விகடனில் 17-4-1994 அன்று வந்த நாகி ரெட்டியின் பேட்டி. விகடனுக்கு நன்றி!
விதியின் குழந்தை நான்!” – நாகி ரெட்டி
உங்கள் வாழ்க்கையில் ரொம்பவும் சந்தோஷமான நேரம்?
அந்தப் பதினெட்டு வயது… திரும்பக் கிடைக்குமா? அப் போது என் அப்பா நரசிம்ம ரெட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்த வியாபார நுணுக்கங்கள் பல. மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று பல நாடுகளுக்கு என்னை வியாபாரத்துக்காக அனுப்பி வைத்தார் அப்பா. புது இடங்களுக்குப் போன அற்புத அனுபவம் அது! சந்தோஷத்தை அனுபவித்தேன். அங்கே போய் நான் செய்த பிஸினஸ் என்ன தெரியுமா? வெங்காய வியாபாரம்!
சினிமா உலகில் உங்களை அசத்திய நண்பர்?
எஸ்.எஸ்.வாசன்! அப்போது ஜெமினி ஸ்டுடியோவுக்கு விருந்தாளியாக வந்திருந்தார் மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய். அப்படியே அவரை எங்கள் வாஹினிக்கும் கூட்டி வந்தார் வாசன். மொரார்ஜி தேசாய் வாஹினியை ஒரு ரவுண்ட் சுற்றிப் பார்த்துவிட்டு, என் தோளைத் தட்டினார். ‘எத்தனையோ சினிமா ஸ்டுடியோக்களுக்குப் போயிருக்கிறேன். பம்பாயில் கூட இவ்வளவு பிரமாண்டமாக இல்லை. ஜெமினி, வாஹினியைப் பார்த்த பிறகு, சினிமா என்பது கூட பெரிய இண்டஸ்ட்ரி வகைதான் என்று தோன்றுகிறது’ என்றார்.சினிமாவை இண்டஸ்ட்ரியாக ஏற்றுக்கொண்டதற்கு வாசன்தான் காரணம். எங்களுடைய நட்பு சினிமாவுக்கும் அப்பாற்பட்ட தூய நட்பு. தங்க செயின், பட்டுப் பாவாடை தகதகவென்று மின்ன, தனது நான்கு வயது பேத்தியை மடியில் உட்கார வைத்து, தானே காரை ஓட்டிக் கொண்டு என்னைப் பார்க்க வருவார் வாசன். அந்தக் கம்பீரமே தனி!
சினிமா, பத்திரிகை தவிர வேறென்ன துறையில் உங்களுக்கு விருப்பம் அதிகம்?
பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன்! நீங்கள் வடபழனியில் பார்க்கும் விஜயா கார்டன், சந்தமாமா பில்டிங், விஜயா மருத்துவமனை என்று பல கட்டடங்கள் எனது கை வண்ணத்தில் உருவானவைதான். எங்கள் பில்டிங்கின் ஒவ்வொரு செங்கல்லுடனும் நான் பேசியிருக்கிறேன். நான் முதலில் பில்டிங் கட்டும்போது கோடம்பாக்கத்தில் ரோடு கூட இல்லை.
சினிமா எனும் கற்பனைக் கோட்டைக்குள் எப்படிக் காலடி வைத் தீர்கள்?
என் அண்ணன் பி.என்.ரெட்டி கொஞ்சம் வித்தியாசமானவர். எனக்கு வியாபாரக் கண் என்றால், அவருக்கு கலை. அவரால்தான் முதல் முறையா மெட்ராஸூக்கு வந்தேன். அப்போது என் வயது 14. நாடகத் துறையில் பிரபலமாக இருந்த ராகவாச்சாரி, நரசிம்மராவ் போன்றவர்களுடன் அண்ணன் நாடகத்துறைக்கு வந்து, படிப்படியாக முன்னேறிய நேரம் அது. ‘ரோஹிணி பிக்சர்ஸ்’ என்று ஆரம்பித்து, ‘வந்தே மாதரம்’ என்று ஒரு படம் எடுத்தார். நான் அந்தப் படத்துக்கு ‘பப்ளிஸிடி’ வேலைகளைச் செய்தேன். ரோஹிணியை வாஹினியாக்கி கோடம்பாக்கத்தில் நிறையக் கட்டடங்களை எழுப்பினோம். அதில் ஒன்றுதான் வாஹினி ஸ்டுடியோ. ஜெமினிக்குப் பிறகு மெட்ராஸில் இரண்டாவது ஸ்டுடியோ வாஹினிதான். பிறகு படத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஆரம்பத்தில் நானே ஒரு படம் இயக்கியுள்ளேன்.
இன்று வரை நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வரும் பொருள் உண்டா?
அப்படி எதுவும் இல்லை. ஆனால் நான் கொடுத்த பொருளை ஒருவர் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவதாக அறிந்தேன். எங்கள் ‘சந்தமாமா கம்பைன்ஸ்’ அந்த வி.ஐ.பி-யை ஹீரோவாக வைத்துப் படமெடுத்தது. நான் அவருக்குப் பட பூஜையன்று 101 சவரனில் பொற்காசுகள் பரிசளித்தேன். அவர் அதைப் பூஜித்து வருகிறாராம். அவருக்கு நான் பொற்காசுகள் வழங்கிய அந்தக் காட்சியை பெரிய சைஸ் போட்டோவாக தனது வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்! அவர் வேறு யாருமல்ல, ரஜினிகாந்த்!
நீங்கள் வாய்ப்புக் கொடுத்து இன்றைக்கு முன்னணியில் இருப்பவர்களைப் பற்றி?
என்.டி.ராமராவ்! ‘விஜயா வாஹினி’யில் வேலை பார்த்தவர். படிப்படியாக உழைத்து முன்னேறியவர். என் பல படங்களின் ஹீரோ என்.டி.ஆர்-தான். நடிகர் ரங்காராவ் கூட என்னிடம் பணி புரிந்தவர்தான். அந்தக் காலத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை தருவார்கள். அதுவே எங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். நாங்கள் கொடுத்து அனுப்பும் சினிமா வசனங்களை வீட்டில் முழுவதுமாக ஒத்திகை பார்த்து விட்டுத்தான் மறுநாள் செட்டுக்கு வருவார்கள் நடிகர்கள். இன்று இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?
உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல்கள்?
கண்டசாலா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள் ரொம்பவும் பிடித்தவை. சங்கராபரணத்தை பாடல்களுக்காகவே பார்த்தேன். கண்ணதாசனைப் பற்றியும் சொல்ல வேண்டும். அவர் ஒரு ஜீனியஸ். அவருடன் சேர்ந்து பணியாற்றியபோது பல தத்துவக் கவிதைகளைக் கேட்டு அசந்து போயிருக்கிறேன்.
பல தடைகளைத் தாண்டி வெற்றி கண்டவர் நீங்கள். உங்களது சாதனைகள் திருப்தியளிக்கிறதா?
நான் விதியின் குழந்தை. எனக்கு எல்லாம் தந்தது கடவுள்தான். நான் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்! தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தேன். அன்று வயலும் தோட்டமும்தான் என் உலகம். வெங்காயம், உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் ஈடுபட்டேன். பின்பு மெட்ராஸில் பிரின்ட்டிங் பிஸினஸ். அப்போதே நவீன வசதிகளோடு என்னுடைய பிரஸ் செயல்பட்டது. பம்பாய்க்காரர்களே என்னிடம் வந்து பிரிண்ட் செய்யும் அளவுக்கு நவீன கருவிகள் வைத்திருந்தேன். பத்திரிகை, சினிமா உலகில் வலம் வந்தேன். ஆப்செட் பிரின்ட்டிங்கில் புதுமைகள் செய்தேன். ஆல் இந்தியா மாஸ்டர் பிரின்ட்டர்ஸின் தலைவர், திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன், வெங்கடேஸ்வரா யூனிவர்ஸிடி மற்றும் கிருஷ்ண தேவராயர் யூனிவர்ஸிடியிடமிருந்து இரண்டு டாக்டர் பட்டங்கள், தாதாசாகிப் பால்கே விருது… இதெல்லாம் கடவுளே இந்தச் சாதாரண மனிதனுக்குத் தந்த பரிசுகள். நான் எந்தத் துறையில் கால் வைத்தாலும், மிகவும் ஈடுபாட்டோடு செய்தேன். பெருமைக்காகச் சொல்லவில்லை… இப்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். விரைவில் முதியவர்களுக்கான காப்பகம் அமைக்க ஆசை!
பத்திரிகைத் துறை உங்களது இரண்டாவது சாதனை… எப்படி ஜெயித்தீர்கள்?
சினிமாவில் நுழைவதற்கு முன்பே, ஜார்ஜ் டவுன் ஆச்சாரப்பன் தெருவில் ஒரு குட்டி அச்சகம் நடத்தி வந்தோம். அங்கேயே ‘சந்தமாமா’ என்ற பெயரில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் வெளியிட்டேன். பிற்பாடு கிட்டத்தட்ட 14 மொழியில் அதை வெளியிட்டேன். என்னதான் சினிமாக்கள் எடுத்தாலும் நான் பத்திரிகைத் துறையில்தான் ஆத்ம திருப்தி அடைகிறேன்.
சினிமா அன்றும் இன்றும் – உங்கள் பார்வையில் எப்படித் தெரிகிறது?
அன்று சினிமாவுக்குப் பொற்காலம்! கதை, இசை, இயக்கம் என்று ஒரு குழுவாகச் செயல்படுவோம். திறமைசாலிகள் இணையும்போது வெற்றிக்கு உத்தரவாதம் இருக்கும். கதைக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். இன்றைய சினிமாவில் ‘கவர்ச்சி’தான் மேலோங்கி நிற்கிறது!
நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்?
ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். – இவர்களெல்லாம் எனக்கு ரொம்ப நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்று ஆசைதான். யாருமில்லையே! ஒரு பிரின்ட்டராகச் சொல்கிறேன்… நெடுங்கால நண்பர் பழனியப்பா. அவரைச் சந்திக்க விருப்பம். அவர் வெளியிட்ட பல கைடுகளை பிரின்ட் செய்திருக்கிறேன். அந்த கைடுகள், தமிழகத்தில் ரொம்பப் புகழ்பெற்ற கோனார் நோட்ஸ்!
உங்களது நெடிய அனுபவத்தில், வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்ட நீதியை இரண்டே வரியில் சொல்லுங்களேன்..?
அன்று குணம் இருந்தால் மதிப்பு. இன்று பணம் இருந்தால்தான் மதிப்பு. இதுதான் வாழ்க்கை, கண்ணா!