சுப்ரமணியபுரம் (Subramaniapuram)


ஏதாவது ஒரு படத்துக்கு விமரிசனம் எழுதலாம் என்று தோன்றியதால் எழுதுகிறேன். ஒரு மாறுதலுக்காக புதுப் படம். சமீபத்தில் பார்த்தது. எவ்வளவு நாட்கள்தான் பழைய படங்களுக்கே விமரிசனம் எழுதுவது? இதற்கும் எழுதிப் பார்ப்போமே!

2008-இல் வந்த படம். பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. வர்த்தக ரீதியாக மட்டும் இல்லாமல், கலை ரீதியாகவும் எல்லாரும் நல்ல படம் என்று சொல்கிறார்கள்.

சரி என்றும் நானும் எடுத்துப் பார்த்தேன். tangentially ஒரு சந்தேகம். இங்கே கிடைப்பதெல்லாம் திருட்டு டிவிடிதானா? எப்படி கண்டுபிடிப்பது? தரத்தைப் பார்த்தால் ரகசியமாக தியேட்டரில் வீடியோ எடுத்தது போல் இல்லை. For the record, நான் வசிப்பது நூவார்க், கலிஃபோர்னியாவில். டிவிடி எடுத்துப் பார்த்தது இங்கே பிரபலாமக உள்ள coconut hill என்ற மளிகை கடையில்.

“கண்கள் இரண்டால்” என்ற பாட்டு அருமையாக இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனுக்கு இதுதான் முதல் படமாம். யார் பாடியது என்று தெரியவில்லை. எனக்கு புதிய பாடகர்களின் குரல்களை அடையாளம் கண்டு பிடிக்க முடிவதில்லை.

வெங்கட்ரமணன் உதவி – பாடலைப் பாடியது, பெள்ளிராஜ், தீபா மரியம்! றேடியோஸ்பதி கானாபிரபா பதிவில் ஜேம்ஸின் நேர்முகம் (ஒலிப்பேட்டியாக) வெளியாகியிருந்தது.

எனக்கு அடையாளம் தெரிந்த நடிகர்கள் சென்னை 28 ஜெய்யும் கஞ்சா கருப்பும்தான். படத்தின் இயக்குனரான சசிகுமார் இன்னொரு கதாநாயகராம். துணை இயக்குனர் சமுத்திரக்கனி வில்லனாம். புதுமுகம் ஸ்வாதி கதாநாயகியாம்.

ஆகா ஓகோ என்றார்கள். அந்த அளவுக்கு படம் இல்லை. மோசம் என்றும் சொல்லமாட்டேன். சுமாரான படம், அவ்வளவுதான். தமிழின் தரம் ரொம்பவே மோசமாக இருக்கிறது, அதனால்தான் கொஞ்சம் பரவாயில்லாமல் ஒரு படம் வந்தால் கூட அதை ஆகாயத்துக்கு உயர்த்தி வைத்து பேசுகிறோம்.

படத்தின் பலம் நம்பக்கூடிய பாத்திரங்களும், 70களின் முடிவை தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதும்தான். பெல்பாட்டங்களும், கூடையை கவிழ்த்தது போல் தலைமுடியும் (அரை வழுக்கையனான எனக்கு பொறாமையாக இருந்தது.), தாவணி போட்ட பெண்களும், 70களில் பார்த்த வீடுகளும், எங்கேயாவது முடங்கிகொண்டு பீடி பிடிக்கும் இலைஞர்களும் என்னைப் போன்ற அரைக் கிழவர்கள் நிச்சயமாக பார்த்திருக்கிறோம். வன்முறை என்ற சுழலில் மெதுமெதுவாக சிக்கிக்கொள்ளும் அந்த இளைஞர்கள் நன்றாக வடிவமைக்கப் பட்டிருந்தார்கள். குடும்பத்துக்கும் காதலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு காதலனுக்கு துரோகம் செய்யும் அந்த இளைஞியும், காசுக்காக நண்பனுக்கு துரோகம் செய்யும் கஞ்சா கறுப்பும் உயிரும் சதையும் உள்ள மனிதர்கள். ஜெய் “ஒரு பொட்டச்சியிடம் உயிர் பிச்சை கேக்கரபடி ஆயிடுச்சே” என்று புலம்புவது ரியலிஸ்டிக்காக 70களின் மதிப்பீடுகளை பிரதிபலித்தது.

மிக மெதுவாக நகரும் திரைக்கதை எனது பொறுமையை சோதித்தது. நகைச்சுவை என்ற பெயரில் முதல் பாதியில் கஞ்சா கறுப்பு கொலை செய்கிறார். இரண்டாவது பகுதி வரும் வரைக்கும் கதை ஆமை வேகத்தில் நகருவது பெரிய பலவீனம். கதையில் சுவாரசியம் போதவில்லை.

என்னைப் போன்ற மேல் நாட்டு மனிதர்களுக்கு வீடியோவில் பார்ப்பது உத்தமம். இந்தியாவில் நிறைய நேரம் இருப்பவர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.