ஸ்ரீதர் விகடனுக்கு 1964இல் அளித்த பேட்டி


பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே ஸ்ரீதருக்கு நாடகம் என்றால் உயிர். முதன்முதலில் ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகத்தை மொழிபெயர்த்து, அதில் ஹாம்லெட்டாக நடித்திருக்கிறார். எஸ்.எஸ்.எல்.ஸி. முடியும் வரை ஒவ்வொரு வருடமும் ஒரு நாடகம் எழுதி, மேடையேற்றி நடித்திருக்கிறார்.

விடுமுறையின்போது சென்னைக்கு வருவார். நடிகர்களைச் சந்திப்பார். யாராவது ‘எனக்கு டி.ஆர். மகாலிங்கத்தைத் தெரியும்; என்.எஸ். கிருஷ்ணனைத் தெரியும்’ என்றால், அவரை விடமாட்டார். அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பார். ஸ்டூடியோக்களில் ஏறி இறங்குவார். யார் யாரையோ பார்ப்பார். எப்படியாவது ஒரு நடிகர் ஆகவேண்டும் என்பது இவர் ஆசை. ஆனால் எங்கு போனாலும் ஏமாற்றம்தான்!

செங்கற்பட்டு கூட்டுறவு இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், வருடாந்திர விழாவில் ஒரு நாடகம் நடத்திப் பெரும் புகழ் பெற்று, அந்த போதையில் மயங்கி, வேலையில் கவனம் செலுத்தாமல், அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகி, ராஜினாமா கொடுத்து விட்டு சென்னைக்கு வந்தார்.

வருடம் 1950. வயது 19. அப்போது அவர் கையில் இருந்தது ‘ரத்தபாசம்’ என்ற கதைச் சுருக்கம். அதை எடுத்துக்கொண்டு கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியாரிடம் போனார். அது சினிமாவுக்குத் தகுதியற்றது என்று கூறி அனுப்பிவிட்டார் அவர். அடுத்து டைரக்டர் ப.நீலகண்டனிடம் போனார். அது நாடகத்துக்குதான் ஏற்றது என்று அவரும் சொல்லிவிட்டார். எனவே, டி.கே. சண்முகத்திடம் சென்று காண்பித்தார்.

”என்ன தம்பி இது! என்னிடம் 250 நாடகங்கள் தூங்கிக்கொண்டிருக்கின்றன…” என்று அலட்சியமாக அதை வாங்கியவர், முதல் பக்கத்தைப் புரட்டினார். முதல் வரி கண்ணில் பட்டது. ‘பிறக்கும்போது ஒருவனும் கெட்டவனாகப் பிறப்பதில்லை…’ அதைப் படித்ததும், ஏதோ விஷயம் இருக்கவேண்டும் என்று தோன்றவே, முழுவதையும் படித்தார். அங்குமிங்கும் சில மாற்றங்களைச் சொல்லி வசனம் எழுதித் தரும்படி கேட்டார்.

அப்படித் துவங்கியதுதான் ஸ்ரீதரின் சென்னை வாழ்க்கை. நாடகத்தில் பெற்ற அனுபவம் சினிமாவுக்குப் பயன்பட்டது. நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்தது. சினிமாவுக்கு கதை, வசனம் எழுதுவதில் முனைந்தார். எதிர்பாராதது, மாமன் மகள், மகேஸ்வரி, அமரதீபம், உத்தமபுத்திரன் என்று முன்னேறி, ‘கல்யாணப் பரிசு’ படத்தில் ‘கதை வசனம் – டைரக்ஷன்’ ஸ்ரீதரானார்.

”காதலிக்க நேரமில்லை’ ஒரு லைட் சப்-ஜெக்ட். ரொமான்டிக் காமெடி! அடுத்த படியாக எம்.ஜி.ஆரை வைத்து, ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில், 20 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கலர் படம் துவக்கி யிருக்கிறேன். திவானின் கொடுங்கோலாட்சி கவிழ்ந்து, மக்களாட்சி ஏற்படுவதைக் கருத்தாகக் கொண்ட படம் அது. அதற்குப் பிறகு ஒரு மர்மக் கதை தயாரிக்கத் திட்டம் போட்டி ருக்கிறேன். ‘பாக்கிய லட்சுமி பிக்சர்’ஸுக்காக, வீணைக்கு முக்கியத்துவம் கொடுத்து கலையழகும், இசை இனிமையும் கொண்ட ஒரு படம் எடுக்கப் போகிறேன். அதற்கு ஓவியர் ராஜம் அவர்களின் உதவியை நாடியிருக்கிறேன். ரசிகர்களைத் திருப்தி செய்வதற்காகப் புதிது புதிதாகச் சோதனைகள் செய்து வருகிறேன். என் படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும், விஷயம் அறிந்தவர்கள் என்னைப் பாராட்டுகிறார்கள். அது எனக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.”

”தமிழ்ப்பட உலகில் மாறுதல் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?”

”முதலில் ‘பெரிய கதைகள் பண்ணும்’ பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதை ‘டிஸ்கஸ்’ பண்ணுவதற்கே ஆறு மாதம், ஒரு வருடம் ஆகிவிடுகிறது. எல்லாவிதமான கதைகளும் சம்-பவங்களும் படங்களில் நிறைய வந்தாகி விட்டன. மக்களுக்கும் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது. இனிமேல் சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து, ஒரு சிறு கருத்தை மையமாக வைத்து, சினிமாவுக்குத் தேவையான மாற்றங்களுடன் ‘சினிமா’வாக எடுக்க வேண்டும். உணர்ச்சி நிறைந்த கட்டங்களாக நிரப்பி, சினிமாவை ‘நாடக’மாக்கும் முறை மாற வேண்டும்.”

”காதலிக்க நேரமில்லை படம் நம் பண்புக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?”

”அர்த்தமற்ற பேச்சு! படத்தின் தலைப்பைப் பார்த்துச் சிலர் மிரண்டு போய் இருக்கிறார்கள். நாகரிகமான உடை போட்டிருக்கிறேன் என்பதைத் தவிர, அதில் என்ன குற்றம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. அப்படிப் பார்த்தால், ‘தேனிலவு’ படத்தில் கூடத்தான் வைஜயந்திமாலா ‘ஜீன்ஸ்’ அணிந்துகொண்டிருந்தார்! இன்னும் சொல்லப் போனால், சில தமிழ்ப் படங்களில் வரும் காதல் காட்சிகளைவிட இந்தப் படத்தில் நெருக்கம் குறைச்சல்தான். ஒரு இடத்திலாவது ஆபாசமோ, தரக் குறைவான வசனமோ கிடையாது. கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டியுள்ளார்கள். ‘பண்பு பறி போய்விட்டது’ என்று அவர்கள் சொல்லவில்லை.”

”சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே, அது என்ன ஆயிற்று?”

”அப்போது எனக்கு நடிக்க சான்ஸ் கிடைக்காதது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்!”

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

8 Responses to ஸ்ரீதர் விகடனுக்கு 1964இல் அளித்த பேட்டி

 1. Manivannan says:

  எம்.ஜி.ஆரை வைத்து, ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில், 20 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கலர் படம் துவக்கி யிருக்கிறேன்.

  “””இது பின்னர் ஒரு வசனத்தில் எம்.ஜி.ஆருக்கும் ஸ்ரீதருக்கும் பிரச்சனை படம் டிராப் பண்ணப்பட்டு பின் சிவாஜியை வைத்து சிவந்தமண் என்னும் பெயரில் வெளியாகியது.”””

  அதற்குப் பிறகு ஒரு மர்மக் கதை தயாரிக்கத் திட்டம் போட்டி ருக்கிறேன்.
  “””இதிலும் சிவாஜியே நடித்தார், பெயர் தங்கச்சுரங்கம்”””

  இரண்டிலும் நஷ்டமடைந்த ஸ்ரீதர் பின் எம்.ஜி.ஆரை வைத்து உரிமைகுரல் எடுத்து நஷ்டத்திலிருந்து மீண்டார்

 2. RV says:

  தங்க சுரங்கம் ஸ்ரீதர் படமா? நம்பவே முடியவில்லையே?

 3. மணிவண்ணன் says:

  Sorry…… my bad!!!!!!!
  தங்கச்சுரங்கம் இல்லை, வைரநெஞ்சம்

  தங்கச்சுரங்கம் இயக்கம்: T.R.ராமண்ணா

 4. RV says:

  மணிவண்ணன், விவரங்களுக்கு நன்றி! ஆனால் உரிமைக்குரல் வைர நெஞ்சத்துக்கு முன்னால் வரவில்லையோ?

 5. Manivannan says:

  மன்னிக்கவும், பி.ஆர். பந்துலுவுடன் ஸ்ரீதரைக் குழம்பி (குழப்பி) விட்டேன்.
  இதுதான் நடந்தது:

  வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெற்றிப் படத்தை தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலு, பின்னர் தயாரித்த “கப்பலோட்டிய தமிழன்’, “கர்ணன்’ ஆகிய பிரம்மாண்டமான படங்கள் தரமுள்ள படங்களாக இருந்த போதிலும், எதிர்பார்த்த வசூலைப் பெறாததால் பந்துலு கடன் சுமையில் சிக்கித் தவித்தார்.
  .
  இடையில் சிவாஜியுடன் நூறாவது பட விவகாரத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து பந்துலு, எம்ஜிஆர் பக்கம் வந்து அவரைச் சந்தித்து பேசினார். அவரது சம்மதத்தின் பேரில் அவரை வைத்து “ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார்.
  சிறந்த வசனம், தெவிட்டாத பாடல்கள், இனிய காதல் காட்சிகள், பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள், அருமையான நடிப்பு என அனைத்து அம்சங்களுடன் 9.7.1965ல் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்’ அமோக வெற்றி பெற்றது. வசூலை வாரிக்குவித்தது. இந்த ஒரே படத்தின் மூலம் கடன் பிரச்சனையிலிருந்து பந்துலு மீண்டார்.

  “எங்க வீட்டு பிள்ளை’, “ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் வெற்றியின் மூலம் 1965ல் எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி ஆனார்.

 6. RV says:

  விவரங்களுக்கு நன்றி, மணிவண்ணன்!

 7. Das says:

  RV, I heard another story about “Hero 72”. Not sure if it is true!

  ganEsan initially agreed to do for Rs. 4 lakhs. But as the movie schedule dragged on, he changed his mind and demanded Rs. 8 lakhs. CVS, frustrated, came to ganEsan’s annai illam and threw the cheque book and said, “fill up whatever you want”. You can see that “vaira nenjam” production itself was patchy!

 8. RV says:

  I remember seeing vaira nenjam in late seventies. It had decent looking Sivaji – pretty trim, actually – and a passable story for those days. If it had been released as per the original schedule, it could have been a hit. It also came in Hindi as Gehri Chaal. Jitendra played the hero, and Amithabh played Muthuraman’s role.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: