நந்தனார்


Nandanarநான் பார்த்த மிக பழைய தமிழ் படங்களில் நந்தனாரும் ஒன்று. பழைய படங்கள் பிரின்ட் கிடைப்பதே அபூர்வம். இந்த வீடியோ நன்றாகவே இருந்தது. ராண்டார்கை தன் பத்தி ஒன்றில் இது 2008இல் Vintage Heritage அமைப்பு திரையிட்டதாகவும் நல்ல கூட்டம் வந்ததாகவும் வேறு சொல்கிறார். இந்த அமைப்பு பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு ஜே!

இது தண்டபாணி தேசிகர் நடித்த படம். ஜெமினி வெளியீடு. செருகளத்தூர் சாமா, சுந்தரிபாய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. (சேக்கிழாரின் கதையில் ஆண்டையான வேதியர் எல்லாம் கிடையாதாம். அது கோபால கிருஷ்ண பாரதியார் சேர்த்த மசாலாவாம்.) எஸ்.எஸ். வாசன் தயாரிப்பு. இசை எம்.டி. பார்த்தசாரதி மற்றும் எஸ். ராஜேஸ்வர ராவ். படம் வந்தது 1942 என்று ராண்டார்கை சொல்கிறார். 1941ஓ என்றோ எனக்கு கொஞ்சம் சந்தேகம். நான் பார்த்த படங்களில் மிக பழையது இதுவா சபாபதியா என்று எனக்கு தெரியவில்லை. சபாபதி 1941 என்று நிச்சயமாக தெரியும்.

நந்தனார் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். “இழிகுலத்தவரான” நந்தனுக்கு தில்லை சென்று நடராஜனை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆண்டையான வேதியரிடம் சொல்லவே பயம். இதற்கு நடுவில் திருப்புன்கூரில் கோவிலுக்கு வெளியே நின்றாவது தரிசனம் செய்யலாம் என்றால் நந்தி மறைக்கிறது. கடைசியில் சிவபெருமானே சற்றே விலகி இரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதாம் என்று நந்தியிடம் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேதியரிடம் பித்தம் தெளிய மருந்தான அந்த சிதம்பரத்துக்கு போக வேண்டும் சொன்னால் அவர் சிதம்பர தரிசனமோ அது உனக்கு அடுக்குமோ என்று கேட்கிறார். நாளைக்கு போ நாளைக்கு போ என்று தட்டி கழிக்கிறார். கடைசியில் என் நாற்பது வேலி நிலத்திலும் நீ ஒருவனே உழுது பயிர் செய்தால் போகலாம் என்று சொல்கிறார். நந்தன் சோர்ந்து உட்கார்ந்து அரகர ஜகதீசா என்று பாட, ராவோடு ராவாக சிவபெருமான் பூத கணங்களை வைத்து வேலையை செய்துவிடுகிறார். வேதியர் நந்தனின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைக்கிறார். நந்தன் அங்கே தீயில் குளித்து ஆலய தரிசனம் செய்கிறார்.

தண்டபாணி தேசிகரும் செருகளத்தூர் சாமாவும் கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள். அறுவடை செய்யும் ட்ரிக் ஷாட் அந்த காலத்தில் பேசப்பட்ட ஒன்றாம். ஆனால் படம் பார்ப்பதென்றால் பாட்டுகளுக்காகத்தான். பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குதாம், அய்யே மெத்தக் கடினம், சிதம்பர தரிசனமோ, சிவலோகனாதனைக் கண்டு சேவித்திடுவோம், பிறவா வரம் தாரும், என்னப்பனல்லவா என் தாயுமல்லவா, காமம் அகற்றிய, காண வேண்டாமோ, வருகலாமோ, அரகர ஜகதீசா என்ற பாட்டுகள் மிக அருமையானவை. முக்கால்வாசி கோபால கிருஷ்ண பாரதியார் எழுதியவைதான். மிச்சம் பாபநாசம் சிவன் எழுதியவை. யூட்யூபில் பல வீடியோக்கள் கிடைக்கின்றன.

என்னப்பனல்லவா என் தாயுமல்லவா

காமம் அகற்றிய நேயன் அவன்

காண வேண்டாமோ

அய்யே மெத்தக் கடினம்

வருகலாமோ

அரகர ஜகதீசா

வழி மறைத்திருக்கிது

நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம் – ஒரு சேரி சீனில் பிற்காலத்தில் “மல்லு வெட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக் காளை” என்ற பாட்டின் மெட்டு அப்படியே பின்னணி இசையாக வரும்! அசந்துவிட்டேன்! ஷங்கர் கணேஷ் எங்கிருந்தெல்லாம் பாட்டை எடுக்கிறார்கள்!

பாட்டுகளுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஆறு மார்க். C grade.

தொகுக்கப்பட்ட பக்கம்: அவார்டா கொடுக்கறாங்க–>படங்களின் பட்டியல்

தொடர்புடைய பதிவுகள்:
ராண்டார்கை நந்தனார் பற்றி எழுதிய பத்தி
ராண்டார்கை தேசிகரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை

தெலுங்கு படங்கள்


கொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.

அவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:

  • யோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
  • லைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.
  • சவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.
  • தீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.
  • தேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
  • மல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.
  • விப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.
  • மாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.
  • மூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.
  • மனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.
  • பிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.
  • சங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முதன் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.
  • சுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா?
  • ஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.
  • அயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.
  • ஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.
  • இவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. படத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)

    மிஸ்ஸியம்மா


    விஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.

    தமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.

    மிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.

    அருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்!

    பணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்!

    பாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.
    ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.

    ஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்!

    தெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)

    மொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.

    சந்திரலேகா (Chandralekha)


    நினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.

    தமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா?) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.

    யுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.

    இந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.

    சொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)

    சபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.

    படத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்!

    இந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.

    கதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.

    தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை?


    எல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள்? அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)

    கிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.

    எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.

    என்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.

    எல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.

    வி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா?

    கட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.

    P.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.