ராஜ வீழ்ச்சி


அன்னை” விமர்சனம் எழுதியபோது கதாநாயகன் அழகாய் இருந்தார் (நல்ல உயரமும் கூட), யாரென்று தெரியவில்லை என்று எழுதி இருந்தேன். அவரை ஞாபகம் இல்லாவிட்டாலும் “அழகிய மிதிலை நகரினிலே” பாட்டு ஞாபகம் இருக்கும். அவரை பற்றி இப்போது திரு ராஜநாயகம் எழுதும் ப்ளாகில் ஒரு குறிப்பு பார்த்தேன். சோகம்தான்.

அவர் பெயர் ஹரிநாத் ராஜாவாம். பேரிலிருந்தும், அவரது வசன உச்சரிப்பிலிருந்தும் தெலுகுக்காரர் என்று நினைக்கிறேன். சுமைதாங்கி, சரஸ்வதி சபதம், எங்கிருந்தோ வந்தாள் படங்களிலும் நடித்திருக்கிறாராம். கஷ்டம்தான்.

அ முதல் அ தானடா


இது வரையிலும்: அரச கட்டளையில் ஆரம்பித்தது, அன்னையும் பிதாவுமில் முடிந்திருக்கிறது. இன்னும் விமர்சனகள் எழுதலாம் என்று இருக்கிறேன், ஆனால் லாஜிஸ்டிக்ஸ் முடிவு செய்யவில்லை.

முதல் விமரிசனம்: அரச கட்டளை
கடைசி விமரிசனம் (இது வரை): அன்னையும் பிதாவும்
படங்களின் எண்ணிக்கை : 55 (சில முத்தான திரைப்படங்கள் ப்ரோக்ராமில் வந்தவை அல்ல)
மிகவும் பிரபலமான படம்: அந்த நாள் (எழுதப்பட்ட அன்று ப்ளாகுக்கு 293 ஹிட்கள்), கணவன் (188 ஹிட்கள்)
100 ஹிட்களுக்கு மேல்: சுப்ரமணியபுரம், அன்பே ஆருயிரே, இமயம், திரிசூலம்
என்னுடைய ஃபேவரிட் விமரிசனம்: நான் பெற்ற செல்வம்
மிகவும் பிடித்த படம்: கப்பலோட்டிய தமிழன்
மற்ற ஏ க்ளாஸ் படங்கள்: அந்த நாள், சந்திரலேகா, நவராத்திரி, , மேஜர் சந்திரகாந்த், அன்னை
கடி படங்கள்: சிரஞ்சீவி, ஹலோ பார்ட்னர், வந்தாளே மகராசி, தேன் கிண்ணம், நாலும் தெரிந்தவன்

பாப்புலர் விமரிசனம் அல்லாத போஸ்ட்: எம்ஜியார் குதிரை…

எழுதிய போஸ்ட்கள்: 117
மறுமொழிகள்: 335 (பாதி நானும் பக்சும் எழுதிய மறு-மறுமொழிகள்)

ப்ளாக் பாடங்கள்


ப்ளாக் எழுதுவதை பற்றி நான் அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டவை

1. ப்ளாக் எழுதுவது என்று வைத்துக்கொண்டால் ரெகுலராக எழுதுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையோ, இரண்டு நாளைக்கு ஒரு முறையோ வாரத்துக்கு ஒரு முறையோ என்னவோ – உங்கள் ப்ளாகை படிப்பவர்களுக்கு அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கவேண்டும், அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவேண்டும். உங்களால் அப்படி ஒரு நாள் எழுத முடியவில்லையா, இன்று எழுதமுடியவில்லை, அப்டேட் இப்போது வரும் என்றாவது தெளிவாக சொல்லிவிடுங்கள்.

2. ப்ளாகின் தீமை கவனமாக தேர்ந்தெடுங்கள். இந்த தீமை பற்றி ரெகுலராக எழுத முடியுமா என்று ஒரு நிமிஷமாவது யோசியுங்கள். சன் டிவியின் 75 ஆண்டு சினிமா கொண்டாட்டத்தை பற்றி எழுதுவது சுலபம் – வாரத்துக்கு ஐந்து படம் வருகிறது. எழுத விஷயம் ரெகுலராக கிடைத்துவிடுகிறது. கணேஷ் வசந்த் கதைகளை பற்றி எழுத ஆரம்பித்தேன். புத்தகங்கள் கிடைப்பதில்லை. நினைவிலிருந்து எழுதலாம் என்றால் ஒரு ரெஃபெரன்சுக்காவது புஸ்தகம் வேண்டி இருக்கிறது. ரெகுலராக எழுத முடியவில்லை. விளைவு? அவார்டா கொடுக்கறாங்க 7500 முறைக்கு மேல் படிக்கப்பட்டிருக்கிறது. கணேஷ் வசந்த் கதைகள் பற்றிய ப்ளாக் 200 முறை கூட படிக்கப்படவில்லை.

3. உங்கள் ரெகுலர் செயல்களை வைத்து ப்ளாக் எழுதினால் சுலபமாக இருக்கும். நீங்கள் வாரா வாரம் குமுதம், விகடன் படிப்பீர்களா? வெள்ளி இரவு ஏதாவது ஒரு பாடாவதி சினிமா பார்ப்பீர்களா? ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பீர்களா? அந்த ரெகுலர் செயலை வைத்து எழுதுவது சுலபம். (நீங்கள் புத்திசாலி என்றால் ரெகுலராக செய்ய விரும்பும், ஆனால் இது வரை செய்ய முடியாமல் இருக்கும், ஒரு செயலை வைத்து எழுதலாம் – diet, exercise மாதிரி – ப்ளாக் எழுதுவது உங்களுக்கு உதவியாக இருக்கும்)

4. நீங்கள் என்ன எழுதினாலும் யாராவது படிப்பார்கள். Long tail effect!

5. ஆனால் தமிழர்களுக்கு பிடித்த தீம் சினிமாதான். இன்னும் சிவாஜி எம்ஜிஆர் சண்டை போடக்கூட மக்கள் இருக்கிறார்கள். ;-)) அடுத்தபடி தமிழ் நாடு அரசியல், அடுத்தபடி புஸ்தகங்கள்.

6. ப்ளாகுக்கு hit rate உயர நல்ல வழி ஏதாவது தகராறுதான். ஜெயமோகன் சிவாஜி எம்ஜிஆரை கிண்டல் செய்தார், அவர் ஒரு ப்ளாக் எழுதுவது தமிழ் கூறும் நல்லுலகுக்கு தெரிந்தது. நான் சிவாஜியை அதிகமாக கிண்டல் செய்கிறேன் என்று எனக்கு ஒரு reputation இருக்கிறது. அதனால் சில தீவிர சிவாஜி ரசிகர்களுடன் ஓரளவு பழக்கமும், கொஞ்சம் சண்டையும் ஏற்பட்டது, எனக்கும் வாசகர்கள் அதிகமானார்கள். எந்த ப்ளாகிலாவது பிராமணர்களை திட்டினால் அடுத்த இரண்டு நாள் அந்த ப்ளாக் பாப்புலராக இருக்கிறது. நீங்கள் காந்தி நல்லவர் என்று எழுதினால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். காந்தி கேட்டவர் என்று எழுதினால் ப்ளாக் சர்குலேஷன் உயரும். “Dog Bites Man” or “Man Bites Dog” மாதிரிதான். பொதுவாக தமிழர்கள் தங்கள் iconகளை யாராவது எழுத்தில் கிண்டல் செய்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், பொங்கி எழுந்து விடுவார்கள். ஆனால் “அசத்த போவது யாரு” மாதிரி நிகழ்ச்சிகளில் கிண்டல் செய்தால் ரசித்து சிரிப்பார்கள்.

7. ஆனால் பரபரப்புக்காக உங்களுக்கு நம்பிக்கை இல்லாத எதையாவது எழுதாதீர்கள். controversial, uncomplimentary கருத்துக்களில் எது உண்மை, எது சும்மா என்று வெகு விரைவில் எல்லாரும் புரிந்துகொள்வார்கள். உண்மைக்கு ஒரு தனி கவர்ச்சி இருக்கிறது. அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது இரண்டாம் பட்சம்.

8. ஒரு முக்கியமான பாயிண்டை விட்டுவிட்டேன். கூட எழுத ஒரு கூட்டாளி இருந்தால் நல்லது. நீங்கள் தளர்ச்சி அடையும்போது அவர் கை கொடுப்பார்.

இன்னும் சில:

9. படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை சேர்ப்பது நல்ல விஷயம். பழைய படங்களுக்கு ஸ்டில் தேட ரொம்ப கஷ்டப்பட்டேன். சில சமயம் சோம்பேறித்தனத்தால் எதையும் சேர்க்காமல் விட்டுவிடுவேன். அந்த தவறை செய்யாதீர்கள்.

10. தவிர, முடிந்த வரை ஒரு பக்கத்துக்கு மேல் ஒரு போஸ்டை எழுதாதீர்கள். (படிப்பவருக்கு ஸ்க்ரோல் செய்யும் சிரமம் இருக்கக்கூடாது.) ஆனால் என்ன செய்வது, வோர்ட்ப்ரெஸ் பதிவுகளில் யூட்யூப் சுட்டிகளை சேர்த்தால் பாதி ஸ்க்ரீன் அங்கேயே போய்விடுகிறது.