மிஸ்ஸியம்மா


விஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.

தமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.

மிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.

அருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்!

பணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்!

பாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.
ஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.

ஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்!

தெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)

மொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.