நான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)


நேற்று இந்த படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் பல வருஷங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். எம்ஜியார் ஆரஞ்ச் பாண்ட், மஞ்சள் சட்டை, சுருள் முடி விக் போன்றவற்றுடன் உலா வந்த காலம். கலர் படம் என்றால் எல்லாரும் அழுத்தமான கண்ணைப் பறிக்கும் கலர் உடைகளை அணிய வேண்டும் என்று கதாநாயகர்களும் டைரக்டர்களும் புரொட்யூசர்களும் நினைத்திருந்த காலம்.

எம்ஜியாரைத் தவிர கே.ஆர். விஜயா, காஞ்சனா நடித்த படம். நம்பியார், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், வி. கோபாலகிருஷ்ணன் போன்ற பலரும் உப்பு சப்பில்லாத ரோல்களில் வந்து போவார்கள். படத்தின் முக்கிய காரக்டர்களுக்கு உள்ள ரோல்களுக்கு மட்டும் உப்பு சப்பு உள்ளதா என்று கேட்கக்கூடாது. 70களின் ஆரம்பத்தில் கொஞ்ச நாள் எம்ஜியாருக்கும் எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, ராமன் தேடிய சீதை போன்ற சில படங்களுக்கு இசை அமைத்தார்கள். எம்.எஸ்.வி. அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நன்றாகவே இசை அமைத்திருந்தார்கள். அதற்கு எம்ஜியார்தான் முக்கிய காரணம் என்று சொல்லுவார்கள். எம்ஜியார் தன் படத்தின் பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துவார் என்றும் அவருக்கு திருப்தி வரும் வரை இசை அமைப்பாளர்களை விடமாட்டர் என்றும் சொல்லுவார்கள். இந்த படத்திலும் சில நல்ல பாடல்கள் உண்டு. “நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்” என்பதுதான் தலை சிறந்த பாட்டு. அந்தப் பாட்டை கேட்டவுடன் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் காஞ்சனா எழுந்த நடக்க ஆரம்பித்துவிடுவார்! “நான் ஏன் பிறந்தேன்“, “தம்பிக்கு ஒரு பாட்டு”, “உனது விழியில் எனது பார்வை” போன்ற நல்ல பாட்டுக்களும் இருக்கின்றன.

எம்ஜியார் படத்தில் சாதாரணமாக எதிர்பார்க்கும் சாகசங்கள் எதுவும் இந்தப் படத்தில் கிடையாது. ஏறக்குறைய ஒரு சிவாஜி படத்தின் கதையில் எம்ஜியார் நடித்திருப்பார். படத்தின் ஒரே பலம் பாட்டுக்கள்தான். அழ்கான காஞ்சனாவை விட்டுவிட்டு ஏன் கோரமாக இருக்கும் குண்டு கே.ஆர். விஜயாவை கதாநாயகியாக போட்டார் என்று தெரியவில்லை. தன் ஆஸ்தான கதாநாயகிகளான மஞ்சுளாவையோ இல்லை லதாவையோ போட்டிருக்கலாம். படம் ஒன்றும் பிரமாதமாக ஓடவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் எம்ஜியாரின் படங்களுக்கு உள்ள மினிமம் காரண்டி இதற்கும் இருந்திருக்கும்.

நேற்று இந்தப் படத்தை பார்க்க முடியாத காரணம் “டார்க் நைட்” என்ற ஆங்கிலப் படத்தைப் பார்க்க சென்றதுதான். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை கூத்தாடியதாம். சில படங்களைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு பேக்ரவுண்ட் தேவைப்படுகிறது. Batman காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்கள், அவர்கள் சிறு வயதில் படித்த one dimensional caricatures வளர்ந்து full fledged characters ஆக மாறுவதை ரசிக்கலாம். நான் படம் எப்போது முடியும் என்று அவ்வப்போது மணியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போதைக்கு இந்தப் படம்தான் பாக்ஸ் ஆபீஸ் நம்பர் 1.