பாரு, பாரு நல்லா பாரு, பயாஸ்கோப்பு படத்தப் பாரு – திரையுலக வரலாறு 3


லூமியெர் சகோதரர்கள் பாரிஸில் முதன் முதலில் சினிமா பற்றி பரை சாற்றியவுடன் சென்னை வாசிகளுக்கும் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. 1897ல் எம். எட்வ்ர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், “பாரு பாரு கினிமாஸ்கோப் பாரு” என்று ஒரு இரண்டு ”கினிமா” திரையிட்டார். சில நிமிஷங்கள் தான் ஓடும் “The arrival of the Train” மற்றும் ”Leaving the factory” என்ற இந்த இரண்டு ”கினிமா”க்களும் ”விக்டோரியா பொது மாளிகை”யில் திரையிடப்பட்டது. இது பெற்ற புகழால் மக்கள் ஆர்வம் பெருக பல இடங்களில் பயாஸ்கோப், கினிமாஸ்கோப் என ஹை-டெக் ஜார்கனுடன் உலா வந்தது. ”பாரு பாரு பயாஸ்கோப், ஒன்றரை பைசா மட்டும் செலுத்தினால் போதும்” என்றவுடன் பரவசப்பட்டார்கள் மக்கள். மின்சாரம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை. மக்னீசியத்தை (Magnesium) வைத்து ப்ரொஜெக்ட் செய்தார்கள்.

1900ஆம் ஆண்டு மக்களுடைய ஆர்வத்தைப் பார்த்து சென்னயில் வாரிக் மேஜர் (Warwick Major) ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதன் பெயர் ”எலக்ட்ரிக் தியேட்டர்”. மௌன்ட் ரோடில் இன்றைய ஜெனரல் போஸ்ட் ஆஃபிஸ் இருக்குமிடம் தான் எலக்ட்ரிக் தியேட்டர் இருந்த இடம்.  கோஹன் என்பவர் ”லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை மௌண்ட் ரோடில் நிறுவினார். அது பின்னர் தீயில் கருகியதால் எல்ஃபின்ஸ்டோன் தியேட்டர் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

படிப்படியாக இந்த சில மணித்துளி படங்கள் காலம் கதையுடன் கூடிய 4000 அடி நீள படங்கள் காலமாக மாறியது. ஹெரால்ட் லாய்ட், சார்லி சாப்லின், எடிக் போலோ போன்ற நடிகர்கள் நடித்தப் படங்கள் தமிழ் பிரசங்கத்துடன் (அந்த காலத்து சப்-டைடில் போலும்) திரையிடப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் எதாவது தர்க்கம் பண்ண வேண்டுமென்றால், மக்கள் தேர்ந்து எடுக்குமிடம் எது தெரியுமா? இரண்டு மூன்று அனா கொடுத்தால் கிடைப்பது சினிமா தியேட்டர். விசாலமான இடம் இதை விட சீப்பாக வடகைக்கு கிடைக்காது. சாதி பற்றி அடித்துக்கொள்ளலாம். விடுதலை பற்றி பேசிக்கொள்ளலாம். சினிமா தியேட்டர் இப்படி ஒரு அடித்துக் கொள்ளும் இடமாக இருந்ததால் தான் படித்த மக்களால் சினிமா சம்பந்தப்பட்டது எல்லாம் ஒரு கௌரவக் குறைச்சலான காரியாமாகப் பார்க்கப்பட்டது. சினிமா தியேட்டர் என்றால் என்ன என்று ஒருவருக்கும் ஒரு டெஃபனிஷன் கொடுக்க முடியவில்லை. முட்டி மோதி அரசாங்கம் தலையிட்டு ஒரு வழியாக சினிமா தியேட்டர் எப்படி இருக்கவேண்டும், அங்கே என்ன திரையிடப்படவேண்டும் என ஒரு கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டது.  சென்ஸார் போர்டின் விதை இந்த நிர்பந்தத்தினாலும், காலகட்டத்திலும் தான் தூவப்பட்டது.

இன்று சென்ஸார் போர்ட் என்றால் ஆபாசங்களை திரையில் தடுக்கும் ஒரு நிறுவனமாகத் தான் பலருக்கு தோன்றும். அந்த காலத்திலெல்லாம் இது ஒரு பிரச்சனையாகவே இல்லை. எப்படி இருக்கும்? நடிப்பத்ற்க்கே ஆள் வராதபோது இதெல்லாம் டைரக்டர், ப்ரொட்யூஸர்களுக்கு தோன்றியிருக்கவே மாட்டாது. அன்றைய பிரச்சனை தியேட்டரில் யாராவது சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்களா, விவாதிக்கிறார்களா அல்லது திரையிடுகிறார்களா என்பது தான் வெள்ளைக் கார சர்க்காரின் கவலை.  ”சென்ஸார்ஷிப் மற்றும் படித்த மக்களின் எதிர்ப்பும் சேர்ந்துதான் திரையுலக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது” என்று தியோடர் பாஸ்கரன் கருதுகிறார்.

சிறந்த வில்லன் நடிகர் யார்?


நம்பியாரை பற்றி படித்தவர்கள் சொன்னவை


ராண்டார்கை எழுதியது இங்கே.

நம்பியாரின் இன்னொரு முகம் பற்றி உஷா சொன்ன ராஜநாயகம் போஸ்ட் இங்கே.

தாஸ் சொல்கிறார்: சபரி மலைக்கு போவதற்கு எம்ஜிஆர் அனுப்பும் மாலையை அணிந்துதான் நம்பியார் போவாராம். சரத் பாபு நம்பியாரின் மாப்பிள்ளை என்று தாஸ் உறுதிப்படுத்துகிறார்.

சாரதா சொல்வதென்னவென்றால்:
நம்பியார் சுத்த சைவம். அதை தன்னுடைய இளமைக் காலத்திலிருந்து இன்று வரை கடை பிடித்து வருபவர். இத்தனைக்கும் அவர் குடும்பம் ஒரு அசைவக்குடும்பம். இருந்தும் விடாப்பிடியாக தன் கொள்கையில் உறுதியாக இருந்து வருபவர். தன்னுடைய பணிரெண்டாவது வயது வரையில் பால் கூட அருந்த மாட்டாராம், அது மாட்டு ரத்தம் என்ற உணர்வின் காரணமாக என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்தும் கூட நம்பியார் இதுவரை அரசியல் மேடைகளில் ஏறியதும் கிடையாது, எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததும் கிடையாது. (பிற்காலத்தில் அவரது மகன் – சுகுமாரன் நம்பியார் – பா.ஜ.க.வில் இருக்கிறார்).

நம்பியார் எந்த ஊருக்கு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு சென்றாலும், தன் மனைவி கையால் சமைத்துத்தான் சாப்பிடுவார். அதற்காக தன் சொந்த செலவில் தன் மனைவியை அழைத்துப்போவார். ஒருமுறை ஒரு தயாரிப்பாளர், நம்பியாரின் மனைவிக்கும் சேர்த்து தன் கம்பெனி செலவில் விமான டிக்கெட் எடுத்து விட்டார். ஆனால் நம்பியார் அதை மறுத்து விட்டார். “நான் மட்டும்தான் உங்கள் படத்தில் நடிக்கிறேன், என் மனைவி நடிக்கவில்லை. அவரை எனக்கு உணவு சமைப்பதற்காக, அதாவது சொந்தக்காரணத்துக்காக அழைத்து வருகிறேன்” என்று கூறி, அதற்கான விமான டிக்கெட் தொகையை தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொண்டார். (இந்தக்காலத்தில் இப்படியும் ஒருவர்..!!!!!)

இவரிடம் நடிகர்கள் மட்டுமல்லாது, மனிதர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய.

ஒரு இணைப்பு செய்தி: 1973-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மேக்கப்மேன்’ விருது பெற்றவர் நம்பியாரின் மேக்கப் மேன் திரு. ராமு. படம்: உலகம் சுற்றும் வாலிபன். (தகுதியானவருக்கு கிடைத்த தகுதியான விருதுகளில் இதுவும் ஒன்று. அந்தப் படத்தில் மட்டும் நம்பியார் தன் குரலைக் காட்டாமல் இருந்திருந்தால், அது நம்பியாரே அல்ல என்று என்று எந்த கோயிலிலும் சத்தியம் செய்யலாம். அவ்வளவு நேர்த்தியான மேக்கப்).

‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’ பாடல் மட்டுமல்லாது, மாடர்ன் தியேட்டர்ஸ் ‘கவிதா’ படத்தில் வரும் ‘பறக்கும் பறவைகள் நீயே’ என்ற டூயட் பாடல் நம்பியாருக்குத்தான். அத்துடன் தூறல் நின்னு போச்சு படத்தில் ‘என் சோக கதையைக்கேளு தாய்க்குலமே’ பாடலிலும் ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பாடலிலும் பாக்யராஜுடன் இவரும் பாடியிருப்பார். (’மன்னாதி மன்னனை பார்த்தவன் நான், அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்’ என்று துவங்குவது இவர்தான்)

நம்பியாரை பற்றி பக்ஸ் எழுதியது இங்கே, இங்கே.

ஆர்வி எழுதியது இங்கே.

கூட்டாஞ்சோறு


நானும் என் பங்குக்கு கூட்டாஞ்சோறு போஸ்ட் ஒன்று போட்டுவிட்டேன்.

சரத்பாபுவும் நம்பியாரும்


சரத் நம்பியாரின் மருமகனாமே மாப்பிள்ளையாமே? உண்மைதானா?

நம்பியார்


பல நாட்களாக பக்ஸ் கலக்கிக் கொண்டிருக்கிறான். இன்றைக்கு நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் உண்மையான கருத்தை மறைப்பது பொய். எனக்கு நம்பியார் என்ற நடிகரை பற்றி அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை. எல்லா படங்களிலும் ஏறக்குறைய ஒரே நடிப்புதான். கையை பிசைந்து கொண்டு, ஜம்புவையும் மருதுவையும் (அது ஏன் அடியாட்களுக்கு சுப்பிரமணி, ராமசாமி என்றெல்லாம் பேர் வைக்க மாட்டார்களா?) யாரையாவது அடிக்க சொல்வது எல்லாம் ஒரு வேஸ்ட். திறமையான வில்லன் நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்கு எந்த விதத்திலும் ஈடாகாது. அந்த காலத்து நடிகர்களான எம்.ஆர். ராதா, பி.எஸ். வீரப்பா போன்றவர்களை இவரை விட பார்க்கலாம். என்ன, மனோகரை விட பெட்டர். எனக்கு அசோகனை பார்த்தால் சிரிப்பு வரும், இவரை பார்த்தல் அதுவும் வருவதில்லை. பக்ஸ் சொன்ன உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கூட, “அந்த பெட்டியை கொடுத்துடு” வசனத்தை விட அசோகன் உருகி உருகி “முருகன், நீங்க பெரிய மேதை முருகன்” என்று சொல்வதுதான் நினைத்தாலே சிரிப்பு வருகிறது.

ஆனால் மக்கள் மத்தியில் வில்லன் என்றால் நம்பியார்தான். எம்ஜியார் நம்பியார் காம்பினேஷன் மாதிரி வராது என்று சொல்வார்கள். எம்ஜிஆர் நல்ல நடிகர் இல்லாவிட்டாலும் எல்லாருக்கும் பிடித்தவர். அந்த மாதிரிதான் நம்பியாரும். எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படமான ஆயிரத்தில் ஒருவனில் அவரும் நன்றாக செய்திருந்தார். எங்க வீட்டுப் பிள்ளையில் எனக்கு ஒன்றும் பிரமாதமாக தெரியவில்லை, ஆனால் பிரபலமான ரோல்.

நம்பியாரின் பொற்காலம் என்றால் அது ஐம்பதுகள்தான். அவரும் அப்போது நன்றாக வசனம் பேசக்கூடிய ஒரு நடிகர். வேலைக்காரி, சர்வாதிகாரி, மந்திரி குமாரி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் நன்றாக செய்தார். (மந்திரி குமாரியில் அவரை கள்ள பார்ட் நடராஜன் மிஞ்சிவிட்டார்.) அவரும் எம்ஜிஆரும் ராஜா ராணி படங்களில் கத்தி சண்டை போடுவது சாதாரணமாக நன்றாக இருக்கும். அரச கட்டளையில் அவரும் எம்ஜிஆரும் ஒரு அசத்தலான சண்டை போடுவார்கள். ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு பேரும் கலக்குவார்கள்.

நினைவில் நிற்கும் இரண்டு விஷயங்கள்:
1. எம்ஜிஆரிடம் ஒரு பாட்டி “உனக்குத்தான் ராசா எங்க வோட்டு, ஆனா இந்த நம்பியார்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று சொன்னாராம்.
2. எதோ ஒரு படத்தில் வடிவேலு அவரிடம் “எம்ஜிஆர் போன பிறகு உனக்கு ரொம்ப துளுத்து போச்சு!” என்பார்.

நெஞ்சம் மறப்பதில்லை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். அதில் அவர் வரும் காட்சிகள், குறிப்பாக கடைசியில் அவர் புதைகுழியில் மூழ்கும் காட்சி உறைய வைக்கும். அந்த பெருமை ஸ்ரீதருக்கும் வின்சென்டுக்கும் உரியது என்றாலும், நம்பியாரை நினைவு கூரக்கூடிய படங்களில் அதுவும் ஒன்று.

அவர் நடித்து நான் பார்க்க விரும்பும் படம் திகம்பர சாமியார். பிரிண்ட் இருக்குமா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து மக்களை பெற்ற மகராசியில் அவருக்கு ஒரு டூயட் உண்டு – “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” வேறு பாட்டு ஏதாவது உண்டா தெரியவில்லை.

கிட்டத்தட்ட தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்கிறார். அவர் பல மாற்றங்களை பார்த்திருப்பார். சொந்த வாழ்க்கையில் புனிதர் என்று சொல்வார்கள். சினிமா உலகத்தில், அதுவும் நாற்பதுகளிலிருந்து நடித்து வரும் ஒருவருக்கு இப்படிப்பட்ட இமேஜ் இருப்பது அதிசயம்தான். நிறைந்த வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு என் அஞ்சலி.

”முருகா, அந்தப் பொட்டிய கொடுத்துடு…”


எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? சைனாவில்…என்று நினைக்கிறேன். அல்லது தாய்லாந்தில். நம்ம எம்.என்.ந்ம்பியார் தான் இப்படி வசனம் பேசியது. ”உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்திற்க்காக ஒரு புத்த பிட்சு வேடமணிந்து (உண்மையான புத்த பிட்சுக்கள் இருவரை அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு) விஞ்ஞானி எம்.ஜி.ஆர்ரிடம் ”முருகா, அந்த பொட்டிய கொடுத்துடு” என்று பேசுவது இது.  இவர் இவ்வாறு வில்லத்தனமாக “பஞ்ச் டையலாக்” எத்தனையோ பேசியிருக்கிறார். கூர்ந்து கவணித்தால் தான் மனதில் நிற்க்கும். ஏனென்றால், அவருடைய வசனங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். டைலாக்கின் மத்தியில் கரைந்து போய் விட்டிருந்தது. ஆனாலும் இதை ரசிப்பவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

இவர் வில்லத்தனம் தத்ரூபமாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் ஒரு பெயர் உண்டு. இவர் ”எங்க வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தில் வில்லனாக நடித்தது பல எம்.ஜி.ஆர். ரசிகர்களை பாதித்திருந்தது. அந்த படம் வெளிவந்த புதிதில், ஒரு முறை ஒரு வெளிப்புர படப்பிடிப்பின் பொழுது அங்கிருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சேர்ந்து ஆத்திரத்தில் அவரை  அடிக்க போய்விட, அங்கு உடனிருந்த எம்.ஜி.ஆர்., த்னது ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். எவ்வளவு தான் ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர். மீது பாசமிருந்தாலும் இந்த அளவிற்கு வெறுப்பு தெரிக்க தத்ரூபமாக நடிக்காதிருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. நடக்காமலிருந்தால் நல்ல விஷயமே. ஆனால் இந்த நிகழ்ச்சி நம்பியாருடைய நடிப்பின் வெற்றியை பறை சாற்றும் ஒரு அளவுகோல் ஆக பரிமாணித்து விட்டிருந்தது.

இவர் வில்லன் வேடத்தில் மட்டும் ஜொலிக்கவில்லை. நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டியிருக்கிறார். “தூறல் நின்னு போச்சு” என்ற திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இது தெரியும்.  நகைச்சுவையான் குஸ்தி வாத்தியாராக நடித்து அந்தப் படத்தின் மூலம் பல ரசிகர்களின் பெரு மதிப்பை பெற்றிருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் அந்தப் படத்தின் தொய்வில்லாமைக்கு இவரது கதாப்பாத்திரம் ஒரு முதுகெலும்பாக இருந்து உறுதுணை புரிந்தது. “என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே” என்று பாக்கியாராஜும் இவரும் சேர்ந்து ”மலையேறி” விட்டு அடிக்கும் லூட்டி அபாரமான பொழுது போக்கு. ஆஹா…இதெல்லாம் இனிமேல் வருமா? பாக்கியராஜ் இவரை இந்த கோணத்தில் தமிழகத்திற்கு அடையாளம் காட்டியதற்க்கு கிரெடிட் பெறவேண்டும்.

மேலும் இது அல்லாமல் சமீபத்தில் ஒரு குணசித்திர வேடத்தில் விஜய்யுடனும், நாகேஷுடனும் நடித்திருந்தார். அதிகம் ந்டிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், முடிந்த வரை அதிலும் அவர் அருமையாக அவருடைய ரோலை செய்திருந்தார். திரைப்படத்தின் பெயர் எனக்கு மறந்துவிட்டது.

இதையெல்லாம் விட நிஜ வாழ்க்கையில் நிதானம் தவறாத ஒரு பெரியவர். பலருக்கு சபரிமலையை அறிமுகப்படுத்தி வைத்து உத்வியிருக்கிறார். எல்லோரும் அவரை மதிப்பின் மிக உயரத்தில் வைத்திருந்தார்கள். சாமான்யமான மனிதர்களுக்கு இது கர்வத்தை கொடுத்திருக்கும். ஜெயமாலா என்ற கன்னட நடிகையும் சுதா சந்திரனும் ஐயப்பனை தொட்டு வணங்கியாதாகவும், 17வதோ, 18வதோ படியில் நடனமாடியாதகவும் பிதற்றிய பொழுது, இவருக்கு இருந்த மதிப்பை பயன் படுத்தி அவர்களுக்கு எதிராக கருத்துச் சொல்லியிருந்தாலே போதுமாயிருந்தது. பக்தர்களும், மக்க்ளும் அவர்கள் இருவர் மீதும் ஆவேசத்துடன் பாய்ந்திருப்பார்கள். ஆனால் இவர் அவர்கள் இருவரும் ஏன் அதை செய்திருக்கமுடியாது என்பதை விளக்கியது மட்டுமல்லாமல் அப்பொழுது அவர்கள் இருவரையும் கோவிலுக்குள் விடக்கூடாது என்ற சொன்ன அனைவருக்கும் ”இந்த ஒரு காரணத்திற்க்காக அவ்ர்களையும் பிற பெண்களையும் ஐயப்பனின் கோவிலுக்குள் விடக்கூடாது  என்று கூற ஒருவருக்கும் உரிமை கிடையாது” என்று பெருந்தன்மையுடன்  கருத்து கூறியிருக்கிறார். பெண்களை கோவிலுக்குள் ஏன் விடக்கூடாது என்பதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம் பெண்களை அவமதிக்கும் ஒன்று அல்ல. ஆண்கள் பலவீணமானவர்கள். அவர்கள் சிந்தனை சிதறும் என்றே பெண்களை விடுவதில்லை என்ற நிலைப்பாட்டை விளக்கினார்.

மனிதர் போய்விட்டாரே!

அஞ்சலி – மஞ்சேரி நாராயணன் நம்பியார்


எங்கள் அஞ்சலி

(தினமலர் செய்தி)

mnn

சென்னை : பழம்பெரும் நடிகர் நம்பியார், சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 89. இவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் கமல், ரஜினி உட்பட திரையுலகத்தினர் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு, சென்னையில் இன்று மாலை நடக்கிறது.

கேரளாவில் உள்ள கண்ணூரில் பிறந்த மஞ்சேரி நாராயணன் நம்பியார், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே நாடகத்தில் நடிப்பதற்காக, நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் சேர்ந்தார். எம்.என்.நம்பியார் என்று பெயர் வைத்துக்கொண்டார். பல நாடங்களிலும் நடித்துள்ளார். 1935ம் ஆண்டு “பக்த ராமதாஸ்’ படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். மந்திரிகுமாரி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் வீட்டு பிள்ளை, குடியிருந்த கோவில், படகோட்டி, நாளை நமதே, சவாலே சமாளி உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 330 படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

“திகம்பரசாமியார், கல்யாணி, நல்லதங்கை’ படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கல்யாண்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ் என அனைவருடனும் நடித்துள்ளார். “திகம்பர சாமியார்’ படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும், திரையுலக சாதனையாளருக்கான எம்.ஜி.ஆர்., விருதும் பெற்றுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், நம்பியாருக்கு நேற்று பகல் 12 மணிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். அதற்குள் 12.30 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார்.

இவரது உடலுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நம்பியாருக்கு ருக்மணி என்ற மனைவியும், சுகுமாரன் நம்பியார், மோகன் நம்பியார் என்ற மகன்களும் சினேகலதா என்ற மகளும் உள்ளனர். மகள் சினேகலதா அமெரிக்காவில் இருப்பதால், அவருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அவர் இன்று மதியம் சென்னை வருவதால், மாலையில் நம்பியாரின் இறுதிச் சடங்கு நடத்தப்படும்.

குருசாமி நம்பியார்: இவர், 65 வருடங்களாக சபரிமலை சென்று வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட நடிகர்களையும் இவரது தலைமையில் சபரிமலைக்கு அழைத்துச் செல்வார். 50 வருடங்களாக அய்யப்ப பக்தர்களுக்கு சென்னையில் குருசாமியாகவும் இருந்துள்ளார். நடிகர்கள் சிவாஜி கணேசன், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், மோகன்பாபு, அம்பரீஷ், கார்த்திக், கரண், விஷ்ணுவர்த்தன், ஸ்ரீகாந்த், பிரபுதேவா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், கேமராமேன் பி.என்.சுந்தரம் உட்பட 50க்கும் மேற்பட்ட நடிகர்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றுவந்துள்ளார்.

நடராஜ முதலியார் – திரையுலக வரலாறு 2


natarajamநடராஜ முதலியார் பிறந்தது 1885ல். தந்தை சென்னயில் புகழ் பெற்ற மருத்துவர் எம். ஆர். குருசாமி முதலியார்.

கீச்சக வதம் வெளி வந்தாலும் நடராஜ முதலியார் அதை ஊமை படமாகவே (Silent movie) வெளியிட்டார். இவர் இந்த திரைப்படத்திற்கு ரூபாய் 35000 செல்வு செய்தார். 1917ல் 35000 என்பது பெரும் பட்ஜட். முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் செலவு கையை மீறியிருக்கலாம். 35 நாட்களில் எடுத்துவிட்டதாக ஒரு செய்தி இருக்கிறது. ஜெட் ஸ்பீடு தான்.

நடராஜ முதலியார் இந்த மாதிரி அட்வென்ச்சரில் குதித்தாலும் நிதானமாகவே யோசித்து எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது. அவரது நண்பராகிய நாடகத்தை வளர்க்கப் பாடுபட்ட பம்மல் சம்பந்தம் முதலியாரிடம் ஆலோசனை செய்தார். அந்த காலத்தில் தெரிந்த கதையை வைத்து படம் எடுத்தால் தான் படம் ஓடும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்கலாம். தெரிந்த கதையை வைத்து படம் எடுக்கச் சொன்ன அவருடைய ஐடியாதான் இந்த திரௌபதி vs கீச்சகன்.

நடராஜ முதலியார் ஒரு பிஸினஸ்மேன். அவருக்கு இந்த கதை, கத்திரிக்காய் எல்லாம் எழுத வராது அல்லது தெரியாது. (ஏதோ நான் இதை எல்லாம் எழுதவதால் எனக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும் என நீங்கள் நினைப்பதாக நான் நினைப்பதால் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வேண்டாம், உண்மையை சொல்லிவிடாதீர்கள்!). எனவே அவர் சி. ரங்கவடிவேலு என்ற நண்பரை அனுகினார். ரங்கவடிவேலு அப்பொழுது சுகுன விலாஸ் சபா என்ற ஒரு நாடக குழுவை நடத்தி வந்தார். திரைக்கதையை எழுதும் பொறுப்பை அவரிடம் தள்ளிவிட்டார். அவரே நடிகர், நடிகைகளுக்கு கோச்சிங் கொடுத்தார். ரங்கவடிவேலுவை உபயோகப்படுத்திக்கொண்டது ஒரு பிரமாதமான் strategy என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் சுகுன விலாஸ் சபாவை முன்னதாக சம்பந்தம் முதலியார் முன்னதாக வளர்த்து வந்தார். அது ஒரு பெருமை. மேலும் ரங்கவடிவேலுவும் மிகவும் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார். பெரிய  சபை கதையாசிரியரே திரைகதை எழுதினால் மக்கள் கூட்டம் அலை மோதி விடாதா? அது ஒரு வியாபாரத் தந்திரம் தானே? இன்று ஏ.வி.எம் ப்ரொடெக்‌ஷன்ஸ் கூட பாப்புலர் ஆன கலைஞர்களை வைத்து அதை யுக்தியை தானே கடைப்பிடிக்கிறது.

நடராஜ முதலியார் பெங்களூரில் ஒரு labஐ நிறுவினார். வாரம் ஒரு முறை பெங்களூர் சென்று தனது ஃபிலிம் சுருள்களை தயார் செய்வார். இப்படி அவர் அயராது  உழைத்துக் கொண்டிருக்கையில் இரண்டு துயர சம்பவங்கள் அவருடைய திரைப்பட உலக வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. அவர் India film companyஐ விட்டு வேலூரில் சொந்த ஸ்டுடியோ வைத்திருந்தார். அது தீயில் கருகியது. மேலும் அவருடைய மகன் காலமானார். 1923ஆம் வருடத்துடன் அவருடைய திரை சகாப்தம் முடிவடைந்தது.

அவருடைய மற்றத் திரைப்படங்கள்:

திரௌபதி வஸ்திரபரனம் (1917)
மைத்திரேயி விஜயம் (1918)
லவ குசா (1919)
மஹிரவனன் (1919)
மார்க்கண்டேயன் (1919)
கலிங்க மர்தனம் (1920)
ருக்மணி கல்யாணம் (1921)

கீச்சக வதம் – திரையுலக வரலாறு I


தமிழ் திரைப்பட வரலாறு பற்றி எத்தனையோ அறிஞர்கள் ரசிகர்களுக்கு எடுத்துறைத்திருக்கிறார்கள். எனது பாணியில் நானும் கொஞ்சம் சொல்லலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

தமிழில் முதன் முதலில் வந்த திரைப்படம் “கீச்சக வதம்”. அதென்ன பெயர் கீச்சக வதம்? இதிகாசம் படித்தவர்களுக்கு இதற்கு பதில் தெரியாமலிருக்காது. 12 வருட வனவாசத்துக்கு பிறகு பாண்டவர்களும், பாஞ்சாலியும் விராடனுடைய அரண்மனையில் மாறுவேடத்தில் தஞ்சம் புகுந்தார்கள். ஒவ்வொர்வரும் ஒவ்வொரு பணியில் அமர்ந்து கொண்டார்கள். பீமன் குக் ஆகிவிட்டான். தனது பெயரை வலலன் என் மாற்றிக் கொண்டான். பாஞ்சாலியும் சாய்ராந்திரி எனப் பெயரை மாற்றிக் கொண்டு மகாராணி சுதேஷ்னாவிற்கு வேலைக்காரியாக இருந்தாள். சுதேஷ்னாவிற்கு கீச்சகன் என ஒரு சகோதரன் இருந்தான். அவன் மகாராணி சுதேஷ்னாவின் தயவால் சாய்ராந்திரியை தன் அறைக்கு வரவழைத்தான் அவளை பிடிக்க முயன்றான். இதை கேள்விப்பட்ட வலலன் வெகுண்டான். தந்திரமாக கீச்சகனை நடன மாளிகைக்கு அழைத்தான். அங்கே ஒரு துணியை சுற்றிக் கொண்டு சாய்ராந்திரி போன்று நின்றுகொண்டு கீச்சகன் கிட்டே நெருங்கியவுடன் “கும் கும், சதக் சதக்…” இது வதம் தான் கீச்சக வதம். கதை கேரளாவில் இன்றும் கதக்களி நடன நாடகமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. தமிழில் மறக்கப்பட்டுவிட்டது.

1918ல் வந்த திரைப்படம். நாடக நடிகர் ராஜு முதலியார் கீச்சகனாகவும், நாடக நடிகை ஜீவரத்னம் பாஞ்சாலியாகவும் நடித்தார்கள்.

இதை தயாரித்தவர் வேலூர் வாசியான ரங்கசாமி நடராஜ முதலியார். இவர் சென்னைக்கு வந்து தனது மாமா மகன் தர்மலிஙக முதலியாருடன் சேர்ந்து  சைக்கிள் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். கடையின் பெயர் ”வாட்சன் & கம்பெனி”. ஒரு சைக்கிள் ரூபாய் 25 தான்.
”ரப்பர் வண்டி” (சைக்கிள்) பிஸினஸ் காசு பார்க்க ஆரம்பித்தது. சைக்கிள் காராகியது. கார் அமேரிக்க கார் ஆகியது. ரோமர், டேன் & சன்ஸ் கம்பெனியை வாங்கி ருபாய் 1000த்திற்கு காரை விற்றார்கள். இந்த காலகட்டத்தில் ஊமை படங்கள் பார்த்துக்கொண்டிருந்தார் நடராஜ முதலியார். பேசும் படம் எடுக்க ஆசைப்பட்டார். கர்சன் துரை நிகழ்ச்சிகளை நியூஸ் ரீல் ஆக்கி கொண்டிருந்த ஸ்டுவர்ட் ஸ்மித் என்பவரை நண்பராக்கி அவருடன் பூனாவிற்க்கு சென்று ஒரளவு கற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பி ”இந்தியா ஃபில்ம் கம்பெனி” என்று திரைப்பட தொழில் துவங்கினார். மூப்பனாரிடம் ரூபாய் 2000த்திற்க்கு ஒரு 35 மில்லிமீட்டர் ஊமைப்பட வில்லியம்ஸன் காமிரா வாங்கினார். அதில் பிறந்தது தான் “கீச்சக வதம்”.

பிற்சேர்க்கை:

சாரதா கூறுகிறார்

இந்த ‘கீசக வதம்’ நாடகம், ‘பாபு’ திரைப்படத்தில் (நவராத்திரியில் வந்ததுபோல) தெருக்கூத்து நாடகமாக இடம் பெற்றிருக்கும். சிவாஜி (பீமன்), நாகேஷ் (கீசகன்), விஜயஷ்ரீ (சைரந்திரி), வி.கே.ஆர். ஆகியோர் அந்த தெருக்கூத்தில் நடித்திருப்பார்கள்.)