தன்மாத்ர(2005) – மலையாளத் திரைப் படம் ஒரு பார்வை

Thanmathraநண்பர் திருமலைராஜன் நல்ல ரசனை உள்ளவர். திரைப்படங்களை கூர்ந்து கவனிப்பவர். குறிப்பாக மலையாளத் திரைப்படங்களைப் பற்றி நிறையத் தெரிந்தவர். அவரை ரொம்ப நாளாக அவருக்கு பிடித்த மலையாளத் திரைப்படங்களை அறிமுகம் செய்து வைக்கும்படி நச்சரித்துக் கொண்டிருந்தேன். பாருங்கள், அவரும் ஒன்று அனுப்பினார், அதை அவர் அனுப்பி பத்து நாள் கழித்துதான் பிரசுரிக்க முடிகிறது. உப்பிலி ஸ்ரீனிவாஸ் இடைவெளி விடாமல் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்!

இந்த முறை தன்மாத்ர என்ற படத்தைப் பற்றி திருமலைராஜன் எழுதி இருக்கிறார். நான் இது வரை பார்த்ததில்லை, அவரிடமே ஓசி டிவிடி கிடைக்குமா என்று பார்க்கிறேன். :-) ஓவர் டு திருமலைராஜன்!

சரெலென்று நான் உணரரத ஒரு தருணத்தில் நாலாம் கிளாஸ் டீச்சர் பெயர் மறந்து போய் விடுகிறது, எவ்வளவு மூளையைக் கசக்கினாலும் சட்டென்று நினைவுக்கு வருவதில்லை, பழைய மகாபலிபுரச் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் என்ற ஊரின் பெயர் ஏனோ தேவைப்படும் பொழுது நினைவுக்கு வரச் சண்டித்தனம் செய்கிறது, வாட்டர் வோர்ல்டு என்ற படம் பெயர் நினைவில் இருக்கிறது அதை எடுத்த கெவின் காஸ்ட்னர் பெயர் மறந்து விடுகிறது. ஐயப்பன் என்ற இணைய நண்பரை இங்கு பார்த்து பேசிப் பழகியிருக்கிறேன், சென்ற முறை சென்னையில் அவரைப் பார்த்த பொழுது நீங்கள் யார் என்று கேட்டு விட்டேன். வேலையில் சட்டென்று முன்பு கண்டுபிடித்த தீர்வுகள் நினைவுக்கு வந்து தொலைக்காமல் நேரத்தை விழுங்குகிறது. மிகவும் ரசித்துப் பார்த்த சினிமாக்களின் பெயர்களும், பாடல்களும், நடிகர் பெயர்களும், ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய நண்பர்களின் பெயர்களும், அண்டை வீட்டுக்காரர் பெயர்களும் இன்னும் கால ஓட்டத்தில் நான் மறக்கவே மாட்டேன் என்று நினைத்த எத்தனையோ விஷயங்களும், காற்றில் கலந்து மறைந்த நறுமணமாய் காணாமல் போய் விடுகின்றன. மூளையில் நினைவுச் செல்கள் கரைந்து போய் விடுகின்றன என்று நினைக்கும் பொழுது வேறு ஒரு தருணங்களில் வேறு ஒரு பெயரையோ, சம்பவத்தையோ, நினைவுத் துணுக்குகளில் தேடுகையில், கேட்காமலேயே நமக்கு மறந்து போய் விட்டதாய் நினைத்த, அழிந்து போன நினைவுத் துணுக்குகள் என்று நினைத்தவை எல்லாம் மீண்டும் உதிக்கின்றன, ஒரு serendipity போல எதையோ தேடும் பொழுது வேறு எதுவோ கிடைக்கின்றன. இந்தப் senility பிரச்சினை வயதாக வயதாக இன்னும் அதிகரிக்கலாம். அது போன்ற தகவல் மறதிகள் குறித்து ஒருவித தற்காலிக கவலை வந்து ஏன் இப்படி நடக்கிறது என்று மனதில் கவலை வண்டாகக் குடைந்து சற்று நேரத்திலே நாம் அப்படிக் கவலைப்பட்ட விஷயமும் கூட மறந்து போய் விடுவதுண்டு. நிரந்தர கவலையாய் அது போன்ற மறதிகள் அரித்துக் கொண்டு தங்கி விடுவதில்லைதான். நம் மூளைக்குள் நடக்கும் ரசாயன மாற்றங்களிலும், மின்னணுத் தேடல்களிலும் ஒரு வித ஒழுங்கான ஒழுங்கின்மை இருக்கிறது போலும். அவ்வப்பொழுது நாம் மறக்கும் விஷயங்கள் மீண்டும் எப்படியோ நினைவுக்கு வரும் பொழுது நமது மூளைச் செல்கள் நிரந்தரமாக அழிந்து விடவில்லை என்ற நினைப்பு வந்து பெருத்த ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது, அடுத்த மறதி வரும் வரையில். அப்படி நிரந்தரமாகவே நம் நினைவுச் செதில்கள் அழிய ஆரம்பித்தால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் இதுவரை அனுபவித்த சந்தோஷங்கள், துக்கங்கள், ரசனைகள், மெல்லுணர்வுகள் எல்லாம் 100, 99, 98, 97…. ஒன்று ஒவ்வொன்றாக உதிரும் ஒரு பூவின் இதழ்கள் போல், இலலயுதிர் காலத்து மரங்களின் உதிரும் இலைகள் போல், நம் நினனவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஆரம்பித்து, முதலில் லேசாகவும், பின்னர் வேகமாகவும் கரைய ஆரம்பித்து 2,1,0 என்று நம் பிறப்பின் ஆரம்ப நிலைக்குச் சென்று பிறந்த பொழுது இருந்த நினைவுகள் மட்டுமே மீதம் இருக்க ஆரம்பித்து அதுவும் கரைந்து போனால் என்ன ஆகும் ? இந்த அனுமாஷ்ய நினைப்பே மிகுந்த அச்சமூட்டுவதாகவும் நடுக்கமூட்டுவதாகவும் உள்ளது அல்லவா ? அப்படிப்பட்ட ஒரு நிலை வருமானால் அதுதானே நடைப்பிணம்?

மருத்துவ ரீதியாக அப்படியொரு சாத்தியம் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்குப் பெயரும் அளித்துள்ளனர் அல்சைமர் வியாதி என்ற குணப்படுத்த முடியாத வியாதி என்று. அல்சைமர் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, ரொனால்டு ரீகன் என்ற முன்னாள் நடிகர், முன்னால் கலிஃபோர்னியா கவர்னர், முன்னாள் அமெரிக்க அதிபரின் பெயரும் அல்லது ரோனால்டு ரீகன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே அவரது பெருமைகள் பதவிகள் எல்லாம் நினைவுகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நமக்கு அல்சைமர் என்ற வியாதியின் பெயர் முந்திரிக் கொட்டையாய் நினைவில் துருத்திக் கொண்டு வருவது உண்டு. யாருக்கோ ஒரு வயதான அமெரிக்க அதிபருக்கு எங்கேயோ வந்த வியாதி என்ற அளவில் நாம் ஒதுக்கி தள்ளி விட்டு அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல்தான் சென்று கொண்டிருந்தேன், முந்தா நாள் இரவு தன்மாத்ர என்ற மலையாளப் படத்தைப் பார்க்கும் வரை. இந்தப் படம் பார்த்த பாதிப்பு இன்னும் நிறைய நாட்களுக்கு என்னிடம் உறைந்திருக்கும் என்று தோன்றுகிறது, இந்தப் படம் என்னில் எழுப்பிய பாதிப்பின் விளைவு இந்தப் பதிவு, இந்தப் படம் கேரளாவில் நடுவயதினரிடையே பெருத்த சஞ்சலத்தையும் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

80-90 வரை இருந்த மலையாளத் திரையுலகப் பொற்காலம் 90களில் காணாமல் போய், தமிழ் பட, தெலுங்குப் பட மசாலா நோய் தொற்றி கொண்டு குற்றுயிரும் கொலையுயிருமாய் போன வேளையிலே, ஒரு புத்துணர்ச்சியை, மலையாளப் படங்களின் இழந்த ரசனையை தன் இடைநிலைப் படங்கள் மூலமாக மீட்டுக் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் ப்ளெஸ்ஸி. இவரது முதல் படமான காழ்ச்ச (தோற்றம்) மீண்டும் ஒரு புதிய அலையை அளித்தது என்றால் தனது இரண்டாவது படமான இந்த தன்மாத்ரவில் மற்றொரு மைல் கல்லை அடைந்துள்ளார். தான் ஒரு நல்ல சினிமாவை எடுக்கிறோம், அதில் வியாபார சமரசங்களுக்கு இடமில்லை என்பதில் உறுதியுடனும் துணிவுடனும், அதே வேளையில் அனைத்து மக்களும் ரசித்து ஒன்றக் கூடிய ஒரு வெற்றிகரமான சினிமாவாவகவும் எடுத்துள்ளார்.

வழக்கமா நம்ம மசாலாப் பட மாஸ்டர்கள் அம்னீஷியா என்ற வியாதியை வைத்து அனைத்துப் பெர்முடேஷன் காம்பினேஷன்களிலும் படம் எடுத்து நமது சிந்திக்கும் திறனை கேள்விக்குள்ளாக்குவார்கள். மூன்றாம் பிறையில் இருந்து கஜினி வரை நாலு பாட்டு நாலு பைட்டுன்னு ஒரு வித ஃபார்முலாக்குள் உழன்ற படங்கள் எல்லா மொழிகளிலும் அநேகம். ஆனால் முற்றிலும் நினைவு அழிந்து போன பின் கதையில் என்ன சுவாரசியம் இருக்கக் கூடும் என்பதனால் இந்த அல்சைமர் நோயையை மட்டும் இது வரை விட்டு வைத்திருக்கிறார்கள். ஹிந்தியில் ப்ளாக் என்று அமிதாப் நடித்த ஒரு படம் இந்த நோயை வைத்து வந்திருக்கிறது போல. ஆனால் அல்சைமர் நோயினால் பாதிக்கப்படும் ஒரு கருவை வைத்துக் கொண்டு, பட்டாபட்டி ட்ரவுசர் தெரிய டான்ஸ், ஹீரோயின்களின் இடுப்பு நடனம், குத்தாட்டம், வானத்தில் பறக்கும் சண்டைகள், எளவு சீன் எந்த வித கமர்சியல் சமரசங்களும் இல்லாமல் முழுக்க முழுக்க கதையின் பலத்தையும் தன் திறமையையும் மட்டுமே நம்பி துணிந்து ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கும் கேரள மக்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.

ப்ளெஸ்ஸியின் முந்தைய படமான காழ்ச்சவைப் போலவே இந்தப் படமும், ஒரு அழகிய நடுத்தர வர்க்க மலையாளக் குடும்பத்தில், அமைதியான ஓடம் போன்ற வாழ்வில் எதிர்பாரரமல் வீசும் ஒரு சூறாவளி அவர்கள் வாழ்க்கையை எவ்வாறு சிதறி சின்னாபின்னமாக்கி விடுகிறது என்பதைக் காட்டும் சினிமா. திருவனந்தபுரத்தில் செக்ரட்டேரியட்டில் ஒரு சாதாரண ஊழியர், அசாத்திய நினைவுத் திறனும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக ஆகியிருக்க வேண்டிய ஆளுமையும், பணிவும் திறமையும், நேர்மையும் கொண்ட ராமேசன் நாயரின் (மோகன்லால்) அழகான குடும்ப வாழ்வில் எதிர்பாராமல் வீசும் சூறாவளி அல்சைமர் நோய். இரண்டு தலைமுறைக் கனவான ஐ ஏ எஸ் பதவி, தாத்தாவான நெடுமுடி வேணுவுக்கும், மகனான மோகன்லாலுக்கும் கிட்டாமல் எட்டாக்கனவாகிப் போன வேளையில், +2 படிக்கும் தன் மகன் மூலமாகத் தன் குடும்பத்தின் நிராசையாகிப் போன ஐ ஏ எஸ் கனவை அடைந்து விடத் துடிக்கிறார்கள், மோகன்லாலும் அவரது தந்தையும். லட்சம் லட்சமாகக் கொட்டித் தரும் ஐ டி வேலையோ, மருத்துவப் பணியோ அவர்களுக்கு முக்கியமாகப் படாமல், இந்தியாவில் பெருமையும் , அந்தஸ்தும் உள்ள ஒரு படிப்பும், பதவியிம் அதன் மூலமாக மக்களுக்குச் செய்யும் சேவையும் பிரதானமாகத் தோன்றுகிறது, ஐ ஏ எஸ் தான் தவறவிட்ட பந்தயத்தின் இலக்கை தன் மகனுக்கு நிர்ணயித்து விடும் துடிப்பான தந்தை. மகனை ஐ ஏ எஸ்ஸுக்குத் தயார் செய்ய ஹிந்துப் பேப்பர்களை சேகரித்துப் பைண்டு செய்து வைத்திருக்கும் தந்தை என்று அமைதியான நதி போல அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் குடும்பத்தில் , குடும்பத் தலைவனான ராமேசன் நாயரை எங்கிருந்தோ வந்து கொடூரமாகத் தாக்குகிறது அல்சைமர் நோய். தன் நினைவுத் திறனுக்காக பாராட்டப்படும் ஒரு நடுத்தர வயது சாதாரணரை, அவர் சேமித்துப் பாதுகாத்த நினைவுகள் அழிந்து, மூளை கரைந்து போன ராமேசன் நாயரை, குடும்பத்தின் தூணை எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதைச் சொல்கிறது தன்மாத்ர.

படத்தின் தூண்களாகத் தாங்கி கொண்டு செல்பவர்கள் தாத்தாவாக வரும் நெடுமுடி வேணுவும், மகனான மோகன்லாலும் அவரது மகனாக வரும் புதுமுக நடிகருமாவர். தேசிய விருதுகளைப் பெற்ற நெடுமுடி வேணுவுக்கு இது மற்றுமொரு மைல்கல் திரைப்படம். மலையாளத் திரைப்பட உலகின் மிகப் பெரிய பலமே அதன் திறமையான இயக்குனர்களும், அதற்கு வலு சேர்க்கும் மிகப் பெரிய குணச்சித்திர நடிகர் பட்டாளமுமேயாகும். திலகன், நெடுமுடி வேணு, முரளி, சோமன், சுகுமாரன் என்று திறமையான நடிகர்கள் நிறைந்த படவுலகம் அது. நெடுமுடி வேணுவின் பலமே நம்மில் ஒருவராக நம் எதிர்த்த வீட்டில், பக்கத்து வீட்டில் பார்க்கும் பாசமும், கனவுகளும் நிரம்பிய ஒரு தாத்தாவாகவே மாறி விடுவதுதான். இயல்பான நடிப்பும், பாத்திரத்துடன் நம்மை ஒன்றிவிடச் செய்யும் சிறப்பும் நெடுமுடி வேணுவுக்குரியது. மோகன்லால் பாசமுடன் எண்ணெய் தேய்த்து விட்டு மசாஜ் செய்யும் பொழுதும் சரி, மோகன்லாலுடன் பொய்யான சண்டை போடும் பொழுதும் சரி, பேரன் பேத்தியுடன் அறிவார்ந்த சம்பாஷணயில் ஈடுபடும் பொழுதும் சரி, பின்னர் தன் நினைவுகளளத் தொலைத்த மகனை மீண்டும் சிறு குழந்தையாகக் கருதி வளர்க்க நேர்கையில் பிழியும் சோகத்திலும் சரி, மனிதர் நெகிழ்த்தி விடுகிறார். பாசாங்கில்லாத, மிகைப்படுத்தல் இல்லாத, அருமையான நடிப்பு நெடுமுடி வேணுவினுடையது. படத்தின் மிகப் பெரும் பலம் இவரது பாத்திரப் படைப்பும் இயல்பான நடிப்பும்.

குடும்பத்தலைவர் ராமேசனாக வரும் மோகன்லாலிடம், நாம் பழைய கிரீடம், வானப் பிரஸ்தம், சித்திரம், தசரதம், பரதம் மோகன்லாலை மீண்டும் காண்கிறோம். முதல் பாதியில் நேர்மையான செக்ரட்டேரியட் ஊழியர், புத்திசாலியான ஒரு தந்தை, அன்பான ஒரு மகன், பாசமுள்ள கணவன் என்று அத்தனை ரோல்களையும் மிக இயல்பாக அநாயசமாகக் கொண்டும் செல்லும் மோகன்லால் வேறு, படத்தின் பின் பாதியில் தன் சிறு வயது நினைவுகள் மட்டுமே மிஞ்ச ஒரு குழந்தையாகி போகும் பாத்திரமாக நம்மை எல்லாம் நெகிழ வைத்து விடும் மோகன்லால் வேறு. அவர் திரையுலக சாதனைகளின் மற்றுமொரு உச்சத்தை இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார். அடிப்படை ஆங்கிலத்தையே மறந்து விட்டு அசட்டுச் சிரிப்புடன் ராஜினாமா கடிதத்தை எழுத முயலாமல் தவிக்கும் இடத்திலாகட்டும், பிரிவுபசாரக் கூட்டத்தில் தட்டுத் தடுமாறி பாட முயன்று நினைவுகள் தப்பி உடைந்து அழும் இடத்திலும், பிள்ளைகளிடம் கொஞ்சும் பாசத்திலாகட்டும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் பேசும் உரையில் காண்பிக்கும் மிடுக்கில் ஆகட்டும், மந்திரியிடம் காண்பிக்கும் கண்டிப்பில் ஆகட்டும், அவர் ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற உணர்வே நமக்கு வருவதில்லை. நம்மில் ஒருவராக அவரை நெருக்கத்துடன் உணர்கிறோம். நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, அழிந்து, கரைந்து, கரைந்து ஒரு சிறு பிள்ளையாக ஒடுங்கிச் சுருங்கிப் போகும் நடிப்பை மோகன்லாலால் அன்றி வேறு எவரால் இவ்வளவுச் சிறப்பாகச் செய்திருக்க முடியும்?

இயக்குனர் ப்ளெஸிக்கு தமிழின் மீது காதல் இருப்பது போல் தெரிகிறது. தன் முந்தைய படத்தில் மம்முட்டியை வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தைத் தமிழில் பேச வைத்த ப்ளஸி, இந்தப் படத்தில் மோகன்லாலின் நினைவுத் திறனையும், அறிவுத் திறனையும் காட்டும் விதமாக திருக்குறளையும், பாரதியார் பாடல்களையும் பயன் படுத்தியுள்ளார். மலையாளிகளுக்கு திருவள்ளுவரும், பாரதியாரும் வலுவாக அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

படத்தின் பிரதானக் குற்றச்சாட்டாகச் சொல்லப்படுவது, அல்சைமைர் என்னும் நோய் 45-50 வயது நடுவயதினரைத் தாக்காது, அப்படித் தாக்குவது போல படம் எடுத்து நடுத்தர வயது மலையாளிகளை கடும் அச்சத்திலும், டென்ஷனிலும் தள்ளிவிட்டார் இயக்குனர் என்பது. படத்தைப் பார்த்து விட்டு பாதி மறதியில் உழலும் ஏராளமான மக்கள் மனநோய் மருத்துவர்களிடம் படையெடுத்துள்ளனர். இயக்குனர் தான் இது குறித்து உரிய ஆய்வு செய்ததாகவும் 45 வயதில் ஒருவருக்கு pre-senal நோயாக தாக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் கூறுகிறார். இந்தப் படத்தில் அல்சைமர் நோய் கொஞ்சம் கொஞ்சமாக மோகன்லாலிடம் தோன்றினாலும் கூட ஒரே நாளில் முற்றிப் போய், அலுவலகத்தை வீடாக நினைத்து சட்டையைக் கழட்டுவதும் குளிப்பதும் போல் காட்டுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் திரைப்படம் என்ற விஷுவல் மீடியாவில் இது போன்ற சமரசங்களை இயக்குனர் செய்துதான் ஆக வேண்டியுள்ளது. இந்த நோய் மோகன்லாலின் நினைவுத் துகள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதை பல காட்சிகள் மூலமாக மிக சப்டிலாக இயக்குனர் காண்பிக்கவே செய்கிறார், இருந்தாலும் ஒரே நாளில் முற்றிய நிலை அடைவது என்னமோ பார்க்கும் நமக்கே அடி வயிற்றைக் கலக்கி பகீரென்று உணர வைக்கிறது. நிச்சயம் பார்வையாளர்களிடம் அந்தக் காட்சி கடும் விளைவுகளையும், மனக் கவலைகளையும் ஏற்படுத்தி இருக்கக் கூடும்தான். யு சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட ஒரு படத்தில் அப்பட்டமான உடலுறவு முயற்சியும், இருட்டில் நிர்வாணமாக நடந்து வரும் மோகன்லாலும் எதிர்பார்க்காத இடங்கள். மனிதனின் ஆதார உணர்வைக் கூட திடீரென்று மறந்து விடுகிறார் மோகன்லால் என்பதை அதிர்ச்சியுடன் சொல்லும் காட்சி அது. மன ரீதியாக நம்மை அதிர வைக்கும் மற்றொரு இடம் அது. க்ளைமாக்ஸில் வைக்கப் பட்டிருந்த ஒரு உடலுறவுக் காட்சி கலாச்சாரக் காவலர்களுக்காக பயந்து நீக்கப்பட்டிருக்கிறது. ராமேசன் நாயருக்கு முழு நினைவை (தன்மாத்ர – அந்த நொடி என்கிற அர்த்தத்தில்) அந்த உறவு அளிப்பதாகவும் தன் முழு நினைவைப் பெற்ற தருணத்திலேயே அவரது மறைவும் நிகழ்வதாகவும் வரும் காட்சி அது. ராமேசன் நாயரின் மனைவியாக வரும் மீரா வாசுதேவனும் பிரமாதமான ஒரு நடிப்பை அளித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக் காட்சி சென்சாரால் வெட்டப்பட்டிருப்பதால் இயக்குனர் சொல்ல வந்த முக்கியமான செய்தி ஒன்று காணாமல் போயிருக்கிறது.

படத்தில் பாரதியாரின் காற்று வெளியிடை வித்தியாசமானதொரு மெட்டில் அருமையான காட்சியாக வருகிறது. படத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை. மோகன்லாலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.ஆனால் பின்னணி இசை பெரும் பலவீனம்.

செக்ரட்டேரியட்டுகளில் மந்திரிமார்கள் நேரடியாக செகரட்டரி, ஜாயிண்ட் செகரட்டரி, அசிஸ்டெண்டு செகரட்டரி என்ற பரிவாரங்களையெல்லாம் விட்டு விட்டு ஒரு செக்சன் ஆபீசர் லெவலில் இருப்பவரை அழைத்து ரிப்போர்ட் அனுப்பக் கோருவார்களா என்பது தெரியவில்லை, ஒரு வேளை ரோட்டோரக் கடைகளில் சாயா குடிக்கும் முக்ய மந்திரிமார் நிறைந்த மாநிலத்தில் அதுவும் சாத்தியப்படும்தான். ஒரு ப்யூனான ஜகதி மிகுந்த சுதந்திரத்துடன் மந்திரியுடன் பேசுகிறார்.

இயக்குனர் மேல் ஒரு சில விமர்சகர்கள் வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு, அவர் சென்டிமெண்ட்டைத் தூண்டி விட்டு, மக்களின் பரிதாப உணர்ச்சியையும், மெல்லிய உணர்வுகளையும் தூண்டி தன் படங்களை வெற்றிகரமான படங்களாக ஆக்குகிறார், உணர்ச்சி வயப்பட்ட காட்சிகளே படங்களின் வெற்றிக்குக் காரணம் என்பது.

இந்தப் படம் நெடுக இயக்குனர் பல நுட்பமான காட்சிகளை அமைத்து அதை மிகத் திறமையாக ஒன்றுடன் ஒன்று இணணத்துள்ளார். சிறுவன் மோகன்லால் தன் அத்தை வீட்டிலிருந்து உன்னியப்பத்தை எடுத்துக் கொண்டு ஓடுவதையும், அத்தை பெண்ணை அழைக்கும் செல்லப் பெயரையும், மிக உன்னிப்பாக பின்னால் வரும் காட்சிகளில் நோய் தாக்கப்பட்ட நிலையில் மிக அருமையாக இணணத்துள்ளது ப்ளெஸ்ஸியின் டைரக்டோரியல் டச். மோகன்லாலின் நோய் முற்றிய தருணத்தில் வீட்டுக்கு வந்து குறி சொல்லும் கிராமத்துக் கோவில் வெளிச்சப்பாட்டின் அரிவாள், உடைகளில் இருந்து விழும் சிறு கிண்கிணி மணியை இயக்குனர் பயன் படுத்தியிருக்கும் விதம் அபாரம். பிறந்த கைக்குழந்தை கிண்கிணி சப்தம் எழுப்பும் மணிகளிடம் காண்பிக்கும் ஆர்வத்தினை மோகன்லால் அந்த மணியிடம் வெளியிட்டு அதைக் கிலுக்கிக் கொண்டே சந்தோஷப்படும் தருணத்தில் மோகன்லால் பிறந்த சிறு குழந்தையின் பருவத்தை அடைந்து விட்டதையும் அடுத்து அவர் சொர்க்கத்துக்கு செல்லத் தயாராகி விட்டதையும் ஒரு சிறு கிண்கிணி மணியின் துணை கொண்டும், பூசாரியின் வரவு கொண்டும் மிக அழகாக குறியீடுகள் மூலமாகவே இயக்குனர் உணர்த்தும் இடம் படத்தின் முத்தாய்ப்பு. மிக அழகானதொரு காட்சி அது. மோகன்லாலின் நலம் விரும்பியும் அலுவலக உதவியாளரும், நண்பருமான ஜகதி இறக்கும் காட்சியிலும் இயக்குனர் ஒரு முக்கியமான செய்தியை பூடகமாகச் சொல்கிறார். ஜோசஃப் இறந்து போன ஒரு பிணம் ஆனால் அவரைப் பார்க்க வந்து அவர் யார் , அவருக்கு என்ன நடந்தது என்பது கூடப் புரியாமல், சிரித்துக் கோண்டே தூங்குகிறார் என்று ஒரு 2 வயது சிறுவனுக்குரிய அறிவுடனும், நினைவுடனும் திரும்பத் திரும்பச் சொல்லும் ராமேசன் ஒரு நடமாடும் பிணம் என்பதைச் சொல்லாமல் சொல்ல வருகிறார். உயிருடன் முன்னே காட்சியளித்தாலும் இறந்து போன ஜோசஃபுக்கும், நடமாடும் ராமேசனுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை ராமேசனின் தந்தையுடன் நாமும் உணரும் பொழுது, நம் கண்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயல்வதில்லை.

படம் அல்சைமர் நோயைத் தவிர நகரங்களுக்கு இடம் பெயர்தலினால் ஏற்படும் கலாச்சார இடைவெளி, உறவுகளின் பிரிவு, பெற்றோர்களுடன் நெருக்கமில்லாமல் போதல், ஐ டி போன்ற துறைகளுக்கு மட்டுமே பேராசையுடன் பிள்ளைகளைத் தயார் செய்யும் பெற்றோர்கள் என்று பல விஷயங்களையும் உன்னிப்பாகத் தொட்டுச் செல்கிறது.

இந்தக் கதையைக் கேட்டவுடன் மோகன்லால் இந்தப் படம் ஓடாவிட்டாலும் பரவாயில்லை நான் நடிக்கிறேன், நீங்கள் எடுக்கிறீர்கள், செலவு என்னுடையது என்று சொல்லியிருக்கிறார். தனது இமேஜ் போகும் என்று கூட பார்க்காமல் படத்தில் ஒரு காட்சியில் இருட்டில் நிர்வாணமாகத் தோன்றுகிறார், பின்னர் அந்தக் காட்சி தியேட்டர்களில் எடுக்கப்பட்டதற்காக மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். தனது இமேஜ் என்பதை விட நடிப்பும், கதைக்கு அந்தக் காட்சியின் அவசியமுமே அவருக்கு முக்கியமாகப் பட்டுள்ளது.

ப்ளெஸ்ஸி இது வரை மூன்று ஆறு படங்கள் எடுத்துள்ளார். அவரது முதல் படம் காழ்ச்சவும் அவசியம் பார்க்கப் பட வேண்டிய ஒரு நல்ல படம். பல படங்களில் பத்மராஜனின் அசிஸ்டெண்டாக இருந்துள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் கொஞ்சமாக வணிக விஷயங்களைக் குறைத்துக் கொண்டும் அதே நேரத்தில் வெகு ஜனப் பார்வையாளர்களின் ரசனையை உயர்த்திக் கொண்டும் வருகிறார்.

மோகன்லாலின் அற்புதமான நடிப்பிற்காக அவசியம் காண வேண்டிய திரைப்படங்களில் ஒன்று தன்மாத்ர.

அங்காடித் தெருவுக்கு இன்னும் விமர்சனங்கள்

அ. முத்துலிங்கம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். டொராண்டோவில் (கனடா நாட்டில்) வசிக்கிறார். தமிழில் நகைச்சுவை கை வந்த எழுத்தாளர்களில் ஒருவர். அங்காடித் தெருவுக்கு இவர் எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.

எழுத்தாளர் பாவண்ணன் திண்ணையில் நிறைய எழுதுபவர். அவர் அங்கே எழுதிய “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” அற்புதமான ஒரு சீரிஸ். அவர் திண்ணை இணைய இதழில் அங்காடித் தெருவுக்கு எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.

நண்பர் திருமலைராஜன் சினிமாவில் ஆழ்ந்த விருப்பமும் ரசனையும் உடையவர். அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதி இருக்கும் விமர்சனம் இங்கே.

எழுத்தாளர், பத்திரிகையாளர் பா. ராகவனுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்

தொடர்புடைய பக்கங்கள்:
அங்காடித் தெரு – ஆர்வியின் விமர்சனம்
அ. முத்துலிங்கத்தின் விமர்சனம், அ. முத்துலிங்கத்தின் தளம்
பாவண்ணன் விமர்சனம், திண்ணை இணைய இதழ்
திருமலைராஜன் விமர்சனம், சொல்வனம் இணைய இதழ்
பா. ராகவனின் விமர்சனம், பா.ரா.வின் தளம்

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “இந்தியன்”

Indian-tamil-movie.jpg

இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா, சுகன்யா, நெடுமுடி வேணு, கவுண்டமணி  மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை  சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்ற  படங்களில் இதுவும் ஒன்று. இதற்கு வாலி மற்றும் வைரமுத்து ஆகியோரின் பாடல் வரிகளும், ஹரிஹரன் ஜேசுதாஸ் பாலசுப்ரமணியம் போன்ற பிரபல பாடகர்களின் இணைவும் முக்கிய காரணமாகும்.  ஒளிப்பதிவு ஜீவா.

இன்னொரு சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக…  லஞ்சத்துக்குக்   கொள்ளிபோடத்  துணிந்த வயோதிக தியாகியாக.. வெள்ளி நரையும், சுருங்கிய முகமும், தளர்ந்த உடலும், தடுமாறாத உறுதியும் கொண்ட ‘இந்தியன்’ தாத்தாவாக நடித்து இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை கமல் கட்டிக்கொண்ட படமிது. கமலுக்கு மூன்றாவது தேசிய விருதினை பெற்றுத் தந்ததோடு திரைத்துறையின் அதியுயர் விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இப்படம் இது போன்ற சமுதாய சிந்தனைகள் நிறைந்த படங்கள் வர துவக்கமாய் அமைந்தது.
“இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்” – இந்தியன் திரைப்படத்தில் வந்த பொதுமக்கள் அதிகமாக கைதட்டிய வசனமிது.

சுஜாதா கூறுகிறார்….

டைரக்டர் ஷங்கர்,  நான் குமுதம் ஆசிரியராக இருந்தபோது,  ஒரு முறை அலுவலகத்தில் வந்து சந்தித்தார்.  அப்போது அவரது ஜென்டில்மேன், காதலன் படங்கள் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருந்தன.  தனது அடுத்த படத்தின் கதையைச் சொன்னார்.  “கமல்ஹாசனுக்கு இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன்.  அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை” என்றார்.  நான் கமலைச் சந்தித்து “நல்ல கதை வைத்திருக்கிறார்.  நீங்கள் அதில் குறுக்கிடாமல் நடித்துக் கொடுத்து விட்டுப் போகலாம்”  என்று யோசனை சொன்னேன்.

இந்தியன்... இன்னொரு சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக.

கமல் “நீங்கள் வசனம் எழுதப் போகிறீர்களா ?” என்று கேட்டார்.  “Why not ?” என்றேன்.  அந்தப் படம் இந்தியன்.  ஹாலிவுட்டிலிருந்து மைக்கேல் ஜோன்ஸ் என்ற மேக்-அப்  கலைஞரை அழைத்து வந்திருந்தார்.  மாலை ஷூட்டுக்கு அதிகாலை எழுந்து மேக்-அப்  போட்டு மெய் வருத்தம் பார்க்காமல் காத்திருந்த கமலின் பரிபூர்ணக் கலையார்வம் இன்றும் அவரிடம் — தசாவதாரம் வரை தொடர்ந்து இருக்கிறது.  முதன்முதலாக  அவரை தாத்தா வேஷத்தில் இந்தியன் படப்பிடிப்பில் சந்தித்தபோது,  எனக்கே அடையாளம் தெரியவில்லை.  “சீனிவாச ஐயங்கார்,  நீங்க எங்க இந்தப் பக்கம்.  சன் ஷூட்டிங் பார்க்க வந்தேளா ?”  என்று கேட்டேன்.  (கமலின் அப்பாவைப் போலத் தான் இருந்தார்).  “பாட்டி,  ஷூட்டிங் பார்க்கணும்னா தள்ளி நில்லுங்கோ”  என்றேன்.  அது சுகன்யா.  கமல் டெக்னாலஜியின்  எல்லா சாத்தியங்களையும் அவை பற்றி படித்து புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துபவர்.  இந்த அளவுக்கு சிரமப்படாமல் அவர் நடித்துவிட்டு நடந்து சென்றுவிட முடியும்.  அதை அவரது தொழில் ஒழுக்கம் அனுமதிக்காது.

[654008_f520.jpg]

இந்தியன் படம் வெளிவருமுன் சென்சார் அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன்  என்னை அலுவலகத்துக்கு அழைத்தார்.  “நடிகை சுகன்யா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  அவரை ‘டூப்’ வைத்து துகிலுரித்த மாதிரி காண்பித்ததாக யாரோ சொல்லியிருக்கிறார்கள்.  அந்தக் காட்சியை அனுமதிக்கக் கூடாது” என்று எழுதியிருப்பதாகச் சொன்னார்.  “அப்படி ஒரு காட்சியே இல்லையே.  இல்லாத காட்சியை எப்படி வெட்டப் போகிறீர்கள் ?”  என்று கேட்டேன்.  சுகன்யாவை இந்தியனில் கொஞ்சம்போலும் இளமையாகக் காட்டிவிட்டு பெரும்பாலும் கிழ கமல்ஹாசனுக்கு மாட்சிங்காக சுருக்கங்கள் விழுந்து காட்டியதில் அவருக்கு மிகுந்த அதிருப்தி இருந்தது.  தெரியாத்தனமாய் ஷங்கர் படம் என்பதால் ஒப்புக்கொண்டுவிட்டார்.   ஷங்கரின் படத்துக்கு மறுப்புத் தெரிவித்தால் நிச்சயம் கவனிப்பார்கள்.  எல்லோருக்கும் பதினைந்து நிமிஷப் புகழ் தேவையாக இருக்கிறது.

இந்தியன் பெரிய வெற்றி அடைந்தது.  பாரதீயுடு என்று தெலுங்கிலும்,  ஹிந்துஸ்தானி என்று இந்தியிலும்  டப் செய்யப்பட்டு நாடெங்கிலும் ஓடியது.  அதில் தாத்தா, டெலிவிஷன் காமிராவுக்கு முன் நிழல்கள் ரவியைக் கொல்வார்.  அந்தக் காட்சிக்கு நான் எழுதிய நீண்ட வசனத்தை கமல் வெளிப்படுத்திய விதம் எழுத்துக்கு மற்றொரு பரி மாணத்தைத்  தந்தது.  அவரே ஒரு எழுத்தாளர்.  புதுசு புதுசாக எதையாவது செய்து பார்க்கும் ஆர்வத்தில் கமல்,  பீட்டர்செல்லர்ஸ்,  ஜிம் கேரி,  ராபின் வில்லியம்ஸ் போல.

டைரக்டர் ஷங்கர் கூறுகிறார்……

http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/02/19265488421.jpg

நான் கதைகள், புத்தகங்கள் என படிக்க ஆரம்பித்தது சுஜாதாவின் புத்தகங்களிலிருந்துதான். பின்னர் நான் திரைப்படங்களில் பணியாற்றத் துவங்கியபோது, இந்தியன் படத்துக்காக அவரை வசனம் எழுத வைக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் போனோம். அப்போது அவர் குமுதம் ஆசிரியராக இருந்தார்.

பெரிய எழுத்தாளராச்சே என்ற யோசனையுடன் போன எனக்கு அவரது எளிமையும் சுலபமான அணுகுமுறையும் ஆச்சரியம் தந்தது.  விஷயத்தைச் சொன்னதும், ‘ஓ பண்ணலாமே… ஒரு நாளைக்கு கதை சொல்லிடுங்க… வேலையை ஆரம்பிச்சிடலாம்’ என்றார். தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூட அவர் என்னிடம் கேட்கவில்லை. அது பற்றி கேட்டபோது, ‘உங்க முந்திய படத்து டயலாக் ரைட்டருக்கு என்ன கொடுத்தீங்களோ, அதையே கொடுங்க போதும்’ என்றார்.

என் படங்களுக்கு அவர் எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் சிம்பிளாக இருக்கும்… ஆனால் பெரிய பிரமிப்பைத் தரும்.

இந்தியன் படத்தில் அவரது வசனங்கள் முக்கியமானவை. சொல்லப் போனால் அந்தப் படம் நல்ல முறையில் முடிந்து வெளியானதற்கு சுஜாதா சாரும் ஒரு முக்கிய காரணம். முதல் முறையாக நான் கமல்ஹாஸனுடன் பணியாற்றினேன். அவர்தான் கமலிடம், ‘ஷங்கர்னு ஒரு பையன் நல்ல கதை வச்சிருக்கான். போய் நடிச்சிட்டு வந்தா போதும்’ என்று சொன்னதாக பின்னர் தெரிந்து கொண்டேன்.

அந்தப் படத்தில் ஒரு காட்சியில்,

‘பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி. ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு.. ஏன்? ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குதான் லஞ்சம். இங்க மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்…” என்று எழுதியிருப்பார். அது ரொம்பப் பிடிச்சிருந்தது எனக்கு. எத்தனை பெரிய உண்மையை அவர் எத்தனை எளிமையாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

இதே படத்தில், ‘எல்லாத்துக்கும் குறுக்கு வழியை யோசிச்சு யோசிச்சு இப்போ இந்தியாவில் எல்லா பக்கமும் குறுக்கு வழிகளாயிடுச்சி’ என்று ஒரு காட்சியில் வசனம் வைத்திருப்பார்.

தமிழ் மகன் கூறுகிறார்….. (திரைக்குப் பின்னே — உயிரோசை)
இந்தியன்திரைப்படம் வெளியான மறுநாள் என்று ஞாபகம் கமல்ஹாசனை அவருடைய அலுவகத்தில் பேட்டிக்காகச் சந்தித்தேன்.
50
ரூபாய், 100 ரூபாய் ஊழல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு எத்தனை பெரிய தடையாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். உலக அரசியல், பல நூற்றாண்டுக்கு முந்தைய அரசியல் என தொட்டு ஒரு ரவுண்டு வந்தோம்.

இத்தகைய சினிமாக்கள் வந்தால் நாட்டில் ஊழல் குறைய வாய்ப்பிருக்கிறது. மனித மனங்களில் இந்தச் சிறிய ஊழல்களால் பிரச்சினை இல்லை என்ற எண்ணம் வளரும் இல்லையா?” என்று கேட்டேன்.

இருக்கலாம். ஆனால் அத்தனை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சத்யம் தியேட்டர் வாசலில் இந்தியன் படத்தின் 100 ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டுதான் பாதி பேர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்என்றார்.

ஒரு ஜனரஞ்சகப்படம் அதன் விஸ்தாரமான எல்லைக்குள் இருக்கும் கோடி பேரில் எத்தனை பேருக்குப் பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் அவர் ஹேராம்‘, “குணா‘, “குருதிப் புனல்போன்ற பரீட்சார்த்தங்களையும் செய்கிறார்.

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை…” என்று மனித வாழ்க்கையின் ஆனந்தங்களை சொல்கின்றது.
அன்பில் தான் வாழ்க்கை இருக்கின்றது பணம் எதற்கு ?…. அழகாக சொல்கின்றார் கவிஞர். ஒரு சிறிய விவசாயக்குடும்பம் பெற்றோர்  இரண்டு பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கையின் சந்தோஷங்களை, அவர்களுக்கிடையிலான அன்பை பதிவு செய்ய பாடல் உதவி உள்ளது. எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் அந்த அழகிய வாழ்க்கை ?

பச்சைக் கிளிகள் தோளோடு…..

பானைக்கு மண் குழைக்கும் இடத்தில் எல்லோரும் ஆட முயற்சி செய்து சறுக்கி விழுவதும் அதில் முதிய வயது கமல் விழாமல் ஆடும் போது பின்னால் நின்று மனைவி ஆடுவதும் கணவன் பார்த்தவுடன் சேலைத்தலைப்பை எடுத்து போர்த்துவதும் கவிதையான தருணங்கள்.

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா ?

மாயா மச்சிந்த்ரா……

அக்கடான்னு நாங்க உடை போட்டா…   துக்கடான்னு நீங்க எடை போட்டா…..

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “ரோஜா”


ரோஜா திரைப்படம் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.  இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி,  மதுபாலா  மற்றும்  ஜனகராஜ் நடித்துள்ளனர். மணி ரத்னம்  இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம்,  டைம் வார இதழின் உலகின் சிறந்த திரைப்படப் பாடல்கள் கொண்ட திரைப்படங்களில் ஒன்றாக  2005 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்

கிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த் சாமி ).ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே,  ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.


சுஜாதா கூறுகிறார்……
மணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார்.  தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார்.  அவ்விதத்தில் அஞ்சலி (1990 ), தளபதி (1991 ) போன்ற படங்களின் கதையை நான் முன்பே கேட்டிருந்தேன்.  1992 -ல் “நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் எழுதிப் பார்க்கலாமே” என்றார்.  “இரண்டு ஐடியாக்கள் சொல்கிறேன்.  எது பிடித்திருக்கிறது,  சொல்லுங்கள்”   என்றார்.
[mani.jpg]
“ஒரு பெண்ணின் புதுமணக் கணவனைத்  தீவிரவாதிகள் கடத்திச்சென்று விடுகிறார்கள்.  இதை எழுதுகிறீர்களா ?  இல்லை கிராமத்தில் இரண்டு திருடர்கள்…..  ஒரு முடிவில்லாத சேஸ்.  இது பிடித்திருக்கிறதா ?”  என்றார்.  “இரண்டுமே பிடித்திருக்கிறது.  முதலில் தீவிரவாதிகள் கடத்திய கணவன் கதையை எழுதலாம்”  என்றேன்.வெறுக்கிறாள்.

ரோஜா‘ படத்துக்காக மணி ரத்னமும் நானும் காஷ்மீர் தீவிரவாதம் பற்றி அதன் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் எழுதிய புத்தகத்தை முழுவதும் படித்தோம்.  மேலும் காஷ்மீர் பற்றிய டெலிவிஷன்  செய்திகளையும் நிறையப் பார்த்தோம்.  தீவிரவாதிகள் இந்தியக் கொடியை எரிக்கும் காட்சியும்,  மாருதி வேனில் வந்து கதாநாயகனைக் கடத்திச் செல்லும் காட்சியும் டி.வி. செய்திப் படங்களில் பார்த்து உண்டாக்கியது.  அதே போல மந்திரியின் பெண்  விடுவிக்கப்பட்டதைப் பற்றிய உரையாடலும் முப்தி முகம்மத் சையதுக்கு  நிஜமாக நேர்ந்ததின்  செய்திகளின் ஆதாரத்தில் எழுதியது.

See  full size image

1992 -இல் ரோஜா உருவாக்கப்பட்டது.  என். டி. டி.வி. (NDTV ) அப்போது  வாரா வாரம்  செய்திப் படம் தயாரித்து வீடியோ காசெட்டாக விற்பார்கள்.  பி.எச்.இ.எல்  நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு எஞ்சினியரை  காஷ்மீர் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு  சென்ற செய்தி பரபரப்பாக இருந்தது.  அந்தச் சமயத்தில் வந்த செய்திச் சுருளில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சியை மணி ரத்னத்துக்கு போட்டுக் காட்டினேன்.  இந்திய தேசியக் கொடியை  தீவிரவாதிகள் பற்றவைத்து ஏற்றுகிறார்கள்.  “மணி, இந்தக் கட்சியை நம் படத்தில் வைக்க முடியுமா ?” என்று கேட்டேன்.  அவர்,  “வைக்கலாம்,  கொடியை suggestion ஆகக் காட்ட வேண்டும்.  கதாநாயகன் பற்ற வைத்த கொடியை பாய்ந்து அணைப்பதாகக் காட்டினால் சென்சார் அனுமதிப்பார்கள் “  என்றார்.  ரோஜா படத்தில் இன்றும் பேசப்படும் காட்சி அது.  அரவிந்த் சாமி தளைகளை மீறி பாய்ந்து வந்து எரியும் கொடியை அணைக்கும் காட்சி.

http://imienazwisko.files.wordpress.com/2009/06/ar-rahman_1.jpg?w=630

ரோஜா படத்தில் மற்றொரு புதுவரவு நிகழ்ந்தது.  ஒருநாள் ராத்திரி என்னை கே. கே. நகரில் ஒரு சிறிய ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார்.  ஓர் இளைஞரை அறிமுகம் செய்துவைத்தார்.  “இவர் புதிய இசை அமைப்பாளர்.  கேட்டுப் பாருங்கள்”  என்றார்.  அதைக் கேட்டதும் நான் அந்த இளைஞரிடம்  “புகழுக்குத் தயாராகுங்கள்”  என்றேன்.  அந்தப் பாடல் ‘சின்ன சின்ன ஆசை’.  இளைஞர் ஏ.ஆர். ரஹ்மான்.
director_maniratnam_(11).jpg
மணிரத்னம் பாலசந்தருக்காக செய்த ரோஜா மிகப் பெரிய வெற்றியடைந்தது.  அந்தப் பாடல் பாஷை தெரியாத ஜப்பான், ஜெர்மனி போன்ற தேசங்களில்கூட  பிரபலமாகியது.

Maniratnam
மணிரத்னத்துடன் இணைந்து எழுதுவது எனக்குப் பிடித்த விஷயம்.  படத்தின் கதையை சிறிய வாக்கியங்களாக எழுதி தருவார்.  மையக் கருத்தை ஒருமுறை விவரித்து விடுவார்.  “இந்த சீனில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?” என்று கேட்டால் மட்டும் விவரங்களுக்குள் நுழைவார்.  “நீங்கள் எப்படி இதைக் காட்சியாகப் பார்ப்பீர்கள் ?  அதை எழுதிக் கொடுங்கள்” என்பார்.  அப்படி எழுதிக் கொடுப்பதிலிருந்து அவருக்குத் தேவைப்பட்டதை எடுத்துக்கொள்வார்.  பொதுவாக காட்சியாக மாற்றும்போது பேச்சைக் குறைப்பார்.  ‘காட்சியாக சொல்லிவிட்டால் வசனம் தேவையில்லை’  என்று விட்டுவிடுவார்.  அதனால் மணி ரத்னத்தின் படத்திற்கு யார் வசனம் எழுதினாலும் சுருக்க மாகவே இருக்கும்.

பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை முழுவதும் பயன்படுத்தும் டைரக்டர் அவர்.

சின்ன சின்ன ஆசை…   சிறகடிக்க ஆசை……

ருக்குமணி ருக்குமணி…….


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது……


காதல் ரோஜாவே…………

தமிழா  தமிழா…..   நாளை நம் நாளே…

[sujatha.jpg]

(கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “நாடோடித் தென்றல்”

[m.bmp]
சுஜாதா கூறுகிறார்….

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

நாடோடித் தென்றல் படத்துக்காக நான் பெங்களூரில் இருந்தபோது பாரதிராஜா என்னை வந்து சந்தித்து, பிரிட்டிஷ் காலப் பின்னணியில் ஒரு கதை எடுக்கப் போகிறேன்.  அதை எழுத நீங்கள்தான் தகுதியான எழுத்தாளர் என்றார்.  ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கலெக்டர்,  வெள்ளைக்கார மகள்,  பொற்கொல்லன் கதாநாயகன் என்றெல்லாம் நல்ல கதைக்களம் அமைத்து, இந்தச் சூழலில் கதையை யோசிக்கச் சொன்னார்.  கதையில் சுவாரஸ்யம் ஏற்பட கலெக்டரை  ஒரு தேசபக்தன் (கதாநாயகனின் தந்தை) கொன்றுவிடுவதாக அமைக்கலாம் என்று யோசனை சொன்னேன்.
Bharathiraja

பாரதிராஜா ஒரு தேர்ந்த விஷுவல் டைரக்டர்.  அவரை பேப்பரில் கதையின் காட்சியை எழுத வைப்பது ரொம்பக் கடினமான காரியம்.  பதினாறு வயதினிலே மூலம் ஒரு புயல் போலத் தமிழ் சினிமா உலகத்துக்குள் நுழைந்தவர்.  அதன் பின் தொடர்ந்து சில வெற்றிப் படங்களைத் தந்தவர்.  அவருக்குக் கதை என்பது இரண்டாம் பட்சம் தான்.  காட்சிகள், உணர்ச்சிகள் இவைதான் முக்கியம்.  எல்லாக் காட்சிகளையும் கவிதை கலந்து காட்ட வேண்டும்.  ‘இந்த முறை தவறவே தவறாது.  ஏனெனில் இது எனக்கு வெற்றியைத் தந்திருக்கிறது’  என்று அழுத்தமாக நம்பினார்.  இதனால் கதைப் போக்கிற்கும்,  சம்பவங்களுக்கும் அவர் அதிகம் முக்கியத்துவம் தரவில்லை.  காட்சிகளை எழுதாமலேயே படப்பிடிப்புக்குச் சென்று அங்கே போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அபார தன்னம்பிக்கை அவருக்குக் கை கொடுத்து வந்தது.  அது கைவிடத் துவங்கிய சமயம்தான் நான் அவருடன் இணைந்து எழுத வேண்டியிருந்தது.  இதனால் நாடோடித் தென்றலில் அவரது தன்னம்பிக்கை கழன்றுபோய்விட்டதை  என்னால் கவனிக்க முடிந்தது.  அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தவித்தார்.  படம் வெளி வந்த பின்னும் தியேட்டர் தியேட்டராகச்  சென்று முடிவை மாற்றினார்.  அதனால் வேலூரில் ஒரு முடிவு,  மேலூரில் ஒரு முடிவு என்று குழம்பிப் போனார்கள்.

பாரதிராஜா தன் ஒவ்வொரு படத்திலும் புதிய நடிக நடிகையரை அறிமுகம் செய்து வைப்பது வழக்கம்.  அதன்படி ரஞ்சிதா என்னும் நடிகையை  நாடோடித் தென்றலில் அறிமுகம் செய்து வைத்தார்.  கரிய அழகான கண்களுள்ள உயரமான பெண்.  எப்போதும் இங்கிலீஷ் புத்தகம் படித்துக் கொண்டிருந்த நகரத்துப் பெண்.  அவள் படம் முழுக்க ரவிக்கை போடாத கிராமத்துப் பெண்ணாக நடிக்க மிகவும் சங்கடப்பட்டாள்.  நதியில் நனைந்து குளிக்க வேண்டிய கட்டாயக் காட்சிகள் வேறு இருந்தன.  புது நடிகை —  எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் வரவில்லை.  கூட ஒரு Boy Friend .  மைசூரில் படப்பிடிப்பின்போது  ராத்திரி தனியே அழுதுகொண்டிருந்ததைக் கவனித்து விசாரித்ததில் டைரக்டர்,  ‘நடிக்க வரவில்லை.  அடித்துவிட்டேன்.  அதனால் அழுகிறாள்,  இப்போது ஒழுங்காக நடிக்கிறாள்’  என்றார்.   நான் மேற்கொண்டு விசாரித்தால் எனக்கும் ஒன்று விழும் என்று விலகி விட்டேன் !

யாரும் விளையாடும் தோட்டம்…….


மணியே மணிக்குயிலே…….

சந்தன மார்பிலே…..
[sujatha.jpg](கனவுத் தொழிற்சாலை தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்:

பாரதிராஜா பற்றி சுஜாதா

பாரதிராஜா பற்றி சுஜாதா

பாரதிராஜா பற்றி சுஜாதா கூறுகிறார்….
http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100
பாரதிராஜா அவர்களுடன் என் நட்பு சினிமாவின் நிலயாமைகளுக்கு அப்பாற்பட்டது.  அவருடைய ஒரு படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தபோது மைசூரில் அவருடன் பேசிக்கொண்டிருந்த நீண்ட இரவுகளின் ஞாபகங்கள் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.  அப்போது பாரதிராஜா தன் பால்ய காலங்களைப் பற்றிப் பேசினார்.  கிராமத்துப் பின்னணியில் வசதி சலுகைகள் எதுவும் இல்லாமல் எப்போதாவது கிடைக்கும் நெல்லுச் சோறுக்கு ஏங்கிக்கொண்டிருந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர்.  அத்தனை வாய்ப்பின்மைகளையும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்னும் இரு ஆயுதங்களால் வெற்றி கொண்டு இன்று தேசிய அளவில் பேசப்படும் இயக்குனராக வந்திருக்கும் இந்த மனிதரின் சொந்தக் கதையில் மூன்று நாவல்களுக்கு உரிய விஷயங்கள் இருக்கின்றன.  ஆனால் இவைகளை எங்கள் நட்புக்கு மரியாதையாக நான் பயன்படுத்த மாட்டேன்.  வெற்றி-தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதே சினிமாத் தொழில் தரும் பெரிய அனுபவப் பாடம்.  பாரதிராஜாவின் படங்கள் அனைத்தும் சினிமாக் கலையைப் பொறுத்தவரை வெற்றிகளே.  அவைகள் வியாபார வெற்றியும் பெறும்போது பயன்களை அனுபவிப்பவர்களில் நண்பர்களும் தயாரிப்பாளர்களுமே  அதிகம்.  பாரதிராஜாவுக்கு பளபளப்பான கோப்பைகளும் கேடயங்களும் தலை முடி மேல் ரோஜா இதழ்களும் சட்டம் போட்டு மாட்ட சான்றிதழ்களும் இயக்குனர் இமயம் போன்ற பட்டங்களும் பொன்னாடை என்ற பெயரில் உலவும் பட்டும் சரிகையும் பவானி பெட்ஷீட்டுக்களும் துண்டுகளும்தான் அதிகம் வாய்த்திருக்கின்றன.
http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

எடுத்த படங்கள் எதற்கும் இவர்,  ‘அடடா இப்படிப்போய் எடுத்துவிட்டோமே’  என்று வெட்கப்படவேண்டியதில்லை.  இதுவே இவருடைய தலையாய சாதனை.  விதவிதமான கருத்துக்களை கலை நுணுக்கங்களை காட்சிகளை டெக்னிக்குகளை  அவர் முயற்சி செய்திருப்பதை அவர் படங்களை முழுமையாக மறுபரிசீலிக்கும்போது தெரியும்.  மதங்களைக் கடந்த காதல் கதையோ,  அரசியல்வாதியிடம் கண்மூடித்தனமான பக்தி கொண்டு கயவனுக்கு ரத்தம் சிந்தும் அடிமட்டத் தொண்டன் கதையோ,  சரியாக வளர்க்கப்படாமல் மனம் முறிந்து தொடர்கொலைகள் செய்யும் நகர்ப்புறத்து நாகரீக இளைஞர் கதையோ யோசித்துப் பார்த்தால் அவர் எல்லா கதை வகைகளையும் முயன்றிருக்கிறார்.  எதற்கும் பயப்படவில்லை.  அவர் இதுவரை முயற்சி செய்யாதது ஒன்றுதான்.  ஒரு நல்ல தமிழ் நாவலைத் திரைப்படமாக்குவது.

வாழ்வில் தக்க சமயத்தில் துணிச்சலான தீர்மானங்கள் எடுத்து இறுதியில் மிகப் பெரிய வெற்றியைக் கண்டவர் பாரதிராஜா. இன்றும் கோடம்பாக்கதிற்குத் தினம் தென் மாநிலங்களிலிருந்து பேருந்துகளிலும், பாண்டியன் எக்ஸ்பிரஸ்சிலும்  வந்து இறங்கி மான்ஷன்களை  நாடிச் செல்லும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய முன்னோடி.  அவர்களுக்குத் தெரியாத விஷயம் பாரதிராஜா போன்ற வெற்றிக்கதை பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழ்கிறது என்பதே.  இன்றைய பாரதிராஜாவால் கூடத் தன் கடந்த கால வெற்றிப்பயணத்தை மீண்டும் தொடர முடியவில்லை.  காரணம் கோடம்பாக்கம் மாறிவிட்டது.  புது ஒப்பனைகள் அணிந்துகொண்டு தொலைக் காட்சியின் போட்டிக்கும், ரசிகர்களின் ஆதரவுத் தட்டுப்பாட்டிற்கும் ஈடுகொடுக்கப் புதிய தந்திரங்கள் கற்றுக்கொண்டிருக்கிறது.  அதில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் ஓரங்கட்டப்பட்டது சோகமே.

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

நான் பாரதிராஜாவுடன் இணைந்து செய்த படங்கள் மூன்று  – நாடோடித் தென்றல் (1992),   கண்களால் கைது செய் (2004), பொம்மலாட்டம் (2008)

சாதாரணமாக உங்கள் கதாநாயகிகளின் பெயர்கள் ராதிகா, ராதா, ரேவதி என்று ‘ஆர்’ எழுத்தில்தான் துவங்கும். ஆனால், சமீபத்திய படத்தில் ‘எஸ்’ (சுகன்யா) ஆக மாறியதன் மர்மம் என்ன?

என்னவோ நான்தான் அவங் களுக்கெல்லாம் பெயர் வெச்ச மாதிரி கேக்கறீங்க! முதல் பட ஹீரோ-யின் ஒருத்தருக்கு ‘ஆர்’ ராசி-யினாலதான் மார்க்கெட் தூக்கிடுச்சுன்னு ஒரு நம்பிக்கை… அடுத்து வந்தவங்களும் ‘ஆர்’லேயே வர்ற-மாதிரி பார்த்துக்கிட்டாங்க! ஆனா, சுகன்யா மட்டும் ‘என் பேரே இருக்கட்டும்’னாங்க. அவ்வளவுதான்! மத்தபடி இதுல மர்மமெல்லாம் ஒண்ணும் கிடை யாது!

ஹாலிவுட் ஸ்டைலைப் பின்பற்றி வரும் பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங் ட்ரெண்ட், தங்கள் படங்களிலும் இனி வருமா?!

என் படங்களில் பெரும்பாலும் க்ளோஸ்-அப் -காட்சிகள்தான் அதிகம் இருக்கும். அதாவது, உணர்ச்சிகளை முக-பாவங்களி லேயே காட்டி-விடுவது. அப்படிப் பட்ட காட்சிகளில் அம்மாதிரி யான லைட்டிங்கை உபயோகித் தால் உங்களுக்கும் புரியாது; அவ் வளவு கஷ்டப்பட்டு முகபாவனை காட்டும் நடிகருக்கும் பெயரில்லா மல் போய்விடும். ஆனால், இந்த மாதிரி லைட்டிங் தேவைப்படுகிற சப்ஜெக்டாக இருந்தால் நிச்சயம் ஸ்ரீராமைப் பயன்படுத்துவேன்!

உங்கள் படத்தில் மட்டும் காட்சியமைப்பும் இசையும் அட்டகாசமாய் இணைந்து போவது எதனால்? உங்கள் படமென்றால் இளையராஜா ஏதேனும் சிறப்பாக இசை அமைப்பதுண்டா?

நாங்கள் இருவரும் ஒரே மண். எனக்கு ஏற்படுகிற சிந்தனைதான் ராஜாவுக்குள்ளும் ஓடும்! ஒரே மாதிரி, இணையான சிந்தனைகள் இருப்பதால் அந்தளவு ஒத்திசைவு ஏற்படுகிறது. மற்றபடி விசேஷமான இசையெல்லாம் எதுவும் கிடை-யாது.

‘காதல்’ என்பது என்ன?

காதல் என்பது உன்னையறியாமல், உன்னை நேசிப்பவளை அறியாமல் உண்டா கும் ஓர் உணர்வு! உடலில்லாமல் உணர் வில்லை; உணர்வில்லாமல் உடலில்லை. அந்த இரண்டு துருவங்களின் சந்திப்பையும் உணர்ந்தவன்தான் காதலிக்க முடியும்!

முழுக்க முழுக்க மாணவர்களுக்கு என்று ஏதாவது படம் எடுக்கும் திட்டம் உள்-ளதா?

மாணவர்களுக்குன்னா எப்படி? போதிக்கிற மாதிரியா? ‘வீட்டுல-தான் அப்பா போதிக்கிறாரு. வகுப்புல வாத்தியாரு போதிக்கிறாரு. நிம்மதியா இருக் கலாம்னு தியேட்ட ருக்கு வந்தா, இந்த ஆளும் அதையே செய் யறாரே’னு யாரும் வரமாட்டாங்க! அப்படிப் போதிக்கிற மாதிரி ஒரு படம் எடுத்து நான் கையைச் சுட்டுக்கொண்டது போதாதா? ‘என்னு யிர்த் தோழனை’த் தான் சொல்றேன்!

இப்ப நீங்க எடுத் துக்கிட்டு வர்ற ‘நாடோடித் தென்றல்’ சர்வதேச விருது பெறுமா?

பெறாது! அது ஒரு கால கட்டத்தில் நடந்த சாதாரண காதல் கதை. அவ்வளவு-தான்! ஆனால், இனி-மேல் என் படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு மிகச் சிறப்பான படங்களையே உருவாக்குவது என்று முடிவெடுத்துள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம்… உலக அளவில் ஒரு பரிசையாவது பெறாமல் ஓய மாட்டான் இந்த பாரதிராஜா!

http://img.freebase.com/api/trans/image_thumb/guid/9202a8c04000641f8000000009995689?pad=1&maxheight=100&mode=fillcropmid&maxwidth=100

01-03-1992  -   நேருக்கு நேர் பாரதிராஜா நன்றி – விகடன் பொக்கிஷம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers