முதல் பன்ச்


தமிழின் முதல் பன்ச் டயலாக்: 

“மணந்தால் மஹாதேவி, இல்லையேல் மரண தேவி”

 

இன்றைய படமான மகாதேவியில் பி.எஸ். வீரப்பா பேசுவது. கண்ணதாசன் எழுதியது.

மீண்டும் அழைப்பு


ஏற்கனவே வந்த படங்களுக்கு யாராவது விமரிசனம் எழுதுகிறீர்களா? சந்திரலேகாவுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், அதைத் தவிர வேறு எதற்காவது? எனக்கு ஞாபகம் இருக்கும் முன்னால் வந்த படங்கள்.

எதிர்நீச்சல்
பூவா தலையா
தவப் புதல்வன்
அன்புக் கரங்கள்
பராசக்தி
நவராத்திரி
உத்தம புத்திரன்
கல்யாணப் பரிசு
தேனிலவு
காதலிக்க நேரமில்லை
சூரியகாந்தி
தாழம்பூ
ஆசை முகம் (நிச்சயமாக இந்த ப்ரோக்ராமில் வந்ததா என்று தெரியவில்லை)
எங்க வீட்டுப் பிள்ளை
எங்கள் தங்கம்
பணக்காரக் குடும்பம்
ஹலோ பார்ட்னர் :-))

வேறு ஏதாவது படம் நினைவு வந்தாலும் எழுதுங்கள்! ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் எழுதிவிடலாம்…

வெங்கட்டின் சூப்பர் போஸ்ட்


வெங்கட்ரமணன் என்னும் இளைஞர் (என்னை மாதிரி அரைக் கிழங்களுக்கு வயது ரொம்ப முக்கியம்) எழுதி இருக்கும் ஒரு போஸ்ட். அவர் எழுதிய நீண்ட பதில் இந்த ப்ளாகின் மறு மொழிகளில் இருக்கிறது, ஆனால் தேடுவது கொஞ்சம் கஷ்டம். இன்றைய படிப்பு சூழலை பற்றி அவர் எழுதிய விவரமான பதில் என்னை பூரிக்க வைத்தது. அந்த மெய்ல் வந்ததும் ஒரு மணி நேரம் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்துக்கு தேன் குடித்த குரங்கு போலத் தாவிக்கொண்டிருந்தேன். (ஆஹா! குரங்கு தாவுகிறது. நீ எங்கேயோ போய்ட்டடா!)

மிக சுவாரசியமான போஸ்ட். தவறாமல் படியுங்கள். இது வரையில் ரமணி சந்திரனை படித்ததில்லை. நந்தா எழுதியதை படித்த பிறகு இவ்வளவு மோசமாக எழுதுவதை படித்தே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ( Plan 9 from Outer Space என்ற ஒரு பாடாவதி படத்துக்கு ஒரு cult following இருப்பது போல) கிழக்கு பதிப்பகம் உருவான கதையை பற்றி பா. ராகவன் எழுதி இருப்பதும் ரொம்பவே நன்றாக இருந்தது.

உங்களுக்கு புத்தகங்களில் அவ்வளவு இன்டரஸ்ட் இல்லாவிட்டாலும் என்னை பற்றி நல்லபடியாக எழுதி இருக்கிறார், அதற்காகவாவது படியுங்கள்!

அன்பே ஆருயிரே (Anbe Aaruyire)1975இல் வந்த படம். சிவாஜியைத் தவிர மஞ்சுளா, மேஜர், நாகேஷ், வி.கே. ராமசாமி, சுகுமாரி, காந்திமதி, மனோரமா, மௌலி, தங்கவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி. மஹேந்திரன், எஸ். ராமாராவ், சுருளிராஜன் நடித்திருக்கிறார்கள். எம்எஸ்வி இசை, வாலி எல்லா பாட்டுகளையும் எழுதி இருக்கிறார். ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கம். படம் தோல்வி.

நெட்டில் “அன்பே ஆருயிரே” என்று தேடினால் எங்கே பார்த்தாலும் எஸ்.ஜே. சூர்யா, நிலா நடித்த புத்தம் புதிய திரைப்படம்தான் தெரிகிறது. பழைய டைட்டில்களை திருப்பி யூஸ் பண்ணாதீங்கப்பா! என்னை மாதிரி பழைய படத்தை பற்றி விவரம் தேடறவங்க பாடு திண்டாட்டம் ஆயிடுது!

பாட்டுக்கள் சுமார்தான். “பட்டணத்து மாப்பிள்ளைக்கு பெங்களூரு பொண்ணு”, “மல்லிகை முல்லை பூப்பந்தல்”, “காமதேனுவும் சோம பானமும்” என்ற பாட்டுகளை கேட்டிருக்கிறேன். முதல் பாட்டு டிஎம்எஸ்ஸும் எல்.ஆர். ஈஸ்வரியும் பாடியது.

இரண்டாவதுதான் படத்தின் சிறந்த பாடல். வாணி ஜெயராம் பாடியது. திருமண சடங்குகளை அழகாக விவரிக்கிறது. இந்த பாட்டு காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் “நாளாம் நாளாம் திருநாளாம்” பாட்டு போல இல்லை? ஒரு வேளை ஒரே ராகத்தின் சாயலை இரண்டிலும் பயன்படுத்தி இருக்கிறார்களோ? சங்கீதம் தெரிந்தவர்கள் என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு சொல்லுங்களேன்! இவை இரண்டுமே திலங் ராகத்தில் அமைக்கப் பட்டதாம். என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு யாராவது சொனால்தான் தெரியும். சரி, இப்போது திலங் ராகம் எப்படி இருக்கும் என்று ஒரு குத்துமதிப்பான ஐடியா இருக்கிறது.

“ராஜ வீதி பவனி”, “ஓசை கொள்ளாமல் நாம் உறவு கொள்வோமே” இரண்டும் நான் கேட்டதில்லை. மிச்ச எல்லா பாட்டுகளையும் டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.

திரைக்கதை இழுவைதான். மஞ்சுளாவின் அப்பா வி.கே. ராமசாமியும் சிவாஜியின் அப்பா மேஜரும் ஜென்ம விரோதிகள். அப்பாக்கள் ஜென்ம விரோதிகளாக இருந்தால் பிள்ளைகள் காதலிக்கவேண்டும் என்ற விதிப்படி சிவாஜியும் மஞ்சுளாவும் காதலிக்கிறார்கள், கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். மேஜர் இடைவேளைக்கு பிறகும் படத்தை ஓட்டுவதற்காக சிவாஜி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். சிவாஜியும் மஞ்சுளாவும் ஒத்துக்கொண்டாலும் பிறகு பெங்களூரு போவதாக டிராமா போட்டு ஒரு லாட்ஜில் போய் தங்குகிறார்கள். இந்த லாட்ஜில் தமிழ் சினிமாக்களில் மட்டுமே பார்க்ககூடிய ஒரு கோமாளிக் கூட்டமே தங்கி இருக்கிறது. தங்கவேலு, வெ.ஆ. மூர்த்தி, ஒய்.ஜி., மனோரமா, மௌலி மற்றும் பலர் ஒரு அரைவேக்காட்டுத்தனமான கூத்தடிகிறார்கள். க்ளைமாக்சில் சிவாஜியும் மஞ்சுளாவும் கிருஷ்ணன் ராதா மேக்கப்பில் வேறு. க்ளைமாக்சில் சிவாஜி, மேஜர், நாகேஷ், எல்லாரும் 15 நிமிஷம் வரைக்கும் நீள நீள வசனங்கள் பேசி சுபம்!

இரண்டாம் பகுதி அமெச்சூர் நாடகம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. சென்னை நாடக சபாக்களில் யாராவது இந்த நாடகங்கள் பார்த்ததில்லை என்றால் இதில் இரண்டாம் பகுதியை பார்த்தால் போதும். எழுபதுகளில் இந்த மாதிரி அமெச்சூர் நாடகங்கள் ரசிக்கப்பட்டன, அதனால் இந்த படம் அப்போது வெற்றி அடைய வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த படத்திலும் சிவாஜிக்கு தொப்பை தெரிகிறது, ஆனால் தொப்பை மட்டும் தெரியவில்லை. ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு இருக்கக்கூடிய லேசான குருவித் தொப்பை. கொஞ்சம் அசடாக சிவாஜி திறமையாகத்தான் நடித்திருக்கிறார், ஆனால் இந்த கதைக்கு எப்படி நடித்தாலும் ஒரு பயனும் இல்லை. மஞ்சுளா க்யூட்டாக இருக்கிறார். அவரது கவுன் “காமதேனுவும் சோம பானமும்” பாட்டில் கொஞ்சம் அபாயமான லெவலுக்கு இறங்கி இருக்கிறது.

படம் அன்றைய ரசனைக்கு – குறிப்பாக சென்னை சபா நாடகங்கள் ரசிகர்களுக்கு – சரி வந்திருக்கலாம். இன்றைய ரசனைக்கு சரிப்படாது. பாட்டுகளும் ஏ க்ளாஸ் இல்லை, பி க்ளாஸ்தான். அதனால் 10க்கு 4.5 மார்க்தான். D grade.