இந்திய விடுதலையின் வெள்ளி விழா சமயத்தில் – ஆகஸ்ட் 1972இல் – விகடனில் வந்த கட்டுரை. பல நாடக நடிகர்கள் சுதந்திரப் போராட்ட காலத்து நினைவுகளை, போராட்டத்தில் அவர்கள் பங்கை நினைவு கூர்கிறார்கள். விகடனுக்கு நன்றி!

பொழுதுபோக்குக்காகத்தான் கலை என்ற சிந்தனையை மாற்றி, தங்களுடைய வீரமிகு பேச்சாலும், உணர்ச்சிமிகு நடிப்பாலும் தேசியப் பணியாற்றியுள்ளார்கள் எண்ணற்ற கலைஞர்கள். அவர்களில் சிலர் தங்கள் நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

கே.சாரங்கபாணி:
சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, நான் திரு.ஜகன்னாதையர் கம்பெனியான மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சித சங்கீத சபாவில்தான் நடிகனாக இருந்தேன்.

காலைப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், கருத்துகளையும் அன்றைய நாடகத்திலேயே சிலேடையாகப் புகுத்திப் பிரசாரம் செய்வோம். பதிபக்தி, பஞ்சாப் மெயில், தேசியக் கொடி, கதரின் வெற்றி என்று பல நாடகங்களைப் போட்டிருக்கிறோம்.

கதரின் வெற்றி நாடகம், இங்கிலாந்தில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் முன்னால் எங்கள் குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டு, மெடல், சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்தது. ஆனால், அதே நாடகம் இந்தியாவில் நடத்தக்கூடாது என்று தடை செய்யப்பட்டது.

நாடகத்திலே தேசியக் கொடியைக் காட்டக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்கள். எப்படியாவது காட்டிவிடவேண்டும் என்று எங்களுக்குள் ஒரு தீர்மானம். போலீஸ் கெடுபிடி வேறு. கடைசியில் ஒரு தந்திரம் செய்தோம். மூன்று பையன்களுக்கு தேசியக் கொடியின் மூன்று கலர்களிலும் உடை அணிவித்து, கொடியைப் போல் மேடையில் நிற்க வைத்தோம். அதைப் புரிந்துகொண்டுவிட்ட மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

கே.பி.சுந்தராம்பாள்:
அப்போதெல்லாம் சத்தியமூர்த்தி மேடைகளில் முழங்குவார். நான் தேசியப் பாடல்களைப் பாடுவேன். ஊருக்கு ஊர், கிராமத்துக்குக் கிராமம் என்று நாங்கள் இருவரும் போகாத இடமேயில்லை. ‘பாட்டாலேயே சுந்தராம்பாள் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டிடுவார்’ என்று நண்பர்கள் சொல்லுமளவுக்கு என் பாட்டில் உணர்ச்சி கொப்பளிக்கும்.

எனக்கு எங்கே போனாலும் தடை. பின்னாலேயே சி.ஐ.டி-க்கள்! என் பாட்டைக் கேட்டுப் பல ஆங்கிலேயர்கள் கூடக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள்.

நாகையா:
நான் சித்தூரில் ரெவின்யூ துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். வருஷம் 1922.

கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் நடந்துகொண்டு இருந்தபோது, ஒரு நாள் சத்தியமூர்த்தி சித்தூருக்கு வந்து, நானும் போராடவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். அப்போது என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும் சுதந்திர உணர்ச்சி காரணமாக நான் கிளம்பிவிட்டேன்.

சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக் கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக்கடையின் முன்னால் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். அப்போது கள்ளுக்கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் நான் விடமல், அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன்.

அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது, என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்!

டி.கே.சண்முகம்:
அரசியல் விஷயங்களில் எங்கள் நாடகக் குழு தொடர்பு கொள்ள ஆரம்பித்தது 1931-ம் ஆண்டில்தான். பண்டித மோதிலால் நேரு இறந்தபோது கும்பகோணம் காந்தி பார்க்கில் அவருக்காக ஓர் அனுதாபக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் நான் முதல் முதலாகப் பாட்டுக்கள் பாடினேன்.

அப்போது கிளம்பிய தேசிய உணர்ச்சியில், வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ என்ற நாடகத்தை நடத்த எண்ணினோம். ஆனால் அது சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நாட கத்தை ‘தேசபக்தி’ என்று மாற்றி நடத்தினோம். அந்த நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எஸ்.வி.சகஸ்ரநாமம்:
அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந் தேன். அவர் நடத்திய ‘தேச பக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத் சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள்.

முதல் முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.

படம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மாணி: வெற்றிவேல்! வீரவேல்!

முனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா?

மாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…

முனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணி:- ஏன் அண்ணே..?

முனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி! சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு?

மாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே! இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே!

கவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.

முனு: காதலர்கள் யார் யார்?

மாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே! வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.

முனு: வெள்ளையம்மா யாரு?

மாணி: பத்மினிதான்! ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே!

முனு: கலர் எப்படி?

மாணி: கண் குளிர்ந்தது அண்ணே! வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.

முனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…

மாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…

முனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..?

மாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான்! டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.

முனு: மொத்தத்திலே…

மாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே!

தொடர்புடைய பதிவுகள்
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

படம் வந்தபோது – மே 1966இல – விகடனில் வந்த விமர்சனம். விகடனுக்கு நன்றி!
.
முனுசாமி – மாணிக்கம்

முனுசாமி: தாழ்ந்த சாதியிலே பிறந்த தியாகுவை, உயர்ந்த சாதியிலே பிறந்த மீனாங்கற பெண் காதலிக்குது. சாதி வெறி பிடிச்ச மீனாவின் தந்தை தர்மலிங்கம் இதைத் தடுக்கிறாரு. அதனாலே மீனா உயிரை விட்டுடுது.

மாணிக்கம்: அடப் பாவமே! ஆமா, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு வருதே! எந்தக் காலத்துக் கதை இது?

முனு: கிராஸ் பண்ணாதே! கதையைக் கேளு. மீனாவுக்கு ராதான்னு ஒரு தங்கை. மீனாவின் காதலன் தியாகுவை, தானே மணந்து சாதி வெறியைத் தரை மட்டமாக்கப் போறேன்னு அது அப்பங்காரனைப் பார்த்துச் சவால் விடுது.

மாணி: இது என்ன சவால்? இந்தப் பொண்ணு அவனை மணந்துக்கிட்டா, சாதி வெறி தரை மட்டமாயிடுமா?

முனு: பார்த்தியா! பணம் குடுத்துப் படம் பார்த்த நானே இதெல்லாம் கேட்கமுடியலே! நீ என்னமோ…

மாணி: சரி, அப்புறம்?

முனு: ஒரு வில்லன்.

மாணி: நம்பியார்தானே?

முனு: ஆமாம். அவரும் ஒரு தாழ்ந்த சாதிக்காரரு. தர்மலிங்கத்தாலே ஜெயிலுக்குப் போறாரு. அதனால தர்மலிங்கத்தின் பேரிலே அவருக்கு படா கோவம். தியாகுவா வர எம்.ஜி.ஆரும், ஜம்புவா வர நம்பியாரும் ஒரே ஜெயில்லே சந்திக்கிறாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் பொது எதிரி தர்மலிங்கம். ஜம்பு விடுதலை ஆகி வெளியே போனதும், முதல் காரியமா தர்மலிங்கத்தைப் பழி வாங்கறதுக்காக அவர் பெண் ராதாவைக் கடத்திக்கிட்டுப் போய் குகையிலே வெச்சு, கண்ணைக் குருடாக்கிடறாரு. குருடுன்னா எப்போதும் குருடு இல்லே! வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை ஒரு மருந்து போட்டு அந்தப் பெண்ணைக் குருடாக்கிடுவாரு. அதாவது வாரக் குருடு! அந்தக் குகைக்கு எம்.ஜி.ஆர் வந்து சேர்ராரு. அங்கே ராதாவைச் சந்திக்கிறாரு, அவளை வில்லனுக்குத் தெரியாம கடத்த முயற்சிக்கிறாரு. அது தெரிஞ்சதும் எம்.ஜி.ஆர். கண்ணுக்கும் மருந்து போட்டு குருடாக்கிடறாரு வில்லன்.

மாணி: முடிவா என்னதான் சொல்றே?

முனு: ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.

நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

முனுசாமி – மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

விகடனில் 29-12-1968 அன்று வெளியான பேட்டி. கே.வி. மகாதேவன் கந்தன் கருணை படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளராக இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்டது. விகடனுக்கு நன்றி!

கோல்டன் ஸ்டுடியோ தியேட்டரில் பாட்டு ஒன்று ஒலிப்பதிவாகிக் கொண்டிருக்கிறது. பி.சுசீலா தனது கவர்ச்சிக் குரலில் சுந்தரத் தெலுங்கிலே பாடிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் நின்று கொண்டு, ஏதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

நம்மைக் கவனித்த கே.வி.எம். “ஒரு நிமிஷம்!” என்று சொல்லிவிட்டு, தன் உதவியாளர் புகழேந்தியிடம் போய்ப் பேசுகிறார். தியேட்டரை அடுத்து இருக்கும் ஒலிப்பதிவாளர் அறைக்கு வருகிறோம். அங்கு வந்த கே.வி.எம். நம்மை உட்காரச் சொல்லிவிட்டுத் தானும் உட்காருகிறார்.

“ஒரு தெலுங்குப் பாட்டு ரிக்கார்டிங் நடக்குது! அதுக்குத்தான் ஒத்திகை பார்க்கிறோம்! பாட்டும் டியூனும் எப்படி?”

“பாட்டைப் பத்தி எனக்குத் தெரியாது. டியூன் நல்லா இருக்கு. ஏன் சார், இந்தச் சினிமா சங்கீதத்தை டப்பா சங்கீதம்னு சில பேர் சொல் றாங்களே?” – கேள்வியை முடிக்கும்முன், “யார் சொன்னது? இப்போ, கர்னாடக சங்கீதத்தையும், மேல்நாட்டுச் சங்கீதத்தையும் கலந்து போடறோம்; சில நாட்டுப் பாடல் மெட்டுகளையும் கலந்து போடறோம். இது டப்பா சங்கீதமா? வேணுமானால் எல்லாம் கலந்த பஞ்சாமிர்தம்னு சொல்லலாம்!”

“எனக்கு ஐம்பது வயசாகிறது! ஏதோ, நானும் கஷ்டப்பட்டு உழைச்சிட்டுதான் இருக்கேன்! இப்போதுதான், இந்த வருஷம்தான் என் உழைப்பின் வெற்றி ஜனாதிபதி பரிசா கிடைச்சுது. அதற்கு, என் உதவியாளர்கள், என் இசைக் குழுவினர், பின்னணிப் பாடகர்கள், என் ரசிகர்கள் எல்லாரும்தான் முக்கிய காரணம்!”

“பரிசை நீங்க எதிர்பார்க்கவே இல்லையா?”

“இல்லை! முதல்லே ஏ.எல்.எஸ்சுக்கு நியூஸ் வந்தது. ‘நம்ப கந்தன் கருணையிலே மியூஸிக்குக்காக டெல்லியிலே உங்களுக்குப் பரிசு தராங்க’ன்னாரு. கனவா நினைவான்னு என்னையே நான் ஒரு தடவை கிள்ளிக்கிட்டேன். அப்புறம் ரேடியோ நியூஸைக் கேட்டு வீட்டிலேயும் சொன்னாங்க. அந்தப் பரிசை எனக்கு ஜனாதிபதி கொடுத்ததா நினைக்கலே; ஆண்டவன் கொடுத்ததாவே நினைக்கிறேன்!” என்று சொல்லி, கைகளை உயர்த்திக் கூரையைக் காட்டுகிறார்.

“நீங்கள் சங்கீதத்தை நம்பித்தான் சென்னைக்கு வந்தீங்களா?”

“முதல்லே அப்படித்தான் வந்தேன். அப்புறம்…” சிறிது நேர அமைதிக்குப் பின் தொடருகிறார்.

“நான் மெட்ராஸ்லே பல ஓட்டல்களில் சர்வரா கூட வேலை செய்திருக்கேன். அந்த நாள்லே ஹார்பருக்குப் பக்கத்திலிருந்து அரை நிஜார், பனியனோடு சைக்கிள்லே தினமும் சூளைக்குப் போவேன். லாரி சம்பந்தமா ஏதோ சீட்டு கொடுப்பாங்க; அதைக் கொண்டு போய்க் கொடுக்கணும்! மெஸஞ்சர் மாதிரி வேலை செய்தேன். அந்த நாளிலே கிராமபோன் ரிக்கார்டு எடுக்க டைமிங் வாத்தியம் கூட வாசிச்சிருக்கேன். அதுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு பக்கத்துக்கு எனக்குப் பத்தணாவோ பன்னிரண்டணாவோ தருவாங்க! இதையெல்லாம் சொல்ல நான் வெட்கப்படவே மாட்டேன். திருடாம, பொய் சொல்லாம, பிச்சை எடுக்காம எந்தத் தொழில் செய்து பணம் சம்பாதிச்சாலும், அதிலே தப்பு இல்லை.” இதைச் சொல்லும்போது, அவர் கண்களின் ஓரத்தில் நீர் தளும்புகிறது.

“கஷ்டப்பட்டா என்னிக்கும் பலன் உண்டு! கொலம்பியா, எச்.எம்.வி. ரிக்கார்டிங் கம்பெனிகளிலே வாசிச்சிருக்கேன். வேல் பிக்சர்ஸ்லே துணை நடிகனா மாசம் 15 ரூபாய் சம்பளத்துக்கு நடிச்சிருக்கேன். நாடகங்களிலே ஸ்த்ரீபார்ட் போட்டிருக்கேன்! கதா காலட்சேபத்துக்குப் பின்பாட்டுப் பாடியிருக்கேன். என் வாழ்க்கையின் முன் பகுதியில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். இப்போ அப்படி இல்லை!”

ஒலிப்பதிவு முடிந்து, எல்லோரும் சாப்பாட்டுக்குக் கலைந்து செல்கிறார்கள். “ஃபிரண்ட்ஸ்! எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்துடுங்க! மத்தியானம் இன்னொரு ஸாங் இருக்கு” என்று குரல் கொடுக்கிறார் ஒருவர். சில விநாடிகளில், இசைப் புயல் வீசிக் கொண்டிருந்த தியேட்டரில் அமைதி நிலவுகிறது.

கே.வி.எம். நம்மோடு பேசிக் கொண்டு இருக்கும்போது, அந்த வழியே வந்த படத் தயாரிப்பாளர் ஒருவர், “என்ன மாப்பிள்ளை, சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே போகிறார். கே.வி.எம்.முக்கு அவர் நண்பர்கள் இட்ட செல்லப் பெயர் ‘மாப்பிள்ளை’.

“மாப்பிள்ளைக்கு எத்தனை குழந்தைகள்?” என்று நாமும் கேட்கிறோம்.

“ஐந்து குழந்தைகள்! ரெண்டு பையன், மூணு பெண்கள்! பெரியவங்க காலேஜிலேயும், சின்னவங்க கான்வென்டிலேயும் படிக்கிறாங்க. மூத்த பையனுக்குக் கல்யாணப் பேச்சு நடக்குது!” என்று பெருமையாகச் சொல்கிறார்.

“உங்க இசையமைப்பில் யார் யார் பாடியிருக்காங்க?”

பாகவதர், சின்னப்பா, பெரிய நாயகி, மகாலிங்கம் முதல் இப்போ முன்னணியிலே இருக்கிற பின்னணிப் பாடகர்கள் வரை எல்லோரும் பாடியிருக்காங்க! நான் எலந்தப்பயத்திலிருந்து நலந்தானா வரைக்கும் போட்டிருக்கேன். மக்கள் எதை விரும்பறாங்களோ, அதைக் கொடுப்பதுதான் கலைஞனுக்கு அழகு, இல்லையா? பொங்கலுக்கு அடிமைப் பெண் வந்தா, தமிழிலே சுமார் 150 படங்களாகிறது! தெலுங்கிலே இதுவரைக்கும் சுமார் 50 படங்கள் இருக்கும்!” என்கிறார் அடக்கமாக.

கே.வி.எம். அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டை போலவே அவரது உள்ளமும் வெள்ளையாகத்தான் இருக்கிறது.

அடிமைப் பெண்

அடிமைப் பெண்

அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

டி.கே. பட்டம்மாள்

டி.கே. பட்டம்மாள்

ஏப்ரல் 1, 1936-இல் டி.கே.பட்டம்மாளை பற்றி கல்கி எழுதி இருப்பது. கல்கி கர்நாடகம் என்ற புனைபெயரில் கச்சேரிகளை பற்றி எழுதிய விமர்சனங்கள் அந்த காலத்தில் மிக பிரபலம். அப்படி எழுதப்பட்ட ஒரு விமர்சனம் இது. விகடனுக்கு நன்றி!

சங்கீத வானில் ஒரு புது நட்சத்திரம்!

இந்த 1936-ம் வருஷத்தில் சங்கீத வானத்தில் ஒளி வீசும் புதிய நட்சத்திரம் ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள். சென்னையில் இவ்வருஷம் அடிக்கடி ஏதேனும் ஒரு சபையில் இவருடைய கச்சேரி நடந்து கொண்டிருந்தது. சமீபத்தில் மயிலாப்பூர் சங்கீத சபையிலும், கோகலே ஹாலிலும் இவர் செய்த கச்சேரிகள், இவ்வருஷ ஆரம்பத்தில் நமக்கு இவரைப் பற்றி ஏற்பட்ட நம்பிக்கையை மெய்ப்படுத்தின.

உயர்தர சங்கீதத்தில் செவிக்கு இன்பமும், மூளைக்கு உற்சாகமும் இருதயத்துக்கு உணர்ச்சியும் அளிக்கும் அம்சங்கள் இருக்க வேண்டுமென்று பார்த்தோம். இந்த மூன்று முக்கிய அம்சங்களுக்கும் அஸ்திவாரம், ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் அமைந்திருக்கிறது.

சாரீரம்:- இவருடைய சாரீரத்தில் இனிமையும் கம்பீரமும் கலந்திருப்பதைக் காண்கிறோம். ஸ்திரீகளுக்குள் இத்தகைய சாரீரம் அமைவது மிகவும் துர்லபம்.

அபிப்பிராய பேதத்துக்கு இடமின்றி எல்லாரும் ஒப்புக் கொள்ளக்கூடிய சாரீரம் ஸ்ரீமதி பட்டம்மாளுடையது. கீச்சுக் குரல் இல்லாமல் சுகபாவம் உள்ளது. துரித காலத்தில் பிர்காக்கள் போடுவதற்கும், சவுக்க காலத்தில் நின்று பாடுவதற்கும் ஏற்றதாய் அமைந்தது. பெரிய சபைகளில் கடைசி வரையில் கேட்கும்படியான கம்பீரமும் பொருந்தியது.

வித்தை:- சுருதி, லயம் இரண்டிலும் அணுவளவு குறை சொல்வதற்கும் இடமில்லாமலிருப்பது மட்டுல்ல; ஸ்வரங்களைக் கையாளுவதிலும், தாள வித்தையிலும் இவரிடம் சில அபூர்வ வேலைப்பாடுகளைக் காண்கிறோம்.

நாலு களைச் சவுக்கப் பல்லவி மூன்றாவது அட்சரத்தில் எடுத்து, அதை மூன்று காலங்களிலும் பாடுகிறார். சதுச்ர நடையிலிருந்து திச்ர நடைக்கும், திச்ர நடையிலி ருந்து சதுச்ர நடைக்கும் மாறு கிறார். இது மிகவும் அபூர்வமான திறமை!

ஸ்ரீமதி பட்டம்மாளின் மற்றொரு விசேஷ திறமையையும் காண்கிறோம். உயர்தர வித்வான்களை அப்படியே பின்பற்றிப் பாடும் சக்தி அவரிடம் இருக்கிறது. ஸ்ரீமான்கள் நாயனாப் பிள்ளை, அரியக்குடி இராமானுஜ அய்யங்கார், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச அய்யர் இவர்களிடம் நாம் ரொம்பவும் அநுபவித்திருக்கும் பாட்டுக்கள் சிலவற்றை இவர் போட்டோ பிடித்தது போல் பாடுகிறார். சுய ஞானம் இல்லாமல் வெறும் ‘இமிடேஷன்’ செய்வதாக மட்டுமிருந்தால், நமக்குச் சிரிப்புத்தான் உண்டாகும். அப்படியின்றி இவர் அந்தச் சரக்குகளையெல்லாம் தம்முடையதாகவே ஆக்கிக்கொண்டு அநுபவத்துடன் பாடுகிறபடியால், நமக்கு வியப்பும் உவகையும் உண்டாகின்றன.

ஹிருதய பாவம்:- பிரசித்த வித்வான்களில் கூட இரண்டொருவரிடந்தான் நாம் கண்டிருக்கும் இந்த அம்சத்தை இந்த யுவதியிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த அம்சமும் வருங்காலத்தில் இவருடைய பாட்டில் நன்கு பிரகாசிக்கும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஸாஹித்யத்தில் கவனம் செலுத்தி அக்ஷரங்களைச் சுத்தமாக உச்சரித்துப் பாடுகிறார். அவற்றின் பொருளையும் உணர்ந்து, சொற்களை இசையுடன் கலந்து பாடத் தொடங்கும்போது, உயர்தர சங்கீதத்தில் நாம் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இவருடைய பாட்டில் பொருந்தி விளங்குவதைக் காண்போம்.

இளம் வயதிலேயே சங்கீத வித்தையில் பிரசித்தியடைபவர்களின் அபிவிருத்திக்கு ஒரு பெரிய தடை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அடிக்கடி கச்சேரிகள் கிடைக்கின்றன; பக்கத்திலுள்ளவர்கள் அசாத்தியமாய்ப் புகழ்கிறார்கள். ஆகவே, மற்ற சிறந்த வித்வான்களின் பாட்டுக்களைக் கேட்பதற்குச் சந்தர்ப்பமும், ஊக்கமும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றன. ஆகவே, ஓரிடத்திற்கு வந்ததும் அதற்கு மேல் அபிவிருத்தியடையாமலே நின்றுவிடுகிறார்கள். ஸ்ரீமதி பட்டம்மாள் விஷயத்தில் அப்படி ஏற்படக்கூடாதென்பது நம்முடைய கோரிக்கை. இது வரையில் அத்தகைய தடை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சென்ற ஒரு வருஷ காலத்தில் இவருடைய கச்சேரிகளில் சிறந்த அபிவிருத்தியைக் காண்கிறோம். ‘முன்னு ராவணா’, ‘சிவே பாஹிமாம்’, ‘மானஸ குரு குஹ’, ‘அக்ஷயலிங்க விபோ’ முதலிய கீர்த்தனங்கள் வர வர மெருகு பெற்று வருகின்றன. கல்யாணி, தோடி, கரகரப்ரியா, ஜகன் மோஹினி, மலய மருதம் முதலிய ராகங்களின் ஆலாபனமும் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. புதிய கீர்த்தனங்களும் கற்றுப் பாடி வருகிறார். இப்படியே அபிவிருத்தியடைந்து வந்தால், சங்கீத உலகத்தில் ஸ்ரீமதி பட்டம்மாள் தனிச் சிறப்பு வாய்ந்த பதவியை அடைவார் என்பதில் சந்தேகமில்லை.

- கர்நாடகம்

தொடர்புடைய பதிவுகள்
டி.கே. பட்டம்மாள்
பட்டம்மாள் பற்றி ஜடாயு

படம் வெளியானபோது – 26/4/59-இல் வந்த விகடன் விமர்சனம். நன்றி, விகடன்!

என் விமர்சனம் இங்கே. ஸ்ரீதர் பக்கம் இங்கே.

சேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா? அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு!

சந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக் கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா! உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.

சந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா? ஆங்கிலமா?

சேகர்: அசல் தமிழ்ப் படமே தான். ‘கல்யாண பரிசு’ பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க!

சந்தர்: நல்ல கதையா? சொல்லப்பா சுருக்கமாக!

சேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண்ணீரே பெருகுகிறது.

சந்தர்: இடையிலே காமிக் வருகிறதா, இல்லையா?

சேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.

சந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்?

சேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா?

சந்தர்: சரி, வில்லன் யாரு?

சேகர்: இது வழக்கமான திரைக்கதை இல்லையே? ஆகவே வில்லனே கிடையாது. கதையிலே வர அவ்வளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.

சந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே?

சேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே! கௌரவமான பாத்திரமாகவே நடிக்கிறார்.

சந்தர்: நாகேசுவர ராவ்?

சேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.

சந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி?

சேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம்! மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப்புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு!

தொடர்புடைய பதிவுகள்
கல்யாணப் பரிசு – என் விமர்சனம்
ஸ்ரீதர் பக்கம்

மேஜர் சந்திரகாந்தாக மேஜர்

மேஜர் சந்திரகாந்தாக மேஜர்

விகடனுக்கு மேஜர் அளித்த பேட்டி. நன்றி விகடன்!

அப்பா வேடத்தில் நடிப்பது பற்றி நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. கதாநாயகனாக நடிப்பதில் கிடைக்கும் புகழும் பெருமையும் அப்பா வேடத்திற்குக் கிடைக்காது என்ற அச்சம் எனக்கு இருந்தது. சர்வர் சுந்தரம் படத்தில் அப்பா வேடத்தில் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்தது. முன்னுக்கு வரத் துடித்த எனக்கு அப்பா வேடத்தை ஏற்கலாமா, வேண்டாமா என்ற நினைப்பு. அப்போது, டைரக்டர் கே.சி.கே., “அப்பா வேடம் ஏற்பதில் தயக்கம் காட்டாதே! இப்போதுள்ள நிலையில் இந்த வேடத்திற்குதான் அதிகம் போட்டியில்லை. கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றால், நிறைய போட்டிகள் இருக்கிறது. அப்பா வேடத்திற்கு என்ன குறைச்சல்? உன் உடலமைப்புக்குப் பணக்கார அப்பா வேடம்தான் கிடைக்கும். அழகான டிரஸ் இருக்கும். ஏதாவது ஒரு காட்சியில் அழ வேண்டியிருக்கும். குறைந்த கால்ஷீட்தான். சண்டைக் காட்சிகள் இருக்காது. தயங்காமல் ஒப்புக் கொள்” என்றார்.

அன்று ஆரம்பித்த அப்பா வேடம்தான். கதாநாயகனாக நடிக்க வந்த எனக்கு அப்பா வேடம் கிடைத்ததும் ஒருவகை அனுபவம்தான்.

நான் நடித்த முதல் படம் பட்டினத்தார், அதில் எனக்கு ராஜா வேடம். படப்பிடிப்பின் போது ராஜாக்கள் போடும் செருப்பு இல்லாததால், எங்கெங்கோ தேடி செருப்பைக் கொண்டு வந்தார்கள். அது என் காலுக்குப் பெரிதாக இருந்தது. காலுக்குத் தகுந்தபடி செருப்பை வெட்டி, என்னை நடிக்கச் செய்தார்கள்.

என் முதல் படத்திலேயே ஒரு அனுபவத்தைத் தெரிந்து கொண்டேன். காட்சியில் எந்த ஒரு குறை வந்தாலும், ஆரம்ப நிலையிலுள்ள நடிகனைத்தான் வந்து சேரும் என்பதுதான் அது.

நாடகத்தில் எவ்வளவுதான் சிறந்த முறையில் முக பாவம் காட்டினாலும், சினிமாவில் பாராட்டுப் பெறுவது போல் நாடகத்தில் பெற முடியாது என்பதை நாணல் படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். திரைப்படத்தில் ஒரு சிறிய கண்ணசைவைக் கூட குளோஸ் அப் மூலம் காட்டிப் பாராட்டுதலைப் பெற முடியும்.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் நடிப்பதற்காக வாசன் என்னை அழைத்திருந்தார். வேடத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். “என் பாத்திரம் மிகச் சிறியதாக இருக்கிறது. பல படங்களில் பெரிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன்.

அதற்கு வாசன், “மீதிப் படங்களைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் நடிக்க உன்னை நான் அழைக்கவில்லை. வாழ்க்கைப் படகு படத் தில் வக்கீல் வேடத்தில் நடித்தபோது உன் நடிப்பை எடை போட்டுவிட்டேன். இந்தப் படத்தில் நீ நடிப்பது சிறிய பாத்திரமானாலும் சிவாஜியுடன் நடிக்கப் போகிறாய். உனக்கு அது மேலும் பெயரைக் கொடுக்கும். பேசாமல் நடி!” என்றார். படம் முடிந்து திரையிடப்பட்டதும், ‘சிவாஜியுடன் சிறப்பாக நடித்த நடிகர் யார்?’ என்ற கேள்வி படம் பார்த்தவர்களின் மனதில் எழுந்தது. அப்பொழுது வாசன் சொன்ன வார்த்தைகள்தான் எனக்கு மீண்டும் நினைவுக்கு வந்தன. என்னால் மறக்கமுடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.

நான் கதாநாயகனாக நடித்த படம் மேஜர் சந்திரகாந்த். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் என்னை “இன்னும் ஒரு படத்தில்கூட கதாநாயகனாக ஏன் நடிக்கவில்லை?” என்று கேட்கிறார்கள். தமிழ்த்திரை உலகத்தில் யார் கதாநாயகியுடன் டூயட் பாடி, கடைசியில் மணந்து கொள்கிறானோ, அவனே கதாநாயகன் என்று ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

தெய்வ மகன் படத்தின் மூலம் நான் சிறந்த நடிகன் என்ற தமிழக அரசின் பரிசைப் பெற்றேன். அந்தப் படத்தில்தான் சிவாஜியோடு போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக நடித்தேன் என்ற ஏகோபித்த பாராட்டுதல் கிடைத்தது. என்னை ஊக்குவித்த அப்படத்தின் டைரக்டர் திரிலோகசந்தரை என்னால் மறக்க முடியாது.

நான்கு படங்களில் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன் படத்தின் மூலம்தான் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் ‘சுந்தர்ராஜனும் நடிக்கிறார்’ என்ற பாராட்டைப் பெற்றேன். இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாதவற்றில் ஒன்று.

மேஜர் திறமை வாய்ந்த நடிகர்தான். அதுவும் ஒரு கண்டிப்பான மூத்தவர் ரோல் அவருக்காகவே படைக்கப்பட்டது. அவரது ஆஜானுபாகுவான தோற்றம், குரல் அவருக்கு ப்ளஸ் பாயிண்ட்கள். ஆனால் மேஜர் சந்திரகாந்தில் முறுக்கிய உடலை, முறைத்த கண்ணை, அவர் கடைசி வரைக்கும் இளக்கவே இல்லை. அந்த டெம்ப்ளேட்டையே பல படங்களில் – நீர்க்குமிழி, மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர் நீச்சல், நவக்ரஹம், தெய்வ மகன், ஞான ஒளி – அவர் திருப்பி திருப்பி பயன்படுத்தினார். அவரது இயக்குனர்களும் பெரும்பாலும் அதைத்தான் கேட்டார்கள், அதனால் அவர் மீதுதான் தவறு என்று சொல்ல முடியாது. பல படங்களில் மிகை நடிப்பு வேறு. ஒரு திறமை வாய்ந்த இயக்குனர் இல்லை என்றால் அவரது மிகை நடிப்பை கட்டுக்குள் வைக்க முடியாது.காலம் போக போக he just sleepwalked through his roles. அவரது ரோல்களுக்கும் காலம் செல்ல செல்ல ஸ்கோப் குறைந்து கொண்டே போனது.

அவரை நன்றாக பயன்படுத்தியவர் பாலச்சந்தர்தான். எழுபதுகளில் ஏனோ அவர் பாலச்சந்தர் படங்களில் நடிப்பது நின்று போனது.

பின்னாளில் இயக்குனராகவும் ஓரளவு வெற்றி பெற்றார். அது அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ். கல் தூண் நன்றாக ஓடியது. ஒரு பத்து பதினைந்து படங்களை இயக்கி இருப்பார். அந்த ஒரு நிமிடம், இன்று நீ நாளை நான் ஆகிய படங்கள் நினைவு வருகின்றன.

நல்ல நாடகங்களை போட்டார். ஞான ஒளி, கல் தூண் போன்றவை அவர் அரங்கேற்றியவைதான். அவரது நாடகங்கள் சென்னை சபா சர்க்யூட்டுக்கு வெளியேயும் வெற்றி பெற்றன.

ஒரு திறமை வாய்ந்த நடிகர் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிப் போனது துரதிருஷ்டம்.

அந்த நாள் ஞாபகம் வீடியோ தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை. வரவு எட்டணா பாட்டு

மேஜரின் நடிப்பு மிக நன்றாக இருந்த படங்கள்:
மேஜர் சந்திரகாந்த்
நீர்க்குமிழி
பாமா விஜயம்
எதிர் நீச்சல்
நவக்ரஹம்
ஞான ஒளி
உயர்ந்த மனிதன்
அபூர்வ ராகங்கள்

நினைவு வருவது அவ்வளவுதான். நீங்களும் உங்களுக்கு பிடித்த படங்களை சொல்லுங்களேன்!

மேஜர் குறிப்பிடும் டைரக்டர் கே.சி.கே. யார்? யாருக்காவது தெரிகிறதா?

தொடர்புடைய பிற பதிவுகள்:
மேஜர் சந்திரகாந்த்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
நீர்க்குமிழி
எதிர் நீச்சல்
நவக்ரஹம்

விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.

அடுத்த பக்கம் »