தேனிலவு (Thenilavu)பழைய பாட்டு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த குரல் என்றால் ஏ.எம். ராஜாதான். மிகவும் பிடித்த பாட்டு எது என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்கிற மாதிரி பாவ்லா பண்ணிவிட்டு 3 பாட்டுகளை சொல்வேன். “தென்றல் உறங்கிய போதும்”, “பாட்டு பாடவா”, “காற்று வெளியிடை கண்ணம்மா”.

தேனிலவு சித்ராலயாவின் முதல் படம். ஸ்ரீதர் ரிஸ்கை ரொம்ப சிம்பிளாக குறைத்து விட்டார். அழகான ஹீரோ, ஹீரோயின், காஷ்மீர், அற்புதமான பாட்டுகள். படத்தில் கனமான செண்டிமெண்ட்கள் எதுவும் கிடையாது. ஒரு தயாரிப்பாளராக ரொம்ப புத்திசாலித்தனமான கணக்கு. கதாசிரியராக தோல்வி. ஒரு அரைத்த மாவு கதை. இந்த படத்தை மட்டும் பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் கூட ஸ்ரீதர் ஒரு மேதை என்றோ, புதுமை விரும்பி என்றோ சொல்லிவிட முடியாது.

1961இல் வந்த படம். ஜெமினி, வைஜயந்திமாலா, தங்கவேலு, நம்பியார், வசந்தி நடித்தது. ஸஹஸ்ரநாமம் போலிஸ் அதிகாரியாக வருவாரோ? தங்கவேலுவின் மனைவியாக வருபவர் யார் என்றும் ஞாபகம் வரவில்லை. ஏ.எம். ராஜா இசை.

இலக்கணம் தவறாத கதை. பணக்கார தங்கவேலு, தன் இரண்டாவது மனைவி, வை. மாலாவுடன் காஷ்மீருக்கு ஹனிமூன் போவார். ஜெமினியை தன் புது மானேஜர் என்று நினைத்துக்கொண்டு அவரையும் காஷ்மீருக்கு கூட்டிப் போவார். இப்படி ஒரு ஹனிமூன் எங்கேயும் கேள்விப்பட்டிருக்க முடியாது. உண்மையில் புது மானேஜரோ நம்பியார். வை. மாலாவும் ஜெமினியும் தமிழ் சினிமா இலக்கணப்படி காதல் வசப்பட, நம்பியாரும் தமிழ் சினிமா இலக்கணப்படி சதி செய்ய, ஜெமினியை போலீஸ் தேடும். கடைசியில் தமிழ் சினிமா இலக்கணப்படி உண்மைகள் வெளி வர, தமிழ் சினிமா இலக்கணப்படி காதல் ஜோடி சேர்ந்து, தமிழ் சினிமா இலக்கணப்படி சுபம்!

போட்டின் பின்னால் ஜெமினி ஒரு பலகையில் பாடிக்கொண்டே வருவதும், படகு வீடுகளும், அந்தக் காலத்தில் நல்ல கிம்மிக்காக இருந்திருக்கும். யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. வை. மாலா அவ்வப்போது கண்களை சிமிட்டிக்கொண்டு ஆடுகிறார். ஜெமினி அவரது மிருதுவான குரலில் ஸாஃப் டாக பேசுகிறார். நம்பியார் சதி செய்கிறார். கதை முடிந்து விட்டது. கதை காஷ்மீரை காட்டவும், பாட்டு பாடவும் ஒரு சட்டம், அவ்வளவுதான்.

இரண்டாவது கதாநாயகியான வசந்தி பிற்காலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்த, ௬௭இல் காமராஜரையே தோற்கடித்த சீனிவாசனின் மனைவி. தேனிலவு வசந்தி என்றே அழைக்கப்பட்டவர்.

பாட்டுக்கள் சூப்பரோ சூப்பர். ஸ்ரீதரின் எல்லா படங்களிலுமே பாட்டுகள் அருமையாகத்தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் ராஜாவும் அவரும் ஒரு high performance zoneஇல் இருந்திருக்கிறார்கள். உபசாரத்துக்காக சொல்லவில்லை, பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. எத்தனை முறைதான் அருமை, அபாரம், அற்புதம், அமர்க்களம், அசத்தல், அதிசயம், அபூர்வம், அழகு, ஆனந்தம் என்று எழுதுவது?


பாட்டு பாடவா என் சின்ன வயது உள்ளத்தை தொட்ட பாட்டு.


ஓஹோ எந்தன் பேபி நல்ல மெட்டு, ஆனால் வரிகள் அவ்வளவு நன்றாயில்லை என்பது என் எண்ணம்.

சின்ன சின்ன கண்ணிலே பிற்காலத்திலே என்னை மிக impress செய்த பாட்டு.

நிலவும் மலரும் பாடுது அருமையான பாட்டு.

காலையும் நீயே மாலையும் நீயே அற்புதமான பாட்டு. ஆனால் பார்க்க சகிக்க வில்லை. ரொம்ப artificial ஆக இருக்கும்.

மலரே மலரே தெரியாதா ஒரு மாற்று குறைவுதான், ஆனால் நல்ல பாட்டு.

ஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் ஒன்றுதான் கொஞ்சம் சுமாரான பாட்டு.

எல்லா பாட்டுகளையும் இங்கே கேட்கலாம்.

படத்தில் ராஜா பின்னணி இசை அமைக்க மாட்டேன் என்றதாகவும் எம்ஜிஆர் தலையிட்டு ஸ்ரீதருக்கும் அவருக்கும் சமரசம் செய்து வைத்ததாகவும் தாஸோ மணிவண்ணனோ சொன்னார்கள். யார் சொன்னது என்று சரியாக நினைவு வரவில்லை. ஆனால் இதற்கு பின் ஸ்ரீதர் எம்எஸ்விக்கு மாறிவிட்டார்.

பாட்டுக்காக பாருங்கள். வைஜயந்திமாலாவின் தீவிர ரசிகர்கள் இருந்தால் பாருங்கள். பாட்டுக்களால் 10க்கு 6 மார்க். C grade.

பற்றி RV
Proud father of two daughters. Proud husband of one wife. Fanatical reader of books. Passionate about cricket, movies, tamil film music, hindi film music, chess. Like to read about math. Dream about writing one day. Going to succeed with my technical startup some day. Engineer by profession. Live in Silicon valley (Newark)

7 Responses to தேனிலவு (Thenilavu)

 1. Das says:

  thangavElu manaiviyAka varubavar avarathu manaivi sarOjA

 2. Das says:

  RV, MGR brought peace between AMR and CVS as AMR was in no mood to do BGM!

  Kashmir reminds me of another incident. nAgEsh was shooting for a ganEsan’s movie in kAshmir and MGR was also there at the same time. nAgEsh and party had run into financial troubles (because of producer?). MGR, realizing this, gave money to nAgEsh without asking.

  “chinna chinna kANNilE” has onr beautiful charaNam and it goes
  “pinni vaiththa koonthalil
  mullai poovai choodinAl
  kanni nadai pinnal pOdumA
  chiRu minnal idai poovaith thAngumA?

  minnal idai vAdinAl
  kanni unthan kaiyilE
  annam pOl sAinthu koLvEn
  athil anthi pakal paLLi koLvEn”

 3. Das says:

  kAlaiyum neeyE song is based on the beautiful rAgA “bagashree”?

 4. RV says:

  Das,

  Thanks for the info. I too really like those lines in Chinna Chinna Kannile.

  I have no idea about ragas…

 5. சாரதா says:

  “தேன் நிலவு’ நினைவுகள்

  அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் ‘தேன் நிலவு’ படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

  “தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதியல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப்பார்த்து சரியாக வரவில்லையென்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.

  காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

  அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டுமுறை மட்டும் ‘டக்கோட்டா’ விமானம் டெல்லிக்குப்போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

  அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக்காட்சி முடிந்தபிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என்சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப்போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது”.

  இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்..

  எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு……., (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடிவாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).

 6. BaalHanuman says:

  இயக்குநர் ஸ்ரீதர் ஒருமுறை நினைவுகூர்ந்தார், தேன்நிலவு படத்துக்கு இசையமைக்கும்போது ஏ.எம்.ராஜா அவரது மெட்டில் ஒரு சிறு ஒலிக்குறிப்பைக்கூட மாற்றுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். கண்னதாசனின் பல்லவி, இசையுடன் இசைவதற்கு ஒரு சிறிய மாற்றம் தேவைப்பட்டது. ஏ.எம்.ராஜா பிடிவாதம் செய்யவே கண்ணதாசனே பல்லவியை மாற்றிக் கொண்டார். அவருடன் சேர்ந்து இயங்கிய பல இசைக்கலைஞர்கள், அவர் பாடல்களை அமைக்கும்போது விட்டுக்கொடுக்காத பிடிவாதம் கொண்டவர் என்பதை சொல்லியிருக்கிரார்கள்.

  தேன்நிலவு படத்துக்கான பாடல்களை அமைக்கும்போது ஸ்ரீதருக்கும் ஏ.எம்.ராஜாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டது. படத்துக்கு பின்னணி இசையமைக்க ஏ.எம்.ராஜா மறுத்துவிட்டார். பிரச்சினை எம்.ஜி.ஆர் வரை சென்று அவர் கட்டாயப்படுத்தியதனால் ஏ.எம்.ராஜா அதற்கு ஒப்புக்கொண்டார். அடுத்தபடமான ‘நெஞ்சில் ஓர் ஆலய’த்துக்கு இசையமைக்க ஸ்ரீதர் ஏ.எம்.ராஜாவைக் கேட்டுக்கொண்டாலும் ஏ.எம்.ராஜா மறுத்துவிட்டார். ஆகவே வாய்ப்பு விஸ்வநாதன்-ராமமூர்த்திக்குப் போயிற்று. மறக்கமுடியாத பாடல்களை கொடுத்த ஸ்ரீதர்-ஏ.எம்.ராஜா கூட்டு அங்கே முடிந்தது. உண்மையில் என்ன நடந்தது என்பதெல்லாம் இன்றுவரை ஊகங்களே.

  – ஷாஜி
  தமிழில் ஜெயமோகன் (http://musicshaji.blogspot.com)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: