ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” பற்றி சாரதா
ஜூன் 7, 2010 4 மறுமொழிகள்
இயக்குனர் ஸ்ரீதர்
தமிழ் திரைப்பட உலகை புரட்டிப் போட்ட ஒரு பெயர். கதாநாயகர்களுக்காக படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வந்த நிலையை மாற்றி, ஒரு இயக்குனருக்காக மக்கள் திரைப்பட கொட்டகைகளுக்கு படையெடுக்க வைத்த ஒரு மகத்தான பெயர். பின்னாளில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என இயக்குநரின் பெயரில் படம் சொல்லப்பட முதன் முதலில் பிள்ளையார் சுழியிட்ட பெயர்.
அது வரை நீண்ட வசனங்கள் மூலமாகவும், அதற்கு முன்னர் ஏராளமான பாடல்கள் மூலமாகவும் படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையை மாற்றி காமிரா வழியாக கதையைச் சொல்ல வைத்தவர் ஸ்ரீதர். எப்படி கேமரா கோணம் அமைப்பது, எப்படி காட்சிக்குத் தேவையான லைட்டிங் செட் பண்ணுவது என்பதெல்லாம் அவர் படமெடுக்கத் துவங்கிய காலத்துக்குப் பின்தான் பேசப்பட்டன.
அதற்கு முன்னர் பராசக்தி போன்ற புரட்சிப் படங்களும், மலைக் கள்ளன், நாடோடி மன்னன் போன்ற வித்தியாசமான படங்களும், சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களும் வந்திருந்த போதிலும், ஒரு படத்தை கவிதையாக வடிக்க முடியும் என்று ஒரு புதிய சித்தாந்தத்தை துவக்கியவர் ‘புதுமை இயக்குனர்’ ஸ்ரீதர்தான் என்றால் அது மிகையல்ல. அமர தீபம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய போதிலும் அவரை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படவாதியாக அடையாளம் காட்டியது, அவரது கதை வசனம் மற்றும் இயக்கத்தில் முதன்முதலாக வந்த கல்யாணப் பரிசுதான்.
கல்யாணப் பரிசு ஒரு மாபெரும் வெள்ளிவிழாப்படமாக அமைந்தது என்பது மட்டும் அதற்குப் பெருமையல்ல. அது பல படங்கள் செய்யக்கூடிய சாதனைதான். ஆனால் கல்யாணப் பரிசு படத்தை மக்கள் வேறு விதமாகக் கண்டார்கள். அது ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒரு கதையாக நிகழ்ச்சியாக அவர்கள் மனதில் படிந்தது. குறிப்பாக பெண்கள் மனத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டீக்கடைகளிலும், முடி வெட்டும் கடைகளிலும் அதுவே தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.
கோயில்களிலும் குளக்கரைகளிலும் சந்தித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பேச்சில்லாமல் போனது. ‘கல்யாணப்பரிசு படத்தை பார்த்தாயா’ என்று கேட்பதற்கு பதில், ‘நான் இத்தனை முறை பார்த்தேன், நீ எத்தனை முறை பார்த்தாய்’ என்று கேட்டுக் கொள்வது வாடிக்கையாகிப் போனது.
அந்த ஆண்டு தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ‘வசந்தி’ என்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘பாஸ்கர்’ என்றும் பெயர் வைப்பதை பெருமையாக கொள்ளுமளவுக்கு அந்தப் படம் மக்கள் மனத்தில் ஒன்றிப் போனது.
படம் முடிந்த பின்னரும் கூட தியேட்டர் இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், ‘காதலிலே தோல்வியுற்றான்’ என்று பாடிக் கொண்டே அடிவானத்தை நோக்கிச் சென்ற பாஸ்கர் என்னவானான் என்று பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ஏராளம்.
1959ல், ஒரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்ம கர்ஜனைக்கும், மறுபுறம் நாடோடி மன்னனின் மின்னல் வெட்டும் வாள் வீச்சுக்கும் நடுவே இந்த 21 வயது இளைஞர் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தபோது பார்த்த கண்கள் பிரமித்தன.
கல்யாணப் பரிசு படத்தின் கதையை அதன் தயாரிப்பாளர் மற்றும் அன்றைய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பையனாக இவர் கதை சொன்னபோது அதிசயித்தவர்கள் அதன் முடிவை இவர் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் முடிவு அன்றைய திரைப்பட இலக்கணத்துக்கு மாறுபட்டிருந்தது. கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டும்போது “வணக்கம்” போட்டே பழகியவர்கள் அவர்கள்.
“என்னது? கதாநாயகியின் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டவில்லையா? கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா? கதாநாயகன் ஏமாற்றத்தோடு செல்கிறானா? இது என்ன முடிவு? நிச்சயம் இந்த இளைஞர் தன் முதல் படத்திலேயே தோலிவியைத்தான் சந்திக்கப் போகிறார்” என்று அனைவரும் ஆரூட்ம் சொன்னார்கள்.
அவர்களின் ஆரூடங்களைப் பொய்யாக்கி விட்டு கல்யாணப் பரிசு மாபெரும் வெற்றியடைந்தது. மற்ற இயக்குனர்களுக்கு இந்த இளம் இயக்குனர் சிம்ம சொப்பனமானார்.
எந்தப்பக்கம் திரும்பினாலும் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ’ஆசையாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்’, ’காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி’ இப்படி அப்படத்தின் பாடல்களே ஒலித்தன.
பட்டுக்கோட்டையார், ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர் கூட்டணியில் இப்படம் திரையிடப்பட்ட அரங்குகள் எல்லாம் ‘பாடல் பெற்ற தலங்கள்’ ஆனது.
1960 முதல் இன்று வரையில் ஒவ்வொரு தீபாவளியன்றும் வானொலியில் ஒலி பரப்பப்படும் முதல் பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில், ராஜாவின் இசையில் பட்டுக்கோட்டையாரின் சாகாவரம் பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட… என்னைக்கண்டு நீயாட’ என்னும் கல்யாணப் பரிசு பாடலே என்பது இப்படத்தின் பிரத்தியேக சிறப்பு.
‘புதுமையை கொடுத்தால் நிச்சயம் வரவேற்போம்’ என்று தமிழக மக்கள் திரண்டெழுந்து கோஷமிட, இந்த புதுமை இயக்குனரின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது….
தொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்
தொடர்புடைய பக்கங்கள்:
கல்யாணப் பரிசு – ஆர்வி விமர்சனம், விகடன் விமர்சனம்
பிற்சேர்க்கை: விஜயன் சொல்கிறார் – “எல்லாவற்றிலும் புதுமை. வசனம், காமிரா, உடை, ஒப்பனை, நாயகன் நாயகி சக நடிகர்கள் தேர்வு என்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி. ஒரிஜினாலிட்டி. பம்பாய் படவுலகம் மூக்கின் மேல் விரலை வைக்கிறது. சாந்தாராம், குரு தத் போன்ற ஜாம்பவான்கள் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள். தங்கள் நாயகனை வைத்து படம் எடுக்கவில்லை என்று எம்ஜிஆர் ரசிகர்கள் இவர் படம் ஓடும் அரங்கங்களின் இருக்கையை கிழிக்கிறார்கள். வேலுமணி போன்ற தயாரிப்பாளர்கள் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க brand new plymouth காரையே அட்வான்சாக கொடுத்தார்கள். வெள்ளிவிழா இயக்குனர் பீம்சிங் தன மகன் லெனினை இவரிடம் தொழில் கற்று கொள்ள அனுப்பினார். சினிமாவை வெறுத்த காமராஜர் இவர் பெருமை உணர்ந்து இவர் திருமண வரவேற்பில் கலந்து இவரை பெருமைப்படுத்தினார்.”
எல்லாவற்றிலும் புதுமை.வசனம்,காமிரா,உடை,ஒப்பனை,நாயகன் நாயகி சக நடிகர்கள் தேர்வு என்று எல்லாவற்றிலும் புதுமை,புரட்சி.ஒரிஜினாலிட்டி.பம்பாய் படவுலகம் மூக்கின் மேல் விரலை வைக்கிறது. சாந்தாராம்,குருதத் போன்ற ஜாம்பவான்கள் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள். தங்கள் நாயகனை வைத்து படம் எடுக்கவில்லை என்று mgr ரசிகர்கள் இவர் படம் ஓடும் அரங்கங்களின் இருக்கையை கிழிக்கிறார்கள்.வேலுமணி போன்ற தயாரிப்பாளர்கள் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க brand new plymouth காரையே அட்வான்சாக கொடுத்தார்கள். வெள்ளிவிழா இயக்குனர் பீம் சிங் தன மகன் லெனினை இவரிடம் தொழில் கற்று கொள்ள அனுப்பினார்.சினிமாவை வெறுத்த காமராஜர் இவர் பெருமை உணர்ந்து இவர் திருமண வரவேற்ப்பில் கலந்து இவரை பெருமை படுத்தினார்.
விஜயன், தகவல்களுக்கு நன்றி!
ஸ்ரீதரின் கதை அப்போது புதுமைதான். ஆனால் இந்த முக்கோணக் காதல் கதையை அவர் கடைசி வரையில் விடவே இல்லை. அதுதான் சோகம்.
Dear RV .. இந்த பதிவை முகப்புத்தகத்தில் இடுகிறேன். நன்றி..
சாரதா அவர்களுக்கும் நன்றி..
சூர்யா, முகப்புத்தகம் என்றால் ஃபேஸ்புக் என்று புரிந்து கொள்ள சில நிமிஷங்கள் ஆனது.
நல்ல விஷயம்!