இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!


பாலகுமாரன் பிரபலமாக ஆரம்பித்திருந்த நேரத்தில் முந்தானை முடிச்சு கதை டிஸ்கஷனில் பங்கேற்றிருக்கிறார். அப்போதிலிருந்து அவருக்கு சினிமாவில் நுழைய ஆசை. கூடவே ஒரு தயக்கம். அப்புறம் நுழைந்துவிட்டார். அந்த அனுபவங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சிறு memoir-தான் இந்த புத்தகம்.

முதல் முதலாக பாக்யராஜ் அவருக்கு அறுபது ரூபாய் ஃபீஸ் கொடுத்திருக்கிறார். இது எண்பதுகளின் முற்பாதியில். அப்போது பாக்யராஜுக்கு ஜி.எம். குமாரும் லிவிங்ஸ்டனும் உதவியாளர்கள். பாக்யராஜ் இவரையும் வந்து சேருங்கள் என்று கூப்பிட்டிருக்கிறார். குறைந்த சம்பளம், கொஞ்சம் பயம் – அதனால் பாலா மறுத்துவிட்டார். பிறகு மு. முடிச்சு படம் பார்த்தபிறகு கமல், சிவகுமார், சுகாசினி, பாலு மகேந்திரா எல்லாரிடமும் அறிவுரை கேட்டிருக்கிறார். யாரும் வா என்று சொல்லவில்லை. சிவகுமார் இவரை நீங்கள் ஏற்கனவே சபல கேஸ், இங்கே தப்பு பண்ண நிறைய சான்ஸ் என்று இடித்திருக்கிறார். சுகாசினி மூன்று வருஷத்துக்கு ஒரு முறை ஏதாவது தப்பு பண்ண வேண்டும் என்று விரதமா என்று கேட்டிருக்கிறார். கோபம், ஒரு கை பார்க்கிறேன் என்று இறங்கி இருக்கிறார். அப்போது கமல் வரவேற்றாராம்! முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும், யாரிடம் யோசனை கேட்கக்கூடாது என்று சொன்னாராம்!

சிந்துபைரவி படத்தில் உதவி இயக்குனர். வசந்த் இன்னொரு உதவி இயக்குனர். அனந்த் தலைமை நிர்வாகி மாதிரி. இவர் ஆஃபீஸ் போவது போல ஒன்பது மணி வாக்கில் போக நான்காவது நாள் அனந்து பிடித்து எகிறி இருக்கிறார். சிவகுமாரிடம் பொரும, அவர் “சவுகரியமா வளர்ந்துட்டீரு ஓய்!” என்று கமென்ட் விட்டிருக்கிறார். அப்புறம் பாலகுமாரன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிவு சுளிவுகளை புரிந்துகொண்டிருக்கிறார்.

சினிமாவின் சில முகங்களைப் பற்றி – இளையராஜாவின் “கர்வம்”, பாலச்சந்தரின் கோபம்+அன்பு, ஒரு டீமாக வேலை செய்வது என்று வெளியே தெரியாத முகங்களைப் பற்றி நன்றாக எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்: பாலகுமாரனும் சினிமாவும் – அருன்மொழிவர்மனின் பதிவு

முள்ளும் மலரும் – விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது


03.09.1978 அன்று வந்தது, விமல் அனுப்பி இருக்கிறார். அவருக்கும் விகடனுக்கும் நன்றி!

தலைப்பிலேயே இலக்கிய மணம் கமழ்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, முரடனான அண்ணனையும் பூப்போன்ற தங்கையையும் ‘முள்ளும் மலரும்’ என்ற தலைப்பு குறிப்பிடுவதாகத் தோன்றினாலும், முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன் தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்பதையே அது குறிக்கிறதோ?

தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத்திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கிறோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடுகிறார்.

மேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு திரும்பும் காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ”நான் வரமாட்டேன், போ!” என்று குழந்தை போலச் சிணுங்குவதும், பிறகு தங்கையிடம், ”நீ என்னை அடிச்சுடுடா” என்று கெஞ்சுவதும் அருமை.

எஞ்சினீயர் தன்னை மணந்துகொள்ளக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும் ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம் புகும் பாசம்… அப்பப்பா! இத்தனையும் கொட்டி நடித்திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை: ஷோபிக்கிறார்!

சரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர் வேடம். மேல் மட்ட அதிகாரிகளுக்கே உரித்தான கொச்சைத் தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது.

சரியான சாப்பாட்டுராமி மங்கா! அடைக்கலம் புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது படாபட்டுக்கு! வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில் கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு அந்நியோன்னியத்தை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.

காலை உதயத்தின் அழகு, வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா. கண்களில் ஐஸ் வைத்துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி!


நான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ராமன் ஆண்டாலும் பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின் மத்தியிலும் போட்டிருக்கும் ‘லேலே… லேலே…’ கோரஸ், காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான ‘மூட்’ உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.

இதுவரை கதை-வசன கர்த்தாவாக மட்டுமே இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு…

எஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர் கோள் மூட்ட, ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச் சொல்வதா…

நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சிதமாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா…

இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர்பார்ப்பார்கள்!

சொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரையில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலஷ்மி போன்றோரின் நடிப்பில் வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.

படத்தை தயாரித்த வேணு செட்டியார் மறுத்த ஒரு பாடல், கமல் அவர்களின் தலையீட்டால், ஷூட் செய்யப்பட்டு, படத்தில் இடம் பெற்றது. அந்த பாடலே…. ”செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்ற சூப்பர் ஹிட் பாடல்..

சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார்

“முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை.

இப்படியாக இருந்த மகேந்திரனுக்கு அவரின் குடும்ப நண்பர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியாரின் அறிமுகம் மூலம் இந்தக் கதையையே தன் முதல் திரைப்படமாக உருவாக்க ஆரம்பித்தார்.

கமலஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சியில் அண்ணன் காளி (ரஜினி) பெருமை பிடிபடாது தன் தங்கையை (ஷோபா) வை அழைத்துக் கொண்டு வந்து மணமகன் (சரத்பாபு) முன்னே வந்து” இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கலை” என்று சொல்வார். இந்தக் காட்சி படமாக்கும் போது சரத்பாபுவை காணவில்லையாம். தேடிப் பிடித்துக் கூட்டி வந்தால் “அதெப்படி இப்பவும் இந்த ஆள் இப்பவும் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லலாம்” என்று சொன்னாராம். பின்னர் மகேந்திரன் அவருக்கு புரிய வைத்துப் படத்தை எடுத்தாராம்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார் “அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல” என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank cheque-ஐ எடுத்து வந்து “மகேந்திரா, என்னை மன்னிச்சுக்கோ” என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் “முள்ளும் மலரும்” என்கிறார் மகேந்திரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், விகடன் விமர்சனங்கள்

பிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்


இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.

  1. 1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே
  2. 1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
  3. 1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா
  4. 1957, குரு தத்தின் ப்யாசா
  5. 1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா
  6. 1964, சத்யஜித் ரேயின் சாருலதா
  7. 1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா
  8. 1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்
  9. 1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்
  10. 1951, ராஜ் கபூரின் ஆவாரா

எனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.

ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.

மொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.

நிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்!)

அம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.

இது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):

  1. 1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி
  2. 1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே
  3. 1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க?
  4. 2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.
  5. 1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா
  6. 1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்!
  7. 1964, சத்யஜித் ரேயின் சாருலதா
  8. 1957, குரு தத்தின் ப்யாசா
  9. 1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)
  10. 1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்

“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)

  1. 1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.
  2. 1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
  3. 1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.
  4. 1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.
  5. 1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.
  6. 2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்
  7. 1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள்! தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
  8. 1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.
  9. 1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!
  10. 1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.

இவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:

  1. 1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.
  2. 1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
  3. 1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை
  4. 1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்
  5. 1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்
  6. 1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention
  7. 1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?
  8. 1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention
  9. 1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.
  10. 1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.
  11. 1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்
  12. 1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்?
  13. 1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.
  14. 1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.
  15. 1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.
  16. 1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.
  17. 1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention
  18. 1992, மணிரத்னத்தின் ரோஜா – Honourable mention
  19. 1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.
  20. 1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.
  21. 1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது!) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது?
  22. 1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா?
  23. 1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க?
  24. 2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
என் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

சந்திரலேகா
கப்பலோட்டிய தமிழன்
மந்திரி குமாரி (Mandiri Kumari)
முகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்
பராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்
தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்

தமிழ் திரைக்கதைகள் – கமல் சிபாரிசுகள்


வழக்கம் போல பாஸ்டன் பாலா லிஸ்ட் கொடுத்திருக்கிறார், வழக்கம் போல என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். ஆனால் எனக்கு திரைக்கதையை குறிப்பாக ரசிக்க தெரியுமா என்பது எனக்கே சந்தேகம்தான்.

1. என்னதான் முடிவு திரைக்கதை+இயக்கம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் – பார்த்ததில்லை.

2. சாது மிரண்டால் திரைக்கதை+இயக்கம் திருமலை/மகாலிங்கம் – எனக்கு ஒன்றும் சிறப்பாக தெரியவில்லை.

3. காவல் தெய்வம் திரைக்கதை, இயக்கம் ஜெயகாந்தன், கே. விஜயன் – பார்த்ததில்லை.

4. யாருக்காக அழுதான் திரைக்கதை+இயக்கம் ஜெயகாந்தன் – மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. வித்தியாசமான கதை.

5. அவர்கள் திரைக்கதை+இயக்கம் கே. பாலச்சந்தர் – நல்ல திரைக்கதை. முழு விமர்சனம் இங்கே.

6. மன்மத லீலை திரைக்கதை+இயக்கம் கே. பாலச்சந்தர் – எனக்கு ஒன்றும் சிறப்பாக தெரியவில்லை.

7. அவள் அப்படித்தான் திரைக்கதை+இயக்கம் அனந்து, ருத்ரையா – பார்த்ததில்லை.

8. நாயகன் திரைக்கதை+இயக்கம் மணிரத்னம் – நல்ல திரைக்கதை.

9. கல்லுக்குள் ஈரம் திரைக்கதை, இயக்கம் செல்வராஜ், பாரதிராஜா – மிக வித்தியாசமான, நல்ல திரைக்கதை. மெதுவாக போவதுதான் ஒரே பிரச்சினை. ஓடாதது துரதிருஷ்டம்தான்.

9. தேவர் மகன் திரைக்கதை, இயக்கம் கமல்ஹாசன், பரதன் – புத்திசாலித்தனமான திரைக்கதை. பாத்திரங்கள் நன்றாக செதுக்கப்பட்டிருக்கும்.

10. மகாநதி திரைக்கதை+இயக்கம் கமலஹாஸன், சந்தானபாரதி – உலகத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் கதாநாயகன் தலையில் விடிவது சிவாஜியோடு போய்விடவில்லை. இருந்தாலும் சுவாரசியமான திரைக்கதை. கல்கத்தா போவது, சிறைச்சாலை காட்சிகள், விவசாய வாழ்க்கை எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

11 .அலைபாயுதே திரைக்கதை+இயக்கம் மணிரத்னம் – புத்திசாலித்தனமான திரைக்கதை.

12. ஹே ராம் திரைக்கதை+இயக்கம் கமல்ஹாஸன் – நல்ல திரைக்கதை.

13 . அன்பே சிவம் திரைக்கதை, இயக்கம் கமல், சி. சுந்தர் – மிக நல்ல திரைக்கதை. கடைசி முடிவுதான் – மாதவன் கிரணை திருமணம் செய்து கொள்வது – கொஞ்சம் செயற்கையாக இருக்கும்.

14. மும்பை எக்ஸ்பிரஸ் திரைக்கதை, இயக்கம் கமல், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் – நல்ல திரைக்கதை. ஓடாதது துரதிருஷ்டம்.

15. விருமாண்டி திரைக்கதை+இயக்கம் கமல் – கமலுக்கு ராஷோமொன் மாதிரி படம் எடுக்க ஆசை. எப்படி முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஆனால் நல்ல திரைக்கதை.

16 . பருத்திவீரன் திரைக்கதை+இயக்கம் அமீர் – ஹைப் இருக்கும் அளவுக்கு கதை இல்லை.

கிட்டத்தட்ட பாதி கமல் எழுதிய திரைக்கதைகள். அப்புறம் பாலச்சந்தர், ஜெயகாந்தன் என்று usual suspects. அமீர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், செல்வராஜ் (பாரதிராஜா) என்று சிலர். ஸ்ரீதர், பாலு மகேந்திரா யாரையும் காணோம்.

தொடர்புடைய பதிவுகள்
அவர்கள் பட விமர்சனம்