“வெண்ணிற ஆடை” திரைப்படத்தின் அரசியல்
ஜூன் 9, 2010 10 மறுமொழிகள்
ராஜன் அரசியல் பொடி வைத்து வெண்ணிற ஆடை பதிவில் நிறைய எழுதி இருந்தார். பதிவின் நீளம் கருதி அவற்றை எல்லாம் தனிப்பதிவாக போட்டிருக்கிறேன். சில வரிகள் ரீப்பீட்டு ஆனால் அது என் எடிட்டிங்கின் குறை, ராஜனின் தவறு இல்லை. கொடுமை என்னவென்றால் ஸ்ரீகாந்தின் ஃபோட்டோ ஒன்று கூட நெட்டில் கிடைக்கவில்லை.
கடந்த ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை யாராவது தொகுக்க முற்பட்டால் இந்த சினிமாவைக் குறிப்பிடாமல் அதை யாரும் எழுதி விட முடியாது. இந்த சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று நடிகர்கள் பிற்கால தமிழ் அரசியலில் மிகப் பெரியது முதல் சிறிய பங்கு வரை ஆற்றியவர்கள். இந்தப் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஜயலலிதா (அப்படித்தான் டைட்டிலில் போட்டார்கள் ஜெ அல்ல ஜ தான்), நிர்மலா, ஸ்ரீகாந்த் மூவருமே தமிழக அரசியலிலும் ஏதோ ஒரு விதத்தில் பங்கு கொண்டவர்கள் என்பது ஒரு விநோதமான ஒற்றுமை. பிரிக்க முடியாதது எது என்று தருமியிடம் கேட்டிருந்தாலும் கூட அவர் “தமிழ் நாட்டின் அரசியலும் சினிமாவும்” என்று அன்றே சொல்லியிருந்திருப்பார்.
இந்தப் படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தமிழ் அரசியல் உலகத்தையே ஆட்டிப் படைத்தவர் ஜயலலிதா. இந்தப் படத்தில் அவரது பாத்திரத்தின் குணமே பின்னாளில் அவர் அரசியல் பாணியாக மாறி விட்டதால் இந்தப் படம் தமிழ் அரசியல் வரலாற்றில் இடம் பெற்று விட்ட ஒரு படமாகி விட்டது. தமிழ் நாட்டின் முதல்வர்களையெல்லாம் தமிழ் சினிமாதான் அளிக்கிறது. அந்த வகையில் ஒரு கிங் மேக்கர் என்ற சிறப்பைப் பெறுகிறது இந்த சினிமா.
ஜயலலிதாவுக்கு இது முதல் தமிழ் படம் என்று சொல்லவே முடிவதில்லை. புத்தி பேதலித்திருக்கும் அவருக்கு மருத்துவம் பார்க்க வரும் பைத்தியக்கார வைத்தியரைப் பார்த்து உதட்டைச் சுழித்து கண்ணை உருட்டி ”யூ கெட் அவுட்” என்று நடிக்கும் காட்சியில் தனக்குக் கிடைத்த பயிற்சியை ஜயலலிதா பின்னாளில் தமிழ் நாட்டு அரசியல் வாழ்வில் பலரிடமும் மீண்டும் மீண்டும் செய்து காண்பித்து கொண்டேயிருந்தார் என்பது இந்த படத்துக்கு ஒரு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. நேற்று கூட முத்துசாமி என்ற கட்சிக்காரரை அந்தப் படத்தில் ஸ்ரீகாந்தைச் சொன்னது போலவே ”கெட் அவுட்” என்றிருக்கிறார். அவர் சினிமாவுக்கும் நிஜவாழ்க்கைக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை என்பது அவரது இந்த முதல் படத்தைப் பார்க்கும் பொழுது தெரிந்து விடுகிறது.
அடிக்கடி மூடு மாறும் மனநோயாளியாக நடித்த ஜயலலிதா பின்னாளில் அரசியலிலும் கூட அதே வேடத்தைத் தொடர்ந்ததும் ஒரு வினோதமான ஒற்றுமையே. பாடல்களின் பொழுது அவர் நடனங்களில் காட்டும் வேகமும் துடிப்பும் பின்னாளில் அவர் அரசியலில் காட்டிய வேகங்களுக்கு சற்றும் குறைவில்லாதவை. இந்தப் படத்தில் அவர் தனக்கு மருத்துவம் பார்க்க வரும் டாக்டரின் கையை ரத்தம் வரக் கடித்து வைத்து விடுகிறார். பின்னாளில் அரசியல் வாழ்விலினிலும் அவருக்கு உதவி செய்ய வந்த பலரையும் இதே போல மனதில் ரத்தம் வர அவமானப் படுத்தியதைக் காணும் பொழுது இந்தப் படத்தை ஜெயலலிதாவின் அரசியலின் ஒரு முன்னோட்டமாகவே கருத வேண்டும்
) அதைப் போலவே க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் கேனத்தனமான திடுக்கிடும் முடிவைப் போலவே அவர் அரசியல் வாழ்விலும் முன்யோசனையின்றி பல திடுக்கிடும் அரசியல் முடிவுகளை எடுத்து அதிர வைத்தவர் என்பது இன்னொரு ஒற்றுமை. இந்தப் படத்தில் எப்பொழுது என்ன செய்வார் எப்படி நடந்து கொள்வார் என்று தீர்மானிக்க முடியாத ஒரு பாத்திரமாக வரும் ஜயலலிதா தன் நிஜ வாழ்விலும் அப்படியே நடந்து கொண்டது ஒரு வினோதமான ஒற்றுமையே. ஆக பல விதங்களிலும் தமிழ் நாட்டு அரசியலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்தப் படம் விளங்குவது பிற தமிழ் படங்களை விட இந்தப் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பை அளிக்கின்றது.
ஜயலலிதாவுக்குப் போட்டியாக அதே டாக்டரைக் காதலிக்கும் நிர்மலாவுக்கும் தமிழக அரசியலில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. எம் ஜி ஆருக்கு நெருங்கிய தோழியான ஜயலலிதாவுக்கு அடுத்த இடத்தை இந்த நிர்மலாவும் பெற்று இருக்கிறார். அந்த நட்புக்காக அவருக்கு எம் ஜி ஆர் மேல்சபையில் ஒரு எம்எல்சி இடத்தை வழங்கப் போக, நிர்மலா ஏற்கனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்திருப்பதை மறைத்து அவர் எம்எல்சியாக வந்ததை எதிர்த்து நடந்த வழக்கினால் அவர் பதவி பறி போய்விடுகிறது. தன் தோழிக்கு இடம் இல்லாத ஒரு சபையும் ஒரு சபையா, தன் நண்பிக்கு இல்லாத சபை இருக்கவும்தான் வேண்டுமா என்று பொங்கி எழுந்த எம் ஜி ஆர் தமிழ் நாட்டில் இருந்த மேல்சபையையே கலைத்தும் விடுகிறார். வெட்டியாக வேண்டுபவர்களுக்குப் பதவி கொடுக்க வசதியாக இருந்த ஒரு சபையை, மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வந்த ஒரு வீண் செலவை ஒழிக்க வெண்ணிற ஆடை நிர்மலா தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணமாக அமைந்து விட்டார். ஆக இந்தப் படத்தில் அறிமுகமான இரு நடிகைகளில் ஒருவர் சகல வல்லமை படைத்த தமிழ் நாட்டின் முதல்வராகவும், டெல்லி ஆட்சியையே கவிழ்க்கும் சக்தியுள்ளவராகவும், இன்னொரு நடிகை தமிழ் நாட்டு சட்டசபைகளில் ஒன்றைக் கலைக்கும் முடிவையே எடுக்கும் அளவுக்கு முக்கியமானவராக வளர்ந்ததும் இந்தப் படத்தின் அபூர்வமான ஒற்றுமைகள். இந்தப் படத்தில் ஒரு கதாநாயகனுக்கு இவர்கள் இருவரும் போட்டி போட்டது போலவே தமிழ் நாட்டு அரசியலிலும் இவர்களுக்குள்ளான போட்டி தொடர்ந்தது மற்றுமொரு ஒற்றுமை. ஸௌராஷ்டிர இனத்தில் இருந்து வந்து புகழ் பெற்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஜயலலிதாவை எதிர்த்து நிர்மலா ஜானகி கட்சியின் சார்பாக போட்டியிட்டுத் தோற்றார். அதற்குப் பின்னால் நடந்த தேர்தல்களிலும் ஜெயலிதாவைத் தொடர்ந்து எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் இந்த நிர்மலா. அவர் மீது போடப் பட்ட தொடர் வழக்குகளில் இருந்து தப்ப நிர்மலா பாஜக, திமுக என்று கட்சி மாறி மாறி அரசியலிலும் தொடர்ந்தவர். பாஜகவின் சார்பில் எம்பி எலக்ஷனில் கூட நின்றார் என்று நினைக்கிறேன். முதல்வராக முடியாவிட்டாலும் கூட மேல்சபைக் கலைப்பு முடிவில் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். என்பதினால் தமிழகத்தின் சினிமா சார்ந்த அரசியல் வரலாற்றில் இவருக்கு ஒரு இடம் ஏற்பட்டு விடுகிறது.
அரசியலில் ஜெயலிதா, நிர்மலா போல பிரபலமாக இல்லாமல் போனாலும் கூட அதே சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்தும் கூட தமிழக அரசியலில் ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருக்கிறார். ஸ்ரீகாந்த் காமராஜரின் தொண்டராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பழைய காங்கிரசில் ஒரு முக்கியமான ஆக்டிவான தொண்டராக விளங்கியவர். இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து தன் கடுமையான கண்டனங்களை அஞ்சாமல் பதிவு செய்தவர். போராட்டங்களிலும் நேரடியாகக் கலந்து கொண்டவர். அமெரிக்க கன்சலேட்டில் வேலை பார்த்து வந்த வெங்கட்ராமன் இந்தப் படம் மூலம் ஸ்ரீகாந்தாக அறிமுகமாகி பின்னர் அரசியலில் நேர்மை, எளிமை போன்ற கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்த அரசியல் இயக்கங்களின் பின்னால் நின்றவர். அந்த வகையில் இதில் அறிமுகமாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகைகளை விட நன் மதிப்பைப் பெறுபவரே. ஸ்ரீகாந்த் ஜெயகாந்தனின் நண்பர், அதனாலேயே ஜெயகாந்தனின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். பழைய காங்கிரசிலும் பின்னர் மொரார்ஜியின் ஜனதா பார்ட்டியிலும் தீவிரமாகப் பங்கு கொண்டவர். கடைசி வரை இந்திராகாங்கிரசுக்கு விலை போகாத ஒரு காமராஜ் தொண்டர். பழைய காங்கிரசின் மேல் இருந்த கொள்கைப் பிடிப்பின் காரணமாக தன் நடிப்பு வாய்ப்புகள் பறி போனாலும் கூட தன் கொள்கைகளையும் நேர்மை நியாயம் போன்றவற்றின் மீதான பிடிப்பையும் விட்டுக் கொடுக்காதவர். காமராஜர் மறைவுக்குப் பின்னாலும் கூட ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் பங்கேற்ற ஸ்ரீகாந்த் ஜனதா கட்சியின் மறைவுக்குப் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டவர். இந்திரா காங்கிரசை எதிர்த்ததினாலேயே இவருக்கு சிவாஜி படங்களில் இருந்த நிரந்தரமான நடிப்பு வாய்ப்புகளை இழந்தவர் என்பார்கள்.
இதில் ஜயலலிதாவின் அப்பாவாக வந்து சோகத்தைப் பிழியும் மேஜர் சுந்தரராஜன் கூட சிவாஜி கணேசனின் கட்சியில் சேர்ந்து காணமால் போனவர்தான்.
பிற்சேர்க்கை: ஸ்ரீகாந்த் படம் கிடைக்கவில்லை என்று குறைப்பட்டேன், ஒரு நண்பர் புகைப்படம் அனுப்பி இருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்:
ஆளுமைகள்
ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம்
கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->ராஜன் பக்கம்
படங்களின் பட்டியல்
கூட்டாஞ்சோறு->அரசியல்
தொடர்புடைய பதிவுகள்:
ராஜன் விமர்சனம்
விகடன் விமர்சனம்
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
arppudam aiya,very incisive,analytical writing
raju-dubai
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
1969-வாக்கில் காங்கிரஸ் பேரியக்கம் பெருந்தலைவர் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திராகாந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு நின்றபோது, தமிழகத்தைப்பொறுத்தவரை காங்கிரஸ் என்றால் அது பெருந்தலைவரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் என்றாகிப் போனது. வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வலுவாக இருந்தபோதிலும் தமிழகத்தில் அது ஒரு ‘லெட்டர்பேட்’ கட்சி என்ற அளவில்தான் இருந்தது. இ.காங்கிரஸுக்கு தொண்டர்கள் பலமில்லை.
தமிழகத்தைப்பொறுத்தவரை திரைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களில் பங்கெடுத்த அளவுக்கு காங்கிரஸில் பங்கேற்கவில்லை. இன்னும் பலர் எந்த அரசியல் இயக்கத்தின்பக்கமும் சாராமல் தானுண்டு தங்கள் சினிமா உண்டு என்றிருந்தனர். முத்துராமன், சிவகுமார், ஏ.வி.எம்.ராஜன் போன்ற பெரும்பாலோர் இந்த மூன்றாம் வகையைச்சார்ந்தவர்கள். அறுபதுகளில் துவங்கி காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரே கலைஞராக நடிகர்திலகம் மட்டுமே விளங்கினார். இந்நிலையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற பெயரில் இயக்கம் பிளவுண்டபோது நடிகர்திலகமும் பெருந்தலைவர் பக்கம் துணை நிற்க, அவரோடு தோளோடு தோள் நின்று ஸ்தாபன காங்கிரஸ்காரர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள் மூவர். அவர்கள் சசிகுமார், ஸ்ரீகாந்த், பிரேம் ஆனந்த். இவர்களில் பிரேம் ஆனந்த் கட்சியில் இருக்கிறார் என்பதற்காகவே நடிகர்திலகம் தன் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்தார்.
இவர்களில் சசிகுமார், இந்திய விமானப்படையில் பணியாற்றியவராதலால் ‘கேப்டன் சசிகுமார்’ என்ற பெயரும் உண்டு. (இதே போல ‘நீலமலைத்திருடன்’ படத்தில் நடித்த ரஞ்சன், விமான பைலட்டாகப் பணியாற்றியதால் அவருக்கும் கேப்டன் ரஞ்சன் என்ற பெயர் உண்டு. இவர்களெல்லாம் ‘ஒரிஜினல் கேப்டன்கள்’). சசிகுமார், இறுதிமூச்சுவரை பெருந்தலைவரின் தொண்டனாகவே இருந்து மறைந்தார். தீ விபத்தில் சிக்கிய தன் மனைவி சசிகலாவைக் காப்பாற்ற போராடியதில் இருவருமே உயிரிழந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மூன்று நாட்கள் போராடியபோது, வாழை இலையில் கிடத்தப்பட்டு, நடிகை கே.ஆர்.விஜயாவின் செலவில் ஒரே அறையில் ஆறு ஏர்-கண்டிஷன்கள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். அந்நேரம் சின்னஞ்சிறுவனாக இருந்த அவர்களின் ஒரே மகன் விஜயசாரதி அப்போதைய நடிகர் சங்கத்தலைவராக இருந்த நடிகர்திலகம், செயலாளர் மேஜர், பொருளாளர் வி.கே.ஆர். ஆகியோரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டார். (விஜயசாரதி இப்போது தொலைக்காட்சித் துறையில் நடிகர் மற்றும் அறிவிப்பாளராக புகழ்பெற்று விளங்குகிறார்).
இவர்களோடு, ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தில் பெருந்தலைவரின் தொண்டனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, மேடைப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தவர்தான் ஸ்ரீகாந்த். 1973-வாக்கில் தமிழ்நாட்டில் கடும் விலைவாசி உயர்வு ஆட்கொண்டபோது, பெருந்தலைவரின் ஆணைப்படி ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களும் தலைவர்களும் விலைவாசி உயர்வை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை சென்னை சத்தியமூர்த்தி பவனிலிருந்து போராட்ட ஊர்வலம் கிளம்பி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாவார்கள். தினமும் ஒவ்வொரு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் ஊர்வலம் புறப்பட, தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கைதாகினர். அப்படி நான்காம் நாள் தலைவர்களோடு தேசிய நடிகர் ஸ்ரீகாந்த் காங்கிரஸ் கொடிபிடித்து ஊர்வலம் போய் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டார். ஒவ்வொரு நாளும் ஊர்வலத்தைக்காண வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக நின்று வாழ்த்தினர். அதிலும் ஸ்ரீகாந்த் கலந்துகொண்ட அன்றைக்கு கடும் கூட்டம்.
ஏழாம் நாள் திங்களன்று பெருந்தலைவர் காமராஜரே ஊர்வலத்தை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற செய்தியை அறிந்த அன்றைய கலைஞர் அரசு, முதல்நாள் மாலையே அதுவரை கைது செய்திருந்த அனைவரையும் விடுதலை செய்தது. இருந்தபோதிலும் பெருந்தலைவர் காமராஜ் திட்டமிட்டபடி மறுநாள் போராட்டத்தில் கலந்துகொண்டார். அன்றைக்கு யாரும் கைது செய்யப்படவில்லை. (கலைஞர்தான் நரியை நனையாமல் குளிப்பாட்டுபவராச்சே. தன் ராஜதந்திரத்தைக் கைக்கொண்டார்). ஆனாலும் பெருந்தலைவர் விடவில்லை. “என் நண்பர் கருணாநிதி என்னை கைது செய்யாமல் விட்டது எனக்கு மகிழ்ச்சியல்ல. விலைவாசியைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்தால்தான் மகிழ்ச்சி” என்று அறிக்கை விட்டார்.
பெருந்தலைவரின் மறைவு வரை ஸ்தாபன காங்கிரஸில் இருந்த ஸ்ரீகாந்த், அவரது மறைவுக்குப்பின்னும் அங்கேயே தொடர்ந்தார். நடிகர்திலகம் போன்றோர் இந்திரா காங்கிரஸில் சேர முடிவெடுத்தபோதும் கூட அங்கே செல்லாமல், பா.ராமச்சந்திரன் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸிலேயே இருந்து வந்தவர், 1977-ல் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியாக மாறியபோதும் அங்கேயே இருந்து, 1977 பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் பா.ராமச்சந்திரனை ஆதரித்தும், 1977 சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.
இதனிடையே காந்தி மண்டபத்தின் அருகே பெருந்தலைவரின் நினைவிடத்தின் மேலே வைக்கப்படுவதாக இருந்த பெரிய கைராட்டை, எமர்ஜென்ஸி காலத்தின்போது அகற்றப்பட்டது. கட்டிடம் வெறுமனே மொட்டையாகக் காட்சியளித்தது. அப்போது மீண்டும் கைராட்டையை அவரது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகைக்குச் சென்று மனுக்கொடுத்த ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்களோடு ஸ்ரீகாந்தும் சென்றிருந்தார். மத்தியில் ஜனதாகட்சி ஆட்சியமைத்தபின்னர் ‘கைராட்டை’ மீண்டும் பெருந்தலைவர் நினைவிடத்தில் இடம் பெற்றது. பின்னர் ஜனதா கட்சி உடைந்து சிதறுண்டபின், ஸ்ரீகாந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
பெருந்தலைவர் மறைந்த பின் நடிகர்திலகம் எடுத்த அரசியல் முடிவுக்காக அவரை ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்ததால், நடிகர்திலகத்தின் படங்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின. (அப்போது நடிகர்திலகம் ஸ்தாபன காங்கிரஸிலேயே தொடரவேண்டும் என்பதே ரசிகர்களில் பெரும்பாலோரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது). ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே ஸ்ரீகாந்த் இருந்தார். ஒருகாலத்தில் ஸ்ரீகாந்த் இல்லாத நடிகர்திலகத்தின் படங்களே இல்லை என்றிருந்த நிலை மாறத்தொடங்கியது. இந்நேரத்தில் விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர் நடிகர்திலகத்தின் படங்களில் துணைப்பாத்திரங்களில் இடம்பெறத்துவங்கவே, சிவாஜி படங்களில் ஸ்ரீகாந்த் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். (அதே சமயம் நடிகர்திலகத்தைப்பற்றி ஸ்ரீகாந்தை விட பல மடங்கு கடுமையாக விமர்சனம் செய்திருந்த எம்.ஜி.ஆர்.பக்தரான தேங்காய் சீனிவாசன், சிவாஜி படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறத்தொடங்கினார்).
Dear RV…
Can you add my above article in the main topic…?
Thanks
ஆர் வி
போனஸ் பதிவுக்கு நன்றி. ஒரு பதிவு போட்டால் இன்னொரு பதிவு இலவசமா?
) அதுவும் ஸ்ரீதர் பட ஸ்டைலிலேயே அவர் படக் கதையில் இருந்தே அடுத்த படத்துக்கு கதையை தேத்துவது போல ஒரிஜனல் பதிவில் இருந்தே எடுத்து இன்னொரு பதிவு
)
சாரதா
ஸ்ரீகாந்த் குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியே. அப்பொழுது ஸ்ரீகாந்தும், மறைந்த நடிகர் சசிகுமாரும் (அவள், காசேதான் கடவுளடா) மட்டுமே பழைய காங்கிரசிலும் பின்னர் ஜனதாவிலும் தொடர்ந்தார்கள். நானும் அப்பொழுது அந்தக் கட்சியில் உறுப்பினராக இருந்தவன் என்ற முறையில் இந்த இரு நடிகர்கள் மீதும் எனக்கு காசுக்கு விலை போகாதவர்கள் என்ற மரியாதை உண்டு. சசிகுமார் தீ விபத்தில் இறந்து போனார். ஸ்ரீகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
அன்புடன்
ராஜன்
ஆர் வி
வெ ஆ நிர்மலாவின் இளமையான படம் எதுவும் கிடைக்கவில்லையா? வெ ஆ படத்தில் அவரது அழகான ஆடல் பாடல்களைக் கீழே போட்டு விட்டு மேலே ஏன் இப்படி ஒரு படம்?
அவர் மீது ஏன் உங்களுக்கு இப்படி ஒரு கோபம்?
அது சரி மீண்டும் மேல் சபை வருகிறதே அதில் இவருக்கும் ஒரு சீட் இருக்குமா? குஷ்புவுக்கு ஏற்கனவே கர்ச்சீஃப் போட்டு வைத்திருக்கிறார்களாம்
ராஜன்
சாரதா, கட்டாயமாக ஸ்ரீகாந்த்-காங்கிரசையும் ஒரு பதிவாக சேர்த்துவிடுகிறேன்.
ராஜன், உங்கள் கட்டுரை நீளத்துக்கு நான் எழுதி இருந்தால் அதை வைத்து ஒரு வாரம் ஓட்டுவேன்.
ஆனால் அந்த குசும்பை ஒரேயடியாக படித்தால்தான் நன்றாக இருக்கிறது!
ஸ்ரீகாந்த் படம் கிடைக்காத எரிச்சலில் கையில் கிடைத்த ஏதோ ஒரு படத்தை போட்டுவிட்டேன். உங்கள் இளமைக் காலத்தில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் படம் ஏதாவது இருந்தால் கொடுங்கள், போட்டுவிடலாம்.
சசிகுமார் காமராஜ் மறைவுக்கு முன்னாலேயே இறந்துவிட்டாரோ? எனக்கு சரியாக நினைவில்லை. எங்கே படித்தேன் என்று நினைவில்லை (ஒரு வேளை ஃபோரம்ஹப் ஸ்ரீகாந்த் திரியாக இருக்கலாம்) ஸ்ரீகாந்த் ஒரு கட்டத்தில் சிவாஜியோடு அரசியல் வேறுபாடு முற்றி பிச்சை எடுத்தாலும் எடுப்பேன், ஆனால் போக் ரோடில் போய் நிற்கமாட்டேன் என்று சவால் விட்டாராம். அப்புறம் ஸ்ரீகாந்துக்கு சாதாரணமாக போகும் ரோல்கள் எல்லாம் ஜெய்கணேஷுக்கு போக ஆரம்பித்தன.
நடிகர் சசிகுமார் ஜனதா கட்சியில் இடம்பெறவில்லை. காரணம், அக்கட்சி உதயமாவதற்கு முன்பே இவர் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜ் மறைவதற்கு சரியாக ஒரு வருடம் முன்பே சசிகுமார் (ஸ்தாபன காங்கிரஸில் இருந்த நிலையிலேயே) மறைந்துவிட்டார்.
ராஜன்…
இந்திரா காங்கிரஸில் சேர்ந்தவர்களை காசுக்கு விலைபோனவர்கள் என்று சொல்ல முடியாது. மூப்பனார், சிவாஜி போன்றவர்கள் பழைய காங்கிரஸின் ஒரு பகுதியாகவே அக்கட்சியில் இணைந்தனர். சிவாஜி அங்கே சென்றதற்கு, அவரைச்சுற்றியிருந்தவர்களின் (துர்ப்)போதனையும் ஒரு முக்கிய காரணம்.
சசிகுமார் பற்றிய விவரத்துக்கு நன்றி, சாரதா!
சாராதா
நான் காசுக்கு விலை போனதாகச் சொன்னதை நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பதவி, ஆட்சியில் இருப்பவர் தயவு, ஜெயிக்கும் கட்சியில் இருக்க வேண்டும் என்று நினைப்பது போன்ற எல்லாவற்றையும் அப்படி ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கிறேன். அந்த வகையில் காமாராஜர் இறக்கும் வரையிலும் அதன் பின்னும் இந்திரா காங்கிரஸ் கட்சியின் பின்னால் போகாதவர்கள் வெகு சிலரே. இவர்கள் அப்படிப் போகாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் நாட்டில் நல்லதொரு மாற்று இருந்திருக்கும். கட்சியை ஒட்டு மொத்தமாக இன்று தி மு க விடம் அடகு வைத்து விட்டார்கள். உண்மையான காமராஜ் தொண்டர்களுக்கு அங்கு இடம் கிடையாது. இன்று இந்திரா காங்கிரசுக்கு இருக்கும் பெரும்பாலான பழைய ஓட்டு வங்கி எல்லாமே பழைய காங்கிரஸ்காரர்களிமிருந்து வருவதுதான். கடைசியாக சத்தியமூர்த்தி பவனை கவர்னர் பதவிக்காக விற்று விட்டுப் போனவர் ராமச்சந்திரன்.
அன்புடன்
ராஜன்
ராஜன், காமராஜுக்கு அடுத்த நிலையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் – குமரி அனந்தன், பா.ரா., நெடுமாறன், சிவாஜி, மூப்பனார், ஆர்வி, சி.எஸ்., பக்தவத்சலம் யாருமே மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் இல்லை. பணம், பேச்சாற்றல், நிர்வாகத் திறமை இதில்தான் மும்முரமாக இருந்தார்கள். தன் பெயரை சொல்லி ஓட்டு வாங்க முடியாதவர்கள் வேறு என்ன செய்வார்கள்?