ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம்

சாரதா சிவாஜியின் முரட்டு பக்தை என்பது இந்த தளத்தின் வாசகர்களுக்கு தெரிந்த விஷயம். அவர் எம்ஜிஆருக்கு “எதிரி” இல்லை என்பதும் இந்த விமர்சனத்தைப் படித்தால் புரியும். ஓவர் டு சாரதா!

தமிழ்ப் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு எப்போதுமே உண்டு. தமிழ்ப் படங்களில் புராணப் படங்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. ராஜா ராணியை மையமாக வைத்து சரித்திரப் படங்களும் அதிக அளவில் வந்துள்ளன. சமூகப் படங்கள், மற்றும் நாட்டு விடுதலையை மையமாகக் கொண்ட படங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் படங்களும் அதிகமாக வந்துள்ளன. நகைச்சுவைப் படங்களின் பட்டியலும் நீளம்தான். காதலை மையமாகக் கொண்ட படங்களோ திகட்டத் திகட்ட வந்திருக்கின்றன.

ஆனால் இது வரை கடற் கொள்ளையர்களை கதைக் கருவாகக் கொண்டு வெளி வந்த ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே. கதை, வசனம், காட்சியமைப்புகள், பாடல்கள், இசை, பொருத்தமான நடிகர் நடிகையர் தேர்வு, பொழுதுபோக்கு அம்சங்கள், கதையோடு ஒன்றிய கதைக் களங்கள் என, ஒரு வெற்றிப் படத்துக்குரிய எல்லா அம்சங்களும் ஒரு சேர அமைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தின் கதாநாயனான ‘மக்கள் திலகம்’ எம்ஜியார் ஏற்றிருந்த மணிமாறன் என்ற கதாபாத்திரம், ஒரு கை தேர்ந்த தையற் கலைஞர் அளவெடுத்து தைத்த சட்டை பொருந்துவது போல வெகு அருமையாகப் பொருந்தியது. அவர் திறமைக்குத் தீனி போடுவது போல கத்திச் சண்டைக் காட்சிகள், அளவு மீறாத காதல் காட்சிகள், அவருக்கே பொருந்துவது போல அற்புதமாக அமைந்த பாடல்கள் என கனகச்சிதமாகச் சேர்ந்திருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்வது என்பது அவசியமில்லாத ஒன்று. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு பழகிப்போன திரைப்படம் இது. இன்றைய இளம் தலைமுறையினரும் கூட அறிந்து கொள்ளும் விதமாக, இன்றைக்கும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் படம்.

கதாநாயகியாக ஜெயலலிதா. இதிலும் பந்துலு மற்றும் எம்ஜியாரின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அது வரை (பானுமதிக்குப் பின்) சரோஜா தேவிதான் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வந்தார். அப்படியிருக்க, திடீரென்று அப்போதுதான் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்த ஜெயலலிதாவை கதாநாயகியாக (அதுவும் எம்ஜியாருக்கு ஜோடியாக) போட்டிருந்தார்கள். (ஜெயலலிதா இப்போது நாடறிந்த புள்ளியாக இருந்தாலும், அப்போது அவர் புது முகம்தானே). ஆனால் படத்தில் அவர் நடிப்பைப் பார்க்கும்போது அவரை புதுமுகம் என்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பருவம் எனது பாடல் என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்வதே அழகாக இருக்கும். கண்ணின் கருவிழியிலும், தாமரைப்பூவின் நடு இதழிலும்,கோயிலின் நடு மண்டபத்திலும் அவருடைய முகத்தை அறிமுகப்படுத்துவதே ஒரு அழகு.

எம்.ஜி.ஆரின் அறிமுகம் வழக்கம் போல “வெற்றி… வெற்றி…” என்ற வசனத்துடன் துவங்கும். (பாம்பு கடிக்கு மருந்து கண்டுபிடிப்பதில் வெற்றியடைந்திருப்பார்). சர்வாதிகாரி மனோகரால் கன்னித் தீவுக்கு அடிமைகளாக விற்கப்படும் போதாகட்டும், கப்பலில் பாயாசம் கேட்டு போராட்டம் செய்வதாகட்டும், தன்னை விரும்பும் இளவரசி பூங்கொடியிடம் அவருடைய காதலுக்கு கொஞ்சமும் தகுதியில்லாதவன் என்பதை விளக்குவதாகட்டும், நம்பியாரை நல்லவர் என்று நம்பி அவரிடம் மாட்டிக் கொண்டபின் தன்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காக்க தன் மனச்சாட்சிக்கு விரோதமாக ‘கடற் கொள்ளையனாக’ சம்மதிப்பதாகட்டும், மனோகர் தன் எதிரியாக இருந்தபோதும் கூட கோழைத்தனமாக நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை அவர் மீது வீசியதைக் கண்டு கொதித்துப் போய் அவரைக் காப்பாற்றும் இடத்திலாகட்டும்… இப்படி எல்லா காட்சிகளிலும் எம்.ஜி.ஆரின் நடிப்பு பாராட்டும்படியாக இருக்கும்.

கத்திச் சண்டைக் காட்சிகள் மூன்று இடங்களிலும் மிக அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். மணிமாறனும் பூங்கொடியும் (எம்ஜிஆர்+ஜெ) குடியிருக்கும் குடிலில் எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும் நடக்கும் கத்திச் சண்டை (முழுக்க முழுக்க மூங்கிலிலேயே அமைக்கப்பட்ட அருமையான செட்), கார்வார் மலைப் பகுதியில் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாள் சண்டை (நம்பியார்: “இப்போட்டியில் வெற்றி பெறுபவனே இந்த தீவின் தலைவனாவான். முடிந்தால் நீ தலைவனாகு. இருந்தால் நான் தொண்டனாகிறேன்”), மூன்றாவதாக மனோகரின் படை வீரர்களோடு கப்பலில் மோதும் வாள் சண்டை. இவையனைத்திலும் எம்.ஜி.ஆர். (வழக்கம் போல) தன்னுடைய திறமையைக் காட்டி அசத்தியிருப்பார்.

பின்னர் வரப் போகும் மூன்று கத்திச் சண்டைக் காட்சிகளும் ரொம்ப சீரியசாக இருக்கும் என்பதால்தானோ என்னவோ, இவற்றுக்கு முதலில், கன்னித் தீவில் கொள்ளையடிக்க வரும் நம்பியாரின் ஆட்களோடு நடக்கும் சண்டையை ரொம்பவும் நகைச்சுவை ததும்பும் விதமாக படமாக்கியிருப்பார் பந்துலு.

பாடல்களும் இசையும்:

இப்படம் இன்னொரு விதத்திலும் மறக்க முடியாத படமாக அமைந்தது. ஆம், அது வரை தமிழ்த் திரை இசையில் இரட்டையர்களாக கோலோச்சி வந்த ‘மெல்லிசை மன்னர்கள்’ விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் கடைசியாக இணைந்து இசையமைத்தது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்குத்தான். அதனால்தானோ என்னவோ இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாகவும், இசையில் இன்றைக்கும் ஒரு சாதனையாகவும் திகழ்கின்றன. பாடல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்ட ஒன்று. இன்றைக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன. சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் திரையுலக வி.ஐ.பி.க்கள் மறக்காமல் தொடும் பாடல்கள் இடம் பெற்ற படங்கள் ஆயிரத்தில் ஒருவன், புதிய பறவை, அன்பே வா… இவற்றிலிருந்து பாடல்களைச் சொல்லாமல் அவர்கள் நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதேயில்லை. காரணம் அந்த அளவுக்கு தேன் சொட்டும் பாடல்கள்.

  • 1. பருவம் எனது பாடல்
  • நான் முதலிலேயே சொன்னபடி, கதாநாயகி ஜெயலலிதா அறிமுகம் ஆகும் பாடல். தோழிகளோடு அவர் ஆடிப்பாடும் காட்சி என்பதால், பி.சுசீலாவின் குரலோடு கோரஸ் சிறப்பாக சேர்க்கப்பட்டிருக்கும்.

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில் கலைகள் எனது காவல்
    கருணை உனது கோயில் கலைகள் உனது காவல்

    பல்லவியை பாடி முடித்த சுசீலா, உச்ச ஸ்தாயியில் ஹம்மிங் ஆரம்பித்து அப்படியே படிப்படியாக கீழ் ஸ்தாயி வரையில் கொண்டு வர‌, கூடவே அதுக்கு அனுசரணையாக கோரஸ் கலந்து ஒலிக்க, அப்பப்பா.. மெல்லிசை மன்னர்கள் இங்கு மெல்லிசை சக்கரவர்த்திகளாக உயர்ந்து நிற்பார்கள். பல்லவி முடிந்து

    இதயம் எனது ஊராகும் இளமை எனது பேராகும்

    என்று சரணம் தொடங்கும்போது, பாங்கோஸ் அருமையாக பாடலை அணைத்துச் செல்லும். அதனால்தான், பிற்காலத்தில் எத்தனையோ இசைக்கொம்பர்கள் வந்தும் கூட இந்தப் பாடல்களை மக்கள் மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை.

    (நண்பர்கள் நிச்சயம் இங்கு அதற்கான ‘LINK’ தருவார்கள். SONGS கேட்டுப் பாருங்கள். வேறொரு உலகத்துக்குப் போவீர்கள்).

  • 2. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
  • வழக்கம் போல எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் வரிசையில் ஒன்று.

    ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
    நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
    நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே

    இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் எல்லாம் இப்படி எண்ணியதால்தானே இன்று நாம் சுத‌ந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.

  • 3. ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

  • இந்தப் பாடலைப் பற்றி நண்பர்கள் ஏற்கெனவே இங்கு சொல்லியிருக்கிறார்கள். மக்கள் திலகம் பல கவிஞர்களிடம் பாடல் எழுதியும் திருப்தியடையாமல், அப்போது தன்னிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனை அழைத்து இந்தப் பாடலை எழுதச் சொல்லி திருப்தியடைந்தார் என்பார்க‌ள். பாதிப் பாட‌ல் அர‌ண்ம‌னை செட்டிலும் பாதிப்பாட‌ல் கார்வார் க‌ட‌ற்க‌ரையிலும் க‌ண்டினியூட்டி கெடாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  • 4. உன்னை நான் ச‌ந்தித்தேன் நீ ஆயிர‌த்தில் ஒருவ‌ன்
  • பி.சுசீலா தனியாக‌ப் பாடிய‌ பாட‌ல். கூட‌வே ஆண்க‌ளின் கோர‌ஸ். ம‌ணிமாற‌னைப் பிரிந்த‌ பூங்கொடி, செங்க‌ப்ப‌ரின் அர‌ண்ம‌னையில் சோக‌மே உருவாக‌ பாடும் பாட‌ல், கூட‌வே க‌ப்ப‌லில் போய்க்கொண்டிருக்கும் ம‌ணிமாற‌னைக் காண்பிக்கும்போது, அவ‌ர‌து கூட்டாளிக‌ளின் உற்சாக‌மான‌ கோர‌ஸ்.

    பொன்னைத்தான் உட‌ல் என்பேன் சிறு பிள்ளை போல் ம‌ன‌மென்பேன்
    க‌ண்க‌ளால் உன்னை அள‌ந்தேன் தொட்ட‌ கைக‌ளால் நான் ம‌ல‌ர்ந்தேன்
    உள்ள‌த்தால் வ‌ள்ள‌ல்தான் ஏழைக‌ளின் த‌லைவ‌ன்

    அடுத்து வ‌ரும் இசை ‘பிட்’டைக் கேட்க‌ முடியாது, கார‌ண‌ம் ப‌ல‌த்த‌ கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும். பாட‌ல் முடியும்போது, கோர‌ஸுட‌ன் க‌ப்ப‌ல்க‌ள் முல்லைத்தீவு க‌ரையில் ஒதுங்குவ‌தாக‌ காட்டுவ‌து அருமை. (கப்பல்கள் கரை ஒதுங்கும்போது, முல்லைத்தீவின் அரசியான எல்.விஜயலட்சுமி கறுப்பு நிற உடையில் அழகுப் பதுமையாக நடந்து வருவது எடுப்பான காட்சி).

  • 4. ஆடாமல் ஆடுகிறேன்
  • கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டையடி சத்தம், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

    ஆடாமல் ஆடுகிறேன்… பாடாமல் பாடுகிறேன்
    ஆண்டவனைத் தேடுகிறேன் வா…வா…வா….
    நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
    வா…வா…வா…. வா….வா…வா…

    முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, ‘ஆண்டவனைத் தேடுகிறேன்’ என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக தபேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

    விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
    ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
    அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
    அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

    ‘கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்’ என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

    (மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

  • 5. நாணமோ… இன்னும் நாணமோ
  • நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன? காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா? அதுதான் இந்தப் பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

    தோட்டத்துப் பூவினில் இல்லாதது
    ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
    ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
    ஆனந்த வெள்ளத்தில் நீராடுது – அது எது?

    ஆடவர் கண்கள் காணாதது
    அது காலங்கள் மாறினும் மாறாதது
    காதலன் பெண்ணிடம் தேடுவது
    காதலி கண்களை மூடுவது – அது இது

    பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்.

  • 6. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
  • அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

    கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
    கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
    அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
    அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

    இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

    இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் “என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?”

    நாகேஷ்: “அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து ‘ஈ’ன்னு சிரிச்சா. ‘கொன்னுடுவேன்’ அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்”.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

    எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

    ‘ஆயிரத்தில் ஒருவன்’ பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பதிவுகள், திரைப்படங்கள்

    தொடர்புடைய பதிவுகள்: ஆயிரத்தில் ஒருவன் – ஆர்வி விமர்சனம், ஜெயலலிதா நினைவுகள்

    களத்தூர் கண்ணம்மா

    படம் வந்தபோது (செப்டம்பர் 1960) விகடனில் வந்த விமர்சனம். கமலைப் பற்றி அப்பவே புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! நன்றி விகடன்!

    சண்முகம் – மீனாட்சி

    சண்: ஏன் மீனாட்சி, முகமெல்லாம் ஒரே வாட்டமா இருக்குது?

    மீனா: களத்தூர் கண்ணம்மா படத்துக்குப் போயிருந்தேன். அநாதைக் குழந்தை ஒண்ணு படற கஷ்டத்தைப் பார்த்து என் மனசு ரொம்பச் சங்கடப்பட்டுதுங்க.

    சண்: அப்படி என்ன உருக்கமான கதை அது?

    மீனா: களத்தூர் ஜமீன்தாரோட பிள்ளை ராஜா, அவங்க ஜமீன்லேயே வேலை பார்க்கிறவருடைய பெண் கண்ணம்மாவைக் காதலிச்சு, ரகசியக் கலியாணம் பண்ணிக்கறாரு. கலியாணம் ஆனவுடனேயே மனைவியைப் பிரிஞ்சு, சீமைக்குப் போறாரு. கல்யாண விஷயம் ஜமீன்தாருக்குத் தெரிஞ்சு போவுது.

    சண்: அப்புறம் மூணு பேரும் தனித்தனியா பிரிஞ்சுடுவாங்க. திரும்பி வந்த ராஜா கண்ணம்மாவைக் காணாமல் தவிப்பான். கடைசியிலே எல்லாம் ஒண்ணு கூடுவாங்க. அவ்வளவுதானே!

    மீனா: ஆமாம். அந்தப் பையன் நடிப்புதான் எல்லாரையும் உலுக்கிடுச்சு. ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே‘ன்னு முருகன் படத்துக்கு எதிரிலே நின்னு அந்தப் பையன் பாடியது ரொம்ப உருக்கமா இருந்துதுங்க. சாவித்திரியும் ஜெமினி கணேசனும் கண்ணம்மாவும் ராஜாவுமா வராங்க. காதலியா வரபோதும் சரி, கண் கலங்கித் தவிக்கிற மனைவியா வரபோதும் சரி, கொடுத்த வேஷத்தை நல்லாச் செய்திருக்கு சாவித்திரி.

    சண்: ஜமீன்தார் யார்? பாலையாவா?

    மீனா: ஆமாம். அவர் நடிப்புக்குச் சொல்லணுமா! சுப்பய்யாதான் வேலைக்காரனா வராரு. கொஞ்சம் ‘ஓவரா’ நடிக்கிறாரு. ஆனால், பிறந்த குழந்தையை அநாதை ஆசிரமத்திலே கொண்டுபோய் விடற இடத்திலே, அந்தக் குழந்தை துணியைப் பிடிச்சுக்குது. அதை அவர் விலக்கிக்கிட்டு வர இடம் ரொம்ப நல்லா இருந்தது.

    சண்: டைரக்ஷன் பீம்சிங்கா?

    மீனா: ஆமாம். எப்படிச் சரியா சொன்னீங்க?

    சண்: மறந்துட்டியா? இதே மாதிரி காட்சியை பாகப் பிரிவினையிலே பார்க்கலியா நீ?

    மீனா: இந்தக் குறையெல்லாம் உங்களுக்குத்தான் படும். எனக்கென்னவோ, இதில் அழுகைக்குதான் அதிக இடம் இருக்கு, சிரிக்கவே முடியலேங்கறது ஒண்ணுதான் குறையாகப்பட்டது. நான் பார்த்த நல்ல தமிழ்ப் படங்களிலே களத்தூர் கண்ணம்மாவைக் கண்டிப்பா சேர்த்துக்குவேன்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

    கந்தன் கருணை

    இன்றைக்கு ஒரு சுட்டி – விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் ரவிப்ரகாஷ் சுவாரசியமான பதிவர். சாவியின் சிஷ்யர். அவர் கந்தன் கருணை பற்றி எழுதி இருக்கும் அருமையான விமர்சனத்தை இங்கே காணலாம்.

    உலகம் சுற்றும் பன்!

    தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!

    உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.

    பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.

    அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.

    பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.

    எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.

    படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.

    எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.

    வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.

    “அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”

    “என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”

    “அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”

    “எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”

    எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

    பாபு – விகடன் விமர்சனம்

    நன்றி, விகடன்!

    ‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்’ என்று சொல்வது கூட சிவாஜியின் அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டாக இருக்க முடியாது. அப்படி ஓர் அருமையான நடிப்பு!

    ரிக்ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பில் முத்திரை பதிகிறது.

    பணக்கார சமதர்மவாதியான பாலாஜியின் பரிவைப் பார்த்து விட்டு, ”நீங்க எலெக்ஷனுக்குத்தானே நிற்கப் போறீங்க?” என்று கேட்கும் அப்பாவித்தனம்; நொடித்துப் போன ஜானகி குடும்பத்துக்குக் காவல் நாயாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விசுவாசம் – இப்படிப் பல காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.

    சிவாஜி-விஜயஸ்ரீயின் காதலில், கதை ஜிலுஜிலுப்பாக ஆரம்பிக்கிற ஜோர் பிரமாதமாக இருக்கிறது.

    பாபுவின் லட்சியப்படி நிர்மலா, பட்டம் வாங்கியதோடு கதையை முடித்திருக்கலாம். அதற்கு மேலும் கதையை நீட்டியிருக்க வேண்டுமா?

    பணக்காரத் தம்பதியாக வரும் பாலாஜி-சௌகார் ஜானகி, குழந்தை மூவரும் நெஞ்சையள்ளும் பாத்திரங்கள். பாலாஜி வெகு அநாயாசமாகவும் அழகாகவும் நடித்துப் பெயரைத் தட்டிக் கொள்கிறார். குழந்தை பிச்சையெடுத்துவிட்டு அழும்போது இளகாத நெஞ்சமும் இளகும். சோதனையால் நிலை தடுமாறி குன்றிப் போன உயர் குலப் பெண்மணி ஒருவரின் தவிப்பு, தயக்கம் அத்தனையையும் உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார், சௌகார் ஜானகி.

    படத்துக்குக் கவர்ச்சியூட்ட வேண்டிய பொறுப்பை சிவகுமார்-நிர்மலா ஜோடியிடம் விட்டிருக்கிறார்கள். மினி டிராயரைப் போட்டுக் கொண்டும், மழையினால் உடை, உடம்பில் ஒட்ட நனைந்து கொண்டும் நிர்மலா அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முயன்றிருப்பதில் குறையில்லை. ஆனால், சிவகுமார்-நிர்மலா காதலை விட நம் மனத்தில் சுவையூட்டியது ஆரம்பத்தில் மின்னல் போல் தோன்றி மறைந்த சிவாஜி-விஜயஸ்ரீ காதல் காட்சிதான்.

    கஞ்சி வரதப்பா‘ பாட்டுக்கு ஏற்ப புன்னகை சிந்த, சாப்பாட்டுக் கூடையுடன் ஒயிலாக இடையை அசைத்து, விஜயஸ்ரீ நடந்து வரும் அழகில் சிருங்காரம் சொட்டுகிறது. முயன்றால் கதாநாயகி அந்தஸ்துக்கு சிறப்பாகத் தேறிவிடக் கூடிய நளினமும் அழகும் இவரிடம் பொருந்தியிருக்கின்றன.

    சிவாஜியின் நடிப்பு என்ற தங்க விளக்கு இருக்கிறது; ஆனால் கதை என்ற திரி சரியாக இல்லையே!

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

    என் பெண்களுக்காக இரண்டு பாட்டுகள் (Two Songs for My Daughters)

    இந்த பதிவை என் பெண்களும் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

    In general, neither of my daughters have much interest in Tamil movies. The elder one had a phase where she liked Hindi movies – specifically NRI Hindi movies – but even that seems to be over.

    We had gone to a Tamil music concert here recently. The singers wore costumes that mimicked the way the songs were picturised and happily danced around. Both my daughters liked the “Rapper Hat Song” and the “Sombrero Dude Song“. Can you figure out what these songs are? :-)

    Rapper Hat Song

    They really love the way SPB dances in this song.

    Sombrero Dude Song

    நம் நாடு

    நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

    ஓர் உரையாடல்

    வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.

    ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.

    சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.

    மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல், ‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!

    ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.

    மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.

    ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!

    சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.

    பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’

    சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.

    ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!

    சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)

    மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?

    ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.

    சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?

    சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!

    சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?

    மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?

    சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?

    ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?

    சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!

    ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?

    பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!

    சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!

    சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
    மனோரமா
    ஜெயராஜ் ஓவியர்

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், விகடன் விமர்சனங்கள்

    அடுத்த வீட்டுப் பெண்

    திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (27-3-1960) நன்றி, விகடன்!

    முனுசாமி – மாணிக்கம்

    மாணிக்கம்: அண்ணே, தலைவர் ராஜிநாமா பண்ணிவிட்டா கழகத்திற்கு அடுத்த தலைவர் நான்தாங்கறாரு கருணாநிதி!

    முனுசாமி: அப்படியா? எந்தக் கூட்டத்திலே சொன்னாரு தம்பி?

    மாணி: கூட்டத்திலேயா? நான் சினிமாவிலே சொல்றேன் அண்ணே! ‘அடுத்த வீட்டுப் பெண்’லே காமெடியன் கருணாநிதி, காரியம் கைகூடும் கழகத்துத் தலைவர் தங்கவேலு ராஜிநாமா செய்தா நான்தான் அடுத்த தலைவர்னு சொல்றாரு.

    முனு: ஓகோ! படம் எப்படி தம்பி?

    மாணி: நல்லா இருக்குது அண்ணே!

    முனு: என்ன, ஒரு வார்த்தையிலே முடிச்சுட்டே?

    மாணி: கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். விளக்கமா வேணும்னாலும் சொல்றேன். அடுத்த வீட்டுப் பெண் லீலாவைக் காதலிக்கிறாரு மன்னாரு. லீலா கொஞ்சம் முரட்டுப் பெண். ஆனால், சங்கீதத்திலே ரொம்பப் பித்து. அதனாலே அவளோட காதலை அடைய மன்னாரு தன் நண்பன் குரலை இரவல் வாங்கி, பெரிய பாடகரா நடிச்சு, கடைசியிலே அந்தப் பெண்ணையே கலியாணம் செய்துக்கறாரு. இதுதான் கதை.

    முனு: கதை ரொம்ப சாதாரணமாத்தானே இருக்குது?

    மாணி: இது கதைக்காக எடுத்த படமில்லே அண்ணே, காமெடிக்காக எடுத்த படம்.

    முனு: ஹீரோ யார்?

    மாணி: ஹீரோவே கிடையாது!

    முனு: என்னது?

    மாணி: ஆமாம் அண்ணே! எல்லாக் காமெடியர்களும் நடிக்கிறாங்க. தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, பிரண்ட் ராமசாமி, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், பக்கிரிசாமி

    முனு: ஹீரோயின் அஞ்சலிதேவிதானே!

    மாணி: ஆமாம். இது என்ன கேள்வி?

    முனு: முக்கிய கேள்விதான். ஹீரோயினை யார் காதலிக்கிறாரோ, அவர்தானே ஹீரோ!

    மாணி: அப்படிச் சொல்லப் போனா கதையிலே டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ. ஆனால் படத்திலே தங்கவேலுதான் ஹீரோ! அடேயப்பா! பிரமாதப்படுத்தறாரு அண்ணே!

    முனு: அஞ்சலி எப்படி தம்பி?

    மாணி: கேட்கணுமா? அப்படியே மனசிலே நிக்குது. ஆட்டமும், பாட்டும், துடிப்பான பேச்சும், ஜப்பான்காரப் பெண்ணாக வந்து கீச்சு மூச்சுனு பேசறதும், குலுக்கி மினுக்கி நடக்கறதும்… ரொம்பப் பிரமாதம் அண்ணே!

    முனு: நீ சொல்றதைப் பார்த்தா…

    மாணி:- கலர் டான்சுக்காகவும், காமெடிக்காகவும் இந்தப் படத்தைக் கட்டாயம் பார்க்கணும் அண்ணே!

    தொகுக்கப்பட்ட பக்கம்: விகடன் விமர்சனங்கள், திரைப்படங்கள்

    எந்திரன்

    எந்திரன் படத்துக்கு நண்பர் கோபால் எழுதி இருக்கும் மினி விமர்சனம். கோபால் துபாயில் வாழ்பவர், அங்கே இந்தியாவில் ரிலீஸ் ஆகும் முன்பே படம் வந்துவிட்டது போலிருக்கிறது. ஓவர் டு கோபால்!

    We had managed to secure ticket for Rajinikanth’s blockbuster movie ENTHIRAN, we three (myself, ashok, ramki) went to Galleria theatre for the morning first show 7.30 a.m.

    When we reached the theatre at 7 am, there was already surging crowd jostling to grab space to make entry. I remember my childhood days, when we were forcibly woke up by our parents to go to temple at the dawn, we were reluctant, obstinate, unyielding, refused to wake up. But now, we woke up early in the morning, well prepared, bruiced and went in time.

    Being a working day in Dubai, I thought people won’t make it. I think the crazy people, including us, looked as if nothing would compensate Superstar’s movie and ready to keep our job at the altar for a decent sacrifice. The craziness crept into our brain also because we wanted to see this movie before it is released in India on Friday.

    We entered the theatre with a big rapturous noise, sat in the saddle amidst chaos and vivid fans’ thunderous ‘silence’. Fans did not heed to the instructions of torchlight-guides who were out to help. Unlike old days, there was no Government documentary showing or advertisement. We were at the edges of seats and biting nails impatiently, cursing the Operator. We did not even have such a tension and excitement during school result days.

    Finally the blockbuster began.

    Initial rhetoric of usual Rajini introduction scene is not there, instead he is introduced in the opening scene as Dr. Vaseegaran who finds to enthuse a Robotic object into human, he creates this robot with all that a man can do and cannot do. He finally succeeds after 10 years of research, but he fails in the test by experts as it cannot have any feelings of love, compassion, attachment or obeying attitudes. He re-implants all this and gets interrupted by Danny who is jealous. Rest you have have to see in theatre and i am not going to tell you the story to remove your interest.

    HIGHLIGHTS:
    Shankar has used technology and special effects to the core.
    Aish looking great, acted well, she looks old in some scenes.
    Rajini is just GREAT GREAT GREAT
    He takes more |Avatars, say more than 1000 and Dasavatharam is a mustard here.
    I think none other than Rajini can mantle this role and none would fit into this role.
    Excellent camera and fighting scenes, superb train stunt by Chitti
    Music is good and background music is pressed to take the scenes to the new heights.
    Dont miss to take your children, 4-14, they will enjoy more than you.
    Chitti (rajini villain)’s actions are superb,
    A repeat watch may be recommended.
    Songs picturisation just superb
    computer, graphics, tehno – all class
    Razor edge dialogues by Sujatha – just great
    Karunas, Santhanam – a waste in the film, they have less role to play.
    We must salute Shankar for this great movie in Tamil. We may have seen many movies in hollywood, but to bring hollywood to kollywood – one shoudl have guts, i think he has achieved this coveted goal.

    தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

    இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மறைவு

    விமல் எழுதிய அஞ்சலி செய்தி கீழே.

    இசையமைப்பாளர் சந்திரபோஸ் உடல்நலக் குறைவால் இன்று காலை (30/09/2010) காலமானார்.

    சந்திரபோசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் கோமா நிலைக்குச் சென்றார்.

    இதையடுத்து சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மிகவும் அபாய கட்டத்தில் இருந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது.

    ஆனால், அவர் கொஞ்சம் உடல் நிலை தேறினார். அவர் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை (30/09/2010) சந்திரபோஸ் காலமானார்.

    வி.சி.குகநாதன் டைரக்டு செய்த ‘மதுரகீதம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்திரபோஸ். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் ஆறு புஷ்பங்கள் படத்தில் சந்திரபோஸ் பாடிய ஏண்டி முத்தம்மா அவரை மிகப் பிரபலமாக்கியது.

    பின்னர் இவர் இசையமைத்த மச்சானைப் பார்த்தீங்களா படத்தில் இடம்பெற்ற ‘மாம்பூவே சிறு மைனாவே’ என்ற பாடல் மிகப் பிரபலமடைந்தது.

    தொடர்ந்து மாங்குடி மைனர், முதல் குரல், மைக்கேல்ராஜ், சங்கர் குரு, தாய் மேல் ஆணை, ராஜா சின்ன ரோஜா, விடுதலை உள்பட 120 படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

    ரஜினியின் மனிதன், ராஜா சின்ன ரோஜா, விடுதலை போன்ற படங்களுக்கு தொடர்ந்து இசையமத்து முன்னணியில் இருந்தார் சந்திரபோஸ். ஏவிஎம் தயாரித்த 12 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் சந்திரபோஸ்.

    தமிழ் சினிமாவில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் சந்திரபோஸ்.

    மனிதன் படத்தில் வரும் வானத்தைப் பார்த்தேன், மனிதன் மனிதன், அண்ணா நகர் முதல் தெரு படத்தில் இடம்பெற்ற ‘மெதுவா மெதுவா’, சங்கர் குருவில் இடம் பெற்ற ‘காக்கிச் சட்ட போட்ட மச்சான்’, மக்கள் என் பக்கம் படத்தில் வரும் ‘ஆண்டவனைப் பாக்கணும்’ போன்ற பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை.

    கடந்த சில ஆண்டுகளாக டிவி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். மலர்கள், வைரநெஞ்சம், ஜனனம் போன்ற தொடர்களில் முக்கிய வேடம் ஏற்று நடித்தார்.

    சமீபத்தில் தன் மகனுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்த சந்திரபோஸ், மனைவியுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

    அவரது மறைவுக்கு திரையுலகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

    சந்திரபோசின் இசையில் எனக்கு (விமலுக்கு) பிடித்த பாடல்கள்

    1. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு (அண்ணா நகர் முதல் தெரு)
    2. நீலக்குயில்கள் ரெண்டு (விடுதலை)
    3. மாம்பூவே சிறு மைனாவே (மச்சானைப் பார்த்தீங்களா)
    4. இளங்குயில் பாடுதோ..யார் வரக்கூடுமோ… (கலியுகம்)
    5. ரவிவர்மன் எழுதாத கலையோ (வசந்தி)
    6. சின்ன சின்ன பூவே… நீ கண்ணால் பாரு (சங்கர் குரு)
    7. தோடி ராகம் பாடவா …மெல்லப்பாடு (மாநகரக் காவல்)
    8. ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே (வாய்க் கொழுப்பு)
    9. சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது..பொன்னாய் மணியாய் (சுவாமி ஐயப்பன்)
    10. பச்சப்புள்ள அழுதிச்சின்னா (புதிய பாதை)
    11. ஏதோ நடக்கிறது (மனிதன்)
    12. மனிதன் மனிதன் (மனிதன்)

    தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், ஆளுமைகள்

    Follow

    Get every new post delivered to your Inbox.

    Join 45 other followers