2008-இல் சன் டிவியில் வார நாட்களில் பழைய தமிழ் படமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு பழைய படம் – திராபையாக இருந்தாலும் – பார்க்க பிடிக்கும். சும்மா விளையாட்டாக பார்த்த படத்துக்கு எல்லாம் விமரிசனம் எழுத ஆரம்பித்தேன். அதையும் படிக்க ஒரு பத்து பேர் வந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது.
சன் டிவி படம் போடுவதை நிறுத்தியதும் இந்த ப்ளாக்கின் input stream வற்றிவிட்டது. அப்புறம் எங்கேயாவது (விகடன் பொக்கிஷத்தில் வரும் விமர்சனம், ராண்டார்கை ஹிந்துவில் எழுதும் பத்திகள், யாராவது எனக்கு பிடித்த படம் என்று போடும் லிஸ்ட்) ஏதாவது கண்ணில் பட்டால் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அது ரெகுலராக எழுத முடிவதில்லை. கண்ணில் பட்டால்தானே எழுதத் தோன்றுகிறது? கர்நாடகாவில் வெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும், அந்த மாதிரிதான் யாராவது ஏதாவது எழுதினால் நானும் அதை வைத்து மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். இதில் நடுவில் கம்ப்யூட்டர் தகராறு வேறு, மாதக் கணக்கில் எழுத முடியவில்லை.
என் கனவுலகத்தில் பழைய சினிமா என்று இந்த ப்ளாகுக்கு வந்து நீங்கள் தேடினால் – “சபாபதி” என்று வைத்துக் கொள்வோமே? – என் விமர்சனம், எனக்கு பிடித்த சில பதிவர்கள் – சூர்யா மாதிரி – ஏதாவது எழுதி இருந்தால் அந்த பத்தி, பழைய பத்திரிகை விமர்சனம் (விகடன், குமுதம், கல்கி, கணையாழி மாதிரி பத்திரிகைகள்), பாட்டு, வீடியோ லிங்க் எல்லாம் கிடைக்க வேண்டும். இது கஷ்டம்தான். இப்போது இருக்கும் பத்திகளையே navigate செய்வது நச்சுப் பிடித்த வேலை. கனவுலகம் வெகு தூரத்தில் இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம், டே என்னை ஏய்க்காதே! ஹ! ஹ! ஹஹ்ஹஹா! என்று என் மனசாட்சியும் சிவாஜி மாதிரி சிரிக்கிறது.
இந்த வருஷம் ரெகுலராக எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாரத்துக்கு ஒரு பத்தி என்றாலும் சரி, நாளைக்கு பத்து பத்தி என்றாலும் சரி, என்ன வரப் போகிறது, எப்போது வரப் போகிறது என்று தெளிவாக சொல்லி விட விரும்புகிறேன். முதலில் என்ன எழுத வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் இல்லையா?
இதை படிக்கும் 42 பேருக்கு ஒரு கேள்வி. என்ன மாதிரி பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது? நீங்கள் இது வரை படித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்றிரண்டு பத்திகள் என்ன என்று சொல்லுங்கள். அது ஓரளவு உதவியாக இருக்கும். உங்கள் பதில் நிச்சயமாகத் தேவை. இல்லை என்றால் மீண்டும் கண் போன போக்கிலே கை போக வேண்டியதுதான்!
37.523851
-122.047324
அண்மைய மறுமொழிகள்