இந்த வாரப் படங்கள் (Week of Aug 4, 2008)


தாழம்பூ (பார்க்க முடியவில்லை), கன்னிப் பெண், டாக்டர் சிவா, மாமன் மகள், நீரும் நெருப்பும். இதில் நான் தாழம்பூ, கன்னிப் பெண் தவிர மற்றவற்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். டாக்டர் சிவா ஒரு சகிக்க முடியாத சிவாஜி படம். பாட்டுக்கள் தவிர (மலரே குறிஞ்சி மலரே) வேறு நல்ல விஷயங்கள் எதுவும் கிடையாது என்று ஞாபகம். மாமன் மகளில் சந்திரபாபு நகைச்சுவை என்ற பெயரில் கொலை செய்வார். நீரும் நெருப்பும் எஸ்.எஸ். வாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மறு பதிப்பு. ஒரிஜினல் பார்க்கக்கூடிய படங்களில் ஒன்று. நல்ல மசாலா. இது சரியான போர் என்று ஞாபகம். ஆனால் இந்த படத்தைப் பார்த்த போது நான் கத்தி சண்டை ரசிகன் அல்லன். சண்டைகள் நன்றாக இருந்திருக்கலாம், எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு பாட்டும் உருப்படியாக இல்லை என்று நினைக்கிறேன். கன்னிப் பெண்ணில் சில நல்ல பாட்டுக்கள் உண்டு – பவுர்ணமி நிலவில் பனி விழும் இரவில் மட்டும்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அரச கட்டளை (Arasa KattaLai)


படம், கதை, நடிப்பு இதெல்லாம் வேண்டும் என்பவர்கள் இந்தப் படத்தை தவிர்த்து விடலாம். இது ஆக்ஷன் பிரியர்களுக்காக. அதுவும் கத்தி சண்டை பிரியர்களுக்காக. எம்ஜியாருக்கும் பி.எஸ்.வீரப்பாவுக்கும், எம்ஜியாருக்கும் நம்பியாருக்கும், எம்ஜியாருக்கும் அசோகனுக்கும், எம்ஜியாருக்கும் மனோகருக்கும் சன்டை. அதுவும் எம்ஜியார் நம்பியார் சண்டை பிரமாதம்.

நல்ல பாட்டுக்கள் நிறைய உண்டு. புத்தம் புதிய புத்தகமே, வேட்டையாடு விளையாடு, ஆடப் பிறந்தவளே ஆடி வா, என்னைப் பாட வைத்தவன் ஒருவன். கே. வி. மகாதேவன் இசை அமைப்பு. வாலியைத் தவிரவும் பாடல் ஆசிரியர்கள் உண்டு, யாரென்று நினைவில்லை.

சரோஜா தேவியும் ஜெயலலிதாவும் வேறு எந்தப் படத்திலாவது ஒன்றாக நடித்திருக்கிறார்கள? எம்.ஜி. சக்ரபாணி (எம்ஜியாரின் அண்ணன்) வேறு எந்த படத்தையாவது டைரக்ட் செய்திருக்கிறாரா? ஜெயலலிதாவுக்கு கவர்ச்சிக் கன்னி என்று எந்த படத்திலாவது பட்டம் உண்டா? தெரியவில்லை.