நவராத்திரி (Navaraatthiri)


முன்னால் இந்த ப்ரோக்ராமில் வந்த படம். இந்த முறை விகடனில் வந்த விமர்சனம் கீழே. நானும் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்…

தன்னைப் பெண் பார்க்க மறுநாள் வரப் போகிறவன் தன் காதலன்தான் என்ற உண்மையை அறியாத பெண் ஒருத்தி, நவராத்திரி அன்று முதல் நாள் இரவு, வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். அதன் பின்னர், ஒன்பது இரவுகளில் ஒன்பது மனிதர்களைச் சந்திக்கிறாள். ஒவ்வொரு மனித ரும் ஒவ்வொரு ரகம், ஒவ்வொரு விதம்! நவரசங்களின் பிரதிநிதிகளாக ஒன்பது பேரைச் சந்தித்துப் புதுப்புது அனுபவங்களைப் பெறும் அந்தப் பெண், இறுதியில் தன் காதலனை அடைகிறாள்.

சேகர்: கதையே புதுமையானது, இல்லையா சந்தர்?

சந்தர்: தமிழ்ப் படங்களில் இது வரை கையாளப்படாத பிளாட். சிவாஜி கணேசனின் நடிப்புத் திறமையை வெளிக்காட்ட சிறந்த பாத்திரங்கள்.

சேகர்: ஆமாம் சந்தர், அவருடைய நூறாவது படமாம் இது! நடிப்பின் சிகரத்தையே தொட்டு விட்டார் இந்தப் படத்தில். ஒவ்வொரு ரஸத்தின் பிரதிநிதியாகத் தோன்றும்போதும், அந்த நபராகவே மாறி, தனித் தனியாக நிற்கிறார். இப்படி ஓர் உயர்ந்த நடிப்பைப் பார்ப்பதே அபூர்வம்தான்.

சந்தர்: யூ ஆர் ரைட் சேகர்! நடிப்பில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் சாவித்திரி.

சேகர்: நோ! நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

சந்தர்: என்னது?

சேகர்: ஆமாம், ஏதாவது குறைந்தால்தானே ஈடு கொடுப்பதற்கு? சிவாஜிக்கு இணையாகவே நடித்திருக்கிறார் சாவித்திரி. இந்த இருவரிடமும் நடிப்பின் இலக்கணத்தையே இந்தப் படத்தில் காண முடிகிறது.

சந்தர்: அதிலும், அந்தக் கடைசி காட்சியில் இருவரும் பேசாமல் நடித்திருப்பது…

சேகர்: ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ’ என்ற தத்துவத்திற்கு நடிப்பின் மூலம் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

சந்தர்: ஒன்பது பாத்திரங்களில் உனக்கு எந்தப் பாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது சேகர்?

சேகர்: அப்படியெல்லாம் தனித்துச் சொல்லமுடியாது. அப்புறம் வரிசைப்படுத்திச் சொல்லு என்று கேட்பாய் போலிருக்கிறதே… எல்லாமே சிறப்புதான்! ஆனால், ஒன்றிரண்டு பாத்திரங்களில் அந்தந்த தன்மை தெளிவாக்கப்படவில்லை என்று தோன்றுகிறது.

சந்தர்: எதைக் குறிப்பிடுகிறாய்?

சேகர்: ‘பயம்’ பாத்திரம் வந்தபோது, அவன் பயந்தாங்கொள்ளியாக இல்லை. அவனைக் கண்டு கதாநாயகிதான் பயப்படுகிறாள். அதேபோல், அருவருப்பின்போது, அந்தப் பாத்திரம் அருவருப்பு உணர்ச்சியை அடையவில்லை; அதைப் பார்க்கும் நாம்தான் அந்த உணர்ச்சியை அடைகிறோம். கூடவே, கொஞ்சம் பாட்டு களிலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

சந்தர்: ஏன், பயித்தியக்கார ஆசுபத்திரி கதம்பப் பாட்டு பிடிக்கவில்லையா உனக்கு?

சேகர்: அது தனி! அந்தக் காட்சியில் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்.

சந்தர்: தெருக் கூத்தை ரசித் தாயா?

சேகர்: நல்ல கேள்வி, போ! அசல் தெருக்கூத்தையே கண் முன் காட்டிவிட்டார்கள். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாயிற்றே அது!

சுந்தர்: யெஸ்! இப்படிப் பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரம், கடைசியில் வரும் பேசாத காட்சி!

சேகர்: கரெக்ட்! பேசாதவர்கள் பேசிச் சிரித்த பிறகு வரும் காட்சிகளில் நடந்துகொள்ளும் நடிப்பை, சிலர் விரசம் என்று கூடக் கூறலாம். ஆனால், அப்படிக் கூறுகிறவர்கள் கூட, அதுவரை உள்ள சிறப்புக்காக இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.