கல்யாணப் பரிசு (Kalyanap Parisu)


இரண்டு நாட்களுக்கு முன் மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பித்தார் என்று சொல்ல வேண்டும். நகர்ப்புற, படித்த, மத்திய தர வர்க்கத்தின் ஆசாபாசங்களை ஓரளவு உண்மையாக பிரதிபலிக்கும் சினிமா அவர் ஆரம்பித்ததுதான். அவரது மார்க்கெட்டும் அதுதான். அவர் ஆரம்பித்த வழியில்தான் பின்னால் கே. பாலச்சந்தர் நடந்தார். கல்யாணப் பரிசு இந்த இயக்கத்தின் முதல் படம். அவரை எனக்கு தெரிந்த ஒரே வழியில் கௌரவப் படுத்த சில படங்களுக்கு விமரிசனம் எழுதலாம் என்று இருக்கிறேன்.

சமீபத்தில் மறைந்தவர் என்பதற்காக அவர் மீது குறை சொல்லக்கூடாது என்பது போலித்தனம். அவரது குறைகள் மீது பூசி மெழுகுவது அவருக்கு அகௌரவம். எந்த முன்னோடிக்கும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளை மீறி அவர்கள் என்ன செய்தார்கள் என்பது முக்கியம். அன்றைய காலகட்டத்தில் அவரால் வேறு விதமாக சிந்திக்க முடிந்தது. சில முறை வெற்றி அடைந்தார், பல முறை தோல்வி அடைந்தார். அதனால் தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பை குறைவாக எண்ண முடியாது. இது உங்களுக்கு தவறாக தெரிந்தால் – நீங்கள் இறந்த பிறகு ஒருவரை குறை சொல்ல கூடாது என்று நினைப்பவராக இருந்தால் – அது உங்கள் கருத்துரிமை, நானும் அப்படியே நினைக்க வேண்டும் என்று சொல்லாதீர்கள்.

அவருக்கு கல்யாணப் பரிசு ஒரு turning point. ஏ.எம். ராஜா, பட்டுக்கோட்டை, தங்கவேலு, சரோஜா தேவி எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டையே கலக்கினார்கள். பதினாறு வயதினிலே 77இல் ஏற்படுத்திய தாக்கத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த படம் 59இல் ஏற்படுத்திய தாக்கம். இப்போது பார்த்தால் புரிந்து கொள்வது கஷ்டம் – ஆனால் நம் பக்கத்து வீட்டு மனிதர்களை திரையில் கொண்டு வந்தது இந்த படம். பராசக்தியின் குணசேகரன், நாடோடி மன்னன் எல்லாருமே கதைகளில் காணப்படுபவர்கள். நாம் பார்ப்பது சினிமா என்று நமக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் வந்தது உண்மையான சதையும் ரத்தமும் உள்ள சாதாரண மனிதர்கள். அவர்களும் அவ்வப்போது சினிமாத்தனமாக நடந்துகொள்வார்கள்தான், ஆனால் அவர்களில் நம்மை காண முடியும். நீங்கள் ஹாரி பாட்டர் கதைகளை விரும்பிப் படிக்கலாம், ஆனால் அது கதை என்பது நன்றாக தெரியும். அசோகமித்திரன் கதைகள் நம் கண்ணெதிரே நடப்பவை. அதைப் போலத்தான் இந்த படமும் அப்போது வந்து கொண்டிருந்த மற்ற படங்களும் இருந்தன.

சமீபத்தில் சன் டிவியின் இதை பார்த்த போது என்னை மிகவும் கவர்ந்த இடம் சரோஜா தேவி தன் காதல் தோல்வியை பற்றி பேசும் இடம்தான் – “நான் எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் போகிறேன், இப்படியே இருந்துவிட மாட்டேன்” என்று சொல்வார். நம் தமிழ் பட நாயகிகள் இதற்கு முன்னால் எந்த படத்திலும் இப்படி சொல்லி இருக்கமாட்டார்கள். ஏன், இதற்கு பிறகு கூட இப்படி சொல்வதற்கு ஒரு முப்பது வருஷம் ஆகி இருக்கலாம். நிஜமான பெண். நம் படங்களில் நிஜம் வருவது குறைவுதான்.

எனக்கு தெரிந்து இதற்கு முன் சாதாரண மனிதர்களை சித்தரிக்க முயன்ற ஒரே படம் கூண்டுக்கிளிதான் – முயற்சி என் கண்களில் தோல்வி. எம்ஜிஆர் ஜெயிலுக்கு போனதும் எல்லாரும் கெட்டவர்களாக ஆகி விடுவார்கள்!

ஸ்ரீதருக்கு சில கலைஞர்களோடு ஒரு நல்ல rapport இருந்தது. ஒன்றாக இணையும்போது பாடல்கள், நடிப்பு எல்லாம் அருமையாக வரும். ஜெமினி, முத்துராமன், சிவாஜி, நாகேஷ், பாலையா, ஏ.எம். ராஜா, எம்எஸ்வி , கண்ணதாசன் போன்றவர்கள் இந்த லிஸ்டில் உண்டு. அவர் இயக்கிய முதல் படத்திலேயே அவருக்கு அப்படிப்பட்ட ஹீரோவும், இசை அமைப்பாளரும் அமைந்தது நல்ல விஷயம். ஏ.எம். ராஜாவின் மாஸ்டர்பீஸ் எல்லாமே ஸ்ரீதரின் படங்களில்தான். பற்றாக்குறைக்கு பட்டுக்கோட்டை வேறு இந்த படத்தில் சுமமா ரவுண்ட் கட்டி அடித்தார்.

1959இல் வந்த படம். ஜெமினி, சரோஜா தேவி, விஜயகுமாரி, தங்கவேலு, நாகேஸ்வர ராவ், நம்பியார் மற்றும் பலர் நடித்தது. ஏ.எம். ராஜா இசை. எல்லா பாட்டுமே பட்டுக்கோட்டைதான் என்று நினைக்கிறேன். சூப்பர் டூப்பர் ஹிட். ஹிந்தியில் ராஜ் கபூர், வைஜயந்திமாலா நடித்து நஸ்ரானா என்று எடுக்கப்பட்டது. தெலுங்கிலும் வந்தது.

கதை தெரிந்ததுதான். ஜெமினியின் காதலை ச. தேவி தன் அக்கா வி. குமாரிக்காக விட்டுக்கொடுப்பார். அக்கா சந்தேகப்படுவதால் ச. தேவி வீட்டை விட்டு வெளியேறுவார். ஜெமினி தங்கையின் தியாகத்தை சொல்லிவிட, அக்கா குற்ற உணர்ச்சியில் இறக்கும்போது ஜெமினி தங்கையை கண்டுபிடித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்பார். ஜெமினி கண்டுபிடிக்கும்போது ச. தேவிக்கு கல்யாணம் நடந்துகொண்டிருக்கும். ஜெமினியும் அட்சதை போட்டு ஆசீர்வாதம் பண்ணிவிட்டு “காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்” என்று பாட்டு பாடிக்கொண்டு walks out in the sunset.

கதை முழுவதும் ரியலிஸ்டிக் என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக வீட்டை விட்டு வெளியேறும் ச. தேவி, எப்படியோ தன் மீது ஆசைப்படும் நா. ராவின் வீட்டில் போய் தங்குவார். 1959இல் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் எவரும் என்ன ஜாதி என்று கேட்க மாட்டார்கள். ச. தேவியின் குடும்பம் ஏழையாகத்தான் தெரியும், ஆனால் அவர் காலேஜில் படிப்பார். Perhaps I am nitpicking. But, எல்லாவற்றையும் விட, காதல் தியாகம் செய்யக்கூடியதா? அப்போதைய values வேறாக இருந்திருக்க வேண்டும். (எனக்கும் படம் பார்த்துதான் தெரியும். :-))

தங்கவேலுவின் காமெடி பிரமாதம் என்று அந்த காலத்தவர்கள் சொல்லுவார்கள். என் அம்மா எப்போது இந்த வசனத்தை சொன்னாலும் – “மாப்பிள்ள என்ன பண்ணிட்டிருக்கார்? போண்டா சாப்பிடறார்” – சிரிப்பார். மன்னார் அண்ட் கோ நகைச்சுவை மிகவும் பிரபலமானது. இப்போது அவ்வளவு சிரிப்பு வரவில்லை.ஒரு வேளை நமக்கு இந்த ஜோக் தெரிந்துவிட்டிருபதாலோ என்னவோ புன்னகைதான் வருகிறது. தங்கவேலு வேலைக்கு போகாமல் தான் ஒரு ஆசிரியர் என்று டபாய்க்கும் இடமும் அப்படித்தான். மன்னார் அண்ட் கோ சித்ராலயா கோபுவின் மூளையில் உதித்ததாம்.

ஜெமினியின் அலட்டல் இல்லாத மிருதுவான நடிப்பு படத்துக்கு பலம். ஆனால் இது சரோஜா தேவியின் படம். கதை அவரை சுற்றித்தான் சுழல்கிறது. அவரும் சோடை போகவில்லை. விஜயகுமாரி தான் ஒதுக்கப்படுகிறோம் என்று நினைக்கும்போது நன்றாக நடிக்கிறார்.

நம்பக்கூடிய திரைக்கதை படத்துக்கு ஒரு தூண் என்றால், பாட்டுக்கள் இன்னொரு தூண். 8 பாட்டுகள் – 2 பாட்டுக்கள 2 முறை வரும். ஏ.எம். ராஜா இந்த படத்திலும் தேனிலவு படத்திலும் அடைந்த சிகரங்களை வேறு எப்போதும் அடையவில்லை. அவரது முன் கோபத்தால் அவரால் தமிழ் திரை உலகில் பிரகாசிக்க முடியவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ரீதரும் சீக்கிரத்தில் எம்எஸ்வி காம்புக்கு மாறிவிட்டார்.

“வாடிக்கை மறந்தும் ஏனோ” என்ன அருமையான பாட்டு? “நான் கருங்கல்லு சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ” வார்த்தைகள் என்ன அபாரமாக விழுந்திருக்கின்றன?

“ஆசையினாலே மனம்” பாட்டில் வாலி எழுதுவது போல அர்த்தமில்லாத சில வார்த்தைகள் வரும் – “வாலில்லாத ஒரு அணில்” ?? அதுவும் ஒரு அழகுதான். அதுவும் ராஜா ஊ ஹூம், சாரி என்று சில வார்த்தைகளை மட்டும் சொல்லுவார். மிக நன்றாக இருக்கும்.

“துள்ளாத மனமும் துள்ளும்” பாட்டு உண்மையிலேயே மனதை அள்ளும் பாட்டு. ஜிக்கி எங்கேயோ போய்விட்டார்.

“காதலிலே தோல்வியுற்றான்”, “காதிலிலே தோல்வியுற்றாள்” இரண்டிலும் தெரியும் சோகம் மனதை தொடும். வரிகளும் சூப்பர்.

“உன்னை கண்டு நானாட” பாட்டு ஒரு காலத்தில் எல்லா தீபாவளிகளிலும் கேட்கலாம். இந்த பாட்டில் உள்ள உற்சாகம், வேகம், சிம்பிளான வரிகள், “சித்திரப்பூ போல சிதறும் மத்தாப்பூ, தீ ஏதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” – ஏன் எனக்கு பழைய தமிழ் பாட்டுகள் மீது ஒரு பைத்தியம் பிடிக்காது? இதன் சோக version எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஆனால் இவ்வளவு உற்சாகமான பாட்டை கொஞ்சம் மெதுவாக பாடி சோகப் பாட்டாகியது ஜீனியஸ்!

எனக்கு அந்த வளைகாப்பு பாட்டு ஞாபகம் வரவில்லை. “அக்காவுக்கு வளைகாப்பு”?

எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

உண்மையில் இந்த படத்துக்கு C+ தான் கொடுக்க வேண்டும். ஆனால் இதன் தாக்கத்துக்காகவும், பாட்டுகளுக்காகவும், ஒரு pioneering effort என்பதற்காகவும், B grade கொடுக்கிறேன். 10க்கு 7 மார்க்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

11 Responses to கல்யாணப் பரிசு (Kalyanap Parisu)

 1. Manivannan says:

  இயக்குநர் சகாப்தம் கலைமாமணி சி.வி.ஸ்ரீதர். முதன்முதலில் புதுமுகங்களை மட்டுமே வைத்து `வெண்ணிற ஆடை’, பத்து நாட்களில் ஒரே செட்டில் படமாக்கப்பட்ட `நெஞ்சில் ஓர் ஆலயம்’, நடிகர்களுக்கு மேக்கப் போடாமல் `நெஞ்சிருக்கும் வரை’, முதன்முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட `சிவந்த மண்’, முதல் ஈஸ்ட்மென் கலர் படமான `காதலிக்க நேரமில்லை’ என தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பல சாதனைகளைத் தொடங்கி வைத்தவர் இவர்தான்.
  நன்றி: குமுதம் ரிப்போட்டர்

 2. Das says:

  RV, your review is very balanced (thangavEluvin comedy ninaiththAl punnagai pookkalAm!) When CVS and AMR were struggling to come up in the cine industry, CVS assured his friend AMR that whenever he gets a chance to direct, AMR would be the music director and he kept the promise.

  The duo continued but fell apart a bit in “thEn nilavu”. Thalaivar intervened and patched up. He requested AMR to complete the BGM for “thEn nilavu” and I think CVS switched to MSV-TKR after that.

  Remember, MSV-TKR took 6 months to compose a 6 minutes tune (MSV-TKR took just 5 minutes to compose “aththAn ennaththAn”!) as all the three (MSV-TKR, CVS, KD) had to agree to the final tune!!

  Jaya TV had a siRappu thEn kiNNam on CVS. The compere quoted “alai kadalil oru siRu thONi (chithrAyalA banner), kalai ulagil thani bANi” – mikavum poruththam for CVS.

  I would always recall gOpu (sadagOpu) ‘s efforts in CVS’s successes. Remarkable talent.

  CVR (C.V.rAjendran) is a cousin of CVS, I think.

  Indiaglitz has some pictures and I could see both gOpu and CVR next to CVS and partaking in the grief and sorrow.

  CVS compromised later in 70’s. His golden period was 50’s and 60’s.

  I felt sad and bad when he personally came to wish rajani on his birthday in his wheel chair.

  CVS oru sakApththam.

 3. RV says:

  Manivannan,

  Thanks for the info. For the record, I don’t think it matters whether the movie was shot in Eastman color or not, or whether the actors had makeup, or whether the movie was shot in 10 days or 10 years. As a viewer, all I really care about it whether I like the movie. :-))

  However, somebody has to try these things and I am glad that Sridhar did…

  Das, Thanks for your kind words. Who is the thalaivar who patched up AMR & Sridhar? MGR? I can’t identify CVR & Gopu, can you give me a little more detail?

 4. சுபாஷ் says:

  பழைய படத்திற்கு சவாரசியமான விமர்சனம்.
  இப்பட பாடல்கள் அப்பா காலையில் போட்டு கேட்கும் பாடல் லிஸ்டில் உண்டு.

 5. Das says:

  RV, MGR patched up between AMR and Sridar. gOpu is known as “chithrAyalA” gOpu and is responsible for comedy tracks. He went on to direct “kAsEthAn kadavuLadA” and is a close friend of Sridar. C.V.rAjEndran directed movies like “sumathy en sundari”.

  Note: it is not sumatheeeee!

 6. bmurali80 says:

  தமிழ் சினிமா முதல் இரட்டை நாயகி சப்ஜெக்ட் என்ற பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.

  நீங்கள் சொல்வது போல் சரோஜா தேவியின் பாத்திரம் தான் முக்கிய பாத்திரம். அவர் எதார்த்தைத் தொணித்தாலும் அவருடைய “பெண் என்றால்…” வசனங்கள் பெண்ணிய வாதிகளின் காதுகளில் விழுந்தால் என்ன நடக்குமோ என்று எண்ணினேன்.

  நீங்கள் குறிப்பிட்டது போல் கதையில் எதார்த்தம் சற்று குறைவே. நாகெஸ்வர் ராவின் வீட்டினினைத் தேடிச் செல்வது. சொல்லி வைத்தார் போல் விஜயகுமாரி இறப்பது என்று பல சால்ஜாப்புக்கள் இருக்கின்றன…அக்காலத்தில் இதெல்லாம் பெரியதாகப்பட்டிருக்காது.

  ***

  பிடித்தது: தந்தையின் துணையின்றி ஒரு பெண் கல்லூரியில் படிப்பது அதுவும் சைக்கிள் ஓட்டி சென்று…ஜெமினியின் அலட்டாத நடிப்பு…அழுகை சீன்களில் “ஐயொ…அம்மா” என்று நடிப்பது அவருடைய தனி முத்திரை 🙂 தங்கவேலுவின் மன்னார் அண்ட் கம்பெனி.

  ***

  தமிழ் சினிமாவில் கமர்ஷியல் டெம்ளேட்டை உருவாக்கியவர்களில் முக்கிய இடம் ஸ்ரீதருக்கு உண்டு எனலாம்.

  ***

  முடிந்தால் நினைவெல்லாம் நித்தியா பற்றி எழுதுங்கள்.

 7. RV says:

  DaaS, I didn’t phrase things correctly. I meant to say I cannot identify Chitralaya Gopu & CV Rajendran. I have heard of them. Any pointers?

  bmurali, I haven’t seen N. Nithya. :-)) Of course, I love the songs! Can I “volunteer” you to write on NN?

  You are right, he created a template for triangle love stories…

 8. bmurali80 says:

  கல்யாண பரிசு யாரும் பார்க்க விரும்பினால் கீழுள்ள சுட்டியில் பார்க்கலாம்:

  http://www.rajshri.com/tamil/movies/KalyanaParisu(withEnglishsubtitles).asp

  நினைவெல்லாம் நித்யா ஒரு முறை மட்டுமே பார்த்துள்ளேன். மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

 9. Surya says:

  CVS oru sakApththam. Simply Superb.

  காலத்தால் அழியாத காவியன்.

 10. சாரதா says:

  ‘கல்யாண பரிசு’ படத்துக்கு 2007 பிப்ரவரி 27 அன்று நான் எழுதிய விமர்சனம் இந்த இணைப்பில். (ஸ்ரீதர் அவர்கள் மறைவதற்கு ஒண்ணரை ஆண்டுகளூக்கு முன்பு எழுதியது)

  http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=168

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: