தமிழ் பட லிஸ்டை வைத்து ஒரு பதிவு ஓட்டுகிறேன் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். லிஸ்ட் போட்டுவிட்டேன்.

தமிழில் நல்ல படங்கள் மிகக் குறைவு. நல்ல பொழுதுபோக்கு படங்கள் கூட மிக குறைவு. பொழுதுபோக்கு படம் மட்டுமே எடுத்த எம்ஜிஆரின் படங்களில் ஒரு ஆறேழுதான் நல்ல பொழுதுபோக்கு படம். ஜெய்ஷங்கருக்கு ஒன்றிரண்டு தேறினால் அதிகம். ரஜினிகாந்தின் எந்த படத்தை வேற்று மொழி நண்பர்களுக்கு பார்க்க சொல்லி சிபாரிசு செய்வீர்கள்? ஒரு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன, ஜப்பானிய, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுகு, கன்னட, பிஹாரி, வங்காள, மலையாள நண்பருக்கு என்ன தமிழ் படம் பார்க்க வேண்டியது என்று சொல்வீர்கள்?

உண்மையில் மொழி தெரியாதவர்களுக்கு என்ன படம் சிபாரிசு செய்யலாம் என்பதுதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அப்படி எனக்கு தேறுவது மிக குறைவே. (பொழுதுபோக்கு படங்களை சேர்த்தாலும்).

  1. எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – பிரமாண்டத்துக்காக.
  2. எஸ். பாலச்சந்தரின் அந்த நாள் – அற்புதமான திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம்.
  3. சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் – சிறந்த நடிப்பு, இசை.
  4. சிவாஜி நடித்த நவராத்திரி – சிறந்த நடிப்பு.
  5. கே. பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் – நல்ல கதை
  6. கே. பாலச்சந்தர், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு – அருமையான நகைச்சுவைப் படம். தேங்காய் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.
  7. கே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் – ஒரு உண்மையான கதை, நல்ல நடிப்பு.
  8. மணிரத்னம், கமலின் நாயகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு, இசை.
  9. கமலின் மைக்கேல் மதன காமராஜன் – அருமையான நகைச்சுவைப் படம். கிரேசி மோகனுக்கு ஒரு ஜே!
  10. கமலின் தேவர் மகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு.

Honourable Mention என்று கொஞ்சம் தேறும்.

  1. எஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் – நல்ல மசாலா.
  2. கலைஞர், சிவாஜியின் பராசக்தி, மனோகரா – தமிழ் புரியாவிட்டால் இவற்றை பார்ப்பது கஷ்டம். நல்ல வசனங்கள், நடிப்பு.
  3. எம்ஜிஆரின் நாடோடி மன்னன் – நல்ல மசாலா
  4. சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் – மிகை நடிப்பின் சிறந்த பிரதிநிதி
  5. பானுமதியின் அன்னை – நல்ல நடிப்பு
  6. கே. பாலச்சந்தரின் பாமா விஜயம் – சிரிக்கலாம்.
  7. சோவின் முகமது பின் துக்ளக்- தமிழின் ஒரே சடையர்
  8. சிவாஜி நடித்த கெளரவம் – நல்ல நடிப்பு.
  9. மகேந்திரன், ரஜினிகாந்தின் முள்ளும் மலரும் – நல்ல கதை, நடிப்பு
  10. மணிரத்னம், ரஜினிகாந்தின் தளபதி – எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்.
  11. கமலின் பஞ்சதந்திரம் – சிரிக்கலாம்.

எனக்கு இப்போது நினைவு வராத படங்களையும் சேர்த்தால் என்ன ஒரு 25-30 நல்ல படம் தேறுமா? கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா? நல்ல தமிழ் படங்கள் வருவது ஏன் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறது?

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
டாப் டென் உலக சினிமா
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

விமர்சனங்கள்:
அந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது
அன்னை
சந்திரலேகா
கப்பலோட்டிய தமிழன்
மேஜர் சந்திரகாந்த்
மனோகரா, விகடன் விமர்சனம்
முகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்
நாடோடி மன்னன், விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்


சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

அடிமைப் பெண்

அடிமைப் பெண்

அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

வழக்கம் போலவே விகடன் விமர்சனத்தை போட்டதும் என் விமர்சனம் தொடர்கிறது.

சோவின் நாடக பங்களிப்பு குறைத்து மதிக்கப்படுவது. அவர் பெர்னார்ட் ஷாவோ இப்சனோ இல்லைதான். ஆனால் கிரேக்க காமெடி நாடக ஆசிரியர் என்று கொண்டாடப்படும் அரிஸ்டோஃபநஸ் அளவுக்காவது மதிக்கலாம். அவரது சடையர் மிகவும் topical ஆனது. பத்து வருஷம் போனால் பல நுண்ணிய விஷயங்கள் அந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கே மட்டுமே புரியும். அவர்களுக்கே மறந்து போய்விடலாம். உதாரணமாக சர்க்கார் புகுந்த வீடு என்ற “நாவலில்” கந்தசாமியும் ராகவையரும் நாராயணசாமி நாயுடுவிடம் தங்களுக்கு இருக்கும் மளிகை பால் கடனை எப்படி அடைப்பது என்று யோசனை கேட்கப் போவார்கள். அவர் “என்னது கொடுத்த கடனை அடைக்கறதா? நீங்கள்ளாம் எம்ஜிஆர் ஆளுங்களா?” என்று பொங்கி எழுவார். அவர் எண்பதுகளின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று போராடியவர். எம்ஜிஆர் முடியாது என்று ரொம்ப நாள் மறுத்தார். அன்று படித்தவுடன் குபீர் சிரிப்பு கிளம்பியது. இன்று எத்தனை பேருக்கு இது புரியும்?

நல்ல வேளையாக அவர் இந்த நாடகத்தில் இந்திரா காந்தி, ராஜாஜி, கலைஞர், கம்யூனிஸ்டுகள் போன்றவர்களை கிண்டல் செய்கிறார். அதனால் இந்த நாடகத்து ஜோக்குகள் சுலபமாக புரியும். நாடகம் வந்தபோது தி.மு.க., முக்கியமாக கலைஞர் பயங்கர கடுப்பாகிவிட்டார் என்றும், நானே அறிவாளி என்று சோவை கிண்டல் செய்து ஒரு நாடகம் எழுதி அரங்கேற்றினார் என்றும் சொல்வார்கள்.

என்னடா நாடகம் பற்றியே எழுதுகிறானே என்று பார்க்கிறீர்களா? சோவின் சினிமாக்கள் எல்லாமே அவர் நாடகங்களை வீடியோ எடுத்த மாதிரிதான் இருக்கும். படமே பார்க்க வேண்டாம். ஒலிச்சித்திரம் கேட்டால் போதும். படத்தின் உயிரே வசனம்தான். படம் நகர்வதும் வசனங்கள் மூலம்தான். உண்மையை சொல்லப் போனால் நாடகம் இந்த சினிமாவை விட பெட்டர். அதனால்தான் நாடகத்தை பற்றியே இது வரை பேசிக் கொண்டிருக்கிறேன்.

1971-இல் வந்த படம். சோவை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் கொஞ்சம்தான். மனோரமா, சுகுமாரி, நீலு, வெ.ஆ. மூர்த்தி அவ்வளவுதான். அதுவும் மூர்த்தி ஒரு ஐடம் நம்பருக்கு வந்து பாட்டு பாடிவிட்டு போய்விடுவார். சோவே இயக்கிய படம். டைரக்ஷன் கற்றுக்கொள்ள முயற்சி என்று டைட்டிலில் போட்டிருப்பார். இசை எம்எஸ்வி.

சினிமா வரவிடாமல் கலைஞரும் எம்ஜிஆரும் தடுக்க முயற்சி செய்தார்களாம். எம் எஸ்வி இசை அமைக்கக் கூடாது என்று பிரஷர் கொடுத்தார்களாம். எம்எஸ்வி நீங்கள் சோவை கிண்டல் செய்து படம் எடுங்கள் நான் அதற்கும் இசை அமைத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

தெரிந்த கதைதான். சரித்திர ஆராய்ச்சியாளர் துக்ளக், இபின் பதூதா ஆகியோரின் உடல்களை கண்டெடுக்கிறார். அவர்கள் இன்னும் இறக்கவில்லை, ஒரு மாதிரி கோமாவில் இருக்கிறார்கள். விழித்து எழுந்த பின் துக்ளக் எம்.பி. எலெக்ஷனில் நின்று ஜெயிக்கிறார். கட்சிக்கு வரும் எல்லா எம்.பி.க்கும் மந்திரி பதவி என்று அறிவிக்கிறார். 400 எம்.பி.க்கு மேல் இவர் கட்சிக்கு தாவுகிறார்கள். அதில் ஒருவரை உதவி பிரதமராக போகிறார் என்று வதந்தி வந்ததும் அந்த ஒருவரைத் தவிர எல்லாரும் கட்சியை விட்டு போய்விடுகிறார்கள். கட்சிக்கு வரும் எல்லா எம்.பி.க்கும் உதவி பிரதமர் பதவி என்று அறிவிக்கிறார். 450-க்கும் மேல் உதவி பிரதமர்கள். நாட்டின் பிரச்சினைகளுக்கு நூதனமான தீர்வுகள் – ஆட்சி மொழி ஹிந்தியா, ஆங்கிலமா? இரண்டுமில்லை, பாரசீகம். லஞ்சத்தை ஒழிக்க லஞ்சத்தை சட்ட ரீதியாக்கி வெளிப்படையாக ரேட் போடுகிறார். கடைசியில் பார்த்தால் துக்ளக், பதூதா இருவரும் நாட்டில் அரசியல் கேலிக்கூத்தாகிவிட்டது என்று காண்பிக்க வேஷம் போட்டிருக்கும் இளைஞர்கள். ஆனால் இப்போது துக்ளக்குக்கு பதவி ஆசை வந்துவிட்டது. பதூதாவை தந்திரமாக கொன்றுவிடுகிறார். பதவியில் நீடிக்கிறார்.

சோ சும்மா புகுந்து விளையாடுகிறார். அவருக்கேற்ற ரோல். ஒரு கிறுக்குத்தனம் தெரியும். அவர் ஒரு மாதிரி குதித்து குதித்து நடப்பது பிரமாதம். கொஞ்சம் நாடகத்தனத்துடன் நீண்ட வசனம் பேசலாம். You can roll the Rs. இந்த ரோலுக்கு எல்லாம் பொருந்தி வரும்.

வசனமோ! மனிதருக்கு கிண்டல் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. அதுவும் கலைஞர் மாதிரி பேசுபவர் அசத்திவிட்டார். கொஞ்சம் கட்டை குரலில் அருமையாக பேசுவார். ராஜாஜி மாதிரி வருபவர் ஒரு பொதுக் கூட்டத்தில் சொல்வார் – “உங்களுக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு தெரியாது, எனக்குதான் தெரியும்!” பிரதமர் துக்ளக் அமைச்சரவை கூட்டத்தில் சொல்வார் – “அடுத்த மாதம் நான் அமேரிக்கா போகிறேன்!”, “எதுக்கு?” “நான் அமேரிக்கா பார்க்க வேண்டாமா?” துக்ளக் பதூதாவிடம் அசன் ஷாவை அறிமுகப்படுத்துவார் – “இவன்தான் இந்த நாட்டின் முதல் தர முட்டாள்! மற்றவர்கள் எல்லாம் இரண்டாம் தர முட்டாள்கள், அவர்களை உனக்கு அறிமுகப்பட்டுத்த வேண்டியதில்லை!”

துக்ளக்கும் பதூதாவும் பேசிக் கொள்ளும் ஆரம்பக் காட்சியை இங்கே தவறாமல் பாருங்கள்.

காட்சியின் தொடர்ச்சி இங்கே.

அல்லா அல்லா, பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இங்கு என்று இரண்டு பாட்டுகள் ஞாபகம் வருகிறது.

தமிழின் மிக அபூர்வமான சடையர் படம். அருமையான வசனங்கள். நல்ல நகைச்சுவை. சோவின், பதூதாவாக வருபவரின், சுகுமாரியின் நல்ல நடிப்பு. பத்துக்கு 7.5 மார்க். கட்டாயமாக பாருங்கள்.

முகமது பின் துக்ளக்

முகமது பின் துக்ளக்

படம் வந்தபோது விகடனில் வந்த விமர்சனம் (21-3-1971). நன்றி, விகடன்!

எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும்.

இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக்.

அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்.

தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த லிஸ்டை கவனித்தேன். தமிழில் தேர்தல் படங்களுக்கு பாஸ்டன் பாலா ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். வழக்கம் போல ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பாதி படம் நான் பார்த்ததில்லை, வேறு யாராவது குறிப்பு எழுத வருகிறீர்களா?

முகமது பின் துக்ளக் – சோ: எனக்கு சினிமாவை விட நாடகம் பிடிக்கும். தமிழின் சிறந்த நாடங்களில் ஒன்று. சோ கலக்கி விடுவார். துக்ளக் தேர்தல் கூட்டங்கள் மகா ஜாலியாக இருக்கும்.

ஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்: பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா?

கண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி: இது என்ன குருதிப் புனலின் திரை வடிவமா? பார்த்ததில்லை.

ஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்: பார்த்ததில்லை.

அக்ரஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்: நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா?

தியாக பூமி – கல்கி: எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பார்க்க ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதா? ஆனால் இந்த கதையில் தேர்தல் கீர்தல் எதுவும் கிடையாதே?

சிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி: நல்ல பாட்டுகள், வெளி நாட்டு படப்பிடிப்பு, பார்க்கக் கூடிய மசாலா படம். இந்த படத்திலும் தேர்தல் ஒன்றும் கிடையாதே?

நிஜங்கள்: கேள்விப்பட்டதே இல்லை.

தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்: தமிழின் தலை சிறந்த நாடகம் + திரைப்படங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். தேர்தலை அத்திப்பட்டிக்காரர்கள் “பாய்காட்டுவார்கள்”.

மக்களாட்சி – ஆர் கே செல்வமணி: இதெல்லாம் ஒரு படம், இதற்கெல்லாம் கருத்து ஒரு கேடு.

முதல்வன் – ஷங்கர்: பொதுவாக எனக்கு ஷங்கரின் படங்கள் பிடிக்கும். இந்த படம் மிக பிடித்திருந்தது. படம் பார்க்கும்போதெல்லாம் இந்த ரோலில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.

இருவர் – மணிரத்னம்: ஒன்றும் பிரமாதம் இல்லை. படம் பார்க்கும் பொது ஒவ்வொரு மைனர் காரக்டரும் உண்மையில் யார் என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.

அச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்: அருமையான பாட்டு போட்ட வி.எஸ். நரசிம்மன் எங்கே போனார்? பார்க்கலாம்.

தேசிய கீதம் – சேரன்: என்னவோ நினைத்து என்னவோ நடந்துவிட்டது. கதை சரி இல்லாத பிரச்சினைதான்.

அமைதிப்படை – சத்யராஜ்: பார்த்ததில்லை.

சத்யா – கமல்ஹாசன்: நல்ல முடிச்சு. கமல் அருமையாக நடித்திருப்பார். சிட்டிக்கு நல்ல ரோல். வளையோசை கலகலகலவென அருமையான பாட்டு. ஹிந்தி ஒரிஜினலான அர்ஜுனும் நன்றாக வந்திருக்கும்.

என் உயிர்த் தோழன் – பாரதிராஜா: என்றாவது பார்க்க வேண்டும்.

பாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி: பார்க்கக் கூடிய மசாலா படம்.

அருணாச்சலம் – ரஜினி: ஜாலியான ரஜினி படம்.

மகாநடிகன் – சத்யராஜ்: சிரிப்பே வராத படம். சத்யராஜ் லொள்ளு பண்ணமாட்டார், பார்ப்பவர்களை கொலை பண்ணுவார்.

1950-க்கு 1951 பரவாயில்லை. 25 படங்கள் வந்திருக்கின்றன.

அண்ணாவின் புகழ் பெற்ற நாடகமான ஓரிரவு இந்த வருஷம் வந்தது. இதை பார்த்துதான் கல்கி அவரை தமிழ் நாட்டு பெர்னார்ட் ஷா என்று பாராட்டினாராம். அவ்வளவாக ஓடவில்லை.

எம்ஜிஆரின் சர்வாதிகாரி படம் இந்த வருஷம் வந்ததுதான். சோ ராமசாமி எமர்ஜென்சி காலத்தில் துக்ளக் நடத்தியபோது பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர் இந்திராவை குறை சொல்ல இந்த படத்துக்கு அப்போது – 1975-இல் – விமர்சனம் எழுதினாராம்.

நாகி ரெட்டி குடும்பத்தினரின் விஜயா மூவீஸ் எடுத்த புகழ் பெற்ற படமான பாதாள பைரவி வந்ததும் இந்த வருஷம்தான். பாதாள பைரவி ஆந்திராவில் எஸ்.வி. ரங்காராவை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. பாதாள பைரவி, மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகிய படங்களை ஆந்திராவில் பார்க்க வேண்டும். தொண்ணூறுகளிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடின. நானே ஹைதராபாதில் பார்த்திருக்கிறேன்.

எம்ஜிஆரை மேலே தூக்கிய படங்களில் மர்ம யோகி முக்கியமானது. இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்!

என்.எஸ். கிருஷ்ணன் எடுத்த மணமகள் படமும் இந்த வருஷம்தான் வந்தது. இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பிரபலம்.

மலைக் கள்ளன் படம் இந்த வருஷம் வந்தது என்று போட்டிருக்கிறது. தவறான தகவல். அது வந்தது 1954-இல்.

நான் பார்த்த படங்கள் ஓரிரவு, சர்வாதிகாரி, மர்ம யோகி, மணமகள் ஆகியவைதான். ஓரிரவு பற்றி அடுத்த பதிவில்.

உங்களுக்கு ஓ. ஹென்றியின் கதைகள் பிடிக்குமா? கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். இந்த படம் பார்க்கும் போது எனக்கு ஓ. ஹென்றி ஞாபகம் வந்தது. இந்த ஸ்டைலில் படங்கள் வருவது மிக அபூர்வம். அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன்.

எனக்கு ஓ. ஹென்றி ஸ்டைலில் கதை உள்ள படமாக இப்போது ஞாபகம் வருவது சோ திரைக்கதை எழுதி, சிவாஜி, வாணிஸ்ரீ, முத்துராமன் நடித்து முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய நிறைகுடம் என்ற ஒரே படம்தான். (விளக்கே நீ தந்த ஒளி நானே என்ற நல்ல பாட்டு உண்டு)

இயக்குனர் பி. வாசுவின் மகனான ஷக்தி, சந்தியா, சரண்யா மோகன், சந்தானம், ஸ்ரீநாத், கல்யாண மாலை மோகன், கீர்த்தி சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை வித்யாசாகர். இயக்கம் பி.வி. ரவி.

மூன்று பாட்டுகள் எனக்கு பிடித்திருந்தன. தஜம் தஜ்ஜம் இனிமையான பாட்டு. விழியில் விழியில் ஒரு நேர்காணல் சண் டிவியில் சில முறை பார்த்திருக்கிறேன். வரிகளின் இடையில் வரும் இசை அருமையாக இருந்தது. காட்சியும் நன்றாக இருக்கும். என்ன, தமிழ் சினிமா இலக்கணப்படி பனி இருந்தாலும் ஹீரோயினுக்கு ஸ்லீவ்லெஸ் டிரஸ்தான். என் பாடல் காலம் உள்ள காலம் வரை என்ற பாட்டு ஒரு peppy song.

கதைதான் படத்தின் ப்ளஸ் பாயின்ட். சென்னையிலிருந்து திரும்பும் ஷக்தியின் காதல் கதையை கூட்டுக் குடும்பத்தில் உள்ள எல்லாரும் ஒவ்வொருவராக வந்து கேட்டுக் கொள்கிறார்கள். தங்கை சரண்யாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் குடும்பமும் அன்பாக இருக்கிறார்கள். ஆனால் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. கடைசியில் ஷக்தி மாப்பிள்ளையின் தங்கைக்கு தாலி கட்டினால்தான் சரண்யாவுக்கு கல்யாணம் ஆகும் நிலைமை. குடும்பத்தில் எல்லாரும் எடுத்து சொல்லியும் ஷக்தி மறுக்கிறார். கல்யாணம் நின்று விடுகிறது. ஏன் என்பதுதான் ட்விஸ்ட்.

பாசமான, வசதியான குடும்பங்கள். ஒவ்வொருவராக வந்து எனக்கு மட்டும் ஏன் உன் காதல் கதையை சொல்லவில்லை என்று கேட்பது நன்றாக இருந்தது. காமெடி என்று பெரிதாக இல்லை. இந்த மாதிரி படத்துக்கு காமெடி மிக அவசியம். குடும்பத்தோடு தைரியமாக பார்க்கலாம். ஆபாசம், அரிவாள் எதுவும் இல்லை. என்ன ட்விஸ்ட் வரும் வரை பெரிய சுவாரசியமும் இல்லை. ட்விஸ்டுக்கு பிறக்கும் கதையை யானை பொம்மை வரை இழுத்ததும், போலிசை இவ்வளவு கேனையனாக காண்பித்ததும் திரைக்கதையில் ஓட்டைதான்.

சரண்யா பார்க்க அழகாக இருக்கிறார். சந்தியா ஓவர் கொஞ்சல். இந்த படத்துக்கு ஒரு பெரிய ஹீரோ இருந்தால் படம் இன்னும் நன்றாக ஓடி இருக்கலாம்.

10க்கு 6.5 மார்க். C+ grade. டைம் பாஸ், பார்க்கலாம்.

இந்த போஸ்டை முதலில் ஒரு மறுமொழியாகத்தான் அளிக்க முயன்றேன். பின்னர் இதுவே ஒரு தர்க்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் போஸ்டாக அப்-க்ரேட் செய்துவிட்டேன்.

RV சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள் போஸ்டில், சுஜாதா “நெஞ்சில் ஓர் ஆலயம்” மற்றும் ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாக மேற்கோள் காட்டியது இது:
”இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார்.”
இது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர் 1.

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.
இது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர்2.

கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.
இது அவ்வளவு அடாவடி இல்லாத ஸ்டேட்மண்ட்.

”பிடிக்க்கவில்ல” என்பதுடன் நிறுத்தியிருந்தால் இந்த வம்பில் மாட்டியிருக்க மாட்டார். நானும் கொஞம் வம்பு இழுத்து தான் பார்க்கலாமே எனற என் எண்ணத்தை கைவிட்டிருப்பேன். ஆனால் அவருக்கோ, வம்பில் மாட்டுவது என்பது அல்வா சாப்பிடுவது போன்றது. “கறுப்பு, சிவப்பு, வெளுப்பு” வெளி வந்த காலத்தில் எவ்வளவு வம்பில் மாட்டினார் என்பது சுஜாதா வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சுஜாதா என்பதால் நாம் அவர் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு காலத்தில் சோவையும்(சோவையும் தான் வம்பிற்க்கு இழுப்போமே!), சுஜாதாவையும் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருந்தேன். ”கரையெல்லாம் செண்பகப்பூ” திரைப்படம் சரியாக ஓடாத பொழுது இப்படி ஒரு ஜீனியஸின் கதையை தமிழர்கள் ஆதரிககவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். இதைவிட யார் பிரமாதமாக கதை சொல்லிவிடமுடியும் என ஒரு இறுமாப்பு கூட என்னிடம் வளர்ந்தது. ஆனால் பின்னர் பகுத்தறிவு வளர, வளர இவர்களுடைய சில கருத்துகள் ஓட்டை நிறைந்ததாக பட்டது.

உதாரணத்திற்க்கு, சோ அவர்கள் மைக்கேல் ஜாக்‌ஷன் நடனங்களை “கீ கொடுத்த பொம்மை போல் இருக்கிறது” என்றும், “இதையெல்லாம் நடனம் என்று எப்படி சொல்வது?” என்றும் கூறினார். இது இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் சோவிற்கு மட்டும் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். ஆனால் அமேரிக்காவிற்க்கும், நாகரீகம் அடைந்த நாடுகளுக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும், ஏன் இளைய பாரதத்திற்க்கும் கூட MJயின் நடனம் தானே முதன்மையாகத் தெரிகிறது. இன்று நமது கலாச்சாரத்தில் முக்கால்வாசி (முக்கால்வாசி என்பது ஒரு அப்ராக்‌ஷிமேஷனே) நடன ஆசிரியர்களுக்கு MJ மானசீக குருவாக, ஏன், தெய்வமாகவே இருக்கிறார். சோ இவ்வாறு கூறி பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் இன்றும் அவர் கூறியது எனக்கு எந்த வகையிலும் அர்த்த்ம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. குருடன் யானையை பார்த்த மாதிரி தோன்றுகிறது.

இதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் பரதம், கதக் போன்ற நடனங்கள் மக்களை (குடியேறிய இந்தியர்கள் தவிர்த்து) அதிகம் கவராத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பரதம், கதக் போன்ற கிழக்கத்திய நடனங்கள் பிரபலம் அடையாத போதிலும் மற்றும் எந்த பெரிய ரசனையையும் ஏற்படுத்தாத போதிலும், மேல் நாடுகளில் இவைகளை வெளிப்படையாக விமர்சிக்காமல் கண்ணியம் காத்திருக்கிறார்கள்.

அவருடைய கண்மூடித்தனமான பா.ஜ.க ஆதரிப்பும் மனதிற்க்கு ஒரு நடுநிலமை உடைய தலைவரை இழந்தது போன்ற சுமையை கொடுக்கிறது.

சரி. சுஜாதா நெஞ்சில் ஒரு ஆலயம் தமிழ் திரையுலகத்திற்க்கு கதியற்ற நிலைமையை கொடுத்துள்ளது என்பது எதைப் பார்த்து? ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது? ஒருவேளை பப்ளிசிடி ஸ்டண்டா? தெரியவில்லை. ஆனால் நிச்சயம் “விக்ரம்” திரைபடத்தை விட “நெஞ்சில் ஓர் ஆலயம்” நன்றாகவே இருக்கிறது. கண்ணதாசனை காப்பி அடித்தார் என்று குறை சொல்கிறார். “விக்ரம்” திரைபடத்தின் ஒவ்வொரு ஹை-டெக் யுக்தியும் அயன் ஃப்லெமிங்கின் (Ian Lancaster Fleming) அப்பட்ட காப்பி தானே?

திரையுலகத்தில் AR Rahman முதற்கொண்டு எல்லோரும் காப்பி தான் அடிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் திரைபடத்தின் தலைப்பை கூட, ஏதோ தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் காப்பி அடிக்கிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம்: ராமன் தேடிய சீதை. தலைப்பென்ன? கதையையே ”ரீ-மிக்ஸ்” என்ற பெயரில் காப்பி போட்டு குடிக்கிறார்கள். தமிழ் திரைபட உலகில் ”காப்பி” என்பதன் ”எவல்யூஷன்” இது.  ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு காப்பி அடித்த காலம் போக கோலிவுட்டையே கோலிவுட்டுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சலாமியா நாட்டு பழக்க வழக்கங்கள் Octopussy காப்பி தானே? கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும்? அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன்? சுஜாதா மற்றும் நாமெல்லாம் போற்றும் “அந்த நாள்” யுக்திகளே காப்பி தான்.

மக்களுக்கு ஒரு வித போதையை கொடுக்கும் எந்த ”காப்பிக்கும்” தமிழ் திரையுலகத்தில் இடம் உண்டு.

1969ல் வந்த படம். AVM ப்ரொடெக்‌ஷன்ஸில் வெளிவந்தது.

நடிகர்கள் AVM ராஜன், நாகையா, கோபாலக்கிருஷ்ணன், சிவக்குமார், சோ, T.R. ராமச்சந்திரன், V.K. ராமசாமி, ஒர் விரல் கிருஷ்ணாராவ்
நடிகைகள் வாணிஸ்ரீ, லக்‌ஷ்மி, SN லக்ஷ்மி, S.சகுந்தலா, மனோரமா, பானுமதி
வசனம் நிர்மலா
ஒளிப்பதிவு தம்பு
பாடல்கள் கண்ணதாசன்
இசை M.S. விஸ்வனாதன்
பின்னணி L.R.ஈஸ்வரி. T.M.S, P.சுசீலா
தயாரிப்பு M.முருகன், M.சரவணன், M.குமரன்
டைரக்‌ஷன் கிருஷ்ணன்-பஞ்சு

நாகையா, மனைவி S.N.லக்‌ஷ்மி இருவருக்கும் கோபாலகிருஷ்ணன், AVM ராஜன், ஊனமுற்ற தங்கை லக்‌ஷ்மி ஆகியோர் வாரிசுகள்.  நாகையாவுக்கு ஃபாக்டரியில் வேலை செய்யும் போது கண் போய்விடுகிறது. அதன் பின் மருமகள் சகுந்தலா கொடுமை படுத்துகிறாள். AVM ராஜன் பொறுப்பு வந்து பாண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு கட்டட வேலை செய்யப் போன இடத்தில் வேலையை இன்னொருவருக்கு தியாகம் செய்துவிட்டு தத்துவப் பாடல் ஒன்றை அவிழ்த்துவிடுகிறார். அந்தப் பாடல் ”சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்”.

பின்னர் ராமச்சந்திரன் வாலட்டை கண்டுபிடித்துக்கொடுத்து அவர் மூலமாக டிரைவர் வேலை கண்டுபிடித்துக்கொள்கிறார். எந்த வேலையிலும் நிலைக்காமல் கடைசியில் வாணிஸ்ரீயின் தந்தை வி.கே.ராமசாமி கம்பெனியில் அண்ணன் மேனேஜர், தம்பி குமாஸ்தா.

சோ  VKராமிசாமியை நல்ல மிளகாய் அரைக்கிறார். ராமச்ச்ந்திரனின் மகன் சிவக்குமார் லக்‌ஷ்மியுடன் ஜோடி சேருகிறார்.

அண்ணன் கோபாலகிருஷ்ணன் மனைவி பேச்சைக் கேட்டு குடும்பத்தை கைவிட்ட பிறகு AVM ராஜன் குடும்பத்தை பல கஷ்டங்களுக்கு இடையில் காப்பாற்றுவதுதான் கதை. திரைகதையை நன்றாக சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார்கள் கிருஷ்ணன் பஞ்சு.

“முத்தான ஊர்கோலமோ”, “மோதிரம் போட்டது”, “மலரும் மங்கையும் ஒரு ஜாதி”, “இறைவா உனக்கொரு கேள்வி” என்ற பாடல்கள் சுசீலா பாடுகிறார். ”பொன்னாலே” என்ற பாட்டை வெ.நிர்மலாவிற்க்காக LR ஈஸ்வரி பாடுகிறார். பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்க்கவில்லை. வார்த்தைகள் பரவாயில்லை

வசனம் நன்றாக இருக்கிறது. நார் பெருமையானதா? பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா?” என்று பூவை அலட்சியம் பண்ணுவார்கள். ஆனால் நாரையோ பெருமையாக மாம”நாரு” என்று பெருமையாக சொல்வார்கள்.

வாணிஸ்ரீ அழகாக இருக்கிறார்.

நல்ல பாசம் நிறைந்த குடும்பக் கதை. ஆனாலும் 19 ரீல் பாசம் கொஞசம் ஓவர் தான்.

கடைசி சீன் ஜோக் – சோ மனம் திருந்துகிறார். அவர் கைவிட்ட பானுமதியிடம் “நான் திருந்திட்டேன்”  என்கிறார். அவர் “அப்படிச் சொல்லாதிர்கள்” என்று சொல்ல,  “இல்லை, அப்படித்தான் சொல்லனும்” என்கிறார் சோ, கடைசி சீன் என்பதை குறிப்பிட்டு.

6/10 மார்க்.

அடுத்த பக்கம் »