தமிழ் பட லிஸ்டை வைத்து ஒரு பதிவு ஓட்டுகிறேன் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். லிஸ்ட் போட்டுவிட்டேன்.

தமிழில் நல்ல படங்கள் மிகக் குறைவு. நல்ல பொழுதுபோக்கு படங்கள் கூட மிக குறைவு. பொழுதுபோக்கு படம் மட்டுமே எடுத்த எம்ஜிஆரின் படங்களில் ஒரு ஆறேழுதான் நல்ல பொழுதுபோக்கு படம். ஜெய்ஷங்கருக்கு ஒன்றிரண்டு தேறினால் அதிகம். ரஜினிகாந்தின் எந்த படத்தை வேற்று மொழி நண்பர்களுக்கு பார்க்க சொல்லி சிபாரிசு செய்வீர்கள்? ஒரு அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, சீன, ஜப்பானிய, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, தெலுகு, கன்னட, பிஹாரி, வங்காள, மலையாள நண்பருக்கு என்ன தமிழ் படம் பார்க்க வேண்டியது என்று சொல்வீர்கள்?

உண்மையில் மொழி தெரியாதவர்களுக்கு என்ன படம் சிபாரிசு செய்யலாம் என்பதுதான் நல்ல படத்துக்கு இலக்கணம். அப்படி எனக்கு தேறுவது மிக குறைவே. (பொழுதுபோக்கு படங்களை சேர்த்தாலும்).

  1. எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – பிரமாண்டத்துக்காக.
  2. எஸ். பாலச்சந்தரின் அந்த நாள் – அற்புதமான திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இயக்கம்.
  3. சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழன் – சிறந்த நடிப்பு, இசை.
  4. சிவாஜி நடித்த நவராத்திரி – சிறந்த நடிப்பு.
  5. கே. பாலச்சந்தரின் மேஜர் சந்திரகாந்த் – நல்ல கதை
  6. கே. பாலச்சந்தர், ரஜினிகாந்தின் தில்லுமுல்லு – அருமையான நகைச்சுவைப் படம். தேங்காய் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்.
  7. கே. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் – ஒரு உண்மையான கதை, நல்ல நடிப்பு.
  8. மணிரத்னம், கமலின் நாயகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு, இசை.
  9. கமலின் மைக்கேல் மதன காமராஜன் – அருமையான நகைச்சுவைப் படம். கிரேசி மோகனுக்கு ஒரு ஜே!
  10. கமலின் தேவர் மகன் – நல்ல திரைக்கதை, நடிப்பு.

Honourable Mention என்று கொஞ்சம் தேறும்.

  1. எஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் – நல்ல மசாலா.
  2. கலைஞர், சிவாஜியின் பராசக்தி, மனோகரா – தமிழ் புரியாவிட்டால் இவற்றை பார்ப்பது கஷ்டம். நல்ல வசனங்கள், நடிப்பு.
  3. எம்ஜிஆரின் நாடோடி மன்னன் – நல்ல மசாலா
  4. சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் – மிகை நடிப்பின் சிறந்த பிரதிநிதி
  5. பானுமதியின் அன்னை – நல்ல நடிப்பு
  6. கே. பாலச்சந்தரின் பாமா விஜயம் – சிரிக்கலாம்.
  7. சோவின் முகமது பின் துக்ளக்- தமிழின் ஒரே சடையர்
  8. சிவாஜி நடித்த கெளரவம் – நல்ல நடிப்பு.
  9. மகேந்திரன், ரஜினிகாந்தின் முள்ளும் மலரும் – நல்ல கதை, நடிப்பு
  10. மணிரத்னம், ரஜினிகாந்தின் தளபதி – எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்.
  11. கமலின் பஞ்சதந்திரம் – சிரிக்கலாம்.

எனக்கு இப்போது நினைவு வராத படங்களையும் சேர்த்தால் என்ன ஒரு 25-30 நல்ல படம் தேறுமா? கிட்டத்தட்ட எண்பது வருஷமாக தமிழ் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆயிரம் படமாவது வந்திருக்கும். வருஷத்துக்கு ஒரு படமாவது தேறினால் கூட ஒரு என்பது படம் வந்திருக்க வேண்டாமா? நல்ல தமிழ் படங்கள் வருவது ஏன் இவ்வளவு அபூர்வமாக இருக்கிறது?

தொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்

தொடர்புடைய பதிவுகள்:
டாப் டென் உலக சினிமா
கமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்
நடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்
பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி
பாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்
அஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்
NCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்

விமர்சனங்கள்:
அந்த நாள், அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது
அன்னை
சந்திரலேகா
கப்பலோட்டிய தமிழன்
மேஜர் சந்திரகாந்த்
மனோகரா, விகடன் விமர்சனம்
முகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்
நாடோடி மன்னன், விகடன் விமர்சனம்
பராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்

வழக்கம் போல பாஸ்டன் பாலா லிஸ்ட் கொடுத்திருக்கிறார், வழக்கம் போல என் ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். ஆனால் எனக்கு திரைக்கதையை குறிப்பாக ரசிக்க தெரியுமா என்பது எனக்கே சந்தேகம்தான்.

1. என்னதான் முடிவு திரைக்கதை+இயக்கம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் – பார்த்ததில்லை.

2. சாது மிரண்டால் திரைக்கதை+இயக்கம் திருமலை/மகாலிங்கம் – எனக்கு ஒன்றும் சிறப்பாக தெரியவில்லை.

3. காவல் தெய்வம் திரைக்கதை, இயக்கம் ஜெயகாந்தன், கே. விஜயன் – பார்த்ததில்லை.

4. யாருக்காக அழுதான் திரைக்கதை+இயக்கம் ஜெயகாந்தன் – மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. வித்தியாசமான கதை.

5. அவர்கள் திரைக்கதை+இயக்கம் கே. பாலச்சந்தர் – நல்ல திரைக்கதை. முழு விமர்சனம் இங்கே.

6. மன்மத லீலை திரைக்கதை+இயக்கம் கே. பாலச்சந்தர் – எனக்கு ஒன்றும் சிறப்பாக தெரியவில்லை.

7. அவள் அப்படித்தான் திரைக்கதை+இயக்கம் அனந்து, ருத்ரையா – பார்த்ததில்லை.

8. நாயகன் திரைக்கதை+இயக்கம் மணிரத்னம் – நல்ல திரைக்கதை.

9. கல்லுக்குள் ஈரம் திரைக்கதை, இயக்கம் செல்வராஜ், பாரதிராஜா – மிக வித்தியாசமான, நல்ல திரைக்கதை. மெதுவாக போவதுதான் ஒரே பிரச்சினை. ஓடாதது துரதிருஷ்டம்தான்.

9. தேவர் மகன் திரைக்கதை, இயக்கம் கமல்ஹாசன், பரதன் – புத்திசாலித்தனமான திரைக்கதை. பாத்திரங்கள் நன்றாக செதுக்கப்பட்டிருக்கும்.

10. மகாநதி திரைக்கதை+இயக்கம் கமலஹாஸன், சந்தானபாரதி – உலகத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் கதாநாயகன் தலையில் விடிவது சிவாஜியோடு போய்விடவில்லை. இருந்தாலும் சுவாரசியமான திரைக்கதை. கல்கத்தா போவது, சிறைச்சாலை காட்சிகள், விவசாய வாழ்க்கை எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

11 .அலைபாயுதே திரைக்கதை+இயக்கம் மணிரத்னம் – புத்திசாலித்தனமான திரைக்கதை.

12. ஹே ராம் திரைக்கதை+இயக்கம் கமல்ஹாஸன் – நல்ல திரைக்கதை.

13 . அன்பே சிவம் திரைக்கதை, இயக்கம் கமல், சி. சுந்தர் – மிக நல்ல திரைக்கதை. கடைசி முடிவுதான் – மாதவன் கிரணை திருமணம் செய்து கொள்வது – கொஞ்சம் செயற்கையாக இருக்கும்.

14. மும்பை எக்ஸ்பிரஸ் திரைக்கதை, இயக்கம் கமல், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் – நல்ல திரைக்கதை. ஓடாதது துரதிருஷ்டம்.

15. விருமாண்டி திரைக்கதை+இயக்கம் கமல் – கமலுக்கு ராஷோமொன் மாதிரி படம் எடுக்க ஆசை. எப்படி முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஆனால் நல்ல திரைக்கதை.

16 . பருத்திவீரன் திரைக்கதை+இயக்கம் அமீர் – ஹைப் இருக்கும் அளவுக்கு கதை இல்லை.

கிட்டத்தட்ட பாதி கமல் எழுதிய திரைக்கதைகள். அப்புறம் பாலச்சந்தர், ஜெயகாந்தன் என்று usual suspects. அமீர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், செல்வராஜ் (பாரதிராஜா) என்று சிலர். ஸ்ரீதர், பாலு மகேந்திரா யாரையும் காணோம்.

தொடர்புடைய பதிவுகள்
அவர்கள் பட விமர்சனம்

avargal

1977ல் வந்தது.

அவர்கள் மூன்று ஆண்கள், ஒரு பெண். ஆண்கள் – ரஜினி காந்த், ரவிகுமார், கமல்ஹாசன். பெண் – சுஜாதா.மூவரும் சுஜாதாவுடன் தொடர்புடையவர்கள். ரஜினிகாந்த் சாடிஸ மனப்போக்குடைய மாஜிக் கணவன். ரவிகுமார் மென்மையான மனப்போக்கு கொண்ட மாஜிக் காதலன். கமல் அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் கேரள “அசடு”.

வீட்டில் மனைவிடம் குத்தல், குதர்க்க வார்த்தைகள், மற்றும் சுடுசொற்கள் பேசும் ஈவிறக்கமற்ற கே.ராமனாதன் (ரஜினி), பம்பாய் அலுவலகத்தின் ஏரியா மானேஜர். அவர் திருமணம் செய்வது மனைவியை கொடுமைப்படுத்தவே என்பது போல் சித்தரிப்பது சிறிது உதைக்கிறது. ஏற்கனவே ஒருவரை நேசித்தபெண் என்று தெரிந்தே அனுபாமாவை திருமணம் செய்துகொள்கிறார்.பின் ஏன் கொடுமைப்படுத்துகிறார் என்பது பாலசந்தருக்கே வெளிச்சம். ரஜனி வழக்கமான ஸ்டைலுடன் அசத்துகிறார். வில்லன் ரோல், காமடி ரோல் இவை இரண்டிலும் ரஜினி சோடை போனதில்லை. இதிலும் அப்படித்தான். கதாபாத்திரத்தின் மேல் வெறுப்பை மிக அற்புதமாக வரவழைத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு. (என் மனைவிக்கு மிஸ்டர். ராமனாதன் மேல் வந்த ஆத்திரத்தைப் பார்த்து அதை ஊர்ஜிடப்படுத்த முடிந்தது.) சட்டரீதியாக விவாகரத்து பெற்று, மன ரீதியாக ஜீவனாம்ஸமும் வேண்டாம் என்று அனு கூறிவிட, ராமனாதன் சந்தோஷமாக தன் வழியே போவதை விட்டு விட்டு தன் ஜென்மத்தின் தலையாய குறிக்கோள் அனுவை மாஜிக் காதலனுடன் சேர விடாமல் இருப்பதே என்று கங்கனம் கட்டுவது திரைக்கதையில் பெரிய ஓட்டை.

பரணியை (ரவிக்குமார்) ஏதோ வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. பாவமான முகத்தை வைத்துக் கொண்டு ஒரு ஜெண்டில்மேன் ஆக வந்து போகிறார். அவர் முக்கிய கேள்விகளுக்கு சிம்பாலிக்காகவே பதில் சொல்வதில் (டெலிபோன் மூலமாக, அனுவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்பதை ஷேவ் செய்து கொண்டு வருவது மூலம் சொல்வது)பாலசந்தருக்கே உரித்தான டச் தெரிகிறது. மாஜிக் கணவன் மீண்டும் வரும் பொழுது தான் ஒதுங்கிக் கொள்வது பரணிக் கேரக்டருக்கு மேலும் மெருகு சேர்க்கிறது. புல்லாங்குழல் ஊதும் பொழுது ஒருவித போஸில் நிற்பது கொடுமையாக இருக்கிறது. பிங் பாங் விளையாடுவதைப் பார்க்கும் பொழுது இவர் நிஜமாகவே இது நிறைய விளையாடியிருப்பார் என்று தோன்றுகிறது. அருமையான் ஸ்மாஷ் ஸ்டைல்கள். எதிரில் ரஜினி கொடுமையாக விளையாடிக் கொண்டிருப்பார்.

ஜனார்த்தன் – சுருக்கமாக ஜானி சீனியர் – கமல்; ஜானி ஜூனியர் – கமலின் பொம்மையும், வெண்டிரிலோக்விஸமும். ஜானி ஜூனியர் பாலசந்தர் முத்திரை. சீனியர் எப்படா அனு மெட்ராஸ் வருவார் என்று காத்திருந்தவர் போல் உதவுகிறார். மனைவியை ஸ்டவ் பலியாக்கியது முதல் கும்மிடி அடுப்பு தான் உபயோகப்படுத்துவதாக கூறுகிறார். சொதப்பல். திருவனந்தபுரம் புறப்படும் அனுவிடம் தன் காதலுக்கு சாதகமாக பதில் வந்துவிடாதா என்று கடைசிவரை ட்ரெயின் ஜன்னலில் தோன்றி தோன்றி மறைவது அருமையான சீன். அழுத்தக்கார அனு பதிலே பேசாமல் ஏமாற்றிவிடுகிறார். ஆனால் மிகவும் பிராக்டிகல். ஜூனியர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தியும் திரைக்கதையின் வசதிக்காக அனு புரிந்துகொள்ளாமல் இருந்துவிடுவது பரணியுடன் மறைமுகமாகவே அதாவது சிம்பாலிக்காகவே சம்பாஷனை செய்யும் அனு காரக்டருக்கு பொருந்தவில்லை. அப்பாவி ஜானி சீனியர் ரோலில் கமல் அலட்சியமாக ஜமாய்த்திருக்கிறார்.

அனுபாமா (சுஜாதா) மிகுந்த புத்திசாலியாக அறிமுகப்படுத்தப்படுகிறார். பின் உண்மையில் ஒரு முட்டாள் பெண் என்று ராமனாதனின் அம்மா எல்லோருக்கும் புரிய (?) வைத்துவிடுகிறார். முற்போக்கிற்கும், பாரம்பரியத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு முட்டாள் என்ற பெயர் பொருத்தம் நியாயம் அளிக்காது. எதற்க்கும் அழாத அனு கடைசியில் தன் சுகங்களை துறந்து தன்னுடன் திருவனந்தபுரம் கிளம்பிவிடும் மாமியாரின் மேன்மையான, மென்மையான குணத்த்திற்கு அணையை உடைத்து விடுகிறார்.

ராமனாதனின் அம்மா – (யாரிவர்? – லீலாவதி என்று பெயர் பார்த்தேன்)  குற்ற உணர்ச்சி மிக்க மாமியார். மகன் செய்யும் கொடுமைகளுக்கு இவர் வேலைக்கார ஆயாவாக வந்து பிராயசித்தம் செய்துகொள்கிறார். பாத்திரம் கற்பனைக்கு நன்றாக இருக்கிறது.பெண்களை நிச்சயம் கவரும். ஆமாம். எல்லாருக்கும் தலை சிறந்த மாமியார் கிடைப்பது என்பது கற்பனையுடன் நின்று விடுகிறது.

கே.பாலச்சந்தரின் டிலெம்மா இதுவே. சட்டபூர்வமாக விவாக ரத்து ஆன பெண், மத பூர்வமாக திருமணத்தின் போது கணவனால் கட்டப்பட்ட தாலியை என்ன செய்யவேண்டும்? போனால் போகட்டும் என்று கழுத்திலேயே விட்டுவிடுவதா? மறுமணத்திற்கு இடைஞ்சல் கொடுக்குமே? கடைசியில் கோவில் உண்டியலில் விடைப் பெற்றுவிடுகிறார்.

”இப்படிஓர் தாலாட்டு”, ”ஜூனியர் ஜூனியர், இரு மனம்” மற்றும் “காற்றுக்கென்ன வேலி” பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது.  அனைத்துப் பாடல்களையும் SPB, S.ஜானகி மட்டுமே பாடியிருக்கிறார்கள்.  M.S. விஸ்வனாதன் இசை.

பாலச்சந்தர் கிளாசிக்.

10க்கு 6.

போன பதிவு ஏவிஎம் செட்டியார் அளித்த ஒரு பழைய பேட்டி. செட்டியார் பற்றி நானும் ஏதாவது எழுதலாம் என்று பார்த்தேன், எனக்கு தயாரிப்பாளர்களை பற்றி அவ்வளவாக தெரியாது. அதே நேரத்தில் நண்பர் சூர்யா தன் தளத்தில் சாண்டோ சின்னப்பா தேவரை பற்றி ஒரு அருமையான பதிவு போட்டிருப்பதை பார்த்தேன். சரி, தயாரிப்பாளர்களை பற்றி பொதுவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் தயாரிப்பாளர்களில் எஸ்.எஸ். வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம், செட்டியார், தேவர் நான்கு பேரும் பல வருஷம் கொடி கட்டி பறந்தவர்கள்.

ஏவிஎம் இத்தனை வருஷம் கழித்தும் நன்றாக இருப்பது பெரிய விஷயம். செட்டியார் நடுவில் ஒரு பத்து வருஷம் படமே வேண்டாம் என்று இருந்ததாகவும், அவர் இறந்த பிறகுதான் சரவணன் மீண்டும் முரட்டுக் காளை படத்துடன் அடுத்த இன்னிங்க்சை ஆரம்பித்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கென்னவோ இருந்தபோதுதான் என்று தோன்றுகிறது. நாற்பதுகளின் பிற்பகுதியிலிருந்து அறுபதுகளின் முற்பாதி வரைக்கும் பல நல்ல படங்கள் வந்தன. சபாபதி, நாம் இருவர், ஓரிரவு, வாழ்க்கை, பராசக்தி, பெண், அந்த நாள், நானும் ஒரு பெண், அன்னை, மேஜர் சந்திரகாந்த் ஆகியவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை. சரவணன் வந்த பிறகு மசாலா படங்கள்தான் வருகின்றன.

எஸ்.எஸ். வாசன் ஒரு பத்து வருஷம் கொடி கட்டி பறந்தார். மங்கம்மா சபதம், சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், அவ்வையார் எல்லாம் பெரும் வெற்றி. நாற்பதுகளிலேயே கோடீஸ்வரர் ஆகிவிட்டார். அவருக்கு அப்புறம் படம் எடுப்பதில் இண்டரஸ்ட் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரும்புத் திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை, ஒளி விளக்கு மாதிரி படங்கள் வந்தாலும், ஜெமினி ஃபில்ம்ஸ் அறுபதுகளிலேயே அமுங்கிவிட்டது.

டி.ஆர். சுந்தரம் பெரிய ஆள். பாரதிதாசன், எம்ஜிஆர், கலைஞர், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் எல்லாரும் அவரிடத்தில் வேலை செய்திருக்கிறார்கள். மந்திரி குமாரி, திரும்பிப் பார், அலி பாபாவும் நாற்பது திருடர்களும் மாதிரி படங்களை எடுத்திருக்கிறார். ஆனால் அறுபதுகளில் வல்லவன் சீரிஸ் – வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன் மாதிரி – படங்கள் மட்டுமே எடுத்தது ஏன் என்று தெரியவில்லை.

இவர்கள் எல்லாம் கொடி கட்டி பறந்தாலும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வட்டத்தில் name recognition இருந்த ஒரே தயாரிப்பாளர் தேவர்தான். தேவரின் மிருகப் படங்கள் எங்கள் வட்டத்தில் பெரிய ஹிட். புலியையும், சிங்கத்தையும், யானையையும் நாங்கள் வேட்டைக்காரன் மாதிரி ஏதாவது படத்தில் பார்த்தால்தான் உண்டு. (உயிர் காலேஜ் எல்லாம் போனதில்லை.)

தேவர் படங்கள் எதுவும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய காவியங்கள் இல்லை. அவருடைய ஆடியன்சுக்கு மன அளவில் ஒரு எட்டு வயதுதான் இருக்கும். எம்ஜிஆர், முருகன், மிருகங்கள் இவற்றை வைத்தே காலத்தை ஓட்டியவர். ஆனால் ஒரு நாளும் படம் பார்ப்பார்களை ஏமாற்றியதில்லை. அவர் கடை சமாசாரம் எப்படி இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தது. அது பிடிக்காதவர்கள் போக வேண்டாம்!

எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் எடுத்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். எதுவும் எம்ஜிஆரின் சிறந்த படங்கள் லிஸ்டில் கூட வராது. வேட்டைக்காரன், நல்ல நேரம், தேர் திருவிழா, முகராசி இந்த மாதிரி படங்கள் நினைவு வருகின்றன. வேட்டைக்காரன், நல்ல நேரம் இரண்டும் பிரமாதமாக ஓடியன. இந்த நாலு படமும் தண்டம், இப்போது வேறு எதுவும் நினைவு வரவில்லை. எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் வளர்ந்தவர்கள். எம்ஜிஆர் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரால் இனி பேச முடியுமா, அவருக்கு இனி மேல் சினிமா வாழ்க்கை இருக்கிறதா என்று எல்லாரும் சந்தேகப்பட்டார்களாம். இவர் எம்ஜிஆரை பார்க்கப் போனாராம். போனவர் அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தாராம்!

அவருக்கென்று ஒரு ஆஸ்தான டீம் இருந்தது. கே.வி. மகாதேவன், எம்.ஏ. திருமுகம், தூயவன், ஆரூர் தாஸ், நாகேஷ், மேஜர், அசோகன் இல்லாமல் அவர் சாதாரணமாக படம் எடுப்பதில்லை.

ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல், ஹிந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தார்.

அவருடைய படங்களில் தெய்வம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது. படம் நன்றாக இருக்கும் என்று இல்லை, தண்டம்தான். ஆனால் கோவில்களின் அந்த கால நிலையை ஒரு டாக்குமெண்டரி போல நன்றாக எடுத்திருப்பார்.

இவர்களைத் தவிரவும் பல தயாரிப்பாளர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். சிவாஜி, எம்ஜிஆர் புகழிலே கொஞ்சம் மங்கி தெரியும் பந்துலு, ஜூபிடர் சோமு, பக்ஷிராஜா ஃபில்ம்ஸ் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் பல வெற்றி படங்கள் எடுத்தாலும் தெலுங்கு கம்பெனியான விஜயா பிக்சர்ஸ் நாகி ரெட்டி, எம்ஜிஆர், சிவாஜி, கலைஞர், பி.எஸ். வீரப்பா, முரசொலி மாறன், ஸ்ரீதர், ஜி.என். வேலுமணி, ஏ.பி. நாகராஜன், பாலச்சந்தர் படங்களை தயாரித்த கலாகேந்த்ரா, பாலாஜி, பிற்காலத்தில் ஜீவி, ஆர்.பி. சௌத்ரி, கமல், கோவைத் தம்பி, பிரகாஷ் ராஜ், என்று சொல்லி கொண்டே போகலாம். ஆனால் இவர்களில் பலருக்கும் வேறு முக்கியமான முகங்கள் இருந்தன – எம்ஜிஆரை தயாரிப்பாளர் என்றா நினைவு வைத்துக் கொள்கிறோம்? அப்படி இல்லாதவர்கள் பலரும் நிலைத்து நிற்கவில்லை.

இன்றைக்கு இவர்களுக்கு சமமாக சொல்லக் கூடிய கோலிவுட் பாதுஷாக்கள் இருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!

தேவரை பற்றி சாரதா இன்னும் விவரங்கள் தருகிறார்.

மேலும் சில படங்கள்: தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தொழிலாளி, கன்னித் தாய், தனிப் பிறவி, தாய்க்குத் தலைமகன், விவசாயி, காதல் வாகனம் ப்ளஸ் நீங்கள் சொன்ன படங்கள் நாலு. இவற்றில் சில மட்டும் 100 நாட்கள் என்ற எல்லைக்கோட்டைத் தொட்டன. பெரும்பாலானவை 50-ஐக்கூட கடக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழில் கண்ட ஒரே வெள்ளிவிழாப்படம் ஆட்டுக்கார அலமேலு மட்டும்தான். சில படங்கள் பெயரை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் ஒரே மாதிரி இருக்கும். திருக்குறள் மாதிரி இரண்டு வரிக் கதைகளைத்தான் படமாக எடுப்பார். தேவர் படத்தின் கதையை ஒரு பஸ் டிக்கட்டின் பின்பக்கம் எழுதிவிடலாம் என்று கோலிவுட்டில் ஒரு வாசகம் உண்டு.

ஜெய்சங்கரை வைத்து கெட்டிக்காரன், நேர்வழி போன்ற குப்பைப் படங்களையும், அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் போன்ற நல்ல படங்களையும் எடுத்தவர். ரவிச்சந்திரனை வைத்து மகராசி என்ற படத்தையும் எடுத்தார். சிவகுமாரை கதாநாயனாக வைத்து ஆட்டுக்கார அலமேலு, வெள்ளிக்கிழமை விரதம், (பழைய) ஸ்ரீகாந்தை நாயகனாகவும் பிரமீளாவை நாயகியாகவும் போட்டு கோமாதா என் குல மாதா ஆகிய வெற்றிப்படங்களை எடுத்தார். இடையிடையே எ.வி.எம்.ராஜனை வைத்து துணைவன், தெய்வம், திருவருள் என் பக்திப்படங்களின் பக்கமும் தலைநீட்டினார்.

ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், தாய் வீடு மற்றும் கமலை வைத்து தாயில்லாமல் நானில்லை (எத்தனை தாய்கள்), ராம் லக்ஷ்மண் போன்றவை அவர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுகளால் தயாரிக்கப்பட்டவை. கடைசியாக ஆனந்த பாபுவை வைத்து தர்மம் என்ற படம் எடுக்கப்போக, படம் அட்டர் ஃப்ளாப். தேறவேயில்லை. தேவர் பிலிம்ஸ் அத்துடன் நொடித்துப்போனது. இதனிடையே வாரிசுகளுக்குள் பாகப்பிரிவினை தலைதூக்க தேவர் பிலிம்ஸ் மற்றும் தண்டாயுதபாணி பிலிம்ஸ் மூடுவிழா கொண்டாடியது.

சின்னப்பா தேவர் யாரையும் எளிதில் நம்பி விடுவார். யாரும் அவரை சுலபமாக ஏமாற்றிவிடலாம். கே.வி.மகாதேவன் கூட வெறும் நாலு மெட்டுக்களை வைத்துக்கொண்டு அவருக்கு நாற்பது பாட்டுக்கள் போட்டுக்கொடுத்து விடுவார். தேவரின் நல்ல மனதுக்கு அவை பாப்புலராகிவிடும். இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ஜோடியை கண்ணதாசன் தேவருக்கு அறிமுகப்படுத்த, தேவர் அவர்களுக்கு படங்களில் வாய்ப்புக்கொடுத்ததால், படங்களில் டைட்டில்களில் ‘கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்’ என்று போட்டு தங்கள் நன்றியை காணிக்கையாக்கினர்.

எனக்கு தேவர் எடுத்த எம்ஜிஆர் படங்கள் பெரிய ஹிட்கள் என்று நினைவு. என் impression டெண்டு கோட்டையில் இருந்த ரெஸ்பான்சை பார்த்து ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் சாரதா என்னை விட விஷயம் தெரிந்தவர். ஞாபகம் வராத எம்ஜியார் படங்களின் பேரை எடுத்து தந்த சாரதாவுக்கு நன்றி! எனக்கு அசோகன் அண்ணனாக வரும் படம் (தாய்க்கு தலை மகன்), அசோகன் ஒரு மாஸ்க் போட்டுக்கொண்டு வரும் படம் (தர்மம் தலை காக்கும்) என்றுதான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. எம்ஜிஆர் ஒரு படத்தில் பறந்து கூட போவார் என்று ஞாபகம். என்ன படமோ தெரியவில்லை.

சாரதா சொல்வது போல பாட்டுகள் – எம்ஜிஆர் படத்தில் கூட – பிரமாதமாக இருக்காது. சூர்யா சொல்வது போல மூன்று மாதத்தில் படம் எடுப்பதால் இருக்கலாம்.

ஞாபகம் வரும் இன்னும் சில படங்கள் – நீல மலை திருடன் (ரஞ்சன்), சொர்க்கம் நரகம், இளஞ்ஜோடிகள், தர்மத்தின் தலைவன். கோமாதா என் குல மாதா ஹிந்தியிலும் காய் அவுர் கௌரி என்று வந்தது.

தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த லிஸ்டை கவனித்தேன். தமிழில் தேர்தல் படங்களுக்கு பாஸ்டன் பாலா ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். வழக்கம் போல ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பாதி படம் நான் பார்த்ததில்லை, வேறு யாராவது குறிப்பு எழுத வருகிறீர்களா?

முகமது பின் துக்ளக் – சோ: எனக்கு சினிமாவை விட நாடகம் பிடிக்கும். தமிழின் சிறந்த நாடங்களில் ஒன்று. சோ கலக்கி விடுவார். துக்ளக் தேர்தல் கூட்டங்கள் மகா ஜாலியாக இருக்கும்.

ஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்: பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா?

கண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி: இது என்ன குருதிப் புனலின் திரை வடிவமா? பார்த்ததில்லை.

ஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்: பார்த்ததில்லை.

அக்ரஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்: நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா?

தியாக பூமி – கல்கி: எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பார்க்க ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதா? ஆனால் இந்த கதையில் தேர்தல் கீர்தல் எதுவும் கிடையாதே?

சிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி: நல்ல பாட்டுகள், வெளி நாட்டு படப்பிடிப்பு, பார்க்கக் கூடிய மசாலா படம். இந்த படத்திலும் தேர்தல் ஒன்றும் கிடையாதே?

நிஜங்கள்: கேள்விப்பட்டதே இல்லை.

தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்: தமிழின் தலை சிறந்த நாடகம் + திரைப்படங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். தேர்தலை அத்திப்பட்டிக்காரர்கள் “பாய்காட்டுவார்கள்”.

மக்களாட்சி – ஆர் கே செல்வமணி: இதெல்லாம் ஒரு படம், இதற்கெல்லாம் கருத்து ஒரு கேடு.

முதல்வன் – ஷங்கர்: பொதுவாக எனக்கு ஷங்கரின் படங்கள் பிடிக்கும். இந்த படம் மிக பிடித்திருந்தது. படம் பார்க்கும்போதெல்லாம் இந்த ரோலில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.

இருவர் – மணிரத்னம்: ஒன்றும் பிரமாதம் இல்லை. படம் பார்க்கும் பொது ஒவ்வொரு மைனர் காரக்டரும் உண்மையில் யார் என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.

அச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்: அருமையான பாட்டு போட்ட வி.எஸ். நரசிம்மன் எங்கே போனார்? பார்க்கலாம்.

தேசிய கீதம் – சேரன்: என்னவோ நினைத்து என்னவோ நடந்துவிட்டது. கதை சரி இல்லாத பிரச்சினைதான்.

அமைதிப்படை – சத்யராஜ்: பார்த்ததில்லை.

சத்யா – கமல்ஹாசன்: நல்ல முடிச்சு. கமல் அருமையாக நடித்திருப்பார். சிட்டிக்கு நல்ல ரோல். வளையோசை கலகலகலவென அருமையான பாட்டு. ஹிந்தி ஒரிஜினலான அர்ஜுனும் நன்றாக வந்திருக்கும்.

என் உயிர்த் தோழன் – பாரதிராஜா: என்றாவது பார்க்க வேண்டும்.

பாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி: பார்க்கக் கூடிய மசாலா படம்.

அருணாச்சலம் – ரஜினி: ஜாலியான ரஜினி படம்.

மகாநடிகன் – சத்யராஜ்: சிரிப்பே வராத படம். சத்யராஜ் லொள்ளு பண்ணமாட்டார், பார்ப்பவர்களை கொலை பண்ணுவார்.

நண்பர் கிருஷ்ணமூர்த்தி பிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களை பற்றி ட்விட்டர் ஸ்டைலில் ஒரு மறுமொழி இட்டிருக்கிறார். எனக்கு பிடித்திருந்தது. அதை எல்லாரும் சுலபமாக பார்க்க பதிவாக போட்டுவிட்டேன்.

கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகள் என் கருத்துகள் இல்லை. என் கருத்துகளை பார்க்க இந்த பதிவை படியுங்கள்.

அவர் நம் வாயை பிடுங்குவதற்காகவே சில சர்ச்சைகளை – குறிப்பாக சிவாஜியை பற்றி – கிளப்புபவர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. :-) ஆனால் சுவாரசியமாக எழுதுவார். ஓவர் டு கிருஷ்ணமூர்த்தி!

இது என்னுடைய ரெண்டு பைசே!

பராசக்தி: அன்னைக்குத் தேதி ஆச்சரியம். இன்னைக்கு வெறும் குப்பை.

வீ.கட்டபொம்மன்: —-கலர்ல எடுத்ததும், ஓவர் ஆக்டிங்கும் சேர்ந்து ஜெயித்த படம்.
சிவகங்கை சீமை கருப்பு வெள்ளையா இருந்தாலும், பாத்திரப்படைப்பு, வசனம், பாடல்கள் இப்படி எல்லா விதத்திலும் நிறைவாக எடுக்கப்பட்ட படம். அது என்னவோ, கண்ணதாசன், கையைச் சுட்டுக் கொள்வதற்காகவே எடுத்த படங்களில் இதுவும் ஒன்று. சிவகங்கைச் சீமையோடு ஒப்பிடும் போது, பொம்மன் கொஞ்சம் கம்மிதான்!

எ.வீ.பிள்ளை: ஒரு சக்சஸ் பார்முலா கதை. இதையே உல்டா அடித்து, ஹிந்தியில் சீதா அவுர் கீதாவாகி, தெலுங்குக்குப் போய் அப்புறம் தமிழில் வாணி ராணி என்று வெளிவந்தது. ஒரு ஓரத்தில் சிவாஜியும் வேஷம் கட்டின படம். வாத்தியார் வாத்தியார்தான்!

கை.கொ.தெய்வம்:: சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டுக்காக மட்டும் பார்க்கலாம்

கா.நேரமில்லை: ஸ்ரீதர் கொடுத்த ஹிட் இன்றைக்கும் இனிக்கிறது.

நீர்க்குமிழி: நாடகத்தை அப்படியே படமாக்கின மாதிரி ஒரு செயற்கை இருந்தாலும், கையைக் காலைத் தையத் தக்கா என்று ஆட்டிக்கொண்டு தை நாகேஷ் ஆக இருந்தவரை, நல்ல நடிகராகக் காட்டிய படம். பாலச்சந்தர் கொஞ்சம் தனித்துத் தெரிய ஆரம்பித்ததும் இந்தப் படத்தில் இருந்துதான்.

தி.மோகனாம்பாள்: நல்ல கதை, திரைக்கதையைக் கோரம் செய்யாமல் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டதாலும், ஒவ்வொருவரும் தன் பாத்திரத்தை நன்றாகச் செய்ததாலும் நிறைவாக இருந்த படம். ஆர்வி, சூர்யா இருவரும் கவனியுங்கள், சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கையும் மிஞ்சி ஜில் ஜில் ரமாமணியும், ‘இந்த வைத்தி கண்ணசைச்சா வாகனங்கள் பறக்காதோ? வைத்தியும், மேலக்கார தவில்கார முத்துராக்கு அண்ணனும் மனதில் இடம் பிடித்த படம்!

16 வயதினிலே: பரட்டையாக நடித்தவர் தேறி விட்டார். சப்பாணிதான் என்ன , இன்னமும் அதே ரெண்டுங்கெட்டான் மாதிரியே நடிப்பு, வாழ்க்கை இரண்டிலுமே!

உ. பூக்கள்: அந்த நேரத்துப் புதுமை, புது முயற்சி. இன்றைக்கு உட்கார்ந்து பார்க்க முடியாது.

ஒரு தலை ராகம்: பாட்டுக்கள் அத்தனையும் ஹிட்! இன்றைக்கும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம். ’நானொரு ராசியில்லா ராஜா” என்று பாட வைத்து, வீட்டிற்குள் உட்காட வைத்து விட்டார் பாவி என்று TMS மேடைதோறும் புலம்ப வைத்த படம். அன்றைக்குச் சரி, இன்று..?

அது சரி, பிரகாஷ் ராஜுக்கு இந்தப் பத்து படங்கள் தான் பார்த்ததில் பிடித்தது என்றால், அவர் பார்க்க வேண்டிய நல்ல படங்கள் தமிழில் இன்னும் மீதமிருக்கிறது.

என் இரண்டு பைசே: நான் சிவகங்கை சீமை பார்த்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை.

எப்போதோ பார்த்த படம். துல்லியமாக எல்லாம் நினைவில்லை.

விகடனில் வந்த விமர்சனம் இங்கே.

1973-இல் வந்த படம். சிவகுமார், ஸ்ரீவித்யா, சுபா, ஜெயசித்ரா, கமல், பூர்ணம் விஸ்வநாதன், ஜெயசுதா, எஸ்.வி. சுப்பையா நடித்தது. எம்எஸ்வி இசை. மணியன் விகடனில் தொடர்கதையாக எழுதியது. டோண்டுவும் உஷா ராமச்சந்திரனும் தொடர்கதையின் பெயர் இலவு காத்த கிளி என்று தகவல் தருகிறார்கள். பாலச்சந்தர் இயக்கம்.

சுப்பையாவுக்கு மூன்று பெண்கள் – சுபா, ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா. அவர்கள் வீட்டுக்கு கல்யாணம் ஆகாத சிவகுமார் குடி வருகிறார். மூன்று பேரும் அவர் மேல் ஆசைப்படுகிறார்கள். சிவகுமார் ஜெயசித்ராவை விரும்புகிறார். எல்லாரும் தங்கள் ஆசையை சொல்லத்தான் விரும்புகிறார்கள், ஆனால் வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறார்கள். சிவகுமாரின் விருப்பம் தெரிய வரும் மற்ற இருவரும் நாசுக்காக விலகிக் கொள்கிறார்கள். சற்று பொருத்தம் இல்லாத கல்யாணம் செய்து கொள்கிறார்கள். கமல் ஒரு ப்ளேபாய். பெண்களை வளைப்பதிலேயே குறியாக இருப்பவர். ஜெயசித்ரா தன் லிஸ்டில் இருப்பதாக தைரியமாக அவரிடமே சொல்வார். ஜெயசித்ரா நான் உன் வலையில் விழ மாட்டேன் என்று சவால் விடுவார். கமல் கொஞ்சம் வயதான பூரணத்தின் மனைவி ஜெயசுதாவை தன்னுடன் வர சம்மதிக்க வைக்கிறார். ஜெயசித்ரா கமலை போகவிடாமல் தடுப்பதற்காக தன் கற்பை பணையம் வைக்கிறார். ஜெயசுதாவை காப்பாற்ற தன் கற்பை இழந்தது புரிந்ததும் கமல் திருந்தி ஜெயசித்ராவை மணக்க, சிவகுமார் இலவு காத்த கிளி ஆகிறார்.

ஜெயசித்ரா மிக சிறப்பாக நடித்த படம் இதுதான். அப்போதெல்லாம் பாலச்சந்தர் படத்தில் எல்லாரும் நன்றாக நடிப்பார்கள், மற்ற படங்களில் சொதப்புவார்கள் என்று ஒரு கருத்து பரவலாக இருந்தது. சுஜாதாதான் மற்ற படங்களிலும் நன்றாக நடித்தார் என்று பேர் வாங்கினார். ஜெயசித்ரா வேறு எந்த படத்திலும் நன்றாக நடித்ததாக எனக்கு நினைவில்லை.

கமலின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. அவர் முதலில் கண்டுகொள்ளப்பட்ட படம் இதுதான் என்று நினைக்கிறேன்.

சிவகுமார், சுப்பையா, ஸ்ரீவித்யா, சுபா எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள்.

இரண்டு பாட்டுகள்தான் நினைவிருக்கிறது. சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எம்எஸ்வி கலக்கிய பாட்டு ஒன்று (உஷா ராமச்சந்திரன் எம் எஸ்வி நன்றாக பாடிய ஒரே பாட்டு இதுதான் என்று சொல்லி இருந்தார்). கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு என்ற பாட்டு இன்னொன்று. அதுவும் நன்றாக இருக்கும்.

பார்க்கலாம். சுவாரசியமான படம்தான். பத்துக்கு ஏழு மார்க். B- grade.

சொல்லத்தான் நினைக்கிறேன் படம் வந்த போது(30-12-73) விகடனில் வந்த விமர்சனம். நன்றி விகடன்!

கதையாகவும் நாடகமாகவும் வந்து ஒருமுகமான பாராட்டைப் பெற்ற ஒரு கதையைப் படமாக்கும்போது பிரச்னைகள் உண்டு. அவற்றைக் கடந்து பாராட்டுக்குரிய படமாக அதைப் பரிமளிக்கச் செய்யமுடியுமா? பாலசந்தரால் அது முடியும் என்பதற்கு அருமையான உதாரணம் – சொல்லத்தான் நினைக்கிறேன்.

மணியனின் கதையை மணி மணியான உத்திகளைக் கையாண்டு மனங்கவரும் குடும்பச் சித்திரமாகப் படைத்துத் தந்திருக்கிறார் பாலசந்தர். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் நுழைந்து, அன்றாட நிகழ்ச்சிகளைக் கண்கூடாகப் பார்ப்பது போன்ற உணர்ச்சி ஒவ்வோர் அடியிலும் இழைந்திருக்கிறது.

திருமணத்திற்குக் காத்திருக்கும் மூன்று பெண்களின் சுபாவமும் மூன்று விதம். மூத்தவள் வாத்தியாரம்மாவும் சரி, அடுப்படியை அடைக்கலமாகக் கொண்ட இரண்டாவது பெண்ணும் சரி, கடைக்குட்டியான கல்லூரி மாணவியும் சரி… ஆசையை வளர்த்துக் கொண்டிருப்பதில் ஒரே ரகம்தான். வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்த மானேஜரின் மனத்திலும் இடம் பிடிக்கத் துடிக்கிறார்கள். இவர்களில் யாராவது நடிக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? அக்கம்பக்கத்தில் சந்தித்து உரையாடுகிறோமே, அப்படிப்பட்ட இயல்பான ஆத்மாக்களாகத்தான் இவர்களைப் பார்க்கிறோம். அவ்வளவு ஜீவனுள்ள பாத்திர சிருஷ்டிகள்!

மானேஜரின் பார்வையைத் தன் பக்கம் திருப்புவதற்காக அலைமோதும் ஆவலுடன், பாத்திரத்தை ணங்கென்று வைத்து வித்யா ஒலி எழுப்புவதும், குச்சியால் தட்டித் தட்டி சத்தம் எழுப்பி சிவகுமாரை அழைப்பதும் புதுமையான உத்தியல்லவா? தான் சமையலில் எக்ஸ்பர்ட் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக மட்டுமின்றி, தன் மனக் கோலத்தையும் ஜாடையாகப் புலப்படுத்துவது போல் சிவகுமாருக்குப் பிடித்தமான பாகற்காய்ப் பொரியலை வித்யா தன் தங்கையின் மூலம் கொடுத்தனுப்ப, அதைக் கொடுத்துவிட்டு வந்து அக்காவை அவள் டீஸ் பண்ணும் நளினம் இருக்கிறதே..!

பேசும்போது திக்குகிற பெண்ணைப் பாடச் சொன்னால்..? பெண் பார்க்க வந்தவர்களின் முன் சுபா பாடும்போது திக்கித் திணற, மீரா பாடிய பாடலைக் கேட்கக் கண்ணன் வரவில்லையோ? என்று குரல் கொடுத்து வித்யா துணைக்குப் பாட வரும் போது கண்களில் நீர் மல்குகிறதே!

நூறு அடிக்கு மேல் இருட்டையே படமாகக் காட்டிய உத்தியையும், வாணி ஜெயராமின் ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாட்டையும், முதலில் மூணு வார்த்தை பேசி பிறகு இரண்டு வார்த்தை பேசும் சுப்பையாவின் குணசித்திரத்தையும் ரசிக்காமல் இருக்க முடியுமா?

நடிப்பில் வித்யா எங்கோ உயரப் போய் நிற்கிறார். படுசுட்டியான கடைக் குட்டிப் பெண் ஜெயசித்ரா தமக்கைகளுடன் போட்டி போடுகிறார்; காதலில் மட்டுமல்ல, நடிப்பிலும்!

மானேஜர் சிவகுமார் ஜென்டில்மேன் என்று வித்யாவிடம் மட்டுமல்ல, எல்லோரிடமும் பெயரெடுக்கும்படி கம்பீரமாக வருகிறார். கண்ணியமான பாத்திரத்தை நயம்படச் செய்திருக்கிறார்.

கவர்ச்சியான இன்னொரு பாத்திரம் கமல். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞன் தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் என்னென்ன செய்வான் என்பதற்கு உதாரணம். லவ் டாலர் போட்டுக்கொண்டு யூ டோண்ட் நோ பாட்டுப் பாடிக்கொண்டு மது அருந்துவது, இளம்பெண்களைக் குறி வைத்து வீழ்த்துவது என அருமையான பாத்திரத்தை லாகவமாக ஏற்று நடித்து சபாஷ் பெறுகிறார் இளம் நடிகர் கமலஹாசன்.

ஒவ்வொரு சிறு அசைவுக்கும், உணர்ச்சிக்கும், பாவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வே நமக்கு ஏற்படாத வண்ணம் மிக இயற்கையாகப் படம் அமைய வேண்டும் என்று பாடுபட்டிருக்கும் டைரக்டர் பாலசந்தர் ஏன் சிலவற்றைக் கவனிக்காமல் விட்டுவிட்டார் என்பதை எண்ணும்போது, கொஞ்சம் வியப்பாக இருக்கிறது.

உதாரணமாக, படத்தில் சர்ச்சைக்குரிய கட்டமான மூன்றாவது பெண் புஷ்பா கற்பைப் பணயம் வைக்கும் முக்கியமான காட்சியை எடுத்துக் கொள்வோம். கமலஹாசனைத் திருத்துகிறேன் என்று முதலில் சவால் விட்ட புஷ்பா, அந்த சவாலைக் காப்பாற்றவே ஒரு புதிய உறவை அவனிடம் ஏற்படுத்திக்கொண்டு மேலும் அவன் தவறு செய்யாமல் தடுத்திருக்கலாம்; அவனைத் திருத்தும் ஒரே காரணத்திற்காகத் தன்னை அவள் இழந்திருக்கலாம்; அல்லது, ஜெயசுதாவின் திருமண வாழ்க்கை உடைந்துவிடப் போகிறது என்று தெரிந்ததனால், இப்போது நடப்பது போலவே தன்னை அவனுக்குத் அர்ப்பணித்து அவனை மாற்ற முயற்சித்திருக்கலாம். இப்படியெல்லாம் நேரிடையாக இதைச் சொல்லியிருந் தால், சர்ச்சைக்கே இடம் இருந்திருக்காதே! அதை விட்டுவிட்டு ஒரு மணி நேரத்தைக் கடத்துவதற்காக என்றும், விமானம் போய்விட வேண்டும் என்பதற்காகவும் அவள் தன்னை இழக்கத் தீர்மானித்தாள் என்றெல்லாம் சம்பவங்களை ஜோடித்து, அதன்பிறகு ‘நேரமும் போச்சு, என் பெண்மையும் போச்சு, விமானமும் போச்சு’ என்று அவளை ஏன் அழ வைக்கவேண்டும்? சொல்லவேண்டியதை தைரியமாகச் சொல்லாமல் ஏன் தயங்குகிறார் டைரக்டர்?

இறுதியில், ஒன்றை மட்டும் கண்டிப்பாகச் சொல்லத்தான் நினைக்கிறோம். இது பாலசந்தர் படைத்துள்ள மிக இனிய குடும்பச் சித்திரம். முற்றிலும் புதுமையான திரை விருந்து!

விகடனின் ஒரிஜினல் விமர்சனம் – 29-12-1968இல் வந்தது.

சினிமா விமர்சனம்: எதிர் நீச்சல்

மாடிப்படி மாது பட்டு மாமி கிட்டு மாமா நாயர்…

இவர்களெல்லாம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள். ‘எதிர் நீச்சல்’ நாடகத்தின் மூலம் அறிமுகமான இந்தக் கதாபாத்திரங்கள், ஏதோ நம்முடன் நடமாடும் பாத்திரங்களோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட் டன.

நாடக உலகில் கொடி கட்டிப் பறந்த இவர்கள், இப்போது திரை உலகில் வீர நடை போடுகின்றனர்.

மத்தியத் தரக் குடும்பத்தின் சூழலில் பின்னப்பட்ட இந்தக் கதையில், நவரசங்களும் இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பல இடங்களில் சிரிக்கிறோம்; பல இடங்களில் கண்கலங்குகிறோம்.

மாடிப்படி மாதுவுக்காக, சபாபதி தன் வீட்டு வாசலிலேயே தட்டேந்தி நிற்கும் போதும், நாயர் தன் கடிகாரத்தை மாதுவின் கையில் கட்டி அவனை இறுகத் தழுவிக் கொள்ளும்போதும் கலங்கும் நாம், கால் உடைந்து பரீட்சை எழுத முடியாமல் வீடு திரும்பிய மாதுவை, சபாபதி தோளில் தூக்கிக்கொண்டு போகும்போது, சோகத்தையும் மீறி ஒரு நிறைவைப் பெறுகிறோம்

இந்தப் படத்தில் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

குறிப்பாக, நாகேஷ் மாதுவாகவே மாறிவிடுகிறார். நகைச் சுவையில் தேர்ந்த நடிகர்கள் எந்தப் பாத்திரத்தையும் சிறப்புற நடிக்கமுடியும் என்பதற்கு, ஒவ்வொரு காட்சியிலும் சான்று கூறிக் கொண்டிருக்கிறார் நாகேஷ்.

சுந்தரராஜன் அதே மிடுக்கு; அதே சிறப்பு!

கிட்டு மாமாவாக ஸ்ரீகாந்தும், பட்டு மாமியாக சௌகார் ஜானகியும் வெளுத்து வாங்குகின்றனர். ஜானகிக்குத்தான் அந்த மடிசார் என்னமாகப் பொருந்துகிறது!

நாயர் வேஷத்தை முத்துராமன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அசல் நாயர்தான். அவர் பேசுவது மலை யாளம்தான்; ஆனால், எவ்வளவு சுலபமாகப் புரிகிறது, தெரியுமா?

பயித்தியக்காரப் பெண்ணாக வரும் ஜெயந்தி, பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பளிச்சென்றும் பேசி நடித்திருக்கிறார். அசட்டு மாதுவை அவர் பார்க்கும் அந்தப் பார்வை இருக்கிறதே, அது ஒன்று போதும்!

படம் முழுவதும் வசனத்தில் நகைச்சுவையுடன் ஒரு கருத்தாழத்தையும் காண முடிகிறது. இது பால சந்தருக்குக் கை வந்த ஒரு கலை! சிரிக்க வைப்பதுடன், சிந்திக்கவும் வைக்கிறார் இந்த இளம் டைரக் டர்.

நாடகங்கள் மூலம்தான் நல்ல நடிகர்கள் உருவாக முடியும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதே போல், சிறந்த நாடகங்கள் நல்ல திரைப் படங்களையும் உருவாக்கும் என்பதற்கு, எதிர் நீச்சல் சிறந்ததோர் உதாரணம்!

நீர்க்குமிழி படத்துக்கு விகடனின் ஒரிஜினல் விமர்சனம். நன்றி, விகடன்!

சினிமா விமர்சனம்: நீர்க்குமிழி – விமர்சனம் வந்த நாள், 11-14-1965

நர்ஸிங் ஹோமின் ஒரு வார்டு.அங்கே மூன்று கட்டில்கள். சாவை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கான்ஸர் நோயாளி; கால் எலும்பு முறிந்து படுத்திருக்கும் ஒரு கால் பந்தாட்ட வீரர்; வயிற்று வலிக்காரர் ஒருவர். இவர்களைத் தவிர பிரதம டாக்டர், அவருடைய உதவியாளரான ஒரு லேடி டாக்டர் (பிரதம டாக்டரின் மகள்), ஒரு நர்ஸ், நோயாளிகளைக் காண வரும் சில விசிட்டர்கள். இவர்கள்தான் கதாபாத்திரங்கள். லேடி டாக்டருக்கு விளையாட்டு வீரர் மீது காதல்; பிரதம டாக்டருக்கோ மகள் பெரிய டாக்டராக மேல்நாடு சென்று படித்து வரவேண்டும்; காதல், திருமணம் போன்ற பந்தங்களில் சிக்கி விடக்கூடாது என்று ஆசை. இந்த ஆசைகளின் மோதலில் கதை வளர் கிறது. இந்தக் காதல் வளர தனது கோமாளித்தனத்தின் மூலமே உதவும் அந்த கான்ஸர் நோயாளி இறுதியில் சிரித்துக்கொண்டே சாகிறார். அவர் சாவுக்குத் தானே காரணம் என்று எண்ணிக் காதலைத் துறக்கிறாள் லேடி டாக்டர்.

சேகர் – சந்தர்

சேகர்: இது நாடகமாக வந்ததே, பார்த்தாயா சந்தர்?

சந்தர்: இல்லை. ஆனால், என் னைப் போல் அந்த நாடகத்தைப் பார்க்காதவர்களும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது படம். நாகேஷின் நடிப்பு மிகப் பிரமாதம். காமெடி ரோல் மட்டும் அல்ல, சீரியஸ் ரோலிலும் தன்னால் மிகச் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சர்வர் சுந்தரத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டார்.

சேகர்: அவருடைய ஒவ்வொரு டயலாகை யும் ஜனங்கள் எப்படி ரசித்தார்கள் பார்த் தாயா?

சந்தர்: அதிலும் கடைசி காட்சிகளில் அவர் சொன்ன கருத்துக்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வசன கர்த்தாவின் திறமை. இரு பொருள்பட மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் பாலசந்தர். சரி, சௌகார் ஜானகி எப்படி?

சேகர்: அடக்கமான, சிறப்பான நடிப்பு. அவருக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்திருக்கிறார் கோபால கிருஷ்ணன்.

சந்தர்: கடைசியில் டாக்டரின் மகள் தன் காதலைத் துறப்பது குழப்பத்தின் எல்லை. கான்ஸர் நோயாளியின் சாவுக்கும் அவள் காதலுக்கும் சம்பந்தமே இல்லை.

சேகர்: இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும், நாகேஷூக்காக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

அடுத்த பக்கம் »