மணாளனே மங்கையின் பாக்கியம் (Manalane Mangaiyin Bagyam)


கதை பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போல போய்க்கொண்டே இருக்கிறது. மாயாஜாலம், மந்திர தந்திரம், நாக கன்னி, பறக்கும் கம்பளம், கேட்டதைக் கொடுக்கும் கமண்டலம், சிவனும் பார்வதியும் வளர்க்கும் பிள்ளை என்று போய்கொண்டே இருக்கிறது. வேறு ஒரு போஸ்டில் சொன்னது போல மிக நீளமான படம். இதைப் பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். அதனால்தான் படம் முடிவதற்கு முன்னேயே விமரிசனம் எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்ல வேளையாக இப்போது டைட்டிலை சொல்லி விட்டார்கள், அதனால் படம் இன்னும் 15 நிமிஷத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். I spoke too soon. இன்னொரு பாட்டு போட்டுவிட்டார்கள்.

அஞ்சலி தேவியின் சொந்தப் படம். இசை அமைப்பாளர் ஆதி நாரயண ராவ் அஞ்சலி தேவியின் கணவர். ஜெமினியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் ஏ. கருணாநிதி, பாலாஜி, எஸ்.வி. சுப்பையா. வேறு சில முகங்களும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தன, ஆனால் யாரென்று தெரியவில்லை (டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன்). முன்பு ஒரு முறை அழகான நடிகர்கள் லிஸ்ட் போட்டிருந்தேன் – 60களின் சிவகுமார், 70களின் கமல், 90களின் அப்பாஸ்/அஜித் என்று. இவர்களுடன் 50களின் ஜெமினியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜெமினியின் மிருதுவான குரலும் அவருக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட். வேதாந்தம் ராகவையா டைரக்ட் செய்திருக்கிறார். தெலுகிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தெலுகு பெயர் ஸ்வப்ன சுந்தரி என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. ஸ்வர்ண சுந்தரியாம், ஸ்வப்ன சுந்தரி வேறு ஒரு பழைய அஞ்சலி தேவி படம். தெலுகு version பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

மூன்று விஷயங்களை நம்பி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாட்டுக்கள், மந்திரக் காட்சிகள், தாய்க்குலம் சென்டிமென்ட். 10-12 பாட்டுக்கள் இருந்திருக்கலாம். மூன்றரை மணி நேரம் ஆன பின்னும் படம் இன்னும் முடியவில்லை, இன்னொரு பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. சில பாட்டுக்கள் பிரமாதம். “ஜகதீஸ்வரா ஸ்வாமி பரமேஸ்வரா” ஒரு கலக்கலான பாட்டு. வெஸ்டர்ன் க்ளாசிகல் இசையை நினைவுபடுத்துகிறது. ஒவ்வொரு நோட்டையும் கொஞ்சம் இழுத்துப் பாடுவதாலோ என்னவோ – எனக்கு சங்கீதம் தெரியாது. அதற்கு போடப்பட்டிருந்த செட்டும் மிகவும் நன்றாக இருந்தது. நடனமும் டாப். ” தேசுலாவுதே” இன்னொரு டாப் க்ளாஸ் பாட்டு. கண்டசாலாவின் குரல் ஜெமினிக்கு பொருந்துகிறது. “அழைக்காதே நினைக்காதே” பாட்டும் பிரமாதம். அந்தக் காலத்தில் ஒரு வழக்கம். காமெடியன்கள் கொஞ்சம் கொச்சையான மொழியில் எஸ்.சி. கிருஷ்ணன் போன்றவர்கள் குரலில் ஒரு lowbrow பாட்டு பாடுவார்கள். இந்தப் படத்தின் lowbrow பாட்டு நன்றாக இருந்தது – “எவண்டா என் முன்னே வந்து எதிர்ப்பவன் இங்கே”

மாயாஜாலக் காட்சிகளும் தய்க்குலம் சென்டிமென்ட்டும் படத்தை இழு இழு என்று இழுக்கின்றன. பாட்டுக்கள்தான் இந்தப் படத்தின் காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரே பலம். youtube-இல் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை. dhool.com site-இலிருந்து தேசுலாவுதே பாட்டுக்கு ஆடியோ லிங்க் இங்கே . தேசு என்றால் வண்டு என்று அர்த்தமாம். வண்டுகள் மொய்க்கும் தேன் சிந்தும் மலரே என்று பொருள் வருகிறது.