தில்லானா மோகனாம்பாள்


எனக்கு தில்லானா மோகனாம்பாள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. நாகேஷ், மனோரமா, பாலையா நன்றாக நடித்திருந்தாலும், பத்மினி ஓவர் ஆக்ட் செய்து கெடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் சிவாஜியும் ஓவர் ஆக்ட் செய்தார் என்று நினைத்தேன், பிறகு கதாபாத்திரம் அப்படி என்று உணர்ந்தேன். ஆனால் தமிழ் நாட்டின் ஒரு கால கட்டத்தை (தஞ்சாவூர் ஏரியா, 1930-60கள்) உண்மையாக பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.

கீழே இருப்பது படம் வந்த போது விகடனில் வந்த விமர்சனம்.

தில்லானா மோகனாம்பாள்… ‘கலைமணி’ எழுதிய இந்தக் கதை விகடனில் தொடர்கதையாக வெளிவந்தபோதே, லட்சக்கணக்கான வாசகர்கள் அதைப் படித்து இன்புற்றனர்.

இப்போது அது ஒரு வண்ணத் திரைப் படமாக வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருக்கும் சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்குபெற்றவர்கள்:

1. திரு. எஸ்.வெங்கிடரமணன், ஐ.ஏ.எஸ், சேர்மன், மெட்ராஸ் ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்.

2. திருமதி ஜலஜா வெங்கிடரமணன், குடும்பத் தலைவி.

3. திரு. கே.என்.தண்டாயுதபாணிப் பிள்ளை, நடன ஆசிரியர்.

4. குமாரி சந்திரகாந்தா, நடிகை.

5. திரு.எஸ்.பி.கே.மூர்த்தி, இன்ஜினீயர்.

6. திருமதி ஹம்ஸத்வனி, தமிழ்ப் பேராசிரியை, ராணிமேரி கல்லூரி.

7. திருமதி லட்சுமி சுந்தரம், குடும்பத் தலைவி.

லட்சுமிசுந்தரம்: விகடனில் இதைத் தொடர்கதையா படிச்சிருக்கேன். ஹீரோவும் ஹீரோயினும் ரயில்ல போகும்போது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவங்க மனசிலே நினைச்சுக்கிறதை கலைமணி என்ன பியூட்டிஃபுல் டயலாகா எழுதியிருக்கார், தெரியுமா? இதையெல்லாம் எப்படிப் படத்திலே எடுக்கப் போறாங் கன்னு எனக்கு ரொம்ப ‘டவுட்ஃபுல்’லா இருந்தது. ஆனா, இவங்க ரொம்ப அழகா எடுத்திருக்காங்க!

இந்தப் படத்திலே எனக்கு ரொம்பப் பிடிச்சது நகைச்சுவை!

வெங்கிடரமணன்: இந்தக் கதையின் மையமே சோகம்தான்! படத்தின் நல்ல முடிவுக்காகக் கதையைச் சந்தோஷமாக முடித்துவிட்டார்கள்.

துணை ஆசிரியர்: கதையிலே இந்த முடிவும் உண்டு. ஆனா, இதற்குப் பிறகும் கதை இருக்கு.

வெ.ரமணன்: இருக்கலாம். அதுக்காக வேற ஒரு ஃபிலிம் எடுக்கப்போறாங்களா? ‘டாக்டர் ஷிவாகோ’விலே நாவல் முடிவிலிருந்து மாறி படத்திலே இருக்குன்னு வெச்சிக்குங்க… அதோட ‘எஃபெக்டே’ போயிருக்குமே!

ஹம்ஸத்வனி: இந்தக் கதையிலே வரவங்க – அது மோகனாம்பாள் குடும்பமானாலும் சரி, நாதஸ்வர வித்வானோட குடும்பமானாலும் அந்த மாதிரி குழுவிலே உள்ளவங்களாதான் இருக்காங்க. வெத்திலைப் பெட்டி தூக்கிட்டுப் போறதுலேயும் சரி, நாட்டியக் குடும்பம், அந்தத் தாயோட காரெக்டர் எல்லாமே உண்மையா, இயல்பா இருக்கு. கதைப்படி பாலையா சிவாஜியை விடப் பெரியவர். அவர் சில வேடிக்கைகள் பண்ணும்போது, அவர் எப்படி இந்த மாதிரி நடந்துக்கலாம்னு கேட்டா… அந்தக் குழுவிலே அதெல்லாம் ரொம்ப சாதாரணம்!

தண்டாயுதபாணிப் பிள்ளை: ஆனா, அதுக்குன்னு சதா கமுக்கத்திலே துணியை வெச்சிக்கிட்டே போறது, வர்றது… கொஞ்சம் அதிகமா தோணுது. பாலையா ஈஸ் வெரி குட்! அந்த நாதஸ்வரக்காரங்க செய்யாத அம்சங்கள் எல்லாம் இவர் செய்தார். அதிலே சந்தேகமே கிடையாது. சாரங்க பாணிப்பிள்ளையும் வாசிக்கிறாரு. ஆனா ‘ஒரிஜனலா’ இல்லே!

சந்திரகாந்தா: பழைய கலை களை அநாகரிகம்னு நினைச்சு மேல்நாட்டுக் கலைகளையே பின் பற்றிப் போகக்கூடிய நிலையிலே தான் இப்போ நாம இருக்கோம். இந்தச் சூழ்நிலையிலே தில்லானா மோகனாம்பாள் என்கிற இந்த நல்ல கதையைப் படம் எடுக்கணும்னு நினைச்சிருக்காரே ஏ.பி.நாகராஜன், அதுக்காகவே அவருக்கு ‘ஃபஸ்ட் பிரைஸ்’ கொடுக்கணும்.

வெ.ரமணன்: ஐ அக்ரீ! ஆனா, இதுலே போய் ஏன் இவ்வளவு காமெடியைப் புகுத்த வேண்டும்?

ச.காந்தா: ஏன்னா, படம் நல்லா ஓடணுங்கற காரணத்துக் காகவும், ‘அடடே..! காமெடி நிறைய இருக்காமே’னு கேட்டு ஓடி வர்ற ரசிகர்களுக்காகவும் தான்! அப்படி வரவங்க மனசிலே நம்ப பழைய கலையின் பெருமை யைப் பதிய வைக்கிறாரே, இது பெரிய சேவை இல்லையா?

படத்திலே ஒரு ‘பாயின்ட்’ கவனிச்சீங்களா? மறைஞ்சு போன ராஜரத்தினம் பிள்ளையை ஒவ்வொரு சீன்லேயும் ஞாபகப் படுத்தறாங்க! ஒரு காலத்திலே நாதஸ்வர வித்வான்களை அடிமைகளா நடத்திக்கிட்டு இருந்தாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன். ராஜரத்தினம் பிள்ளை தோன்றியதுக்குப் பிறகுதான், நாதஸ்வர கலைஞர்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தொடங்கினாங்க. ‘என் கலைக்கு மதிப்புக் கொடுத்தா உனக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என் கலை உனக்கு அடிமை இல்லை’ அப்படின்னு நடந்துக்கிட்டாராம் அவர். அப்படிப் பார்க்கும்போது, இந்தக் கதையிலே வர்ற ஷண்முகசுந்தரம் ராஜரத்தினம் பிள்ளைதான்னு சொல்லுவேன்.

த.பிள்ளை: கதாசிரியரே அவரை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் எழுதினார். அவர் எண்ணமே அதுதானே!

மூர்த்தி: நல்ல கதைகளை சினிமாவாக எடுக்கும்போது, அதைச் சின்னாபின்னப்படுத்திடறாங்க! அது ‘ஷேப்’ தெரியாம போயிடுது! இந்தக் கதையிலே அந்த மாதிரி பண்ணல்லே! காரணம், இந்தக் கதையே ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு ஏற்றதா இருக்கு. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தமட்டில், கிரெடிட் கோஸ் டு பத்மினி. மத்தபடி இது ஒரு நல்ல கூட்டு முயற்சி.

த.பிள்ளை: மதன்பூர் ராஜா கிட்டே, அவ உள்ளுக்குப் போயிட்டு அந்தப் படிக்கட்டிலே வெளியே வரா இல்லையா… அப்போ சிவாஜி கணேசனுக்கும், அவளுக்கும் வாக்குவாதம்… அந்த இடம் ரொம்பப் பிரமாதம்!

ச.காந்தா: எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் உதயசந்திரிகா – பாலாஜி ஸீன்! தன் கணவன் கிட்டே ‘நீங்க எங்கே வேணாலும் போங்க. அதை நான் தடுத்து நிறுத்தினா, இன்னும் அதிகமா போவீங்கன்னு தெரியும். யார் கிட்டே வேணாலும் போங்க. ஆனா, உங்களுக்காக மஞ்சள் குங்குமத்தோட இங்கே நான் ஒருத்தி காத்துக்கிட்டு இருக்கேன்’னு சொல்லிட்டு உள்ளே போயிடறா! பிரமாதமான ஸீன்! அந்த ஒரு வார்த்தையிலே கணவன் திருந்திடறான். அந்த இடம்தான் என் மனசைத் தொட்டது!

து.ஆசிரியர்: மனோரமா பற்றி…

ஜலஜா: மனோரமாவைத் தவிர, அந்தக் காரெக்டரை வேற யாருமே நடிக்க முடியாது!

த.பிள்ளை: அந்த டிராமா கொட்டகையில் போய், அவனிடம் நாதஸ்வரத்தைக் கொடுத்து, வாசிக்கச் சொல்லி ரசிக்கிறா பாருங்க… அப்பா, ராஜா, அப்படி இப்படீன்னு… ஐயய்யோ, கொன்னுட்டா!

து.ஆசிரியர்: நான் பல நாடுகளுக்குப் போய், பல படங்களைப் பார்த்தேன். எனக்கென்னவோ, சிவாஜி கணேசனுக்கு இணையா உலகத்திலே இன்னொரு நடிகர் இருக்கிறதா தெரியலே.

த.பிள்ளை: அவரைப் பத்திப் பேசாதீங்க சார்! பேச என்ன இருக்கு? உலகத்திலேயே மிகப் பெரிய நடிகர் அவர். அப்புறம் புதுசா சொல்ல என்ன இருக்கு?

மூர்த்தி: ஐ திங்க்… கமர்ஷியலாகவும் இது பெரிய வெற்றியா இருக்கும்னு நினைக்கிறேன்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

10 Responses to தில்லானா மோகனாம்பாள்

 1. சமீபத்தில் ஐம்பதுகளில் இது ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது படித்துள்ளேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தது அக்கதை. சமீபத்தில் புத்தகத்தையும் வாங்கி இன்னொரு முறை படித்தேன். இரண்டு வால்யூம்கள். அதை இப்போது நிதானமாகப் படிக்கும்போதுதான் பல விஷயங்கள் புதிதாகப் புலப்பட்டன. முதல் விஷயம் திரைக்கதை. சாதாரணமாக பிரசித்தி பெற்ற புத்தகங்கள் திரைப்படமாக்கப்படும்போது அவை சரியாக வெற்றி பெறுவதில்லை. காரணம் திரையாக்கம் கதையைப் படித்த ரசிகர்களின் கற்பனையுடன் ஒத்துப் போவதில்லை. ஆனால் தில்லானா மோகனாம்பாள் ஒரு விதி விலக்கு.

  மூன்றரை மணி நேரத்துக்குள் அடக்கி ஓட்டியிருக்கிறார்கள். சுவையானவற்றை எடுத்து பூத்தொடுத்திருக்கிறார்கள். மூலக் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் ஆலோசனை இதில் பெறப்பட்டது என அறிகிறேன்.

  அதே நேரத்தில் மூலக் கதையிலிருந்த பல கதாபாத்திரங்கள் திரைக்கதையில் சேர்க்கப்படவில்லை. அவற்றில் பல மிக சுவாரசியமானவை. உதாரணத்துக்கு காரைக்கால் நடேசனை சொல்லலாம். இப்போது வெகு நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை இங்கே கூற ஆசைப்படுவேன். அதாவது, இக்கதையை மெகா சீரியலாக எடுக்க முடியுமா என்று. ஏற்கனவே ஜாவர் சீதாராமனின் “பணம் பெண் பாசம்” திரைக்கதையாக முன்னரே எடுக்கப் பட்டிருந்தாலும் சீரியலாகவும் வந்து சோபித்தது என்பதை மனத்தில் கொண்டால், நான் கொண்டிருப்பது வீணாசையல்ல என்றுதான் கூற வேண்டும்.

  இது வெற்றிகரமாக நடைபெற என்னென்ன தேவை? இன்னொரு நல்ல திரைக்கதை ஆசிரியர். எவ்வளவு எபிசோடுகள் என்ற நிர்ணயம். நல்ல நடிக நடிகையர் தேர்வு. இவற்றில் முதல் இரண்டும் என் சக்திக்கப்பாற்பட்டவை. நல்ல நடிக நடிகையரைப் பட்டியலிடுவதே நான் செய்யக் கூடிய காரியம். அவ்வாறே செய்வேன். ஒரு பாத்திரத்திற்கு ஒன்றுக்கு மேல் கலைஞர்களைக் குறிப்பிட்டிருப்பது ஒரு சாய்ஸாகத்தான்.

  ஷண்முகசுந்தரம்: பிரபு, சூர்யா, விக்ரம்
  மோகனா: ரேவதி, மீனா
  பாலையா: ஜூனியர் பாலையா
  சிங்கபுரம் மைனர்: ராதா ரவி
  ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
  நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
  மதன்பூர் மகாராஜா: நம்பியார்
  வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
  வடிவாம்பாள்: வடிவுக்கரசி

  எனக்கு இப்போதைக்கு தோன்றியவை அவ்வளவே. எல்லோரும் பெரிய திரை நடிகர்கள் என நினைக்காதீர்கள். அவர்களில் பலர் சின்னத் திரையிலும் வந்து விட்டார்கள்.

  நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? உங்களுக்கு பிடித்த லிஸ்டையும் போடுங்களேன். விவாதிப்போம்.

  பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/blog-post_05.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. puratchi rasigan says:

  How did you get such a old review from Ananda vikatan?

  Have they archived all of the back issues with easy “key word ” search option ?

 3. //How did you get such a old review from Ananda vikatan?//
  இப்போதெல்லாம் விகடன் இரு புத்தகங்களாக வருகிறது. ஒன்று கரண்ட் இஷ்யூ, இன்னொன்று பழைய ஆர்கைவ்சுகளின் தொகுப்பு. தில்லானா மோகனாம்பால் பழைய விமரிசனம் லேட்டஸ்ட் விகடனோடு வந்த இணைப்பில் உள்ளது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 4. Manivannan says:

  இன்று எழுத உங்களுக்கு ஒரு டாப்பிக் கிடைத்துள்ளது.
  திரையுலகத்து லெயண்ட் மறைந்த ஸ்ரீதர் பற்றி எழுதுங்களேன்

 5. Das says:

  RV, I agree with you that padmini and to some extent ganEsan overacted in this movie. I can not think of anyone else in vaithA kathApaththiram other than nAgEsh. I thought sArangapANi acted very well contrary to the vimarsanam

 6. Das says:

  RV, intha kathaiyin moola kathAsiriyarukku (“koththamangaLam subbu” – koththamangaLam akaNda thanjaiyil oru grAmam enRu ninaikkiREn?) APN Rs. 50,000 eduththukkoNdu pOnAr. maruththuvamanaiyil chikkitchai peRRu vantha subbu thalaiyaNaiyin keezh iruntha cheque eduthhuk kAttinAr. antha cheque vAsanukku APN koduththa cheque! vAsan munbE vanthu subbuvidam koduththu vittAr!!

  intha soozhalil, maRRumoru seithi – chinna aNNAmalai wanted to prasurichufy some of kalki’s works (during vikatan era) but was warned against by vAsan!

 7. Das says:

  Two superlative actors in this movie – 1) nAgesh 2) vadivu

 8. RV says:

  டோண்டு,

  அருமையான பதிப்பு/மறுமொழி. நன்றி!

  மணிவண்ணன், ஸ்ரீதர் பற்றி கட்டாயமாக எழுதுவேன். உங்கள் நினைவுகளையும் எழுதுங்களேன்! எனக்கு சும்மா பத்து நிமிஷத்தில் தட்டிவிட முடியாது, இரண்டு நாளாகும்…

  தாஸ், கொத்தமங்கலம் சுப்பு பற்றிய நினைவு நன்றாக இருந்தது! தி. மோகனாம்பாள் பற்றிய விமரிசனத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன்…

 9. Manivannan says:

  நாங்கள் எல்லாம் படிக்கத்தான் லாயக்கு, எழுத்து சுட்டுப்போட்டாலும் வராது

 10. V Srinivasan says:

  இந்தப் படத்தை டிஜிட்டலில் அதுவும் 3-டியில் மறு வெளியீடு செய்யவேண்டும் என்பது என் பேராசை..! எத்தனை வருடங்கள் ஆனாலும் ரசிக்கூடிய படம்..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: