டாக்டர் சிவா இல்லை, சுமதி என் சுந்தரி! (Dr. Siva illai, Sumathi En Sundari!)


 டாக்டர் சிவா எனக்கு பிடிக்காத சிவாஜி படங்களில் ஒன்று. இதைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் கழித்து டிவியை ஆன் செய்தால், சுமதி என் சுந்தரி ஓடிக் கொண்டிருக்கிறது! திடீரென்று மாற்றிவிட்டார்கள். இதையும் முன்னால் பார்த்திருக்கிறேன். ரொம்ப மோசம் கிடையாது, சுமாரான படம் என்று நினைவு. மிச்ச படத்தைப் பார்த்த பிறகும் அதே எண்ணம்தான். நல்ல பாட்டுக்கள் – பொட்டு வைத்த முகமோ, ஒரு தரம் ஒரே தரம், ஓராயிரம் நாடகம் ஆடினாள், ஆலயமானது மங்கை மனது போன்றவை நல்ல பாடல்கள். எஸ்.பி.பி. 1975க்கு முன்பு பாடிய பாடல்களில் ஒரு இளமைத் துள்ளல் இருக்கிறது. பவுர்ணமி நிலவில், இயற்கை என்னும் இளைய கன்னி, பொட்டு வைத்த முகமோ போன்ற பாடல்களில் இது நன்றாக தெரிகிறது.

கதை ஒன்றும் பிரமாதம் இல்லை. நடிகை ஜெயலலிதா சினிமா என்றால் என்ன என்றே தெரியாத சிவாஜி வீட்டில் புகுந்து விடுவார். சில பல குழப்பங்களால் ஜெ சிவாஜியின் மனைவி என்று எல்லாரும் நினைப்பார்கள். உண்மை தெரிவதற்குள் சிவாஜிக்கும் ஜெக்கும் லவ். ஜெ ஒரு நடிகை என்ற உண்மை தெரிந்த பிறகு சிவாஜி ஜெவை போக சொல்லிவிடுவார். கடைசியில் அவரது மனம் மாறி எல்லாம் சுபம்!

உலகத்தின் துயரங்கள் அத்தனையும் தனது தோள்களில் சுமக்காத சிவாஜியைப் பார்ப்பதே ஒரு பெரிய விஷயம்.  இரண்டாவது  பெரிய விஷயம் சிவாஜி இதில் ரொம்ப குண்டாக இருக்க மாட்டார். தொப்பை இல்லாத மாதிரி இருக்கிறது. ரொம்ப ஓவர் ஆக்டிங்கும் கிடையாது. (அந்தக் குறையை ஜெ போக்கி விடுகிறார்.)

பார்க்கலாம்.

கன்னிப் பெண் (Kannip Penn)


இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற பல நாட்களாக ஆசை – ஒரே காரணம்தான். பவுர்ணமி நிலவில் என்ற பாட்டு. இதை youtube-இல் பார்த்திருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இப்போது இந்த வீடியோ youtube-இலிருந்து அழிக்கப் பட்டுவிட்டது. சிவகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடிக்க, எம்.எஸ்.வி.யின் இசை, எஸ்.பி.பி. ஜானகி பாட்டு. சிவகுமார் உண்மையிலேயே அழகன்தான். எங்கேயோ படித்தது போல் சிவகுமார் அறுபதுகளிலும், கமல் எழுபதுகளிலும் அப்பாஸ்/அஜித் 90களிலும் அழகான நடிகர்கள் என்று தோன்றுகிறது. இந்த ப்ளாகுக்கு யாராவது வாசகர்கள் – வாசகிகளாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் – இருந்தால் உங்கள் கருத்துப்படி யார் அழகான நடிகர்கள் என்று எழுதுங்களேன்! துரதிர்ஷ்டவசமாக, படத்தில் இந்தப் பாட்டு ஒன்றுதான் பார்க்ககூடிய அம்சம். அடிப் போடி பைத்தியக்காரி அடி ஏண்டி அசட்டுப் பெண்ணே பாட்டையும் வேன்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். (திருத்திய சாரதாவுக்கு நன்றி!)

மகா முட்டாள்தனமான கதை. உதாரணமாக வில்லன் வி.கே.ராமசாமி சூழ்ச்சி செய்து சிவகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்ஷங்கரின் தங்கைக்கு கல்யாணம் செய்து வைப்பார். எதற்காக? தான் கோவிலில் இருந்து திருடிய வைரங்களை தற்காலிகமாக ஜெய் வீட்டில் பத்திரமாக ஒளித்து வைக்க! லட்சுமிதான் டைட்டிலின் கன்னிப் பெண். அதனால் அவர் தான் விரும்பும் ஜெய்க்கு வாணிஸ்ரீயை கல்யாணம் செய்து வைத்து விடுவார்! அப்போதுதானே அவர் டைட்டில் போல கன்னிப் பெண்ணாக இருக்க முடியும்?

யாராவது மீண்டும் பாட்டுக்களை youtube-இல் போஸ்ட் செய்வது வரை காத்திருங்கள்! இல்லையென்றால் ஏதாவது தமிழ் சினிமா பாட்டு தளங்களுக்கு சென்று பாட்டுக்களை கேளுங்கள்.

    பிற்சேர்க்கை – சாரதா தரும் தகவல்கள்:

சத்யா மூவீஸ் சார்பில் அது வரை தொடர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த படங்களையே தயாரித்து வந்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன், ‘சத்யா பிலிம்ஸ்’ என்ற வேறொரு பானரில் தயாரித்த படம் இது. எஸ்.பி.பி.யின் ஆரம்ப கால இளமையான இனிய குரலில் எஸ்.ஜானகியுடன் பாடிய ‘பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா’ என்ற அருமையான பாடல் இந்த ஜோடிக்குத்தான். இந்தப் பாடலும் பி.சுசீலாவும் ஈஸ்வரியும் இணைந்து பாடிய ‘அடி ஏண்டி அசட்டுப்பெண்ணே… உன் உள்ளத்தில் யாரடி கண்ணே’ என்ற பாடலும் அன்றைய விவித்பாரதியிலும், இலங்கை வானொலியிலும் சக்கை போடு போட்டன. கன்னிப் பெண் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார்.

கதாநாயகனாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு. பொறி பறந்தது. சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் படமென்பதால் விநியோகஸ்தர்களில் ஒருவர் ஆர்வக்கோளாறினால் ஒரு செய்தித்தாள் விளம்பரத்தில், ‘புதிய புரட்சி நடிகர் ஜெய் நடிக்கும்’ என்று விளம்பரப்படுத்தப்போக, விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்குப்போனது. அவ்வளவுதான். (அது ‘நம் நாடு’ ரிலீஸ் நேரம்) ஆர்.எம்.வீ.யை அழைத்து சரமாரியாக காய்ச்சியெடுத்துவிட்டார். அதே வேகத்துடன், ஆர்.எம்.வீ, அந்த விநியோகஸ்தரின் உரிமையை ரத்து செய்து, பிரிண்ட்களை திரும்பப்பெற்றார். கன்னிப்பெண் படம் பி & சி செண்ட்டர்களில் நன்றாக வசூல் செய்தது.