ஸ்ரீதர்


ஸ்ரீதரை பற்றி அவர் மறைந்த போது எழுத ஆரம்பித்த மதிப்பீடு. எழுதியதை வீணடிக்க மனதில்லாமல் பதிப்பிக்கிறேன். மணிவண்ணன் மன்னிப்பாராக!

தமிழின் முதல் ஸ்டார் இயக்குனர் ஸ்ரீதர் நேற்று((இந்த போஸ்டை எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டன) மறைந்தார். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, சிவந்த மண், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, தென்றலே என்னை தொடு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

முதலில் ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்லி விடுகிறேன். இறந்தவரை பற்றி எதுவும் குறையாக சொல்லக்கூடாது என்று நமக்குள் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. இது மிகவும் போலித்தனமானது. நான் அவருக்கு eulogy எதுவும் எழுதவில்லை. எனது உண்மையான மதிப்பீடை எழுத இருக்கிறேன். அவருக்கு செய்யும் மரியாதை அதுதான் என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் அவருடைய தாக்கம் பெரியது அல்ல. அவர் சில க்ளிஷேகளை உடைத்தார், ஆனால் இன்னும் சில க்ளிஷேகளை (முக்கோணக் காதல்) உருவாக்கினார். அவருடைய காலத்துக்கு (அறுபதுகளின் ஆரம்பம்) அவர் ஒரு புரட்சியாளர்தான். ஆனால் அவருடைய புரட்சி மேலோட்டமானது. அதனால் அது நீண்ட நாள் புரட்சியாக நீடிக்கவில்லை.அவரது கவனம் புதுமையான திரைக்கதை, காரக்டர்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு ஒரே செட், காமெரா, ஈஸ்ட்மன் கலர், மேக்கப் இல்லாத நடிகர்கள், யாரும் காட்டாத காஷ்மீர், முதல் முறையாக வெளி நாடுகளில் படப்பிடிப்பு போன்ற புதுமைகளில் திசை திரும்பியது துரதிர்ஷ்டம்.  சில டெக்னிகல் விஷயங்களில் (காமெரா, பாட்டுகள்) ஆகியவற்றில் அபாரத் திறமை காட்டினார். பழைய பாட்டு பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு ஸ்ரீதர் ஒரு மஹானுபாவர். அவருடைய படங்களில் பாட்டுகள் சோடை போவதில்லை. ஏ.எம். ராஜா, எம்எஸ்வி இவர்களுடன் சேர்ந்து இவர் தன் படங்களுக்கு போட்ட பாடல்கள் எல்லாம் மாணிக்கங்கள்.

அவருக்கு ஒரு வலுவான சீடர் குழு உருவாகவில்லை. அவருடைய சீடர்களான சி.வி.ராஜேந்திரன், மாதவன் போன்றவர்கள் சிவாஜி படங்கள், செண்டிமெண்ட் படங்கள் எடுத்து காலத்தை ஓட்டினார்கள். சந்தான பாரதி, உத்தரவின்றி உள்ளே வா இயக்கிய சக்கரவர்த்தி போன்றவர்களும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள்தான். அவருக்கு பிரமாதமாக அமைந்த குழு வின்சென்ட், எம்எஸ்வி, ஏ.எம்.ராஜா, கண்ணதாசன், சித்ராலயா கோபு இவர்கள்தான்.

ஸ்ரீதரின் பலம் அவர் சாதாரண மனிதர்களின் வாழ்வை படமாக்க முயன்றதுதான். அதில் அவர் அபூர்வமாகவே கலை ரீதியாக வெற்றி பெற்றார். அவரது கால கட்டத்தின் மெலோட்ராமாவை முழுவதுமாக விட முடியவில்லை. பிறகு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில காம்ப்ரமைஸ்களை செய்து கொண்டார் – குறிப்பாக கலைக் கோவிலின் தோல்விக்கு பிறகு அவர் முக்கால்வாசி கமர்ஷியல் படங்களைத்தான் எடுத்தார். அவரது பொற்காலம் மிக குறுகியது – கல்யாணப் பரிசில் ஆரம்பித்து காதலிக்க நேரமில்லையில் முடிந்துவிட்டது. கலைக் கோவிலுக்கு பிறகும் அவர் தன் “புதுமை” திரைக்கதைகளை படமாக்கினாலும் அவை அவரது முழு கவனத்தையும் எடுக்கவில்லை. கல்யாணப் பரிசு, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள், கலைக் கோவில், வெண்ணிற ஆடை, நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை, அவளுக்கென்று ஒரு மனம் – இவ்வளவுதான் அவரது (கொஞ்சம்) வியாபாரத்தை தாண்டிய முயற்சிகள். தேனிலவு, காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், ஊட்டி வரை உறவு இவை என்டர்டெயினர்கள்.

அவரது படங்களில் கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவற்றை தமிழ் பட வரலாற்றின் மைல் கல்கள் என்று சொல்லலாம். கல்யாணப் பரிசு முதல் முறை சாதரண மனிதர்களை திரைக்கு கொண்டு வந்தது; முக்கோணக் காதல் என்ற க்ளிஷேவையும் அறிமுகப் படுத்தியது. நெஞ்சில் ஓர் ஆலயம் டென்ஷன் குறையாமல் ஒரு கான்ஃப்ளிக்டை படம் முழுக்க காட்டிய திரைக் கதை. அந்த நாள் போன்ற முன்னோடிகள் இருந்தாலும் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. காதலிக்க நேரமில்லை தமிழின் முதல் யூத் படம். நல்ல பொழுதுபோக்கு படமும் கூட. நெஞ்சம் மறப்பதில்லை சினிமாவை விஷுவலாக காட்டும் அபூர்வமான தமிழ் படங்களில் ஒன்று. இவை தவிர சுமைதாங்கியும் நல்ல படம் என்று சிலர் சொல்கிறார்கள். நான் பார்த்ததில்லை.  இவற்றில் எந்த படமும் உலகத் தரம் வாய்ந்த சினிமா என்று சொல்ல முடியாது. இந்திய திரைப்படங்களில் முதல் நூறு திரைப்படம் என்று மதிப்பிட்டால் அதில் இடம் பெற சாத்தியம் இருக்கிறது.

ஸ்ரீதர் இருபது வயதிலேயே திரை உலகத்துக்கு வந்தவர். அவர் எழுதிய ஒரு நாடகம் (ரத்த பாசம்) டி.கே.எஸ். சகோதரர்களால் நடிக்கப்பட்டது. இதுதான் பின்னால் ஹிந்தியில் பாய்-பாய் என்று எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நிச்சயமாக சொல்ல முடியவில்லை. பிறகு எதிர்பாராதது படத்துக்கு கதை-வசனம் எழுதியதாய் நினைவு. அமர தீபம், புனர்ஜென்மம், உத்தம புத்திரனுக்கும் திரைக்கதை வசனம் எழுதினார்.

அவருக்கு கல்யாணப் பரிசு turning point. ஏ.எம். ராஜா, பட்டுக்கோட்டை, தங்கவேலு, சரோஜா தேவி எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டையே கலக்கினார்கள். பதினாறு வயதினிலே 77இல் ஏற்படுத்திய தாக்கத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த படம் ஏற்படுத்திய தாக்கம். இப்போது பார்த்தால் புரிந்து கொள்வது கஷ்டம் – ஆனால் நம் பக்கத்து வீட்டு மனிதர்களை திரையில் கொண்டு வந்தது இந்த படம். பராசக்தியின் குணசேகரன், நாடோடி மன்னன் எல்லாருமே கதைகளில் காணப்படுபவர்கள். நாம் பார்ப்பது சினிமா என்று நமக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் வந்தது உண்மையான சதையும் ரத்தமும் உள்ள சாதாரண மனிதர்கள். அவர்களும் அவ்வப்போது சினிமாத்தனமாக நடந்து கொள்வார்கள்தான், ஆனால் அவர்களில் நம்மை காண முடியும். சமீபத்தில் சன் டிவியின் இதை பார்த்த போது என்னை மிகவும் கவர்ந்த இடம் சரோஜா தேவி தன் காதல் தோல்வியை பற்றி பேசும் இடம்தான் – “நான் எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் போகிறேன், இப்படியே இருந்துவிட மாட்டேன்” என்று சொல்வார். நம் தமிழ் பட நாயகிகள் இதற்கு முன்னால் எந்த படத்திலும் இப்படி சொல்லி இருக்கமாட்டார்கள். ஏன், இதற்கு பிறகு கூட இப்படி சொல்வதற்கு ஒரு முப்பது வருஷம் ஆகி இருக்கலாம். (எனக்கு தெரிந்து இதற்கு முன் சாதாரண மனிதர்களை சித்தரிக்க முயன்ற ஒரே படம் கூண்டுக்கிளிதான் – முயற்சி என் கண்களில் தோல்வி)

அவரது எல்லா படங்களையும் நான் பார்த்ததில்லை. பார்த்தவற்றை பற்றி சுருக்கமான குறிப்புகள் கீழே.

மீண்ட சொர்க்கம் – கலை, கலை என்று நம்மை கொலை செய்யும் படம். உப்பு சப்பில்லாத படம். எதற்காக ஜெமினி பத்மினியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை? பார்ப்பவர்களை அவர்களது நிறைவேறாத ஆசையை காட்டி வதைப்பதற்காகத்தான்!

நெஞ்சில் ஓர் ஆலயம் – நல்ல முடிச்சு. நல்ல திரைக்கதை. நல்ல நடிப்பு. தேவிகா கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால் முத்துராமன் மிக சிறப்பாக நடித்திருந்தார். கல்யாண் குமாரை விட கொஞ்சம் ஒல்லியான நடிகராக போட்டிருக்கலாம். ஆனால் இதெல்லாம் nitpicking. சுஜாதா சொன்னது போல் உலகத்தரம் வாய்ந்த படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல தமிழ் படம்!

கலைக் கோவில் – கொடுமையான கதை. முத்துராமன் நன்றி மறந்தவராக காட்டவேண்டும் என்பதற்காக குரு சபையை விட்டு வெளியே போனால்தான் வாசிப்பேன் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். நல்லதங்காள் மாதிரி நம்மை உச்சுக்கொட்ட வைப்பதற்கென்றே கதை எழுதினால் உருப்படாமல்தான் போகும்.

வெண்ணிற ஆடை – முதலில் க்ளைமாக்சை எழுதி விட்டு பிறகு கதை எழுதியது போல தோன்றும் ஒரு படம். சுவாரசியம் இல்லாத கதை.

நெஞ்சம் மறப்பதில்லை– ஷாட்களுக்காகவே பார்க்கலாம். அருமையான ஒளிப்பதிவு. படத்தை விஷுவலாக யோசித்திருப்பது தமிழ் படங்களில் அபூர்வமான விஷயம்.

தேனிலவு பாட்டுக்கும் காஷ்மீரை தமிழ் மக்களுக்கு காட்டவும் எடுக்கப்பட்ட படம். கதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அந்த முயற்சியில் வெற்றி பெற்றது.

காதலிக்க நேரமில்லை</a> ஒரு சூப்பர் பொழுதுபோக்கு படம். பாட்டுகளும் சூப்பர். இன்றைக்கும் தைரியமாக பார்க்கலாம்.

சிவந்த மண் ஐரோப்பாவை தமிழ் மக்களுக்கு காட்டவும் பாட்டுகளுக்காகவும் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கவும் எடுக்கப்பட்ட படம். அந்த முயற்சியில் வெற்றிதான்.

ஊட்டி வரை உறவு கொஞ்சம் அமெச்சூர்த்தனமான, ஆனால் அந்த காலத்தில் ரசிக்கப்பட்ட படம். பாட்டுகளும் சூப்பர்.

விடிவெள்ளி ஒரு சிவாஜி “ஃபார்முலா” படம் – ஆனால் சிவாஜி உணர்ச்சி வெள்ளத்தில் துடிக்கும் காட்சிகளை மட்டுமே நம்பி கதை அமைத்தால் அது கலை ரீதியாக வெற்றி அடையப்போவதில்லை. (சிவாஜி தன் தங்கை கல்யாணத்துக்காக ஒரு செயினை திருடி அதை தன் தங்கை கழுத்தில் போடுவார். அந்த லாக்கெட்டில் இருக்கும் படத்தை பார்த்து மைத்துனர் தங்கை மீது சந்தேகப்படுவார். சிவாஜி திருடிவிட்டோமே என்றும் தங்கை வாழ்வு பாழாகிவிட்டதே என்றும் துடிக்க, எல்லாம் சுபமாக முடியும்).

அவளுக்கென்று ஒரு மனம் ஒரு தண்டம். பெண்ணின் subtle மனதை காட்டுகிறேன் என்று நினைத்துக்கொண்டு சொதப்பினார்.

வைர நெஞ்சத்தில் சில அதிசயங்கள் உண்டு – ஒல்லியான, அழகான சிவாஜி. அறுபதுகளுக்கேற்ற மர்மப் படம். ஒரு பத்து வருஷம் முன்னால் வந்திருந்தால் நன்றாக ஓடி இருக்கும்.

உரிமைக் குரல், மீனவ நண்பன் எல்லாம் அவர் இயக்கிய படம் என்பதை விட தயாரித்த படம் என்றுதான் சொல்ல வேண்டும். அவை (மோசமான) எம்ஜிஆர் படங்கள்.

அவர் சகாப்தம் முடிந்து விட்டது என்று நினைத்த நிலையில் அவர் இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற அவரது ஸ்டைல் வெற்றிப் படங்களை எடுத்தார். அவரது பல படங்களில் பார்த்த காரக்டர்கள் மீண்டும் இவற்றில் வருவார்கள். ஆனால் அவை அன்றைய யூத் படங்கள். அன்றைய யூத்துக்கு அவை பிடித்துத்தான் இருந்தன.

தென்றலே என்னைத் தொடு நான் காலேஜில் படித்த போது வந்த மற்றொரு யூத் படம். எங்களுக்கு பிடித்திருந்தது. பாட்டுக்காகவே பார்த்தோம்.

யாரோ எழுதிய கவிதை வேஸ்ட். ஆனால் ஒரு பத்து வருஷம் முன்னால் வந்திருந்தால் ஓடி இருக்கலாம்.

ஸ்ரீதர் படித்த பள்ளியில்தான் நானும் இரண்டு வருஷம் படித்தேன் – செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளி. (பிரபல நடிகர் நாசரும் இந்த பள்ளியில் படித்தவர்தான்). நாங்கள் படிக்கும்போது எங்கள் பள்ளியின் மிக புகழ் பெற்ற பழைய மாணவர் அவர்தான்.

அவர் ஹிந்தி படங்களை தயாரிக்காமல் இருந்திருந்தால் பணக் கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அகலக் கால் வைத்து விட்டார். எம்ஜிஆர் உதவியால் சமாளித்துக் கொண்டார்.

மொத்தத்தில் அவர் மேலோட்டமான புதுமைகள் செய்த ஒரு இயக்குனர். அவரால் அவரது கால கட்டத்தின் எழுதப்படாத விதிமுறைகளை மீற முடியவில்லை. ஆனால் அவர் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இயக்குனர். அவரது பட பாட்டுகளும், சில திரைப்படங்களும் நீண்ட நாள் வாழும்.