போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்க்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ இருந்தபோதுதான் என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். சிவாஜி, எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே எ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீல மலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

ஜம்பு புகழ் கர்ணனை பற்றி படித்தது. நன்றி, ரவிப்ரகாஷ்!

குதிரைகளும் தப்பித் தவறிக்கூட யாரையும் மிதிக்காதாம். காமிரா மேதை கர்ணனே சொல்லியிருந்த ஒரு தகவல் இது.

அவரது படங்களில்தான் குதிரை அதற்கான லட்சணத்தோடு மிடுக்காக இருக்கும். மற்ற படங்களில் வரும் குதிரைகள் எல்லாம் வண்டிக் குதிரை மாதிரி சொத்… சொத்தென்று நடந்து வர, கர்ணன் படத்தில் மட்டும் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் பறக்கும். எப்படித்தான் அதை அத்தனை அழகாகப் படம் பிடித்தாரோ என்று வியப்பாக இருக்கும். கங்கா என்றொரு படம். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது. இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கும். அதில் குதிரைகள் ஓட்டம் அபாரமாக இருக்கும். சில காட்சிகளில், பார்க்கும் நம்மையே தாண்டிக் கொண்டு ஓடுகிற மாதிரியான கோணங்களில் எல்லாம் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி எப்படிப் படம் பிடித்தார் என்று ரொம்ப நாள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. வலுவான பெரிய கண்ணாடித் தளம் ஒன்றை அமைத்து, குதிரைகளை மேலே ஓடவிட்டு, காமிராமேன் கீழே இருந்து படம் பிடித்தாரோ என்று கூட நான் யோசித்தது உண்டு.

அது அப்படியல்ல! தப்பித் தவறிக் கூட குதிரைகள் யாரையும் மிதிக்காது என்கிறார் கர்ணன். இந்தத் தன்மை குதிரைகளிடம் இருப்பது தெரிந்து, அவர் தைரியமாக ஒரு காரியம் செய்தாராம். மூவி காமிராவோடு அவர் தரையில் படுத்துப் படம் எடுக்கத் தொடங்கிவிடுவாராம். தூரத்திலிருந்து பல குதிரைகள் அவர் படுத்திருக்கும் பாதை வழியாகத் துரத்தப்படுமாம். அவை வேகமாக ஓடி வந்து, கர்ணனைத் தாண்டிக்கொண்டு ஓடிவிடுமாம். ‘அந்தக் காட்சியை அப்படியே நான் படம் பிடித்துவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார் கர்ணன்.

என்னதான் குதிரைகள் மிதிக்காது என்றாலும், தைரியமாக அப்படிப் படம் பிடிப்பதற்குத் துணிச்சல் வேண்டும்தானே!

கர்ணனை பற்றிய முந்தைய பதிவு இங்கே

கர்ணனை ஜம்பு போன்ற படங்களை எடுத்தவர் என்ற முறையில்தான் ரொம்ப நாளாக தெரியும். சமீபத்தில்தான் முரளி கண்ணன் எழுதிய ஒரு பதிவு மூலம் அவரை பற்றி ஓரளவு தெரிய வந்தது. குதிரை மிதிக்காது என்று சொல்வது வேறு, அதை ப்ராக்டிகலாக டெஸ்ட் செய்து பார்ப்பது வேறு. இப்படிப்பட்ட ஒரு திறமையாளர், தைரியசாலி வெறும் ஜம்பு புகழ் கர்ணனாக இருப்பது துரதிருஷ்டம்தான்.

நண்பர் வெங்கட் எழுதிய மறுமொழியை இங்கே பதிப்பித்திருக்கிறேன். நன்றி, வெங்கட்!

பஞ்சு அருணாச்சலம் பற்றி தன் பார்வை-360 பதிவில் சுஜாதா:

….சினிமாவாக மாறிய என் முதல் கதை ‘காயத்ரி’ 1977_ல் வெளிவந்தது. தினமணி கதிரில் வந்த கதையை பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க விரும்பினார். பஞ்சு ஒரு நல்ல வாசகர். ரஜினிகாந்த் என்ற புதிய நடிகரும் ஸ்ரீதேவியும் நடிப்பதாகச் சொன்னார். படம் முடிந்து முதல் பிரதியை தனியாக ரஜினிகாந்துடன் உட்கார்ந்துகொண்டு ப்ரொஜெக்ஷன் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. எழுதப்பட்ட கதை சினிமாவாக மாறும்போது, எப்படியெல்லாம் வேஷம் மாறும் என்பதை எனக்கு முதலில் உணர்த்திய அனுபவம்/ அது, ஒரு வகையில் ‘ப்ரியா’ போன்ற பெரிய அதிர்ச்சிகளுக்கு என்னைத் தயார்படுத்தியது. இளம் ரஜினிகாந்த் அடர்த்தியான தலைமுடியுடன் வசீகரமான தோற்றத்துடன் வீற்றிருக்க, இரண்டு பேரும் சிகரெட் பிடித்துக் கொண்டு தனியாகப் பார்த்தோம். ரஜினிகாந்த் அதில் வில்லன். கதாநாயகன் ஜெய்சங்கர் வந்து காப்பாற்றுவதற்குள் ஸ்ரீதேவி படத்தில் இறந்துவிடுவார்.

30 ஆண்டுகளும், அவர் 153 படங்களும், நான் 250 கதைகளும் கடந்து ‘சிவாஜி’யில் மறுபடி சந்தித்தபோது, அந்த முதல் நாட்கள் அவருக்கு நினைவிலிருக்கிறதை அறிந்தேன்.

‘காயத்ரி’ முடிந்த கையோடு பஞ்சு அருணாசலம் குமுதத்தில் வெளிவந்த ‘அனிதா இளம் மனைவி’யையும் படமாக எடுக்க முடிவு செய்திருந்தார். அப்போது ‘16 வயதினிலே’ படம் வெளிவந்து பாரதிராஜா என்னும் புதிய சகாப்தத்தைத் துவக்கியது. அந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘இது எப்படி இருக்கு?’ என்று அடிக்கடி சொல்வார். பஞ்சு அருணாசலம் அதையே தன் புதிய படத்துக்கு டைட்டிலாக வைத்தார். ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, எல்.விஜயா நடித்தனர். இதில் நடித்த காலஞ்சென்ற மேஜர் சுந்தர்ராஜனை பலநாள் கழித்து ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ‘நீங்கதான் எழுதினீங்களா? என்ன கதை என்று தெரியாமலேயே நடித்தேன். அதில் நான் யாரு?’ என்று கேட்டார்.

‘உண்மையா சொன்னா நீங்கள் அதில் ஒரு டெட் பாடி’ என்றேன்.

‘அனிதா இளம் மனைவி’ கதை அதுதான். இறந்துபோய்விட்டதாக அடையாளம் காட்டப்பட்டவர் உயிரோடுதான் இருக்கிறார். ‘இது எப்படி இருக்கு?’ ‘16 வயதினிலே’ என்ற புயலில் காணாமற் போயிற்று. பஞ்சு அருணாசலம் கவலைப்படவில்லை. ‘ப்ரியா’வில் எடுத்துரலாம்ங்க’ என்றார்.
……
பத்திரிகைகளிலோ நாவலாகவோ வந்ததை அப்படியே எடுக்கிறார்களா என்பது வேறு விஷயம். ஹெமிங்வேயிடம் farewell to arms, for whom the bell tolls போன்ற கதைகளின் திரைவடிவத்தைப் பற்றி கேட்டபோது ‘Take the money and run’ என்றாராம். ‘ப்ரியா’ ஓர் உத்தம உதாரணம்.

பஞ்சு அருணாசலம் அது தொடர்கதையாக வந்தபோதே அதற்கு கர்ச்சீப் போட்டு வைத்திருந்தார். கன்னடம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எடுக்க பூஜை போட்டார்கள். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அம்பரிஷ் நடிக்க இளையராஜாவின் இசையில் சில பாடல்கள் இன்றும் ஒலிக்கின்றன.

‘லண்டனில் எல்லாம் போய் எடுக்க முடியாது. மிஞ்சிப்போனால் சிங்கப்பூரில் எடுக்கிறோம். அங்கே நீர்ச்சறுக்கல், டால்ஃபின் மீன்கள் என்று அற்புதமான காட்சிகள் வைக்கலாம்’ என்றார்.

இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது என்று கேட்பதை முதலிலேயே நிறுத்திவிட்டேன். சினிமா என்பது மற்றொரு பிராணி என்பதை என் குறுகிய கால சினிமா அனுபவமே உணர்த்தியிருந்தது.

கதாநாயகி பாதியில் இறந்துபோகக் கூடாது என்ற அதே விதி இதிலும் காரணம் காட்டப்பட்டது. ரஜினிகாந்த் இதில் கணேஷாக வந்து டூயட் எல்லாம் பாடினார். சிங்கப்பூரில் ராஜகுமாரன் வேஷத்தில் வந்தார். பலமாடிக் கட்டிடங்கள் முன் ‘ஓ ப்ரியா’ என்று பாட்டுப் பாடினார். பாஸ்போர்ட் கிடைக்காததால் வசந்தாக நடித்த நோஞ்சான் நடிகர் உடன் வரவில்லை.

‘ப்ரியா’ படம் வெற்றிகரமாக 110 நாள் ஓடினதுக்கு எனக்கு ட்ராஃபி தந்தார்கள். இப்போதுகூட இதன் பின்கதையைச் சரியாக அறியாதவர்கள், ‘என்னா ஸ்டோரி சார்; என்னா டைலாக் சார்’ என்று சிலாகிக்கும்போது எங்கோ நிறுத்தாமல் உறுத்துகிறது.

1977ல் வந்தது. கலா வள்ளி கம்பைன்ஸ் எடுத்தது.

ஜெய்சங்கர், ஸ்ரீ ப்ரியா, ஸ்ரீகாந்த், ”உணர்ச்சி பிழம்பு” அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பண்டரிபாய், ராஜசுலோச்சனா, சாமிகண்ணு, பிரேமி, டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் நடித்தது.

இசை – சங்கர் கணேஷ்

தயாரிப்பு – டி. ராஜு

டைரக்‌ஷன் – KS கோபாலகிருஷ்ணன்.

பண்ணையார் அசோகன் மனைவி பண்டரிபாய். ஆனால் ராஜசுலோச்சனா செட் அப். ராஜசுலோச்சனா ஒரு செட் அப்புக்காக தான் செட் அப் ஆக வருகிறார். அவருடைய உள்நோக்கம் அசோகனுடைய சொத்து. ஜெய்சங்கர் பண்டரிபாயின் மகன். ஸ்ரீகாந்த் ராஜசுலோச்சனாவின் மகன். பண்டரிபாய் அசோகனின் செட் அப்பால் அப் செட் ஆகி ஜெய்சங்கருடன் பங்களாவை விட்டு வெளிநடப்பு செய்கிறார். என்றைக்காவது அசோகன் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் தேவுடு காக்கிறார் ஒரு குடிசை வீட்டில். ஊருக்கெல்லாம் பொய் சாட்சி சொல்லி சர்வீஸ் பண்ணும் தேங்காய் சீனிவாசனின் மகள் ஸ்ரீப்ரியா. ஜெய்சங்கருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் மலர்கிறது. ஸ்ரீகாந்த் கடுப்பாகிறார். அம்மாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்ய அவர் சபதம் செய்கிறார். தே. சீனிவாசனும் ராஜசுலோச்சனாவும் தாம்பூலம் மாற்றிகொள்கிறார்கள். சிலம்புச் சண்டையில் ஜெய்ப்பவர் ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்துக்கொள்ளலாம். ஜெய்சங்கர் தான் ஜெய்ப்பார் என்பதை ஊகம் செய்ய முடியாதவர் த்மிழனே இல்லை.

இதற்க்கு இடையில் 3 பாட்டு பாடிவிடுகிறார்கள். ஒன்று தேறியது. ”மச்சானே அச்சாரம் போடு”. ”ஆலமரத்துக் கிளி, ஆளப் பார்த்து பேசும் கிளி” வாணி ஜெயராம் பாடியது. “படமெடுக்கிற பாம்புக்கூட” என்ற பாட்டு ஒரு கணக்கிற்க்காக. சுத்த போர்.

ராஜசுலோச்சனாவும், தே. சீனிவாசனும் சேர்ந்து கோயில் பூசாரிக்கும் பண்டரிபாய்க்கும் கிசு,கிசு எழுப்பிவிட கொதித்தெழுந்த அசோகன் அறைகுறையாகத் திருந்திவிடுகிறார். ராஜசுலோச்சனா தே. சீனிவாசனுக்கு பண்ணையார் பிரோமோஷன் கொடுத்துவிட – அதாவது செட் அப்புக்கு தே. சீனிவாசன் செட் அப்பாக மாறிவிட, தாயின் நடத்தைப்பார்த்து உடைந்துபோன ஸ்ரீகாந்தும் ஜெய்யும் சேர்ந்து பிறகு – பிறகு என்ன? ஃபார்மாலிடிஸ் தான். சுபம் தான்.

படம் வந்த காலத்தில் ஒரளவு ஓடியிருக்கலாம்.

4.5/10 மார்க்


சன் டிவிக்காரர்கள் எமலோகத்தில் சித்ரகுப்தன் டிபார்ட்மென்டில் ஏதாவது வேலை காலி இருந்தால் அப்ளை செய்யலாம். பல புது முறையான சித்திரவதைகளை கண்டுபிடிக்கிறார்கள். அவற்றை டெஸ்டும் செய்து பார்க்கிறார்கள். எங்கிருந்து இந்த மாதிரி பாடாவதி படங்களை பிடிக்கிறார்கள்? இப்படி ஒரு படம் வந்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது? ஒரு வேளை யாராவது ஒரு அதிகாரி சின்ன வயதில் பார்த்துவிட்டு யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தில் இதையெல்லாம் ஷெட்யூல் செய்கிறாரா? இல்லை என்னை பிடிக்காத யாரோ சன் டிவியில் வேலை செய்கிறார்களா? யப்பா சாமி, கொஞ்சம் கருணை காட்டப்பா!

1973இல் வந்திருக்கிறது. வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருக்கும். ஜெய்ஷங்கர், ஜெயலலிதா, சோ, புஷ்பலதா, எம்.என். ராஜம், சி.கே. சரஸ்வதி, வி.எஸ். ராகவன், டி.கே.பகவதி, வி. கோபாலகிருஷ்ணன், கே.டி.சந்தானம், “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வீராசாமி, காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராசன் நடிப்பு. ஷங்கர் கணேஷ் இசை. வாலி பாடல்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். ஜெக்கு இரட்டை வேஷம்.

கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா மாதிரி கொஞ்சம் மெலோட்ராமா உள்ள குடும்பப் படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் கே.எஸ்.ஜி., பாலச்சந்தர் இருவரையும் ஏறக்குறைய ஒரே லெவலில் பார்த்தார்கள். இந்த மாதிரி படம் எடுத்து அவர் தன் பெயரை கெடுத்துக்கொண்டிருக்க வேண்டாம்.

ஜெய் ஒரு டாக்டர். அவரது பக்கத்து வீட்டு அம்மாவான எம்.என். ராஜம், தன் கணவர் வி.எஸ்.ராகவன், மூத்த தாரத்து மகள் (விதவை)புஷ்பலதா, தன் தம்பி சோ, தனக்கு தற்செயலாக திருட்டு பட்டம் வாங்கிக் கொடுத்த அசட்டு கிராமத்துப் பெண்+சோவின் மனைவி ஜெ, எல்லாரையும் கொடுமைப்படுத்துகிறார். பட்டணத்து துணிச்சல்காரி ஜெ ஆள் மாறாட்டம் செய்து அவரது கொட்டத்தை அடக்குகிறார்.

ஒரு பாட்டும் உருப்படியில்லை. ஜெவே வேறு ஒரு பாட்டு பாடியிருக்கிறாராம்.

படத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயமாவது சொல்லவேண்டும் என்று ஆசை. அப்படி எதுவும் இல்லாததால், இரண்டு மோசமில்லாத விஷயங்கள்:
1. கிராமத்து பெண்ணாக ஜெ இழுத்து இழுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.
2. சோ ஜெவை முதல் இரவில் ஒரு பாட்டு பாடும்படி கேட்கிறார். ஜெ பாடுவது “மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்” என்ற விளம்பர ஜிங்கிள். அதற்கு சோ வேறு அப்பப்போ “போஷாக்கானது, சத்து நிறைந்தது” என்று கமெண்டரி கொடுக்கிறார். கடைசியில் இரண்டு ஜெவில் எது தன் மனைவி என்று அடையாளம் தெரியாமல் சோ திணறும்போது, ஜெ “மம்மி மம்மி” என்ற தன் குடும்பப் பாட்டை பாடி சோவுடன் சேர்ந்து கொள்கிறார்.

சோவுக்கு ஜெ ஜோடி அபூர்வமாய் இருக்கிறது. இருவரும் இப்போதும் நல்ல நண்பர்கள் என்று கேள்வி.

துட்டு கொடுத்தால் கூட பார்க்காதீர்கள். ஓடி விடுங்கள். 10க்கு 2 மார்க். F grade.

பானுமதியின் மாஸ்டர்பீஸ். அவருக்காகவே எழுதப்பட்ட திரைக்கதையில் அவர் பிய்த்து உதறி இருக்கிறார். அவருக்கு இந்த படத்துக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இதற்கு பிறகும் அவர் இரண்டு சிறந்த நடிகை விருதுகளை பெற்றிருக்கிறார்

1962இல் வந்த படம். வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன். அடையாளம் தெரிந்தது ஸௌகார், ரங்காராவ், முத்தையா (வேறொரு படத்தில் இவர் யாரென்று சொன்ன சாரதாவுக்கு நன்றி), சச்சு, சந்திரபாபு. ஏவிஎம் படம். இசை சுதர்சனம். இயக்கம் ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சுவா? பஞ்சு. அனேகமாக தெலுங்கிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். நாயகன் பேர் ஹரிநாத் ராஜா. தெலுங்கு நடிகர் என்று நினைக்கிறேன், யாரோ தெரியவில்லை. (பானுமதியின் மகனாக நடிக்க முதலில் ஜெய்ஷங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்களாம். அவருக்கு சிறிய கண்கள் என்று அவரை நிராகரித்துவிட்டார்களாம்.)

ஒரு வங்காள மொழி நாடகம்தான் மூலக்கதை. ஹிந்தியில் மாய ம்ருகா என்று படமாக எடுக்கப்பட்டது. ஏவிஎம் செட்டியார் பார்த்தது நாடகமா இல்லை ஹிந்தி படமா என்று தெரியாது. ஆனால் இதை திரைக்கதையாகும் முயற்சியில் பானுமதிக்கும் பங்கு உண்டு என்று கேள்வி. பானுமதிக்கு மூலக்கதையில் வந்த பாத்திரம் கொஞ்சம் அசடாக இருக்கிறார் என்று தோன்றியதாம். அதனால் அவர் பாத்திரத்தை கொஞ்சம் மாற்றினாராம்.

தமிழ் படங்களில் சாதாரணமாக நல்லவர்களில் ஒரு குறையும் இருக்காது. கெட்டவர்களோ வடிகட்டின கெட்டவர்கள் – மருந்துக்கு கூட ஒரு நல்ல குணம் இருக்காது. இந்த படம் ஒரு அதிசயமான விதிவிலக்கு. ஒரு குறை உள்ள பாத்திரம், அதுவும் பெண் பாத்திரம்தான் கதாநாயகி. பானுமதி நாம் பார்க்கக்கூடிய ஒரு பாத்திரம். அவரது இன்செக்யுரிடியினால் அவர் செய்யும் தவறுகள் ரியலிஸ்டிக்காக சித்தரிக்கப்படுகின்றன. அவருக்கு அந்தஸ்து முக்கியம். ஆனால் எல்லா படங்களிலும் வருவது போல அவர் அந்தஸ்துக்காக வாழும் ஒரு கார்ட்டூன் காரக்டர் அல்லர். அதனால்தான் கதையும், அதனால் படமும் நன்றாக இருக்கிறது.

நல்ல முடிச்சு உள்ள கதை. பணக்கார குடும்பத்தில் பிறந்த பானுமதி, அவரது தங்கை ஸௌகார். ஸௌகார் ஏழை முத்தையாவை கல்யாணம் செய்துகொள்வதால் சிரமப்படுகிறார். குழந்தை இல்லாத தன் அக்காவுக்கு தன் குழ்ந்தையை கொடுக்கிறார். பதில் உதவி என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அக்காவிடம் பண உதவி பெற்றுக் கொண்டு வெளி நாடு போய்விடுகிறார். பானுமதி பையனை உயிருக்கு உயிராக வளர்க்கிறார். அடி மனதில் எப்போதாவது பையன் தன்னை பெரியம்மா என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் இருக்கிறது. இருபது வருஷம் கழித்து ஸௌகாரும் முத்தையாவும் ஏழையாகவே திரும்பிவரும்போது, தங்கை மேல் உள்ள பாசத்தை பையன் தன் நிஜ அம்மாவுடன் போய்விடுவானோ என்ற பயம் வென்றுவிடுகிறது. மகனும் தங்கையும் சந்திக்கக்கூடாது என்று முயற்சி செய்கிறார். தற்செயலாக அவர்கள் சந்தித்துவிட, பானுமதியின் பயம் அதிகரிக்கிறது. முத்தையா இறந்துவிட, ஸௌகார் அழுதுகொண்டே இருக்க, பையனுக்கு உண்மை தெரிந்து பெரியம்மா என்றே கூப்பிட்டுவிடுகிறான். வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறான். கடைசியில் பானுமதி ஸௌகாரிடம் இவன் நம் பிள்ளை என்று சொல்ல, சுபம்!

இது பானுமதியின் படம். மற்ற எல்லாரும் பானுமதிக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கத்தான். ரங்காராவ் நன்றாக நடித்திருக்கிறார். பானுமதி பல காட்சிகளில் கலக்குகிறார். குறிப்பாக தன் மகன் அடிபட்டு படுத்திருக்கும்போது சரக் சரக் என்று சத்தத்தோடு நடந்து வரும் நர்சை ஒரு அடி போடும் காட்சி பிரமாதம். ஸ்லீவ்லெஸ் ரவிக்கையோடு வரும் தன் prospective மருமகளிடம் “அவசரமா வந்ததால ரவிக்கை போடாம வந்துட்டா போலிருக்கு” என்று சொல்லும் இடம் அபாரம். தங்கையை நடத்தும் விதம் தவறு என்று தெரிந்தும் ரங்காராவிடம் இந்த ஒரு விஷயத்தை விட்டுடுங்க என்று சொல்லும் இடம், தங்கையை கண்டு கண் கலங்கும் இடம், எல்லாரும் என்னைத்தான் சொல்வீங்க என்று புலம்புவது – சும்மா புகுந்து விளையாடிவிட்டார்.

மிச்ச எல்லாரும் டம்மிதான். ஆனால் ஹீரோ பார்க்க நன்றாக இருக்கிறார்.

படம் முக்கால்வாசி முடிந்த பிறகுதான் ஒரே வீட்டில் வசிக்கும், தன்னை ஒரு தலையாக காதலிக்கும் சந்திரபாபுவை பார்த்து சச்சு அண்ணா என்று சொல்கிறார். அது வரைக்கும் எப்படி கூப்பிட்டார் என்று தெரியவில்லை. பஞ்சதந்திரம் படத்தில் தேவயானி சிம்ரன் சந்தேகப்பட்டு திட்டிவிட்டு போனதும் கமலை பார்த்து “ராமண்ணா ராமண்ணா” என்பார். கமல் “கரெக்டா அவ போனப்புறம் சொல்லு!” என்பார். அதுதான் ஞாபகம் வந்தது!

பாட்டுகள் எழுதி இருப்பது கண்ணதாசன். சந்திரபாபு பாடும் “புத்தி உள்ள மனிதரெல்லாம்”, பி.பி.எஸ்., சுசீலா பாடும் “அழகிய மிதிலை நகரினிலே”, சுசீலா பாடும் “பக் பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா”, பானுமதியே பாடும் “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று” எல்லாமே நல்ல பாட்டுகள். எனக்கு எப்போதுமே சந்திரபாபு பாட்டுக்கள் என்றால் ஒரு மயக்கம் உண்டு. இதில் அவர் கலக்கிவிடுவார். “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டில் “பருவத்து பெண்கள் தனித்திருந்தால்” என்று ஆரம்பித்து, “ஆஹா, ஓஹோ” என்று பி.பி.எஸ். பாடுவதும், “ம்ஹ்ம்ம்” என்று சுசீலா முறைப்பதும் அருமை! “பக்கும் பக்கும் மாடப்புறா” பாட்டுக்கு சந்திரபாபு என்ன ஜோராக டான்ஸ் ஆடுகிறார்! பானுமதியின் குரலில் கொஞ்சம் தெலுங்கு வாடை உண்டு. அது அவரது குரலுக்கு ஒரு special charmஐ கொடுக்கிறது.

“அழகிய மிதிலை நகரினிலே”, “புத்தி உள்ள மனிதரெல்லாம்” பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

பானுமதிக்காக பாருங்கள். 10க்கு 7 மார்க். B grade.

தவறாமல் ஒரு சுமார் MGR படம், வர வர ஒரு பாடாவதி சிவாஜி படம் – இது மினிமம் காரண்டி. இது போக என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. எனக்கு (Bags) வெறுப்பு ஏற்ற வேண்டும் என்றே, ஏன் சிவாஜி ரசிகர்களுக்குக் கூட வெறுப்பு ஏற்ற வேண்டுமென்று திட்டம் போட்டு படம் போடுகிறார்கள் போலும்.

திங்கள் – சிரஞ்சீவி – சிவாஜி நடிததது. பார்த்தாலே பயஙகர தோற்றம். நான் இது வரை பார்த்ததில்லை

செவ்வாய் – மேஜர் சந்திரகாந்த் (பார்த்ததில்லை) நல்ல படம் போல் தெரிகிறது

புதன் – அன்னை (பார்த்ததில்லை)

வியாழன் – வந்தாளே மகராசி (பார்த்ததில்லை)

வெள்ளி – அரசிளங்குமரி – MGR நடித்தது. சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ”சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா” என்ற பாடல் ஹிட்.

இன்னும் சில விவரங்கள்:

சிரஞ்சீவி 1984இல் வந்திருக்கிறது. சிவாஜியின் post-Thirisoolam, தொப்பை phase. ஸ்ரீப்ரியா ஹீரோயின். நானும் பக்ஸும் காலேஜில் படித்துக்கொண்டிருந்தோம். காலேஜில் எல்லா குப்பை படமும் பார்ப்போம், எங்களுக்கு வந்ததே தெரியவில்லை என்றால் படம் ஓடி இருக்காது.

மேஜர் சந்திரகாந்த்: நல்ல படம். இந்த நாடகம், படத்தில் நடித்துத்தான் மேஜர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழி வந்தது. பாலச்சந்தரின் நாடகம் படமாக்கப்பட்டது. அவரே இயக்கியதா என்று தெரியவில்லை. உடன், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏ.வி.எம். ராஜன் நடித்திருக்கிறார்கள். “நேற்று நீ சின்ன பாப்பா”, “நானே பனி நிலவு”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு போடவா” பாட்டுக்கள். “ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கும்.

அன்னை: பானுமதி. “அழகிய மிதிலை நகரினிலே”, “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று”, “பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா” என்ற நல்ல பாட்டுகளும், சந்திரபாபு பாடிய “புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை” என்ற ஒரு சூப்பர் பாட்டும் உண்டு. தாய்க்குல படம்.

வந்தாளே மஹராஸி: ஜெய், ஜெ நடித்து, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். கேள்விப்பட்டதில்லை. ஆனால் கே.எஸ்.ஜி. எப்போதும் குடும்பப் படம் எடுப்பவர்.

நேற்று வீட்டில் புரட்சி வெடித்தது. படத்தைப் போட்ட ஐந்தாவது நிமிஷத்தில் என் மனைவி “நாகேஷ்தான் heroவா? இது உங்களுக்கே அடுக்குமா?” என்று சொல்லி ரிமோட்டை வெற்றிகரமாக கைப்பற்றினாள். என் பெண்களோ Hannah Montanaவில் முழுகி இருந்தனர். அதுவும் என் 4 வயதுப் பெண்ணுக்கு ஒரு boss fixation உண்டு. அவளிடம் நான் தெரியாத்தனமாக “You are my boss” என்று சாயங்காலம்தான் சொல்லி இருந்தேன். “If I am the boss, I get to watch my TV, daddy!” என் எடை பலம், அவர்கள் குரல் பலத்தையும் கண் பலத்தையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக என் மனைவியின் பக்க பலத்தையும் ஜெயிக்க முடியவில்லை.

ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னால்தான் என்னால் பார்க்க முடிந்தது. பாதிக்கு பிறகு பார்ப்பது ரொம்ப கொடுமை – அரை மணி கஷ்டப்பட்டு பார்த்தேன், அவ்வளவுதான். அதனால் இன்று விமரிசனம் எழுதமுடியவில்லை. பார்த்த வேறு யாராவது எழுதுங்களேன்! நடுவில் ஒரு படத்தை விட்டுவிடுவதற்கு என்னவோ போல் இருக்கிறது. ப்ளீஸ்!

இந்த படத்தைப் பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்கள். 1972இல் வந்தது. இதே கதையை 1981இல் “எல்லாம் இன்ப மயம்” என்று கமல், ஜெய்ஷங்கர் நடிக்க பஞ்சு அருணாசலம் எடுத்தாராம். 1970களின் முற்பாதியில் சித்ரமகால் குழுவினர் (சித்ரமகால் கிருஷ்ணமூர்தி, பஞ்சு அருணாசலம்) லோ பட்ஜெட் நகைச்சுவை படங்கள் சிலவற்றை எடுத்தனர். சாதாரணமாக நாகேஷ்தான் கதநாயகன். விஜயலலிதா கதாநாயகி. எம்.ஆர்.ஆர். வாசு, வி.கே. ராமசாமி, தேங்காய், சுருளிராஜன் பொன்ற நகைச்சுவை நடிகர் பட்டாளமே நடிக்கும். (இதில் சச்சுவும் இருந்தார்). இந்தப் படம் லாபம் பார்த்திருக்கும் போலிருக்கிறது. இதைப் போலவே இந்த கோஷ்டி எடுத்த இன்னொரு (சகிக்க முடியாத) நகைச்சுவை படம் “தேன் கிண்ணம்“. (அதுவும் இந்த ப்ரோகிராமில் திரையிடப்பட்டது. அதையும் நான் பாதி படம்தான் பார்த்தேன். அதில் முன் பாதிக்கு பிறகு ஓடிவிட்டேன், இதில் பின் பாதி). விஜயலலிதாவின் கவர்ச்சியையும் நம்பி இந்த படங்கள் எடுக்கப்பட்டன. (அந்தக் காலத்து கவர்ச்சி – டைட்டான பான்ட் போட்டுக்கொண்டு வருவார், அவ்வளவுதான். இதை நம்பி யாரும் இந்தப் படங்களை பார்க்காதீர்கள்). 1973இல் வந்த “கல்யாணமாம் கல்யாணம்”உம் இந்த கோஷ்டிதான் எடுத்தது என்று நினைவு.

இசை அமைத்தவர் தாராபுரம் சுந்தரராஜன். இந்தப் படத்தில் “டிங்டாங் டிங்டாங் டிங்கியாலோ” என்ற ஒரு க்ளப் டான்ஸ் பாட்டை கேட்டிருக்கிறேன்.

தாராபுரம் சுந்தரராஜனுக்கு அதிர்ஷ்டம் கட்டை. நல்ல குரல், ஆனால் வெற்றி பெற முடியவில்லை. நாகேஷும் தாராபுரத்துக்காரர்தான். நாகேஷின் சிபாரிசோடு திரைப்படங்களில் பின்னணி பாடகராக நுழைய முயன்றார். எனக்குத் தெரிந்து அவர் பாடிய ஒரே வெற்றிப் பாட்டு “செல்வம்” படத்தில் இடம் பெற்ற “உனக்காகவா நான் எனக்காகவா”தான். ஜமுனா ராணியுடன் இணைந்து பாடியது. “ஆயிரம் பொய்” விமரிசனத்தில் நானும் tfmpage.காமிலிருந்து கட்-பேஸ்ட் பண்ணி இருந்தேன் – “தமிழ் விடு தூது முன்னாலே” என்று மனோரமாவுடன் ஒரு பாட்டு பாடி இருந்தார். “திருமலை தென்குமரி” படத்தில் “அழகே தமிழே நீ வாழ்க” என்ற பாட்டை பலரோடு இணைந்து பாடி இருக்கிறாராம். அந்தப் பாட்டில் சீர்காழியின் கம்பீரமான குரல் மற்ற எல்லார் குரலையும் டாமினேட் செய்துவிடுகிறது, இவர் குரல் என் நினைவில் கேட்கவில்லை. 1979இல் நீச்சல் குளம் என்ற படத்துக்கும் இசை அமைத்தாராம், அந்தப் படத்தில் “ஆடிப் பதினெட்டு” என்று எஸ். ஜானகி பாடும் பாட்டு நினைவிருக்கிறது. முறைப்படி இசை பயின்ற அவர் சென்னை இசைக் கல்லூரியிலும் பணி புரிந்தாராம். 1999இல் இறந்துவிட்டார்.

“உனக்காகவா எனக்காகவா” பாட்டை இங்கே கேட்கலாம்.

மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன், ப்ளீஸ், யாராவது விமரிசனம் எழுதுங்களேன்!

1969இல் வந்த படம். அந்தக் காலத்து லோ பட்ஜெட் பொழுதுபோக்கு படம் ஆக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ, சோ, மனோரமா, வி.கே. ராமசாமி, தேங்காய், எம்.ஆர்.ஆர். வாசு, வி. கோபாலகிருஷ்ணன் போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். வி. குமாரின் இசை. சோவின் திரைக்கதை. முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம்.

படம் பூராவும் மொக்கை ஜோக்குகள் வந்து கொண்டே இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று – “டாக்டர், எனக்கு தூக்க மாத்திரை கொடுங்களேன்!”, “தூக்கம் வரலேன்னாதான் தூக்க மாத்திரை தருவோம்!” “அப்போ தலைவலி வராட்டிதான் தலைவலி மாத்திரை கொடுப்பீங்களா?”

“புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” இந்த படத்தின் மாஸ்டர்பீஸ். கண்ணதாசன் எழுதியது. டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடி இருக்கிறார்கள். பாடலை இங்கே கேட்கலாம். ”தில்லையிலே சபாபதி” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. எனக்கு வேறு பாட்டுக்கள் அவ்வளவாக பிடிக்கவில்லை.

படத்தின் கதை மிகவும் சிம்பிள். ஜெய்ஷங்கரின் அப்பாவுக்கும் மாமாவுக்கும் வெகு நாட்களாக சண்டை. இரு குடும்பங்களையும் இணைப்பதற்காக, ஜெய் தன் மாமன் மகள் வாணீஸ்ரீயை காதலிக்கிறார். அவ்வளவுதான். மொக்கை ஜோக்குகள் எதுவும் பெரிதாக நினைவு வைத்துக்கொள்ளும்படி இல்லை. ஆனால் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கின்றன, சில சமயங்களில் புன்னகைக்கிறோம்.

படத்தைப் பார்க்கலாம்.

tfmpage.comஇல் இந்தப் படத்துக்கு வி. குமாரின் இசையைப் பற்றி எழுதி இருப்பது இங்கே.

To begin with, it was in this year that he got to work with Kaviyarasar Kannadasan for the first time, and the opportunity came through aayiram poi (Muktha Films). aayiram poi starred Jaishankar, Vanisri, Cho, Manorama and others. It was scripted by Cho and directed by Muktha Srinivasan. The film was a hilarious jaunt based on the clichéd Tamil saying that generously grants license for a thousand untruths to be employed to make a wedding happen. 

The first song is the popular TMS/PS duet- pulavar sonnadhum poiyE poiyE. Kannadasan brings the word ‘poi’ into imaginative use, to suit both the romantic mood of the song, and the backdrop of the story. An enticing prelude, and a catchy pallavi, short and sweet interludes ,and elegant charanams interspersed with unexpected bits if humming in between- the song is appealing even today: 

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/vkumar/pulavar.rm 

The next song is the fun-filled thillaiyilE sabapathi, chidambarathil kanagasabai, sung delightfully by PS. Kannadasan seeks the help of mythological analogies to draw parallels with the current drama. And again, VK starts scoring points right from the pallavi, and follows it up with lilting interludes (the second one, in particular). Listen here: 

http://www.tfmpage.com/cgi-bin/stream.pl?url=http://www.dhool.com/sotd/vkumar/thillaiyile.rm 

Another song in the film is the comic ditty ‘ thamizh vidu thoodhu munnaaLil, kiLi vidu thoodhu pinnaaLil’, sung by Dharapuram Sundararajan & Manorama.

திங்கள் – நான் பெற்ற செல்வம்: 1956இல் வந்த படம். சில நல்ல பாட்டுக்கள் – “நான் பெற்ற செல்வம்”, “பூவா மரமும் பூத்ததே”, “வாழ்ந்தாலும் ஏசும்”. ஜி. ராமநாதன் இசை என்று நினைக்கிறேன். நான் பார்த்ததில்லை. ஆனால் நீள நீள வசனங்கள், சிவாஜி உணர்ச்சிவசப்பட்டு கத்தும் காட்சிகள், எதாவது ஒரு ஓரங்க நாடகம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஜி. வரலக்ஷ்மி சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்த ஒரே படம் என்று கேள்வி. இதைத் தவிர அரிச்சந்திரா என்ற படத்திலும் ஜி. வரலக்ஷ்மி சிவாஜியின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

செவ்வாய் – ஆயிரம் பொய்: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ நடித்த படம். “புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே” என்ற ஒரே பாட்டுதான் எனக்கு தெரியும். நான் இதையும் பார்த்ததில்லை.

புதன் - பெரிய இடத்துப் பெண்: எம்ஜியாரின் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று. எம்ஜியார் அசோகன் சிலம்ப சண்டைகளும், “அன்று வந்ததும் அதே நிலா” பாட்டுக்கு எம்ஜியார் ஆடும் மேலை நாட்டு நடனமும் புகழ் பெற்றவை. டி.ஆர். ராமண்ணா-எம்ஜியார் காம்பினேஷனில் வந்த “பாசம்” படம் தோல்வி அடைந்ததும், அவர்கள் இருவரும் மிகவும் யோசித்து எடுத்த படம் என்று கேள்வி. அதுவும் எம்ஜியார் மேலை நாட்டு நடனம் ஆட மிகவும் தயங்கினார் என்றும் ராமண்ணா அவரை மிகவும் வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார் என்றும் கேள்வி. “கட்டோடு குழலாட ஆட”, “பாரப்பா பழனியப்பா” போன்ற பாடல்களும் வெற்றி அடைந்தன.

வியாழன் – பூஜைக்கு வந்த மலர்: நான் இதையும் பார்த்ததில்லை. மிகவும் இனிமையான பாடல்கள் நிறைந்த படம். “மையேந்தும் விழியாட” பாடல்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. ஏ.எல். ராகவன் இதில் ஏதோ ஒரு நல்ல பாட்டு பாடி இருப்பார்.

வெள்ளி – திரிசூலம். சிவாஜியின் 200ஆவது படம். பெரிய வெற்றிப் படம். நான் சிறு வயதில் பார்த்த போது “குறும்புக்கார” சிவாஜி எங்கள் வட்டத்தில் பெரிய hit. சிவாஜியின் “சுமதி” டயலாக் மிகவும் பிரபலமானது. இந்தப் படம்தான் சிவாஜி சகாப்தத்தின் கடைசி வெற்றி என்று சொல்லலாம். அதற்குப் பின் அவரது ட்ரேட் மார்க் பாணியில் எடுத்த படங்கள் எதுவும் பெரிய வெற்றி அடையவில்லை. அவரது பாணியை மாற்றி நடிக்க வேண்டியிருந்தது. கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் அவருக்கு குறைந்துவிட்டன. தான் நடிக்க வந்த முதல் 25 வருஷங்களில் 200 படங்களில் கதாநாயகராக நடித்த அவர், பிறகு காரக்டர் ரோல்களுக்கு மாறிய பிறகும், அடுத்த 20 வருஷங்களில் 100 படங்கள்தான் நடிக்க முடிந்தது.

அடுத்த பக்கம் »