பானுமதிக்கு கல்யாணம் ஆன கதை

விகடனில் 72 ஃபெப்ரவரியில் தனக்கு திருமணம் ஆன கதையை பானுமதி எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:

நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. ‘கிருஷ்ண பிரேமா’ என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார்.

“ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!” என்று எல்லாரும் சொல்வார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அவர் மீது எனக்கு ஓர் அன்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் தந்தையிடம், “அப்பா! நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னேன்.

என் தந்தை திடுக்கிட்டுப் போனார். ஆனால், சமாளித்துக் கொண்டு, “அவருக்கும் அந்த விருப்பமிருக்கிறதா?” என்று கேட்டார். “எனக்குத் தெரியாது. நீங்களே கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றேன்.

என் தாயார் எதிர்த்தார்கள். இருந்தாலும், என் தந்தையின் ஏற்பாட்டில் அவர் என்னைப் பெண் கேட்க வந்தார். வந்தவர் மிகவும் கண்டிப்பாகப் பேசினார்: “என்னிடம் பணம் இல்லை. படிப்பும், திறமையும் இருக்கிறது. இஷ்டமிருந்தால் உங்கள் பெண்ணைக் கொடுங்கள். என் வருமானத்துக்கேற்ப அவளை வசதியாக வைத்திருப்பேன். என்னோடு ஓர் ஓலைக் குடிசையில் வாழ்வதற்கும் அவள் தயாராக இருக்கவேண் டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

என் தந்தை பயந்து, “இப்போதே இவ்வளவு கண்டிப்பாகப் பேசுபவர், பின்னாளில் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரை மறந்து விடு!” என்று கூறினார்.

“சரி, மறந்து விடுகிறேன். ஆனால், இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். எப்போது நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தேனோ, அப்போதே நான் அவருக்கு மனைவியாகி விட்டேன்!” என்றேன்.

அப்போதும் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. விளைவு? பெற்றோருக்குத் தெரியாமல் எங்கள் திருமணம் நடந்தது.

மணமக்கள் கோலத்தோடு ஆசி பெற வந்தோம். என் தாயார் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. தந்தையோ அழுதபடியே, “அப்பா அப்பா என்று சுற்றிச் சுற்றி வருவாயே… இப்போது அந்த அப்பாவிடம் கூடச் சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள உனக்கு எப்படியம்மா மனம் வந்தது?” என்று கேட்டார்.

நானும் அழுதேன். அழுதபடியே, “அதுதான் விதி!” என்று சொன்னேன்.

நன்றி விகடன்!

பின்குறிப்பு: பானுமதி 15 16 வருஷம் கழித்து அளித்த ஒரு பேட்டியில் அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தார் என்று சொல்லி இருக்கிறார்! எது நிஜமோ யானறியேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
திரை உலக வாழ்வைப் பற்றி பானுமதி
பானுமதியின் மாஸ்டர்பீஸ் – அன்னை

கே.பாலசந்தர்1966-இல் அளித்த பேட்டி

கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்

விகடனில் ஜூன் 66-இல் வெளியான கட்டுரை. நன்றி, விகடன்!

புதுமை + புரட்சி = கே.பாலசந்தர்

ராகினி ரிக்ரியேஷன்ஸாரின் ‘எதிர் நீச்சல்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை; தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருக்கிறது.

”இந்த நாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா..! அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது” என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர், நடிப்பில் எப்போது சோடை போனார்கள்?

”நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை! ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்திக் காட்டி விடுகிறார்கள். இது வரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை” என்று எதிர்நீச்சலின் வெற்றிக்கு இப்படியும் ஒரு காரணம் கூறப்படுகிறது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் மேலாக, மாதுவையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவ விட்ட நாடகாசிரியரை மறந்துவிட முடியுமா? நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணச்சித்திரத்தையும் அப்பழுக்கின்றிப் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள கே.பாலசந்தரின் பேனாவின் சக்திக்கும், டைரக்ஷன் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எதிர்நீச்சல்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் இவர். பின்னர், சென்னை அக்கவுன்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்தில் சேர்ந்தபோது, அங்கும் வருடத்திற்கு ஒரு முறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவருக்குப் புகழைத் தேடித் தந்த ‘மேஜர் சந்திரகாந்த்’ முதன்முதலில் ஏ.ஜி.எஸ். ஆபீசில்தான் அரங்கேறியது.

நேஷனல் ஆர்ட்டிஸ்ட் குழுவில் நாடகாசிரியராகவும் நடிகராகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும்போதுதான் ‘சதுரங்க’த்தையும் ‘கௌரி கல்யாணத்’தையும் தயார் செய்தார்.

ராகினி ரிக்ரியேஷன்ஸில் பங்குபெற்ற பிறகு, பல சிறு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் இருக்கிறார் பாலசந்தர். மேஜர் சந்திரகாந்த்துக்குப் பிறகு சர்வர் சுந்தரம், மெழுகுவத்தி, நீர்க்குமிழி, நாணல் போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி, முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

நாடகத்தில் ‘கதை, வசனம், டைரக்ஷன்’ என்ற முத்தொழிலையும் புரிந்துகொண்டிருக்கும் இவர், சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைக்கக் காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.

”எம்.ஜி.ஆரின் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதினேன்” என்று நன்றி உணர்ச்சியுடன் கூறினார் பாலசந்தர். சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, நாணல் மூன்று நாடகங்களும் படங்களாக வெளிவந்துவிட்டன. ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் ‘ஊஞ்ச்சே லோக்’ என்ற பெயரில் வெளிவந்து பரிசையும் பெற்றிருக்கிறது. அதில் அசோக் குமார் நடித்துள்ளார். ”இப்போது அதையே தமிழில் ஏவி.எம். எடுக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் மேஜர் சுந்தரராஜனே நடிப்பார். தேவையான சிறு மாறுதல்களுடன் அதை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்” என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் பாலசந்தர்.

இந்தப் படத்தைத் தவிர, தற்போது மனோகர் பிக்சர்சுக்காக தாம் எழுதிய ‘பாமா விஜயம்’ என்ற சமூகச் சித்திரத்தை டைரக்ட் செய்துகொண்டிருக்கிறார் பாலசந்தர். புராணத் தலைப்புடன் சமூகக் கதையன்று எழுதுவதே ஒரு புதுமை தானே!

”நீங்கள் எதிர்நீச்சலையும் சினிமா எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே! இந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடியுமா?” என்று கேட்டேன் நான்.

”ஏன் முடியாது? சர்வர் சுந்தரத்தை எடுக்க நினைத்தபோதும் பலர் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள். ‘நாடகத்திற்குத் தகுந்த சப்ஜெக்ட் இது. சினிமா எடுத்தால் படுதோல்வி அடையும்’ என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால், அது வெளியானதும் அதற்கு பிரமாதமான வரவேற்பு இருந்தது. எந்த சப்ஜெக்டையும் எடுக்கிறபடி எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் பாலசந்தர்.

சினிமாத் துறையில் நுழைந்து புதுமைகளைப் புகுத்தி, புரட்சி செய்து, புகழேணியில் ஏறிய இளைஞர்களின் பட்டியலில் சேருவதற்கு பாலசந்தரும் துடித்துக்கொண்டுஇருக்கிறார். ‘அந்த நாள்’ பாலச்சந்தர், ‘கல்யாணப் பரிசு’ ஸ்ரீதர், ‘சாரதா’ கோபாலகிருஷ்ணன்… இவர்களின் வரிசையில் ‘எதிர் நீச்சல்’ பாலசந்தரும் சீக்கிரத்திலேயே சேர்ந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாலசந்தரை நேரில் சந்தித்துப் பேசும்போது, அவர் உள்ளத்தில் துள்ளும் ஆர்வத்தை ஒருவராலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார். ‘இதை செய்யப் போகிறேன், அதைச் செய்யப் போகிறேன்’ என்று தமது வருங்கால திட்டங்களை அவர் அடுக்கிக் கொண்டு போவதில்லை. தமது கடந்த கால சாதனைகளைப் பற்றிய முதல் அத்தியாயத்தையும் மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.

”நாடகங்களில் மாறுதல்களைச் செய்திருக்கும் உங்களுக்கு சினிமாவிலும் புது மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டேன்.

”நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நிறைய ஆசையிருக்கிறது. இப்போதுதானே சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன். என் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகுதான் புதிய முயற்சிகளைப் பற்றித் தைரியமாகக் கூற முடியும்” என்று பதில் அளித்தார் பாலசந்தர்.

நாடக மேடையும், சினிமாத் துறையும் எழுத்தாளர்களை ஒருபோதும் புறக்கணிக்கமுடியாது என்று அபிப்பிராயப்படும் அவர், ”நல்ல படத்திற்குப் பரிசு கொடுக்கும்போது அதன் கதாசிரியருக்கும் தகுந்த சன்மானம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். இந்த வருஷம் மலையாள செம்மீனின் ஆசிரியருக்குப் பரிசு கொடுக்காதது அதிசயத்திலும் அதிசயம்” என்றார்.

பாலசந்தர் விந்தையான மனிதர்! விஞ்ஞானத்தில் பி.எஸ்ஸி பட்டம் பெற்றுவிட்டு, வாழ்க்கையில் ‘கணக்கர்’ உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தார். அதைப் போலவே கல்லூரியில் சமஸ்கிருதமும் பிரெஞ்ச் மொழியும் படித்து விட்டுத் தமிழில் நாடகங்கள் எழுதுகிறார். ஃபைல்களுடன் பொழுதெல்லாம் கழித்தாலும், வெளி உலகையும், அதில் நடமாடும் பலதரப்பட்ட விசித்திர கேரக்டர்களையும் அலசி வைத்திருக்கிறார்.

தற்போது பாலசந்தர் உத்தியோகத்தில் ஒரு காலும், கலை உலகில் ஒரு காலுமாக தர்மசங்கட நிலையில் இருக்கிறார்.

”கலையுலகில் கொஞ்சம் பணமும் புகழும் வந்துவிட்டால் உத்தியோகத்தை உதறிவிடுகிறார்களே! நீங்கள் அப்படியன்றும் செய்யாமல் இருப்பதற்கு உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்” என்று நான் கூறினேன்.

”எப்படி விடுவது? அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாகிவிட்டால்?” என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் சிரித்துக் கொண்டார்.

‘பாலசந்தர் பலே கெட்டிக்காரர். சினிமா உலகின் பளபளப்பையும் மினுமினுப்பையும் சரியானபடி எடை போட்டு வைத்திருக்கிறார்’ என்று நான் வியந்து கொண்டேன். ஆனால், அவருடைய மனப் போராட்டத்திற்கு சீக்கிரமே முடிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆபீசில் சம்பளமில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறார்! வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பரின்டென்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது, இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ! பாலசந்தர் இதிலும் புதுமையைப் புகுத்திப் புரட்சி செய்தாலும் செய்வார். யார் கண்டது?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:

பாலச்சந்தர் படங்கள்:
அபூர்வ ராகங்கள் (Aboorva Ragangal), விகடன் விமர்சனம்
மேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)
நவக்ரகம் (Navagraham)
புன்னகை (Punnagai)
பூஜைக்கு வந்த மலர் (Poojaikku Vantha Malar)
சொல்லத்தான் நினைக்கிறேன்(Sollatthan Ninaikkiren), சொல்லத்தான் நினைக்கிறேன் விகடன் விமர்சனம்

சிறந்த 20 இந்திய படங்கள்

போன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ?) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.

இவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

  1. ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.
  2. சத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ?
  3. சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.
  4. ரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.
  5. பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார்த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.
  6. குரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.
  7. மிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.
  8. எம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.
  9. மெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.
  10. கிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.
  11. அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.
  12. ஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.
  13. மணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)
  14. குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.
  15. சத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள்! பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy?
  16. விஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ?
  17. குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்!
  18. விஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள்! தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
  19. பிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.
  20. ஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
T20 of Indian Cinema
T20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?

பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா
என் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

தன் கதைகள் படமானதைப் பற்றி சுஜாதா

சுஜாதா

சுஜாதா

நண்பர் ஸ்ரீனிவாஸ் சுஜாதா பதிவாக போட்டுத் தாக்குகிறார். என் பங்குக்கு நானும் ஒன்று. நண்பர் வெங்கட்ரமணன் அனுப்பிய ஒரு மறுமொழியை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். நன்றி, வெங்கட்!

பஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:

சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம். அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.

‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பல நாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.
……
பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் Farewell to Arms, For Whom the Bell Tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பல மாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போது கூட இதன் பின் கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
காயத்ரி திரைப்படம்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
சுஜாதா சொன்ன சில, சுஜாதாவைப் பற்றி சொல்லப்பட்டவை சில – தொகுப்பு

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்

சாரதாவின் இன்னொரு விமர்சனத்தை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். இந்த படம் பார்க்க வேண்டும் என்றும் ரொம்ப நாள் ஆசை. சாரதாவின் விமர்சனத்தை படிக்கும்போது இன்னும் ஆவலாக இருக்கிறது. பிரின்ட் இருக்கும் என்று நினைக்கிறேன்…

பிழைத்துக் கிடந்தால் சீக்கிரமே சில நேரங்களில் சில மனிதர்கள், நடிகை நாடகம் பார்க்கிறாள் புத்தகங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். சி.நே.சி.ம.வுக்கு மூன்று விமர்சனம் போட்டுவிட்டோம், ந.நா.பா.வுக்கு என்ன செய்வது, படத்தைப் பார்க்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சாரதா சமய சஞ்சீவியாக வந்து சேர்ந்தார்! நன்றி, சாரதா!

ஜெயகாந்தனின் மற்றுமொரு நாவல் அதே கூட்டணியால் (ஜெயகாந்தன் – பீம்சிங் – எம்.எஸ்.வி – ஸ்ரீகாந்த் – லட்சுமி) மீண்டும் ஒரு கருப்பு வெள்ளைச் சித்திரமாக உருவானது. (இப்படம் முடிவதற்குள் இயக்குனர் பீம்சிங் மறைந்து விட்டார் என்பதாக நினைவு. ‘பா’வன்னா பிரியரான அவரது இறுதிப் படம் ‘பாதபூஜை’ என்பதாகவும் நினைவு. இதை உறுதிப்படுத்துவது போல ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தின் டைட்டிலில் ‘டைரக்ஷன் 2வது யூனிட் திருமலை மகாலிங்கம்’ என்று காண்பிக்கப்படும்). படத்தின் தலைப்பு எதைச் சொல்கிறது என்பது படம் பார்க்கும் போதுதான் விளங்குகிறது. ஒரு நாடக நடிகை தன் வாழ்க்கையையே நாடகமாகப் பார்க்கிறாள் என்பதை உணர்த்துகிறது.

நாடகக்குழு நடத்தும் அண்ணாசாமி (ஒய்.ஜி.பார்த்தசாரதி)யின் நாடகங்களில் நடிக்கும் பிரதான நடிகை கல்யாணி (லட்சுமி). தாய் தந்தை உற்றார் உறவினர் யாருமில்லாத கல்யாணிக்கு ஆதரவாக இருந்து வருபவரும் அண்ணாசாமிதான். கல்யாணியின் வீட்டிலேயே ஒரு பகுதியில் நாடகத்துக்கான இசைக் குழு வைத்து ஒத்திகை பார்க்கும் தாமு (ஒய்.ஜி.மகேந்திரன்). கல்யாணியின் ஒரே துணையாக வேலைக்காரி மற்றும் சமையல்காரி பட்டு. நாடகங்களை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதும் விமர்சகர் ரெங்கா (ஸ்ரீகாந்த்). தன் நாடகங்களை விமர்சித்து ரெங்கா எழுதுவது அண்ணாசாமிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கல்யாணிக்கு விமர்சகர் ரெங்கா மீது ஈர்ப்பு. தன்னை சந்திக்க வருமாறு கையெழுத்தில்லாத கடிதமொன்றை அவள் அனுப்ப, குழம்பிப் போகும் ரெங்கா, தன் பத்திரிகைக்கு பேட்டியளிக்க முடியுமா என்று கேட்டு கல்யாணிக்கு கடிதமெழுத, கல்யாணி சம்மதிக்க ரெங்கா அவள் வீட்டுக்குப் போகிறான். பேட்டி நடக்கிறது. இடையில் கல்யாணிக்கு ஒரு சந்தேகம், ரெங்காவுக்கு திருமணம் ஆகியிருக்குமா என்று. பேச்சோடு பேச்சாக அண்ணாசாமி ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்க, ‘ஐந்து வயதில் ஒரே பெண் குழந்தை’யென ரெங்கா சொன்னதும், அவள் முகம் ஏமாற்றம் அடைகிறது. ஆனால் அடுத்த வினாடியே தன் மனைவி முதல் குழந்தையின் பிரசவத்தில் இறந்துபோய்விட்டதாகவும், குழந்தை தன் மாமனார் வீட்டில் வளர்வதாகவும் சொல்ல, மீண்டும் அவள் முகத்தில் மகிழ்ச்சி. பேட்டியை எழுத்து வடிவில் முடித்து கல்யாணியிடம் காண்பிக்க மறு நாள் வரும்போது வீட்டில் பட்டுவும் இல்லை, தாமுவும் இல்லை, அண்ணாசாமியும் இல்லை. தனிமையில் இருவரும் மனம் விட்டுப் பேச, அவர்களுக்குள் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்வது என்று முடிவெடுக்கின்றனர். இது கல்யாணியின் சொந்த வாழ்க்கை என்பதால் அண்ணாசாமியால் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியவில்லை.

ஆனால் தாய், தந்தை, முதல் மனைவி யாவரையும் இழந்து சித்தப்பாவோடும் சித்தியோடும் வாழும் ரெங்காவின் மறுமணம் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மறுமணம் கூடாதென்பதல்ல அவர்கள் எண்ணம், ஆனால் வரப் போகும் புது மருமகள் தங்கள் ஜாதியாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பிற்போக்குத்தனத்தில் ஊறியவர்கள். அதுபோல ரெங்காவின் மறுமணம், ஊரிலிருக்கும் அவருடைய (முன்னாள்) மாமனாருக்கும், (அக்காவின் கணவர் தன்னையே மறுமணம் செய்வார் என்ற எண்ணத்தோடு அக்காவின் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து வரும்) ரெங்காவின் கொழுந்தியாளுக்கும் பிடிக்கவில்லை, அவர்கள் குழந்தையையும் ரெங்காவிடம் தர மறுத்து அனுப்பி விடுகின்றனர்.

ஓரளவு வசதியான வீட்டில், ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் கல்யாணியை, தானும் தன் சித்தப்பா (தேங்காய் சீனிவாசன்) மற்றும் தொத்தா என்று த்ன்னால் அழைக்கப்படும் சித்தி (காந்திமதி) ஆகியோர் வாழும் ஓட்டு வீட்டில் குடி வைத்து சங்கடப்படுத்த விரும்பாத ரெங்கா, தானும் அவளோடு அந்த வசதியான வீட்டிலேயேயே தங்கி வாழ்க்கை நடத்துகிறான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிந்ததும், ரெங்காவின் மனதில் தாழ்வுணர்ச்சி தலைதூக்குகிறது. தானும் சம்பாதித்து அவளும் சம்பாதித்து வாழ்வதை விட, தன் சம்பாத்தியத்தில் அவளும் வாழ்வதே சரிப்படும் என நினைக்கிறான். ஆனால் கல்யாணிக்கோ உயிரை விடுகிறாயா, நாடகத்தை விடுகிறாயா என்ற கேள்வி வரும்போது உயிரையே விடுகிறேன் என்று தேர்ந்தெடுக்கும் ரகம். அந்த அளவுக்கு நாடகமேடை அவளது உயிர்நாடி. விளைவு? சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினை தலை தூக்குகிறது. கல்யாணி எதையும் விட்டுக் கொடுத்துப் போகிற ரகம். ஆனால் அதே சமயம் பேரம் பேசி வாழ்வதல்ல வாழ்க்கை என்பது அவள் எண்ணம். சின்ன ரோஜாச் செடி வளர்ப்பதில் கூட இருவருக்கும் கருத்து வேறுபாடு……

கண்ணுக்கு அழகான ரோஜச்செடியல்ல மனிதனின் தேவை, அதை விட பசியைப் போக்கும் காய்கறிச்செடியே பயன் தரும் என்கிற ரீதியில் ரெங்கா வாதிக்க , தொட்டதுக்கெல்லாம் கருத்து வேறுபாடு. விரிசல் பலமாகிக் கொண்டே போக, ரெங்கா தன் பெட்டியோடு சித்தப்பா இருக்கும் தன் வீட்டுக்குப்போய் விடுகிறான். சண்டைபோட்டுக் கொண்டு அல்ல. அவர்களிருவரின் மனதின் ஆழத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இழையோடிக் கொண்டே இருக்கிறது. எப்போதாவது தேடி வருவான், கல்யாணியும் எதுவுமே நடக்காததுபோல முகம் சுழிக்காமல் நடந்துகொள்வாள்.

இடையே, தாங்கள் தம்பதிகள் என்ற பந்தத்திலிருந்து விலகி நண்பர்கள் என்ற வட்டத்திலேயே அடங்கிப் போவோம் என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் நாகேஷிடம் போக, அவர் தன் வீட்டில் வைத்தே இருவரையும் வாதங்களால் துளைத்தெடுக்கிறார். அவரது நியாயமான கேள்விகளூக்கு இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் கூறும் காரணங்களெல்லாம் சட்டத்தின் முன் எடுபடாது, இருவரில் ஒருவருக்கு ஏதேனும் உடற்குறையிருந்தால் உடனே விவாகரத்து கிடைக்கும் என்று கூறி, ஆனால் அவர்களுடன் பேசியதில் இருவரும் என்னைக்கும் பிரியமாட்டார்களென்றும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டுமென்பதே சட்டத்தின் விருப்பம், தன்னுடைய விருப்பம் மட்டுமல்ல, அவர்கள் மனதின் அடித்தளத்திலும் அதுதான் உள்ளது என்றும் சொல்லியனுப்புகிறார். கல்யாணிக்கு இந்த பந்தத்திலிருந்து விடுபட கொஞ்சமும் விருப்பமில்லை, அதே சமயம் ரெங்காவின் முடிவை எதிர்த்து அவனை நிர்ப்பந்தப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை. ரெங்கா போய்விட்டான். மாதக்க்கணக்கில் அவள் வீட்டுக்கு வரவில்லை. அண்ணாசாமியும் பட்டுவும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக உள்ளனர்.

இதனிடையே கல்யாணி உடல் நலிவுறுகிறது. ஒரு நாள் படுக்கையில் இருந்து எழும் அவளுக்கு இரண்டு கால்களையும் அசைக்க முடியவில்லை. அலறுகிறாள். அண்ணாசாமி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அட்மிட் செய்கிறார். அவள் கால்கள் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் உடனடியாக நடக்காது என்று டாக்டர் சொல்கிறார். மனது கேட்காத அண்ணாசாமி, ரெங்காவிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவன் நாலுகால் பாய்ச்சலில் மனைவியைக் காண வருகிறான். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தபின்பும், சக்கர நாற்காலியே கதியாக இருக்கும் அவளுக்கு ரெங்காவே கால்களாக இருக்கிறான். அவளது தேவைகளை அவனே நிறைவேற்றுகிறான். அப்போது கல்யாணியைக் காண வரும் வக்கீல் நாகேஷ் ரெங்காவிடம், அவளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை காரணம் காட்டி உடனடியாக விவாகரத்து வாங்கிவிடலாம், சட்டம் அதை ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல, ரெங்கா வெகுண்டெழுகிறான்.

‘என்ன சார் உங்க சட்டம்?. இரண்டுபேரும் திடகாத்திரமாக ஒருவர் துணையின்றி ஒருவர் வாழ முடியும் என்றிருந்தபோது விவாகரத்து அளிக்காத சட்டம், இப்போ ஒருவரில்லாமல் ஒருவர் வாழ முடியாது என்ற அளவுக்கு உடலில் குறை வந்த பிறகு அந்தக் குறையையே காரணமாக வைத்து, பிரிக்க முடியும் என்றால் அந்த சட்டம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வக்கீலுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி. இருவருக்குமிடையில் நந்தியாக இருக்க வேண்டாம் என்று அண்ணாசாமியை அழைத்துக்கொண்டு வெளியேறுகிறார். இப்போது நடக்க முடியாத தன் மனைவிக்கு கால்களாக தான் இருப்பதே ரெங்காவுக்கு மன நிறைவைத் தருகிறது. அவளை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டே நாடகம் பார்க்க அழைத்துச் செல்கிறான். தன் உயிரான நாடக மேடையைப் பார்த்ததும், தனக்கு கால்களே வந்துவிட்டது போல அவள் உணர்ந்து மகிழ்வது போல படம் நிறைவடைகிறது.

ஒரு திரைப்படத்துக்கான செயற்கைத்தனம் கொஞ்சம் கூட தலை காட்டாமல், முழுக்க முழுக்க யதார்த்தமாக படத்தை மிக அருமையாகக் கொண்டு சென்றிருப்பதன் மூலம், காட்சி வடிவிலேயே நாடகத்தைப் படித்த திருப்தி நமக்கு. கதாபாத்திரங்கள் யாரும் அந்நியமாகத் தோன்றவில்லை, நம் அன்றாட வாழ்வில் நம் கண் முன்னே வளைய வரும் இயற்கை மனிதர்கள் அத்தனை பேரும்.

ஒவ்வொருவருடைய நடிப்பைப் பற்றியும் தனித் தனியாகச் சொல்லிப் பாராட்ட வேண்டியதில்லை. ரெங்காவாக ஸ்ரீகாந்தும், கல்யாணியாக லட்சுமியும், அண்ணாசாமியாக ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் சித்தப்பாவாக தேங்காய் சீனிவாசனும், சித்தியாக காந்திமதியும், வக்கீலாக நாகேஷும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு யதார்த்தம். அதிலும் தேங்காயும், நாகேஷும்…. சான்ஸே இல்லை. பிரமாதமாக நடிக்கவில்லை. மிகச் சாதாரணமாக வாழ்ந்துவிட்டார்கள். அதுபோல ஒய்.ஜி.பி. நம் அண்டை வீட்டில் குடியிருக்கும் ஒருவர்.

வசனங்கள் எல்லாம் வாள் பிடித்து நறுக்குகிறாற்போல தெள்ளத்தெளிவு. இந்த இடம்தான், அந்த இடம்தான் என்று தனித்தனியாகவெல்லாம் குறிப்பிட முடியாது. சென்ஸார் சர்டிபிகேட் துவங்கி, சுபம் என்ற எழுத்துக்கள் வரையில், திரைப்படங்களுக்கென்று எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரைமுறைகளையெல்லாம் மீறி, படம் எங்கோ உயரத்துக்குப் போய்விடுகிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மனதை வருடும் பின்னணி இசை. கூடவே இரண்டு அழகான பாடல்கள். ஸ்ரீகாந்த் – லட்சுமி ரெஜிஸ்ட்டர் திருமணத்தின் போது பின்னணியில் ஒலிக்கும் ‘எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மனங்கள் திருமணங்கள்’ (டி.எம்.எஸ்., வாணி ஜெயராம் ) மற்றும், படத்தின் நிறைவுப் பகுதியில் கே.ஜே. ஜேசுதாஸ் ஜாலி ஆப்ரஹாம் (திருத்திய “பெயர்” அவர்களுக்கு நன்றி!)பாடிய ‘நடிகை பார்க்கும் நாடகம் – அதில் மனிதர் எல்லாம் பாத்திரம்’ ஆர்ப்பாட்டமில்லாத இதமான மெட்டு. இப்படத்தின் கதை வசனத்தை மட்டுமல்ல, பாடல்களையும் ஜெயகாந்தனே எழுதியதாக டைட்டில் சொல்கிறது.

படத்தின் தொண்ணூறு சதவீத கதைக்களம் என்றால், அது சாப்பாட்டு மேஜையும், கல்யாணியின் படுக்கையறையும்தான் (அதிலும்கூட குறிப்பாக கட்டில்தான்). இவற்றையே திருப்பித் திருப்பி காண்பித்த போதிலும் போரடிக்காமல் படம் செல்கிறதென்றால், அதற்குக் காரணம் கதையைக் கையாண்ட விதம்தான்.

பார்க்காதவர்கள் பார்க்க வேண்டிய படம். பார்த்தவர்களை திரும்ப பார்க்கத் தூண்டும் படம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
சில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerangalil Sila Manithargal), ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்

ஃபோரம்ஹப்பில் ஸ்ரீகாந்த் திரி

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers