எம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.

எம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.

1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.

கதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்!

வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!

காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!

மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number!

தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!

அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.

சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.

கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!

சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.

படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.

பாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.

தமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொடர்புடைய பதிவுகள்:
விகடன் விமர்சனம்

நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்! அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.

முனுசாமி – மாணிக்கம்

மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

முனு: எதுக்கடா?

மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

முனு: ரொம்பப் பெரிய படமாமே?

மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

முனு: கத்திச் சண்டை உண்டா?

மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

முனு: காமிக் இருக்குதா?

மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

முனு: என்ன தம்பி சொல்றே?

மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!


சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

சந்திரபாபு பற்றிய முந்தைய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சபாஷ் மீனா விமர்சனம் இங்கே.

எழுத்தாளர் முகிலின் பதிவிலிருந்து, நண்பர் சூர்யா எடுத்துத் தந்த பகுதி கீழே.

பத்மினி ப்ரொடக்ஷன்ஸ் பி.ஆர். பந்தலு, ப. நீலகண்டன் ஆகியோர் ‘சபாஷ் மீனா’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை எடுக்க விரும்பினார்கள்.

கதாநாயகனாக நடிக்க சிவாஜியிடம் பேசினார்கள். கதையைக் கேட்டார் சிவாஜி. அதில் நாயகன் பாத்திரத்துக்கு இணையாக படம் முழுவதும் வரும் மற்றொரு நகைச்சுவை கலந்த முக்கிய கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு சிவாஜி, ‘அந்த கேரக்டருக்கு சந்திரபாபுவைப் போட்டா ரொம்ப நல்லா வரும்’ என்றார் அவர்களிடம்.

ப. நீலகண்டன் தமது அலுவலகத்துக்குச் சென்று சந்திரபாபுவைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைச் சந்திக்க வருவதாகக் கூறினார். அதற்குச் சந்திரபாபு, ‘நீங்க அங்கேயே இருங்க. நான் கிளம்பி வர்றேன்’ என சொல்லிவிட்டு தன் காரில் கிளம்பி வந்தார் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகிலிருந்த பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு.

‘சபாஷ் மீனா’ படத்தின் கதை, சந்திரபாபுவின் கதாபாத்திரம், சிவாஜி சொன்ன கருத்து ஆகியவற்றை சந்திரபாபுவிடம் சொன்னார் நீலகண்டன்.

‘மிஸ்டர் சிவாஜி ஒரு நல்ல, பிரமாதமான ஆக்டர். என் திறமைய புரிஞ்சுக்கிட்டிருக்கார். அதான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார்’ என சந்திரபாபு சொல்ல, நீலகண்டனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. சுதாரித்துக்கொண்டு, ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்’ என கேட்டார் நீலகண்டன்.

‘சிவாஜி கணேசனுக்குக் கொடுக்கறதை விட கூட ஒரு ரூபாய் கொடுங்க!’ என்றார் சந்திரபாபு.

நீலகண்டனுக்கு என்ன பதில் பேசுவதென்றே புரியவில்லை. சிவாஜியிடம் நடந்ததைச் சொன்னார் நீலகண்டன்.

‘அவன்கிட்ட விஷயம் இருக்கு. இது காமெடிப் படம். சில ஸீன்களில அவன் நடிப்புதான் நிக்கும். நான்தான் பார்த்து நடிக்கணும். சில சமயங்களில் இப்படித்தான் லூசுத்தனமா பேசுவான். விடுங்க.’ – சிவாஜி சொன்னார்.

சந்திரபாபுவைப் பற்றி இரண்டு அருமையான சுட்டிகளை சூர்யாவும் உஷா ராமச்சந்திரனும் கண்டுபிடித்து சொன்னார்கள். ஒன்று பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது. இன்னொன்று சந்திரபாபுவின் பயாக்ரஃபியை எழுதிய முகில் அவர்களுடையது. படித்து பாருங்கள்!

சந்திரபாபுவை பற்றிய முந்தைய பதிவு இங்கே.

உஷா ஒரு எழுத்தாளர் என்பது தெரிந்திருக்கலாம். அவரது பதிவுகளை இங்கே காணலாம்.

sabash_meena

இந்த ஆள் மாறாட்ட கதை இன்றைக்கும் பயன்படுகிறது. உள்ளத்தை அள்ளித் தா இதே கதைதான். காதலா காதலா படத்தில் இதன் சாயல் உண்டு.

1958-இல் வந்த படம். பந்துலுவின் சொந்தப் படம். அவரே இயக்கியும் இருக்கிறார். சிவாஜி, சந்திரபாபு, மாலினி, சரோஜா தேவி, குலதெய்வம் ராஜகோபால், பந்துலு டி. பாலசுப்ரமணியம் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி!), எஸ்.வி. ரங்காராவ் நடித்தது. இசை டி.ஜி.லிங்கப்பா. வெற்றிப் படம் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் இந்த படம் தில் தேரா தீவானா என்று ஷம்மி கபூர், மெஹ்மூத் நடித்து வந்தது.

திருச்சியில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சிவாஜி நாடகம், கீடகம் என்று சந்திரபாபுவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பொறுப்பு வருவதற்காகவும், அப்படியே பணக்கார ரங்காராவ் வீட்டில் சம்பந்தம் செய்வதற்காகவும் சிவாஜியை அவர் அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் சென்னைக்கு ரங்காராவ் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். சிவாஜி தன் நண்பன் சந்திரபாபுவை அங்கே ஆள் மாறாட்டம் செய்ய வைக்கிறார். சேரியில் ஒரு பெண்ணோடு லவ்வுகிறார். ஏறக்குறைய சந்திரபாபுவை மறந்தே விடுகிறார். ரங்காராவ் மகள் சரோஜா தேவிக்கும் சந்திரபாபுவுக்கும் இங்கே லவ் டெவலப் ஆகிறது. ஆனால் சந்திரபாபுவுக்கு ஒரே பயம். அவர் சரோஜா தேவியின் சொன்னதற்காக ஒரு நாடகத்தில் ரிக்ஷாக்காரன் வேஷம் போடுகிறார். பிறகு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஒரு நிஜ ரிக்ஷாக்காரன் (டபிள் ரோல்) சந்திர பாபு போலிருப்பதால் அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். டாக்டர் ரிக்ஷாக்காரன் ரோலில் மூழ்கிவிட்டதால் அவருக்கு மனம் பேதலித்துவிட்டது என்று சொல்கிறார். பிறகு ஒரே கூத்துதான். கடைசியில் உண்மை தெரிந்து ஜோடிகள் சேர்ந்து சுபம்!

சிவாஜி ஹீரோ என்றாலும் இது சந்திரபாபு படம். கொஞ்சம் நாடகத் தன்மை இருந்தாலும் நிறைய சிரிக்கலாம்.

பந்துலு பாலசுப்ரமணியம் ரங்காராவை பார்க்க வரும் காட்சி சூப்பர்! சிவாஜி ஆஃபீஸில் இருக்கும் பாபுவிடம் போய் அப்பா வந்திருப்பதை சொல்வார். அப்பா பந்துலு பாலசுப்ரமணியம் அங்கே நுழைந்ததும் சிவாஜி தான்தான் மானேஜர் போல் நடிப்பார். பிறகு ரங்காராவ் நுழையும்போது பாபு இங்க்லீஷில் போட்டு தாக்குவது அபாரம்! அடுத்த சீனில் பந்துலு, ரங்காராவ் இருவரும் ஒன்றாக உள்ளே நுழைவார்கள். இரண்டு பேரும் பந்துலுவின் பாலசுப்ரமணியத்தின் “மகனிடம்” பேசுவார்கள். வாயையே திறக்காமல் சிவாஜியும் பாபுவும் சமாளிப்பார்கள். அருமையான இந்த காட்சியை கீழே காணலாம்.

பாபுவுக்கு பேய் பிடித்துவிட்டது என்று அவரை தலை கீழே கட்டிப் போட்டிருப்பார்கள். பூசாரி “ஓடிட்ரயா” என்று கேட்பார். பாபு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தலைகீழா கட்டிபோட்டு ஓடிட்ரயா என்றால் எப்படிய்யா என்பார். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும்.

ரிக்ஷாக்காரன் வீட்டுப் பக்கம் தவறுதலாக போய்விடும் பாபு ரிக்ஷாக்காரன் மனைவியை பார்த்து நீ யாரம்மா என்பார். கூச்சல் போட்டு எல்லாரும் வந்து உன் மனைவி குழந்தைகளையே யாரென்று கேட்கிறாயா என்று அடி போடுவார்கள். பாபு உடனே ஆமாமாம் என் மனைவிதான், என் குழந்தைகள்தான் என்று நாலு குழந்தைகளை அணைத்துக் கொள்வார். அடி போட்டவர்களில் ஒருவன் யோவ் அது என் குழந்தைய்யா என்று ஒரு குழந்தையை பிடுங்கிக் கொள்வான்!

ராண்டார்கை இந்த ரிக்ஷாக்காரன் ரோலை செய்ய பாபு கொஞ்ச நாள் ரிக்ஷா இழுத்து பார்த்தார் என்று சொல்கிறார்!

மாலினி வேறு எந்தப் படத்திலும் நடித்ததாக தெரியவில்லை. சரோஜா தேவி இரண்டாவது கதாநாயகி. அவர் சந்திரபாபுவுக்கு ஜோடியாக வேறு எதிலும் நடித்ததில்லை என்று நினைக்கிறேன். ரங்காராவுக்கு எக்சலண்ட், மார்வலஸ், அதாவது பிரமாதம் என்று இங்க்ளிஷும் தமிழும் பேசும் ஒரு அப்பா ரோல். குலதெய்வம் ராஜகோபாலுக்கு கொஞ்சம் பெரிய ரோல் என்று ஞாபகம். பாபு தனக்கு சிவாஜியை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம் என்று பக்ஸ் சொல்கிறான்.

நல்ல பாட்டுகள். இப்போது ஞாபகம் வருவது சித்திரம் பேசுதடி. என்ன அற்புதமான பாட்டு? சிவாஜிக்கு கொஞ்சமும் பொருந்தாத குரல் டி.ஏ. மோதி. அவர் காணா இன்பம் கனிந்ததாலே என்று ஒரு பாட்டு பாடி இருப்பார். இந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்கலாம். இதைத் தவிர ஆசைக் கிளியே கோபமா என்ற ஒரு நல்ல பாட்டும் நினைவில் இருக்கிறது. பாபுவுக்கு சீர்காழி குரல் கொடுத்திருப்பார்! அதுதான் முதலும் கடைசி முறையுமாக இருக்கும்! அதன் வீடியோவை இங்கே பார்க்கலாம்.

பாபு, பாட்டுகளுக்காக பாருங்கள். பத்துக்கு 7 மார்க். B grade.

ஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.

1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ், டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.

சிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.

கள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

டவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

டாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:
அம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்
ஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி!

சின்ன வயதில் விழுந்து விழுந்து சிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

மகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.

மங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

கோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.

கணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ- நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை - மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.

குலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ?

மாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.

இந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.

(Manivannan’s reproduction from Kumudam – Promoted to a post)

மணிவண்ணன் Says:
பெப்ரவரி 4, 2009 at 1:31 பிற்பகல் e

நன்றி குமுதம்:

இரும்பு மனசுக்காரர் நாகேஷ் – கலங்கும் கே. பாலசந்தர்

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் தொடங்கிய அவரது கலைப் பயணம், பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. அவரது `தருமி’ வேடத்தை யாரால் மறக்க முடியும்? பிற்காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக் கட்டினார்.

நகைச்சுவை நடிகராக வலம் வந்த நாகேஷை, ஹீரோவாகப் போட்டு பல்வேறு நாடகங்களையும் படங்களையும் இயக்கியவர் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். நாகேஷின் குருநாதராகவும் நல்ல நண்பராகவும் திகழ்ந்த அவரிடம், நாகேஷ் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னோம். தழுதழுத்த குரலில் ஆரம்பித்தார் கே.பி.

“இறந்தவர்களுக்கு, இருப்பவர்கள் செய்யும் சடங்குகளுள் ஒன்று வாய்க்கரிசி போடுவது. அதைச் செய்து அவரை மயானத்தில் தனியே விட்டுவிட்டு வந்து அசை போட்டுப் பார்க்கிறேன்.

ஆரம்ப காலம் தொடங்கி, அண்மையில் பதினைந்து நாட்களுக்கு முன்பு போய் பார்த்துப் பேசிவிட்டு வந்த சம்பவம் வரை ஒவ்வொரு விஷயமும் நினைவுக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. ஆத்மார்த்தமாகப் பழகும் அந்த நண்பரை இழந்து மனமொடிந்து போயிருக்கிறேன்.

நான் பத்திரிகைப் பேட்டிக்காகவோ அல்லது ஒப்புக்காகவோ சொல்லவில்லை. நடிப்பில் சிவாஜிக்குப் பிறகு பேர் சொல்லும் பிள்ளையாக இருந்தவர் நாகேஷ். அதிலும் குணச்சித்திரமாகவும் காமெடியாகவும் இணைந்து நடிக்கும் நடிகர், இனிமேல் பிறந்தால் கூட அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். காமெடி டிராக்கில் மட்டும் ஓடிக் கொண்டிருந்த அவரை குணச்சித்திர நடிகனாக்கியது பற்றி நினைத்தால் பல சம்பவங்களைக் கூறத் தோன்றுகிறது.

சின்னச் சின்ன கம்பெனிகள் நடத்தி வந்த சில நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷ் பற்றி நண்பர்கள் சிலர் என்னிடம் சிலாக்கியமாகச் சொன்னார்கள். நானும் அரசுப் பணியில் இருந்தபடியே நாடகங்கள் எழுதி இயக்கிக் கொண்டிருந்தபடியால், இயல்பாக ஏற்பட்ட ஆர்வத்தில் நண்பர்கள் கூறிய நாடகத்தையும் நாகேஷையும் பார்க்கப் போனேன்.

அப்படிப் போன ஒரு நாடகத்தில் நாகேஷின் ஆரம்பக் காட்சியே எனக்கு பிரமிப்பு ஏற்படுத்திவிட்டது. அதாவது யாரோ விரட்டி வருவதுபோல பாவனை செய்தபடி, நீளமான சோபா ஒன்றை அனாயாசமாக தாண்டிக் குதித்தபடி வசனம் பேசுவார். அப்போது அவருடைய அங்கஅசைவுகளும் வசன உச்சரிப்புகளும் என்னைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. நாடகம் முடிந்ததும் தனியே பார்த்துப் பாராட்டிவிட்டு, `இப்படி நடிப்பது ரிஸ்க் இல்லையா? அடிபட்டால் என்னாகும்?’ என்று அக்கறையுடன் கேட்டேன். அதற்கு நாகேஷ், `அடிபடலாம். அதற்கு பயந்து மெனக்கெடாமல் இருக்கக் கூடாது. ஆல் இன் கேம். அதிலும் நாடகத்திற்கு மற்ற தொழிலில் காட்டும் திறமை மற்றும் அக்கறையைவிட நூறு சதவிகிதம் அதிகம் காட்டினால்தான் ஜெயிக்க முடியும்!’ என்று விளக்கம் சொன்னார்.

அவருடைய நாடகத்தைப் பார்க்கப் போன காலகட்டத்தில் நான் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அதைப் பார்க்க வந்த நாகேஷ், என் நாடகத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, மெதுவாக தனக்கும் என் குழுவில் இடம் வேண்டும் என்று கேட்டார். சின்னச் சின்ன கம்பெனிகளில் நடிக்கும் தனக்கு என் அங்கீகாரமும் ஆதரவும் வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார். குறைந்தபட்சம் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தில் ஒரு கேரக்டர் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார்.

நான் அவரிடம் `உங்களுக்கான ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து, அதன் மூலம் உங்களை எங்கள் குழுவில் சேர்க்கிறேன்’ என்றதும், சரி என்று போனவர், மறுநாளே என் அலுவலகம் வந்து தனக்கான ஸ்கிரிப்ட் தயாரா எனக் கேட்டார். இவ்வளவிற்கும் சினிமாவில் தலைகாட்டி பிரபல-மாகிவிட்ட அவர், நிஜமாகவே நாடகங்களில் நடிக்க அதுவும் என் நாடகங்களில் நடிக்கக் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

அதன் விளைவாக தீவிரமாக யோசித்தபோது, நாகேஷின் முகத்தில் இருந்த அம்மைத் தழும்புகளையும் அதனால் நாயகன் படும் மன உளைச்சல்களையும் வைத்து ஒரு கதை பண்ணலாமா என்று நாகேஷிடமே கேட்டேன். இந்த கதைக்களம் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. உடனே என்னை அடுத்தடுத்து சந்தித்து ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து தனக்கான அந்த முழுக் கதையையும் உருவாக்க வைத்துவிட்டார். அதுதான் `சர்வர் சுந்தரம்.’

அந்தக் கதை தயாரானதும் தினமும் ரிகர்சல் பார்க்க சின்சியராக ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி சினிமாவில் பிஸியான நிலையிலும் அவருடைய நாடக ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறுகிய காலத்தில் மெனக்கெட்டுத் தயாரித்த `சர்வர் சுந்தரம்’ நாடகத்தை அரங்கேற்றும் நாளன்று என்னை விட டென்ஷனாக இருந்த நாகேஷ் மெதுவாக, `பாலு, இந்த நாடகத்தோட முதல் டயலாக் தவிர மற்றதெல்லாம் மறந்துடுத்தே’ என்றார். ஆனால் நாடகம் தொடங்கியதும் மடமடவென்று டயலாக்குகளை வீசி அசத்திவிட்டார். குறிப்பாக நாயகிக்கு பொக்கே கொடுத்துவிட்டு, பதிலுக்கு குப்பைக் கூடையை எடுத்துப் போகிறேன் என்று கூறியபோது, ஆடியன்ஸ் தட்டிய கைதட்டல்கள் இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

அந்த நாடகத்தின் காட்சி அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும் நாகேஷின் நடிப்பும் மெருகேற்றியதால் கிடைத்த பாராட்டு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலித்தது. இந்த நாடகம் நடக்கவிருந்த ஓரிரு நாளில் எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். அவரிடம் நாடகம் பற்றிக்கூறி அனுமதி வாங்கி வந்து நடித்துவிடும் போக்கும் என்னைக் கவர்ந்தது.

`சர்வர் சுந்தரம்’ நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் `மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்திலும் தான் பங்குபெற வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்தார். அதனால் ஒரு காட்சியில் பேப்பர் போடும் பையன் கேரக்டர் கொடுத்தேன். அதில் வந்தவரை ஆடியன்ஸ் பார்த்து `ஹே, நாகேஷ்’ என்று கத்தினார்கள்.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பு நானும், நாகேஷும் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்தோம். முதலாளியாக நானும் வேலைக்காரராக அவரும் நடிக்கும்போது, திடீரென்று இஷ்டத்துக்கு வசனம் பேசி என்னைத் திகைக்க வைத்துவிட்டார். அதிலிருந்து என் நாடகங்களில் இப்படி அதிரடியாக புதிய வசனம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுவிட்டேன்.

பிறகு, நான் எழுதிய `நீர்க்குமிழி’ நாடகத்தில் நாகேஷ் புகுந்து கலக்கினார். காமெடியனாக வந்த நாகேஷ், இந்நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை அழ வைத்துவிட்டார். பலமுறை நானே அவரது நடிப்பைப் பார்த்துக் கண்கலங்கியுள்ளேன்.

அந்த நாடகத்தில் பல பரிமாணங்களைக் காட்டி அசத்திய நாகேஷை மனதில் வைத்து `எதிர்நீச்சல்’ நாடகம் எழுதினேன். அதுபற்றி எதுவும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்படிப் போன காலகட்டத்தில் `நீர்க்குமிழி’ நாடகத்தைப் படமாக்கினோம். நாடகத்தில் நடித்தவர்களையே பெரும்பாலும் போட்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான அப்படம் நிறைவான வருவாயும், பேரும் கொடுத்தது. குறிப்பாக இப்படம் பற்றி ஏவி.எம். செட்டியாரும், பாரதிராஜாவும் பிரமிப்புடன் பேசினார்கள்.

அதேசமயம் புதிய நாடகமாக `நவக்கிரகம்’ எழுதினேன். அதுதான் என் கடைசி நாடகமாகிவிட்டது. காரணம், நான் உள்பட நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் சினிமாவில் பிஸியாகிவிட்டதால் நாடகத்திற்குத் தேவையான நேரத்தை எங்களால் ஒதுக்க முடியாமல் போனதுதான்.

ஆனால், சினிமாவில் தனிக் கொடி நாட்டி வெற்றிப் பாதையில் போய்க் கொண்டிருந்த எங்கள் நட்புக்கு யாரோ திருஷ்டி போட்டுவிட்டார்கள். பல ரூபங்களில் வந்த பிரச்னைகளால் பிரிந்துவிட்டோம்.

நாகேஷ் வீட்டில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தால் தனிமையில் வாழ ஆரம்பித்த நாகேஷை வைத்து `வெள்ளிவிழா’ என்ற படத்திற்கு கால்ஷீட் வாங்கினேன். எனக்குக் கொடுத்த கால்ஷீட் தினத்தன்று எனக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். படமொன்றில் நடிக்கப் போயிருந்தார். அந்த விஷயம் தெரிந்து விசாரித்தபோது, அவர் என்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் காயத்தையும், ஆறாத வடுவையும் எனக்குள் ஏற்படுத்திவிட்டது. அதில் கோபமடைந்த நான், நாகேஷின் தொடர்பை அறவே துண்டித்துவிட்டு அவருக்காக உருவாக்கிய கேரக்டரில் புதுமுகம் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். அவர்தான் தேங்காய் சீனிவாசன்.

இந்த `வெள்ளிவிழா’ பட ஷூட்டிங்கின் போது எனக்கு ஹார்ட்-அட்டாக் வந்து நினைவைத் துறந்து பல நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போது தினமும் நாகேஷ் வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவாராம். பின்னாளில் என் மனைவி சொல்லித் தெரிந்துகொண்ட விஷயமிது.

ஆனாலும் வருத்தம் குறையாத நிலையில், நாகேஷ் உறவே இல்லாமல் ஏழெட்டுப் படங்கள் எடுத்து அதில் பல ஹிட் ஆகின. பட வெற்றிவிழா சிலவற்றில் நாகேஷைப் பார்த்துப் பேச ஆரம்பித்த பிறகு சமரசம் ஆகிவிட்டோம்.

அடுத்து `அபூர்வ ராகங்கள்’ படம் எடுக்கும்போது அதில் கண்டிப்பாக தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று உரிமையுடன் கேட்டார் நாகேஷ். அவருக்காகவே டாக்டர் ரோலை உருவாக்கினேன். பிறகு அடுத்தடுத்து எங்கள் நெருக்கம் பலப்பட்டு விட்டது. அதே சமயம் நாகேஷ் பற்றி இன்னொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன். என் நாடகங்கள் தொடங்கி கேள்விப்பட்ட அனைத்து நாடகங்களையும், சினிமாக்களையும் பற்றி விலாவாரியாக மணிக்கணக்கில் பேசும் நாகேஷ், தன் குடும்ப விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை. அந்த வகையில் நாகேஷ் இரும்பு மனசுக்காரர் என்றுதான் சொல்வேன். மொத்தத்தில் நாகேஷ் மறைவு நடிப்பிற்கு இழப்பு!” என்று கூறி கண்களைத் துடைத்துக்-கொண்டார் கே.பி.

(Thanks Manivannan)

கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?

1953இல் வெளிவந்தது. ஒரே நேரத்தில் “லட்கி” என்று ஹிந்தியிலும் வெளிவந்திருக்கிறது. தமிழில் நடித்தவர்கள் ஜெமினி, வீணை எஸ். பாலச்சந்தர், வைஜயந்திமாலா, அஞ்சலி தேவி, எஸ்.வி. சஹஸ்ரனாமம், நாகையா, சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, பி.டி.சம்பந்தம், ஆர். பாலசுப்ரமணியம் நடித்திருக்கிறார்கள். இசை ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளர் சுதர்சனம். இயக்குனர் எம்.வி.ராமனா? ஹிந்தி படத்துக்கு அவர்தான். சுமாராகத்தான் ஓடியதாம்.

ஹிந்தியிலும் வைஜயந்திமாலாவும் அஞ்சலி தேவியும்தான். ஜெமினிக்கு பதிலாக பரத் பூஷன். பாலச்சந்தருக்கு பதிலாக கிஷோர் குமார். சாரங்கபாணிக்கு பதிலாக ஓம் பிரகாஷ்.

பாட்டுக்கள் பிரமாதம்! எனக்கு மிகவும் பிடித்தது “சொன்ன சொல்லை மறந்திடலாமா” பாட்டுதான். எம்.எஸ். ராஜேஸ்வரியும் எனக்கு ஞாபகம் இல்லாத இன்னொருவரும் டி.எஸ். பகவதியும் பாடியது. மீண்டும் கேட்டால் ஞாபகம் வந்துவிடும் என்று ஆவலோடு காத்திருந்தேன், சன் டிவிக்காரர்கள் என் ஆசையில் மண்ணை வாரி போட்டுவிட்டார்கள். முன்னால் எழுதிய போஸ்ட்1, போஸ்ட்2 இங்கே. இங்கே கேட்கலாம்.

“பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா” அபாரம். ஏதாவது தமிழ் கீர்த்தனையா? அதில் “பத்து ஜனங்கள் முன்னால்” என்று ஆரம்பித்து விஸ்தாரமாக ஸ்வர ஆலாபனை செய்வதும், அதை வீணையில் திருப்பி வாசிப்பதும் அருமை! பாடியது டி.எஸ். பகவதியாம். எம்எல்வி என்றும் எங்கேயோ படித்தேன். என்னால் இப்போது குரலை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு முறைதானே கேட்டிருக்கிறேன்… எனக்கு கர்நாடக சங்கீதம் எல்லாம் தெரியாது – ஆனால் ராகம் தாளம் எல்லாம் தெரிந்தால்தான் பாட்டை ரசிக்க வேண்டுமா என்ன? ராகம் என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! இந்த பாட்டுக்கு யாரிடமாவது MP3 இருக்கிறதா?

“உல்லாசமாகவே உலகத்தில் வாழவே” – சந்திரபாபு அபூர்வமாக வேறு ஒருவருக்கு குரல் கொடுத்திருக்கிறார். அது ஒரு . “வனஜா கிரிஜா ஜலஜா [ஏதோ ஒரு ஜா] ராகினி ரோஷினி சரசா கிரிஜா ஜலஜா வனஜா மாலினி லோசனி மஞ்சுளபாஷிணி யாரோ ஒரு பெண்மணி அவளே என் கண்மணி” என்று பாடும்போது பிய்த்து உதறுகிறார். (வனஜா கிரிஜா என்று தவறாக எழுதி இருந்ததை திருத்திய ராஜ்ராஜுக்கு நன்றி!) ஸ்விங் இசையை அருமையாக தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். அந்த காலத்து இளைஞர்கள் குஷி மூடில் இருக்கும்போது கண்டிப்பாக பாடியிருப்பார்கள்!

“பாரத நாட்டுக்கிணை பாரத நாடே” நல்ல அழகான செட். பாட்டு கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது.

சாரங்கபாணி செய்யும் கதாகாலட்சேபம் அருமை. “பெண்ணை நம்பாதே” என்று சாரங்கபாணி காலட்சேபம் செய்ய, அவரது மனைவியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பெண்ணாக வாக் அவுட் செய்கிறார்கள். ஆனால் சாரங்கபாணியும், பி.டி. சம்பந்தமும் விடாமல் வேகத்துடன் பாடிக்கொண்டே போகிறார்கள். பி.டி. சம்பந்தம் கொஞ்சம் குள்ளம். அவர் ஒரு சேரில் ஏறிக்கொண்டு சாரங்கபாணிக்கு இணையாக பாடுவது அருமை.

“எட்டாத கிளையில் கிட்டாத கனி போல்” ஒரு ஜாலியான feet tapping number. நல்ல சந்தம்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்ற பாரதியார் பாட்டு. பாடுவது அபூர்வமாக பாடும் டி.ஏ. மோதி.

“அகில பாரத பெண்கள் திலகமாய்” கேட்கலாம்.

படத்தில் எங்கெல்லாம் டான்ஸ் ஆடமுடியுமோ அங்கெல்லாம் வை. மாலா ஆடிவிடுகிறார். மேடம் ஃப்யூரியுடன் “பாரத நாட்டுக்கிணை” என்று பாடிக்கொண்டே போட்டி டான்ஸ், கிராமீய நடனம் என்று சொல்லி “எட்டாத கிளை மேல்” என்று ஒரு பாட்டு. இதை தவிர குதிரை சவாரி செய்துகொண்டே “அகில பாரத பெண்கள் திலகமாய்”, தோழிகள் இருவரும் சேர்ந்து “சொன்ன சொல்லை மறந்திடலாமா”.

பாட்டும் டான்சும்தான் முக்கியம். கதை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கலப்பு மணத்தில் பிறந்த அ. தேவியை ஜெமினி காதலித்து கல்யாணம் செய்துகொள்கிறார். அவரது ஆச்சாரமான அப்பா சாரங்கபாணியின் வற்புறுத்தலாலும், தன் மனைவி மீது ஏற்படும் சந்தேகத்தாலும் ஜெமினி வை. மாலாவை மணந்துகொள்ள சம்மதிக்கிறார். கல்யாண மேடையில் உண்மைகள் வெளிவர, ஜெமினியும் அ. தேவியும் ஒன்று சேர, ஜெமினியின் கஸின் பாலச்சந்தர் வை. மாலாவை மணக்க, சுபம்!

அஞ்சலி தேவியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கிறது. அதுவும் சார்மிங்காகத்தான் இருக்கிறது.

சாரங்கபாணி எப்போதுமே அழுத்தி அழுத்தித்தான் பேசுவார். Like rolling the “R”s in English. அது இந்த ரோலுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.

ஆர். பாலசுப்ரமணியம் அந்த காலத்து மேஜர் சுந்தரராஜன். எல்லா படத்திலும் அப்பா.

ஜெமினி வை. மாலாவை கல்யாணம் செய்து கொள்ள ஊர்வலமாக வரும்போது வாண வேடிக்கை, யானைகள், குதிரைகள், பூப்பல்லக்கு எல்லாம் அமர்க்களப்படுகிறது! இப்படித்தான் அந்தக் காலத்தில் இருக்குமா என்ன?

ஜெமினி டைட்டிலில் ஆர். கணேஷ்தான். இன்னும் ஜெமினி கணேசன் ஆகவில்லை. டைட்டிலில் வரும் முதல் பேர் சாரங்கபாணி!

பாட்டுக்களுக்காவே பார்க்கலாம். படம் quaint ஆகவும் இருப்பது ஒரு போனஸ். வை. மாலா இன்னொரு போனஸ்! 10க்கு 6.5 மார்க். C+ grade.

பாலச்சந்தருக்கு அப்போதே receding hairline. எனக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்!

அடுத்த பக்கம் »