சிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரசிகர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.

இதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார்? ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.

கட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.

பந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)

1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.

சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு!

இதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன?

சிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.

ஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.

பாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.

இன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்!

எஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது? அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.

ஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.

Highbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம்! சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.

சிவாஜிக்கு பாட்டு கிடையாதோ? வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ?

வேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.

தொடர்புடைய பதிவுகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்
ம.பொ.சி – ஒரு மதிப்பீடு
கப்பலோட்டிய தமிழன்
மனோகரா, விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்
ஆயிரத்தில் ஒருவன்
எஸ். வரலக்ஷ்மி அஞ்சலி

படம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!

மாணி: வெற்றிவேல்! வீரவேல்!

முனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா?

மாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…

முனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணி:- ஏன் அண்ணே..?

முனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி! சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு?

மாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே! இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே!

கவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.

முனு: காதலர்கள் யார் யார்?

மாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே! வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.

முனு: வெள்ளையம்மா யாரு?

மாணி: பத்மினிதான்! ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே!

முனு: கலர் எப்படி?

மாணி: கண் குளிர்ந்தது அண்ணே! வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.

முனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…

மாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…

முனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..?

மாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான்! டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.

முனு: மொத்தத்திலே…

மாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே!

தொடர்புடைய பதிவுகள்
ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

படம் வெளியானபோது – 26/4/59-இல் வந்த விகடன் விமர்சனம். நன்றி, விகடன்!

என் விமர்சனம் இங்கே. ஸ்ரீதர் பக்கம் இங்கே.

சேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா? அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு!

சந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக் கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா! உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.

சந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா? ஆங்கிலமா?

சேகர்: அசல் தமிழ்ப் படமே தான். ‘கல்யாண பரிசு’ பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க!

சந்தர்: நல்ல கதையா? சொல்லப்பா சுருக்கமாக!

சேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண்ணீரே பெருகுகிறது.

சந்தர்: இடையிலே காமிக் வருகிறதா, இல்லையா?

சேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.

சந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்?

சேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா?

சந்தர்: சரி, வில்லன் யாரு?

சேகர்: இது வழக்கமான திரைக்கதை இல்லையே? ஆகவே வில்லனே கிடையாது. கதையிலே வர அவ்வளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.

சந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே?

சேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே! கௌரவமான பாத்திரமாகவே நடிக்கிறார்.

சந்தர்: நாகேசுவர ராவ்?

சேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.

சந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி?

சேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம்! மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப்புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு!

தொடர்புடைய பதிவுகள்
கல்யாணப் பரிசு – என் விமர்சனம்
ஸ்ரீதர் பக்கம்

பாலாஜி பற்றிய பதிவுக்கு வந்த ஒரு மறுமொழியில் ராஜநாயஹம் பாலாஜி பற்றி எழுதியதை யாரோ (கிருஷ்ணமூர்த்தி?) சுட்டி இருந்தார்கள். நான் கவனிக்க தவறிவிட்டேன். ராஜநாயஹத்தின் பதிவில் பாலாஜி தவிர பல விஷயங்கள் இருப்பதால், பாலாஜி பகுதியை மட்டும் இங்கே சவுகரியத்துக்காக கொடுத்திருக்கிறேன்.

‘திரும்பி பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது. பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம். You should look gracefully old என்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது. நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரயங்களை, நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார்.

பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார். கிருஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன்தான் பாலாஜி. இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை ‘திரும்பி பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார்.

ஜெமினி கணேசனின் உற்ற நண்பர். நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி. இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி. படித்தால் மட்டும் போதுமாவில் சிவாஜிக்கு அண்ணனாக, பலே பாண்டியாவில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில்தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது.

நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதாநாயகனாக , காமெடியனாக , வில்லனாக(Glamour Villain!) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக, ஸ்பஷ்டமாக இருக்கும்.

நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே ‘பிரேமபாசம் ‘ படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர். ஜெமினி-சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி.

ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி “டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு”

வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே.ஆர். விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர்தான் பாலாஜி .

பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது!

“ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்! நெருப்பாய் எரிகிறது”

“பண்ணோடு பிறந்தது கானம். குல பெண்ணோடு பிறந்தது நாணம்”

“நல்லவன் எனக்கு நானே நல்லவன்”

“பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை”

“ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்!”

“உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ”

“இரவு முடிந்து விடும். முடிந்தால் பொழுது புலர்ந்து விடும்”

ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும்) பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் விட்டார். அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்து விட்டார்.

பாலாஜி பற்றி மறு பக்கமாக சில விஷயங்கள் உண்டு. யாருக்குதான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை? சொல்லுங்கள்!

ராஜநாயஹம் இப்போதெல்லாம் பதிவு எழுதுவது குறைந்துவிட்டது. :-(

ஆதி மனிதன் பாட்டு கீழே.

தொடர்புடைய பதிவுகள்
தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு
பாலாஜி பற்றி விகடனில் 1964-இல் வந்த ஒரு கட்டுரை
பாலாஜியை பற்றி ரவி ஆதித்யா
பாலாஜி பாட்டு லிஸ்ட்

இட்லி வடையில் பார்த்தேன், மணிவண்ணனும் எழுதிவிட்டார்.

பாலாஜி என் கண்ணில் குறிப்பிடப்பட வேண்டிய நடிகர் எல்லாம் இல்லை. ஒரு also ran-தான். அவர் நடித்த படங்கள் என்று யோசித்துப் பார்த்தால் நினைவுக்கு வருவது பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, சகோதரி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை, திருடன், தியாகம், என் கடமை (வில்லன்), சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் மாதிரி வெகு சில படங்கள்தான். எல்லா படங்களிலும் சும்மா வந்து போவார். எனக்கு தெரிந்து அவர் ஹீரோவாக நடித்தது மனமுள்ள மறு தாரம் என்ற ஒரு மொக்கைப் படம்தான் (திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம் என்ற அருமையான பாட்டு உள்ளது). அவர் எம்ஜிஆருடன் நடித்தது என் கடமை படத்தில் மட்டும்தானோ?

ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவர் சாதனை புரிந்திருக்கிறார். பாலாஜி-சிவாஜி காம்பினேஷன் ரீமேக் படங்களாக எடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். அவர் எடுத்த படங்கள் ஒரு பத்து பதினைந்து வருஷங்கள் தோல்வியே அடைந்ததில்லை. ரீமேக்தான் செய்வார். வெற்றி பெற்ற படங்களாக பார்த்து தமிழுக்கு கொண்டு வருவார். சாதாரணமாக சிவாஜி ஹீரோ. எம்எஸ்வி இசை. சிவாஜியை வைத்து அவர் எடுத்த மொக்கைப் படங்களான நீதிபதி, தீர்ப்பு எல்லாம் கூட செமை ஓட்டம் ஓடியது. சிவாஜியை வைத்து அதிக படங்கள் தயாரித்தவர் இவர்தானாம் – 17 படங்கள். என்ன படம் என்று யாராவது லிஸ்ட் கொடுங்கப்பா/கொடுங்கம்மா!

மனிதருக்கு midas touch இருந்தது. நீதி, எங்கிருந்தோ வந்தாள், திருடன், தியாகம், தீபம் என்று சிவாஜி கூடவும், தீ, பில்லா, விடுதலை என்று ரஜினி கூடவும், சவால், சட்டம் என்று கமல் கூடவும் வெற்றி மேல் வெற்றி. பில்லா ரஜினியை சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்.

அவர் எடுத்த முதல் படத்தில் ஜெமினி ஹீரோவாம் – அண்ணாவின் ஆசை என்று பேராம்.

ஒரு பேட்டியில் அவர் ஒரு முறை தன ரீமேக் ரகசியத்தைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு முறையும் பம்பாய் போய் இறங்கும்போது டாக்சி டிரைவரிடம் பேச்சு கொடுப்பாராம். என்ன படம் நன்றாக இருக்கிறது, என் இப்படி சொல்கிறீர்கள் என்று அவரிடம் ஒரு பேட்டி எடுப்பாராம். அதை வைத்துதான் இந்த படத்தை ரீமேக் செய்யலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பாராம். அவருக்கு அது நன்றாகவே வொர்க் அவுட் ஆகியது.

மோகன்லாலின் மாமனார். அவர் மகன் சுரேஷ் பாலாஜியும் தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவரது குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.

சில பாலாஜி பாட்டு வீடியோக்கள் கீழே.

ஆண்டொன்று போனால் வயதொன்று ஆகும்

பொன் ஒன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

அத்திக்காய் காய் காய்

நண்பர் சூர்யா இந்த தகவல்களை தருகிறார்: சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்றாலே சிவாஜி கதாநாயகன். கதாநாயகனின் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ராதா, வசனம் ஏ.எல்.நாராயணன், இசை எம்.எஸ்.விஸ்வநாதன் என்று ஒரு சில விஷயங்கள் படம் வெளியாகும் முன்னரே எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
ஏ.சி.திரிலோக்சந்தர், சி.வி.ராஜேந்திரன், ’பில்லா’ கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களையே அவர் பயன்படுத்தி வந்தார்.
ரஜினி, கமல், சிவகுமார், மோகன், சத்யராஜ் என்று பலரை வைத்தும் பின்னாளில் அவர் படங்கள் எடுத்தபோதும், இத்தனை வருடங்களில் அவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுத்ததே இல்லை. இதே போல சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் சிவாஜியை வைத்து ஒரு படம் கூட தயாரித்ததே இல்லை.
ரிஷிகேஷ் முகர்ஜியின் நமக் ஹராம் என்ற படத்தை பாலாஜி உனக்காக நான் என்று தமிழில் எடுத்தபோது, அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் சிவாஜியும், ராஜேஷ் கன்னா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிக்கலாம் என்று ஒரு வதந்தி அப்போதைய பத்திரிகைகளில் பரவியது நினைவுக்கு வருகிறது. இறுதியில் அதில் நடித்தவர் ஜெமினி கணேசன்.
Gods must be crazy என்ற ஆங்கிலப்படத்தை இந்தியாவில் வினியோகம் செய்யும் உரிமையைப் பெற்று அனைவரையும் மிரள வைத்தவர் பாலாஜி.
பிற்காலத்தில் அவரது பல படங்கள் வியாபார ரீதியாகத் தோல்வியுற்றதும், வனவாசம் போல ஒதுங்கியிருந்தார்.
ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தைக்கு, தமிழ் திரைப்பட உலகில் ஒரு தயாரிப்பாளர் தகுதியானவர் என்றால், அது பாலாஜியாகத் தானிருக்க முடியும்.

நண்பர் தாஸ் இந்த தகவல்களை தருகிறார்: நாகேஷ் பாலாஜிக்கு நன்றி கடன் பட்டிருந்தார். அவர் முன்னுக்கு வர பாலாஜி மிகவும் உதவி புரிந்தார். தனக்கு எடுப்பது போல் நாகேஷுக்கும் துணி எடுத்துக்க் கொடுப்பாராம். தனது வீட்டிலேயே நாகேஷை தங்க வைத்து போஷித்தார்.

நண்பர் ரவி ஆதித்யா பாலாஜி பற்றி இங்கே ஒரு அருமையான பதிவை எழுதி இருக்கிறார்.

chandrababu

1957-இல் தமிழ் சினிமா பற்றி எழுத இந்த வார இறுதி ஆகும் என்று நினைக்கிறேன். அதனால் இன்னொரு ஓசி போஸ்ட் போட்டுக் கொள்கிறேன்.

1-3-64-இல் வெளி வந்த பேட்டி. நன்றி, விகடன், விகடன் பொக்கிஷம்!

தூத்துக்குடி காங்கிரஸ்காரர் ஜே.பி. ராட்ரிக்ஸின் பதின்மூன்று குழந்தைகளில் ஆறாவது மகன், சந்திரபாபு. சிறு வயதிலிருந்தே விகடம் பண்ணுவதுதான் அவனுடைய பொழுதுபோக்கு. பிறர் போல் பேசியும் நடித்தும் காட்டச் சளைக்கமாட்டான். ஆங்கில சினிமா பார்த்துவிட்டு வந்தால் போதும், சார்லஸ் போயர், லாரன்ஸ் ஒலிவியர், ஃப்ரெடரிக் மார்ச் ஆகியவர்களை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவான். சரியாகப் பிடித்துவிட்டது சினிமாப் பைத்தியம்! இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. முடிவு – தனி மனிதனாகி விட்டான் கலைஞன் சந்திரபாபு.

ஒரு விதத்தில் சந்திரபாபு சென்னைக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது ஜப்பான்காரன்தான். சென்ற யுத்தத்தின்போது இலங்கையில் குண்டுகள் விழுந்ததும், அங்கு குடியேறியிருந்த ராட்ரிக்ஸின் குடும்பம் இந்தியாவில் வந்து குடியேறியது.

தூத்துக்குடியிலிருந்து தனியாகப் புறப்பட்ட சந்திரபாபு, கையில் ஆறணா காசுடன் எழும்பூரில் வந்து இறங்கினார். எங்கு போவது, யாரைப் பார்ப்பது என்று புரியவில்லை. அப்போது, தந்தை தினமணியில் பணிபுரிந்துகொண்டிருப்பது நினைவுக்கு வர, அங்கே போனார். ஆனால், அங்கு தந்தை இல்லை. வேலையை விட்டு விட்டுப் போய்விட்டார் என்றார்கள். எங்கு குடியிருக்கிறார் என்று கூட ஒருவருக்கும் தெரியவில்லை.

சந்திரபாபுவுக்குத் தலை சுற்றியது. களைப்பு, பசி, ஏமாற்றம்! உடல் பதறியது. நிற்க முடியவில்லை. தடார் என்று தரையில் சாய்ந்துவிட்டார். அருகே இருந்த அன்பர் ஒருவர் – விருத்தாசலம் என்று பெயர் – உதவியுடன் மயிலாப்பூர் மாருதி பார்மஸி வந்து சேர்ந்தார். மலேரியா ஜுரத்துக்கு மருந்து எழுதிக் கொடுத்த டாக்டர், தந்தை இருக்கும் விலாசத்தையும் கொடுத்தார். மருந்து புட்டியுடன் தந்தை வசித்த வீட்டிற்குள் நுழைந்தார் சந்திரபாபு.

பின், அங்கிருந்து திருவல்லிகேணி காங்கிரஸ்காரர் ஏ.ஆர்.வி.ஆச்சார் இருந்த லாட்ஜில் குடி புகுந்தார். அப்போதெல்லாம் இந்திப் பாட்டுக்களைப் பிரமாதமாகப் பாடிக்கொண்டு இருப்பார் பாபு. அதிசயப்பட்ட ஆச்சார், அவரை டைரக்டர் கே.சுப்ரமணியத்திடம் கொண்டு விட்டார். அங்கு பலவிதமான நடனங்களைப் பயின்றார் சந்திரபாபு. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் ஒரு நடனப் படத்தில் நடிப்பதாகவும் ஏற்பாடாயிற்று. ஆனால், அது பாதியிலேயே நின்றுபோய்விட்டது.

”அப்புறம் மனம் உடைந்து போய், அலைஞ்சுக்கிட்டிருந்தேன். பி.எஸ்.ராமையாவின் முயற்சியால் ‘தன அமராவதி’ என்கிற படத்தில் ஒரு சான்ஸ் கிடைச்சுது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே தகராறு பண்ண ஆரம்பிச்சுட்டேன். குடுமி வைக்கிறதுக்காக மொட்டை அடிச்சுக்கணும்னு சொன்னாங்க. நான் மாட்டேன்னேன். அப்போ என் தலை முடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். அதைத் தியாகம் செய்ய மனசு வரலே. அப்போ செட்டிலேயிருந்த பழைய நண்பர் விருத்தாசலம் (அவர்தான் புரட்சி எழுத்தாளர் புதுமைப்பித்தன்) ‘மொட்டை அடிச்சுக்கோ! அதனால என்ன? மறுபடியும் வளர்ந்துட்டுப் போகுது’ன்னார். சரின்னு ஒப்புக்கிட்டேன். ஆனால் மொட்டை அடிச்சுக்கிட்டதுதான் மிச்சம். படம் கோவிந்தா ஆயிடிச்சு! அதற்கப்புறம் எங்கெங்கேயோ போனேன். யார் யாரையோ கேட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியக்காரன் மாதிரிதான் ட்ரீட் பண்ணினாங்களே ஒழிய, திறமையுள்ள கலைஞன் மாதிரி மதிக்கலே. கடைசியிலே ஜெமினி அதிபர் வாசனைப் போய்ப் பார்த்தேன். அவரும் உற்சாகமா பதில் சொல்லலே. சரி, இனிமேல் உயிரோடு இருந்து பிரயோசனம் இல்லை என்று முடிவுக்கு வந்து ஜெமினி ஸ்டுடியோவிலேயே விஷம் குடிச்சு மயக்கமா விழுந்தேன். கேமராமேன் தம்புவும், ஜெமினி கணேசனும்தான் என்னை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணிக் காப்பாத்தினாங்க. அப்படி ஒரு ட்ராஜிடியிலே ஆரம்பிச்சதுதான் இந்தக் காமெடியனின் வாழ்க்கை.”

ஜெமினியின் மூன்று பிள்ளைகள் படத்தில் ஒரே ஒரு ஸீனில் ஒரு டைரக்டர் வேஷத்தில் நடித்து எஸ்.எஸ்.வாசனின் பாராட்டைப் பெற்றதையும், அதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியதையும் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார் பாபு.

சகோதரி படத்தில் தன் பாத்திரம் அமைந்த விதம் பற்றிக் கூறினார். படத்தை முடித்து, அதைப் போட்டுப் பார்த்த ஏவி.எம். அவர்கள், அதில் காமிக் சேர்க்கவேண்டும் என்று விரும்பி, சந்திரபாபுவைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்டாராம். சந்திரபாபு படத்தைப் பார்த்துவிட்டு, மனத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அதற்கு வசனம் எழுதி, எங்கெங்கே நுழைக்கவேண்டும் என்றும் தீர்மானித்து, ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

நான் ஒரு முட்டாளுங்க… ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க என்ற பல்லவி என்னுடையதுதான். மிச்சம்தான் கண்ணதாசனுடையது. ஒரே நாள்லே டியூன் போட்டு ரிக்கார்ட் பண்ணி, அந்தக் காட்சியையும் முடித்துக் கொடுத்தேன். அப்படி உருவானதுதான் அந்த அருமையான பால்காரர் வேஷம்!”

சந்திரபாபு வணங்கும் கடவுள்: சார்லி சாப்ளின்.

ஆர்வி: நான் ஒரு முட்டாளுங்க பாட்டை இங்கே கேட்கலாம்.

சந்திரபாபு நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சபாஷ் மீனாதான். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

31 படங்கள் வந்திருக்கின்றன. நான் பெண்ணின் பெருமை 1955-இல் வந்தது என்று நினைத்தேன், ஆனால் தமிழ் விக்கிபீடியா 1956 என்று சொல்கிறது. நான் பார்க்க விரும்புபவை குல தெய்வம், சதாரம், தாய்க்கு பின் தாரம், பெண்ணின் பெருமை, ராஜா ராணி. பார்த்தவை அமர தீபம், தெனாலி ராமன், பாச வலை, மதுரை வீரன், ரங்கூன் ராதா. எனக்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் இந்த வருஷம்தான் வந்தது என்று ஞாபகம்.

பெண்ணின் பெருமை, குல தெய்வம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, இருந்தாலும் ஏனோ பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையில் ஒரு பாட்டை இங்கே காணலாம். சதாரம் புகழ் பெற்ற நாடகம் என்று கேள்வி. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே என்ற பாட்டு இந்த படத்தில்தான். தாய்க்கு பின் தாரம் எம்ஜிஆர் நடித்து வெற்றி பெற்ற முதல் சமூகப் படம். தேவர் ஃபில்ம்ஸ் தயாரிப்பு. ஆனால் அதற்கு பிறகும் எம்ஜிஆர் திருடாதே (1961) வரும் வரைக்கும் சமூகப் படங்கள் பக்கம் போகவில்லை, ஏனென்று தெரியவில்லை. ஆஹா நம்மாசை நிறைவேறுமா என்ற அருமையான பாட்டு இந்த படத்தில்தான். பாட்டை இங்கே கேட்கலாம். ராஜா ராணியில் சிவாஜி பல ஓரங்க நாடகங்களில் கலக்குவார் என்று கேள்வி. ஒரு காட்சி கீழே.

அமர தீபம் நன்றாக ஓடியது. முக்கோணக் காதல் கதை. ஸ்ரீதர் அப்போதே தன் கை வேலையை ஆரம்பித்துவிட்டார். இப்போது ரசிக்காது. சிவாஜி அழகாகவே இருப்பார். பத்மினி, சாவித்ரி இருவரும் நாயகிகள். அருமையான பாட்டுகள். தேனுண்ணும் வண்டு, ஜாலிலோ ஜிம்கானா, நாடோடி கூட்டம் நாங்க தில்லாலங்கடி லேலே, இதெல்லாம் ஞாபகம் வருகிறது. தேனுண்ணும் வண்டு மிக அற்புதமான பாட்டு. இசை சலபதி ராவ்.

தெனாலி ராமன் போர் அடித்தது. சிவாஜிதான் தெ. ராமன். என்.டி.ஆர். கிருஷ்ணதேவராயரோ?

பாச வலை அனேகமாக எம்.கே. ராதா ஹீரோவாக நடித்த கடைசி படமாக இருக்கும். போர். அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை, லொள் லொள் லொள் போன்ற ஹிட் பாட்டுகள் உடையது.

மதுரை வீரன் எம்ஜிஆரை மிகவும் மேலே ஏற்றியது. பானுமதி, பத்மினி இருவரும் நாயகிகள். இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படும் படங்களில் ஒன்று. ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா (தீன கருணாகரனே நடராஜா மெட்டேதான்), ஆடல் காணீரோ, நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே மறக்க முடியாத பாட்டுகள். மற்ற பாட்டுகள் நினைவு வரவில்லை. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏச்சுப் பிழைக்கும் பாட்டுக்கு எம்ஜிஆர் நன்றாக டான்ஸ் ஆடுவார். ஆடல் காணீரோ பாட்டு கீழே.

ரங்கூன் ராதாதான் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள கடைசி படம் என்று நினைக்கிறேன். நாவலை கொஞ்சம் bowdlerize பண்ணி இருப்பார்கள். சிவாஜி நன்றாக நடித்திருப்பார். தலை வாரி பூச்சூடி உன்னை என்ற பாரதிதாசன் பாட்டு இந்த படத்திலா? சரியாக நினைவில்லை. இதை பற்றி ராண்டார்கை எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது அலிபாபாதான். என் பெண்கள் கூட ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன். என்றாவது வீடியோ கொண்டுவந்து காட்ட வேண்டும். அதைப் பற்றி அடுத்த பதிவில்.

விஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.

தமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.

மிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.

அருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்!

பணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்!

பாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.
ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.

ஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்!

தெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)

மொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.

ஜுரம் வந்து இந்த சீரிஸில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தொடர்கிறேன்.

1955-இல் 34 படங்கள் வந்திருக்கின்றன. நான் பார்த்தவை கணவனே கண் கண்ட தெய்வம், குலேபகாவலி, மாமன் மகள், மிஸ்ஸியம்மா இவைதான். பார்க்க விரும்புபவை கள்வனின் காதலி, டவுன் பஸ், டாக்டர் சாவித்ரி (வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டுக்காக), மகேஸ்வரி, மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி, கோமதியின் காதலன்.

சிவாஜிக்கு நிறைய படங்கள் – உலகம் பல விதம், கள்வனின் காதலி, காவேரி, கோடீஸ்வரன், மங்கையர் திலகம், பெண்ணின் பெருமை, முதல் தேதி. எம்ஜிஆருக்கு குலேபகாவலி மட்டும்தான் போல. ஜெமினி பெரிய ஹீரோவாக ஆரம்பித்துவிட்டார். மாமன் மகள், பெண்ணின் பெருமை, கணவனே கண் கண்ட தெய்வம், குண சுந்தரி, மகேஸ்வரி, நீதிபதி ஆகிய படங்கள் அவருக்கு.

கள்வனின் காதலி சுவாரசியமாக செல்லும் ஒரு நாவல். எப்படி படம் ஆக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல். சிவாஜி, பானுமதி, சாரங்கபாணி நடித்தது. வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்ற அருமையான பாட்டு உண்டு. யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

டவுன் பஸ் பற்றி ஒன்றும் தெரியாது – ஆனால் நல்ல பாட்டுகள் நிறைய உண்டு. கே.வி. மஹாதேவன் இசை. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா, பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் ஆகிய பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

டாக்டர் சாவித்ரி பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அதில் என்.எஸ்.கே. பாடும் வாதம் வம்பு செய்யக் கூடாது பாட்டு எனக்கு பிடிக்கும். அதிலும் இரண்டு வரிகள்:
அம்பது ரூபா சம்பளக்காரன் பொண்டாட்டி – தினம்
ஒம்பது முறை காப்பி குடிப்பது அநீதி!

சின்ன வயதில் விழுந்து விழுந்து சிரிப்போம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

மகேஸ்வரி தெலுங்கில் மல்லேஸ்வரி என்று வெளிவந்தது. தெலுங்கில் இது ஒரு க்ளாசிக் படம். எனக்கு தெரிந்த ஒரு தெலுங்கு மாமியால் தெலுங்கில் இந்த படம் பார்த்து ரசித்திருக்கிறேன். கிருஷ்ண தேவராயர் இரவில் நகர்வலம் போகும்போது ஒரு காதலி தன் காதலனிடம் தான் ராணியாக வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். உடனே தான் மணந்து கொள்வதாக அந்த பெண்ணை அந்தப்புரத்துக்கு அழைத்து வந்துவிடுகிறார். காதலனை பிரிந்து தவிக்கும் காதலியாக சாவித்ரி, ராஜாவாக என்.டி.ஆர்., காதலனாக ஏ.என்.ஆர். நடித்த படம். தமிழில் ஏ.என்.ஆருக்கு பதில் ஜெமினி.

மங்கையர் திலகம் சிவாஜி படம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை. பெண்ணின் பெருமையும் அப்படித்தான். முதல் தேதி சிவாஜி படம். ஒன்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்ற என்.எஸ்.கே. பாட்டு பிரபலம். யாராவது MP3 இருந்தால் சொல்லுங்கள்.

கோமதியின் காதலன் தேவன் எழுதிய நாவல். எப்படி படமாக்கி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவல்.

கணவனே கண் கண்ட தெய்வம் நல்ல பாட்டுகள் – உன்னை கண் தேடுதே, அன்பில் மலர்ந்த நல் ரோஜா, எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது ஏனோ- நிறைய உடையது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். அஞ்சலி தேவி மாய மந்திரம் நிறைந்த ஒரு சீரிஸ் படங்களை - மணாளனே மங்கையின் பாக்யம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் மாதிரி – ஜெமினி ஹீரோ, தன் கணவர் ஆதி நாராயண ராவ் இசை, மாயாஜால காட்சிகள் இவற்றை வைத்து எடுத்தார். இதுதான் முதல் என்று நினைக்கிறேன். இந்த படங்களை இன்று பார்ப்பது கஷ்டம்.

குலேபகாவலி எம்ஜிஆரை இன்னும் மேலே ஏற்றியது. சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ போன்ற இனிமையான பாடல்களை கொண்டது. பாட்டுகளை இங்கே கேட்கலாம். ஏதோ அரேபிய கர்ண பரம்பரை கதை போல தெரிகிறது. குல்-எ-பகாவலி என்றால் ஹிந்தியில் பூந்தோட்ட சொந்தக்காரி என்று பொருளோ?

மாமன் மகள் ஜெமினி, சந்திரபாபு நடித்தது. ஜெமினிக்கு வெற்றிப்படம் என்று நினைக்கிறேன். மரண கடிப் படம். கோவா மாம்பழமே என்று சந்திரபாபு பாடும் ஒரு பாட்டு கொஞ்சம் சுமாராக இருக்கும்.

இந்த வருஷம் வந்த படங்களில் எனக்கு பிடித்தது மிஸ்ஸியம்மாதான். அதை பற்றி அடுத்த பதிவில்.

நான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.

தமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.

என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!
ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை!
ஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை!

வட நட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு!
மாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்!
வட மொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில பிரசங்கம்!
வாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்!
அமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்
அத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,
கண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி!
பரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்!
பதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு
சில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து
வரும் காதல்! அவ்விதமே துன்பம் வரும், போகும்!
மகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்
இரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

ஐம்பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.

பிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன? சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.

தயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.

இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.

1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி(ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.

மேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக பிரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெற வில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களை ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.

திராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அடுத்த பக்கம் »