சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

அடிமைப் பெண்

அடிமைப் பெண்

அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்க்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ இருந்தபோதுதான் என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். சிவாஜி, எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே எ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீல மலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனத்தை இங்கே காணலாம்.

அறுபதுகளில் நல்ல கதை என்று கருதப்பட்டிருக்கும். படம் 75-இல்தான் வந்தது. எம்ஜிஆர், நம்பியார், அசோகன், லதா, மஞ்சுளா, ஊர்வசி சாரதா நடித்தது. எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் நீலகண்டன் இயக்கியது. எம்எஸ்வி இசை. ஹிந்தியில் ராஜேஷ் கன்னா நடித்து சச்சா ஜூட்டா என்று வந்தது.

மேக்கப்போ, காமெராவோ, இல்லை ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்த படமோ, எம்ஜிஆரிடம் இந்த படத்தில் கொஞ்சம் துள்ளலும் இளமையும் தெரிகிறது. இதற்கு முன்னால் வந்த உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன், இன்று போல் என்றும் வாழ்க மாதிரி பல படங்களில் அவர் முகத்தில் வயதாகிவிட்டது நன்றாக தெரியும்.

இரண்டு எம்ஜிஆர். ஒருவன் நொண்டி தங்கை சாரதாவுக்கு கல்யாணம் செய்ய சென்னைக்கு வரும் பாண்ட் மாஸ்டர். இன்னொருவன் திருடன். போலீஸ் அதிகாரி மஞ்சுளா, திருடனின் அசிஸ்டன்ட் லதா இருவரும் ஜோடி. இருவரும் அந்த காலத்துக்கு எக்கச்சக்க கவர்ச்சி. கெட்ட எம்ஜிஆரிடம் ஒரு மருந்து – சாப்பிட்டால் எல்லாரும் அப்படியே சிலை மாதிரி நின்றுவிடுவார்கள். சின்ன பையனாக இருந்தபோது இந்த சீன மிக த்ரில்லிங்காக இருந்தது. வழக்கம் போல ஆள் மாறாட்டம், நல்ல எம்ஜிஆரை கெட்ட எம்ஜிஆர் ப்ளாக்மெய்ல் செய்து தன்னை போல நடிக்க வைக்கிறார். கடைசியில் அவருக்கு தண்டனை, ஜோடிகள் இணைகின்றன, சாரதா போலீஸ் அதிகாரி நம்பியாரை கல்யாணம் செய்து கொள்கிறார், சுபம்!

படம் வேஸ்ட். பார்க்க வேண்டும் என்றால் சிக்கென்று இருக்கும் மஞ்சுளா, கொழுக் மொழுக் லதாவுக்காகத்தான். தானே தானே தன்னான்த்தானா, ஒருவர மீது ஒருவர் சாய்ந்து பாட்டுகளில் மஞ்சுளா கலக்குவார். இன்னும் இரண்டு பாட்டுகள் – பூ மழை தூவி, கண்ணை நம்பாதே. பாட்டுகள் பரவாயில்லை. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அழகான காஷ்மீரில் எடுக்கப்பட்டது.

பத்துக்கு ஆறு மார்க். அதுவும் மஞ்சுளா,லதா, பாட்டுகள், காஷ்மீருக்காகத்தான். C- grade.

விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். (ஜனவரி 6, 1975) நன்றி, விகடன்!

உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?

வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.

லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.

பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!

நிறைவான பொழுதுபோக்கு.

ராமன் தேடிய சீதை எம்ஜிஆரின் அறுவைப் படங்களில் ஒன்று. 1972-இல் வந்தது. எம்ஜிஆர் தவிர அசோகன், நம்பியார், ஜெயலலிதா, நாகேஷ், வி.எஸ். ராகவன், வி.கே. ராமசாமி ஞாபகம் இருக்கிறது. எம்ஜிஆருக்கு எம்எஸ்வியோடு ஏதோ சண்டை போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் இசை. யார் இயக்கம் என்று நினைவில்லை. அனேகமாக ப. நீலகண்டனாக இருக்கும்.

விகடன் விமர்சனத்தில் சொன்ன மாதிரி எம்ஜிஆருக்கு கொஞ்சம் வித்தியாசமான கதைதான். அவர் இங்கே ஒரு யூத் – காதலை தேடுகிறார். வயது அவருக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் ஆக ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன். சுருள் முடி விக், எக்கச்சக்க மேக்கப், மஞ்சள் கலர் பாண்ட், சிவப்பு கலர் சட்டை என்று ஆரம்பித்துவிட்டார்.

ஒரு முதிய தம்பதியினர் எம்ஜிஆருக்கு ஒரு லட்சிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவைதான் லட்சிய மனைவி. எனக்கு ஞாபகம் இருப்பது படுக்கையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரே குணம்தான். என் மனைவி male chauvinist pig என்று கத்துவது கேட்கலாம். அந்த பெண்ணை – ஜெவை – சுலபமாக கண்டுபிடிக்கும் எம்ஜிஆர் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை தேடி அலைகிறார். நடுவில் நம்பியார், அசோகன், சித்தப்பா வி.கே.ராமசாமி, போலி ஜெயலலிதா எல்லாரும் அவரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். வாத்தியாரா ஏமாறுபவர்? மூக்கை துடைத்துக் கொண்டு, பல சண்டைகள் போட்டு எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்து ஜெவுடன் சேர்ந்து சுபம்!

ஷங்கர் கணேஷின் இசை அவர்கள் தரத்துக்கு above average, எம்ஜிஆரின் தரத்துக்கு below average. திருவளர்செல்வியோ நல்ல பாட்டு.

வேறு பாட்டு எதுவும் ஞாபகம் இல்லை.

படம் தீவிர எம்ஜிஆர் ரசிகர்களுக்காக. பத்துக்கு 4 மார்க் கொடுக்கலாம். C- grade.

ramanthediyaseethai
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!

ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.

ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.

பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.

எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)

ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.

இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!

பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

1977ல் வந்தது. கலா வள்ளி கம்பைன்ஸ் எடுத்தது.

ஜெய்சங்கர், ஸ்ரீ ப்ரியா, ஸ்ரீகாந்த், ”உணர்ச்சி பிழம்பு” அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பண்டரிபாய், ராஜசுலோச்சனா, சாமிகண்ணு, பிரேமி, டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் நடித்தது.

இசை – சங்கர் கணேஷ்

தயாரிப்பு – டி. ராஜு

டைரக்‌ஷன் – KS கோபாலகிருஷ்ணன்.

பண்ணையார் அசோகன் மனைவி பண்டரிபாய். ஆனால் ராஜசுலோச்சனா செட் அப். ராஜசுலோச்சனா ஒரு செட் அப்புக்காக தான் செட் அப் ஆக வருகிறார். அவருடைய உள்நோக்கம் அசோகனுடைய சொத்து. ஜெய்சங்கர் பண்டரிபாயின் மகன். ஸ்ரீகாந்த் ராஜசுலோச்சனாவின் மகன். பண்டரிபாய் அசோகனின் செட் அப்பால் அப் செட் ஆகி ஜெய்சங்கருடன் பங்களாவை விட்டு வெளிநடப்பு செய்கிறார். என்றைக்காவது அசோகன் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் தேவுடு காக்கிறார் ஒரு குடிசை வீட்டில். ஊருக்கெல்லாம் பொய் சாட்சி சொல்லி சர்வீஸ் பண்ணும் தேங்காய் சீனிவாசனின் மகள் ஸ்ரீப்ரியா. ஜெய்சங்கருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் மலர்கிறது. ஸ்ரீகாந்த் கடுப்பாகிறார். அம்மாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்ய அவர் சபதம் செய்கிறார். தே. சீனிவாசனும் ராஜசுலோச்சனாவும் தாம்பூலம் மாற்றிகொள்கிறார்கள். சிலம்புச் சண்டையில் ஜெய்ப்பவர் ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்துக்கொள்ளலாம். ஜெய்சங்கர் தான் ஜெய்ப்பார் என்பதை ஊகம் செய்ய முடியாதவர் த்மிழனே இல்லை.

இதற்க்கு இடையில் 3 பாட்டு பாடிவிடுகிறார்கள். ஒன்று தேறியது. ”மச்சானே அச்சாரம் போடு”. ”ஆலமரத்துக் கிளி, ஆளப் பார்த்து பேசும் கிளி” வாணி ஜெயராம் பாடியது. “படமெடுக்கிற பாம்புக்கூட” என்ற பாட்டு ஒரு கணக்கிற்க்காக. சுத்த போர்.

ராஜசுலோச்சனாவும், தே. சீனிவாசனும் சேர்ந்து கோயில் பூசாரிக்கும் பண்டரிபாய்க்கும் கிசு,கிசு எழுப்பிவிட கொதித்தெழுந்த அசோகன் அறைகுறையாகத் திருந்திவிடுகிறார். ராஜசுலோச்சனா தே. சீனிவாசனுக்கு பண்ணையார் பிரோமோஷன் கொடுத்துவிட – அதாவது செட் அப்புக்கு தே. சீனிவாசன் செட் அப்பாக மாறிவிட, தாயின் நடத்தைப்பார்த்து உடைந்துபோன ஸ்ரீகாந்தும் ஜெய்யும் சேர்ந்து பிறகு – பிறகு என்ன? ஃபார்மாலிடிஸ் தான். சுபம் தான்.

படம் வந்த காலத்தில் ஒரளவு ஓடியிருக்கலாம்.

4.5/10 மார்க்

அடுத்த பக்கம் »