இரண்டாவது கிறுக்கன்


நான் மட்டும்தான் கிறுக்கன் என்று இல்லை. நான் ஊருக்கு போயிருந்த சமயம் எனக்கு பதிலாக இரண்டு போஸ்ட்கள் கிறுக்கிய பக்ஸுக்கு நன்றி!

பக்ஸ் எழுதியவை:

இந்த வாரம்
பாக்தாத் திருடன்

பக்சின் கிறுக்கல்கள் தொடரட்டும்….

மறக்க முடியவில்லை


மறக்க முடியுமா பாட்டுக்களில் இரண்டு இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

மனிதர்களின் தேவைகளை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு என்றுதான் வழக்கப்படுத்துவோம். இந்த வழக்கத்தினால் பாட்டை இப்படி எழுதி இருக்கலாம். மோனையும் இருந்திருக்கும்.

காற்றும் நீரும் உணவு
காலும் கையும் ஆடை
வானும் நிலமும் வீடு
வாழ்வு ஏழைக்கு சிம்பிள்

எழுதப்ப்பட்டிருக்கும் வரிகளில் வரிசை இல்லை, எதுகை மோனை இல்லை.
வானும் நிலமும் வீடு
காற்றும் நீரும் உணவு
காலும் கையும் ஆடை
ஏழை வாழ்வு சிம்பிள்

சோகமும் இல்லை, ஒரு சுதந்திரம் தெரிகிறது. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை தெரிகிறது. சிம்பிள் என்று சொல்லும் அலட்சியத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது. இந்த சுதந்திரத்துக்கு வரிசைப்படுத்தாத தேவைகள் மிக நன்றாக பொருந்துகின்றன. வரிசைப்படுத்தி இருந்தால் தப்பாக இருந்திருக்காது – ஆனால் இதில் புதுக் கவிதை போல ஒரு rebellion தெரிகிறது. மெட்டில் உள்ள துள்ளல் இந்த சுதந்திரத்தை அருமையாக வெளிப்படுத்துகிறது. வரிகள் மெட்டுக்கு மெருகு சேர்க்கின்றன. சுத்தி வளைப்பானேன், ரொம்பப் பிடிச்சுப் போச்சுங்க!

காகித ஓடம் பாட்டில் ஒரு அமானுஷ்யத்தனம் இருக்கிறது. நடு இரவில் தனியாக காட்டுப்பகுதியில் இந்த குரலை கேட்டால் கதி கலங்கிவிடும். எஸ்.எஸ்.ஆர் தேவிகாவை சந்திக்கவரும்போது என்ன அனல் பறக்கும் வசனம் பேசியிருந்தாலும் இந்த எஃபெக்ட் வந்திருக்காது. ஒரு குறை – டி.எம்.எஸ். பாடுவது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் சுசீலாவுக்கும் ஹை பிட்ச் கொஞ்சம் பிசிரடிக்கிறமாதிரி இருக்கிறது. ஜானகியின் குரல் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ? டி.எம்.எஸ்., சுசீலா சேர்ந்து பாடுவதை விட சுசீலா தனியாக பாடுவதுதான் எனக்கு பிடித்திருக்கிறது

இந்த வாரம் (Week of September 22)


தவறாமல் ஒரு சுமார் MGR படம், வர வர ஒரு பாடாவதி சிவாஜி படம் – இது மினிமம் காரண்டி. இது போக என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. எனக்கு (Bags) வெறுப்பு ஏற்ற வேண்டும் என்றே, ஏன் சிவாஜி ரசிகர்களுக்குக் கூட வெறுப்பு ஏற்ற வேண்டுமென்று திட்டம் போட்டு படம் போடுகிறார்கள் போலும்.

திங்கள் – சிரஞ்சீவி – சிவாஜி நடிததது. பார்த்தாலே பயஙகர தோற்றம். நான் இது வரை பார்த்ததில்லை

செவ்வாய் – மேஜர் சந்திரகாந்த் (பார்த்ததில்லை) நல்ல படம் போல் தெரிகிறது

புதன் – அன்னை (பார்த்ததில்லை)

வியாழன் – வந்தாளே மகராசி (பார்த்ததில்லை)

வெள்ளி – அரசிளங்குமரி – MGR நடித்தது. சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ”சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா” என்ற பாடல் ஹிட்.

இன்னும் சில விவரங்கள்:

சிரஞ்சீவி 1984இல் வந்திருக்கிறது. சிவாஜியின் post-Thirisoolam, தொப்பை phase. ஸ்ரீப்ரியா ஹீரோயின். நானும் பக்ஸும் காலேஜில் படித்துக்கொண்டிருந்தோம். காலேஜில் எல்லா குப்பை படமும் பார்ப்போம், எங்களுக்கு வந்ததே தெரியவில்லை என்றால் படம் ஓடி இருக்காது.

மேஜர் சந்திரகாந்த்: நல்ல படம். இந்த நாடகம், படத்தில் நடித்துத்தான் மேஜர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்ற அடைமொழி வந்தது. பாலச்சந்தரின் நாடகம் படமாக்கப்பட்டது. அவரே இயக்கியதா என்று தெரியவில்லை. உடன், முத்துராமன், ஜெயலலிதா, நாகேஷ், ஏ.வி.எம். ராஜன் நடித்திருக்கிறார்கள். “நேற்று நீ சின்ன பாப்பா”, “நானே பனி நிலவு”, “ஒரு நாள் யாரோ”, “கல்யாண சாப்பாடு போடவா” பாட்டுக்கள். “ஒரு நாள் யாரோ” படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடிக்கும்.

அன்னை: பானுமதி. “அழகிய மிதிலை நகரினிலே”, “பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று”, “பக் பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா” என்ற நல்ல பாட்டுகளும், சந்திரபாபு பாடிய “புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை” என்ற ஒரு சூப்பர் பாட்டும் உண்டு. தாய்க்குல படம்.

வந்தாளே மஹராஸி: ஜெய், ஜெ நடித்து, கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். கேள்விப்பட்டதில்லை. ஆனால் கே.எஸ்.ஜி. எப்போதும் குடும்பப் படம் எடுப்பவர்.