இமயம் (Imayam)


1979இல் வெளி வந்த படம். சிவாஜி, ஸ்ரீவித்யா, ஜெய்கணேஷ், தேங்காய் ஸ்ரீனிவாசன், மீரா,  மனோரமா, ஒய்.ஜி. மகேந்திரன் நடித்திருக்கிறார்கள். முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம். எம்எஸ்வி இசை. சிவாஜியின் மைத்துனியாக வருபவர் மீரா((நன்றி, மது!). ஜெய்கணேஷின் முதல் காதலியாக வருபவர் ரீனா. யாரென்று தெரியவில்லை(சாரதாவுக்கு நன்றி!).

சிவாஜி படங்களைப் பற்றி விவரங்கள் அறிய நடிகர்திலகம்.காம் என்ற தளத்தைப் பார்க்கலாம். பல விவரங்கள் இங்கே கிடைக்கின்றன. ரிலீஸ் ஆன தேதி, உடன் நடித்த நடிகர்கள், இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்கள், இசை அமைப்பாளர் விவரங்கள் அவர் நடித்த எல்லா படங்களுக்கும் கிடைக்கின்றன. சில படங்களுக்கு முழுமையான விமர்சனமும் இருக்கிறது. இந்த படத்துக்கு இல்லை, நாந்தான் கதி.

இமயம் திரிசூலத்துக்கு அப்புறம் வந்த படம். சிவாஜி charisma அப்போதுதான் exponetialஆக குறைய ஆரம்பித்தது. இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று அப்போது தோன்றவில்லை. இது பெரிய அளவில் வெற்றி பெறவும் இல்லை. நேற்றுதான் முதல் முறையாக பார்த்தேன்.

எதிர்பார்த்த அளவு மோசம் இல்லை. முக்தா ஸ்ரீனிவாசன் படங்களில் கதை என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது கடி கதையாக, cliched ஆக இருக்கலாம், ஆனால் கதையே இல்லாமல் heroக்களை மட்டும் நம்பி அவர் படம் எடுப்பதில்லை.

படத்தின் பெரிய பலம் அது நேபாளத்தில் எடுக்கப்பட்டதுதான். மிகவும் அழகான வெளிப்புறக் காட்சிகள். பனியால் முழுமையாக மூடப்பட்ட மலைகளும், கோவில் படிகளின் இரண்டு புறமும் இருக்கும் பிரம்மாண்டமான சிலைகளும், பரந்த ஆறுகளும் இங்கே போயே ஆகவேண்டும் என்று ஆவலை ஏற்படுத்தின. எல்லா படங்களுக்கும் வெளிப்புறக் காட்சிகள் எங்கே எடுக்கப்பட்டன என்று பதிவு செய்யப்பட்டால் நமக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும்.

பாட்டுக்களும் அருமையாக இருந்தன. அந்தக் காலத்தில் கேட்கப்பட்டன என்றாலும், உரிய வெற்றியை அடையவில்லை என்றுதான் நினைக்கிறேன். “கங்கை யமுனை” பாட்டின் இனிமைக்கு இன்னும் பெரிய வெற்றி அடைந்திருக்கவேண்டும். இளையராஜா அலையில் இதெல்லாம் கொஞ்சம் முழுகிவிட்டதோ என்னவோ! (60களில் எம்எஸ்வி இசையில் சில வி. குமார் பாட்டுக்கள் முழுகியதைப் போல)

“கங்கை யமுனை”தான் படத்தின் மாஸ்டர்பீஸ். ஜேசுதாசும் வாணி ஜெயராமும் கலக்கிவிட்டார்கள். அழகான ஸ்ரீவித்யா. ஒரு மங்களமான இசையை கேட்பதுபோல் இருக்கிறது. ஒரு இடத்தில் பின்னால் ஒரு கணவாயில் ரிப்பன் போல இரண்டு ஆறுகள் ஓடுவது பார்க்க பார்க்க திகட்டவில்லை. (வீடியோவில் 3 நிமிஷத்துக்கு பிறகு வருகிறது.) ரீவைண்ட் பட்டன் எங்கே என்று தேடினேன், அப்புறம்தான் இது வீடியோ இல்லை என்று நினைவு வந்தது.

“இமயம் கண்டேன்” நல்ல பாட்டு. நேபாளக் காட்சிகள் மிகவும் நன்றாக இருந்தன. ஒரே ஒரு குறைதான் – ஜெய்கணேஷும், மீராவும் இல்லாமல் இருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். அவர்களது சில அசைவுகள் கவர்ச்சியாகவோ ஆபாசமாகவோ இல்லை, கோரமாக இருந்தன.

“கண்ணிலே குடியிருந்து” இன்னொரு நல்ல பாட்டு. டிஎம்எஸ்ஸின் குரல் நல்ல கம்பீரமாக வந்து விழுகிறது. அதுவும் அவர் “தனனன தனக்கதன்னன்” என்று பாடுவது நம்மையும் தாளம் போடவைக்கிறது. பின்னால் வரும் கோவிலும் (படிகளும், பிரமாண்ட சிலைகளும்) அருமை.

“சக்தி என்னடா உன் புத்தி என்னடா” சுமாரான ஒரு பாட்டு. டிஎம்எஸ்ஸும் எஸ்பிபியும் பாடியிருக்கிறார்கள்.

கதை சிக்கல் ஒன்றும் பெரியதில்லை. சிவாஜியும் தேங்காயும் பார்ட்னர்கள். தேங்காயின் தம்பி ஜெய்கணேஷுக்கு கல்யாணம் ஆகாமலேயே சில தொடுப்புகளும் ஒரு தொடுப்பு மூலம் ஒரு பையனும் இருக்கிறார்கள். சிவாஜியின் மைத்துனி மீரா ஜெய்கணேஷை விரும்புகிறார். நிச்சயதார்த்ததின்போது ஜெய்கணேஷின் முதல் காதலி ரீனா தற்கொலை செய்துகொள்கிறார். சின்னப் பையன் சொல்வதை வைத்து சிவாஜி நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுகிறார். எல்லாரும் சின்னப் பையன் ஏதோ உளறுகிறான், நம்பாதீர்கள் என்று சொல்லிப் பார்க்கிறார்கள். சிவாஜி கேட்காததால் எல்லாரும் சிவாஜிக்கு எதிராக திரும்பிவிடுகிறார்கள். உண்மையை வெளிப்படுத்த சிவாஜி எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஜெய்கணேஷ் சூழ்ச்சி செய்து முறியடிக்கிறார். படம் முடியப் போகிறது என்று இயக்குனர் சொல்லிவிட்டதால் ஜெய்கணேஷ் மனம் திருந்தி உண்மையை ஒத்துக்கொள்ளும்போது சிவாஜி அபௌட் டர்ன் அடித்து ஜெய்கணேஷ் நல்லவர் என்றும் தான் அவர் கெட்டவர் என்று சொன்னது தவறு என்றும் சொல்கிறார். பிறகு ஜெய்கணேஷை கொல்ல வரும் துப்பாக்கி குண்டை தான் வாங்கிக்கொண்டு, சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மணமக்களை ஆசிர்வதித்து சுபம்!

படத்தில் எல்லாருக்கும் நதிகளின் பெயர்கள்தான். சிவாஜியின் பேர் கங்காதரன். தேங்காயின் பேர் வைகை அம்பலம். ஜெய்கணேஷின் பேர் கிருஷ்ணா. மீராவின் பேர் சிந்து. சின்னப் பையனின் பேர் ஜம்னா. ரீனா பேர் நர்மதா. மனோரமாவின் பேர் கோதாவரி. ஸ்ரீவித்யாவின் பேர் மறந்துவிட்டது, காவேரியோ? ரீனாவின் அண்ணன் பேர் ஹூக்ளி! நகைச்சுவை பாத்திரம் ஒய்.ஜி. மகேந்திரனின் பேர் கூவம்!

ஜெய்கணேஷ் சின்னப் பையனை சாக்லேட் மரம் இருக்கிறது என்று நம்ப வைக்கும் காட்சியில் இயக்குனர் கொஞ்சம் புத்திசாலித்தனத்தை காட்டி இருக்கிறார்.

இயக்குனர் தன் புத்திசாலித்தனத்தை காட்டும் இன்னொரு இடம். கதைக்கு தேவை இல்லாவிட்டாலும் நீச்சல் உடையில் சிஐடி சகுந்தலாவை ஜெய்கணேஷின் ஒரு தொடுப்பு என்று 10 நிமிஷம் காட்டுவது.

எல்லாருக்கும் எல்லாரும் எல்லா நேரத்திலும் எங்கே இருப்பார்கள் என்று தெரிகிறது. மனம் திருந்துவதற்காக ஜெய்கணேஷ் ஒரு பாம்புப் புற்றுக்கு அருகில் போய் யோசனை செய்துகொண்டிருப்பார். கரெக்டாக அங்கே அந்த சின்னப் பையன் வருவான். பிறகு சிவாஜியும் வந்துவிடுவார்.

சிவாஜி குண்டை தன் நெஞ்சில் வாங்கிக்கொள்வார். அடுத்த காட்சியில் சக்கர நாற்காலி! நெஞ்சில் குண்டு பாய்ந்தால் சக்கர நாற்காலி எதற்கு? ஒரு வேளை தயாரிப்பாளருக்கு இலவசமாக கிடைத்திருக்குமோ?

ஜெய்கணேஷ் சிவாஜியைப் பார்த்து பேசும் ஒரு வசனம் எனக்கு புரியவே இல்லை. “உயரத்துக்கு உதாரணமா இமயத்தை சொல்வாங்க. அந்த இமயத்துக்கே உதாரணம் நீங்க”. இமயத்துக்கு என்னய்யா உதாரணம்?

தேங்காய் சிவாஜியையே மிஞ்சும்படி நடித்திருக்கிறார். அங்கங்கே சிவாஜி “நடித்தாலும்” ரொம்ப மோசம் இல்லை.

எதிர்பார்த்ததை விட பெட்டர்.

To Infinity and beyond


சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிவு.

என் 4 வயதுப் பெண் க்ரியா அவ்வப்போது சூப்பர் கலக்கு கலக்குவாள். இப்போதுதான் கிண்டர்கார்டனில் சேர்ந்திருக்கிறாள். ஒரு முறை ஏதோ பெரிய எண்களைப் பற்றி பேச்சு வந்தது. அவலது 9 வயது அக்கா ஸ்ரேயா அவளுக்கு Infinity is the biggest number என்று சொல்லிக்கொடுத்திருக்கிறாள் போல. “எதுடா பெரிய நம்பர்” என்று நான் கேட்டேன். க்ரியா முதலில் Infinity என்று சொன்னாள். பிறகு கொஞ்சம் யோசித்து “One hundred” என்று சேர்த்துக் கொண்டாள். பிறகு இன்னும் ஒரு 15 வினாடிகள் யோசித்தாள். எல்லா உண்மைகளையும் புரிந்துகொண்டுவிட்ட சந்தோஷத்துடன் “Infinity, one hundred, AND thirteen! They are the biggest numbers appa” என்று சொன்னாள்!

ஒரிஜினல் தசாவதாரம் – எல்லாம் இன்ப மயம்


எனக்கு இன்னும் Hello Partner ஜுரம் போகவில்லை. Hello Partnerஇன் மறுபதிப்பான எல்லாம் இன்ப மயத்தில் கமல் 9 வேஷங்களில் வருவார். (ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்) ஒரே காரக்டர்தான், ஆனால் 9 கெட் அப்கள். (சிடிசன் படத்தில் அஜித் போல) “ரார வேணூஊகோபாலா” மெட்டில் அமைந்த “மாமன் வூடு மச்சு வூடு” இந்தப் படத்தில்தான். “சொல்ல சொல்ல என்ன பெருமை” பாட்டிற்கு கமல் ஆடும் ஆட்டும் ஆட்டம் தமிழ் நாட்டுக்கு வெளியிலும் “புகழ்” பெற்றது. (notorious என்பதற்கு தமிழ் வார்த்தை கிடக்கவில்லை. :-)) digg.com உள்பட பல மேல் நாட்டு தளங்களிலும் பார்க்கப்பட்டிருக்கிறது. கமல் அந்தக் காலத்து டிஸ்கோ ஸ்டைலில் ஒரு ஆஃப்ரோ விக்குடனும், பாதி திறந்த மார்புடனும் ஆடுவார். (அப்போதெல்லாம் முடிந்த வரை கமல் ஆடைக் குறைப்பு செய்துவிடுவார்.)

ஒரு முழுமையான விமரிசனத்தை இங்கே பார்க்கலாம்.

இந்த பாட்டுக்களை தேடினேன், கிடைக்கவில்லை. “எல்லாம் இன்ப மயம்” என்று தேடினால் என்று  “சொல்ல சொல்ல என்ன பெருமை” பற்றிதான் பல பதிவுகள் கிடைக்கிறது. யாராவது சொன்னால் இங்கே லிங்க் செய்துவிடலாம்…