காதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்


காதலிக்க நேரமில்லை பற்றி எழுத பக்ஸுக்கு இன்னும் நேரமில்லை. ஆனந்த விகடன் விமர்சனம் கீழே.

சின்னமலை ஏலக்காய் எஸ்டேட் முதலாளிக்கு இரண்டு பெண்கள். மூத்த பெண் காஞ்சனாவைப் பணக்கார வாலிபன் வாசுவும், இளையவள் நிர்மலாவை, அவனுடைய ஏழை நண்பனான அசோக்கும் காதலிக்கிறார்கள். நண்பனின் காதல் நிறைவேறுவதற்காக வாசு, அசோக்கின் கோடீஸ்வர தந்தை போல் வேஷம் போடுகிறான். பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகள் பல நடக்கின்றன. கடைசியில் குட்டு வெளிப்பட்ட போதிலும், இருவர் காதலும் திருமணத்தில் முடிகிறது.

கதை: ஸ்ரீதர்-கோபு

சேகர்: படம் பிரமாதம் சந்தர், நீ என்ன சொல்றே?

சந்தர்: சந்தேகமென்ன? இரண்டரை மணி நேரம் ஒரு இடத்திலும் ‘போர்’ அடிக்காமல், வயிறு குலுங்க குலுங்கச் சிரிக்கும்படி இந்த மாதிரி ஒரு படம், இதுவரை தமிழில் வந்ததே இல்லை.

சேகர்: புதுப் புது முயற்சிகள் செய்யும் ஸ்ரீதரின் மற்றொரு சாதனை இந்தப் படம்.

சந்தர்: தமிழ்ப்படமென்றால், கட்டிலும் கண்ணீரும்தான் இருக்கும் என்ற கெட்ட பெயரை அடியோடு மாற்றிவிட்டார். இருமலும் உறுமலும் இல்லாமல், கதையை ஜாலியாகப் பின்னியிருக்கிறார்.

சேகர்: ஆமாம்! ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இரண்டு படங்களிலும் காதலின் துன்பமான பகுதியை எடுத்துக் காட்டியவர், இதில் காதலின் நகைச்சுவையை மிக அழகாக சித்திரித்திருக்கிறார்.

சந்தர்: புதுமுகம் காஞ்சனா புடவை அணிந்து நம் நாட்டுப் பாணியில் காட்சி அளிக்கும்போது தான் அழகாக இருக்கிறார். அநாவசியமாக அவருக்கு மேனாட்டுப் பாணி உடை அணிவித்திருக்க வேண்டாம்.

சேகர்: யு ஆர் ரைட்! மற்றபடி, பார்த்த முகங்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப்போன கண்களுக்கு, புதுமுகங்களை வண் ணத்தில் புதுமையான பாத்திரத்தில் பார்க்கும்போது, பெரிய விருந்தாக இருக்கிறது.

சந்தர்: ஆமாம் சேகர், நீ புதுமுகம் என்று சொன்ன பிறகு தான் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் அவர்கள் புதுமுகம் மாதிரியா நடித்திருக்கிறார்கள்?

சேகர்: நோ, நோ! பழக்கப்பட்ட நடிகர்களைப் போல ‘ஃப்ரீ’யாகத் துள்ளித் திரிந்து விளையாடி இருக்கிறார்கள்.

சந்தர்: பாலையா, முத்துராமன், நாகேஷ் எல்லோரும் சக்கைப் போடு போட்டுவிட்டார்கள்.

சேகர்: ஆமாம். அதுவும் ‘வில்லன்’ பாலையா, இந்தப் படத்தில் ஒரு ‘ஃபஸ்ட் க்ளாஸ்’ காமெடியனாகக் காட்சியளிக்கிறார். அவர் கோடீஸ்வரர்கிட்டே ‘குழைஞ்சு குழைஞ்சு’ பேசுவதை இப்போ நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

சந்தர்: நாகேஷ் மட்டும் என்ன? ‘ஓகோ’ன்னு நடிச்சிருக்கார். அவர் பேசற ஒவ்வொரு டயலாக்கும் ஒரு சிரிப்பு வேட்டு! அதுவும் பாலையாவிடம் ‘சஸ்பென்ஸ்’ கதை சொல்ற காட்சியிருக்கே, பைத்தியம் பிடிச்ச மாதிரியில்லே தியேட்டர்லே அத்தனை பேரும் வயிறு வெடிக்க சிரிக்க வேண்டியிருக்கு.

சேகர்: வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் ரொம்ப ஜோர்!

சந்தர்: இந்தியிலோ, தமிழிலோ இது மாதிரி ஒரு கலர்ப் படம் இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. ஆகா… எத்தனை குளிர்ச்சி, என்ன அழகு! ஒவ்வொரு காட்சியும் ஒரு சிறந்த வண்ண ஓவியம் மாதிரி இருந்தது. இதனால் வின்சென்ட் மேலும் ஒரு படி உயர்ந்திருக்கிறார்.

சேகர்: படம் கடைசி அரை மணிதான் கொஞ்சம் இழுத்த மாதிரி இருந்தது.

சந்தர்: ஆமாம்! அதுகூட ‘போலீஸ் ஸ்டேஷன் ஹாஸ்யத்திலே’ மறைந்து போய்விடுகிறது.

சேகர்: மொத்தத்திலே சித்ராலயா கலைக் குழுவினர், ஸ்ரீதர், ஜெமினி கலர் லாபரடரி எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்ப் பட உலகுக்கு ஒரு சிறந்த, புதுமையான பொழுதுபோக்கு நகைச் சுவைச் சித்திரத்தை அளித்திருக்கிறார்கள்.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

12 Responses to காதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்

 1. bmurali80 says:

  காதலிக்க தான் நேரமில்லை என்று நினைத்தேன். ஆனால் விமர்சனம் எழுதவும் நேரமில்லையா ?

 2. RV says:

  இந்த படத்தில் பாட்டு எல்லாம் சூப்பரோ சூப்பர். இதை பற்றி விகடனாருக்கு எழுத நேரமில்லாததுதான் ஆச்சரியம்.

 3. Surya says:

  சூப்பர் பாட்டுக்கள்..

  இவை தவிர செண்டி மெண்ட்டுகளுக்கு பேர் போன கோடம்பாக்க வட்டாரத்தில் “இல்லை” என negative என பெயரிட்டு உள்ளீர்கள். படம் போகாது என பலர் கூறியும் பிடிவாதமாக அதே பெயருடன் ரிலீஸ் செய்து Super Hit ஆக்கியவர்.

 4. surya says:

  சென்ற வாரம் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்ற போது டாப்ஸ்லிப் வழியில் சின்னமலை எஸ்டேட் என்று போர்டு பார்த்தேன்.

  ஆனால் அது டீ எஸ்டேட்டாம்.

  இங்க தான் காதலிக்க நேரமில்லை ஷீட்டிங் எடுத்தாங்களா என்று டிரைவரை கேட்க..இருக்கலாம் சார்.. நான் பிறந்திருக்கவே மாட்டேன் என்றார்.

  நான் ஒரு சினிமா விரும்பி என்று புரிந்து கொண்டு எஜமான், (வானவராயர் எஸ்டேட்) வானத்தை போல {வீடு செட்டிங்} ஷீட்டிங் ஸ்பாட்டுகளையெல்லாம் சுற்றி காட்டினார்.

 5. BaalHanuman says:

  புத்தகம் : திரும்பிப் பார்க்கிறேன் – சொன்னவர்
  இயக்குநர் ஸ்ரீதர்
  ===================================================
  “நான் இது போன்ற சென்டிமென்ட்கள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒரு படத்துக்கு எங்கள் ஆபீசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆஃபீசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா..? யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமிராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்ட்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.

  ஆனால் திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை வின்சென்ட் கேமராவில் பதித்து கேமராவை இயக்கினார்.

  வின்சென்ட்டின் மகன் பண்ணின கலாட்டா போதாதென்று அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரெண்ட் கட். மறுபடியும் அபசகுனமா என்ற முணுமுணுப்பு என் காது படவே கேட்டது.

  நான் இதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும் கோபு மனம் வாட்டமுற்றது. ‘இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம். எனக்குக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது’ என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழு திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்..” என்றேன். அதன்படியே சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.

  மறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வர வேண்டிய ஐயர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த பிராமணர் ஒருவரை வைத்து பூஜையை முடித்துட்டு குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கை தொடங்கினோம்.

  படத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி.. ‘அனுபவம் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்துபோக ஷூட்டிங் தடைபட்டது.

  அபசகுனம் என கருதப்பட்ட அத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் காதலிக்க நேரமில்லை.”

 6. சாரதா says:

  டியர் ஆர்.வி.

  நான் எழுதிய “பாடல் பிறந்த கதைகள்” தொகுப்பில், காதலிக்க நேரமில்லை படத்தில் இடம்பெற்ற ‘விஸ்வநாதன் வேலை வேணும்’ என்ற பாடல் உருவான விதம்…. (விரும்பினால் தனிப்பதிவாகப்போடுங்கள்)

  “விஸ்வநாதன் வேலை வேணும்”
  (காதலிக்க நேரமில்லை)

  காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி.தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்). கவிஞ்ர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.

  எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.

  அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா?. சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.

  சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக்கண்டு விட்டார் ஸ்ரீதர் என்று.

  கவிஞர் கண்னதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப்பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிறம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.

  அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…!” என்றார்.

  எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞ்ரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலைகொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.

  “இதோபார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக்காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.

  சரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மள மள வென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

  நாற்பத்தி ஆறு ஆண்டுகளை (2010 – 1964) கடந்து இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும்

  “விஸ்வநாதன் வேலை வேணும்”

  என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான்.

 7. விமல் says:

  சாரதா, தகவல்களுக்கு மிக்க நன்றி.

  “பாடல் பிறந்த கதைகள்” தொகுப்பின் link தாருங்கள்.

 8. மணி says:

  காதலிக்க நேரமில்லை படம் எடுத்த இடம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணைக்கட்டு பகுதிதான். அங்கேயுள்ள Inspection Bangalow தான் பாலையாவின் வீ டு. இன்னும் அப்படியேதான் உள்ளது. பக்கத்திலுள்ள பல இடங்களும் இப்படத்தில் உள்ள கட்சிகளை; நினைவுபடுத்தும்.

 9. sathish says:

  இந்த (எல்லா)படத்துக்கு விகடன் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தார்கள் என்பதை கூற முடியுமா ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: