுமாரி – மேஜர் தம்பதியின் பெண்குழந்தையை கடைக்கு அழைத்துச் செல்லும் சிவாஜி, அங்கே ஒரு புத்தர் சிலையைக் கண்டு, தானே புத்தராக பகல் கனவில் மூழ்கி விட, குழந்தை காணாமல் போக, விஷயம் அறிந்த மேஜர் இனிமேலும் பொறுக்க முடியாமல் வெகுண்டு போய் மைத்துனனின் சொத்துக்களை அவரிடமே ஒப்படைத்து விட்டு மனைவி விஜயகுமாரியுடன் தனியே சென்று விடுகின்றார். இதனிடையே, காணாமல் போன தன் மகளின் ஒரே நினைவாக தன்னிடம் இருந்த (அந்தக் குழந்தை முன்பு பாடிய) பாடல் கேஸட்டையும் தன்னுடைய அவசர நடவடிக்கையால் விஜயகுமாரி அழித்து விடுகிறார். அக்காவும் அத்தானும் தனியே விட்டுச்சென்றதால் தவிக்கும் சிவாஜிக்கு ஜெயலலிதாதான் உறுதுணையாக இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக பயந்த சுபாவத்தைப் போக்கி, தைரியமுள்ளவராக மாற்றுகிறார். இந்நிலையில் ஒருநாள் வானொலியில் காணாமல் போன அக்காவின் குழந்தை பாடிய பாட்டு ஒலிக்க, அதைக்கேட்டு உடனடியாக வானொலி நிலையத்தை அணுகும் சிவாஜி அவர்களிடம் இருந்து குழந்தையின் இருப்பிடம் பற்றியறிந்து அங்கே சென்று குழந்தையை மீட்டு அக்கா குடும்பத்திடம் சேர்க்க, குடும்பம் மொத்தமும் ஒன்று சேர … முடிவு ‘சுபம்’.
இப்படத்திற்கு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரான (சிவந்த மண், இதயக்கனி, தியாகம் புகழ்) என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ‘மெல்லிசை மாமன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில்
“அம்மாவும் அப்பாவும் இரு பூனைகள்.. அவர்களின் மகள் நான் செல்லப்பூனை” (குழந்தை பாடுவது, கிளைமாக்ஸில் குழந்தையை கண்டு பிடிக்க உதவும் பாட்டு)
“புத்தி கெட்ட பொன்னு ஒண்ணு சுத்துதடி என்னையே” (டி.எம்.எஸ். – சுசீலா) நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் வித்தியாசமான காஸ்ட்யூமில்.
டி.எம்.எஸ்ஸுடன் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய “சித்திர மண்டபத்தில் சில மொட்டுகள் கொட்டி வைத்தேன்” என்ற பாடல் அப்போது ரொம்ப பாப்புலர். இப்படத்திற்காக சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த ‘என் மகன்’ படம் மாற்றப்பட்டது.
அக்டோபர் 3, 2008 at 5:52 பிற்பகல்
sAradhA, I remember kumudam’s review for “iru mEdhaikaL”. The review’s last (punch) line – “iru mEdhaikaL = iru pEdhaikaL”. Very interesting use of words!
அக்டோபர் 4, 2008 at 4:05 பிற்பகல்
சாரதா, RVயின் அன்பைத் தேடி ரெவ்யூ இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம் என நினைத்தேன். அருமையாக ஃபில் செய்து விட்டீர்கள். நன்றி.
December 8, 2009 at 2:20 மு.பகல்
அப் படத்தின் பாடல்கள் தேவை தம்பி தரமுடியுமா? அல்லது எங்கே பெறலாம்?