நாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்திருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு?
ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்!
இதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
படத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.
இவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.
- அன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா
- அன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
- உலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா
- திரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா
- நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா
- ரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா
- பாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா
- கண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)
சாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா?. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா?” என்று கேட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.
பாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.
தொடர்புடைய பதிவுகள்
விகடன் விமர்சனம்
அக்டோபர் 25, 2009 at 3:04 மு.பகல்
அப்படி ஒன்றும் தண்டமாகத் தெரியவில்லை.., இன்றைய எதிர்பார்ர்பினை ஈடு செய்ய முடியாமல் போயிருக்கலாம். ஆனால் சராசரி எம்ஜியார் படமாகவே தொன்றுகிறது.
ஆனாலும் தேர்த்திருவிழா வைவிட மோசம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். தேர்திருவிழா.., அநேகமாக பி.வாசுவால் ரஜினிக்காக ரீமேக் செய்யப் படும் அளவிற்கு தகுதிவாய்ந்த படம்.
அக்டோபர் 25, 2009 at 1:07 பிற்பகல்
RV, நாடு அதை நாடு பாட்டு சூப்பர். அதில் வரும் இரண்டு வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை’, ‘வானம் குலமாதர் முகம் பார்த்ததில்லை’. ஏது வீடு என்கிற இடத்தில் ரொம்ப நிரடலான மெட்டமைப்பு. அரை அரை நோட் ஏற்றத்தில் ஒரு ‘S’ போட்டிருப்பார் விஸ்வநாதன்.
பாட்டின் இரண்டாம் சரணத்தில் இருக்கும் தேசப்பற்று என்னை மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது. ‘பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்’ என்று ஆரம்பித்து எதிர்த்து வருவோரை உரமாகப் போடும் என்று முடியும்.
http://kgjawarlal.wordpress.com