ஸ்ரீதர் பற்றி


இது பல நாட்களுக்கு (ஸ்ரீதர் மறைவுக்கு) முன் இளையராஜா சொன்னது – அவர் ஸ்ரீதர் பற்றி பேட்டி கொடுக்கவில்லை போகிற போக்கில் ஸ்ரீதரை பற்றியும் சொல்லி இருக்கிறார். 

கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

முழு கட்டுரை இங்கே

ஸ்ரீதரையும் கல்யாண் குமாரையும் பற்றி ராஜநாயகம் ஒரு சுவாரசியமான போஸ்ட் போட்டிருக்கிறார். தெய்வ மகனில் சிவாஜி நெளிந்து கொண்டே இருப்பது ஸ்ரீதரை இமிடேட் செய்துதானாம்!

ஸ்ரீதர் பற்றி எம்எஸ்வி சொன்னது

ஸ்ரீதர் பற்றி அவரது மனைவி சொன்னது

ஜெமினி கணேசன் பற்றி ஸ்ரீதர் சொன்னதாக ராண்டார்கய் சொன்னது: (நன்றி தாஸ்)
(என்னுடைய மொழிபெயர்ப்பு)
ஸ்ரீதர் ஜெமினியுடன் பணி புரிவதை விரும்பினார். ஜெமினியின் நாகரீகமான, படித்த, மத்தியதர வர்க்க பின்னணி ஸ்ரீதருக்கு நன்றாக ஒத்துப்போயிற்று என்பதை ஸ்ரீதரே ராண்டார்கய்யிடம் சொல்லி இருக்கிறார். அவருக்கு எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் மீது நிறைய மதிப்பு இருந்தாலும், ஜெமினிதான் அவருடைய ஃபேவரிட் ஹீரோ.

ஸ்ரீதர் பள்ளியில் எனக்கு சீனியர். நானும் செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் இரண்டு வருஷம் படித்திருக்கிறேன். இங்கே படித்த இன்னும் சில பிரபலங்கள் நடிகர் நாசர், பத்திரிகையாளர் ஞானி.

ஸ்ரீதரை பற்றி அவர் மனைவி


ஆனந்தவிகடனிலிருந்து: ((மணிவண்ணனுக்கு நன்றி!)
”இன்னும் ஒரு படத்தை இயக்கிப் பார்க்கணும். என்னோட படைப்பு, சினிமா உலகத்தையே திருப்பிப் போடணும். சினிமாவில் செய்ய வேண்டிய வித்தியாசங்கள் நிறைய இருக்கு. மனுஷ வாழ்க் கையோட கூறுகளை நாம சொல்லவே இல்லை. அதை அழுத்தமாச் சொல்ற மாதிரியான ஸ்க்ரிப்ட் என்கிட்ட இருக்கு. எழுந்து நடமாடுற அளவுக்கு இந்த உடம்பு சரியாகிறப்ப நான் ‘ஷாட் ரெடி’ன்னு கிளம்பிடுவேன். அடுத்த வருஷம் இளைய தலைமுறை இயக்குநர் களுக்கு நான்தான் போட்டியா இருப்பேன்!” விகடன் தீபாவளி மலருக்காக தன்னை சந்திக்க வந்த டைரக்டர் அமீரிடம் இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

ஆனால், அந்த வார்த்தைகளில் மிளிர்ந்த நம்பிக்கை ஒளி அடுத்த சில வாரங்களிலேயே அணைந்ததுதான் சோகம். பக்கவாதத்தால் 10 வருடங்களுக்கும் மேலாக படுக்கையில் இருந்த டைரக்டர் ஸ்ரீதரின் உடல்நிலை சமீப காலமாக, ரொம்பவே கவலைக்கிடமானது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்ரீதர் கடந்த 20-ம் தேதி காலையில் மரணமடைந்தார்.

தமிழ்த் திரையுலகை தன் திரைக்கதை வித்தைகளால் வித்தியாசப்படுத்திய அந்த ஜாம்பவான் முடங்கி விழுந்தபோது, அவருக்கு யாதுமாகி நின்றவர் அவருடைய மனைவி தேவசேனா.

”விகடனுக்கு கொடுக்கிற பேட்டிதான் கடைசி பேட்டின்னு நினைச்சாரோ என்னவோ… உடல் நலமில்லாததைக்கூட பொருட்படுத்தாம அஞ்சு மணி நேரம் பேசினார். நிறைய மனசுவிட்டுப் பேசினார். ஆனா, அவரோட கடைசிப் பேட்டி பிரசுரமானதை அவர் பார்க்காமலேயே போயிட் டார்!” குரல் உடைந்து அழுகிறார் தேவசேனா.

”அவருக்கு எப்பவும் எதுவும் சுத்தமா இருக்கணும். ஒரு நாளைக்கு மூணு தடவை டிரெஸ் மாத்துவார். ஹீரோவுக்குப் போட்டியா வொயிட் அண்ட் வொயிட்டில் பளிச்னு செட்டில் உலவுவார். ஒரு கதை மனசில உருவாகிடுச்சுன்னா, அது முழுமையடைகிற வரைக்கும் சரியாப் பேச மாட்டார். சாப்பாடு, தூக்கம்னு எது பத்தியும் கவலைப்படமாட்டார். அந்தக் கதை மனசுல முழுமையடைஞ்ச பிறகு பேப்பரும் பேனாவுமா உட்கார்ந்திடுவார். வசனங்களை ரொம்ப யதார்த்தமா எழுதுவார். எந்த வேலையையும் தள்ளிப்போடக் கூடாதுங்கிறதில ரொம்ப உறுதியா இருப்பார். பக்கவாதத்தால் அவரோட மொத்த ஓட்டமும் தடையாகி படுக்கையில் விழுந்தப்ப, ‘ரெண்டு மாசத்தில் சரியாகிடும்!’னு சொல்லிட்டே இருந்தார். சாகப் போற ரெண்டு மாசத்துக்கு முன்னாலகூட இதே வார்த்தை களைத்தான் சொன்னார்!” – தலைமாட்டில் இருக்கும் ஸ்ரீதரின் கம்பீரப் புகைப்படத்தைப்பார்த்துக் கொண்டே பேசுகிறார் தேவசேனா.
”ஷூட்டிங் சமயத்தில யார்கிட்டயும் பேச மாட்டார். பார்வையாலேயே எல்லா விஷயத்தையும் சம்பந்தப்பட்டவங்களுக்கு உணர்த்துவார். வெளியூர் ஷூட்டிங் போறப்ப, முக்கியமான டெக்னீஷியன்களை குடும்பத்தோட வரச் சொல்வார். அந்த மாதிரி நேரங்கள்ல ரொம்ப சந்தோஷமா இருப்போம். ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பார். அப்பவே ‘இந்த மாதிரித் தரத்தில் நாம எப்பதான் படம் எடுக்கப் போறோமோ?’ன்னு ஆதங்கப்பட்டுப் பேசுவார். ‘நமக்காக ஒரு நிமிஷம் கூட ஒதுக்காம இப்படி பம்பரமா சுத்துறாரே’ன்னு நான் வருத்தப்பட்டதுதான் தப்போ என்னவோ… படுத்த படுக்கையா அவர் விழுந்து பல வருஷம் என் பக்கத்திலேயே இருந்தார்.

சில நாட்களுக்கு முன்னால அவர் உடம்புக்கு ரொம்ப முடியாமப் போச்சு. ‘நான் உன்னை ரொம்பச் சிரமப்படுத்துறேன்தானே?’ன்னு கேட்டார். ‘நீங்க நல்லபடியாக இருந்து உங்க பக்கத்திலேயே இருக்கிற பாக்கியத்தைத் தவிர, வேற எதுவும் எனக்கு வேணாம்’னு சொன்னேன். அவருக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ‘ஒரே ஒரு படத்தைப் பிரமாதமாப் பண்ணிட்டு, அதுக்கப்புறம் செத்தாக்கூட எனக்குக் கவலை இல்லை!’ன்னு சொன்னார். அவர் குணமடைவது சுலபமில்லைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் அவரோட அசாத்திய நம்பிக்கை எப்படியும் அவரை மறுபடியும் நடக்கவைச்சிடும்னு நினைச்சேன்… அவரோட நம்பிக்கையைத்தான் நான் நம்பிட்டு இருந்தேன். ஆனா, எல்லாமே பொய்யாகிப் போச்சே!” – கண்ணீரில் கரைகிறார் தேவசேனா.

ஸ்ரீதர் பற்றி எம்எஸ்வி


குமுதத்திலிருந்து:


இயக்குநர் ஸ்ரீதரின் படங்களுக்கு மறக்கமுடியாத பாடல்களைத் தந்தவர் எம்.எஸ்.வி. இயக்குநர் ஸ்ரீதர் பற்றிய தன் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

“போலீஸ்காரன் மகள்’ படம் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் சுற்றி உடைக்கிற நேரம். டைரக்டர் ஸ்ரீதருக்கு என்ன தோணிச்சோ தெரியல. `பூசணிக்காய் உடைக்கவேண்டாம். இன்னும் ஒரு பாட்டு எடுத்தால் நல்லா இருக்கும்’னு சொல்லிவிட்டார். இருக்குற ஒரு நாள்ல எப்படி இது சாத்தியம்னு எல்லோருக்கும் குழப்பம். ஆனால் `என்ன செய்வீங்களோ தெரியாது கதாநாயகி இறந்த பிறகு சோகப்பாட்டு ஒன்று எடுக்கப் போகிறேன். விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் மூவரையும் தகவல் சொல்லி கூட்டிட்டு வாங்க’ன்னு சித்ராலயா கோபுகிட்ட சொல்லிட்டார். நாங்க உடனே போய் உட்கார்ந்து கம்போஸ் பண்ண, கவிஞர் `பூமறந்து போகிறாள்… பொட்டெடுத்துப்போகின்றாள் புன்னகையை சேர்த்தெடுத்து கன்னி மயில் போகின்றாள்’னு வேகமா எழுதி முடிச்சிட்டார். அருமையான பாட்டு. 20 நிமிஷத்துல ரெக்கார்டிங் முடிஞ்சது. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கணீர்னு ஒலிச்சது. அதே வேகத்தில் இரண்டு மணி நேரத்துல பாட்டு படப்பிடிப்பை முடிச்சார் ஸ்ரீதர். அந்த வேகம் யாருக்கு வரும்? அதேபோல, நினைச்ச ட்யூன் வரலன்னா விடமாட்டார். இசைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் அவர் படங்களில் தெரியும்.
மாசத்துல நாலு தடவை அவரைப் போய் பார்த்து பேசிட்டு வருவேன். போனவாரம்தான் பார்த்துட்டு வந்தேன். அதுதான் கடைசினு தெரியாமல் போச்சு” என்று கலங்குகிறார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.

நெஞ்சம் மறப்பதில்லை!.