ரவிச்சந்திரன் மறைவு

(கொஞ்ச நாட்களாகவே எல்லாம் லேட்டாகவே செய்து முடிக்கிறேன். Too many things in my plate and probably filled my mouth with more than I could chew. ரேடியோ ப்ரோக்ராம், சிலிக்கன் ஷெல்ஃப் இலக்கிய வட்டம், கோடை விடுமுறை பயணங்கள், இந்தியப் பயணம் புறப்பாடு, மற்றும் பல விஷயங்கள். இவற்றில் அபிமான திரைப்படங்களில் நடித்த ரவிச்சந்திரன் மறைந்ததை குறித்து சரியாக ட்ரிப்யூட்ஸ் கொடுக்கத் தவறிவிட்டோம். அதற்க்காக வருந்துகிறோம். மேலும் ரவிச்சந்திரன் காலமானதற்க்காக மிகவும் வருந்துகிறோம். இங்கே விமல், சாரதா கொடுத்த தகவல்களை தனியாக இடுகிறேன். நன்றி விமல் மற்றும் சாரதா)

***** (நன்றி : தினமலர் – 26/07/2011) ****

வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் (71) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (25-07-11) இரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள சாய் மகால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும், அரசியல்புள்ளிகளும் ரவிச்சந்திரன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை ரவிச்சந்திரன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

டைரக்டர் ஸ்ரீதரால் காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன்.
நான்,
குமரிப்பெண்,
அதே கண்கள்,
மூன்றெழுத்து,
பாக்தாத்பேரழகி,
அன்றுகண்ட முகம்
உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.
அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன்.
திருச்சியை சேர்ந்த அவர், சினிமா மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் டைரக்டர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.
1965ம் ஆண்டு காதலிக்கநேரமில்லை என்ற படத்தில் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் டைரக்டர் ஸ்ரீதர். அத்துடன் தனது சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்றாலும், வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதருக்காக தொடர்ந்து 2 ஆண்டுகள் சித்ராலயா நிறுவனத்துக்காக நடித்துக் கொடுத்தார்.

அதன் பின்னர் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற கம்பெனி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகனானார். நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

ஒரு காலகட்டத்தில் ஆண்டுக்கு பத்து படங்கள் வரை நடித்த ரவிச்சந்திரனுக்கு, அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்ததால் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்தார். தமிழைத் தவிர மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ரவிச்சந்திரனின் படங்களில் இடம்பெறும் அனைத்தும் ஹிட் ஆகிவிடுவதால் ரசிகர்களிடையே பிரபலமாக காணப்பட்டார்.

ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு, சிறிது காலம் நடிப்பு துறையிலிருந்து விலகியிருந்த ரவிச்சந்திரன் ஆபாவாணனின், ஊமை விழிகள் மூலம் மீண்டும் நடிகரானார். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தார்.

ரவிச்சந்திரன், மானசீக காதல், மந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். தங்கம் விலை பவுன் ரூ.75 ஆக இருந்த காலத்திலேயே மாதச்சம்பளமாக ரூ.1000 பெற்றவர் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்திருக்கும் அவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இணையாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நாயகனாக வலம்வந்த நடிகர் ரவிச்சந்திரன் வாய்ப்புகள் இல்லாத காலத்தில், வாய்ப்புக்காக யாரிடமும் போய் நின்றதில்லை. விவசாயத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் அருகில் இருக்கும் அவருடைய நிலத்தில் அமைதியாக விவசாயம் செய்து கொண்டிருந்தார் என்பது கூடுதல் தகவல.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவரதன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் அம்சவரதன் சில படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

  1. மேலும் சில தகவல்கள் (நன்றி : தினகரன்)
    ______________________________________________

    நடிகர் ரவிச்சந்திரன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார். கடந்த 17&ம் தேதி அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் கோமா நிலையை அடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    திரையுலக பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது. மறைந்த நடிகர் ரவிசந்திரனின் பூர்வீகம் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். ஆனால் அவரது குடும்பம் மலேசியாவில் வசித்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் ‘தமிழ் நேசன்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார்

    கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் மூலம் கதாநாயகனானார்.

  2. மேலும் சில விவரங்கள்
    _____________________________

    முதல் ஈஸ்ட்மேன் கலர்பட கதாநாயகன்:

    பழம்பெரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

    1960 மற்றும் 70களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட்டணிக்கு இணையாக வளர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர்.

    சுறுசுறுப்பான நடிப்பு, நடனம், சண்டை, கணீர் குரல், ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்தார்.

    ரவிச்சந்திரன். வெள்ளி விழா நாயகன், சின்ன எம்.ஜி.ஆர்., கலை நிலவு, கலையுலக இளவரசர், கலைஞர் திலகம், புரட்சி கலைஞர் போன்ற பட்டங்கள் பெற்றவர்.

    இவரது இயர்பெயர் ராமன். சொந்த ஊர் கரூர் அருகில் உள்ள வாங்கல்.

    சீனிவாசன்-லட்சுமி தம்பதிக்கு பிறந்த இவர் மலேசியாவில் குடியேறி வாழ்ந்தார்.

    1964-ல் காதலிக்க நேரமில்லை படத்தில் நடிக்க வாய்ப்பளித்த போது ஸ்ரீதர் இவருக்கு ராமன் என்ற பெயரை ரவிச்சந்திரன் என மாற்றினார். இரண்டு வருட ஒப்பந்தத்தில் மாதம் ரூ. 500 பிறகு ரூ. 750 என சம்பளம் வாங்கினார். அப்போது ஒரு பவுன் தங்கம் விலை 75 ரூபாய்தான். சில வருடங்களுக்கு பின் மாத சம்பளத்தை ரூ. 1000 ஆக உயர்த்தினார். இயக்குனர் ஸ்ரீதர் முன் நின்று பேச பெரிய நடிகர்களே தயங்கிய சமயத்தில் முதல் சந்திப்பிலேயே தைரியமாகவும் ஸ்டைலாகவும் பேசி கவர்ந்தார்.

    தமிழ் சினிமாவின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படமான காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகம் ஆனார். இவருடன் முத்துராமன், ராஜஸ்ரீ, சச்சு, பாலையா, நாகேஷ் போன்றோர் இணைந்து நடித்தனர். இப்படத்தில் வரும் விஸ்வநாதன் வேலை வேண்டும் பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. பிறகு கே.ஆர்.விஜயாவுடன் நடித்த இதயகமலம் படம் வெற்றி கண்டது. அதில் வரும் நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போபோ போ, உன்னை காணத கண்ணும் கண்ணல்ல பாடல்கள் ரசிகர்களின் நாடிநரம்புகளில் ஊடுருவியது.

    அதே கண்கள் திகில் படத்திலும் கலக்கினார். நான், குமரி பெண், பாக்தாத் பேரழகி, மோட்டார்சுந்தரம் பிள்ளை, மகராசி உள்பட 15 படங்களில் இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜோடியாக நடித்தார். இவர்கள் கூட்டணியில் இடம் பெற்ற படங்களின் பாடல்கள் பிரபலம். பாக்தாத் பேரழகி படத்தில் நிஜமான சிங்கத்துடன் நடிக்க வேண்டியதாயிற்று. ரவிச்சந்திரன் பயந்தார். அவருக்கு தைரியம் சொல்லி ஜெயலலிதா சிங்கத்தின் அருகில் சென்று பழகி காட்டினார்.

    அப்போது ஜெயலலிதாவின் தைரியத்தை கண்டு வியந்தார். திரையுலகில் கத்திச் சண்டை, குதிரை சவாரி போன்ற சாகசங்கள் தெரிந்தவர் விஜயபுரி வீரன் சி.எல்.ஆனந்தன். அவருடன் குதிரை சவாரி செய்து கல்யாண மண்டபம் என்ற படத்தில் நடித்தார்.

    திரையுலகில் பாட்டு பாடி, சண்டை போட்ட நாயகன் ரவிச்சந்திரன் எங்க பாப்பா படத்தில் நான் பாட்டால் அடிப்பேன் ஓடி என்று பாடிக்கொண்டே சவுக்கால் அடிப்பார். நான் படத்தில் காரிலும், குமரிப்பெண் படத்தில் சைக்கிளிலும், மதராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பஸ்சிலும், காதல் ஜோடி படத்தில் மாட்டு வண்டியிலும் பாடல்களை பாடி நடித்துள்ளார்.

    ஸ்ரீதர், டி.ஆர்.கோ பண்ணா, கே.ஆர்.பாலன், ஏ.வி.எம். போன்ற பிரபலங்கள் முதல் அண்ணா, கலைஞர் கருணாநிதி வரை எல்லா முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் படங்களை பண்ணிய பெருமை இவருக்கு உண்டு.

    ரவிச்சந்திரனின் அழகு, ஸ்டைல் அப்போதைய இளம்பெண்களை கவர்ந்தது. ரவிச்சந்திரன் வாழ்கையை சினிமா எடிட்டரும், எழுத்தாளருமான டி.எஸ்.ஆர்.சுபாஷ் டாகுமெண்டரி படமாக எடுக்கிறார். 5 மலையாள படங்களில் ரவிச்சந்திரன் நடித்தார். அப்போது உடன் நடித்த மலையாள நடிகை ஷீலாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களின் ஒரே மகன் விஷ்ணு. பிறகு விவாகரத்து செய்து ரவிச்சந்திரனும், ஷீலாவும் பிரிந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு ரவிச்சந்திரன் சுய நினைவின்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மகன் விஷ்ணு கேரளாவில் இருந்து வந்து பார்த்து விட்டு சென்றார்.

    ரவிச்சந்திரன் 2-வதாக விமலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு லாவண்யா என்ற மகளும், பாலாஜி, அம்சவர்த்தன் என்ற மகன்களும் உள்ளனர். அம்சவர்த்தன் சினிமாவில் நடிக்கிறார். ரவிச்சந்திரன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    நடிகர் சிவகுமார், நடிகர் சங்கம் சார்பில் மனோரமா, விஜயகுமார், வாகை சந்திரசேகர் மற்றும் டைரக்டர் டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன், ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எடிட்டர் சுபாஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.

    **** (நன்றி : மாலை மலர்) *****

  3. ரவிச்சந்திரன் உடல் தகனம்

    நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமான ரவிச்சந்திரனின் உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை பெஸன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் சில திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்துகொண்டனர். அவர் உடல், வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டபோது அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

    அவரது மகன் நடிகர் அம்சவிருத்தன் தொலைக்காட்சியில் பேசும்போது, “அப்பா இறந்து விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அவர் இப்போதும் எங்களுடன்தான் இருக்கிறார். எப்போதும் இருப்பார். எங்கள் இதயங்களிலும் ரசிகர்களின் இதயங்களிலும் அவர் என்றும் நிலைத்திருப்பார்” என்று கூறினார்.

    முன்னதாக நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், சந்திரசேகர், (சங்கர்) கணேஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ரவிச்சந்திரனின் முதல் திரைப்பட ஜோடியான திருமதி ராஜஸ்ரீ, ரவிச்சந்திரனின் உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

    ரவியுடன் பல வெற்றிப்படங்களில் நடித்தவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சார்பில் முன்னாள் துணை முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ரவிச்சந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தெய்வத்திருமகள்

By Eshwar Gopal

 

நடிப்பு: விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால், பேபி சாரா, நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்.

மனதில் ஆறுவயது நிறம்பிய, மனவளர்ச்சி குன்றிய ஒரு மனிதனின் மனைவி குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விட, அக்குழந்தையை வளர்க்க அவர் படும் கஷ்டங்களும், அதே நேரத்தில் அக்குழந்தையின் அன்பினால் நிறப்பப்பட்ட அவனது வாழ்க்கையில் நடக்கும் ஒரு திருப்பத்தை, அவன் கதாநாயகியுடைய உதவியினால் எப்படி அடைகிறான், என்பதையும் கூறும் காவியம்.

படம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. இப்படம் “I am sam” என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கம் என்றாலும், இயக்குனர் விஜயின் முயற்சி பாரட்டப்படவேண்டும். வித்தியாசமான படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருப்பது தமிழ் திரைக்கு நல்லது. விக்ரம் நடிப்பில் பின்னி பெடல் எடுத்துள்ளார். மனைவி இறந்த்து கூட தெரியாமல், குழந்தை போல் ஏற்றுக்கொள்ளும்போதும், குழந்தையின் பிரிவை தாங்கமுடியாமல் ஏங்குவதும், கடைசியில் நீதிமன்றத்தில் குழந்தையுடன் பேசும் சந்தேக மொழியிலும் நடிப்பில் தங்கத்தின் விலை போல் எகிறுகிறார்.

அனுஷ்காவை – “இப்படத்தில் உனக்கு வேலையே மற்றபடம் போல் இல்லை” என்று சொல்லி ஒப்பந்தப் படுத்தியிருப்பார் போல இயக்குனர். எதார்த்தமான நடிப்பில் மிளிர்கிறார். தமிழ் படத்துக்கே உரிய சாபக்கேடு போல், கதாநாயகனோடு ஒரு கற்பனைப்பாட்டை பாடி கதையின் ஓட்டத்தை தடுக்கிறார். அதெப்படி, யதார்த்தமாக நாயகன், அதுவும் மனநலம் குன்றியவர், பயத்தில் அவரை அணைத்துக்கொள்ளும்போது இவரக்கு பாடல் வருகிறது? இக்காட்சி வரும்போது இயக்குனர் பக்கத்து கடைக்கு டீ குடிக்க போய்விட்டார் போல.

அமலா பால் வந்து போகிறார். வெறும் காந்தக்கண்களை வைத்து ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார் போல அம்மனி. அந்த பாரதிராஜா காலம் மலையேறிவிட்டது என்பதை புரிந்து நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே. முதலில் குழந்தையை கொஞ்சி மனதில் இடம் பிடிப்பது, குழந்தை யார் என்று தெரிந்து தன் பண்பை மாற்றுவதும், மனிதனின் இயல்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவிற்கு பாடல்கள் இல்லையெனினும், பின்னனி இசையை பட ஓட்டத்தில் நன்றாக ஒட்டவைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். முதல் பாடல் பழைய பாடலின் பிரதி (என் நண்பன் கூறியது). நீரவ் ஷாவின் புகைப்படக்கருவி பாயை சுருட்டி விரிப்பதைப்போல் ஊட்டியின் புற அழகை பிடித்து நம் முன்னே கொட்டிவிடுகிறது.

சந்தானம் சிரிப்புக் காட்சிகள் அசிங்கம் இல்லாமல் இருக்கிறது. அதுவே பெரிய முன்னேற்றம்தான். சிரிப்புக் காட்சிகளுக்கு முதல் மூலதனம் ‘துல்லியமான, துரிதமான நேரம்’. இதை இன்னும் கொஞ்சம் கூட்டவேண்டும். காட்சிகளில் ஒரு 2/3 வினாடி தாமதமாக வருவதை தவிர்க்கவேண்டும். பழைய நாகேஷ் படத்தை பார்த்து ‘துரித நேரத்தை’ அவர் எப்படி அனாசயமாக கையாண்டார் என்று சந்தானம் கற்றுக்கொள்ளலாமே.

படத்தின் மிகப்பெரிய தொய்வு, இடைவேளிக்கு முன்பு ஜவ்வாக இழுக்கிறது. சில சமயத்தில் இது ஒரு ‘கலைப்படமோ’ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்த காக்காய் வடை காட்சி தேவையில்லாமல் இழுக்கப்பட்டதோடு இல்லாமல், அறுவையாகவும் உள்ளது. அதேபோல், விக்ரமை கடத்தி வருவது, அவர் போய் மருந்து வாங்கி வருவது, அதனால், நாசருக்கு ஒரு இரக்கம் வருவது, அனுஷ்காவின் கனவுப் பாட்டு – போன்ற காட்சிகளை ஜவ்வை நம் கையில் திணித்து நாள் முழுக்க இழுக்கவேண்டும் என்று இயக்குனர் தண்டனை கொடுப்பது கொடுமை. படம் 3 மணித்துளிகள் ஓடுவது சற்று சலிப்பை தருகிறது.

குழந்தை சாராவின் அற்புதமான நடிப்பு நம்மை ஈர்க்கிறது. சாதாரணமாக அப்பாவின் மேல் பெண் குழந்தைகளுக்கும், அம்மாவின் மேல் ஆண்குழந்தைகளுக்கும் நல்ல பாசம் இருக்கும், தன் அப்பா அசாதாரணமான செயல்பாட்டை உடையவர் என்று தெரிந்தும், அவர் மேல் ஒரு அபரிதமான அன்பை பொழிவதும், விளையாடிவிட்டு அப்பா தூங்கும்போது அவருக்கு முத்தம் கொடுப்பதும், நிலாவை பார்த்து அப்பாவிடம் பேசுவதும், அமலாவிடம் “நீ அப்பா கூட இருக்கலாம், நான் இருக்கக்கூடாதா”? என்று வினவும்போதும், நீதிமன்றத்தில் சைகையில் அப்பாவிடம் கோவித்துக்கொள்ளுவதும் – நடிக்கவைத்த இயக்குனரையும் சேர்த்து பாராட்டத்தோன்றுகிறது.

மனநிலை குன்றியவராக நடித்த விக்ரம் தமிழ் திரைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீளத்தை குறைத்து, படத்தின் கோர்வையை நீரோட்டம் போல் விருவிருப்பாக சொல்லியிருந்தால் இன்னும் ஜொலிப்பாக வந்திருக்கும்.

முன்பெல்லாம், தமிழ் திரையில் படத்தின் பெயர் வரும்படி ஒரு வசனத்துடன் படத்தை முடிப்பார்கள். இப்பொழுதெல்லாம் அதேபோல் இல்லை ஆதலின், அதன் தாக்கம் இருக்கும்படி கவனித்துக் கொள்கிறார்கள். நம் இயக்குனரும் அதற்கு சளைத்தவரல்ல, படத்தில் எல்லோரும் எதற்காக உழைக்கிறார்களோ அந்த எண்ணத்தையே தவிடு பொடியாக்கி, விழலுக்கு இறைத்த நீர் போல் ஒரு உச்சக்கட்டகாட்சியை திணித்ததன் மூலம் படத்தின் ஆதிக்கத்தை கெடுத்து சப்பென்று ஆக்கிவிட்டார். கடைசி காட்சி ‘கண்ணைவிற்று சித்திரம் வாங்கியது’ போல் உள்ளது. இவ்வளவு நேரம் குழந்தைத்தனமாக நடித்த கதாநாயகன், தெளிவாக ஒரு முடிவை எடுத்துவிட்டு விலகுவது சொல்லவந்த கருத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.

பாலசந்தருக்கு அவார்ட்

பிரபல இயக்குனர் பாலசந்தருக்கு மேலும் ஒரு feather in the cap. தாதா சாகேப் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது.

மனிதர் தளாராமல் சேவை புரிந்துள்ளார்.

எனக்கு பிடித்த பாலசந்தர் சினிமாக்கள் எல்லாம் 60,70களில் தான். 80ல் கொஞ்சம் தேறும். ஆனால் அதற்கு பிறகு ஒன்றும் சரியில்லை.

நடிகை சுஜாதா மறைவு


சுஜாதா எனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர். நடிக்கவும் தெரியும், பார்க்க லட்சணமாகவும் இருப்பார். 58 வயதில் அவர் மறைந்தது அதிர்ச்சியைத் தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் condolences .

காயத்ரி என்ற திரைப்படம்

(RVயின் பதிவு)

குமுதத்தில் “சுஜாதாவின் கதை” என்ற தொடரிலிருந்து:

“சுஜாதாவின் நாவல்களில் முதலில் படமாகியது காயத்ரி. பஞ்சுஅருணாசலம்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார்.

“தினமணி கதிரில் `காயத்ரி’ தொடராய் வரும்போதே அதை திரைப்படமா எடுக்கணும்னு நினைச்சேன். தொடர் முடிஞ்சதும் சுஜாதாவைபாம்குரோவ் ஓட்டல் ரூம்ல சந்திச்சேன். ரொம்ப எளிமையா பழகுனார். பெரிய எழுத்தாளர்களுக்கு இருக்கும் பந்தா எதுவும் இல்ல. எல்லாத்தையும் ரொம்ப ஆர்வமா கேட்டுட்டார். அப்போ அவருக்கு சினிமா ரொம்பப் புதுசு. அவரோட ஆர்வம் என்னை ரொம்ப கவர்ந்தது” என்று, தான் முதலில் சுஜாதாவைச் சந்தித்தது பற்றிச் சொல்கிறார் பஞ்சு அருணாசலம்.

“படம் வெளில வந்தபிறகு அந்தப் படத்தில் அவருக்கு அத்தனை திருப்தியில்லை. சினிமா திரைக்கதைக்காக சிலவற்றை மாற்றியிருந்தோம். அதைச் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டார். கதையாய் எழுதுவது வேறு. அதை சினிமாவுக்காக மாற்றுவது வேறு என்பதை உணர்ந்துகொண்டார்” என்கிறார் பஞ்சு அருணாசலம்.

சுஜாதாவும் `காயத்ரி’ கதைக்கு சினிமாவில் நடந்த சேதாரங்களைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அந்த முதல் பட அனுபவத்திலேயே சினிமாவின் சூட்சுமங்கள் அவருக்கு பிடிபட்டுவிட்டது.

“எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம் அது. ஒரு வகையில் `ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னை தயார்படுத்தியது” என்று சமீபத்தில் குமுதத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் சுஜாதா.

உத்தமபுத்திரன் – விகடன் விமர்சனம்

16-2-58 அன்று விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

முனுசாமி – மாணிக்கம்

மாணி: ஏண்ணே! நீ ‘உத்தமபுத்திரன்‘ பார்த்துட்டியா?

முனு: இல்லியே! நீ பார்த்துட்டியா? கதை என்ன?

மாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந்தையைக் கொல்ல ஏற்பாடு பண்றான். ராணிக்கு உடனே இரண்டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.

முனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது?

மாணி: வழக்கம் போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே! ரகசியமா தன் பெண்சாதிகிட்ட கொடுத்து வேற இடத்துக்கு அனுப்பிடறான். ராஜா வீட்டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக்கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.

முனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு!

மாணி: குடிசையில வளர்ற சிவாஜி கணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்… ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண்டில்லே? ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடறாங்க! ரெண்டு வேஷம் என்ன அண்ணே, 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு!

முனு: சரி; ஹீரோயின் எப்படி?

மாணி: பத்மினியாச்சே, கேக்கணுமா? மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது! ஆஹா! ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு!

முனு: நம்பியாருக்கு என்ன வேஷம்?

மாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம் போல அமர்க்களப்படுத்தியிருக்காரு.

முனு: நம்பியார் வராரு இல்லே! அப்ப, கத்திச்சண்டை இருக்குமே?

மாணி: அது மட்டும் இல்லே! இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது!

முனு: காட்சி ஜோடனை?

மாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம்! மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம்! உயரமான கோட்டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி! நம்பவே முடியலே அண்ணே!

முனு: குதிரை தாங்குதா இல்லையா? அப்புறம் நீ ஏன் கவலைப்படறே? சரி, படம் எப்படி?

மாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே!

Tribute to Malaysia Vasudevan by ItsDiff Radio

A Tribute to Malaysia Vasudevan  By It’s Diff Radio -LIVE

This Wednesday (Feb 23 1011) at 7:30 AM Pacific Standard Time and 9 PM Indian Standard Time

You can hear ItsDiff Radio from 6AM to 9 AM PST  (7:30 PM to 10:30 PM IST) every Wednesday

மலேசியா வாசுதேவன் மறைவு

ஈ.கோபால் அனுப்பியுள்ள செய்தி

 

பிரபல பின்னணிப்பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த்திரைப் பாடல்களைப் பாடியுள்ளார்.     ‘’பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா’’,   ‘’ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை’’ என்று ஏராளமாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

மேலும் இவர்  முதல் வசந்தம், ஊமை விழிகள், திருடா திருடா உட்பட ஏராளமான  திரைப்படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார்.

 

இவரது மகன் யுகேந்திரன்,  பின்னணிப்பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார்.  இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப்பாடகராக உள்ளார்.

சமீபகாலமாக  மலேசியாவாசுதேவன் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார்.    தன்னால் வளர்ந்தவர்களும்,  திரையுலக நண்பர்களும் தன்னை வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ஒரு  பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்

இரண்டு வாரமாக இந்த பாட்டுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கரம் மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

பாடும்போதே சுகமாக இருக்கிறது!

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என்ற வரிகளில் குறை காணலாம். அதுதான் முகத்தை மூடியாயிற்றே, அப்புறம் என்ன பயம்? ஆனாலும் பொன்வண்டொன்று என்று ஆரம்பிக்கும் படிமம் அழகாக இருக்கிறது!

காட்சி இன்று செயற்கையாக இருக்கிறது. அதுவும் ஜெய்ஷங்கர் காட்டும் ஸ்டைலும் எல். விஜயலக்ஷ்மியின் முக பாவமும் கொஞ்சம் outdated-தான். ஆனால் ஜெய் அணிந்திருக்கும் உடை இன்றைய ஃபாஷனுக்கு சரியாக இருக்கும்!

திரைப்படம் இரு வல்லவர்கள். பாடியவர்கள் டிஎம்எஸ், சுசீலா. எழுதியது யார்? இசை வேதாவா? 1966 -இல் வந்த திரைப்படம். ஜெய் ஹீரோ, மனோகர் ஆன்டி-ஹீரோ. இரு வல்லவர்கள் ஐந்து வருஷம் கழித்து ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது. ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில் வினோத் கன்னாவும் நடித்தார்கள். கிட்டத்தட்ட பத்து வருஷம் கழித்து அதை ரீமேக் புகழ் பாலாஜி சவால் என்று தமிழில் எடுத்தார். இரு வல்லவர்கள் படத்தில் ஹீரோவாக நடித்த ஜெய்தான் சவாலில் ஆன்டி-ஹீரோ ரோலில் நடித்தார். கமல் ஒரிஜினல் ஜெய் ரோலில்!

ரஹ்மானின் சினிமா வரவுக்கு முதல் காரணம் இளையராஜாதான்!

விமல் அனுப்பிய தகவல். அவரே எழுதியதா இல்லை எங்கிருந்தாவது கட் பேஸ்ட் செய்தாரா தெரியவில்லை. அவர் சுட்டி எதுவும் தரவில்லை; ஆனாலும் யாருக்காவது சுட்டியோ, இல்லை ஏதாவது பத்திரிகையில் வந்ததது என்பது தெரிந்தாலோ சொல்லுங்கள், குறைந்தபட்சம் ஒரு acknowledgment ஆவது பதித்துவிடுகிறேன். இது விகடனில் வந்த கட்டுரை என்று இலா தகவல் தருகிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி! ஓவர் டு விமல்!

1989 தீபாவளி சமயம். கவிதாலயா நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி.

கே.பாலசந்தர்

கே.பாலசந்தர்

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர வேண்டிய சூழலில் இருந்ததால் ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலசந்தர்
இளையராஜா

இளையராஜா

மிகுந்த பரபரப்பில் இருந்தார். பி்ன்னணி இசைக் கோர்ப்பு மட்டும் முடிந்தால், அடுத்து வெளியீட்டு வேலையில் இறங்கிவிடலாம் என்ற நினைப்பில் இசைஞானிக்காக கவிதாலயா காத்திருந்தது.

அதே நேரம் இசைஞானிக்காக பல திரைப்படங்களின் இசைக் கோர்ப்புகளும் காத்திருந்தன. அவரும் சும்மா இல்லை, கைவசம் 15 திரைப்படங்களை வைத்திருந்தார். ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்திற்கென்று கால்ஷீட்டை ஒதுக்கி நோட்ஸ் மட்டும் கொடுத்துவிட்டு, மறுநாள் வேறொரு திரைப்படத்திற்குச் சென்று சளைக்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.

புதுப்புது அர்த்தங்களில் இசைஞானியின் திரைப்பாடல்கள் அமர்க்களமாக வந்திருக்க, அதே போல் பின்னணி இசையிலும் அமர்க்களப்பட வைக்க வேண்டும் என்பதற்காக இசைஞானியை நேரடியாக இசைக்கோர்ப்புப் பணியில் ஈடுபட வைக்க கவிதாலயா முயற்சி செய்தது. இசைஞானி சிக்கவில்லை. கடும் போராட்டத்திற்குப் பின் அவரிடம் பேசியபோது மிகுந்த கோபப்பட்டுவிட்டாராம்.

ஒரு ஆடியோ கேஸட்டை கொடுத்து, ‘நீங்க கூப்புடுற நேரத்துக்கெல்லாம் என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, நான் ஏற்கெனவே போட்ட டிராக்ஸ் இதுல நிறைய இருக்கு. நீங்களே இருக்குறத பார்த்து போட்டுக்குங்க’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இசைஞானி.

இதனை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்ட கவிதாலயா, இனி எந்தத் திரைப்படத்திற்கும் இசைஞானியை அணுகுவதில்லை என்ற முடிவை அப்போதுதான் எடுத்தது.

கோபம்தான். சட்டென்று எழுந்த கோபம். படைப்பாளிகளுக்கு எப்போதுமே ஈகோவும், அதன் பக்கவாத நோயான முன்கோபமும்தான் முதலிடத்தில் இருக்கும். முதலில் வந்தது இசைஞானிக்கு. இது எங்கே போய் முடியும் என்று அப்போது அவருக்கும் தெரியாது. இரண்டாவதாக கோபப்பட்ட இயக்குநர் சிகரத்திற்கும் தெரியாது.

மறு ஆண்டு. மும்பை. தளபதி திரைப்படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணியில் ராப்பகலாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இசைஞானி. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் இசை, தியேட்டரிலேயே ரசிகர்களை எழுந்து ஆட வைக்கப் போகிறது என்பதை இயக்குநர் மணிரத்னமும், இசைஞானியும் அறிந்ததுதான். அதேபோல் மணிரத்னமும் தான் நினைத்தபடியே பி்ன்னணி இசையும் அதே வேகத்தில், அதே பாணியில் இருக்க வேண்டும் என்று சொல்லி இசைஞானியிடம் வற்புறுத்திக் கொண்டிருந்த நேரம்.

ஏதோ ஒரு மதிய நேரம் என்கிறார்கள். இருவருக்குள்ளும் ஒரு சிறிய வார்த்தை பிரயோகம் எழுந்து, அது மணிரத்னத்தை ஸ்டூடியோவைவிட்டு வெளியேறச் செய்திருக்கிறது. மறுநாள் விடியற்காலையிலேயே தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஷ்வரன் சென்னையிலிருந்து மும்பைக்கு ஓடோடிப் போய் இருவருக்குமிடையில் சமாதானம் செய்து பார்த்தும், அது முடியாமல் போனது. இங்கேயும் முதலில் கோபம் எழுந்தது இசைஞானியிடமிருந்துதான். நிமிட நேரம் கோபம்தான். தொடர்ந்து எழுந்தது மணிரத்னத்தின் கோபம்.

இந்த முக்கோண முறைப்பு, தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய இசைப் புயலை உருவாக்கப் போகிறது என்று மூவருமே அந்த நேரத்தில் நினைத்திருக்க மாட்டார்கள்! ஆனால் உருவாக்கப்பட்டது. அது காலத்தின் கட்டாயம்! இறைவனின் விருப்பமும் இதுவே.

இப்போது மணிரத்னத்திற்கும் இதே எண்ண அலைகள்தான். தன்னால் மறுபடியும் இசைஞானியை வைத்து வேலை வாங்க முடியாது. அல்லது அவரிடம் பணியாற்ற முடியாது என்பதுதான்.

இந்த நேரத்தில்தான் கே.பி. தனது கவிதாலயா நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும் போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ் மேனன், ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்னத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ் மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை. அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து, கவிதாலாயா நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம், இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று.

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப் ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில், சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் கவிதாலயாவின் தூணாக விளங்கிய திரு.அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க, சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் இப்போதும் சொல்கிறார்கள் படத்தின் பாடல்களை கேட்கின்றவரையில் யாருக்குமே நம்பிக்கையில்லை என்று!

தளபதி வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்னமும் உணர்ந்தார்கள்.

ரோஜா திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை சோழா ஹோட்டலில் நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான் கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கான முழுத் திறமையும் அவருக்குள் இருந்து, அதனை கொஞ்சமும் தயக்கமோ, சோம்பேறித்தனமோ இல்லாமல் சரியான சமயத்தில், கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர். மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர். இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது திறமைதான்.

ராஜீவ் மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்,

இதன் காரணமாக ரஹ்மான், மணிரத்னம் கண்ணில் படாமல் போய் அவர் தான் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த ஹிந்தி இசையமைப்பாளர்களையே அழைத்து வந்திருந்தால்,

இந்த ‘ரோஜா’ வாய்ப்பே ரஹ்மானிடம் சிக்காமல் போயிருந்திருக்கும்.

இதன் பின்னால் அவருக்கு யார் இப்படி ஒரு கோல்டன் சான்ஸை கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை. ஆனால் ரஹ்மான் சொல்வது போல் இது தெய்வீகச் செயல். கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, கிடைத்துவிட்டது.


வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா? சின்னச் சின்ன ஆசை உருவாகியிருக்குமா? அது இயக்குநரின் கற்பனையாச்சே! யோசித்தால் நடந்தும் இருக்கலாம், அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவிஎம் நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்?” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ் மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவிஎம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.

ரஹ்மானின் திரையுலக வாழ்க்கை நமக்குச் சொல்கின்ற பாடங்கள் நிறைய!

சிந்துபைரவி படத்தின் பாடல்களைப் போல் ஒரு இயக்குநருக்கு கதைக்கேற்ற சிறந்த பாடல்கள் வேறெங்கே கிடைத்திருக்கும்?

தளபதி படத்தின் இசையைப் போல் ஒரு சூப்பர்ஹிட் கமர்ஷியல் படத்தின் தாக்கத்தை யாராவது உருவாக்க முடியும்?

ஆனால் இந்த இரண்டுமே ஒரு நொடியில் உடைந்து போனதே? அதன் பின் இன்றுவரையிலும் அது போன்ற இசை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைக்கவில்லையே? நாம் நிச்சயம் இழந்திருக்கிறோம்!

ஆனால், ‘எல்லா சோகத்திலும் ஒரு வழி பிறக்கும்’ என்பார்கள். ‘எப்பேர்ப்பட்ட துக்கத்திலும் ஒரு செய்தி கிடைக்கும்’ என்பார்கள். இது இங்கே தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு இசைஞானியால் கிடைத்தது.

இளையராஜா என்ற மனிதரின் ஒரு நிமிட கோபத்தின் விளைவு, இப்போது ஆசியக் கண்டத்துக்கே பெருமை…

இந்தியாவுக்கே சிறப்பு…

தமிழ்த் திரைப்பட உலகத்திற்கே ஒரு மகுடம்…

எல்லாவற்றிலும் ஒரு காரண, காரியம் உண்டு. நம்புங்கள்! எல்லாம் இறைவன் செயலே!

Follow

Get every new post delivered to your Inbox.

Join 45 other followers