சின்ன வயதில் டென்டு கொட்டாயில் பார்த்த படம். இன்னும் நினைவில் இருப்பவை: எம்ஜிஆர் க்ளைமாக்சில் சிங்கத்துடன் சண்டை போடுவது; பாலைவனக் காட்சிகள்; எம்ஜிஆர் இரட்டை வேஷம் என்றார்களே எங்கே இன்னொரு எம்ஜிஆர் என்று காத்திருந்தது (அது அப்பா எம்ஜிஆர், முதலில் பத்து நிமிஷம் வந்துவிட்டு செத்துப்போய் விடுவார்) அப்போதெல்லாம் அசோகனின் தீவிர பக்தன் ஆகவில்லை.

ஒரு above average சாகசப் படம். சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், அம்மா செண்டிமெண்ட் காட்சிகள், ஜெவின் பெல்லி டான்ஸ், புதுப்பையன் எஸ்பிபிக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாட்டு, திமிராக ஜெ பேச சில காட்சிகள், ஜெ பாட ஒரு பாட்டு, சண்டைக் காட்சிகள் இவற்றை சுற்றி எம்ஜிஆருக்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை.

1969-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்தப் படம். அவரே இயக்கம். பொதுவாக அவர் நடிக்கும் படங்களை – முக்கியமாக அவர் நடிக்கும் காட்சிகளை – அவர்தான் உண்மையில் இயக்குவார் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் டைட்டிலிலேயே அவர் இயக்கியதாக வரும். (நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் இரண்டும் அவர் இயக்கிய மற்ற படங்கள்) ஜெயலலிதா இரட்டை வேஷம், அசோகன், சந்திரபாபு, சோ, மனோகர், பண்டரிபாய் நடித்து, கே.வி. மகாதேவன் இசையில் வந்த படம்.

அசோகன் (செங்கோடன்?) பண்டரிபாயிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்ய, பண்டரிபாய் அவர் காலை வெட்டிவிடுகிறார். பண்டரிபாயின் கணவர் எம்ஜிஆர் அசோகனுடன் ஒரு காலை கட்டிக்கொண்டு – எம்ஜிஆர் எப்பவும் அப்படித்தான். எதிராளியின் கத்தி உடைந்துவிட்டால் தன கத்தியையும் தூக்கிப் போட்டு விடுவார். எப்படியும் அவர்தான் ஜெயிக்கப் போகிறார் – சண்டை போட்டு ஜெயிக்கிறார். ஆனால் அசோகன் பின்னால் இருந்து அவரை குத்தி கொன்றுவிடுகிறார். எம்ஜிஆரின் clan ஆட்கள எல்லாம் அடிமை. பண்டரிபாய் காட்டில் மறைந்து வாழ்கிறார். பையன் எம்ஜிஆர் ஜெயிலில் கூனனாக வளர்கிறார். எப்படியோ ஆற்றில் குதித்து தப்பி, ஜெவிடம் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் கம்பு போன்ற அரிய உண்மைகளை கற்று கூன் போய் வீரனாகிறார். பிறகு எப்படி பாலைவனத்துக்கு போகிறார் என்று மறந்துவிட்டது. (ரொம்ப முக்கியம்!) அங்கே போய் ஏமாறாதே ஏமாற்றாதே என்று ரசிகர்களை ஏமாற்றாமல் பாடுகிறார். பிறகு இன்னொரு திமிர் ஜெவிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த ஜெவும் இவர் மேல் காதல் ஆகிவிட ஆயிரம் நிலவை கூப்பிடுகிறார். பிறகு அந்த ஜெவுக்கு எல்லாம் நாடகம் என்று தெரிய அவர் கடுப்பாகி இவரை அசோகனிடம் காட்டி கொடுக்கிறார். அசோகன் பப்ளிக்காக அம்மாவை கற்பழிக்கப் போவதாக அறிக்கை விட (படம் பார்த்தபோது இந்த இடம் புரியவில்லை) உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது என்று பாட்டு பாடிக் கொண்டே கோட்டைக்குள் நுழைந்து சிங்கத்தை கொன்று அம்மாவிடம் உருகி சுபம்!

எம்ஜிஆருக்கு காட்சிகளை உருவாக்க தெரிந்திருக்கிறது. சிங்கத்துடன் சண்டை, பாலைவனக் காட்சிகள், ஜெய்ப்பூர் அரண்மனை, ஜெயில், ஆற்றில் தப்பி போவது எல்லாம் நன்றாக அமைத்திருப்பார்.

சந்திரபாபு, சோ இருவர் இருந்தும் சிரிப்பு வருவது கஷ்டம்.

ஆயிரம் நிலவே வா ஒன்றுதான் ஏ க்ளாஸ் பாட்டு. ஏமாறாதே ஏமாற்றாதே, காலத்தை வென்றவன் நீ, தாயில்லாமல் நானில்லை, அம்மா என்றால் அன்பு, உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது எல்லாம் சுமார்தான். ஆனால் ஆயிரம் நிலவே வா பாட்டில் மிச்ச எல்லா குறையும் மறந்துவிடுகிறது.

பார்க்கலாம். டைம் பாஸ் படம். எம்ஜிஆருக்கு இது ஒரு க்ளாசிக் படம். பத்துக்கு 6.5 மார்க். C+ grade.

அடிமைப் பெண்

அடிமைப் பெண்

அடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள்! விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்!

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!

சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.

தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

பாலாஜி பற்றிய பதிவுக்கு வந்த ஒரு மறுமொழியில் ராஜநாயஹம் பாலாஜி பற்றி எழுதியதை யாரோ (கிருஷ்ணமூர்த்தி?) சுட்டி இருந்தார்கள். நான் கவனிக்க தவறிவிட்டேன். ராஜநாயஹத்தின் பதிவில் பாலாஜி தவிர பல விஷயங்கள் இருப்பதால், பாலாஜி பகுதியை மட்டும் இங்கே சவுகரியத்துக்காக கொடுத்திருக்கிறேன்.

‘திரும்பி பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சி ஜெயா டி வி இல் கே .பாலாஜி பேசியதை மறக்க முடியாது. பாலாஜியின் Method of speaking சிலாகிக்க வேண்டிய விஷயம். You should look gracefully old என்பதை அவருடைய முதிய தோற்றம் சொல்லாமல் சொல்லியது. நாற்பது படங்கள் தயாரித்த பாலாஜி இன்றைய படத்தயாரிப்பு விரயங்களை, நடிகர் நடிகைகளின் கேரவன் வேன் உள்பட வெளிப்படையாக கேள்வி கேட்டார்.

பாலாஜியின் அப்பா கிருஷ்ணமாச்சாரி ஐயங்கார். கிருஷ்ணமாச்சாரியின் இரண்டாவது தாரம் மலையாள பெண். இந்த இரண்டாவது தாரத்தின் மகன்தான் பாலாஜி. இப்படி அபிமான தாரத்தின் மகனாக பிறந்ததால் அனுபவிக்க நேர்ந்த துயரங்களை ‘திரும்பி பார்க்கிறேன் ‘ நிகழ்ச்சியில் பாலாஜி சொன்னார்.

ஜெமினி கணேசனின் உற்ற நண்பர். நாகேஷ் திரையுலகில் நுழைய காரணமானவர் பாலாஜி. இவருடைய நாடகத்தில் நடித்த ரெஜினா பின் நாகேஷ் மனைவி. படித்தால் மட்டும் போதுமாவில் சிவாஜிக்கு அண்ணனாக, பலே பாண்டியாவில் கூட சிவாஜியுடன் நடித்திருந்தாலும் ஜெமினி கணேசனின் சிபாரிசில்தான் சிவாஜியை இவர் தயாரிப்பில் நடிக்க வைக்க நெருங்க முடிந்தது.

நடிகராக திரையில் கதாநாயகனாக , இரண்டாவது கதாநாயகனாக , காமெடியனாக , வில்லனாக(Glamour Villain!) நடித்தவர் . இவருடைய ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக, ஸ்பஷ்டமாக இருக்கும்.

நரசுஸ் ஸ்டுடியோவில் தயாரிப்பு நிர்வாகியாய் வேலை பார்த்துக்கொண்டே ‘பிரேமபாசம் ‘ படத்தில் ஜெமினிக்கு தம்பியாய் நடிக்கும்போது ஜெமினி கணேசனின் மூன்றாவது திருமணத்திற்கு உதவியவர். ஜெமினி-சாவித்திரி சரசத்திற்கு காவல் நின்றவர் பாலாஜி.

ஒப்பனை அறையில் சாவித்திரிக்கு மொக்கை போடும்போது ஜெமினி “டே பாலாஜி ! சாவித்திரி அப்பா வர்ரானா பார்ரா. வந்தா உடனே சிக்னல் கொடு”

வேலாயுதம் தன் இரண்டாவது மனைவியாக நடிகை கே.ஆர். விஜயாவை திருமணம் செய்யவும் துணை நின்றவர்தான் பாலாஜி .

பி பி ஸ்ரீனிவாசின் பல ஹிட் பாடல்கள் இவருக்கு கிடைத்தது!

“ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்”

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்! நெருப்பாய் எரிகிறது”

“பண்ணோடு பிறந்தது கானம். குல பெண்ணோடு பிறந்தது நாணம்”

“நல்லவன் எனக்கு நானே நல்லவன்”

“பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை”

“ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்!”

“உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரிக்காயோ”

“இரவு முடிந்து விடும். முடிந்தால் பொழுது புலர்ந்து விடும்”

ஜெயலலிதா (போராட்டமான தன் அரசியல் சூழலிலும்) பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் விட்டார். அந்த கண்ணீர் உண்மையிலே சுத்தமானது. அவர் சொன்னது கூட மிகை இல்லை. அவருடைய அண்ணனை இழந்து விட்டார்.

பாலாஜி பற்றி மறு பக்கமாக சில விஷயங்கள் உண்டு. யாருக்குதான் அப்படி ஒரு மறு பக்கம் இல்லை? சொல்லுங்கள்!

ராஜநாயஹம் இப்போதெல்லாம் பதிவு எழுதுவது குறைந்துவிட்டது. :-(

ஆதி மனிதன் பாட்டு கீழே.

தொடர்புடைய பதிவுகள்
தயாரிப்பாளர், நடிகர் பாலாஜி மறைவு
பாலாஜி பற்றி விகடனில் 1964-இல் வந்த ஒரு கட்டுரை
பாலாஜியை பற்றி ரவி ஆதித்யா
பாலாஜி பாட்டு லிஸ்ட்

ராமன் தேடிய சீதை எம்ஜிஆரின் அறுவைப் படங்களில் ஒன்று. 1972-இல் வந்தது. எம்ஜிஆர் தவிர அசோகன், நம்பியார், ஜெயலலிதா, நாகேஷ், வி.எஸ். ராகவன், வி.கே. ராமசாமி ஞாபகம் இருக்கிறது. எம்ஜிஆருக்கு எம்எஸ்வியோடு ஏதோ சண்டை போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் இசை. யார் இயக்கம் என்று நினைவில்லை. அனேகமாக ப. நீலகண்டனாக இருக்கும்.

விகடன் விமர்சனத்தில் சொன்ன மாதிரி எம்ஜிஆருக்கு கொஞ்சம் வித்தியாசமான கதைதான். அவர் இங்கே ஒரு யூத் – காதலை தேடுகிறார். வயது அவருக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் ஆக ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன். சுருள் முடி விக், எக்கச்சக்க மேக்கப், மஞ்சள் கலர் பாண்ட், சிவப்பு கலர் சட்டை என்று ஆரம்பித்துவிட்டார்.

ஒரு முதிய தம்பதியினர் எம்ஜிஆருக்கு ஒரு லட்சிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவைதான் லட்சிய மனைவி. எனக்கு ஞாபகம் இருப்பது படுக்கையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரே குணம்தான். என் மனைவி male chauvinist pig என்று கத்துவது கேட்கலாம். அந்த பெண்ணை – ஜெவை – சுலபமாக கண்டுபிடிக்கும் எம்ஜிஆர் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை தேடி அலைகிறார். நடுவில் நம்பியார், அசோகன், சித்தப்பா வி.கே.ராமசாமி, போலி ஜெயலலிதா எல்லாரும் அவரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். வாத்தியாரா ஏமாறுபவர்? மூக்கை துடைத்துக் கொண்டு, பல சண்டைகள் போட்டு எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்து ஜெவுடன் சேர்ந்து சுபம்!

ஷங்கர் கணேஷின் இசை அவர்கள் தரத்துக்கு above average, எம்ஜிஆரின் தரத்துக்கு below average. திருவளர்செல்வியோ நல்ல பாட்டு.

வேறு பாட்டு எதுவும் ஞாபகம் இல்லை.

படம் தீவிர எம்ஜிஆர் ரசிகர்களுக்காக. பத்துக்கு 4 மார்க் கொடுக்கலாம். C- grade.

ramanthediyaseethai
விகடன் பொக்கிஷம் சினிமா விமர்சனம் – 30-4-1972-இல் வந்தது. நன்றி, விகடன்!

ராமன் தேடிய சீதையில் தயாரிப்பாளர்கள் தேடி எடுத்திருக்கிற கதையம்சம் சுவையானது.

ஒரு லட்சிய மனைவியின் ஆறு குணங்கள் என்னென்ன என்று நிறைந்த வாழ்வு வாழும் ஒரு முதிய தம்பதியர் மூலம் அறிந்து, அந்தப் பெண்ணைத் தேடி மணந்துகொள்கிறான் கதாநாயகன். அந்த முயற்சியில் அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்தாம் இப்படத்தின் கதை.

பாம்பாட்டி நடனம் முதல் காபரே வரை விதவிதமான நடனங்களை ஆடிக்கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா. ஆடை களையும் நடனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. ஒரு நடனக் காட்சியில் அவருடைய ஆடை, கதாநாயகரான எம்.ஜி.ஆரே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் அளவு விரசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டாலும், அவர் நடனங்கள் கண்களுக்கு ரசமாகவே இருக்கின்றன.

எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் சற்று மாறுதலான பாத்திரம். ஏதாவது ஒரு பிரச்னையிலோ, போராட்டத்திலோ ஈடுபட்டு படம் முழுவதும் சீரியஸாக இல்லாமல் இருப்பதே அந்த மாறுதல்! லட்சிய மனைவி வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா? அதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகமாகவும் உல்லாசமாகவும் மாப்பிள்ளை மாதிரி தோன்றி, சிறப்பாக நடிக்கிறார். அசோகனுடன் அவர் போடும் சண்டை மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

எம்.ஜி.ஆரின் கன்னம் அதிர்ஷ்டம் செய்தது. அவர் கன்னத்தில் பாம்பு கொத்திய விஷத்தை ஜெயலலிதா தன் வாயினால் உறிஞ்சி எடுக்கிறார்! (சென்ஸார் விஷயத்தில் எல்லாரும் இப்படிச் சாமர்த்தியமாக இருக்கத் தெரிந்து கொண்டிருந்தால், கோஸ்லா கமிட்டிக்கு வேலையே இருந்திருக்காதே!)

ஆரம்பத்திலேயே, ஒரு சில நிமிட சந்திப்பின்போதே சீதை யைத் தன் லட்சியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்துவிட்ட பின் கதையில் சுவாரசியம் ஏற்படுமா? அதேபோல் சீதை இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் கதாநாயகன் வேறு பெண்ணைத் தேடிப் புறப்படுவதும் உயர்வாக இல்லை.

இந்தக் குறைகளெல்லாம் ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்தால்தான் தோன்றும். ஆனால், படம் பார்க்கும்போது அப்படியெல்லாம் நம்மைச் சிந்திக்கவிடாமல் கலகலவென்று பொழுதுபோக்குச் சம்பவங்களால் நம் கவனத்தைத் திருப்பிவிடுகிறார்கள்!

விகடனுக்கு நன்றி!

சினிமா விமர்சனம்: வெண்ணிற ஆடை (9-5-1965)

மனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பதை அறிந்து, தனது காதலைத் துறந்து, வெண்ணிற ஆடை அணிகிறாள் அந்தப் பெண்.
கதை: ஸ்ரீதர்.

சந்தர்-சேகர்
சந்தர்: இவ்வளவு சின்னக் கதையை வைத்துக் கொண்டு படம் எடுத்திருக்கும் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும் சேகர்.
சேகர்: கண்டிப்பாக! இன்டர்வெல் வரை யிலும் ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போலத்தான் இருந்தது.
சந்தர்: ஜெயலலிதாவின் நடிப்பு ஏ.ஒன்!
சேகர்: யூ ஆர் ரைட்! ஆனால், அந்த அளவு நடிப்பை காந்த்திடமிருந்தோ, நிர்மலாவிட மிருந்தோ எதிர்பார்க்க முடியவில்லை. இருவருமே சுமார்தான்!
சந்தர்: பாட்டுக்கள் எப்படி?
சேகர்: ‘நீ என்பதென்ன…’ என்ற பாட்டும், ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல…’ என்ற பாட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி, வேறு எந்த டியூனும் வெளியில் வந்த பிறகு ‘ஹம்’ பண்ணும்படியாக இல்லை.
சந்தர்: இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்ணுக்குக் குளுமையா ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க, இல்லையா?
சேகர்: ஆமாம். ஆனால், கதைதான் சில இடங்களிலே இயற்கையா இல்லாம இருக்கு. அதிலும் கடைசியிலே, ஷோபா வெண்ணிற ஆடை உடுத்திக்கொண்டு வந்து, ‘இதுதான் என் முடிவு. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்’ என்பது போல் பேசியது சரியாகப் படவில்லை.
சந்தர்: நீ சொல்வது சரிதான்! ஒரு சஸ்பென்ஸூக்காகச் செய்திருக்கிறார்கள். எனக்கு அது சஸ்பென்ஸாகவே இல்லை!
சேகர்: ஒரு சில குறைகள் இருந்தாலும், தமிழ்ப் படங்களில் ஒரு புது முயற்சி வெண்ணிற ஆடை. அதற்காக அதைப் பாராட்டத்தான் வேண்டும்.

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக்கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. பிற்காலத்தில் கலைஞர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது சினிமா ஷூட்டிங்கில் இருந்தவர்தான் எம்ஜிஆர் என்று தாக்குவார் – அந்த சினிமா ஷூட்டிங் இதுதான்.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.

ரஃபேல் சபாடினி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவலின் பெயர் காகாப்டன் ப்ளட் (Captain Blood). அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பிற்காலத்தில் மார்கன் மேற்கிந்திய தீவுகளின் கவர்னர் ஆனார். இந்த நாவல் எர்ரால் ஃப்ளின் நடித்து திரைப்படமாக முப்பதுகளில் வந்தது. எம்ஜிஆரின் ஆதர்ச நடிகர்கள் டக்ளஸ் ஃபேர்பாங்க்சும்எர்ரால் ஃப்ளின்னும்தான். சபாடினியின் இன்னொரு புத்தகமான சீ ஹாக் (Sea Hawk)புத்தகத்திலிருந்து சில சீன்களை எடுத்து – - குறிப்பாக ஜெயலலிதாவை ஏலம் விடும் சீன், அவர் ஆடாமல் ஆடுகிறேன் என்று பாடுவார் அந்த சீன் – இந்த புத்தகத்துடன் சேர்த்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? ரஜினியும், விஜயும் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

இன்னும் ஒரு பாட்டு இருக்கிறதோ? சரியாக நினைவு வரவில்லை.

பாட்டுகளை இங்கே கேட்கலாம்.

சிறந்த பொழுதுபோக்கு படம். கட்டாயம் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.

திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.

லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!

ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!

சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!

சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!

திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.

ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!

குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!

கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!

திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

இந்த வாரம் 4 கறுப்பு வெள்ளை ஒரு கலர் படம். இரண்டு சிவாஜி, 0 எம்.ஜி.ஆர், ஓர் ஏ.வி.எம். ராஜன்-வாணிஸ்ரீ (shri என்பதை தமிழில் எப்படி எழுதவேண்டும்?)

திங்கள் – குறவஞ்சி - சிவாஜி நடித்தது – பார்த்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை

செவ்வாய் – பாலாபிஷேகம் - ஸ்ரீப்ரியா நடித்தது – பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டதுண்டு

புதன் – அன்னையும், பிதாவும் – AVM ராஜன், வாணிஸ்ரீ, நடித்தது – ட்ரைலரில் வாணி நன்றாக இருக்கிறார் (பாரதி மாதிரி) பார்த்ததில்லை

வியாழன் – தங்க மலை ரகசியம் - சிவாஜி காட்டில் வளர்ந்தவர். (அடிமைப் பெண் MGR போல்). நன்றாக பூ சுற்றுவார்கள். மாயாஜாலப் படம். பார்த்ததில்லை, நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.

வெள்ளி – வெண்ணிற ஆடை – கலரில்; நிர்மலா (டெபு) மற்றும் மூர்த்திக்கு (டெபு) டைட்டில் கொடுத்தது. பார்த்ததில்லை. Das சொல்வது இது: Jayalaitha (debut) is also there in this movie. We have melodious songs. Also, Hemamalini was supposed to have failed the audition test and the chance came to ammA.

இதுவும் சாரதாவின் guest post. Enough said. என்னுடைய ஒரிஜினல் போஸ்ட் இங்கே. Over to Saradha!

முக்தா பிலிம்ஸ் சார்பில் ‘முக்தா’சீனிவாசன் இயக்கிய படம். முக்தா ஒரு பழம்பெரும் இயக்குநர். அந்த காலத்திலேயே முதலாளி என்ற படம் எடுத்து மகத்தான வெற்றியைக்கணடவர் (’ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ என்ற பாடலை மறக்க முடியுமா). அவர் எடுக்கின்ற படங்கள் எல்லாமே கதையம்சத்தைப் பொறுத்த்வரை ச்ற்று வித்தியாசமாகவே இருக்கும். அதாவது மற்றவர்கள் எடுக்கத் தயங்கும் கதைகளை துணிந்து படமாக்குவார். தொடர்ந்து ‘பனித்திரை’, ‘தேன்மழை’, ‘பொம்மலாட்டம்’ போன்ற படங்களை இயக்கியபின்னர் நடிகர்திலகத்திடம் வந்தார். ‘நிறைகுடம்’ என்ற அற்புதமான படத்தைத் தந்தார். சிறப்பான கதை அற்புதமான நடிப்பு, சிறந்த நட்சத்திரத் தேர்வு என்று எல்லா அம்சங்களையும் உள்ளட்க்கிய படமாக அது வந்தது. (அதைப்பற்றி தனியாக ஒரு எபிசோட் எழுத இருப்பதால் இப்போது விட்டுவிடுவோம்).

முக்தா – நடிகர்திலகம் காம்பினேஷன் ஒரு விசித்திரமான கூட்டணி. தொடர்ந்து இரண்டு வெற்றியைத்தர மாட்டார்கள். ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று தொடர்ந்தது. உதாரணமாக, இவர்கள் கூட்டில் உருவானவற்றுள்

நிறைகுடம் – வெற்றி
அருணோதயம் – தோல்வியைக்கடந்த சுமார் வெற்றி
தவப்புதல்வன் – வெற்றி
அன்பைத்தேடி – தோல்வி
அந்தமான் காதலி – வெற்றி
இமயம் - தோல்வி
கீழ்வானம் சிவக்கும் – வெற்றி
பரீட்சைக்கு நேரமாச்சு – வெற்றி
இரு மேதைகள் – தோல்வி

இப்படி வெற்றியும் தோல்வியும் வெற்றியும் மாறிக்கண்ட ஒரு காம்பினேஷன். இவற்றிற்கிடையே முக்தா தனியாக ‘சூரியகாந்தி’, ‘அந்தரங்கம்’, ‘அவன் அவள் அது’ போன்ற படங்களையும் இயக்கினார். (அது பற்றி இங்கு விளக்கம் அவசியமில்லையென்பதால் விட்டு விடுவோம்).

“அன்பைத்தேடி” படம் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படம் அல்ல. முதல் நாள் முதல் காட்சி பார்த்ததுமே நடிகர்திலகத்தின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு விட்டுப்போய் விட்டது. (பொதுவாக முக்தாவின் ப்டங்களை ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு எல்லாம் அணுகுவதில்லை. இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு கணிப்பு இருக்கும்). கண்தெரியாத கதாநாயகியை வைத்து, நிறைகுடம், மாலைக்கண் நோய் உள்ள கதாநயகனை சித்தரித்து தவப்புதல்வன் என்று எடுத்த முக்தா, அன்பைத்தேடி படத்தில் ‘எப்போதும் பகல் கனவு காணும்’ ஒரு கதாநாயகனை மையமாக வைத்து கதயை உருவாக்கி இருந்தார். நடிகர் திலகத்துக்கு தன் திறமையைக் காட்ட கொஞ்சம் கூட ஸ்கோப் இல்லாத ஒரு களம்.

கதைச்சுருக்கம்:

அக்கா விஜயகுமாரியின் கணவர் மேஜரின் ப்ராமரிப்பில் வளரும் சிவாஜி, எப்போதும் பகல் கனவு காண்பவராக இருப்பார். அவரை முன்னுக்கு கொண்டுவர மேஜரும் என்னென்னவோ வியாபாரங்களை அமைத்துக்கொடுக்க ஒவ்வொன்றும் அவருடைய பகல்கனவு நோயால் பாழ்பட்டுப்போகும். கண்ணாடிக்கடை வைத்திருக்கும்போது, கிரிக்கெட் விளையாடுவதாக கனவு கண்டு விளாச மொத்த கண்ணாடிகளும் பாழ். மீண்டும்பட்டாசுக்கடை வைத்திருக்கும் சிவாஜி, ஜெயலலிதாவை ‘மிஸ்.மெட்றாஸ்’ ஆக கனவு கண்டு கொண்டே மத்தாப்புகளைக் கொளுத்திப் பட்டாசுகளின் மேல் போட, மொத்தக்கடையும் எரிந்து சாம்பல். இன்னொரு இடத்தில் ஓவியக்காட்சியைகாணச் சென்ற இடத்தில் ஒரு படத்தைப்பார்த்து அதில் வரும் பெண்ணுடன் கற்பனையில் ஜெயலலிதாவை நினைத்துப் பாட்டுப்பாடி, அதே நினைவில், அங்கே விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் சி.ஐ.டி.சகுந்தலாவைக் கட்டிப்பிடிக்க மிகவும் ரசாபாசமாகிவிடுகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அக்கா விஜயகுமாரி – மேஜர் தம்பதியின் பெண்குழந்தையை கடைக்கு அழைத்துச் செல்லும் சிவாஜி, அங்கே ஒரு புத்தர் சிலையைக் கண்டு, தானே புத்தராக பகல் கனவில் மூழ்கி விட, குழந்தை காணாமல் போக, விஷயம் அறிந்த மேஜர் இனிமேலும் பொறுக்க முடியாமல் வெகுண்டு போய் மைத்துனனின் சொத்துக்களை அவரிடமே ஒப்படைத்து விட்டு மனைவி விஜயகுமாரியுடன் தனியே சென்று விடுகின்றார். இதனிடையே, காணாமல் போன தன் மகளின் ஒரே நினைவாக தன்னிடம் இருந்த (அந்தக் குழந்தை முன்பு பாடிய) பாடல் கேஸட்டையும் தன்னுடைய அவசர நடவடிக்கையால் விஜயகுமாரி அழித்து விடுகிறார். அக்காவும் அத்தானும் தனியே விட்டுச்சென்றதால் தவிக்கும் சிவாஜிக்கு ஜெயலலிதாதான் உறுதுணையாக இருந்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக பயந்த சுபாவத்தைப் போக்கி, தைரியமுள்ளவராக மாற்றுகிறார். இந்நிலையில் ஒருநாள் வானொலியில் காணாமல் போன அக்காவின் குழந்தை பாடிய பாட்டு ஒலிக்க, அதைக்கேட்டு உடனடியாக வானொலி நிலையத்தை அணுகும் சிவாஜி அவர்களிடம் இருந்து குழந்தையின் இருப்பிடம் பற்றியறிந்து அங்கே சென்று குழந்தையை மீட்டு அக்கா குடும்பத்திடம் சேர்க்க, குடும்பம் மொத்தமும் ஒன்று சேர … முடிவு ‘சுபம்’.

இப்படத்திற்கு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளரான (சிவந்த மண், இதயக்கனி, தியாகம் புகழ்) என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ‘மெல்லிசை மாமன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அவருடைய இசையில்

“அம்மாவும் அப்பாவும் இரு பூனைகள்.. அவர்களின் மகள் நான் செல்லப்பூனை” (குழந்தை பாடுவது, கிளைமாக்ஸில் குழந்தையை கண்டு பிடிக்க உதவும் பாட்டு)

“புத்தி கெட்ட பொன்னு ஒண்ணு சுத்துதடி என்னையே” (டி.எம்.எஸ். – சுசீலா) நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் வித்தியாசமான காஸ்ட்யூமில்.

டி.எம்.எஸ்ஸுடன் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய “சித்திர மண்டபத்தில் சில மொட்டுகள் கொட்டி வைத்தேன்” என்ற பாடல் அப்போது ரொம்ப பாப்புலர். இப்படத்திற்காக சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த ‘என் மகன்’ படம் மாற்றப்பட்டது.

அடுத்த பக்கம் »