விகடனுக்கு நன்றி! (1967 தீபாவளி மலரில் வந்தது)
தமது நடிப்புத் திறமைக்கு சவால் விட்ட இரண்டு கேரக்டர்கள் பற்றி இங்கே சொல்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
ஒரு நடிகன் நடிப்புத் துறையில் பண்படுவது என்பது, நேரிடையாக சமூகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால், இயலாத காரியமாகப் போய்விடும். இது என்னுடைய கருத்து. இதிகாசப் படங்களிலிருந்து அவனுடைய நடிப்புத் துறை துவங்கினால்தான், நாளாக நாளாக அவன் நடிப்பு பண்பட்டு, மெருகடையும். பக்திப் படங்களில் நடிக்கும்போது, நடிப்பிற்கான மிக உயர்ந்த கல்விச்சாலை ஒன்றில் இருப்பது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. அந்த நினைப்பில், திருவருட்செல்வரில் அப்பராக நான் நடித்ததை பெறற்கரிய பேறாகக் கருதுகின்றேன்.
அப்பராக நான் நடித்திருப்பதைப் பார்த்தவர்கள், நம் காலத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கும் காஞ்சிப் பெரியவர் அவர்களையே என்னுடைய நடிப்பு நினைப்பூட்டுவதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மையே! அப்பராக நடிக்கவேண்டும் என்ற அழைப்பு வந்தவுடனேயே, என் மனதில் பளிச்சிட்டவர் அந்த மகான்தான்.
காஞ்சிப் பெரியவர் அவர்களை நான் சந்தித்ததைப் பற்றி நினைத்தால், இப்போது கூட என் உடல் புல்லரிக்கிறது.
என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளுடன் ஒன்றிவிட்ட அந்தச் சந்திப்பு, கபாலீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. அப்போது அங்குதான் பெரியவர் அவர்கள் தங்கியிருந்தார்கள்.
கல்யாண மண்டபத்தை நான் அடைந்தபோது இருள் சூழ்ந்திருந்தது. என்றுமே இருந்திராத ஒரு புத்துணர்ச்சியோடு, படபடக்கும் நெஞ்சுடன், பெரியவர் அவர்கள் இருந்த அறையில் நுழைந்தேன். கீழே விழுந்து, உடம்பு பூமியில் படும்படி வணங்கினேன். மின்சார விளக்குகளை அணைக்கும்படி சொன்னார் பெரியவர். அருகில் இருந்த குத்துவிளக்கு மட்டும் மங்கிய ஒளியைப் பரப்பிக்கொண்டு இருந்தது. அந்த நிழலாடிய ஒளியில் பளிச்சிட்டன அவர் கண்கள். அழகிய குறுந்தாடிக்கு இடையில், மென்முறுவலுடன், நல்ல கனிந்த குரலில் அன்பொழுகப் பெரியவர் அவர்கள் பேசலானார்கள். என் கண்கள் அவரை விட்டு அகல மறுத்தன. காதுகள், அவர் பேச்சுக்கு அடிமையாகின. எனது நா அவரது கேள்விகளுக்கு அடக்கமாகப் பதில் சொல்லிற்று. பத்து நிமிடங்கள் அந்தத் தெய்வ சந்நிதியில் இருந்தேன்.
விடைபெறும்போது, பெரியவர் ஆசீர்வாதமாகச் சொன்ன வாய் மொழியைக் கேட்டு நான் கண்ணீர் உகுத்தேன். ”நீங்க நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்றதுக்கு உங்கள் தாய் தந்தையர் பல்லாண்டு வாழப் பகவானைப் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார் பெரியவர்.
தாய் தந்தையை முன்னிலைப் படுத்தி அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மெய்சிலிர்க்காமல் இருக்குமா?
அன்று நடந்த அந்தச் சந்திப்பினால், பெரியவர் அவர்களின் பாவங்கள், என் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டன. அப்பராக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த போது, என் மனதில் படிந்த அந்த பாவங்கள் தாமாகவே என் நடிப்பில் ஆட்சி செய்தன.
காஞ்சிப் பெரியவர் அவர்களை மனதில் கொண்டேதான் மேக்கப் நடந்தது. பிளாஸ்டிக் மேக்கப் அது. இந்த மேக்கப் போட மூன்று மணி நேரம் பிடித்தது. பதினாறு நாட்களுக்கு தினமும் அதைப் போட்டுப் போட்டு எடுக்கும்போது, ஒரு யுகம் கழிவது போலிருக்கும் எனக்கு.
அப்பர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியவர். ஆனால், வியட்நாம் வீட்டில் வரும் பிரஸ்டீஜ் பத்மநாபன் நிகழ்காலத்து மாடர்ன் பெரியவர், இந்த நாடகம் பிரமாத வெற்றி பெற்றதென்றால், அந்தப் பெருமை எல்லாம் கதாசிரியர் சுந்தரத்தையே சேரும்.
அவர் என்னை அப்படி நடிக்க வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
‘வியட்நாம் வீடு’ கதையை நாடகமாக ஆக்க முடிவு செய்ததும், சுந்தரத்துடன் நான் தஞ்சாவூருக்குப் போனேன். மூன்று நாட்கள் நாடகத்தின் வசனத்தைப் படித்தார் சுந்தரம். என் வசனம் மட்டும் 125 பக்கங்கள் இருந்தன. இரண்டு நாட்களில் என் வசனங்கள் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. என் மனதிற்குப் பிடித்துவிட்டதென்றால், வசனம் எனக்கு உடனே மனப்பாடம் ஆகிவிடும்.
பிராமண பாஷை வருகிறது என்றவுடன், நான் அதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டேன். அதுவரை, பிராமண பாஷையை நாடகத்தில் கிண்டலுக்கும் கேலிக்குமாக, காமெடி பகுதிக்கே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், நான் அந்த பிராமண பாஷையைக் கொண்டு, உணர்ச்சிமயமாக நடிக்கவேண்டியதாக இருந்தது. ஆகவே, அதில் பூரண வெற்றி பெறுவதை ஒரு சங்கற்பமாகக் கொண்டேன்.
வெற்றி பெறத்தான் செய்தேன் என்பதை நாடகம் நடக்கும்போது மெதுவாகவும் உரக்கவும் என் காதுகளில் விழுந்த ‘விம்மல்’ ஒலிகள் நிரூபித்துவிட்டன! பத்மநாபன், உயர்ந்த நிலையிலி ருந்து இறங்குகின்ற நிலையைத் தங்கள் வாழ்வோடு ஒப்பிட்டு அழுதவர்கள் பலர். அவர் தன் தாயைப் பற்றிக் கூறும்போது, தங்கள் தாயை நினைத்துக் கண்ணீர் விட்டவர்கள் பலர்!
நல்ல நடிப்பைப் போற்றுகின்ற மனப்பான்மை ஜனங்களிடம் வர வரக் குறைகிறதோ என்ற பயம் எனக்கு உண்டு. ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் நல்ல முறையில் வெற்றி பெறாததை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
அதே சமயம், அப்பரையும் பிரஸ்டீஜ் பத்மநாபனையும் பார்த்து உருகுகிறார்கள் என்றால், அந்தப் பயத்திற்கு அவசியமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.




அக்டோபர் 28, 2008 at 4:05 மு.பகல்
Beautiful write-up from NT. The very fact that he loved those two characters shows how much he got involved in those characters. It is simply amazing that he memorized 125 pages dialogues in just 2 days. The NT must have been genius and certainly, tamil nadu missed a golden opportunity to appreciate this rare talent.
அக்டோபர் 28, 2008 at 6:08 மு.பகல்
Ram,
Thanks for the feedback. I forgot to mention that he wrote this up in 1967 (Deepavali malar)
அக்டோபர் 29, 2008 at 8:29 மு.பகல்
The brahmin’s dialect has not spoken well by any actor so far. Sivaji did an OK job in vietnam veedu but still in many places, it was not upto the mark
அக்டோபர் 29, 2008 at 11:34 பிற்பகல்
ஸ்மிதா,
பல பிராமணர்கள் சிவாஜி நன்றாக பேசியதாக சொல்வார்கள். நானும் ஐயர் ஜாதியில் பிறந்தவன், எனக்கும் அவர் நன்றாக பேசியதாகத்தான் தெரிந்தது.