அவார்டா கொடுக்கறாங்க?


 

தமிழில் ப்ளாக் எழுதுவது இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பல தமிழ் ப்ளாக்-களை படித்திருக்கிறேன். ஜெயமோகனின் ப்ளாகை தவறாமல் படிக்கிறேன். அதனால்தானோ என்னவோ, தமிழில் ப்ளாக் எழுதுவது சுலபமாக இருக்கும் என்று நினைத்தேன். எப்படி தமிழ் எழுத்துக்களை ப்ளாக்-இல் கொண்டு வருவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டேன். ஜெயமோகன் சுரதா.காம் என்ற ஒரு தளத்தில் உள்ள தமிழ் எழுதும் கருவிகளைப் பற்றி சொன்னார். இன்னும் சரியாகப் பழகவில்லை. (இப்போது ஓரளவு பழகிவிட்டேன். கூகிள் தளத்தை பயன்படுத்துகிறேன்.) கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

“அவார்டா கொடுக்கறாங்க?” என்ற வசனம் தமிழ் சினிமாக்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வசூல் ராஜா MBBS படத்தில் கமல் நாகேஷிடம் டாக்டராக நடிப்பார். அவருடைய “ஆஸ்பத்திரியில்” கையில் கட்டுடன் ஒருவர் நாகேஷிடம் ஆ ஊ என்று துடிப்பார். நாகேஷ் அந்தப் பக்கம் போனதும் கமல் “என்னாடா கையில கட்டோட ஹார்ட் அட்டாக் வந்தது போல் நடிக்கிறியா? என்னா, அவார்டா கொடுக்கறாங்க?” என்று பாய்வார். தமிழ் படங்களின் நடிப்பவர்கள் முக்கால்வாசி பேர் என்னவோ அவார்ட் கிடைப்பது போல் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே நல்ல நடிப்பு என்று நினைக்கிறார்கள். அந்தக் காலத்து சிவாஜியிலிருந்து இன்றைய வடிவேலு முதல் இதைக் காணலாம்.

ஆனால் எனக்கு பழைய தமிழ் படங்கள் மிகவும் பிடிக்கும். சிறு வயதில் சினிமாக்களைத் தவிர வேறு பெரிய பொழுதுபோக்கு இல்லாமல் டென்ட்டுக் கொட்டாயில் படம் எப்போது மாறும், அப்பாவும் அம்மாவும் இந்த படத்தைப் பார்க்க காசு தருவார்களா என்று தவித்த காலங்கள் இன்றும் மறக்காததால் இருக்கலாம். என்னுடைய 15, 16, 17 வயதில், தனியாக மொட்டை மாடியில் சென்னை-1 ரேடியோ ஸ்டேஷனில் இரவு பத்திலிருந்து பதினொன்று மணி வரைக்கும் பழைய தமிழ் பாடல்களைக் கேட்டு மயங்கிய போது இந்த பாட்டு வந்த படத்தை எப்போதாவது பார்க்க வேண்டும் என்று தோன்றிய காலங்கள் இன்றும் நெஞ்சில் பசுமையாக இருப்பதால் இருக்கலாம். கல்யாணம் ஆவதற்கு முன் தனியாக அமெரிக்காவில் இருந்த நாட்களில் பழைய தமிழ் பட காசெட்டுகள் பக்கத்தில் “மெயில் பாக்” என்ற கடையில் சுலபமாக கிடைத்ததும், அதைப் பார்க்க நேரமும் இருந்து, தமிழுடன் சினிமாவைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனக்கு சன் டிவியின் 75 ஆண்டு தமிழ் சினிமாக் கொண்டாட்டம் ஒரு சிறிய சந்தோஷத்தைத் தருகிறது! முக்கால்வாசி நாட்களில் நான் அதைப் பார்க்கிறேன். நல்ல வேலையாக வீட்டில் இரண்டு டிவி இருப்பதால் என் மனைவி குழந்தைகள் என்னை என் வழியில் விட்டு விடுகிறார்கள்! ஆனால் என் பத்து வயது பெண் அவ்வப்போது இந்த ப்ரோக்ராம் எப்போதுதான் முடியும் என்று கேட்பாள்.

நான் இந்த படங்கள் நன்றாய் இருப்பதாக சொல்லவில்லை. முக்கால்வாசி சுத்த அடாசுதான். எல்லா கதாபாத்திரங்களும் ஒரு அச்சில் செய்யப்பட்டவர்கள். குறிப்பாக நம்பியாருக்கு எல்லா படங்களிலும் ஒரே கதாபாத்திரம்தான். சும்மா கையை பிசைந்து கொன்டு வந்து போக வேண்டியதுதான். சிவாஜியை பற்றி சொல்லவே வேண்டாம். அவருக்கு உலகத்தில் உள்ள எல்லா கஷ்டங்களும் வந்து சேரும். படத்துக்கு படம் அவருடைய கஷ்டங்கள் மாறலாம், ஆனால் அவர் கஷ்டப்படுவது மாறாது – உதாரணமாக மோட்டார் சுந்தரம் பிள்ளையில் அவருக்கு இரண்டு மனைவிகள் – முதல் மனைவிக்கு ஒன்பதோ, பத்தோ குழந்தைகள், இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள். அவரே ஒரு காட்சியில் சொல்வது போல் பாவம், நரக வேதனையை அனுபவிக்கிறார். தவப் புதல்வனில் அவருக்கு ராத்திரியில் கண் தெரியாது என்று சொன்னால் அவர் அம்மாவின் உயிருக்கு ஆபத்து வந்து விடும். விட்டால் காலில் முள் குத்தி விட்டது, அய்யோ சோதனை மேல் சோதனை என்பார்.

எல்லாரையும் விட நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் பழம் பெரும் நடிகர் அசோகன்தான். அசோகன் வந்துவிட்டால் எனக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும். அவர் ஒவ்வொரு வார்த்தைக்கும் நடிப்பார்; தன் முக பாவங்களை மாற்றுவார். அவர் புருவம் மேலே போகும், கீழே வரும். முகம் அஷ்ட கோணல் ஆகும். பறக்கும் பாவை படத்தில்  மனோகர் தொலைபேசியில் பேசும் ஒரு காட்சி வரும். மனோகர் என்னவோ சாதாரணமாகத்தான் பேசுவார். பக்கத்தில் அசோகன் மனோகர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ரியாக் ஷன் காட்டுவார் பாருங்கள், அவார்ட் கொடுக்காமல் வேறு என்ன செய்வது?

ஆனால் இந்த மிகை நடிப்பு நடிகர்களுடைய தவறு அல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். மிகை நடிப்புதான் நடிப்பு என்று அந்தக் காலத்தில் கருதப்பட்டது. சிவாஜி அடக்கி வாசித்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். கப்பலோட்டிய தமிழன் போல, நவராத்திரியில் சில ரோல்கள் போல. அவரது ரசிகர்கள் அன்று எதை விரும்பினார்களோ அதை அவர் கொடுக்க முயற்சி செய்தார், அவ்வளவுதான்.

இந்தப் பக்கங்களில் நான் இந்த படங்களுக்கு விமரிசனம் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். பல படங்கள் திரையிடப்பட்டு விட்டன. அரச கட்டளை என்ற படத்தை கடைசியாக பார்த்தேன். அதிலிருந்தே தொடங்குகிறேன்.