கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)


எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி படம் இதுதான். சிவாஜிக்கும் அப்படித்தான். தமிழின் சிறந்த படங்களில் ஒன்று. இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே என் அம்மா எனக்கு இதைப் பற்றி ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருந்தார். முதல் முறையாக பார்க்கும்போது பன்னிரண்டு வயதிருக்குமோ என்னவோ. வ.உ.சிக்கு தண்டனை அளிக்கப்பட்டதும் தூத்துக்குடியே பற்றி எரிவது போல் ஒரு காட்சி உண்டு. அந்தக் காட்சியில் எனக்கும் எதையாவது உடைக்கவேண்டும் என்று தோன்றியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஓரளவு வயது வந்த பிறகுதான் சிவாஜி என்ற இமேஜைத் தாண்டி வ.உ.சி. என்ற ஒரிஜினல் மீது பிரமிப்பு உண்டாக ஆரம்பித்தது. பணக்கார பின்னணி. தூத்துக்குடி நகரத்தையே தன் கட்டுக்குள் வைக்கும் leadership skills. பலரையும் பணம் முதலீடு செய்யவைத்து, ஒரு கம்பெனியை உருவாக்கி established கம்பெனியுடன் போட்டி போட்டு சமாளிக்கும் management skills. ஆங்கில அரசை எதிர்த்தால் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது தெரிந்தும் எதிர்த்த தைரியம். அவரை அந்த ஆபத்தை நோக்கி செலுத்திய சக்தி எது? எப்படி இது அவரால் முடிந்தது? என்னால் முடியாத விஷயம். இவராவது அதற்கு பிறகு பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை.சுப்ரமணிய சிவா அதற்குப் பிறகும், தொழுநோய் தாக்கிய பிறகும், சாகும் வரை போராடினார். இந்த உறுதி இவர்களுக்கு எப்படி ஏற்பட்டது?

வ.உ.சியின் இமேஜை உருவாகியதற்கு பெரிய காரணம் ம.பொ. சிவஞானம் எழுதிய கப்பலோட்டிய தமிழன் என்ற புத்தகம். 1946இலோ என்னவோ முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. பிறகு சின்ன அண்ணாமலை அதை பிரமாதமாக மார்க்கெட் செய்து பிரபலமாக்கினார். இந்த படத்துக்கும் “மூலக்கதை” அந்த புத்தகம்தான். தற்செயலாக மயிலாப்பூரில் உள்ள பூங்கொடி பதிப்பகத்தில் ஒரு முறை நுழைந்தபோது இந்த புத்தகத்தின் மறுபதிப்பு கிடைத்தது. ம.பொ.சிக்கு இவர் ஒரு தெய்வப்பிறவி என்பது தெளிவாகத் தெரிந்தது. இன்று நாட்டில் வ.உ.சி. பற்றி இருக்கும் இமேஜ் இந்தப் புத்தகத்தின் மூலமும், இந்த படத்தின் மூலமும் உருவானவையே. அதனால் இவரைப் பற்றிய நடு நிலைமையான மதிப்பீடு சரியாக பிடிபடவில்லை. என் வாழ்க்கையில் இவரைப் பற்றிய ஒரு criticism கூட நான் படித்ததில்லை. உதாரணத்துக்கு ஒன்று. இவர் ஜெயிலில் இருந்து வெளி வந்தது 1912இல். 1936இல் இறந்தார். அரசியலில் இருந்து விலகிவிட்டார். Jail broke him. தவிர பணக் கஷ்டங்கள், குடும்பக் கஷ்டங்கள். அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதில் தவறென்ன இருக்கிறது? இந்த உண்மையை ஒத்துக்கொண்டால் அவரது தியாகங்கள் மகத்தானவை இல்லை என்று ஆகிவிடுமா என்ன? ஆனால் எல்லாரும் அவருக்கு காந்திய வழி பிடிக்காததால்தான் அரசியலில் இருந்து விலகிவிட்டார் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். இது ஒன்றுதான் காரணம் என்றால் 1912இலிருந்து திலகர் மறைந்த 1920 வரைக்கும் ஈடுபட்டிருக்கலாமே? நம் நாட்டில் ஒரு ஹீரோவின் மேல் ஒரு சின்ன மறு கூட இருக்ககூடாது!

அடுத்த முறை இந்த படத்தை பார்த்தால் எந்த வித preconceived notionsஉம் இல்லாமல் ஒரு சினிமா என்ற அளவில் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படத்தில் ஓட்டைகள் தெரிகின்றன, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பது நிச்சயமாக தெரிந்தது.

முதலில் ஓட்டைகள்:

 1. வ.உ.சியும் சிவாவும் கலெக்டர் வின்ச்சிடம் பேசும் காட்சி ரொம்ப ஓவர். பாரதி எழுதிய இரண்டு பாட்டுகளை வைத்துக்கொண்டு இந்த காட்சியை உருவமைத்திருக்கிறார்கள். ஆனால் ஜில்லா கலெக்டரிடம் அவரது ஆதிக்க வெறியைப் பற்றி ஒரு திறமையான மானேஜரான வ.உ.சி. பேசி இருப்பார் என்பது நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் (கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் பேசும் காட்சியைப் போல) மிகவும் என்ஜாய் செய்த காட்சி இது.
 2. ஜெமினி, சாவித்ரி பகுதி எதற்கு? ஒரே லாபம் A++ grade பாட்டான “காற்று வெளியிடை“தான். அதுவும் அந்த வெடிகுண்டு காட்சிகள் சுத்த வேஸ்ட்.
 3. பிரிட்டிஷ் கம்பெனி இலவசமாக டிக்கெட் தந்ததா என்று தெரியாது, ஆனால் அப்படி அவர்கள் தந்திருந்தால் வியாபாரிகளும் பிரயாணிகளும் அதில்தான் போயிருப்பார்கள். வ.உ.சியின் கம்பெனி திவால் ஆக வேண்டியதுதான். விக்கிபீடியாவிலிருந்துTo thwart the new Indian company they resorted to the monopolistic trade practice of reducing the fare per trip to Re.1 (16 annas) per head. Swadeshi company responded by offering a fare of Re.0.5 (8 Annas). The British company went further by offering a free trip to the passengers plus a free umbrella, which had ‘S.S.Gaelia’ and ‘S.S.Lawoe’ running nearly empty. By 1909 the company was heading towards bankruptcy. இந்த உண்மையை ஒத்துக்கொண்டால் என்ன குறைந்துவிடும்? எதற்காக தன் பேச்சினால் வ.உ.சி. பிரயாணிகளையும், சரக்குகளையும் சுதேசி கப்பலுக்கு திருப்பினார் என்று காட்ட வேண்டும்?
 4. வ.உ.சி. ஒரு தலித்தை தத்து எடுத்துக்கொண்டார் என்பதெல்லாம் டூ மச். 1960இன் மதிப்பீடுகளை 1905இல் சுமத்தும் முயற்சி.
 5. 1960இல் எல்லாரும் மேல் சட்டையோடு அலைந்தார்களா? முக்கால்வாசி பேர் மேல் துண்டோடுதான் திரிந்திருப்பார்கள். இங்கே நாவிதர் கூட மேல் சட்டையோடுதான் அலைகிறார். பிராமணர் வீட்டு நடுக் கூடத்தில் தலையை மழிக்கிறார்.
 6. 1905இல் சாவித்ரி வயது பெண்ணுக்கு பெண்மணிக்கு அது வரை திருமணம் ஆகாமல் இருக்குமா?

1962இல் வந்த படம். சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, டி.கே. ஷண்முகம் (சுப்ரமணிய சிவா), எஸ்.வி. சுப்பையா(பாரதி), நாகையா, ஃப்ரெண்ட் ராமசாமி, ஓ.ஏ.கே. தேவர், டி.எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலக்ஷ்மி, எஸ்.வி. ரங்காராவ், அசோகன், பாலாஜி (வாஞ்சிநாதன்), சாரங்கபாணி நடித்திருக்கிறார்கள். பி.ஆர். பந்துலு தயாரித்து திலகராகவும் நடித்திருக்கிறார். ஜி. ராமநாதன் இசை. எல்லாமே பாரதி பாடல்கள். இயக்கம் பந்துலு என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை. வழக்கம் போல டைட்டில்களை மிஸ் செய்துவிட்டேன், அதனால் நடிகைகள் பலரை அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிதம்பரத்தின் மனைவியாக நடிப்பவர் யார்? ருக்மிணியாம். இவர் யாரென்று தெரியவில்லை. சாரதா, help! பிரபல நடிகை லக்ஷ்மியின் அம்மாவாம். (நன்றி, நல்ல தந்தி!)

வந்த புதிதில் இது ஒரு காங்கிரஸ் படம் என்ற கருத்து பரவலாக இருந்ததுதான் இது சரியாக ஓடாததற்கு காரணம் என்று எங்கேயோ படித்தேன். இது நன்றாக ஓடவில்லை என்பது ஒரு பெரிய சோகம். இதனால்தான் பாரதி படம் வர இத்தனை நாட்கள் ஆனதோ?

எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு அபாரம். அவர் காட்டும் வேகம், “சொல்லிக் கொள்ளும். நன்றாக நானூறு முறை சொல்லிக் கொள்ளும்” என்று சொல்லும் அலட்சியம், மனைவி இரவல் வாங்கி வைத்திருக்கும் அரைப் படி அரிசியை குருவிகளுக்கு போடும் other worldliness, கடன்காரர்களிடம் “பராசக்தி கொடுப்பாள்” என்று சொல்லும் கையாலாகத்தனம் எல்லாமே அருமை. திரைக்கதை அமைத்தவருக்கு ஒரு சபாஷ்!

சிவாஜி சில சமயங்களில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தாலும், அது செயற்கையாகத் தெரியவில்லை. சிதம்பரத்தின் உறுதி, திறமை எல்லாவற்றையும் அருமையாக கொண்டு வந்திருக்கிறார். மிக சிறப்பான நடிப்பு! கட்டபொம்மனை அவரது மாஸ்டர்பீஸ் என்று சொல்வார்கள். அதன் திரைக்கதையில் ஒரு கூத்தின் செயற்கைத்தனம் இருக்கிறது. இந்த திரைக்கதையில் வெகு சில இடங்களில்தான் செயற்கைத்தனம் இருக்கிறது. திரைக் கதை அவரை ஒரு குறையும் இல்லாத மனிதராக சித்தரிப்பது ஒன்றுதான் குறை. மாசு மறுவற்ற நாயகனாக இல்லாமல் தன் குறைகளை வெல்லும் நாயகனாக சித்தரித்திருந்தால் சிவாஜியின் பாத்திரம் இன்னும் சோபித்திருக்கும்.

ஜி. ராமநாதனின் மாஸ்டர்பீஸ் இதுதான். திருச்சி லோகநாதனையும் சீர்காழியையும் பாடகர்களாக தேர்ந்தெடுத்தது ஒரு மாஸ்டர்ஸ்ட்ரோக். “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்“, “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்“, “வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்“, “காற்று வெளியிடை கண்ணம்மா”, “ஓடி விளையாடு பாப்பா“, “வந்தே மாதரமென்போம்“, “நெஞ்சில் உரமுமின்றி“, “பாருக்குள்ளே நல்ல நாடு” எல்லாமே டாப் க்ளாஸ் பாட்டுக்கள். A++ grade பாட்டுக்கள். “உணவு செல்லவில்லை சகியே“, “சின்னக் குழந்தைகள் போல் விளையாடி” இரண்டுதான் ஒரு மாற்று கம்மியான பாட்டுக்கள். எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

பார்க்க வேண்டிய படம். பத்து superb பாட்டுக்கள், அருமையான நடிப்பு, ஒரு inspirational “நிஜக்”கதை. வேறென்ன வேண்டும்?10க்கு 8 மார்க். A grade.

P.S. இன்று (செப்டெம்பர் 10) காலை குமுதம் ரிபோர்ட்டரில் மதுரையில் வ.உ.சி. சிலைக்கு அருகே கம்யூனிஸ்ட் கட்சி எங்கோ தலித்துக்களுக்காக போராடுவதால் கோபம் அடைந்த சில பிள்ளைமார்கள் தி.மு.க. மூலம் வ.உ.சி.யை கம்யூனிஸ்ட்கள் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று தகராறு செய்வதாக படித்தேன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. வ.உ.சியின் அடையாளம் அவர் பிள்ளை என்பது அல்ல. உ.வே.சாவின் அடையாளம் அவர் ஐயர் என்பது அல்ல. இவர்களின் பெயரில் இருக்கும் ஜாதிப் பெயர் அந்தக் காலத்து நாகரீகம், அவ்வளவுதான். தமிழ் நாட்டுக்கே ஆதர்சம் ஆன ஒருவரை ஏனய்யா ஒரு சின்ன ஜாதி வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள்?

P.P.S நடிகர் திலகம் சைட்டில் உள்ள விமர்சனம் என் கருத்தில் முழுமையாக இல்லை. சாரதா, உங்களுக்கு வேறு ஏதாவது இங்கே லிங்க் செய்யக்கூடிய விமர்சனம் தெரியுமா?

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

11 Responses to கப்பலோட்டிய தமிழன் (Kappalottiya Thamizhan)

 1. Shakthiprabha says:

  உங்களுக்கு ஏன், எனக்கு ஏன், பலருக்கு பிடித்த படத்தில் இதுவும் ஒன்று. கப்பலோட்டிய தமிழனில் வ.வூ.சி. கட்டபோம்மன் அளவு ஆர்பாட்ட, ஆவேச மன்னன் அல்ல. அதனால் ஒருவேளை அப்படத்தில் சற்று செயற்கைத்தனம் தெரிந்திருக்கலாம்.

  இப்படி வேண்டுமென்றால் சொல்லலாம். கட்டபொம்மனாக சிவாஜி மிகச் சிறப்பாக நடித்தார். வ.வூ.சியாக மாறினார்.

  நாளை ‘வாழ்கை’ பற்றிய உங்கள் கருத்தும் கேட்க ஆவலாக உள்ளது. 🙂

 2. RV says:

  கட்டபொம்மனில் உள்ள செயற்கைத்தனம் ஒரு ஸ்டைல் என்று நான் நினைக்கிறேன் – தெருக்கூத்துகளை போல, கிரேக்க நாடகங்களில் வரும் கோரஸ்களைப் போல, maskகளைப் போல – எனக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஸ்டைலை விட அடக்கி வாசிக்கும் நடிப்பு பிடித்திருக்கிறது. அதனால்தான் எனக்கும் நீங்கள் சொல்வது போல வ.உ.சியை கட்டபொம்மனை விட பிடித்திருக்கிறது.

  சில சமயங்களில் உணர்ச்சிகரமான நடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது – பாரதியாக எஸ்.வி. சுப்பையா நடிப்பது போல, கௌரவத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் போல. உணர்ச்சிகரமான நடிப்புக்கும் செயற்கைத்தனத்துக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. அந்த கோட்டை பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் உணர்ந்து நடிப்பதில்லை.

  நீங்கள் கட்டபொம்மனாக நடித்தார் என்றும் வ.உ.சியாக மாறினார் என்றும் சொன்னது அழகாக இருக்கிறது.

 3. Bags says:

  ஒரு விஷயம். MGR ஒரு agenda வைத்துக்கொண்டு நடித்தார். அதனால் நடிப்பைக் காட்டிலும் ஃப்ரேம் பை ஃப்ரேம் தன்னை நேர்மையானவராக காட்டிகொள்வதிலும், பிறருக்கு உதவி செய்வது போல் காண்பிப்பதிலும் ஒரு focus இருந்தது. சிவாஜிக்கு நடிப்பு தான் agendaவாகவே இருந்தது. அதற்க்கு உதாரணம் “கப்பலோட்டிய தமிழன்”. Overdoing என்பது எனனைப் போன்ற தனிபட்டவர்களின் கருத்தே. அவரைப் பொருத்தவரை அது பாத்திரங்களுடன் ஒன்றிவிடும் method action. பலமுறை எனக்குள்ளேயே ஒரு தர்க்கதித்திற்க்காக எடுத்துக்கொண்டு நினைத்துப் பார்ததுண்டு. Overdoing செய்வதுக்கூட லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அப்படி நடிக்க சிவாஜி தவிர யாரவது உண்டா என்று பார்த்ததில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் யாரும் தெரியவில்லை. ஒரு நிழல் மட்டும் தெரிந்தது. ஆ! அது நம்ம அசோகன்!

  (என் அம்மா இந்தப் திரைப்படத்தில் வரும் பல பாத்திரங்களை பக்கத்து சொந்தமாக மற்றும் தொலை தூரத்து சொந்தமாகவும் அடையளம் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆ! நானும் தியாகிகள் pensionக்கு apply செய்து பர்க்கலாம் போல் தெரிகிறது.)

  நேற்று முழுமையாகப் பார்க்க முடியவில்லை. முன்னர் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன். “சென்னயில் இருந்த பாரதியார் இறந்துவிட்டார்” என்ற இடத்தில் சிவாஜி கொஞ்சம் ஓவர். ஆனால் சிவாஜி பிரியர்கள் ஒருவர் இறந்துவிட்டார் என்றால் எப்படியெல்லாம் overact sorry ஆக்ட் செய்யலாம் என்பதற்க்கு சிவாஜி உதாரணம் என்று வாதிடலாம். உயர்ந்த மனிதனில் கீழே விழுந்து துடித்து புரண்டு ஏதேதோ செய்தார். இதில் எதுவும் செய்யாமல் ஷாக்கில் கல்லாய்ச் சமைந்தார் (கொஞ்சம் ஓவராய்). ஆனால் சின்ன வயதில் சிலர் இதை ரசித்து “துட்டு இது ஒன்னுக்கே” என்று comment அடித்தது நினைவில் வருகிறது.

  இன்னும் எழுதலாம். பாழாய்ப் போன கடமை அழைக்கிறது.

 4. RV says:

  — ஒரு நிழல் மட்டும் தெரிந்தது. ஆ! அது நம்ம அசோகன்!
  சரியாக சொன்னாய்!

 5. சாரதா says:

  கப்பலோட்டிய தமிழன் படத்தை நான் முதன்முதல் பார்த்தது சென்னை பாரகன் திரையரங்கில்தான். அதாவது, எந்த பாரகன் திரையரங்கில் நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் (1961 தீபாவளி) அப்படம் ரிலீஸானதோ, அதே அரங்கில் பல ஆண்டுகளுக்குப்பிறகு மறு வெளியீட்டில் பார்க்க நேர்ந்தது.

  1961ல் வெளியிடப்பட்டபோது அப்படம் சரியாக ஓடவில்லையென்பது மிகப்பெரிய அதிர்ச்சி. ஆனால் மறு வெளியீடுகளில் (நடிகர்களுக்காக படம் பார்க்கும் பகையுணர்ச்சிகள் மறைந்து, படத்தின் தரம் அறிந்து பார்க்கத்துவங்கியதாலோ என்னவோ) ரசிகர்களின் பெரிய வரவேற்பைப்பெற்றது, இன்றும் பெற்றுவருகிறது. இத்தனைக்கும் அந்த ஆண்டு நடிகர்திலகத்துக்கு மகத்தான ஆண்டு, பாவமன்னிப்பு, பாசமலர் என்று இரு வெள்ளிவிழாப்ப்டங்கள், மற்றும் 140 நாட்களைக்கடந்து ஓடிய பாலும் பழமும், இவ்வரிசையில் வந்த ‘கப்பலோட்டிய தமிழன்’ மட்டும் ஏன் வெற்றி வாய்ப்பை இழந்தது..?. (என் தந்தையின் கமெண்ட் :” அதை ஏம்மா கேட்கிறே, இப்படம் வந்தபோது காங்கிரஸ்காரர்களே கதர்ச்சட்டையைப் போட்டுக்கொண்டு ‘தாயைக்காத்த தனயன்’ பட கியூவில் போய் நின்னாங்க”)

  எத்தனையோ புதிரான கேள்விகளில் இதுவும் ஒன்று…

  ஜெமினி ஏற்றிருந்த மாடசாமி என்ற கற்பனைப் பாத்திரத்துக்கு இத்தனை அழுத்தமும் முக்கியத்துவமும் தேவையா..?. அப்படி ஒரு கதாபாத்திரமே தேவையில்லாதிருக்கும்போது..?. அவரும் அப்போதைக்கு கதாநாயகன் என்பதாலோ என்னவோ அவருக்கு மட்டும் (கட்டபொம்மனில் வந்தது போலவே) டூயட் பாடல். படத்தின் பெரும்பகுதியை இவரது பாத்திரமே விழுங்கி விட்டது. இதனாலோ என்னவோ, முக்கிய பாத்திரங்களான வாஞ்சிநாதன் போன்றவற்றின் பங்கு மிகவும் சுருங்கி விட்டது போன்ற உணர்வு

  இப்படத்துக்குப்பின்னர் எத்தனையோ நடிகர்கள் (நடிகர்திலகம் உள்பட) பாரதி வேடம் போட்டிருந்த போதிலும், “என்ன இருந்தாலும் எஸ்.வி.சுப்பையா மாதிரி இல்லைப்பா” என்று மக்கள் பேசிய அளவுக்கு, அப்ப்டி அந்த பாத்திரத்துக்காகவே உயிரெடுத்து வந்தவர் போல், விரிந்த விழிகளும் கணீர்க்குரலுமாக செமப்பொருத்தம்.

  விடுதலைப்போராட்ட வீரர்களின் சரித்திரம் என்பதால் தற்கால கவிஞர்களின் பாடல்கள் எதையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க (ஜெமினி – சாவித்திரி டூயட் உட்பட) பாரதியார் பாடல்களையே பயன்படுத்தியிருந்தார் பந்துலு.

  முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், ‘கப்பலோட்டிய தமிழன்’ வெளியானபோது நடிகர்திலகத்தின் வயது 34 மட்டுமே.

  இன்னொரு விஷயம், இப்படத்தைப் பார்த்துவிட்டு வ.உ.சி யின் மகன் சொன்னது “என் தந்தையையே நேரில் பார்த்தது போலிருந்தது”. எந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தால் ஒரு மகனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்?. ‘என்ன இருந்தாலும் என் தந்தை அலவுக்கு இல்லை’என்றோ, அல்லது ‘என் தந்தையின் பெயரையே (தன் நடிப்பின் மூலம்) கெடுத்துவிட்டார்’ என்றோ சொல்லவில்லையே. எனக்கென்னவோ, ஒரு மகனின் இதயத்திலிருந்து வந்த இந்த வார்த்தைகள், அரசாங்க சம்பளத்தைப்பெற்றுக்கொண்டு, தேர்வுக்கமிட்டி என்ற பெயரில் 12 பேர் தேர்வு செய்யும் தேசிய விருதைவிட சிறந்தது எனத்தோன்றுகிறது.

 6. RV says:

  சாரதா,

  வழக்கம் போல நல்ல மறுமொழி, நன்றி! குறிப்பாக வ.உ.சியின் மகன் சொன்னது.

  மாடசாமி, சங்கன் இருவரும் சரித்திரத்தில் இடம் பெறாத, ஆனால் “உண்மை பாத்திரங்கள்” என்று நினைத்திருந்தேன்.

  ஒரிஜினலுக்கும் நடிப்புக்கும் எவ்வளவு தூரம் உருவ ஒற்றுமை இருக்கிறது என்று பார்க்க ஒரு ஆசை. வ.உ.சியின் படம் எதுவும் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன், எதுவும் கிடைக்கவில்லை. வ.உ.சியின் மகனே இப்படி சொன்னார் என்றால் நல்ல உருவ ஒற்றுமை இருந்திருக்கவேண்டும்.

 7. bmurali80 says:

  கப்பலோட்டிய தமிழன் – சிதம்பரம் பிள்ளையின் படம் கீழுள்ள சுட்டியில் காணலாம்

 8. RV says:

  bmurali,

  Thanks for that image. வேஷப் பொருத்தம் இருக்கிறது!

 9. நல்லதந்தி says:

  //சிதம்பரத்தின் மனைவியாக நடிப்பவர் யார்? ருக்மிணியாம். இவர் யாரென்று தெரியவில்லை. //

  இவர் நடிகை லட்சுமியின் தாயார்.(எந்த லட்சுமி என்றால் தமிழக எலிஸபெத் டெய்லர் என்று புகழ் பெற்றாரே!…ஹிஹி… திருமணம் செய்வதில்! 🙂 அந்த லட்சுமி!

 10. நல்லதந்தி says:

  //இயக்கம் பந்துலு என்று நினைக்கிறேன், நிச்சயமாகத் தெரியவில்லை././

  இயக்கம் பந்துலுதான் தயாரிப்பும் அவரே!

 11. Pingback: டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை” | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: