டாக்டர் சிவா (Dr. Siva)


74, 75ஆம் ஆண்டு வாக்கில்தான் எம்ஜியாரின் ரசிகனாக இருந்த நான் சிவாஜியின் “நடிப்பு” ரசிகனாக மாறி இருந்தேன். நாங்கள் அப்போது ஒரு குக்கிராமத்தில் வசித்தோம். கமலும் ரஜினியும் அந்த கிராமத்தில் நுழைய இன்னும் 3, 4 ஆண்டுகள் இருந்தன. அப்போது எம்ஜியார் சிவாஜிக்கென்று எங்கள் வயது (5இலிருந்து 15) சிறுவர்களுக்குள் கோஷ்டிகள் உண்டு. மிகச் சிலர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கரின் ரசிகர்கள். எம்ஜியார் ரசிகர்கள் “ஒரு உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு சூப்பர் சிவாஜி படம் சொல்லுடா” என்றால் சிவாஜி கோஷ்டியை சேர்ந்த நாங்கள் கொஞ்சம் தலை குனிந்த படியே “வெயிட் பண்ணுடா, டாக்டர் சிவா, இளைய தலைமுறை, அவன் ஒரு சரித்திரம் எல்லாம் வருதுடா” என்போம். ஏனென்றால் சிவாஜியின் சமீபத்திய படங்களை (மனிதனும் தெய்வமாகலாம், ராஜபார்ட் ரங்கதுரை) நாங்கள் யாரும் அவ்வளவாக ரசிக்கவில்லை. மூன்றுமே தாமதமாகத்தான் வந்தன. மூன்றுமே எங்கள் சிவாஜி கோஷ்டியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டன. டாக்டர் சிவாவை பார்த்து விட்டு தீவிர சிவாஜி ரசிகர்களே சுமார் என்றுதான் சொன்னார்கள் என்று ஞாபகம். இளைய தலைமுறை ஓடவே இல்லை. அவன் ஒரு சரித்திரமும் ஓட வில்லை என்று ஞாபகம்.

வயிறு எப்படி எரியாமல் இருக்கும்? சிவாஜி full form-இல் இருக்கிறார். அவர் “ஏஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”(Yes) என்று உறுமும்போதும், “ஓ மை காட்” என்று அலறும்போதும் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான் என்று தோன்றியது. எல்லாரும் – மேஜர், பண்டரிபாய், மஞ்சுளா, நாகேஷ் – அப்படியே பல படங்களில் உபயோகப்படுத்திய அச்சையே மீண்டும் ஒரு முறை அலட்டிக் கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள். அதுவும் மேஜர் மஞ்சுளாவை வீட்டை விட்டு விரட்டும் காட்சியில் சிவாஜிக்கே ஓவர் ஆக்டிங்கில் சவால் விடுகிறார்.

படத்தின் கதாநாயகன் சிவாஜி என்றதுமே படத்தின் காட்சிகள் எல்லாம் ஏறக்குறைய முடிவாகிவிடுகிறது. டைரக்டருக்கு அவரது சாமர்த்தியத்தைக் காட்ட ஸ்கோப்பே இல்லை. அவர் கவர்ச்சிக் காட்சிகளில்தான் தனது திறமையைக் காட்டி இருக்கிறார். டைரக்டருக்கு மஞ்சுளாவை டூ-பீஸ் நீச்சல் உடையில் நீண்ட நேரம் காண்பிக்க வேண்டும். என்ன செய்வது? ஒரு கழுதை மஞ்சுளாவின் உடையைத் தூக்கிகொண்டு ஓடி விடுகிறது! என்னே டைரக்டரின் சாமர்த்தியம்! பற்றாக்குறைக்கு ஜெயமாலினி (முதல் படமாம்) வேறு. அவர் எப்போதும் தொடை தெரிய அரை ட்ரவுசரும் எவ்வளவு மேலே தூக்கிக் கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கிக் கட்டிய சட்டையுமாக சுற்றுகிறார்.

அந்தக் காலத்தில் அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் கன்டின்யூடி எல்லாம் பார்க்க மாட்டார்கள் போலிருக்கிறது. சிவாஜி முதல் ஒரு மணி நேரத்திலேயே 4-5 விக்குகள் அணிந்துகொண்டு வருகிறார். எல்லாமே பொருந்தாமல் இருப்பதுதான் கொடுமை. சிம்பு இந்தப் படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும். சிவாஜியின் கையில் உள்ள மணி மாலையும், அவர் முதலில் சில காட்சிகளில் போட்டுக் கொண்டிருக்கும் தொப்புள் வரை வரும் செயினும் அவருக்கு பல ஐடியாக்களை கொடுக்கக் கூடும்.

25 வருஷங்களுக்கு முன்னால் வேண்டுமானால் மஞ்சுளாவையும் ஜெயமாலினியையும் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கலாம். இப்போது எல்லா படங்களிலுமே அவர்களை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சி காட்டப்படுவதால், நேரத்தை வீணடிக்காமல் “மலரே குறிஞ்சி மலரே” பாட்டை மட்டும் கேளுங்கள். (சிவாஜியும் மஞ்சுளாவும் பூஜை செய்யும் இடம்தான் தலைக் காவேரியாம்.)