ஊட்டி வரை உறவு (Ooty Varai Uravu)


சிவாஜியே ஸ்ரீதரிடம் தன்னை வைத்து ஒரு காமெடி படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டாராம். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் இது. 1967இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, பாலையா, வி.கே. ராமசாமி, நாகேஷ், முத்துராமன், எல். விஜயலக்ஷ்மி, சச்சு நடித்தது. எம் எஸ்வி இசை. எல்லா பாட்டுகளும் கண்ணதாசன்தானோ? இயக்கம் ஸ்ரீதர்.

பாலையாவின் அங்கீகரிக்கப்படாத மகள் விஜயலக்ஷ்மி. கே.ஆர். விஜயா ஆள் மாறாட்டம் செய்து தான்தான் அந்த மகள் என்று பாலையாவின் வீட்டில் நுழைந்துவிடுவார். பாலையா தன் நண்பனின் மகள் என்று சொல்லி ஒப்பேற்றுவார். சிவாஜி உண்மையை கண்டுபிடிப்பார், பிறகு இருவருக்கும் தமிழ் பட இலக்கணத்தின் படி காதல். இடையில் விஜயலக்ஷ்மி, அவரது காதலன் முத்துராமன் இருவரையும் சேர்த்து வைக்க சிவாஜி தான் ஒரு டாக்டர் என்று வேறு கூத்தடிப்பார். ஊரில் வம்பு பேச மட்டுமே உயிர் வாழும் நாகேஷ் கே.ஆர். விஜயாவைப் பற்றி அவரது மாமாவிடம் சொல்லிவிடுவார். பிறகு சாஸ்திரத்துக்கு மாமாவுடனும் அடியாட்களுடனும் ஒரு சண்டை போட்டுவிட்டு, சிவாஜி-கே.ஆர்.வி திருமண மேடையில் பாலையா தனது மகளை பற்றி ஒத்துக்கொள்ள, விஜயலக்ஷ்மிதான் அந்த மகள் என்று சொல்லி, இரு ஜோடிகளும் சேர்ந்து, சுபம்!

முக்கால்வாசி படம் ஊட்டியில்தான். அழகான ஊர். இப்போது வெயிலாக இருக்கிறது என்று 4 வருஷங்களுக்கு முன் போயிருந்த என் மனைவி சொன்னாள்.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் பாலையாவுக்கு ஒரு இடம் உண்டு. இந்த மாதிரி காமெடி ரோல்களில் கலக்குவார். அவர் தன் மகனும் மகளும் காதலிக்கிறார்கள் என்று நினைத்து சொல்ல முடியாமல் முழிப்பதும் தவிப்பதும் அருமை. நாகேஷ், வி.கே. ராமசாமி கொடுத்த வேலையை ஒழுங்காக செய்கிறார்கள். சிவாஜி அலட்டிக்கொள்ளவில்லை. பார்க்க இளமையாக சிக்கென்று இருக்கிறார் (புதிய பறவை போல இல்லை.) நல்ல ஸ்டைல் வேறு – தேடினேன் வந்தது பாட்டில் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலும், நாகேஷை மிரட்டுவதும் நன்றாக வந்திருக்கும். ஆனால் வி.கே.ஆர்., சிவாஜி, முத்துராமன், வி. லக்ஷ்மி டாக்டர் வேஷம் அமெச்சூர் நாடகம் மாதிரி இருக்கும். எல். விஜயலக்ஷ்மி “ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்” பாட்டுக்கு ஆடிவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார். கே.ஆர். விஜயா ஒரு நல்ல அழகியிலிருந்து சகிக்க முடியாத ஆன்டியாக மாறத் தொடங்கிவிட்டது நன்றாக தெரியும். இன்னும் முழுமையாக மாறவில்லை, அதனால் பிழைத்தோம். முத்துராமனுக்கு பெரிதாக வேலை இல்லை. எல்லா ஸ்ரீதர் படங்களிலும் முத்துராமன் வந்து போவார் போலிருக்கிறது!

முத்தான பாடல்கள். எல்லா பாட்டுகளும் படமாக்கப்பட்ட இடங்களும் ரொம்பவே அழகு. எம்எஸ்வி ஸ்ரீதர் காம்பினேஷன் எப்போதுமே டாப் க்ளாஸ்தான்.

“தேடினேன் வந்தது” ஒரு அற்புதமான பாட்டு. “என் மனதில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி!” என்ன ஒரு சந்தம் இந்த வரிகளிலே! சுசீலா சுசீலாதான். என் கல்லூரி நண்பன் சிவப்ரகாசத்துக்கு இந்த பாட்டும் கே.ஆர்.வியின் ஆட்டமும் ரொம்ப பிடிக்கும்.

“ஹாப்பி இன்று முதல் ஹாப்பி” கொடுமையான பல்லவி. ஏன் இப்படி ஆங்கிலத்தையும் தமிழையும் கொலை செய்ய வேண்டும்? ஏதோ catchy ஆக இருக்க வேண்டும் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல மெட்டு.

“புது நாடகத்தில் ஒரு நாயகி” இன்னொரு அருமையான பாட்டு. நல்ல வரிகளும் கூட. இதை பற்றி நண்பர் சூர்யா தரும் தகவல்: உண்மையா வதந்தியா என்று தெரியாது. முதலில் ஊட்டி வரை உறவில் ஜெயலலிதாவே புக் செய்யப்பட்டு 4 நாள் ஷீட்டிங் நடை பெற்றது. பின்னர் சின்னவருக்கு தெரிய வரவே ஜெ. பின் வாங்கினார். அதையே சிம்பாலிக்காக கவிஞர் “புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்” என்று பாடல் எழுதினார். ஜெ. ஜகா வாங்கி பின்னாளில் மீண்டும் கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்ததையே தனது பாணியில் “நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி” என்று எழுதி சும்மா அமர்க்களப் படுத்திவிட்டார்.

“பூ மாலையில் ஓர் மல்லிகை” டி.எம்.எஸ்ஸை விட சுசீலா ஒரு மாற்று மேலாக பாடி இருக்கிறார்.

“அங்கே மாலை மயக்கம் யாருக்காக” பாட்டு மற்ற பாட்டுக்கள்தான் ஒரு மாற்று குறைவாக தெரிகிறது. நல்ல பாட்டு.

“யாரோடும் பேசக் கூடாது” இந்த படத்தில்தானா? எனக்கு ஞாபகமே இல்லையே! யாராவது confirm செய்யுங்களேன்!

எல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்” தான். பி.பி.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்களில் எனக்கு ஒரு பெரிய மயக்கம் உண்டு. “ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல” என்ற வரிகளிலும், அதை தொடர்ந்து வரும் இசையிலும் உள்ள கொஞ்சல் அமர்க்களம்!

பாடல்களை இங்கே கேட்கலாம்.

அருமையான பாட்டுகளுக்காகவும், சும்மா ஜாலியான படம் என்பதற்காகவும் இன்றும் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade

Hema, the Boss of Mottai


I guess my wife Hema saw Manivannan’s feedback this morning – complaining that there were no posts yesterday. She decided to write a post herself.

I am so happy to see folks losing interest in RV’s blog

Ithai Ithaithan Ethirparthen.

Suresh, Manivannan don’t worry. The blog will resume. The Halloween devil just scared him. (Guess who!)

நெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)


கண் தேவைப்படும் அபூர்வமான தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படம் “பார்க்க” வேண்டிய படம். எனக்கு சாதாரணமாக எந்த தொழில் நுட்பமும் புரிவதில்லை. எல்லா படங்களிலும் கதை, வசனம், காமெடி, பாட்டுகள் அவ்வளவுதான் எனக்கு புரியும். மிஞ்சி மிஞ்சி போனால் செட்கள், நடனங்கள் அத்தோடு சரி. நானே ஒரு படத்தின் ஒளிப்பதிவை சிலாகிக்கிறேன் என்றால் அது உண்மையில் நன்றாகத்தான் இருக்க வேண்டும்.

ஸ்ரீதரும் காமராமேனும் ஒவ்வொரு ஷாட்டும் யோசித்து யோசித்து எடுத்திருக்க வேண்டும். பல ஷாட்களில் ஒரு அமானுஷ்யத்தன்மை தெரியும். குறிப்பாக நம்பியார் புதைமண்ணில் முழுகும் காட்சி, அந்த பாழடைந்த மாளிகை…

படத்தின் சிறப்பே அந்த அமானுஷ்யத்தன்மைதான். “நெஞ்சம் மறப்பதில்லை” பாட்டிலும் அந்த அமானுஷ்யத்தன்மை தொனிக்கிறது. கதை அந்த அமானுஷ்யத்தன்மையை மாட்ட உதவும் ஒரு ஃப்ரேம் , அவ்வளவுதான்.

கதை ரொம்ப சிம்பிள். கிராமத்து ஜமீந்தார் நம்பியார் தன் மகன் கல்யாண் குமாருக்கும் ஏழைப் பெண் தேவிகாவுக்கும் ஏற்படும் காதலை உடைக்கிறார். மறு ஜன்மம் எடுத்து வரும் கல்யாண் மீண்டும் அதே கிராமத்துக்கு திரும்பி வந்து மறு ஜன்மம் எடுத்து வந்த தேவிகாவை சந்திக்கிறார். தேவிகாவும், இப்போது பாழடைந்து கிடக்கும் தன் பூர்வ ஜன்ம மாளிகையும் அவருக்கு தன் பழைய ஜென்மத்தை நினைவூட்டி விடுகின்றன. இன்னும் உயிரோடு இருக்கும் நம்பியார் இப்போதும் அவர்களை சேர விடாமல் தடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைய, நம்பியாரும் புதை குழியில் மூழ்க, காதலர்கள் ஒன்று சேர்ந்து, சுபம்!

இந்த மாதிரி சூப்பர்நாச்சுரல் படங்கள் கறுப்பு வெள்ளையில்தான் சோபிக்கின்றன. (யார் நீ?, அதன் ஒரிஜினலான வோ கௌன் தி? இரண்டும் இதே மாதிரி கறுப்பு வெள்ளைதான்)

1963இல் வந்த படம். கல்யாண், தேவிகா, நம்பியார், மாலி, ஸஹஸ்ரநாமம் நடித்தது. யார் காமராமேன்? விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் எல்லா பாட்டுகளையும் எழுதினாரா? ஸ்ரீதர் இயக்கம்.

நம்பியார் இதை தனது ஃபேவரிட் படங்களில் ஒன்று என்று சொல்கிறார். (மற்றவை ஆயிரத்தில் ஒருவன், அம்பிகாபதி, மிஸ்ஸியம்மா, தூறல் நின்னு போச்சு)

“அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை” பாட்டு ஞாபகம் இருக்கிறது. வேறு பாட்டுகள் எதுவும் ஞாபகம் இல்லை.

காட்சி அமைப்புகளுக்காக பாருங்கள். 10க்கு 6.5 மார்க். C+ grade.

ஸ்ரீதரின் சிறந்த பட லிஸ்டில் சுமைதாங்கி


நான் சுமைதாங்கி பார்த்ததில்லை, அதனால் இதை என் ஒரிஜினல் ஸ்ரீதரின் சிறந்த பட லிஸ்டில் சேர்க்கவில்லை. இப்போது தாஸ், ராமஸ்வாமி ஆகியோரின் கருத்துப்படி அதையும் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் “other” ஓட்டு போட்டிருந்தாலும் பரவாயில்லை, சுமைதாங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்ரீதர் பட லிஸ்ட்


 1. 1959, கல்யாணப் பரிசு
 2. 1960, விடிவெள்ளி
 3. 1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்!)
 4. 1961, தேனிலவு
 5. 1962, நெஞ்சில் ஓர் ஆலயம்
 6. 1962, போலீஸ்காரன் மகள்
 7. 1962, சுமைதாங்கி
 8. 1963, நெஞ்சம் மறப்பதில்லை
 9. 1964, கலைக் கோவில்
 10. 1964, காதலிக்க நேரமில்லை
 11. 1965, வெண்ணிற ஆடை
 12. 1967, நெஞ்சிருக்கும் வரை
 13. 1967, ஊட்டி வரை உறவு
 14. 1969, சிவந்த மண்
 15. 1971, அவளுக்கென்று ஒரு மனம்
 16. 1974, உரிமைக் குரல்
 17. 1975, வைர நெஞ்சம் (நன்றி, ராகவேந்தரா!)
 18. 1978, இளமை ஊஞ்சலாடுகிறது
 19. 1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்
 20. 1981, மோகனப் புன்னகை (நன்றி, மணிவண்ணன், ராகவேந்தரா!)
 21. 1982, நினைவெல்லாம் நித்யா (நினைவுபடுத்திய சாரதாவுக்கும் போஸ்ட் எழுதிய முரளிக்கும் நன்றி!)
 22. 1983, துடிக்கும் கரங்கள்
 23. 1983, ஒரு ஓடை நதியாகிறது (நன்றி, வெங்காயம், சாரதா, ராம்கி!)
 24. 1984, ஆலய தீபம் (நன்றி, வெங்காயம், சாரதா!)
 25. 1985, தென்றலே என்னை தொடு
 26. 1986, நானும் ஒரு தொழிலாளி
 27. 1986, யாரோ எழுதிய கவிதை
 28. 1987, இனிய உறவு பூத்தது (நன்றி, ராம்கி!)
 29. 1991, தந்துவிட்டேன் என்னை
 30. கொடிமலர் (நன்றி, சாரதா!)
 31. அலைகள்
 32. மீனவ நண்பன்
 33. ஓ மஞ்சு (நன்றி, SN23!)
 34. ஸௌந்தர்யமே வருக வருக (நன்றி, SN23!)

இதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார். ((நன்றி, ராகவேந்தரா!)

விட்டுப் போன படங்கள் என்ன? சொல்லுங்கள். அப்படியே ஸ்ரீதரின் சிறந்த படம் எது என்றும் ஓட்டு போடுங்கள்! இது ஏன் சிறந்த படம் என்று உங்களது கருத்துகளையும் எழுதுங்கள்! இப்போதைக்கு காதலிக்க நேரமில்லை லீடிங்கில் இருக்கிறது. (13/22 ஓட்டுகள்)

நிறைய கேள்விபடாத படங்கள் லிஸ்டில் இருக்கின்றன. நான் எதையும் விட்டுவிடவில்லையே? எனக்கென்னவோ கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, அவள் எல்லாம் ஸ்ரீதர் படங்களோ என்றுதான் தோன்றிக்கொண்டே இருக்கிறதே! அவர் வேறு மொழிகளில் தமிழ் படங்களைத்தான் ரீமேக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கல்யாணப் பரிசு (நஸ்ரானா, தெலுங்கு), நெஞ்சில் ஓர் ஆலயம் (தில் ஏக் மந்திர், மலையாளம்?), காதலிக்க நேரமில்லை (ப்யார் கியே ஜா), சிவந்த மண் (தர்த்தி), இளமை ஊஞ்சலாடுகிறது (ஹிந்தி) என்று பல ரீமேக். இதை பற்றி தெரிந்தாலும் சொல்லுங்கள்!

இந்த வார ப்ளான்


இந்த வாரமும் ஸ்ரீதர்தான் அஜெண்டா. பக்ஸ் காதலிக்க நேரமில்லை பற்றி எழுதுவதாக சொல்லி இருக்கிறான். பிமுரளி நினைவெல்லாம் நித்யா பற்றி எழுதுவதாக சொல்லி இருக்கிறார். நான் நெஞ்சம் மறப்பதில்லை பற்றி எழுத இருக்கிறேன். போன வாரம் எழுத நினைத்த எல்லாம் எழுத முடியவில்லை, அதையும் இந்த வாரம் முடிக்க முயற்சி செய்கிறேன்.

தீபாவளி வாழ்த்துகள்!எவர்க்ரீன் பாட்டு

ஞாபகம் வரும் வேறு தீபாவளி பாட்டுகள்:

1. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் – குரு
2. பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா – பூவே பூச்சூட வா
3. தீபங்கள் ஆடிட சம்திங் சம்திங் தீபாவளி – ??
4. தாயேனும் செல்வங்கள் – மூன்று தெய்வங்கள் (நன்றி, ராம்!)
5. தீபாவளி தீபாவளிதான் – நான் புடிச்ச மாப்பிள்ளை (ஜனகராஜ் பாடுவாராம், நான் கேட்டதில்லை. நன்றி, புரட்சி ரசிகன், எவனோ ஒருவன்!)
6. தீபாவளி தல தீபாவளி – அட்டகாசம் (நான் இதையும் கேட்டதில்லை. நன்றி, எவனோ ஒருவன்!)
7. விளக்கேத்து விளக்கேத்து வெள்ளி கிழமை – பேர் சொல்லும் பிள்ளை (நான் இதையும் கேட்டதில்லை. நன்றி, எவனோ ஒருவன்!)
8. தீபங்கள் பேசும் கார்த்திகை மாசம் – தேவதை (இது கார்த்திகை பாட்டா, தீபாவளி பாட்டா? நன்றி, எவனோ ஒருவன்!)

ரொம்ப யோசித்து இந்த இரண்டு பாட்டுகளையும் (இவை தீபாவளி பற்றிய பாட்டுகள் இல்லை) சேர்த்துக் கொள்கிறேன்.
1. நான் சிரிச்சா தீபாவளி
2. தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு

என்ன அதிசயம் தீபாவளி பாட்டுகள் இவ்வளவுதானா?

மேலே இருக்கும் ஜெயம் ரவி பாவனா படத்துக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிக்கும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டென் தௌஸண்ட்வாலா பட்டாசு சத்தம் பரிசு!