தில்லானா மோகனாம்பாள்


எனக்கு தில்லானா மோகனாம்பாள் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. நாகேஷ், மனோரமா, பாலையா நன்றாக நடித்திருந்தாலும், பத்மினி ஓவர் ஆக்ட் செய்து கெடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் சிவாஜியும் ஓவர் ஆக்ட் செய்தார் என்று நினைத்தேன், பிறகு கதாபாத்திரம் அப்படி என்று உணர்ந்தேன். ஆனால் தமிழ் நாட்டின் ஒரு கால கட்டத்தை (தஞ்சாவூர் ஏரியா, 1930-60கள்) உண்மையாக பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.

கீழே இருப்பது படம் வந்த போது விகடனில் வந்த விமர்சனம்.

தில்லானா மோகனாம்பாள்… ‘கலைமணி’ எழுதிய இந்தக் கதை விகடனில் தொடர்கதையாக வெளிவந்தபோதே, லட்சக்கணக்கான வாசகர்கள் அதைப் படித்து இன்புற்றனர்.

இப்போது அது ஒரு வண்ணத் திரைப் படமாக வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை பல்வேறு துறைகளில் ஈடுபட்டிருக்கும் சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்குபெற்றவர்கள்:

1. திரு. எஸ்.வெங்கிடரமணன், ஐ.ஏ.எஸ், சேர்மன், மெட்ராஸ் ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்.

2. திருமதி ஜலஜா வெங்கிடரமணன், குடும்பத் தலைவி.

3. திரு. கே.என்.தண்டாயுதபாணிப் பிள்ளை, நடன ஆசிரியர்.

4. குமாரி சந்திரகாந்தா, நடிகை.

5. திரு.எஸ்.பி.கே.மூர்த்தி, இன்ஜினீயர்.

6. திருமதி ஹம்ஸத்வனி, தமிழ்ப் பேராசிரியை, ராணிமேரி கல்லூரி.

7. திருமதி லட்சுமி சுந்தரம், குடும்பத் தலைவி.

லட்சுமிசுந்தரம்: விகடனில் இதைத் தொடர்கதையா படிச்சிருக்கேன். ஹீரோவும் ஹீரோயினும் ரயில்ல போகும்போது ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவங்க மனசிலே நினைச்சுக்கிறதை கலைமணி என்ன பியூட்டிஃபுல் டயலாகா எழுதியிருக்கார், தெரியுமா? இதையெல்லாம் எப்படிப் படத்திலே எடுக்கப் போறாங் கன்னு எனக்கு ரொம்ப ‘டவுட்ஃபுல்’லா இருந்தது. ஆனா, இவங்க ரொம்ப அழகா எடுத்திருக்காங்க!

இந்தப் படத்திலே எனக்கு ரொம்பப் பிடிச்சது நகைச்சுவை!

வெங்கிடரமணன்: இந்தக் கதையின் மையமே சோகம்தான்! படத்தின் நல்ல முடிவுக்காகக் கதையைச் சந்தோஷமாக முடித்துவிட்டார்கள்.

துணை ஆசிரியர்: கதையிலே இந்த முடிவும் உண்டு. ஆனா, இதற்குப் பிறகும் கதை இருக்கு.

வெ.ரமணன்: இருக்கலாம். அதுக்காக வேற ஒரு ஃபிலிம் எடுக்கப்போறாங்களா? ‘டாக்டர் ஷிவாகோ’விலே நாவல் முடிவிலிருந்து மாறி படத்திலே இருக்குன்னு வெச்சிக்குங்க… அதோட ‘எஃபெக்டே’ போயிருக்குமே!

ஹம்ஸத்வனி: இந்தக் கதையிலே வரவங்க – அது மோகனாம்பாள் குடும்பமானாலும் சரி, நாதஸ்வர வித்வானோட குடும்பமானாலும் அந்த மாதிரி குழுவிலே உள்ளவங்களாதான் இருக்காங்க. வெத்திலைப் பெட்டி தூக்கிட்டுப் போறதுலேயும் சரி, நாட்டியக் குடும்பம், அந்தத் தாயோட காரெக்டர் எல்லாமே உண்மையா, இயல்பா இருக்கு. கதைப்படி பாலையா சிவாஜியை விடப் பெரியவர். அவர் சில வேடிக்கைகள் பண்ணும்போது, அவர் எப்படி இந்த மாதிரி நடந்துக்கலாம்னு கேட்டா… அந்தக் குழுவிலே அதெல்லாம் ரொம்ப சாதாரணம்!

தண்டாயுதபாணிப் பிள்ளை: ஆனா, அதுக்குன்னு சதா கமுக்கத்திலே துணியை வெச்சிக்கிட்டே போறது, வர்றது… கொஞ்சம் அதிகமா தோணுது. பாலையா ஈஸ் வெரி குட்! அந்த நாதஸ்வரக்காரங்க செய்யாத அம்சங்கள் எல்லாம் இவர் செய்தார். அதிலே சந்தேகமே கிடையாது. சாரங்க பாணிப்பிள்ளையும் வாசிக்கிறாரு. ஆனா ‘ஒரிஜனலா’ இல்லே!

சந்திரகாந்தா: பழைய கலை களை அநாகரிகம்னு நினைச்சு மேல்நாட்டுக் கலைகளையே பின் பற்றிப் போகக்கூடிய நிலையிலே தான் இப்போ நாம இருக்கோம். இந்தச் சூழ்நிலையிலே தில்லானா மோகனாம்பாள் என்கிற இந்த நல்ல கதையைப் படம் எடுக்கணும்னு நினைச்சிருக்காரே ஏ.பி.நாகராஜன், அதுக்காகவே அவருக்கு ‘ஃபஸ்ட் பிரைஸ்’ கொடுக்கணும்.

வெ.ரமணன்: ஐ அக்ரீ! ஆனா, இதுலே போய் ஏன் இவ்வளவு காமெடியைப் புகுத்த வேண்டும்?

ச.காந்தா: ஏன்னா, படம் நல்லா ஓடணுங்கற காரணத்துக் காகவும், ‘அடடே..! காமெடி நிறைய இருக்காமே’னு கேட்டு ஓடி வர்ற ரசிகர்களுக்காகவும் தான்! அப்படி வரவங்க மனசிலே நம்ப பழைய கலையின் பெருமை யைப் பதிய வைக்கிறாரே, இது பெரிய சேவை இல்லையா?

படத்திலே ஒரு ‘பாயின்ட்’ கவனிச்சீங்களா? மறைஞ்சு போன ராஜரத்தினம் பிள்ளையை ஒவ்வொரு சீன்லேயும் ஞாபகப் படுத்தறாங்க! ஒரு காலத்திலே நாதஸ்வர வித்வான்களை அடிமைகளா நடத்திக்கிட்டு இருந்தாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன். ராஜரத்தினம் பிள்ளை தோன்றியதுக்குப் பிறகுதான், நாதஸ்வர கலைஞர்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தொடங்கினாங்க. ‘என் கலைக்கு மதிப்புக் கொடுத்தா உனக்கு நான் மதிப்புக் கொடுக்கிறேன். என் கலை உனக்கு அடிமை இல்லை’ அப்படின்னு நடந்துக்கிட்டாராம் அவர். அப்படிப் பார்க்கும்போது, இந்தக் கதையிலே வர்ற ஷண்முகசுந்தரம் ராஜரத்தினம் பிள்ளைதான்னு சொல்லுவேன்.

த.பிள்ளை: கதாசிரியரே அவரை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் எழுதினார். அவர் எண்ணமே அதுதானே!

மூர்த்தி: நல்ல கதைகளை சினிமாவாக எடுக்கும்போது, அதைச் சின்னாபின்னப்படுத்திடறாங்க! அது ‘ஷேப்’ தெரியாம போயிடுது! இந்தக் கதையிலே அந்த மாதிரி பண்ணல்லே! காரணம், இந்தக் கதையே ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு ஏற்றதா இருக்கு. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தமட்டில், கிரெடிட் கோஸ் டு பத்மினி. மத்தபடி இது ஒரு நல்ல கூட்டு முயற்சி.

த.பிள்ளை: மதன்பூர் ராஜா கிட்டே, அவ உள்ளுக்குப் போயிட்டு அந்தப் படிக்கட்டிலே வெளியே வரா இல்லையா… அப்போ சிவாஜி கணேசனுக்கும், அவளுக்கும் வாக்குவாதம்… அந்த இடம் ரொம்பப் பிரமாதம்!

ச.காந்தா: எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் உதயசந்திரிகா – பாலாஜி ஸீன்! தன் கணவன் கிட்டே ‘நீங்க எங்கே வேணாலும் போங்க. அதை நான் தடுத்து நிறுத்தினா, இன்னும் அதிகமா போவீங்கன்னு தெரியும். யார் கிட்டே வேணாலும் போங்க. ஆனா, உங்களுக்காக மஞ்சள் குங்குமத்தோட இங்கே நான் ஒருத்தி காத்துக்கிட்டு இருக்கேன்’னு சொல்லிட்டு உள்ளே போயிடறா! பிரமாதமான ஸீன்! அந்த ஒரு வார்த்தையிலே கணவன் திருந்திடறான். அந்த இடம்தான் என் மனசைத் தொட்டது!

து.ஆசிரியர்: மனோரமா பற்றி…

ஜலஜா: மனோரமாவைத் தவிர, அந்தக் காரெக்டரை வேற யாருமே நடிக்க முடியாது!

த.பிள்ளை: அந்த டிராமா கொட்டகையில் போய், அவனிடம் நாதஸ்வரத்தைக் கொடுத்து, வாசிக்கச் சொல்லி ரசிக்கிறா பாருங்க… அப்பா, ராஜா, அப்படி இப்படீன்னு… ஐயய்யோ, கொன்னுட்டா!

து.ஆசிரியர்: நான் பல நாடுகளுக்குப் போய், பல படங்களைப் பார்த்தேன். எனக்கென்னவோ, சிவாஜி கணேசனுக்கு இணையா உலகத்திலே இன்னொரு நடிகர் இருக்கிறதா தெரியலே.

த.பிள்ளை: அவரைப் பத்திப் பேசாதீங்க சார்! பேச என்ன இருக்கு? உலகத்திலேயே மிகப் பெரிய நடிகர் அவர். அப்புறம் புதுசா சொல்ல என்ன இருக்கு?

மூர்த்தி: ஐ திங்க்… கமர்ஷியலாகவும் இது பெரிய வெற்றியா இருக்கும்னு நினைக்கிறேன்.

சினிமா சினிமா தொடர் பதிவு


சுபாஷ் எங்களை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார். ஆனால் அவர் என்னை களஞ்சியம் என்று சொன்னதை என் மனைவியிடம் சொன்னால் குதிர் என்று அல்லவா சொல்ல வேண்டும் என்று கமென்ட் அடிப்பாள். தொப்பை சைஸ் அப்படி.

அவர் அழைத்தபோது நான் இரண்டு விஷயங்களை உணர்ந்தேன்.
1. நானும் 20 வருஷங்களாக கம்ப்யூட்டரில்தான் குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன். ஆனால் தொடர் பதிவு (meme) என்றால் என்ன என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன். இளைஞர்களுக்கு நிறைய தெரிந்திருக்கிறது, I have miles to go.

2. தொடர் பதிவுக்கு அடுத்தபடி நாங்கள் ஐந்து பேரை அழைக்க வேண்டும். இதை பற்றி இது வரை பதிக்காத ஐந்து பதிவர்களை எனக்கு அறிமுகம் உண்டா என்பதே சந்தேகம். :-)) அவர்களை எப்படி அழைப்பது என்றும் சரியாக தெரியவில்லை – அவர்கள் ப்ளாகில் சென்று அழைப்பு விடுக்க வேண்டியதுதான். அதிலும் சுபாஷ் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் அழைத்தேன் என்று சொல்வதை பார்க்கும்போது ப்ளாக் உலகத்தின் etiquette(இதற்கு தமிழில் என்ன எழுதுவது?) எனக்கு கொஞ்சமும் தெரியாது என்பதையும் உணர்கிறேன்.

எனக்கு இந்த பதிவு போடுவது சுலபம். நாகர்ஜுன் இந்த பதிவை ஆரம்பித்தபோது நான் பார்த்தேன். அவரது ப்ளாகிலேயே மறுமொழி இட்டிருந்தேன். அதை கொஞ்சம் விவரித்து கூட்டாஞ்சோறு ப்ளாகிலும் பதிந்திருந்தேன். அப்படியே கை காட்டி விடலாம். :-))

பக்ஸ், நீதான் எழுத வேண்டும்.

அடுத்த படி பதிவு செய்ய இந்த பதிவர்களை அழைக்கிறேன்.

வெங்கட்ரமணன்
பிமுரளி
நந்தா
பிரசன்னா
ஜெயமோகன்

பதிவு எழுதாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ப்ளாக் இருக்கிறதா என்று தெரியாது, ஆனால் இவர்கள் பதிவு சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்களும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வேண்டுமென்றால் எனக்கு ஒரு மெய்ல் அனுப்புங்கள், இல்லை இங்கேயே ஒரு மறுமொழி எழுதுங்கள், அதையே ஒரு பதிவாக போட்டுவிடுகிறோம்.
சாரதா
ப்ளம்
மேலும் புரட்சி ரசிகன், ராஜ்ராஜ், புவனேஷ், மணிவண்ணன், உள்ளதை சொல்வேன், தாஸ், ரிங்க்ஸ்டர், ஷக்திப்ரபா, ராஜா, எல்லாரும் வாங்க! உங்க மறுமொழிகளை விரும்பி படிக்கறவங்க நிறைய பேர் இருக்காங்க!

நாகார்ஜுனின் ஒரிஜினல் போஸ்ட் இங்கே. கேள்விகளை வசதிக்காக இங்கே மீண்டும் தருகிறேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

7. தமிழ்ச்சினிமா இசை?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நாட்டாமை, டெம்ப்ளேட்டை மாத்த சொல்லு!


புது டெம்ப்ளேட் எனக்கும் பிமுரளிக்கும் மட்டுமே பிடித்திருக்கிறது. அதனால் போன மச்சான் திரும்பி வந்தான்…

இந்த டிசைன் போதுமா? இன்னும் கொஞசம் வேணுமா?


This Poll is closed (Oct 20th 2008)

கேப்டன் மார்கன் II


I think I got a little too subtle with the Captain Morgan post.

புரட்சி ரசிகன் என்ற நண்பர் எழுதிய சுஜாதாவின் கமெண்ட்கள் பற்றிய விவாதத்தின்(1, 2) மீது அடித்த கமெண்ட் கீழே.
Funny thing is neither of you picked up Sujatha’s comment about Sivaji as controversial.
That shows,
clearly shows,
very clearly shows ,
Ullangai nelli kani pol,
Muzhu poosanikai in Soru pol,
that both of you are Sivaji haters and MGR fans.
Plum , you are dead right.

சிவாஜி பற்றியாவது சரி, பாவம் எம்ஜிஆர் எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. இதில் ஏதோ புதுக்கவிதை மாதிரி ஒரு ஃபார்மட் வேறு. சில தீவிர சிவாஜி ரசிகர்களுக்கு எதை எழுதினாலும் நடுவில் சிவாஜி தலை சிறந்த நடிகர் என்று சொன்னால்தான் திருப்தி.

எனக்கு சிவாஜி பற்றி எழுதி எழுதி அலுத்துவிட்டது. சரி இவருக்காகவும் ஒரு போஸ்ட் போடுவோமே என்று நினைத்து சும்மா சும்மாஆஆஆஆ எதையோ எழுதி நடுவில் திடீரென்று சம்பந்தம் இல்லாமல் சிவாஜி பற்றி ஒரு லைன் எழுதினேன். நான் அடித்த ஜோக் யாருக்குமே புரியவில்லை போலிருக்கிறது. இதுக்குத்தான் தண்ணி அடிச்சுட்டு எழுதக்கூடாதுன்றது. நம்ம அடிக்கற ஜோக் ஒரே தமாஷ், ஆனால் யாருக்கும் நம்ம ஜோக் அடிக்கறோன்றதே புரியாது.

ஒரிஜினல் போஸ்ட் கீழே

காப்டன் மார்கன்


முதல் முறையாக இந்த காப்டன் மார்கன் ஸ்பைஸ் ரம் அடித்து பார்த்தேன். நல்ல ஃப்ளேவர். சாதாரணமாக தெரியும் கசப்பு இல்லை. லேசான ஒரு இனிப்பு தெரிகிறது. என்ன ஸ்பைஸ் போட்டுரிக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

இதுதான் எனக்கு ரம்களில் பிடித்திருக்கிறது.

சொர்க்கமே ஆனாலும் நம்மூரு ஓல்ட் மாங்க் போல வருமா என்று நீங்கள் சொல்லலாம். நான் யங் ஆக இருக்கும்போது பியர் கூட குடிக்கமாட்டேன் (யாராவது வாங்கிக் கொடுத்தால்தான் அதெல்லாம், என் பைசா செலவழிக்க மாட்டேன். :-)) அதனால் எனக்கு தெரியாது.

சிவாஜி ஒரு நல்ல நடிகர்.

சிவாஜி எங்கே வந்தார் என்று நீங்கள் முடியை பிய்த்துக்கொள்ளாமல் (எனக்கு அந்த ப்ராப்ளம் கிடையாது) போன போஸ்டுக்கு புரட்சி ரசிகன் எழுதிய மறு மொழியை படியுங்கள்.

வாங்க, ”காப்பி” சாப்பிடலாம் II


சண்டை போட யாரும் வராததால் சரி நானும் பக்சுமே கொஞ்சம் அடித்துக் கொள்கிறோம்.

பக்ஸ் ஒரு அடாவடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார். அதை முதலில் பார்ப்போம்.
விக்ரமை விட நெஞ்சில் ஓர் ஆலயம் நன்றாகவே இருக்கிறது. அதனால் சுஜாதா நெஞ்சில் ஓர் ஆலயத்தை குறை சொல்லக் கூடாது..
இருந்து விட்டு போகட்டுமே? அதனால் என்ன? சுஜாதா எப்போதாவது விக்ரம் நெஞ்சில் ஓர் ஆலயத்தை விட சூப்பர் என்று எழுதி இருக்கிறாரா என்ன? பக்ஸ் இங்கே சொல்லாமல் சொல்வது என்ன – விக்ரம் மாதிரி ஒரு மசாலா படத்தில் பங்கேற்ற சுஜாதாவுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பதுதான். அப்படி பார்த்தால் படமே எடுக்காத எங்களுக்கு தேன் கிண்ணம் சொத்தை, நாலும் தெரிந்தவன் சொதப்பல் என்று எழுத என்ன அருகதை இருக்கிறது? மனைவியிடம் மட்டுமே நடிக்கும் எங்களுக்கு சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று சொல்லும் யோக்யதை எங்கிருந்து வரும்? விட்டால் எல்லா விமர்சகர்களும் படம் எடுக்க வேண்டி வரும் போலிருக்கிறதே!

பக்ஸ் 3 அடாவடி ஸ்டேட்மெண்ட்களை குறிப்பிடுகிறார்.
1. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை.
இதை இப்படி பார்க்க வேண்டும். நெஞ்சில் ஓர் ஆலயம் உலகத் தரம் வாய்ந்த படம் இல்லை. அதை தமிழின் தலை சிறந்த படம் என்று சொன்னால், we are setting the bar too low. இதுதான் அவர் சொல்வதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன்.

2. ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.
நாம் சாதாரணமாக ஸ்ரீதரை ராம நாராயணன், ஜம்பு புகழ் கர்ணன் ஆகியோரோடு ஒப்பிட்டு ஆஹா பெரிய ஜீனியஸ் என்கிறோம். அவர் அந்த கட்டுரையில் சத்யஜித் ரே எப்படி படம் எடுப்பார் என்று பேசுகிறார். (நான் அந்த பத்திகளை என் ஒரிஜினல் போஸ்டில் கொடுக்கவில்லை). கே.எஸ்.ஜிக்கும் கர்ணனுக்கும் உள்ள இடைவெளி ரேக்கும் கே.எஸ்.ஜிக்கும் இருக்கத்தான் செய்கிறது.

3. கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.
சினிமா பாட்டுகளில் என்ன ராமாயணமா எழுத முடியும்? சுஜாதா ஆங்கில இசை படங்களிலோ, ஆபெராக்களிலோ என்ன காவிய நயம் ததும்பும் வரிகளை பார்த்திருக்கிறாரா? கண்ணதாசனும் வாலியும் கிடைத்த ஃபார்மட்டில் அருமையாக எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவுக்கு சினிமா பாட்டுகளின் constraints புரியவில்லை என்று நினைக்கிறேன்.

வாங்க, ”காப்பி” சாப்பிடலாம்!


இந்த போஸ்டை முதலில் ஒரு மறுமொழியாகத்தான் அளிக்க முயன்றேன். பின்னர் இதுவே ஒரு தர்க்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் போஸ்டாக அப்-க்ரேட் செய்துவிட்டேன்.

RV சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள் போஸ்டில், சுஜாதா “நெஞ்சில் ஓர் ஆலயம்” மற்றும் ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாக மேற்கோள் காட்டியது இது:
”இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார்.”
இது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர் 1.

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.
இது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர்2.

கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.
இது அவ்வளவு அடாவடி இல்லாத ஸ்டேட்மண்ட்.

”பிடிக்க்கவில்ல” என்பதுடன் நிறுத்தியிருந்தால் இந்த வம்பில் மாட்டியிருக்க மாட்டார். நானும் கொஞம் வம்பு இழுத்து தான் பார்க்கலாமே எனற என் எண்ணத்தை கைவிட்டிருப்பேன். ஆனால் அவருக்கோ, வம்பில் மாட்டுவது என்பது அல்வா சாப்பிடுவது போன்றது. “கறுப்பு, சிவப்பு, வெளுப்பு” வெளி வந்த காலத்தில் எவ்வளவு வம்பில் மாட்டினார் என்பது சுஜாதா வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சுஜாதா என்பதால் நாம் அவர் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு காலத்தில் சோவையும்(சோவையும் தான் வம்பிற்க்கு இழுப்போமே!), சுஜாதாவையும் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருந்தேன். ”கரையெல்லாம் செண்பகப்பூ” திரைப்படம் சரியாக ஓடாத பொழுது இப்படி ஒரு ஜீனியஸின் கதையை தமிழர்கள் ஆதரிககவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். இதைவிட யார் பிரமாதமாக கதை சொல்லிவிடமுடியும் என ஒரு இறுமாப்பு கூட என்னிடம் வளர்ந்தது. ஆனால் பின்னர் பகுத்தறிவு வளர, வளர இவர்களுடைய சில கருத்துகள் ஓட்டை நிறைந்ததாக பட்டது.

உதாரணத்திற்க்கு, சோ அவர்கள் மைக்கேல் ஜாக்‌ஷன் நடனங்களை “கீ கொடுத்த பொம்மை போல் இருக்கிறது” என்றும், “இதையெல்லாம் நடனம் என்று எப்படி சொல்வது?” என்றும் கூறினார். இது இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் சோவிற்கு மட்டும் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். ஆனால் அமேரிக்காவிற்க்கும், நாகரீகம் அடைந்த நாடுகளுக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும், ஏன் இளைய பாரதத்திற்க்கும் கூட MJயின் நடனம் தானே முதன்மையாகத் தெரிகிறது. இன்று நமது கலாச்சாரத்தில் முக்கால்வாசி (முக்கால்வாசி என்பது ஒரு அப்ராக்‌ஷிமேஷனே) நடன ஆசிரியர்களுக்கு MJ மானசீக குருவாக, ஏன், தெய்வமாகவே இருக்கிறார். சோ இவ்வாறு கூறி பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் இன்றும் அவர் கூறியது எனக்கு எந்த வகையிலும் அர்த்த்ம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. குருடன் யானையை பார்த்த மாதிரி தோன்றுகிறது.

இதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் பரதம், கதக் போன்ற நடனங்கள் மக்களை (குடியேறிய இந்தியர்கள் தவிர்த்து) அதிகம் கவராத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பரதம், கதக் போன்ற கிழக்கத்திய நடனங்கள் பிரபலம் அடையாத போதிலும் மற்றும் எந்த பெரிய ரசனையையும் ஏற்படுத்தாத போதிலும், மேல் நாடுகளில் இவைகளை வெளிப்படையாக விமர்சிக்காமல் கண்ணியம் காத்திருக்கிறார்கள்.

அவருடைய கண்மூடித்தனமான பா.ஜ.க ஆதரிப்பும் மனதிற்க்கு ஒரு நடுநிலமை உடைய தலைவரை இழந்தது போன்ற சுமையை கொடுக்கிறது.

சரி. சுஜாதா நெஞ்சில் ஒரு ஆலயம் தமிழ் திரையுலகத்திற்க்கு கதியற்ற நிலைமையை கொடுத்துள்ளது என்பது எதைப் பார்த்து? ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது? ஒருவேளை பப்ளிசிடி ஸ்டண்டா? தெரியவில்லை. ஆனால் நிச்சயம் “விக்ரம்” திரைபடத்தை விட “நெஞ்சில் ஓர் ஆலயம்” நன்றாகவே இருக்கிறது. கண்ணதாசனை காப்பி அடித்தார் என்று குறை சொல்கிறார். “விக்ரம்” திரைபடத்தின் ஒவ்வொரு ஹை-டெக் யுக்தியும் அயன் ஃப்லெமிங்கின் (Ian Lancaster Fleming) அப்பட்ட காப்பி தானே?

திரையுலகத்தில் AR Rahman முதற்கொண்டு எல்லோரும் காப்பி தான் அடிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் திரைபடத்தின் தலைப்பை கூட, ஏதோ தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் காப்பி அடிக்கிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம்: ராமன் தேடிய சீதை. தலைப்பென்ன? கதையையே ”ரீ-மிக்ஸ்” என்ற பெயரில் காப்பி போட்டு குடிக்கிறார்கள். தமிழ் திரைபட உலகில் ”காப்பி” என்பதன் ”எவல்யூஷன்” இது.  ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு காப்பி அடித்த காலம் போக கோலிவுட்டையே கோலிவுட்டுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சலாமியா நாட்டு பழக்க வழக்கங்கள் Octopussy காப்பி தானே? கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும்? அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன்? சுஜாதா மற்றும் நாமெல்லாம் போற்றும் “அந்த நாள்” யுக்திகளே காப்பி தான்.

மக்களுக்கு ஒரு வித போதையை கொடுக்கும் எந்த ”காப்பிக்கும்” தமிழ் திரையுலகத்தில் இடம் உண்டு.

ப்ளாக் பாடங்கள் II


பதிவர் சுபாஷ் இதை பற்றி இங்கே எழுதி இருக்கிறார். நான் சுபாஷின் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட போஸ்ட்களை அவ்வப்போது படிப்பேன். அவர் தமிழில் கம்ப்யூட்டரை பற்றி எழுதுவது அருமை.

நான் கஷ்டப்பட்டு போதி மரம் தேடி ப்ளாக் எழுதுவது பற்றி ஞானம் பெற்றால், அவர் சிம்பிளாக கூகிளில் பார்த்து என்னை விட அதிகமான ஞானத்தை பெற்று விட்டார்! உண்மையிலேயே இன்னும் சில அருமையான பாடங்களை அவர் சொல்லி இருக்கிறார். முக்கியமாக படங்கள் போடுவது பற்றி. படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவற்றை சேர்ப்பது நல்ல விஷயம். பழைய படங்களுக்கு ஸ்டில் தேட ரொம்ப கஷ்டப்பட்டேன். சில சமயம் சோம்பேறித்தனத்தால் எதையும் சேர்க்காமல் விட்டுவிடுவேன். அந்த தவறை செய்யாதீர்கள்.

தவிர, முடிந்த வரை ஒரு பக்கத்துக்கு மேல் ஒரு போஸ்டை எழுதாதீர்கள். (படிப்பவருக்கு ஸ்க்ரோல் செய்யும் சிரமம் இருக்கக்கூடாது.) ஆனால் என்ன செய்வது, வோர்ட்ப்ரெஸ் பதிவுகளில் யூட்யூப் சுட்டிகளை சேர்த்தால் பாதி ஸ்க்ரீன் அங்கேயே போய்விடுகிறது.

சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்


கணையாழி இன்னும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்’ இந்த காலத்து ப்ளாக்களின் முன்னோடி. சுருக்கமாக (எப்பவுமே வார்த்தைகளை வீணடிக்க மாட்டார்), சுவாரசியமாக எழுதப்பட்டவை. கணையாழி களஞ்சியம் என்ற தொகுப்பில் சில கடைசி பக்கங்களை படித்தேன். ஒன்று சினிமா பற்றியது.

இதை எழுதும்போது சுஜாதா டெல்லியில் இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பழைய படங்கள்தான் டெல்லிக்கு வரும்போல. இதை முழுவதுமாக இங்கே தரப்போவதில்லை. சில பகுதிகள் மட்டும்.

சுஜாதா நல்லபடியாக சொன்ன படங்கள் இவை.

அன்னை – பானுமதியின் நடிப்பை சிலாகித்திருக்கிறார். சில சமயங்களில் கண்ணீர் வந்ததாம். ஆனால் கூட இருக்கும் எல்லாரும், குறிப்பாக இளம் நடிகர்கள் (பெயர் குறிப்பிடவில்லை, ஹரிநாத் ராஜாவும் சச்சுவும் என்று நினைக்கிறேன்) சொதப்பிவிட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். பானுமதியை தவிர எனக்கு கண்ணில் தெரிந்த நடிகர்கள் ரங்காராவும் (பரவாயில்லை), ஸௌகாரும் (ஓவர் ஆக்டிங்) மட்டும்தான். இவர் கண்ணில் எல்லாரும் பட்டிருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் அந்த நாள், இது நிஜமா – அந்த நாள் பற்றி சாரதாவின் கருத்துகள் இங்கே, ராஜ்ராஜின் கருத்துகள் இங்கே, எனது கருத்துகள் இங்கே. இது நிஜமா கல்யாணராமனின் inspiration என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பாதை தெரியுது பார், உன்னை போல் ஒருவன் – நான் இரண்டையும் பார்த்ததில்லை. இதை எல்லாம் போட்டிருக்கக்கூடாதா?

நாலு வேலி நிலம் – இது படமாக வந்ததே தெரியாது. தி. ஜானகிராமனின் கதை. பாட்டுகள் இதை கெடுக்கின்றன என்று சொல்லி இருக்கிறார்.

குமார ராஜா – சில பகுதிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்த ஒரே விஷயம் சந்திரபாபு பாடிய “ஒண்ணுமே புரியலே உலகத்திலே” பாட்டு மட்டும்தான். பார்த்ததில்லை.

அவருக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார். நான் பார்த்து பல வருஷம் இருக்கும், பார்த்த போது படம் பிடித்துத்தான் இருந்தது.

வாலி மீது பாய்ந்திருக்கிறார். கண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார். வாலி கேட்டால் கண்ணதாசனை காப்பி அடிப்பதில் எனக்கு பெருமைதான் என்று சொல்லி இருப்பார்.

சிவாஜி மீது ஏகமாக பாய்ந்திருக்கிறார். verbatim ஆக – “இவர் முக்கால் வாசிப் படங்களில் கேவிக் கேவி அழுகிறார். பின்னால் தாடி வளர்க்கிறார். அல்லது கை கால் கண் பார்வை ஏதாவது ஒன்று இழக்கிறார். இப்படி இல்லாத படங்கள் மிக சிலவே!…”

ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.

கே. பாலச்சந்தரை பற்றி குறிப்பிடவில்லை. அதனால் அனேகமாக இது அறுபதுகளின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது என் யூகம்தான், எழுதப்பட்ட தேதி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்பவே சிவாஜியை பற்றி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்களா?