நாகேஷ் பற்றி கமல்

விகடனுக்கு நன்றி! 

நாகேஷ்…

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் களில் முக்கியமான பெயர்!எல்லோரையும் திகட்டத் திகட்டச் சிரிக்கவைத்த நாகேஷ், ஜனவரி 31-ம் தேதி மாரடைப்பால் காலமாகி, அத்தனை பேரையும் கண்ணீர் சிந்தவைத்துவிட்டார்.

ஒரு காமெடியன் ஹீரோவாகி, ‘சர்வர் சுந்தரம்’, ‘எதிர்நீச்சல்’, ‘நீர்க்குமிழி’, ‘அனுபவி ராஜா அனுபவி’ என்று தொடர்ந்து ஜெயித்த முதல் நடிகர் நாகேஷ்!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற ஹீரோக்களுக்காகப் படப்பிடிப்பில் நெடுநேரம் காத்திருந்த நகைச்சுவை நடிகர்களுக்கிடையே… அந்த மாபெரும் ஜாம்பவான்களே நாகேஷின் நேரத்துக்காகக் காத்திருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் அடையாறில் உள்ள தன்னுடைய கடைசிமகன்ராஜேஷ் பாபு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் நாகேஷ். மறைவுச் செய்தி கேட்டு, அவருடைய உடலுக்கு ரஜினி யுடன் அஞ்சலி செலுத்த வந்த கமல்… நெடுநேரம் நாகேஷின் வீட்டிலேயே சோகம் அப்பிய முகத்தோடு காணப்பட்டார்.

கமலிடம் சிறிதுநேரம் பேசியபோது நாகேஷ் பற்றிய தன் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

”நடிப்பைப் பொறுத்தவரை என்னுடைய ஆதர்சபுருஷர்களின் பட்டியலில் சிவாஜி, நாகேஷ் இருவரும் முக்கியமானவர்கள். சிவாஜியின் இறப்பு எனக்குள் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ… அதே போல், நாகேஷின் மரணமும் என்னை நிலைகுலைய வைத்திருக்கிறது. நாகேஷை ‘வாடா… போடா’ என்று வாஞ்சையாக அழைக்கும் உரிமை படைத்த ஒரே நபர் கவிஞர் வாலி. அவரிடம் கேட்டால், ‘நாகேஷ் நினைத்தால் என்னைப் போல் பாடலை எளிதாக எழுதிவிடுவான்’ என்கிறார். நாகேஷை நாயகனாக்கி அழகுபார்த்த என் குருநாதர் பாலசந்தரிடம் பேசினால், ‘திரைப்படத்தை இயக்குவது நாகேஷ§க்கு கம்பசூத்திரமல்ல’ என்று புகழ்கிறார். பல்துறையில் உள்ள வித்தகர்களாலும் நாகேஷின் புத்திசாலித்தனம் பிரமிக்கப்படுகிறது.

பொதுவாக என்னுடைய அலுவலகத்தில் யாருடைய போட்டோவையும் மாட்டி வைக்கும் பழக்கமில்லை. குறிப்பாக, நான் யாருடனாவது சேர்ந்திருக்கும் படங்கள் இருப்பதில்லை, நாகேஷ§டன் நான் சேர்ந்து நிற்கும் ஒரேயரு புகைப்படத்தைத் தவிர! அந்த போட்டோவில் நாகேஷ் என்கிற மகாகலைஞனை அணுஅணுவாக ரசித்து சிலாகித்து நிற்கும் ரசிகன் மனோபாவத்தோடு தான் நான் நிற்கிறேன். திரையுலகில் நாகேஷின் நடிப்பை ரசிப்பவர்கள் அனை வரும் ஒருங்கிணைந்து ‘ஃபேன் கிளப்’ ஒன்று ஆரம்பித்திருந்தால், அதற்கு அன்று முதல் இன்று வரை நான்தான் தலைவராக இருந்திருப்பேன். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

நகைச்சுவை என்பது நாகேஷின் ரத்தத்தில் கலந்தது. ஒரு படப்பிடிப்பின் இடைவேளை யில், மதிய உணவின்போது சிக்கன் லெக் பீஸை தட்டில் வேகமாகத் தட்டினேன். அதைப் பார்த்த நாகேஷ், ‘ஏம்ப்பா, அதான் ஏற்கெனவே கோழி செத்துடுச்சே… அதையேன் மறுபடியும் மறுபடியும் அடிச்சு சாகடிக்கிறே…’ என்று சொல்ல… யூனிட்டே கொல்லென்று சிரித்தது. அது மாதிரி இன்னொரு முறை பாழடைந்த வீடு ஒன்றில் ஷ¨ட்டிங். மோட்டு வளையத்தில் ஒட்டடை அதிகமாக இருந்தது. அதைப் பார்த்த ஒருவர், ‘அந்த ஒட்டடைய அடிங்கப்பா…’ என்று சொல்ல… அங்கிருந்த நாகேஷ், ‘ஒட்டடைய அடிச்சா… பாவம் அது விழுந்துடும்…’ என்றார். ‘அடிச்சா கீழ விழத்தானே செய் யும்’ என்று அந்த நபர் பதிலுரைக்க… ‘ஒட்டடைய சொல்லலை. வீடே விழுந் துடும்… ஏன்னா, வீட்டுல ஒட்டடை ஒட்டிக்கிட்டு இல்லை. வீடே ஒட்டடை பலத் துலதான் விழாம இருக்கு…’ என்று துளிகூட சிரிக்காமல் சொல்லி, அந்த இடத்தையே கலகலப்பாக்கினார்.

அடிக்கடி நகைச்சுவைக் கதை சொல்வதிலும் அவர் வல்லவர். ‘ஆறு வயதுச் சிறு வனுடைய அப்பா இறந்து விடுகிறார். அவருடைய திவசத்தின்போது மகன் சோற்றைப் பிண்டமாகப் பிடித்து வைக்கிறான். அதைப் பார்த்த அவன் அம்மா ‘ஐயோ, என்மகன் என்ன அழகா பிண்டத்தைப் பிடிச்சு வைக்கிறான். இதைப் பார்க்கறதுக்கு அவங்க அப்பா இல்லியே…’ என்று புலம்பினார்’ என்று சொன்னார் நாகேஷ். நான் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் ‘உயிரோட்டம்’ மிகுந்த பிணமாக பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ். இதோ, இங்கே கண்ணாடிப் பெட்டிக்குள் பிரேதமாகக் கிடத்தப்பட்டிருக்கிறார். இதுவும் படப்பிடிப்பில் நடக்கும் ஒரு காட்சியாக இருக்கக்கூடாதா என்று மனசு அடித்துக்கொள்கிறது…” என்றார் கலங்கிய விழிகளுடன் கமல்.

”ஆடி அடங்கும் வாழ்க்கையடா!” என்று பாடிய நாகேஷை, கண்ணாடிப் பெட்டிக்குள் நெருங்கிப் பார்த்தோம். கமல் உணர்வு நமக்குள்ளும் அப்படியே வியாபித்தது.

பொதுவாக சினிமா நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் சரிவை சந்தித்தால், அதிலிருந்து மீள்வது அபூர்வம். உதாரணத்துக்கு, எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கிய பிறகு, தங்கள் கலை உலக செல்வாக்கை முற்றிலும் இழந்தனர். ஆனால், இதேபோல தன் உறவினர் ஒருவரின் கொலை வழக்கில் சிக்கினார் நாகேஷ். ஆனால், அதற்கெல்லாம் அவர் கிஞ்சித்தும் துவளவில்லை. அதிலிருந்து முற்றிலும் மீண்டு, முன்பைக் காட்டிலும் நிறைய படங்களில் உத்வேகத்துடன் நடித்து, கடைசிவரையில் மாறாப் புகழுடன் வாழ்ந்து காட்டினார்.

சுஜாதாவும் சினிமாவும்

நண்பர் வெங்கட் எழுதிய மறுமொழியை இங்கே பதிப்பித்திருக்கிறேன். நன்றி, வெங்கட்!

பஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:

….சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.

‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பலநாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.
……
பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் farewell to arms, for whom the bell tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பலமாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போதுகூட இதன் பின்கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

இறைவன் உலகத்தைப் படைத்தானா?

நாகேஷ் பற்றி மறுமொழி எழுதிய மணிவண்ணன் உனக்காக நான் படத்தில் இருந்து இந்த பாட்டை பற்றி சொல்லி இருந்தார். பாட்டை கேட்டிருந்தாலும் வரிகளை உன்னிப்பாக கவனித்ததில்லை. அருமையாக இருக்கிறது.

நமக் ஹராம் என்ற படத்தின் தமிழ் பதிப்பு இந்த படம். ராஜேஷ் கன்னா ரோலில் ஜெமினியும் அமிதாப் ரோலில் சிவாஜியும் நடித்திருப்பார்கள். நான் பார்த்ததில்லை. இந்த பாட்டை வைத்து நாகேஷுக்கு ராஜா முரத் நடித்த ஏழைக் கவிஞர் ரோல் என்று நினைக்கிறேன். இந்த படத்தின் இன்னொரு ஓரளவு பிரபலமான பாடல் “ராமு ஐ லவ் யு”. தமிழில் நான் பார்த்ததில்லை.

ஓவர் டு மணிவண்ணன்.

உனக்காக நான் படம் – இறைவன் உலகத்தைப் படைத்தானா? பாடல் (சோகத்தை பிழிந்து எடுத்துவிடுவார் – ஜேசுதாஸ் – அதுக்கேற்ற அருமையான நடிப்பு)

 

படம்- உனக்காக நான்
பாடியவர்-யேசுதாஸ்
எழுதியவர்-கண்ணதாசன்

இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்

இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம் போலவர் பளபளப்பார்
நூல் போலே இவர் இளைத்திருப்பார்

இரு வேறியக்கம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

இறைவன் இங்கே வரவில்லை
எனவே நான் அங்கு போகின்றேன்
வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே
மறுபடி ஒருநாள் நான் வருவேன்

 

தப்பான பாட்டுக்கு விடியோ கொடுத்துவிட்டேன். (இதுவும் மணிவண்ணன் சொன்ன பாட்டுதான், ஆனால் வேறு ஒரு பாட்டு)  நல்ல பாட்டுதான், வாழும் வரை போராடு. கேளுங்களேன்!

நாகேஷ் – அஞ்சலி

என்எஸ்கே, சந்திரபாபு, கவுண்டர், வடிவேலு என்று பல ஜீனியஸ்கள் இருந்தாலும், தமிழின் டாப் காமெடியன் நாகேஷ்தான். நம்மை சிரிக்க வைத்தவரை நினைத்து அழுவதை விட அவரின் சிறந்த நடிப்பை நினைத்து புன்சிரிப்பதுதான் அவருக்கு சரியான மரியாதை.

அவருக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படாது பற்றி சமீபத்தில்தான் குறைப்பட்டுக்க்கொண்டேன். அவருக்கும் அந்த குறை உண்டு. மனோரமாவை பத்மஸ்ரீ பெற்றதற்காக வாழ்த்தும்போது அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அந்த குறை இருப்பது தெளிவாக தெரிந்தது. அடுத்த வருஷத்துக்குள் அவரை மறந்து விடுவார்கள்.

டாப் டென் காமெடிகள்:

1. 1964, காதலிக்க நேரமில்லை – அவர் பாலையாவுக்கு கதை சொல்லும் சீன். என் அம்மாவால் இதைப் பற்றி பேசும் போது சிரிக்காமல் இருக்கவே முடியாது.

2. 1964, படகோட்டி, மீனவர் தலைவர். கலக்குவார்.

3. 1966, மோட்டார் சுந்தரம் பிள்ளை – துப்பறியும் சாம்பு

4. 1967, திருவிளையாடல் தருமி. – “குறை இருந்தால் அதற்கேற்ற படி பணத்தை கழித்துக் கொண்டு மிச்ச பணத்தை தருவது” என்று சொல்லுவதை முதல் முறை கேட்டபோது குபீர் சிரிப்பு சிரித்திருக்கிறேன். அந்த காட்சியின் வசனங்கள் எல்லாம் மனப்பாடமாக பேசுவோம். திருவிழா என்றால் இதை கட்டயாமாக ஒலிபெருக்கியில் போட்டுவிடுவார்கள் (டிவி வராத காலம்)

5. 1967, பாமா விஜயம்: எனக்கு பிடித்த பாலச்சந்தர் படம் இதுதான். நாகேஷ் பிய்த்து உதறுவார்.

6. 1967, அன்பே வா – ராமையா!

7. 1968, எதிர்நீச்சல்: சவுகார்தான் படத்தில் டாப். ஆனால் நாகேஷும் குறை சொல்ல முடியாத நடிப்பு.

8. 1970, மெட்ராஸ் டு பாண்டிச்சேரி – கண்டக்டர் என்றால் அவர்தான்

9. 1996, அவ்வை ஷண்முகி – குடிகார மேக்கப்மன் ஜோசஃப்

10. 2002, பஞ்ச தந்திரம் – அவர் கமலை கேள்வி கேட்டு மடக்கும் காட்சிகள் அபாரமானவை.

குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிப்பு

1. 1964, நீர்க்குமிழி: அருமை!

2. 1965, மேஜர் சந்திரகாந்த்: முதல் பாதியில் கலக்குவார். பின் பாதியில் கொஞ்சம் மிகை நடிப்புதான் – ஆனாலும் நல்ல நடிப்பு.

3. 1966, யாருக்காக அழுதான் சோசப்பு

4. 1968, தில்லானா மோகனாம்பாள்: படத்தின் டாப் நடிகர் இவர்தான். சிவாஜி, பத்மினி ஆகியோரின் மிகை நடிப்புடன் இவரை ஒப்பிட்டுப் பாருங்கள்.

5. 1975, சில நேரங்களில் சில மனிதர்கள் – கண்டதை சொல்லுகிறேன் பாட்டு முடிவில் பேப்பர்கள் பறக்கும். அதை பிடிக்க கடுமையான முயற்சி செய்து ஒன்றே ஒன்றுதான் காப்பாற்ற முடியும். திடீரென்று அதுவும் பறந்துவிடும். அதற்கு டாட்டா காட்டுவார்.

6. 1994, நம்மவர்: பெண் இறந்த பிறகு நடிப்பது மறக்க முடியாதது.

தாராசுரம் குண்டு ராவ் சென்னையில் ரயில்வே குமாஸ்தாவாக வேலை பார்த்திருக்கிறார். அந்த காலத்தில் அவரது ரூம்மேட்கள் ஸ்ரீகாந்தும் வாலியும். வி. கோபாலகிருஷ்ணன் பல உதவிகள் செய்திருக்கிறார். நாடகங்களில் நடித்துக்கொண்டு சினிமா சான்சுக்காக காத்திருந்திருக்கிறார். முதல் படம் தாயில்லாப் பிள்ளையாம்.

அழகுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. அம்மை தழும்புகள் நிறைந்த முகம். ஒல்லியான உருவம். இப்படிப்பட்ட ஒருவர் அறுபதுகளில் நடிகராக உருவானது அதிசயம்தான். அறுபதுகளில் நடிகராக வர அழகான உருவம் அவசியம். சிவகுமார், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த் போன்றவர்களை விடுங்கள். காமெடியன்கள் கூட – சோ ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் – பார்க்க சுமாராக இருப்பார்கள். நாகேஷ் ஒரு இன்ச் மேக்கப்புடன் வந்தாலும் பக்கத்து வீட்டு குமாஸ்தா மாதிரிதான் இருந்தார். ஆனால் அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

எனக்கு தெரிந்து அவர் கண்டுகொள்ளப்பட்ட முதல் படம் நெஞ்சில் ஓர் ஆலயம். காதலிக்க நேரமில்லைக்கு பிறகு சந்திரபாபு, தங்கவேலு எல்லாரையும் பின் தள்ளி விட்டு டாப் காமெடியன் ஆனார். அந்த வருஷம் வந்த படகோட்டி, சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி எல்லாம் அவரை உச்சத்தில் வைத்தன.

பாலசந்தருடன் அவருக்கு இருந்த அண்டர்ஸ்டாண்டிங் சூப்பரோ சூப்பர். பாலச்சந்தர் அவருக்கு பல படங்களில் ஹீரோ வாய்ப்பு கொடுத்தார் – நீர்க்குமிழி, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நவக்ரகம், எதிர் நீச்சல் போன்ற படங்களில் கலக்கினார். மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா மாதிரி படங்களில் இணை கதாநாயகன். ஹீரோவாக நடித்துக்கொண்டே பல படங்களில் காமெடியனாகவும் நடித்தார். திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், அதே கண்கள், மூன்றெழுத்து, நான், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி மாதிரி படங்களில் அவர் மிகவும் ரசிக்கப்பட்டார்.

அறுபதுகளின் கடைசியில் சோ கொஞ்ச நாள் முன்னணியில் இருந்தார். ஆனால் எழுபதுகளின் மத்தியில் தேங்காய் டாப்புக்கு வரும் வரை நாகேஷை யாரும் அசைக்க முடியவில்லை. தேங்காய், சுருளி, ஒய்.ஜி. மஹேந்திரன், கவுண்டர்-செந்தில், ஜனகராஜ் என்று டாப் பொசிஷன் கை மாறிக்கொண்டே போனது. அவர் தன்னை குண சித்திர நடிகராக மாற்றிக் கொண்டார்.

அபூர்வ சகோதரர்களில் முதல் முறையாக வில்லனாக நடித்தார். அபூர்வ சகோதரர்களிலிருந்து அவர் நடிப்பில் இன்னும் மெருகேறியது. அதற்கு முன் அவர் நடித்த படங்களில் அவரது பாத்திரம் நன்றாக இருந்தால் கலக்குவார். இல்லாவிட்டால் வந்து போவார். (ஹலோ பார்ட்னர் மாதிரி படங்களில் அவர் என்ன ஆஸ்கார் விருது நடிப்பா காட்ட முடியும்?) ஆனால் இந்த படத்துக்கு பிறகு ஒரு சொத்தை ரோலிலும் அவரது அனுபவம் தெரியும். படம் நினைவுக்கு வரவில்லை, அவர் பல படங்களில் ரவுடிக்கு அசிஸ்டன்டாக வருவார். நன்றாக நடிப்பார். மைக்கேல் மதன காமராஜன் மாதிரி படங்களில் சின்ன ரோல்தான் – ஆனால் அற்புதமாக நடிப்பார். அவர் காமேஸ்வரனைப் பார்த்து பார்த்து சந்தோஷப்படும் காட்சி அமர்க்களம்! கமலுடன் அவருக்கு நல்ல கூட்டணி அமைந்தது. நம்மவர், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் கலக்கினார்.

அருமையாக நடனம் ஆடுவார். இங்கே ஒரு பாட்டு.

அவரிடமும் மிகை நடிப்பு உண்டு. எல்லா காமெடியன்களையும் போல அவரும் நிறைய படங்களில் – குறிப்பாக எழுபதுகளின் முதல் பகுதியில் – சொதப்பி இருக்கிறார். பிற்காலப் படங்களில் அவருக்கு வாய் கொஞ்சம் குழற ஆரமித்துவிட்டது. ஒரு மாதிரி சமாளித்து நடிப்பார்.

அவரது குறைகளை விட அவரது நிறைகள் பல மடங்கு அதிகம். மிக அற்புதமான நடிகர். திறமையை பொருத்த வரையில் சிவாஜி வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். ஹாலிவுட்டில் இல்லாமல் தமிழ் நாட்டில் பிறந்தது அவர் துரதிர்ஷ்டம், நமது அதிர்ஷ்டம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers