அன்னமிட்ட கை (Annamitta Kai)


1972இல் வெளியிடப்பட்டது. எம்ஜிஆர், நம்பியார், மனோகர், ஜெயலலிதா, பாரதி, வி.கே. ராமசாமி, நாகேஷ், மனோரமா நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசை. வாலி எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

பாடல்கள் மோசம் இல்லை. ஆனால் கே.வி. மகாதேவனிடமும் எம்ஜிஆரிடமும் எதிர்பார்க்ககூடிய தரம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு aside. புகழேந்தி கே.வி. மகாதேவனின் நிரந்தர உதவியாளர். அவர் தனியாக சில படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும், கே.வி. மகாதேவனிடம் இருந்த பக்தியாலும் விஸ்வாசத்தாலும் கடைசி வரைக்கும் அவரோடேயே இருந்தார். இசைத் துறையில்தான் இந்த மாதிரி விஸ்வாசம் சாதாரணமாக காணப்படுகிறது. எம்எஸ்வி தன் குருநாதரான எஸ்.எம். சுப்பையா நாயுடுவையும் அவரது மனைவியையும் தன் வீட்டிலேயே வைத்து பராமரித்தார். இளையராஜாவுக்கு அவரது குருக்களான ஜி.கே. வெங்கடேஷிடமும் தன்ராஜ் மாஸ்டரிடமும் இருந்த பக்தி சினிமாக்காரர்களுக்கு தெரியும். நடிப்பு, இயக்கம் போன்ற துறைகளில் இது அவ்வளவாக தென்படுவதில்லையே, ஏன்?

“அன்னமிட்ட கை” எம்ஜிஆரின் தத்துவப் பாட்டுக்களில் ஒன்று. டிஎம்எஸ்ஸின் குரலில் நல்ல உற்சாகம் இருக்கும். பாட்டைக் கேட்டவுடன் வாலி எம்ஜிஆருக்காக எழுதியது என்று சொல்லிவிடலாம்.

“ஒண்ணொண்ணா ஒண்ணொண்ணா சொல்லு சொல்லு” ஒரு சுமாரான பாட்டு. டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் கோட்டு சூட்டு டையுடன் பாடுவார். எம்ஜிஆர் தன் டூயட்டுக்களுக்கு ஒரு ஃபார்முலா வைத்திருந்தார். செட் போட்டு எடுத்தால் ஒன்று கோட்டு சூட்டு டை. இல்லாவிட்டால் ராஜ ராணி உடை. வெளிப்புற படப்பிடிப்பு என்றால் கோட்டு சூட்டு. அப்போதுதான் ரிச்சாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.

“மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு” பாரதியும் எம்ஜிஆரும் பாடும் டூயட். டிஎம்எஸ் சுசீலா. எம்ஜிஆர் தன் ரசிகர்களை கவர்வதற்காக ராஜா உடையில் வந்து பாடுவார். பாரதி ஒரு அழகான நடிகை. தமிழில் ஏன் பெரிய கதாநாயகியாக வரமுடியவில்லை என்று தெரியவில்லை. அவரது குரலில் வேற்று மாநில வாடை அடிப்பதாலோ என்னவோ?

“அழகுக்கு மறு பெயர் கண்ணா” நல்ல பாட்டு. இந்த ஒரு பாட்டு மட்டும் டிஎம்எஸ் எஸ். ஜானகி குரலில். ஜெ அப்போதெல்லாம் இன்று இருப்பது போல் குண்டாக இல்லை. அதற்காக அவருக்கு “நூலிடை” என்றெல்லாம் சொல்லக்கூடாது!

“பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா” என்றும் ஒரு பாட்டு உண்டு. சுசீலா.அது வரும்போது நான் தூங்கிவிட்டேனோ என்னவோ – இந்தப் பாட்டை மிஸ் செய்துவிட்டேன்.

பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.

எம்ஜிஆர் நடித்த கடைசி கறுப்பு வெள்ளை படம் என்று ஞாபகம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. சில காட்சிகள் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டவை. அவரது குரல் மாறுபாடு தெரிகிறது. படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். எனது நினைவுகள் சரியாக இருந்தால் இது எம்ஜிஆரின் அபூர்வமான தோல்வி படங்களில் ஒன்று. (ப்ளம் கவனிக்க) அன்னமிட்ட கை தவப் புதல்வனோடும் வசந்த மாளிகையோடும் போட்டி போட்டது என்று நினைக்கிறேன். சிவாஜியின் அந்த இரண்டு படங்களும் பெரிய hits.

கதை வழக்கம் போல் முதல் காட்சியிலேயே யூகிக்கக்கூடிய ஒன்றுதான். எம்ஜிஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் மக்கள். எம்ஜிஆர் உரிமை உள்ள (இளைய) வாரிசு. அப்பாவின் தவறான பழக்கங்களால் எம்ஜிஆர் அவரை பிரிந்து தாத்தா வீட்டில் வளர்வார். நம்பியார் எங்கோ ஓடிப்போய் வளர்வார். எம்ஜிஆர் எப்படி வளர்ந்திருப்பார், நம்பியார் எப்படி வளர்ந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்கள் தமிழனே அல்ல. (கலைஞர் terminologyயில் “அவாள்”ஆக கூட இருக்கமுடியாது) வளர்ந்த இருவரும் தற்செயலாக சந்தித்து ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்வார்கள். தியாகச் சுடரான எம்ஜிஆர் தன் அண்ணனை வாரிசாக நடிக்க சொல்வார். முதலாளியாக எப்போதுமே இருக்க விரும்பும் நம்பியாருக்கு தியாகியான எம்ஜிஆரிடம் கொஞ்சம் பயம் இருக்கும். கைவிடப்பட்ட நம்பியாரின் அம்மா பண்டரிபாய் குருடி. இறந்துபோனதாக கருதப்படும் அப்பா உயிரோடுதான் காடுகளில் சுற்றிக்கொண்டிருப்பார். மனோகரின் சூழ்ச்சி, பாரதியின் ஒரு தலை காதல், நம்பியாரின் பணத்தாசை எல்லாவற்றையும் சமாளித்து ஜெயை காதலித்து எஸ்டேட் தொழிலாளர்களின் தலைவனாகி, பெரியம்மா பண்டரிபாய்க்கு மீண்டும் கண் கொடுத்து, நம்பியாரை திருத்தி அப்பப்பா! புரட்சித் தலைவரால்தான் முடியும்!

பாரதி அழகாக இருக்கிறார். “அவளுக்கென்று ஒரு மனம்” படத்திலும் நன்றாக இருப்பார். (இதுவும் இந்த ப்ரோக்ராமில் முன்னால் திரையிடப்பட்டது, ஒரு தாமதமான விமர்சனம் எழுதலாமா என்று ஒரு யோசனை.)

எம்ஜிஆரின் அப்பாவாக வருபவர் பேர் முத்தையா (சாரதா, நன்றி!)யார்? அஅவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். “மோட்டார் சுந்தரம் பிள்ளை”யிலும் சிவாஜியின் மாமனாராக வருவார். (இதுவும் இந்த ப்ரோக்ராமில் முன்னால் திரையிடப்பட்டது, ஒரு தாமதமான விமர்சனம் எழுதலாமா என்று ஒரு யோசனை.)

நகைச்சுவை பகுதி சுமாராக இருந்தது. நாகேஷும் மனோரமாவும் வி. கே. ராமசாமியும் தமிழ் சினிமா பாட்டுக்களை பாடியே காதல், காதலுக்கு அப்பாவின் எதிர்ப்பு, அப்பாவுக்கு காதலர்கள் எதிர்ப்பு எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்கள். தமிழில் எல்லாத்துக்கும் பாட்டு இருக்கிறது!

படத்தில் சிம்பாலிக் டயலாக் ஜாஸ்தி. உதாரணத்துக்கு ஒன்று. எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக நினைக்கும் பாரதி அடுப்பங்கரையில் கன்னத்தில் கொஞ்சம் கரியோடு இருக்கும் ஜெயிடம் எம்ஜிஆர் தன்னை காதலிப்பதாக சொல்வார். அதை கேட்டவுடன் ஜெ கையில் இருக்கும் பாத்திரத்தை தவறவிட்டுவிடுவார். அப்போது டயலாக்குகள்.

பாரதி: என்னாச்சு?
ஜெ: கை தவறிடுச்சு.
பாரதி: நீ ஜாக்கிரதையா வச்சிருந்திருக்கணும்
ஜெ: ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன், அப்படியும் தவறிடுச்சு.
பாரதி: பரவாயில்லே, நான் எடுத்துக்கிறேன்.
ஜெ: எனக்கு அடுப்பில் வேலை இருக்கு, அப்புறம் பேசலாம்.
பாரதி: முகத்திலே கரி, துடைச்சுக்கோ!

படத்தில் வீர தீர சாகசங்கள் அதிகம் இல்லை. சுவாரசியமும் கம்மிதான். தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் தவிர மற்றவர்கள் மிஸ் செய்துவிடலாம். ரொம்ப வேண்டுமென்றால் பாட்டுக்களை மட்டும் கேட்கலாம்.